இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு

சுமைதாங்கியே சுமையானால் மகிழ்ச்சி!

செக்கரியா 9:9-10
உரோமையர் 8:9,11-13
மத்தேயு 11:25-30

சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்குச் சென்றோமெனில் ஆற்றுப்படுகைகளிலும், ஊரணிகள் மற்றும் குளங்களின் கரைகளிலும் நெட்டுவாக்கில் நடப்பட்டு இரண்டு கற்களையும், அவைகளின் மேலே குறுக்காக வைக்கப்பட்ட நீண்ட கல்லையும் காணலாம். இந்தக் கற்கள் தாம் சுமைதாங்கிகள். உணவு, உடை என வாங்கிக்கொண்டு ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்யும் சாமானியர்கள் நிழல் தரும் மரங்களின் கீழே சுமைகளைச் சற்றே இறக்கி வைத்துவிட்டு தண்ணீர் பருகவும், தொடர்ந்து தங்கள் பயணத்தைப் புத்துணர்ச்சியோடு தொடங்கவும் பயன்பட இராஜராஜ சோழன் அமைத்தவையே இந்தச் சுமைதாங்கிகள்.

இந்தச் சுமைதாங்கிகளைப் பற்றி இரண்டு புரிதல்கள் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பிரசவிக்கும் பெண்கள் இறந்துவிட்டால் அவர்கள் நினைவாக ஊருக்கு வெளியே இரண்டு நிலைக்கற்களை ஊன்றி, அதன் குறுக்கே படுக்கை வசமாக கல் வைக்கும் பழக்கம் சில ஊர்களில் இருந்ததாக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பதிவு செய்கிறார். அதாவது, வாழும்போது ஒரு குழந்தையைச் சுமந்தவர்களின் நினைவாக எழுப்பப்படும் இக்கற்கள் சுமைதாங்கிகளாகப் பயன்பட்டன. இரண்டாவது புரிதல் என்னவென்றால், நாம் மேலே கூறியபடி, போக்குவரத்து அதிகம் வளர்ச்சி பெறாத அந்நாள்களில், சாலைகளில் ஆள்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்நாள்களில், பெருஞ்சுமைகளைத் தூக்கிக் கொண்டு வருபவர்கள் தாங்களாகவே தங்கள் சுமைகளை இறக்கி வைத்து, சற்று நேரம் இளைப்பாறிவிட்டு, மீண்டும் பயணத்தைத் தொடர உதவிக்கரம் நீட்டுபவையே இந்த சுமைதாங்கிக் கற்கள்.மக்களுக்கு இளைப்பாற நிழலும், பருக தண்ணீரும் தேவை என்பதால் இவைகள் பெரும்பாலும் ஊரணிகள், குளங்கள், மற்றும் மரங்களின் அடியில் நிறுவப்பட்டன.

நாம் இந்தச் சுமைதாங்கிக் கற்களில் நம் சுமையை இறக்கி வைக்கிறோம் என வைத்துக்கொள்வோம். சற்று நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் நாம் சுமையை சுமக்க தயாராகும்போது ஒருவேளை சுமைதாங்கிக் கல்லும் அத்தோடு சேர்ந்து வந்தால் என்ன நடக்கும்? நம் சுமை நிச்சயமாகக் கூடும். நம் கழுத்தும் முறிந்துவிடும்.

ஆனால், இயேசு என்ற சுமைதாங்கி நம் வாழ்வின் சுமையானால் மகிழ்ச்சி என்ற சிந்தனையை தருகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்று நாம் நம் சுமையை நிறைய குறைத்துவிட்டோம். நம் ஆடைகள் மெல்லியதாகிவிட்டன. பாடப்புத்தகங்கள், புத்தகங்கள் வெறும் கே.பி. அளவுக்கு சுருங்கிவிட்டன. அவைகளை நாம் நம் கைகளில்கூட சுமக்கத் தேவையில்லை. அவற்றை நாம் மேகத்தில் சேமித்துக்கொள்ளலாம். உணவுப் பொருள்களை நாம் வாங்கி சுமக்கத் தேவையில்லை. இலவச டோர் டெலிவரி, பெய்ட் டோர் டெலிவரி, ஆன்லைன், ஆப்வழி வாங்கல் என நம் தொடுதிரைகள் நம் வேலைகளை இலகுவாக்கிவிட்டன. நாம் அதிகம் சுமப்பது நம் ஃபோன்களை மட்டுமே. இன்று ஸ்லிம் ஃபோன், ஸ்லீக் ஃபோன் என அவைகளும் சுருங்கிக் கொண்டே வருகின்றன. இப்படி நம் வெளிப்புற சுமைகள் எல்லாம் மிகவும் குறைந்துவிட்டன.

