இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் ஞாயிறு

கைதொடும் கடவுள்

1 அரசர்கள் 19:9, 11-13
உரோமையர் 9:1-5
மத்தேயு 14:22-33

நோக்கியா ஃபோன் பயன்படுத்தியிருக்கிறீர்களா? ஃபோனை ஆஃப் செய்து ஆன் செய்யும் ஒவ்வொரு நேரமும் திரையில் இரண்டு கைகள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொள்ள நீள்வது போலத் தோன்றி கைகள் தொட்டுக்கொள்ளும். இரண்டு கைகளும் தொட்டுக்கொள்ளும் அந்த நேரத்தில் 'நோக்கியா' என கைகளுக்கு மேலும், 'கனெக்டிப் பீப்பிள்' என கைகளுக்குக் கீழும் எழுத்துருக்கள் தோன்றும்.

இதே போல தொட்டுக்கொள்ளத் துடிக்கும் இரண்டு கைகளை நாம் வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் சிற்றாலய மேற்கூரையில் மைக்கேல் ஆஞ்சலோ அவர்களின் கைவண்ணத்தில் உருவான 'படைப்பு' என்ற ஓவியத்தில் காணலாம். கடவுளின் கையும், ஆதாமின் கையும் ஒன்றையொன்று நோக்கி நிற்க, இரண்டு விரல்களும் தொட்டும் தொடாமலும் இருக்கும்.

  கடவுளின் கரமும், நம் கரமும் இணைதலை அல்லது நம் கரங்கள் எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்பதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்கிறது.

நீங்க யாருடைய கையை அல்லது விரலைப் பிடித்திருக்கிறீர்களா? அல்லது எப்பொழுதெல்லாம் நாம் ஒருவர் மற்றவரின் கையை அல்லது விரலை நீட்டிப் பிடிக்கின்றோம்?

நோயுற்ற நம் நண்பர் மருத்துவமனையில் இருக்க அவரைக் காணச் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லும்போது,
நம் நண்பர் அல்லது உற்றாரின் வீட்டில் இழப்பு அல்லது இறப்பு ஒன்று நிகழ அதற்கு ஆறுதல் சொல்ல நாம் அங்கே செல்லும்போது,
பார்வையற்ற ஒருவர் பாதையைக் கடக்க நாம் உதவி செய்யும்போது,
முன்பின் தெரியாத ஒருவரோடு அறிமுகம் ஆகும்போது,
நீண்ட காலமாக சந்திக்காத நண்பரைச் சந்திக்கும்போது,
நம் அன்பிற்கினியவருடன் டீகுடிக்க ஓட்டலில் அமர்ந்து டீ வரும்வரை அவரின் கையை நம் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு அவரின் வாட்ச், நகம், நகப்பூச்சு, கைரேகை, உள்ளங்கை மச்சம் என ஐன்ஸ்டீன் ஆராய்ச்சி செய்யும்போது,

என பல நேரங்களில் பல இடங்களில் நாம் ஒருவர் மற்றவரின் கையை நீட்டித் தொடுகிறோம். இப்படித் தொடும்போதெல்லாம் அவரும் நாமும் ஒன்றாகிவிட்ட உணர்வு நம்மிடம் வருகிறது. ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத ஆறுதலை ஒரு கை நீட்டிச் சொல்லிவிடுகிறது. ஆக, கையை நீட்டுதலின் சிம்ப்பிளான அர்த்தம், 'நான் உனக்காக இருக்கிறேன்' என்பதுதான்.

'எனக்காக யார் இருக்கிறார்?' என்ற கேள்வியோடு இன்றைய முதல் வாசகத்தில் எலியாவும், மூன்றாம் வாசகத்தில்  பேதுருவும் (சீடர்களும்) நிற்கின்றனர். 'இதோ நான் இருக்கிறேன். நான் தான்' எனக் கையை நீட்டுகின்றனர் ஆண்டவராகிய கடவுளும், ஆண்டவராகிய இயேசுவும்.

