இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









உயிர்ப்புக் காலம் 6ஆம் ஞாயிறு

திக்கற்றவர்களாக விடமாட்டேன்!

திப 8:5-8, 14-17
1 பேது 3:15-18
யோவா 14:15-21

இக்கால நம் வாழ்க்கை ஒரு முரண். பெரிய கட்டடங்கள். ஆனால் சிறிய உள்ளங்கள். அகன்ற பாதைகள். ஆனால் குறுகிய கண்ணோட்டங்கள். அதிகமாகச் செலவழிக்கிறோம். ஆனால் குறைவாக வைத்திருக்கின்றோம். அதிகமாக வாங்குகின்றோம். ஆனால் அவற்றைக் குறைவாகவே பயன்படுத்துகின்றோம். பெரிய வீடுகள். ஆனால் சிறிய குடும்பங்கள். அதிக வசதிகள். ஆனால் குறைவான நேரம். அதிக கல்வி. ஆனால் குறைவான அறிவு. அதிகமான பகுத்தறிவு. ஆனால் குறைவான நீதி. அதிகமான மேதைகள். மிக அதிகமான பிரச்சினைகள். அதிகமான மருந்துகள். மிகக் குறைவான உடல்நலம். நம் சொத்துக்களைக் கூட்டிவிட்டோம். ஆனால் மதிப்பீடுகளைக் குறைத்துவிட்டோம். அதிகம் பேசுகிறோம். மிகக் குறைவாகவே அன்பு செய்கிறோம். அதிகம் வெறுக்கிறோம். வெகு அதிகம் எரிச்சல்படுகிறோம். அதிக வருடங்கள் சுவாசிக்கின்றோம். ஆனால் குறைவான வருடங்களே வாழ்கின்றோம். நிலவிற்குச் சென்று பத்திரமாய் வீடு திரும்புகின்றோம். ஆனால் பக்கத்து வீட்டிற்குச் சென்று வர பயப்படுகின்றோம். நமக்கு வெளியில் இருப்பவற்றை ஆளக் கற்றுவிட்டோம். ஆனால் நம் உள்ளத்தை ஆள நாம் மறந்துவிட்டோம்.

மனித வாழ்வில் முரண்பாடுகள் எதார்த்தமானவை. காலத்தின் சூழலுக்கேற்ப முரண்பாடுகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. இயேசுவின் சீடர்களின் வாழ்வில் விளங்கிய ஒரு முரண்பாட்டை இயேசு களையக் கற்றுக்கொடுப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மையம். இயேசுவின் உடனிருப்பைக் கண்டும், அனுபவித்தும் இருந்த சீடர்களின் உள்ளங்களில் விளங்கிய முரண்பாடுகள்; இரண்டு: 1) உள்ளத்தில் கலக்கம், 2) அச்சம். அச்சத்தைப் போக்கி ஆனந்தம் தந்த இயேசு அவர்களுக்கு அமைதியைக் கொடையாகக் கொடுக்கின்றார். அந்த அமைதியை அருள்பவராக தூய ஆவியானவரை வாக்களிக்கின்றார். 'நான் உங்களைத் திக்கற்றவற்களாக விட்டுவிட மாட்டேன்' என்று தூய ஆவியானவரைத் துணையாளராகவும், தான் கற்பித்ததை அவர்களுக்கு விளக்கிச் சொல்லும் ஆசிரியராகவும், தான் செய்தவற்றை நினைவூட்டுபவராகவும் முன்வைக்கின்றார்.

'நான் உங்களைத் திக்கற்றவர்களாக விட மாட்டேன்.  உங்களிடம் திரும்பி வருவேன்'

என்னும் இயேசுவின் வாக்குறுதியை இன்றைய சிந்தனையின் மையப்பொருளாக எடுத்துக்கொள்வோம்.

தன் சீடர்களின் பாதங்களைக் கழுவிய இயேசு தொடர்ந்து அவர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும்போது நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதியே இந்த வாக்குறுதி. வருகின்ற ஞாயிறு விண்ணேற்ற ஞாயிறாகவும், அதற்கு அடுத்த ஞாயிறு தூய ஆவி ஞாயிறாகவும் இருப்பதால் இன்றைய நற்செய்தி இயேசுவின் பிரிதல் பற்றியும், தூய ஆவியின் வருகை பற்றியும் பேசுகிறது. இந்தப் பின்புலத்தில் இயேசுவின் வார்த்தைகளை நாம் புரிந்துகொள்வோம்.

பாடப் பின்புலம்

இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு பற்றி சீடர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அரசல் புரசலாக தாங்களே அவற்றைப் பற்றிக் கேட்டிருந்தனர். இயேசுவிற்குப் பின் என்ன நடக்கும் என்ற கேள்வி ஏதோ ஒரு நிலையில் எழுந்திருக்கும். தான் இல்லாத வெறுமையை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை உணர்ந்து இயேசு தாமாகவே தன் என்றென்றைக்குமான உடனிருப்பை அவர்களிடம் சொல்லியிருக்கலாம். அல்லது இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்துக்குப் பின் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டபோது, அவரின் உடனிருப்பை அவரே முன்குறித்து சொன்னதாக யோவான் எழுதியிருக்கலாம்.

நற்செய்தி அமைப்பு

இன்றைய நற்செய்தி வாசகம், 'கட்டளைக் கடைப்பிடிப்பதில்' தொடங்கி, 'கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்' முடிகிறது. 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்' என்பதே அந்தக் கட்டளை.