ஆனால், இதற்கு எதிர்முகமாக நம் உள்ளத்திலும், மூளையிலும் சுமைகள் கூடிக்கொண்டே போகின்றன. வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியைப் படித்து அதை உட்கிரகித்துக்கொள்வதற்குமுன் இருபது, முப்பது செய்திகள் வந்து குவிகின்றன. ஒரு காணொளியைப் பார்க்குமுன் மற்ற காணொளி வந்திருப்பதாக நம் மொபைல் அலறுகிறது. ஆக, நம் மூளை செய்திகளைச் சுமந்து சுமந்து சோர்வடைந்துவிடுகிறது. நாளின் இறுதியில் ஒரு நிமிடம் கட்டிலில் அமர்ந்து, 'இன்று நான் என்ன வாசித்தேன்?' என்று என்னையே ஆய்ந்து பார்த்தால் ஒன்றும் மனதில் பதிவதில்லை. போகிற போக்கில் செய்திகளை எடுத்துக்கொள்வதால் மனமும் தன் நினைவை இழந்து கொண்டே வருகின்றது. மற்றொருபக்கம் உணர்வுச் சுமைகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு உணர்வை அனுபவித்து முடிக்குமுன் அடித்த உணர்வு தொற்றிக்கொள்கிறது. அந்தக்காலத்தில் திருமணத்திற்குச் சென்று மகிழ்ச்சியாக இருந்துவிட்டு வீட்டிற்கு திரும்புபவர்கள் தங்கள் உறவினர் யாராவது இறந்திருக்கக் கண்டு அழுவதை நான் பார்த்திருக்கிறேன். வேகமான தொழில்நுட்பம் இல்லாததால் காலையில் இறந்த செய்தி மாலையில்தான் அவர் அறிகின்றார். ஆனால், இதில் ஒரு நல்லது இருக்கிறது. அதாவது, காலையில் திருமண வீட்டில் முழுமையாக மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, மாலையில் வந்து அழுவார். ஆனால், இன்று எல்லாம் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுவிடுவதால் ஒரு உணர்வை நாம் அனுபவிக்குமுன் அடுத்த உணர்வு நம்மேல் திணிக்கப்படுகிறது. இவ்வாறாக தொழில்நுட்பம் நம் மூளையின், உள்ளத்தின் சுமையை அதிகமாக்கிக்கொண்டே போகிறது. இந்தச் சுமைகளை நாம் இறக்கிவைக்க சுமைதாங்கிகள் கிடையாது. சற்றுநேரம் இறக்கி வைக்கலாம் என நினைத்து நம் செல்ஃபோனை அணைத்து வைத்தாலும் அடுத்தடுத்து வரும் தகவல் ஓட்டத்தில் நாம் பின்தங்கியவர்களாகிவிடுகின்றோம்.

மேலும், ஜூன் 30 இரவு முதல் 'ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே வரி' என்று புதிய வரி வசூலிப்பை கையில் எடுத்திருக்கிறது நம் இந்திய அரசு. ஒருமயமாக்கலின் முயற்சியின் முக்கிய பகுதியாக இருந்தாலும், இந்த வரி வசூலிப்பால் நடுத்தர மக்களின் நாக்கு தள்ளுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. தான் சுற்றுலா போகிற நாடுகளில் இருந்து எதையாவது ஒன்றை குருட்டாம்போக்கில் காப்பி அடித்துவிட்டு வந்து, 'இப்படி இருந்தால் இந்தியா வல்லரசு' ஆகும் என்று மாயையில் வைத்திருக்கிறார் நம் பிரதமர். இன்று நம் தனிப்பட்ட வாழ்வோடு இணைந்து, குடும்பம் மற்றும் சமூக வாழ்வும் நமக்கு சுமையாக மாறிக்கொண்டே வருகின்றது.