எலியாவின் கையும் கடவுளின் கையும் 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 அர 19:9, 11-13) ஆண்டவராகிய கடவுள் எலியாவுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். இதன் பின்புலம் என்ன? எலியா பாகாலின் இறைவாக்கினர்கள் 450 பேரைக் கொன்றுவிடுகின்றார் (காண். 18:16-40). பாகால் வழிபாட்டை முன்நின்று நடத்தியவர் இஸ்ரயேலின் ஏழாவது அரசனான ஆகாபின் மனைவி ஈசபேல். பாகால் வழிபாட்டை வைத்து அரசுக்கு நிறைய வருமானம் வந்தது. இப்போது எலியா அவர்களோடு போட்டியிட்டு, அவர்களை வென்று, அவர்களைக் கொன்றுவிடுகிறார். தன்னோடு உணவருந்திய தன் இறைவாக்கினர்களைக் கொன்றுவிட்டானே என ஆதங்கப்படுகின்ற ஈசபேல் எலியாவை பழிதீர்க்க நினைக்கிறாள். எலியாவைக் கொல்லுமாறு ஆள்களை அனுப்பிவிடுகின்றாள். அவர்களிடமிருந்து தப்பி ஓடுகின்ற எலியா சீனாய் மலையில் தஞ்சம் அடைகின்றார். மனிதர்களிடமிருந்து தப்பி ஓட எலியா தேர்ந்தெடுத்த அடைக்கலம் ஆண்டவரின் மலையே. ஆண்டவரின் மலையை அடைகின்ற எலியாவுக்குத் தற்கொலை எண்ணம் பிறக்கிறது: 'ஆண்டவரே, நான் வாழ்ந்ததுபோதும். என் உயிரை எடுத்துக்கொள்ளும்' (19:4) எனக் கடவுளிடம் மன்றாடுகின்றார். நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத வலி அல்லது துன்பம் வரும்போது நாமும் கடவுளை நோக்கி இப்படித்தான் மன்றாடுகிறோம். ஆனால், கடவுள் தன் வானதூதரை அனுப்பி அவருக்கு உணவும், நீரும் கொடுக்கின்றார். மேலும் வானதூதர், 'நீ செல்ல வேண்டிய பயணம் இன்னும் தூரம்' என எலியாவை அனுப்பிவிடுகின்றார். நாற்பது பகலும், நாற்பது இரவும் பயணம் செய்யும் எலியா ஒரு குகையை வந்தடைகின்றார். அந்நேரத்தில் அவருக்கு இறைவாக்கு அருளப்படுகிறது. மேலும் ஆண்டவர், 'எலியா, வெளியே வா. மலைமேல் என் திருமுன் வந்து நில். நான் உன்னைக் கடந்து செல்லவிருக்கிறேன்' என்கிறார்.

'என் கடவுள் யார்?' என்ற கேள்வி எலியாவின் உள்ளத்தில் இருந்துகொண்டே இருக்கின்றது. 'பாகாலின் இறைவாக்கினர்களைக் கொன்றுவிட்டோம். பாகால் நம்மை பழிதீர்ப்பார்' என்ற பயம் ஒருபுறம். 'என் கடவுள் இருக்கிறாரா? அல்லது இல்லையா?' என்ற ஐயம் மறுபுறம். இந்த பயத்தையும், அச்சத்தையும் போக்குவதாக இருக்கிறது கடவுளின் வெளிப்பாடு.

  கடவுளின் வெளிப்பாடு நான்கு நிலைகளில் நடக்கிறது: (அ) சுழற்காற்று, (ஆ) நிலநடுக்கம், (இ) தீ, மற்றும் (ஈ) மெல்லிய ஒலி. சுழற்காற்று, நிலநடுக்கம், தீ ஆகியவற்றில் தன்னை வெளிப்படுத்தாத கடவுள் மெல்லிய ஒலியில் தன்னை வெளிப்படுத்துகின்றார். எலியாவின் வாழ்வு ஏற்கனவோ 'சுழற்காற்று,' 'நிலநடுக்கம்,' 'தீ' என இருந்ததால் கடவுள் அவைகளில் தம்மை வெளிப்படுத்தாமல், மெல்லிய ஒலியில் தம்மை வெளிப்படுத்துகின்றார். கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்த எலியா போர்வையால் தன் முகத்தை மூடிக்கொள்கின்றார். மேலும், 'சுழற்காற்று,' 'நிலநடுக்கம்,' மற்றும் 'தீ' ஆகியவை அழிக்கக்கூடியவை. ஆக, ஏற்கனேவே அழிவைத் தாங்கி நிற்கும் எலியாவுக்கு மேலும் அழிவைத் தராமல், ஆக்கத்தை தருகின்றார் ஆண்டவராகிய கடவுள்.

