இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு

மனம் ஒத்திருத்தல் - கடமைகளும், உரிமைகளும், தடைகளும்

எசேக்கியேல் 33:7-9
உரோமையர் 13:8-10
மத்தேயு 18:15-20

சாலையில் செல்லும் ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை வாசிப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகை என்பது போல ஒவ்வொரு ஆட்டோவும் ஒரு வகை. எந்த இரண்டு ஆட்டோக்களும் ஒன்று போல இருக்க நான் பார்த்ததே இல்லை. ஆட்டோ வாசகங்களில் சில 'பெண்களின் திருமண வயது 21' என்று நாட்டின் நடைமுறையைச் சொல்வது போலவும், சில 'பிரசவத்திற்கு இலவசம்' என தன் விளம்பரம் செய்வது போலவும் இருக்கும். அண்மையில் என்னை ஒரு வாசகம் மிகவும் கவர்ந்தது.

அது இதுதான்: 'நான் பேசும் வார்த்தைகளுக்கு நான் பொறுப்பு. ஆனால் நீ புரிந்து கொள்ளும் அர்த்தத்திற்கு நான் பொறுப்பு அல்ல.'

தான் பேசிய வார்த்தைகள் மற்றவரால் அல்லது மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படாத அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவரின் உள்ளத்தின் சோகமும், ஏமாற்றமும், விரக்தியும், கோபமும் ஒரு சேர இந்த வாசகத்தில் தெரிந்த. அப்படி இந்த நபர் என்ன பேசி அடுத்த நபர் இவரின் பேச்சுக்கு வேறு அர்த்தம் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால், இவரின் வார்த்தைகள் கற்பனை வார்த்தைகள் அல்ல. எதார்த்தமான வார்த்தைகள். நாம் அன்றாடம் உரையாடல்களில் பரிமாறப்படும் வார்த்தைகள் தொடங்கி, கடிதம், புத்தகம், குறுஞ்செய்தி என நாம் பகிர்ந்து கொள்ளும் எல்லா வார்த்தைகளும் சரியாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன என்று நம்மால் சொல்ல முடியாது. மெய்யியலில் மொழி பற்றி படிக்கும்போது சொல்வார்கள். ஒருவரின் வாயிலிருந்து வார்த்தை புறப்பட்டவுடன் அவருக்கு அந்த வார்த்தையின்மேல் உள்ள உரிமை போய்விடுகிறது. அதைக் கேட்பவர் எப்படியும் புரிந்து கொள்ளலாம். எந்த அர்த்தமும் அதற்குக் கொடுக்கலாம்.

நம் வார்த்தைகள் எப்படி மற்றவரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றனவோ, அப்படியே நம்முடைய செயல்களும் மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். இந்த புரிதல், புரிந்து கொள்ளுதல் பிரச்சினையை நினைத்துப் பார்க்கின்ற போது சிலருக்கு 'நாம் தனியாகவே இருந்துவிட்டால் எத்துணை நலம்!' என்று தோன்றும். ஐரோப்பாவின் சில நகரங்களில் இந்த வழக்கம் வந்துவிட்டது. அதாவது, பெயருக்கு மட்டும் நாடு, மொழி, இனம் ஆகிய அடையாளங்களைக் கொண்டிருப்பர். மற்றபடி மனிதரின் எந்தக் கூட்டமும், குழுவும் இவர்களைப் பாதிக்காது. 'தன்னலம் என்னும் மதிப்பீடு' (தெ வெர்ச்சு ஆஃப் செல்ஃபிஷ்னெஸ்) என்பதுதான் இவர்களின் தாரக மந்திரம்.