இந்தப் பின்புலத்தில் இன்று நாம் வாசிக்கும் இறைவாக்கு வழிபாடு கடவுள் தரும் இளைப்பாற்றியை நமக்கு முன்வைக்கிறது.

முதல் வாசகம்

இன்றைய முதல் வாசகத்தை இலக்கிய நடையில் வாசித்தால், அங்கே நிறைய இரட்டிப்புச் சொல்லாடல்கள் இருப்பதை நாம் பார்க்கின்றோம்: 'சீயோன் - எருசலேம்,' 'மகிழ்ந்து களிகூறு - ஆர்ப்பரி,' 'வருகிறார் - ஏறி வருகிறார்,' 'கழுதையின்மேல் - கழுதைக் குட்டியாகிய மறியின்மேல்,' 'எப்ராயிம் - எருசலேம்,' 'தேர்ப்படை - குதிரைப்படை,' 'ஒருகடல் முதல் மறுகடல் வரை - பேராறுமுதல் நிலம் வரை'. இச்சொல்லாடல்கள் எல்லாம் இரண்டிரண்டு முறை பயன்படுத்தப்படக் காரணம் இலக்கிய நடை மட்டுமல்ல. மாறாக, ஒரு சொல்லாடலை திரும்ப வேறு வார்த்தையிலும் (அதே பொருளிலும்) கையாள்வதன் வழியாக ஆசிரியர் தான் சொல்ல விரும்பும் கருத்தை மிகவும் ஆணித்தரமாக வாசகர் மனத்தில் பதிவு செய்கிறார்.

பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மக்களுக்கு புதிய மெசியாவின் வருகையை முன்னறிவிக்கும் செக்கரியா, 'மகிழ்ச்சி,' மற்றும் 'ஆறுதலின்' செய்தியை அவர்களுக்குத் தருகின்றார். வரவிருக்கும் அரசர் மூன்று அடைமொழிகளால் அழைக்கப்படுகின்றார்: 'நீதியுள்ளவர்,' 'வெற்றிவேந்தர்,' 'எளிமையுள்ளவர்.' இதற்கு முன்னிருந்த அரசர்கள் எல்லாம் 'நீதியாக இல்லை,' 'எதிரிகளிடம் தோல்வி கண்டனர்,' 'ஆடம்பரமாக இருந்தனர்.' இதற்கு மேலாக, இப்போது வரும் அரசர் 'கழுதைக்குட்டியின்மேல்' ஏறி வருகின்றார். இதுவரையில் வந்த அரசர்கள் எல்லாம் குதிரையில் வந்தார்கள். குதிரையில் வந்தவர்கள் குருதியையும், கண்ணீரையும் கொண்டுவந்தனர். அவர்கள் வந்தபோதெல்லாம் அழுகையும், அங்கலாய்ப்பும் இருந்தது.ஆனால், கழுதையின்மேல் வரும் இந்த அரசர் கொண்டுவருவது மகிழ்ச்சி ஒன்றே. இவர் போர்க்கருவிகளை அறவே ஒழிக்கின்றார். வேற்றினத்தார்க்கும் அமைதி தருகின்றார்.

இப்படியாக, மக்கள் தாங்கள் வருந்திச் சுமந்த சுமைகளை அகற்றி, மகிழ்ச்சி தருவார் மெசியா என செக்கரியா இறைவாக்கு உரைக்கின்றார். இந்த இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறது என்பது கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டுள்ள நம்பிக்கை.