  கடவுளின் கரம் எலியாவின் அச்சத்தையும், ஐயத்தையும் அகற்றுகிறது. புத்துயிர் பெற்று கீழே வரும் எலியா தன் வாரிசாக எலிசாவைத் தேர்ந்துகொள்கிறார். அதாவது, புதியதொரு வாழ்க்கையை அவர் தொடங்குகிறார். இனி அவரிடம் பயமோ, குற்ற உணர்வோ, ஐயமோ இல்லை.

ஆக, கடவுள் எலியாவை நோக்கி கரம் நீட்டியது கடவுளின் வெளிப்பாடு என்றால், அந்த வெளிப்பாட்டிற்கு ஏற்ற பதிலைத் தந்ததுதான் எலியாவின் நம்பிக்கை.

இயேசுவின் கையும் பேதுருவின் கையும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 14:22-33) இயேசுவின் கையும், பேதுருவின் கையும் இணைகின்றன. இயேசு தண்ணீரில் நடக்கும் நிகழ்வு மாற்கு (6:45-52) மற்றும் யோவான்  (6:16-21) நற்செய்தி நூல்களில் காணக்கிடக்கிறது. இருந்தாலும், இவை மூன்று பதிவுகளும் ஒன்றுக்கொன்று அதிகம் முரண்படுகின்றன. குறிப்பாக, பேதுரு என்னும் கதாபாத்திரம் மற்ற இரண்டு பதிவுகளில் இல்லை. 

இயேசு தண்ணீரில் நடக்கும் நிகழ்வு வரலாற்று நிகழ்வா அல்லது இறையியல் நிகழ்வா என்பதைப் பற்றிய ஆராய்சியாளர்களின் கருத்துக்கள் ஐந்து:

அ. இந்த நிகழ்வு வெறும் உருவகங்களை உள்ளடக்கியது: 'தண்ணீர்' (அலகை), 'படகு' (திருச்சபை), 'காற்று' (வேதகலாபனை), 'பேதுரு' (திருச்சபையின் தலைவர்), 'பேய்' (தண்ணீரில் குடியிருக்கும் அலகை). ஆக, இது வரலாற்று நிகழ்வு அல்ல.

ஆ. இது இயேசுவால் தன் பணிவாழ்வில் நிகழ்த்தப்பட்ட ஓர் அறிகுறி. இயேசு புவிஈர்ப்பு விசையின் பிடிப்பையும் தாண்டி நிற்பவர். அவர் மனித பலவீனத்திற்கு உட்பட்டவர் அல்லர்.

இ. தானாக நடந்த ஒரு நிகழ்வு அறிகுறியாக எழுதப்பட்டுள்ளது. சில நேரங்களில் புயல் போன்ற அலைகள் ஏரியில் உருவாவது உண்டு. அந்த நேரத்தில் நிறைய கட்டகைள் கடலில் மிதந்து வரும். அப்படிப்பட்ட ஒரு கட்டையின்மேல் ஏறி நின்று இNயுசு அவர்களை நோக்கி வருகின்றார்.'

ஈ. இயேசுவின் வரலாற்றோடு தொடர்பற்ற ஒரு கiதாயடல்.

உ. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடந்த ஒரு நிகழ்வை நற்செய்தியாளர்கள் இங்கே இடை செருகுகின்றனர். உயிர்ப்புக்குப் பின் இயேசுவின் உடல் புவிஈர்ப்புவிசையின் பிடியிலிருந்து தப்பிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் இயேசுவால் தண்ணீரின்மேல் நடக்கின்றார். இந்த நிகழ்வை ஓர் இறையியல் நிகழ்வாகவே எடுத்துக்கொள்வோம். இந்த நிகழ்வின் வழியாகவே சீடர்கள் இயேசுவை யாரென்று அறிந்துகொள்கிறார்கள்.