இன்றைக்கு நாம் வாழும் உலகம் இப்படிப்பட்ட ஒரு மதிப்பீட்டைத்தான் நம்மேல் புகுத்திக்கொண்டிருக்கின்றது. யாரும் யாரையும் புரிந்துகொள்ள, யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ள, யாரும் யாருக்காகவும் வாழத் தயாராக இல்லை. அப்படி செய்வதற்கான நேரமும் இல்லை. காலையில் தொடங்கும் ஓட்டம் இரவு வரை ஓடிக்கொண்டே இருக்கிறது. இரவு வீடுகளுக்கு வரும் வேகமாக துணி மாற்றிவிட்டு அவரவருடைய அறையில் அமர்ந்துவிட்டு, சேர்ந்து டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டுவிட்டு மறுபடியம் நம் அறைகளுக்குள் சென்றுவிடுகிறோம். இது இரவும், பகலும் போல தினமும் தொடர்கிறது.

இந்தப் பின்புலத்தில் 'மனம் ஒத்திருத்தல்' அல்லது 'மனம் ஒத்து வாழ்வது' பற்றி இன்றைய இறைவாக்கு வழிபாடு அறிவுறுத்துகிறது.

எதற்காக மனம் ஒத்து வாழ வேண்டும்? எதற்காக நான் அடுத்தவருடன் பேச வேண்டும்? எனக்கு ஏன் அடுத்தவர் தேவை? அடுத்தவர் என்ன நினைத்தால் எனக்கென்ன? - இப்படி நீங்கள் கேட்பவராக இருந்தால் இந்த ஞாயிறு திருப்பலிக்குச் செல்ல வேண்டாம். சமூக அல்லது கூட்டு வாழ்க்கை தேவை என்று சிந்தனை அளவிலாவது - செயல்வடிவம் இல்லாவிட்டாலும் - ஏற்றுக்கொண்ட ஒருவரால்தான் இன்றைய இறைவாக்கு வழிபாட்டைப் புரிந்துகொள்ள முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலிருந்து (காண். மத் 18:15-20) தொடங்குவோம். இன்றைய நற்செய்தியின் வார்த்தைகளை இயேசு சொல்லியிருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கியக் காரணம், இன்றைய நற்செய்திப் பகுதியில் வரும் 'எக்ளேசியா' (மத் 18:17) (திருச்சபை) என்ற வார்த்தை. 'திருச்சபை' என்ற வார்த்தை நம்பிக்கை கொண்டவர்களைக் குறிக்க எறக்குறைய 60 முதல் 80 ஆம் ஆண்டுகளில்தாம் பயன்படுத்தப்படுகிறது. ஆக, மத்தேயு நற்செய்தியாளரின் திருச்சபையில் உள்ள ஒரு பிரச்சினையைப் பின்புலமாக வைத்து நற்செய்தியாளர் இயேசுவே இந்த அறிவுரையைச் சொல்வதாக எழுதுகிறார். மேலும் இந்த இறைவார்த்தைப் பகுதி மற்ற நற்செய்தி நூல்களில் (மாற்கு, லூக்கா, யோவான்) இல்லை.

மத்தேயு நற்செய்தியாளரின் திருச்சபை சேர்ந்து வரத் தொடங்கியபோது அவர்களுக்குள் சில மனத்தாங்கல்கள், புரிந்துகொள்ளாமை, அல்லது தவறான புரிந்துகொள்ளுதல் இருக்கின்றது. இதை சரி செய்ய மத்தேயு நற்செய்தியாளர் எடுக்கும் ஆயுதம்தான் இயேசுவின் அறிவுரை. அதாவது, இன்றைக்கு இருக்கிற நீட் பிரச்சினையை சரி செய்ய காமராஜரும், காந்தியும் அன்றே யோசனை சொல்வதாக சில வாட்ஸ்ஆப் வீடியோக்கள் வருகின்றனவே அதைப் போல. இப்போது இருக்கின்ற பிரச்சினை ஒன்றிற்கான தீர்வை ஏற்கனே இருந்த தலைவர் சொல்லது போல எழுதுவது. விவிலியத்தில் இதற்கு 'ரெட்ரோஜெக்சன்' (பின்னோக்கிப் புகுத்துதல்) என்று பொருள். இந்த இலக்கிய உத்தியைத்தான் மத்தேயு நற்செய்தியாளர் பயன்படுத்துகின்றார்.