இரண்டாம் வாசகம்

'தூய ஆவி அருளும் வாழ்வு' பற்றி உரோமை நகர திருச்சபைக்கு அறிவுறுத்துகின்ற பவுல், 'ஆவிக்குரிய இயல்பு,' 'ஊனியல்புக்குரிய இயல்பு' என்று இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 8:9,11-13) பதிவு செய்கின்றார். நாம் இந்த இரண்டு இயல்பும் கொண்டிருக்கும் நிலையில்தான் இருக்கின்றோம். ஊனியல்பு பருப்பொருள் சார்ந்து. பருப்பொருளோடு இருப்பதால் இதற்கு எடை உண்டு. இந்த எடை நம்மை கீழ்நோக்கி இழுக்கிறது. கீழ்நோக்கி இழுக்கும் எதுவும் இறப்பு தரக்கூடியது. ஏனெனில் நாம் இறக்கும்போது கீழேதான் அடக்கம் செய்யப்படுகின்றோம். அதற்கு மாறாக, ஆவிக்குரிய இயல்பு பருப்பொருள் சாராதது. அதற்கு எடை கிடையாது. ஆக, அது மேல்நோக்கி எழும்பக்கூடியது.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், 'ஊனியல்பு' நமக்கு 'சுமை' தரக்கூடியது. 'ஆவிக்குரிய இயல்பு' அந்த 'சுமையிலிருந்து' நமக்கு விடுதலை தரக்கூடியது. அந்த விடுதலையே உயிர்ப்பு.

நற்செய்தி வாசகம்

இன்றைய நற்செய்தி வாசகத்தை (மத் 11:25-30) இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

அ. தந்தை மகன் உறவும், அது வெளிப்படுத்தப்படுதலும் (11:25-27)

தந்தை-மகன் உறவு ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்படாமல் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அல்லது குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இங்கே ஒரு புரட்டிப்போடுதல் நிகழ்கின்றது. இந்த இடத்தில் மற்றொன்றும் தெளிவாகிறது. அதாவது, இறைத்திருவுளம் யாருக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என தந்தை விரும்புகிறாரோ அவருக்கு மட்டுமே அது வெளிப்படுத்தப்படுகிறது. ஆக, இதை 'நான் அடைவேன்' என நினைத்து ஒருவர் அடைய முடியாதது. அல்லது இது முற்றிலும் ஒரு கொடை. இந்தக் கொடையைப் பெற ஒரே தகுதி என்னவென்றால், நாம் எந்த தகுதியும் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆ. இயேசு தரும் இளைப்பாறுதல் (11:28-30)

இரண்டாம் பகுதியில் இயேசு ஆறுதலை வாக்களிக்கின்றார். வாழ்க்கை என்ற பயணத்தில் அன்றாடம் சுமக்கும் சுமைகளைத் தன்னிடம் இறக்கி வைக்க வாருங்கள் என்று சுமைதாங்கியாக நம்மை அழைக்கின்றார் இயேசு.

இந்த இரண்டாம் பகுதியை இரண்டு உள்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: 1) அழைப்பு, 2) வாக்குறுதி.இயேசுவின் அழைப்பு இரண்டு நிலைகளில் உள்ளது: 1) என்னிடம் வாருங்கள். 2) என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.இயேசுவின் வாக்குறுதிகள் மூன்று: 1) நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். 2) நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 3) என் நுகம் அழுத்தாது.

நுகம் என்றால் என்ன? என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. இது ஒரு விவசாய சமுதாயத்தின் வார்த்தை. எருதுகளை சுமைகள் இழுக்கும் வண்டியில் பூட்டும்போதும், நிலத்தை உழுவதற்கு ஏரில் சேர்க்கும் போது எருதுகளின் கழுத்தில் வைக்கப்படும் மரத்துண்டே நுகம். இந்த நுகத்தைச் சுற்றி வரும் தோல் பட்டையினால் எருதுகள் பூட்டப்படும். நுகங்கள் அழுத்தி கறுத்துச் சுருங்கித் தொங்கிப்போன எருதுகளின் கழுத்துப் பகுதி அது சுமக்கும் சுமையின் அடையாளம். உகாரித் மற்றும் அசீரிய நாடுகளின் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் அடிமைகளைக் கட்டி இழுத்துச் செல்ல நுகங்கள் பயன்பட்டன என்றும், எகிப்தில் பிரமிடுகளைக் கட்டும்போது பாரவோன்கள் நுகங்களை அடிமைகள் மேல் வைத்து அவர்களைச் சுமைகளைச் சுமக்க வைத்தனர் எனவும் சொல்கின்றனர். இவ்வாறு அவர்கள் செயல்பட்டதற்கான ஓவிய ஆதாரங்களும், கல்வெட்டுக்களும் இருக்கின்றன. எரேமியா இறைவாக்கினரும் தன் கழுத்தில் நுகத்தைப் பூட்டியவராய் யூதா அரசம் இதேபோல அடிமைத்தனம் என்னும் நுகத்தால் கட்டப்பட்டு பாபிலோனியாவிற்கு இழுத்துச்செல்லப்படும் என்று செதேக்கியா அரசன் முன் இறைவாக்குரைக்கின்றார் (எரேமியா 27).

