இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தூயவனை ஏந்த ஆசையா?

திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

(எசாயா 40:1-5,9-11
2 பேதுரு 3:8-14
மாற்கு 1:1-8)

துள்ளி மகிழும்
குழந்தையாய்
குடிலில் பிறக்க போகும்
குழந்தை இயேசுவை
அள்ளி அரவணைக்க
ஆயிரம் கண்கள்
ஏக்கத்தோடு காத்திருக்கின்றன
ஓராயிரம் கைகள்
தவமாய் தவமிருக்கின்றன
பரபரப்பாய் பம்ரமாய்
சுழன்று கொண்டிருக்கின்றன
சிலரின் கால்கள்!
இத்தனையும் நயமாய் இருந்தால்
நமதாண்டவர் இயேசுவை
வரவேற்றிட முடியுமா?
வானத்திலிருந்து
விடியலாய் மண்ணை முத்தமிடும்
அவரின் மூச்சுக்காற்று
தெய்வீகக் காற்றாய் நம் மேனி வருட
நாம் என்ன செய்ய வேண்டும்?
செய்வதைப் பற்றி யோசிப்பதற்கு முன்
வருபவர் எப்படிப்பட்டபவர்
என்பதில் தேவைப்படுகிறது
சற்று கூடுதல் கவனம்!
திருவருகைக்காலம்
தயாரிப்பின் காலம்
மாற்றத்தின் காலம்
திருந்துதலின் காலம்
திரும்பி வருதலின் காலம்
திருமகனின் வருகையை
எதிர்பார்த்து இருக்கும் காலம்!
இத்தகு காலத்தின் துள்ளி மகிழும்
புள்ளி மானாய்
மன்னவனாய் இம்மண்ணில் பிறக்கப் போகும்
இயேசு பாலகன் தூயவர் என்பதை
தூய்மையற்ற இதயத்தில்
இறுக பதிய வைப்போம்
இஸ்ரயேல் மக்கள்
தூய்மையற்ற நிலையில்
தூயவராம் கடவுளைக் காணவும் இல்லை
கண்கள் திறந்து தேடவுமில்லை
இருப்பினும்
கடவுளின் கருணை அவர்கள் மேல் வீச
ஆறுதல் மொழி உரைக்கிறார்
கனிமொழி சொல்கிறார் என்றால்
அது ஆண்டவரின் இரக்கமே!
தூய்மையற்ற மக்கள்
கடவுளின் கருணையை நினைந்து
நல்வழி தேட முயற்சிக்கின்றனர்
அதுவே கோணல்கள் நேராக்கப்படுவதும்
பள்ளங்கள் நிரப்பப்படுவதாய் மாறுவதும்
மனங்களில் மகிழ்ச்சி ததும்புவதாய்
அமைவதும்
ஆண்டவரின் வருகையைக் குறித்த ஆனந்தமே!
இத்தகைய மகிழ்ச்சியை
மனமாற்றத்தின் வழியாய்
பெற்றிட அழைப்பு கொடுக்கிறார்
திருமுழுக்கு யோவான்
மனம் மாறுங்கள்
பாவத்தை அறியிடுங்கள்
பாதையை மாற்றுங்கள்
பயணங்களைப் புதுபித்துகொள்ளுங்கள்
பாரெங்கும் பரமனின்
நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
என்று கூறும் விளக்கவுரைகள் அனைத்தும்
தூயவரைத் தூக்கி மகிழ
தூய்மையற்ற நாம் தூயவராக மாறுவோம்
என்பதே
கொடுக்கப்படுகின்ற திருவருகைக்காலத்தின்
அழைப்பாக இருக்கின்றது!
எனவே நாம் அனைவரும்
தொடர்ந்து பயணிப்போம்
இறைமகன் இயேசுவை நம் இதயத்தில் ஏற்க
இதயத்தைத் தூய்மையாக்குவோம்
உள்ளத்தை ஆண்டவருக்கு உகந்ததாய் மாற்றுவோம்
இல்லத்தை இறைவனுக்கு ஏற்றவாறு உருவாக்குவோம்


எழுத்துருவாக்கம்
சகோ.மாணிக்கம்
திருச்சி மறைமாவட்டம்