இன்றைய நற்செய்தியை 'மனம் ஒத்திருத்தல்' என்ற வார்த்தையை மையமாக வைத்து இரண்டு உள்பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. மனம் ஒத்திருத்தலின் கடமைகள் (18:15-17)

ஆ. மனம் ஒத்திருத்தலின் உரிமைகள் (18:18-20)

அ. மனம் ஒத்திருத்தலின் கடமைகள்

'மனம் ஒத்திருத்தல்' என்பதை கிரேக்கத்தில் 'சிம்ஃபொனேயோ' என்று வாசிக்கின்றோம். இதிலிருந்துதான் 'சிம்ஃப்ஃபனி' என்ற ஆங்கில வார்த்தை வருகின்றது. 'ஒருங்கியக்கம்' அல்லது 'ஒருங்கமைவு' என்று மொழிபெயர்க்கலாம். ஒலிகள் இணைந்து சென்றால் அது சிம்ஃப்ஃபனி. அந்த ஒலிகள் இஷ்டத்திற்குச் சென்றால் அது இரைச்சல். அதுபோலவே மனித மனங்கள் இணைந்து சென்றால் அது 'ஒத்திருத்தல்' அல்லது சிம்ஃப்ஃபனி. இஷ்டத்திற்குச் சென்றால் அது இரைச்சல் தவிர வேறொன்றும் இல்லை.

'மனம் ஒத்திருத்தல்' என்பது தேவையா அல்லது தேவையில்லையா என்று விவாதம் செய்யாமல், 'மனம் ஒத்திருத்தல்' சமூகத்திற்கும், திருச்சபைக்கும் அவசியம் என்பதை ஒரு அடிப்படையாக எடுத்துக்கொள்கின்றார் மத்தேயு. இப்படி மனம் ஒத்திருக்கும் சமூகத்தில் நபர் அ-வுக்கும், நபர் ஆ-வுக்கும் இடையில் பிளவு வருகிறது. இந்தப் பிளவிற்குக் காரணம் நபர் 'ஆ' செய்த குற்றம். கிரேக்கத்தில் 'ஹமார்த்தியா' ('பாவம்') என்று கொடுக்கப்பட்டுள்ளது. எந்தப் பாவம் அல்லது எவ்வளவு கனமான பாவம் என்பது கொடுக்கப்படவில்லை. 'அ'வையும், 'ஆ'வையும் பிரிக்கும் அளவிற்குக் கனமான பாவம்தான்.

இப்படி பிரிந்து நிற்கும் 'அ' மற்றும் 'ஆ' மனம் ஒத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

மூன்று படிகளாக பிரச்சினையைத் தீர்க்கின்றார் மத்தேயு:

முதலில், ஒன் டு ஒன். நேருக்கு நேராக 'அ'வும், 'ஆ'வும் சந்திக்க வேண்டும். 'அ' 'ஆ' செய்த குற்றத்தை எடுத்துக்காட்ட வேண்டும். அல்லது சுட்டிக்காட்ட வேண்டும். அல்லது திருத்த வேண்டும். 'சரிப்பா. நான் செய்தது தவறுதான்' என 'ஆ' 'ஸாரி' கேட்டுவிட்டால் மேட்டர் ஓவர். அப்படி இல்லைன்னா இரண்டாவது படி.

இரண்டாவதாக, ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு 'ஆ'விடம் செல்ல வேண்டும். ஆனால் 'ஆ' ரொம்ப பிடிவாதமா இருந்தால் அடுத்த படி.

மூன்றாவதாக, திருச்சபையிடம் சொல்ல வேண்டும். அதாவது கூடி வரும் சபை. அந்த சபைக்கும் செவிசாய்க்காவிட்டால், 'ஆ'வை அப்படியே கழற்றிவிட்டுவிட வேண்டும்.