இந்த இரண்டு பின்புலங்களில் பார்க்கும் போது இயேசு பயன்படுத்தும் 'நுகம்' என்ற வார்த்தை அடிமைநிலையைக் குறிப்பதாக இருக்கின்றது. இயேசு தன் சமகாலத்தவர் அனுபவித்த உரோமை மற்றும் கிரேக்க அடிமைத்தனத்தின் கொடுமைகளிலிருந்து அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக இந்த வார்த்தைகளைச் சொல்கின்றார். இயேசுவின் சமகாலத்தவர் அரசியல், சமூகம், பொருளாதாரம், வாழ்வாதாரம் என்ற அனைத்து நிலைகளிலும் அந்நியரால் சுரண்டப்பட்டனர். சாதாரண சாமானியரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. இயேசு சுமைகளைக் குறைப்பவராகவோ, சுமைகளைத் தான் சுமந்துகொள்பவராகவோ, சுமைகளை அழிப்பவராகவோ வாக்குறுதி தரவில்லை. மாறாக, இளைப்பாறுதல் தருவதாக மட்டுமே சொல்கின்றார்.

மேலும், நம் சுமைகள் குறைய வேண்டுமானால் இயேசு முன்வைக்கும் ஒரு வழி, அவரின் நகுத்தை ஏற்றுக்கொள்வது.

இயேசு என்ற சுமைதாங்கி நம் சுமையாக மாறினால் நமக்குக் கிடைப்பது இளைப்பாறுதல். அந்த இளைப்பாறுதலின் வெளிப்பாடு மகிழ்ச்சி.

இயேசு என்ற சுமைதாங்கி நம் நுகமாக, சுமையாக மாற நாம் என்ன செய்ய வேண்டும்?

1. அவரிடம் வர வேண்டும், அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சுமைகள் என்றால் உடனடியாக நாம் நம் கடன்சுமையையோ, வேலைப் பளுவையோ, படிப்பையோ, பயணத்தையோ, வீட்டில் நடக்கும் திருமணத்தையோ, நம் நாட்டின் அரசியல், பொருளாதார சூழலையோ மட்டும் நினைக்க வேண்டாம். நம் உள்ளத்தில் இருக்கும் தனிமை, வெறுமை, இயலாமை, குற்றவுணர்வு, பயம், கோபம் என நாம் தெரியாமல் சுமக்கும் சுமைகளும் ஏராளம். எதற்காக அவைகளைச் சுமந்து கொண்டே செல்ல வேண்டும். இயேசுவிடம் செல்லலாமே. அவரிடம் செல்லும் வழியே குறுகலான வழி. அந்த வழியிலேயே நம் சுமைகள் தானாகக் குறைந்துவிடும். இரண்டாவதாக, அவரிடம் சென்றால் மட்டும் போதாது. அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். என்ன கற்றுக்கொள்வது? கனிவு மற்றும் மனத்தாழ்மை. இதையே பழைய மொழிபெயர்ப்பில் சாந்தம் மற்றும் மனத்தாழ்ச்சி எனக் கற்றோம். கனிவு என்றால் என்ன? கனிவின் அர்த்தம் கனி. காய்க்கும் கனிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? காய் எதிர்த்து நிற்கக் கூடியது. கனி வழிந்து கொடுக்கக் கூடியது. காயைக் கடித்தால் பல்தான் வலிக்கும். ஆனால் கனியில் ஊசியும் இலகுவாக நுழைந்துவிடும். கனியின் இயல்பு நெகிழ்வுத்தன்மை. வலிந்து நின்றால் சுமை இன்னும் வலிக்கும். நெகிழ்ந்து கொடுத்தால் சுமையும் இலகுவாகும். மனத்தாழ்மை என்பது என்ன? நாம பல நேரங்களில் நினைப்போம். நமக்கு நடக்கும் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்குத் தகுதியற்றவை. வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரியாய் இருப்பதில்லை. சமநிலையில்லாதது வாழ்க்கை. 'நான் ஏழையாக இருக்கப் படைக்கப்பட்டவன் அன்று!' என்று சொல்பவர்களே விரைவில் பணம் வேண்டி திருடத் தொடங்குகின்றனர். 'நான் வெற்றியாளனாக இருக்கப் படைக்கப்பட்டவன்' என்பவர்கள் 'எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்று' துணிகின்றனர். இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொள்வதே மனத்தாழ்மை. இந்த இரண்டு;ம் இருந்தால் எந்தச் சுமைகளையும் சுமந்துவிடலாம். நம்மிடம் இருக்கும் ஏதாவது ஒரு பழக்கம் சுமையாக நம்மோடே வரலாம். குடி, கடன், பொய்பேசுதல், வன்சொல் - இவைகளை நெகிழ்வோடும், தாழ்மையோடும் ஏற்றுக்கொண்டால் இளைப்பாறுதல் தானாகவே வந்துவிடும்.