  'தூரம்' என்ற ஒற்றைச் சொல்லை வைத்து இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. ரொம்ப தூரத்தில் கடவுள் (19:22-26)

ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் இயேசு (காண். 14:13-21) கூட்டத்தினரை அனுப்பிய வேகத்தில் சீடர்களையும் படகேறித் தமக்குமுன் அக்கறைக்கு அனுப்புகின்றார். இயேசு 'கட்டாயப்படுத்தி' அவர்களை அனுப்பி வைத்தார் என பதிவு செய்கின்றார் மத்தேயு. ஏன் இந்தக் கட்டாயம்? தான் தன் தந்தையோடு செபத்தில் இணைந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்ற இயேசு தன் சீடர்களைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாரா? அல்லது தான் நிகழ்த்தவிருக்கும் அறிகுறிக்காக அவர்களைத் தயாரிக்கிறாரா? எப்படியோ, இயேசு அவர்களைவிட்டு நீங்குவது அவர்கள் அனுபவிக்கப்போகும் தனிமையை முன்குறிக்கிறது. சீடர்கள் கடல் நடுவில் படகில். இயேசுவோ மலை உச்சியில். ரொம்ப தூரத்தில் இருக்கிறார் கடவுள். ஆ. கொஞ்ச தூரத்தில் கடவுள் (19:27-30)

சீடர்களின் படகு அலைகளால் அலைக்கழிக்கப்படும்போது அவர்களை நோக்கி நெருங்கி வருகின்றார் இயேசு. ஆனால், கடல் என்பது பேய்கள் வாழும் இடம் என்பதால் கடலில் தோன்றிய இயேசுவின் உருவத்தைப் பார்த்து, 'பேய்' எனச் சொல்கின்றனர் சீடர்கள். 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள். இங்கே அரண்ட சீடர்களின் கண்களுக்கு ஆண்டவரும் பேயாகத் தெரிகின்றார். உடனே இயேசு, 'நான்தான். அஞ்சாதீர்கள்' என்கிறார். இதைக் கேட்டவுடன், தனக்கும் இயேசுவுக்கும் உள்ள தூரத்தை குறைத்துக்கொள்ள நினைத்து கடலில் குதித்து இயேசுவிடம் செல்கின்றார் பேதுரு. இ. கையருகில் கடவுள் (19:31-33)

இன்னொரு அலை அடிக்க, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என பேதுரு கதற, கையை நீட்டி அவரைத் தூக்குகின்றார் இயேசு. இதற்கிடையில் படகும் அருகில் வந்துவிடுகிறது. இயேசுவைக் கண்ட சீடர்கள் அவரைப் பணிந்து வணங்குகின்றனர். 'உண்மையாகவே நீர் இறைமகன்' என அறிக்கையிடுகின்றனர்.

சீடர்களின் அச்சம் மறையக் காரணம் இயேசுவின் கை அவர்களின் கைகளைப் பற்றிக்கொண்டதுதான். 

இவ்வாறாக, இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் 'கைதொடும் கடவுளை' நமக்குக் காட்டுகின்றன. இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 9:1-5) இஸ்ரயேல் மக்களின் கடவுள் அனுபவத்தையும், தொடக்கத் திருச்சபையின் கடவுள் அனுபவத்தையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. அதாவது, தொடக்கத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தன் இனமாக தெரிந்து கொள்கிறார். அந்த தெரிந்துகொள்ளப்பட்ட இனத்திலிருந்து தோன்றிய கிறிஸ்து எல்லாவற்றுக்கும் மேலான கடவுளாக இருக்கிறார் என அறிக்கையிடுகின்றார் பவுல். கடவுள் கிறிஸ்துவழியாக அல்லது கிறிஸ்துவில் தூரத்திலிருக்கும் மக்களின் அருகில் வருகிறார். இவ்வாறாக, கிறிஸ்துவின் வருகையால் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தூரம் மிகவே குறைகிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. கடவுளின் தூரம்

எலியாவும், சீடர்களும் அனுபவித்த ஓர் உணர்வு 'கடவுளின் தூரம்.' நம் தனிமை, அச்சம், ஐயம் போன்ற நேரங்களல் கடவுளின் தூரத்தை நாம் அதிகமாக உணர்கிறோம். இவ்வாறு நாம் உணரும் பொழுதுகள் நம் வாழ்வில் சுழற்காற்றாக, நிலநடுக்கமாக, தீயாக, புயலாக நம்மை அலைக்கழிக்கின்றன. ஆனால், வீசி எறியப்படும் பந்து அதிகமான தூரம் சென்றால்தான் அதிகமான வேகத்தில் திரும்பி வரும் என்பது அறிவியல். ஆக, அதிக தூரம் செல்லும் கடவுள் அதிக நெருக்கமாக நம்மோடு ஒட்டிக்கொள்வார் என்ற வாக்குறுதியை தருகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு. நம் கிணறு வற்றும் நேரம், நம் வாளி தரை தட்டும் நேரம், நம் வண்டி எரிபொருள் இழக்கும் நேரம் தான் கடவுளின் தூரம். 

