இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு

என்னுடையவர் - ஆதலும், ஆக்குதலும்!

2 அரசர்கள் 4:8-11, 14-16
உரோமையர் 6:3-4,8-11
மத்தேயு 10:37-42

கடந்த வாரம் திருமண திருப்பலி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். திருமண திருப்பலிக்கான வழிபாட்டுப் பகுதியின் 3ஆம் செபத்தில் இடம்பெற்றுள்ள ஆசியுரையில் ஒரு வரி என்னைக் கவர்ந்தது: 'இவர்கள் திருமணத்தால் ஒருவர் மற்றவருக்குத் தருகின்ற உரிமையில் மகிழ்ச்சி கொள்வதோடு.' திருமணத்தில் ஓருவர் மற்றவரோடு இணையும்போது அங்கே வருகின்ற உரிமை உடல்மேல் வருகின்ற உரிமை என்றாலும், அந்த உரிமை மகிழ்ச்சி தருகிறது. அதாவது, 'இவர் எனக்கு,' 'இவருக்கு நான்' என்ற உரிமையைத் தருகிறது திருமணம்.

  உளவியல் அறிஞர் கார்ல் யுங் அவர்கள் மனித சிந்தனையில் இருக்கும் அடிப்படையான 'ஆர்க்கிடைப்' பற்றிச் சொல்லும்போது, அதில் ஓர் ஆர்க்கிடைப்பாக 'அநாதை' ஆர்க்கிடைப்பைக் குறிப்பிடுகிறார். ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும்போது, அது தன் தாயோடு ஒன்றிணைந்திருப்பதாகவே நினைக்கிறது. தாயின் உணவையே இது உண்கிறது. தாயின் சுவாசத்தையே இது சுவாசிக்கின்றது. ஆனால் பிறந்தவுடன் தொப்புள் கொடி வெட்டப்பட்டவுடன், அது தனியாக உண்ணவும், தனியாக சுவாசிக்கவும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இந்தக் கையறு நிலையில்தான் அது தன் முதல் குரலை அழுகையாக வெளிப்படுத்துகிறது. 'இந்த புதிய உலகத்தில் நான் யார், நான் எப்படி இருப்பேன்' என்கிற முதல் பய உணர்வு 'அநாதை ஆர்க்கிடைப்பின் தொடக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் இந்த உணர்வு அதற்கு எழுந்துகொண்டே இருக்கின்றது. எப்படி? ஐந்து வயது வரை குடும்பம், சுற்றம், உறவுகள், உடன் பிறந்தவர்கள் என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கும்போது, அந்தக் குழந்தை பள்ளிக்கு அனுப்பப்படுகிறது. இதுவரை தான் மட்டுமே இந்த உலகில் குழந்தை என்று எண்ணிய குழந்தை தன்னைப்போல பிற குழந்தைகள் இருக்கக் கண்டு அழ ஆரம்பிக்கிறது. பின் ஓரளவு ஆசிரியர்களின் உடனிருப்பில் வளர்கின்ற குழந்தை, கல்லூரி படிப்பு, உயர்கல்வி என்ற அடுத்த வலியை உணர்கிறது. பின் வேலை. பின் திருமணம். பின் பிள்ளைகள். பின் குடும்பம். பின் நோய். பின் மூப்பு. பின் இயலாமை. இப்படி நாள்கள் அதிகமாக அதிகமாக அநாதை உணர்வு ஆழமாகிக்கொண்டே போகிறது. என்னுடையவர் யார்? அல்லது நான் யாருக்கு உடையவர்? என்ற கேள்வி மனிதர் வளர்ச்சியின் பின்புலத்தில் இருக்கிறது.

ஆனால், இந்த 'அநாதை உணர்வு' எதிர்மறையானது அல்ல. மாறாக, இந்த உணர்வு இருப்பதால்தான் நாம் ஒருவர் மற்றவரையும், எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளையும் தேடுகிறோம். இந்த உணர்வு இல்லாதபோது நாம் நம்மையே மையமாக வைக்கும் தன்னலம் கொண்டவர்களாக மாறிவிடுகிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டை இந்த உணர்வின் பின்புலத்தில் புரிந்துகொள்வோம். சூனேம் நாட்டுப் பெண்ணின் விருந்தோம்பல் எலிசாவை தன்னுடையவர் எனக் கருத அவரைத் தூண்டுகிறது. இந்த உணர்வை இறையியலாக்கம் செய்து 'அவரோடு இணைந்திருத்தலை' முன்வைக்கின்றார் பவுல். மேலும், 'இவர்கள் எல்லாம் என்னுடையோர் என கருதப்பட தகுதியற்றவர்' என்று சொல்கின்ற இயேசு, தன்னுடையவர்களை மற்றவர்கள் வரவேற்கும்போது அவர்கள் பெறும் கைம்மாறைப் பதிவு செய்கின்றார்.