இங்க கவனிக்க வேண்டியது என்னவென்றால், 'திருச்சபை என்பது ஒரு உடல். அங்கே ஒரு உறுப்பு துன்புற்றால், மற்ற உறுப்பும் துன்புறுகிறது' என்ற சிந்தனை மேலோங்கி இருக்கிறது. ஆகையால்தான், ஒருவருக்கும் மற்றவருக்கும் இருக்கின்ற பிரச்சினை அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் திருச்சபையின் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. ஆனா இன்னைக்கு இத மாதிரி ட்ரீட்மென்ட் கொடுத்தால், 'நீ ரொம்ப யோக்கியமா?' என ஒருவர் மற்றவரைக் கேட்டுக்கொண்டு இன்னும் பிரச்சினை பெரிதாகிவிடும்.

மத்தேயுவின் திருச்சபையைப் பொறுத்தவரை, திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் மிக முக்கியமானவர். ஆக, ஒவ்வொருவரும் அடுத்தவரோடு மனம் ஒத்திருக்க வேண்டும். பிரிந்திருப்பவர்கள் ஒப்புரவாக வேண்டும்.

ஆக, மனம் ஒத்திருத்தலின் முதல் கடமை என்னவென்றால் 'குற்றம் கடிதல்.' இதையே இன்றைய முதல் வாசகத்திலும் (காண். எசே 33:7-9) பார்க்கின்றோம். இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலாளியாக, பொறுப்பாளனாக எசேக்கியேல் இறைவாக்கினரை ஏற்படுத்திய கடவுள் இறைவாக்குரைக்குமாறு அவரை அவர்களிடம் அனுப்புகின்றார். இறைவாக்கினர் என்ன செய்ய வேண்டும்? 'தீமை செய்தவர்களிடம் தீமையைச் சுட்டிக்காட்ட வேண்டும்.' இப்படிச் சுட்டிக்காட்டி குற்றங்கடியும் போது அவர்கள் திருந்துவர். அப்படி இவர் தீமையைச் சுட்டிக்காட்டவில்லை என்றால் தீமை இவர்மேலேயே விழும்.

அடுத்தவரிடம் இருக்கும் நன்மையைச் சுட்டிக்காட்டிவிடலாம். சில நேரங்களில் இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அடுத்தவரிடம் இருக்கும் தீமையை அல்லது குற்றத்தைச் சுட்டிக்காட்டுவது ரொம்ப கடினம். குறிப்பாக நமக்கு நெருக்கமானவர்களிடம் அவர்களின் குற்றத்தை எடுத்துரைப்பது இன்னும் அதிகக் கடினம். 'உறவு கசந்துவிடுமோ?' 'அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பாரோ?' என்று நாம் சில நேரங்களில் நினைத்து குற்றங்கடிய மறுக்கின்றோம். குற்றத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். இப்படிச் சுட்டிக்காட்டாமல் இருப்பதும் குற்றம் என எசேக்கியேல் இறைவாக்கினரைக் கடிந்துகொள்கின்றார் கடவுள்.

மனம் ஒத்திருத்தலின் இரண்டாவது கடமை அன்பு செய்வது. இதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 13:8-10) வாசிக்கின்றோம். தன் அறிவுரைப்பகுதியைத் தொடர்கின்ற பவுல் அன்பின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகின்றார்: 'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்.' அதாவது, நான் மற்றவரிடமிருந்து பெறுகின்ற அன்பை வட்டியும், முதலுமாக மற்றவரிடம் செலுத்திவிட வேண்டும். அன்பை எனக்கென வைத்துக்கொள்ளக் கூடாது. இப்படிப்பட்ட அன்பு 'அடுத்தவருக்குத் தீங்கிழைக்காது' எனவும் சொல்கின்றார் பவுல். இப்படிப்பட்ட அன்பு இருக்கும் இடத்தில், 'விபசாரம், கொலை, களவு, கவர்தல்' போன்றவை இருக்காது என்பது பவுலின் வாதம்.