2. மெல்லியவைகளின் கடவுள்

கடவுள் எலியாவுக்கு மெல்லிய ஒலியில் தன்னை வெளிப்படுத்துகின்றார். இயேசு தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தும் வார்த்தைகளும், 'நான்தான்' என்ற மெல்லிய ஒலியாக இருக்கிறது. சுழற்காற்றின், நிலநடுக்கத்தின், தீயின் பின்புலத்தில் எலியா எப்படி மெல்லிய ஒலியைக் கேட்டறிந்தார்? அல்லது கடல் அலைகளின் இரைச்சலுக்கு நடுவே இயேசுவின் மெல்லிய ஒலி அவர்கள் காதுகளில் எப்படி விழுந்தது? வலிமையானவற்றில் அல்ல, மென்மையாவனற்றிலம், மெல்லியவற்றிலும், மெலிந்தவற்றிலும், மெலிந்தவர்களிலும்தான் இருக்கிறது இறைவனின் கரம். வல்லியது எல்லாம் வன்மம் செய்யக்கூடியது. மெல்லியது தழுவக்கூடியது. நம் கடவுள் மெல்லியவைகளின் கடவுள் என்றால் நாம் நம் வாழ்வில் மெல்லியர்களாக, மென்மையானவர்களாக இருக்கலாமே!

3. இயேசு என்னும் பாலம்

முதல் ஏற்பாட்டிற்கும், இரண்டாம் ஏற்பாட்டிற்கும் பாலமாக இருக்கின்றார் இயேசு. அவரின் கரம் பிடித்தே நாம் பழைய உடன்படிக்கையிலிருந்து புதிய உடன்படிக்கைக்குக் கடந்து செல்கிறோம்.

4. துணிவோடிருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்

இயேசுவின் 'நான்தான்' என்ற சொல்லாடலைச் சுற்றி அச்சம் நீக்கும் இரண்டு வார்த்தைகள் உள்ளன: 'துணிவோடிருங்கள்,' 'அஞ்சாதீர்கள்.' இவை இரண்டின் பொருள் ஒன்றுதான். அச்சம் களையும்போதுதான் கடவுளின் கரம் நம் கண்களுக்குத் தெரிகிறது. சீடர்கள் அச்சம் கொண்டிருக்க, பேதுருவோ, 'ஐயம்' கொண்டிருக்கிறார். இயேசுவின் உடனிருப்பு தன்னோடு தொடர்ந்து இருக்குமா, இருக்காதா என்ற ஐயமே அவரைத் தண்ணீரில் ஆழ்த்துகிறது.

5. பாதிவழியும், மீதிவழியும்

எலியாவின் கரத்தைத் தொடுகின்ற ஆண்டவராகிய கடவுள் இன்னும் அவர் செல்ல வேண்டிய வழியைக் காட்டுகின்றார். பேதுருவின் கையைத் தொடுகின்ற ஆண்டவராகிய இயேசு அவரோடு மீண்டும் படகிற்குள் ஏறுகின்றார். கடவுளின் கரத்தைத் தொட்டவுடன் நம் பயணம் முடிந்துவிடுவதில்லை. மீதிவழியும் நாம் செல்ல வேண்டும். அந்த மீதிவழியில் நம் வழியும் வழித்துணையுமாய் இருப்பவர் கடவுள்.

இறுதியாக,

அவர் கரமும், நம் கரமும் ஒன்றானால் அங்கே அறிகுறி நடக்கும்.
அச்சமும், ஐயமும் அகன்றால் அவரின் கரம் நம் அருகில் வரும்.
அவரின் கரம் அச்சம், ஐயம் அகற்றும்.
கைதொடும் தூரத்தில் கடவுள்...
கைதொடும் கடவுள்.