முதல் வாசகம்

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 அரச 4:8-11, 14-16) சூனேம் நாட்டு பணக்கார பெண் ஒருவர் இறைவாக்கினர் எலிசாவுக்குக் காட்டிய விருந்தோம்பலை வாசிக்கின்றோம். இவர் பணக்கார பெண் என்பதை நாம் எப்படி புரிந்து கொள்வது?தான் குடியிருக்கும் வீட்டின் மேல் மாடியறை ஒன்றைக் கட்டுகின்றார். அது மாடிவீட்டுப் பெண் இவர். அந்தக் காலத்தில் மாடிவீடு வைத்திருப்பவர்தான் பணக்காரர். மாடிவீடு கட்டும்போது என்ன நடக்கிறது என்றால், ஒருவர் தன் பலத்தால் இயற்கையின் நியதிக்கே சவால் விடுகின்றார். நிலத்தில் ஊன்றிக் கட்டப்படுகிறது வீடு. ஆனால், மாடி வீடு நிலத்தில் ஊன்றப்படுவதில்லை. மாறாக, அது ஏற்கனவே இருக்கும் வீட்டின் மேல் நிற்கிறது. இப்படியாக பணம் இருந்தால் இயற்கையின் நியதியையும் மனிதர்கள் மீறிவிடலாம் என்ற நம்பிக்கையே, 'மாடிவீட்டுக்காரர்கள் எல்லாம் பணக்காரார்கள்' என்ற எண்ணத்தைத் தருகிறது. மேலும், மாடியறை நிறைவான தனிமையை நமக்கு தருகிறது. தெருவில் போவோர் வருவோர் மாடியறயைத் தட்டுவில்லை. மாடியறையில் பக்கத்துவீட்டுக்காரர்கள் தொல்லையில்லை. மாடிவீடு நம்மை மேலே உயர்த்தி வைப்பதால் நாம் எல்லாரையும் விட பெரியவர் என்ற பெருமித உணர்வை நமக்குத் தருவதோடு, நம்மைக் கடவுளுக்கும் நெருக்கமாக்குகிறது. இன்னும் முக்கியமாக மாடியறைக்கான வழி வீட்டுக்குள்ளே இருப்பதால், மாடியறைக்கான உரிமை வீட்டு உரிமையாளர்களுக்கும், மிக நெருக்கமானவர்களுக்கும் தவிர வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் நாம் வைத்துப் பார்க்கும்போது சூனேம் நகரத்துப் பெண் தன்னிடம் இருக்கின்ற பெஸ்ட்டை இறைவாக்கினர் எலிசாவுக்குக் கொடுக்கின்றார்.

வெறும் விருந்தோம்பல் என்று தொடங்கிய உறவு, 'இது உன் அறை' என்று சொல்லும் அளவுக்கு மலர்கிறது. எலிசா ஒவ்வொரு பொழுதும் இந்தப் பெண்ணின் இல்லத்திற்கு வரும்போதெல்லாம், 'நான் இவருடையவர். இவர் எனக்குரியவர்' என்ற உணர்வைப் பெறுகின்றனர் பெண்ணும் எலிசாவும். இந்த உணர்வின் வெளிப்பாடாக, 'நான் இவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்று எண்ண ஆரம்பிக்கிறார் எலிசா. அந்தப் பணக்காரப் பெண்ணுக்கு குழந்தை இல்லை என்ற குறையை உணர்கின்ற எலிசா, அவருக்கு ஒரு மகன் பிறப்பார் என வாக்களிக்கின்றார். 'என்னை ஏமாற்ற வேண்டாம்' என சிணுங்குகின்றார் பெண். வருகை, உபசரிப்பு, சிரிப்பு, புன்னகை, வரவேற்பு என தொடங்கும் உணர்வு, ஏக்கம், கலக்கம், எதிர்பார்ப்பு, நிறைவு என கனிகிறது.