இவ்வாறாக, நாம் மனம் ஒத்திருக்க இரண்டு கடமைகள் அவசியம்:

1. குற்றங்கடிதல்

2. அன்பு செய்தல்

ஆ. மனம் ஒத்திருத்தலின் உரிமைகள்

திருச்சபையில் உள்ள அங்கத்தினர்கள் மனம் ஒத்திருத்தலால் இரண்டு நன்மைகளைப் பெறுகின்றனர்:

ஒன்று, தாங்கள் விரும்பியதைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். 'உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்' (18:19) என்று இயேசு சொல்வதாகப் பதிவு செய்கிறார் மத்தேயு. அதாவது, இங்கே தனிமனித நன்மை அல்ல. மாறாக, குழுவின் நன்மையே முதன்மைப்படுத்தப்படுகிறது.

இரண்டு, கடவுளின் பிரசன்னம் திருச்சபையின் நடுவில் வரும்: 'ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' (18:20) என்கிறார் இயேசு. இயேசுவின் இதே வார்த்தைகளைச் சொல்லி நாம் பல இடங்களில், நேரங்களில் செபிக்கின்றோம். 'கூடி வருதல்' என்பது மிகவும் சாதாரண வார்த்தையாக இங்கே தெரிகிறது. ஆனால் இது சாதாரண வார்த்தை அல்ல. சினிமா அரங்கிலோ, சாலையிலோ, பேருந்து நிறுத்தத்திலோ மக்கள் கூடி வருதல் அல்ல இது. இத்தகைய கூடுகைகளில் உடல்கள்தாம் நெருக்கமாக இருக்கின்றனவே தவிர, உள்ளங்கள் அல்ல. மாறாக, இயேசு குறிப்பிடும் கூடுகை உள்ளங்களின் கூடுகை. ஆக, கடவுளின் பிரசன்னம் ஆள்சார்ந்த பிரசன்னம் என்ற நிலை சற்று மாறி, 'ஆள்கள்' சார்ந்த அல்லது 'மனம் ஒத்திருக்கும் ஆள்கள்' சார்ந்த பிரசன்னமாக மாறுகிறது. அப்படியென்றால் கடவுளின் பிரசன்னம் இம்மண்ணில் வர எனக்கு அடுத்திருப்பவருடன் மனம் ஒத்திருப்பது அவசியமாகிறது.

இவ்வாறாக, நாம் மனம் ஒத்திருக்கும்போது நாம் பெறும் நன்மைகள் அல்லது உரிமைகள் இரண்டு:

1. கடவுளிடமிருந்து நம் கொடைகளைப் பெறுகிறோம்

2. கடவுளை நம் நடுவில் பிரசன்னமாக்குகிறோம்

இறுதியாக,

மனம் ஒத்திருத்தலுக்கு தடையான இரண்டு காரணிகளை இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 95) அழகாக பதிவு செய்கிறது:

1. அவரது குரலுக்குச் செவிகொடுத்தல் - அடுத்தவரின் குரலுக்குச் செவிகொடுக்கத் தயாராக இருக்கும் ஒருவரால்தான் அடுத்தவரோடு மனம் ஒத்திருக்க முடியும். அப்படி இல்லாமல், ஒருவருக்குத் தனது குரல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தால் அவரால் அடுத்தவரோடு ஒத்துப்போக முடியாது. இதுதான் இஸ்ரயேல் மக்களுக்கு நடந்தது. பாலைநிலத்தில் வழியெங்கும் அவர்கள் தங்களின் குரலுக்குச் செவிகொடுத்தார்களே அன்றி கடவுளின் குரலுக்குச் செவிகொடுக்கவே இல்லை.

2. இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதிருத்தல் - 'கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும்' என்கிறார் பவுல். கனிவுக்கு எதிர்ப்பதமே கடினப்படுத்திக்கொள்ளுதல். நம் இதயம் கடினம் ஆகும்போது இரத்தம் அங்கே உள்ளே நுழைய முடிவதில்லை. உருவகமாகச் சொன்னால் உறவுகள் அங்கே நுழைய முடிவதில்லை. இரத்தம் நுழையாத இதயம் இறந்த இதயமாக இருக்கிறது.

இவ்வாறாக, மனம் ஒத்திருத்தலுக்கான தடைகளை அகற்றி, அதற்கான கடமைகளைச் செய்து, உரிமைகளை அனுபவிக்க இன்று நம்மை அழைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.