2. அவரின் இயல்பு நம் இயல்பாக வேண்டும்

இயேசுவை உயிர்பெறச் செய்தது அவரின் ஆவி என்கிறார் பவுல். ஆக, ஆவியும், ஆவிக்குரிய இயல்பும் நம்மை எப்போதும் மேல்நோக்கி எழுப்பவல்லது. மேல்நோக்கி எழும்பிச் செல்லும் நாம் கீழ்நோக்கி செல்லுதல் கூடாது. ஒரே நேரத்தில் நாம் கீழேயும், மேலேயும் இழுக்கப்பட்டால் என்ன ஆகும்? நாம் இருக்கின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருப்போம்? நம் வாழ்வில் மாற்றம் என்பது இல்லாமல் போய்விடும்? மாற நினைத்தாலும் மாற முடியாமல் போய்விடும். ஆக, அகம்சார்ந்த கட்டின்மையே ஆவிக்குரிய இயல்பு. இந்த இயல்பு மேலோங்கி இருந்தால் நமக்கு எதுவும், யாரும் சுமையாகிவிட முடியாது.

3. கழுதைக்குட்டி போதும்

இன்று நாம் பெரியவற்றை, பெரியவர்களை, குதிரையில் வருபவர்களைப் பார்க்கவே விரும்புகிறோம். நாமும் குதிரையில் வரவே விரும்புகிறோம். ஆனால், இப்படி வருபவர்கள் எல்லாரும் சுமைகளை அதிகமாக்கினாரே தவிர, அவற்றைக் குறைக்கவே இல்லை. நான் இன்று யாருக்காவது சுமையாக இருக்கின்றேனா? அல்லது எனக்கு அடுத்திருப்பவரின் சுமையைச் சுமக்க நான் உதவி செய்கின்றேனா? சில நேரங்களில் நான் குறுகிய கால அல்லது போலியான இளைப்பாறுதல்களைத் தேடி ஓடுகிறேனா? மது, மாத்திரை போன்றவை தரும் இளைப்பாறுதல் குறுகியவை, போலியானவை. சில நேரங்களில் நம் நண்பர்கள் தரும் இளைப்பாறுதல்களும் குறுகிய காலம் கொண்டதாகவே இருக்கின்றன. போலியான இளைப்பாறுதல்களை நாம் இனங்கண்டு அகற்ற வேண்டும்.

இறுதியாக,

இயேசு நமக்கு இளைப்பாறுதல் தருவதாக நம்மை அழைத்துவிட்டு, நம்மேல் அவர் தன் நுகத்தை எடுத்து வைப்பதாக எண்ண வேண்டாம்? நமக்கு முன்னால், நம்மோடு சுமையைத் தூக்கிய அவர் நம் சுமையை ஒருபோதும் அதிகப்படுத்துவதில்லை. அவர் என்றுமே நம் சுமைதாங்கிதான். ஆனால், இந்த சுமைதாங்கி நம் உடன் வந்தால், இதையும் நாம் சேர்த்துச் சுமந்தால் நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

சுமைதாங்கியே சுமையானால் மகிழ்ச்சியே!

__________ fr. yesu karunanidhi archdiocese of madurai +91 948 948 21 21