  'நான் இவருடையவர். இவர் எனக்குரியவர்' என்ற எண்ணம் பெண்ணுக்கும், எலிசாவுக்கும் எப்படி உண்டாகிறது? 'இவர் கடவுளுக்கு உரியவர். ஆகையால் இவர் எனக்கு உரியவர்' என உரிமை கொண்டாடுகின்றார் பணக்காரப் பெண். அதே நிலையில், 'கடவுளுக்கு உரியவராய் இருக்கும் இந்தப் பெண் குறையின்றி வாழ வேண்டும்' என உரிமை எடுக்கின்றார் எலிசா. ஆக, கடவுளே எலிசாவையும், பணக்காரப் பெண்ணையும் இணைக்கும் இணைப்புக் கோடாகின்றார்.

இரண்டாம் வாசகம்

விருத்தசேதனம் தேவையில்லை எனவும், திருமுழுக்கின் வழியாகவே நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்படுகிறார்கள் என்று உரோமை நகர திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், திருழுமுக்கை இயேசுவின் இறப்போடு இணைத்து, நாம் திருமுழுக்கின் வழியாக அவரோடு இணைக்கப்படுகிறோம் எனவும், அப்படி சாவில் அவரோடு இணைக்கப்படும்போது, உயிர்ப்பிலும் அவரோடு இருப்போம் எனவும் சொல்கின்றார்.

இங்கே நாம் கவனிக்கவேண்டிய சொல்லாடல், 'அவரோடு' என்பதுதான். நாம் இருப்பதும், இயங்குவதும் 'அவரோடு' எனப் பதிவு செய்கின்றார் பவுல். அதாவது, நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்களாக இருந்தாலும் நாம் கிறிஸ்துவோடும், ஒருவர் மற்றவரோடும் இணைக்கப்டுகின்றோம். 'இவர் என்னுடையவர்' என நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறோம். அதுபோலவே கிறிஸ்துவும், 'இவர் என்னுடையவர்' என நம்மை ஏற்றுக்கொள்கின்றார். இந்த ஏற்றுக்கொள்ளுதலும், உரிமை கொண்டாடுதலும் இன்று மட்டுமல்லாமல், தொடர்ந்து முன்னேறுகிறது. சாவில் மட்டுமல்ல. சாவையும் கடந்த உயிர்ப்பு வாழ்விற்கும் இது நம்மைக் கொண்டுசெல்கிறது.

நற்செய்தி வாசகம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, 'என்னுடையவர் அல்லாதவர்,' 'என்னுடையவர்' என இரண்டு வகையான சீடர்களைப் பற்றிப் பேசுகின்றர்.

மூன்று வகையான சீடர்கள் இயேசுவுக்கு 'உடையவர்கள்' அல்லர். அவர்கள் யாவர்?

அ. 'என்னைவிட தம் தந்தையிடமோ, தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர்.'

அ. 'என்னைவிட தம் மகனிடமோ, மகளிடமோ அதிக அன்பு கொண்டுள்ளோர்.'

இ. 'தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றிவருவோர்.'

தந்தை, தாய் அல்லது மகன், மகள் அன்பு வேண்டாம் என்று இயேசு பதிவு செய்யவில்லை. மாறாக, உரிமை என்று பார்க்கும்போது இவர்கள் கடவுள் தங்கள்மேல் கொண்டுள்ள உரிமையையும், அதன் பின்புலத்தில் இருக்கும் அன்பையும் மட்டுமே பார்க்க வேண்டும். தந்தை, தாய், மகன், மகள் அன்பு நம்மைத் தனிமரங்களாக்கிவிடுகிறது. 'என் அம்மா வேறு,' 'உன் அம்மா வேறு' என நான் ஒருவர் மற்றவரைப் பிரிக்க ஆரம்பிக்கிறேன். ஆனால், கடவுள் தரும் உரிமை ஒன்றுதான் அங்கே பிரிவினைக்கு இடமே இல்லை. அடுத்ததாக, இயேசுவைப் பின்பற்றி வருவோh ஒவ்வொருவரும் தம் சிலுவையை சுமந்து கொண்டுவர வேண்டும்.சிலுவை இல்லாத பயணம் இனிய பயணமாக இருக்கும். ஆனால், கொஞ்ச நேரத்தில் அந்த இனிமையே கசப்பாக மாறிவிடும். சிலுவை என்பது நம் உரிமையை இயேசுவின் மேல் வைப்பது. ஆக, 'இவர் என்னுடையவர்' என்று நாம் ஒருவர் மற்றவரைச் சொல்லும் உறவில், தந்தை, தாய், மகன், மகள், நம் தன்னலம் ஆகியவற்றை விட இயேசுவே முதன்மையாக இருத்தல் வேண்டும்.

  இரண்டாவதாக, 'என்னுடையவர்;' என்ற சிலருக்குத் தம் இல்லத்தையும், உள்ளத்தையும் மற்றவர்கள் திறந்து வைக்க இயேசு அறிவுறுத்துகின்றார். தம் சீடர்களை;ச் சின்னஞ்சிறியவர்கள் என அழைக்கின்ற இயேசு, அந்த சின்னஞ்சிறியவர்களைத் தங்கள் இல்லங்களில் ஏற்றுத் தரும் விருந்தோம்பலும், அந்த விருந்தோம்பல் தரும் வெகுமதியையும் குறிப்பிடுகின்றார். 'இறைவாக்கினரை இறைவாக்கினர்பெயரால் ஏற்றுக்கொள்பவர்,' 'நேர்மையதளரை நேர்மையாளரா ஏற்றுக்கொள்பவர்,' 'சின்னஞ்சிறியவர்களை சின்னஞ்சிறியவர்களாக ஏற்றுக்கொள்பவர்' என அனைவருக்கும் அவர்கள் பெறும் கைம்மாறை முன்வைக்கின்றார் இயேசு.

இங்கே மூன்று மனிதர்களுக்கு இடையே உறவுக்கோடு நகர்கிறது: இயேசு, சீடர்கள், மக்கள். இயேசு தம் சீடர்களை தன்னுடையவர், தன்னுடையவர் அல்லாதவர் என்று பிரிக்கின்றார். சீடர்கள் இயேசுவுக்கு உடையவர்களாக மாற தங்களையே தகுதியாக்கிக்கொள்கின்றனர். மக்கள் சீடர்களை ஏற்கின்றார்கள். எப்படி? இயேசுவுக்காக. ஆக, இயேசுவே மக்களையும், சீடர்களையும் இணைக்கும் கோடாகின்றார்.

இவ்வாறாக, இன்றைய மூன்று வாசகங்களும் நாம் ஒருவர் மற்றவர் மேல் பாராட்ட வேண்டிய உரிமையை நினைவூட்டுவதோடு, கடவுள் மேல் கொண்டிருக்கும் உரிமையே மற்ற உரிமைகளுக்கு அடிப்படையானதாக இருக்கின்றது. ஆக, உங்களைப் பார்த்து, 'என்னுடையவர்' என நான் சொல்வதற்கு முன், கடவுளைப் பார்த்து, 'இவர் என்னவர்' எனச் சொல்ல வேண்டும். அப்படி இல்லாதபோது தேவையற்றது எனச் சொல்கிறது.

இன்றைய இறைவர்க்கு வழிபாடு முனவக்கும் சவால்கள் எவை?

1. அநாதை உணர்வும் இறைவனும்

நமக்கு உடலையும், உயிரையும் கொடுத்த இறைவன் உணர்வையும் கொடுக்கின்றார். உணர்வுகளில் ஒன்றான பசி அல்லது அநாதை உணர்வு என்னை தன்மையம் கொண்டவராக மாற்றிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் அந்த நிலைக்கு நான் என்னை விட்டுவிடக்கூடாது. அப்படி விட்டுவிட்டால் நான் என்னுடைய குறை, தனிமை, விரக்தி, சோர்வு என என்னையே மையமாக வைத்து வாழ ஆரம்பித்துவிடுவேன். மாறாக, அதை விடுத்து நான் என் ஊற்றாகியை இறைவனைப் பற்றிக்கொண்டால் எனக்கு இந்தக் குறை உணர்வே வராது. இப்படி இறைவனைப் பற்றிக்கொண்டதால்தான் எலிசா தன் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றாலும், தன் சொந்த மக்களை விட்டு வேறு மக்களிடம் சென்றாலும் அவர்களோடு ஒன்றித்துவிடுகிறார். இறைவனின் அருள்துணை இருந்ததால்தான் அவரால் எந்த இடத்திலும் தூங்க முடிகிறது. தூக்கம் ஒரு அரிய கொடை. தன்னை ஏற்றுக்கொள்பவர்களும், பிறரை ஏற்றுக்கொள்பவர்களும், எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை ஏற்றுக்கொள்பவர்களும் எங்கு படுத்தாலும் தூங்கிவிடுவர். இவர்களுக்கு யாரும், எதுவும் அச்சுறுத்தலாக இருப்பதில்லை. தன் சீடர்கள் ஒருவேளை இத்தகைய அநாதை உணர்வைப் பெற்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில்தான் இயேசுவும் தன்னை மையமாக வைத்து வாழ அவர்களை அழைக்கின்றார்.

ஆக, இன்று நான் என்னிடம் இருக்கும் இந்த அநாதை உணர்வுக்கு நன்றி கூறவும், இந்த அநாதை உணர்வில் நான் என் இறைவனை நோக்கி என் கண்களை ஏறெடுக்கவும் வேண்டும்.

2. பல நிலை உரிமைகள்

'இவர் என்னுடையவர்' என்னும் உரிமை நம் வாழ்வில் பல நிலைகளில் காணக்கிடக்கிறது. ஒரு முடிதிருத்தும் கடையில் வேலை செய்பவரும் நம்மேல் உரிமை கொண்டாடுகிறார். ஒரு வங்கி மேலாளரும் நம்மேல் உரிமை கொண்டாடுகிறார். நம் நண்பர்களும் நம்மேல் உரிமை கொண்டாடுகின்றனர். நாம் வாழும் சமூகமும் நம்மேல் சில உரிமைகளைக் கொண்டாடுகிறது. முடிதிருத்துபவருக்கும், வங்கிக்கும் நம்மேல் உள்ள உரிமை நாம் அவர்களின் வாடிக்கையாளர்களாக இருக்கும்வரையே. மேலும் இந்த வகை உரிமை பயன்பாட்டு உரிமை. அவர்கள் நம்மை பயன்படுத்துகிறார்கள். நாம் அவர்களைப் பயன்படுத்துகிறோம். நம் சமூகம் அல்லது திருச்சபை நம்மேல் கொண்டிருக்கும் உரிமையும்கூட ஏறக்குறைய இப்படித்தான். இந்தியக் குடிமக்களாக இருக்கும் வரைதான் நம்மேல் இந்தியா உரிமை கொண்டாடுகிறது. நம் குடியுரிமை மாற்றம் பெற்றால் இந்தியாவுக்கு என்மேலும், எனக்கு இந்தியாமேலும் எந்த உரிமையும் இல்லை. ஆக, இன்று என் உறவு நிலைகளில் நான் என் உரிமை பற்றி கவனமாக இருக்க வேண்டும். எல்லா உரிமைகளையும் ஒன்றுபோல எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் நான் என் மகிழ்ச்சியை இழந்துவிடுவேன். எந்த உரிமையில் எந்த எல்லையை வரைவது என நான் கற்றுக்கொள்ள வேண்டும். என் வங்கியை அல்லது என் பார்லரை மாற்றுவதுபோல நான் என் நண்பர்களை மாற்ற முடியுமா?

3. என்னுடையவர் - ஆதலும், ஆக்குதலும்

ஒருவரை என்னுடையவர் ஆக்குதலும், நான் ஒருவருக்கு அவருடையவர் ஆதலும் எதில் அடங்கியிருக்கிறது? முதலில், என் மனசுதந்திரத்தில். இரண்டாவதாக, என் விரித்துக்கொடுத்தலில். பணக்காரப் பெண் எலிசாவுக்காக தன் கைகளையும், தன் இல்லத்தையும் விரித்துக்கொடுக்கின்றார். திருமுழுக்கில் நாம் இயேசுவிடம் நம்மையே விரித்துக்கொடுக்கிறோம். சீடர்கள் தங்கள் சிலுவைகளில் தங்களையே விரித்துக்கொடுக்கின்றனர். இப்படியாக எங்கெல்லாம் விரித்துக்கொடுத்தல் இருக்கிறதோ அங்கே உரிமை பரிமாற்றம் நடந்தேறுகிறது. மூன்றாவதாக, நான் எல்லாரையும் இறைவனில் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்போது உரிமை பாராட்டுதல் மிக எளிதாகிறது. 'இவர் இறைவனுடயவர். ஆக, இவர் என்னுடையவர்' - இந்த ஒரு கொள்கை இருந்தால் போதும். நாம் எல்லாரையும் நம்மோடு இணைத்துக்கொண்டு, நாமும் எல்லாரோடும் இயைந்து செல்ல முடியும். இந்த நிலை வெகு எளிதாக வந்துவிடாது. ஏனெனில், இந்த நிலையில் பார்க்க நாம் புறக்கண்களை மூடி அகக்கண்களைத் திறக்க வேண்டும். நாம் ஒருவரின் முன்புறத்தை மட்டுமல்லாமல் பின்புறத்தையும் பார்க்க வேண்டும். மொத்தத்தில், விருப்பு, வெறுப்பு. கோபம் மூன்றையும் வெல்ல வேண்டும். 

இறுதியாக,

என்னுடையவராக இறைவன் இருந்தால், எல்லாரையும் என்னுடையவர் ஆக்குதல் எளிதே! இந்நிலையில் நானும் எல்லாருக்கும் 'என்னுடையவர் ஆவேன்!'