அன்பின் பரிசுதான் தூய ஆவியானவர். இதை அருள்பவர் தந்தை. ஆக, தந்தை, மகன், தூய ஆவியானவர் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் குறிக்கப்பட்டுள்ள சில விவிலிய பகுதிகளில் இன்றைய நற்செய்தியும் ஒன்று. தூய ஆவியானவரின் மூன்று பண்புகள் இங்கே சொல்லப்படுகின்றன:

அ. அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்

ஆ. அவர் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருக்கிறார்

இ. உலகம் அவரை அறிந்துகொள்ளாது. ஆனால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்

இயேசுவின் வாக்குறுதி

'நான் உங்களை திக்கற்றவர்களாக விட மாட்டேன்' - 'திக்கற்றவர்களாக' என மொழி பெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையை ஆங்கிலத்தில் 'ஆர்ஃபன்' ('அநாதை') என மொழிபெயர்த்துள்ளார்கள். 'திக்கு' என்றால் 'திசை'. அநாதைகள் திசையற்றவர்கள். அன்-ஆதை (ஆதரவற்றவர்கள்). பெற்றோர் இல்லாத குழந்தைகளை நாம் அநாதைகள் என்கிறோம். ஏனெனில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு திசை காட்டுபவர்கள். வீடு இருக்கும் திசை, பள்ளி இருக்கும் திசை, உற்றார் இருக்கும் திசை என வாழ்வின் எல்லாப் பருவங்களிலும், 'இத்திசையில் போ!' 'அத்திசையில் போகாதே!' என வழிகாட்டுபவர்கள் பெற்றோர்கள். இப்படிப்பட்ட பெற்றோர்கள் இல்லாத போது குழந்தைகள் அநாதைகள் - திசையற்றவர்கள் அல்லது திக்கற்றவர்கள் ஆகிவிடுகின்றனர்.

நம் வாழ்வில் திக்கற்ற நிலை என்பது நிறைய இருக்கிறது. இந்த நாள்களில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. நீட் மற்றும் தகுதித் தேர்வுகள் நடத்தி உயர்கல்வி தொடர மாணவ, மாணவியர் தயாராக இருக்கின்றனர். பல்வேறு கல்லூரி நிறுவனங்களும், இதழியல்துறையும், அரசு சாரா நிறுவனங்களும், 'வழிகாட்டி வகுப்புகள்' வழியாக மாணவர்களின் பயணத்தை இலகுவாக்கிக்கொண்டிருக்கின்றனர். 'நீ இத்திசையில் போ!' 'அத்திசையில் போகாதே!' என நிறைய வழிகாட்டுதல்கள் நடக்கின்றன. பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குள் நுழையும்போது மட்டுமல்ல. நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் திசை தேவைப்படுகிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் மூன்று வகையான திக்கற்ற நிலையைப் பார்க்கிறோம்:

அ. புறவினத்தார் என்ற திக்கற்ற நிலை

ஆ. தீமை செய்வது என்னும் திக்கற்ற நிலை

இ. கலக்கம் என்னும் திக்கற்ற நிலை

அ. புறவினத்தார் என்ற திக்கற்ற நிலை

இன்றைய முதல் வாசகத்தில் நற்செய்தி சமாரியா நோக்கி நகர்வதை நாம் பார்க்கிறோம். இது ஒரு முக்கியமான நிகழ்வு. ஏனெனில் இந்த நிகழ்வு நடக்கவில்லை என்றால், இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும், வாசித்துக்கொண்டிருக்கும் நீங்களும் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றிருக்க முடியாது. இந்த நிகழ்வு மட்டும் நடக்கவில்லை என்றால், கிறிஸ்தவம் யூத மதத்தின் ஒரு சிறிய பிரிவாக முடங்கி இருக்கும். 'நாம்-அவர்கள்,' 'யூதர்கள்-சமாரியர்கள்' என்ற நிலையில், யூதர்கள் தங்களையே மேன்மையாகக் கருதி, புறவினத்தாரை ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால், பிலிப்பு போன்றவர்களின் நற்செய்திப் பணியால் சமாரியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்றனர். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக தூய ஆவியின் அருள்பொழிவு இருந்தது. யோவானும், பேதுருவும் அவர்கள்மேல் கைகளை வைக்க அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறாக, சமாரியர்கள், 'புறவினத்தார்' என்ற திக்கற்ற நிலையில் இருந்தாலும், அவர்களைத் தேடி நற்செய்தி செல்கிறது. அவர்கள்மேல் தூய ஆவி அருளப்படுகின்றார்.

ஆ. தீமை செய்வது என்ற திக்கற்ற நிலை

இன்றைய இரண்டாம் வாசகம் தீமை செய்வது என்ற திக்கற்ற நிலை பற்றி பேசுகின்றது. தீமை, பரத்தைமை, கூடா ஒழுக்கம், பொய், வன்முறை, அத்துமீறல் என மலிந்திருந்த சமூகத்தில் சிலர் மட்டும் நல்லவர்களாக இருப்பது மிகவும் கடினமாக இருந்தது. கிறிஸ்தவர் - கிறிஸ்தவர் அல்லாதவர் என எல்லாருக்கும் ஒரே முடிவுதான் என்றாலும், ஏன் ஒருவர் மட்டும் நல்லவராகவும், கட்டளைகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது. மற்றவர்களின் ஒழுக்கமின்மை கிறிஸ்தவர்களுக்கு இடறலாக இருந்தது. இந்த இடறலில் நம்பிக்கை ஊட்டி ஊக்கம் தருகின்றார் பேதுரு. தீமை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்ற அவர், 'தீமை செய்து துன்புறுவதைவிட நன்மை செய்து துன்புறுவதே மேல்' என்கிறார்.

இ. கலக்கம் என்ற திக்கற்ற நிலை

தன் பிரிவு தன் சீடர்களுக்குள் ஏற்படுத்தும் வெற்றிடத்தை கலக்கம் என பதிவு செய்கின்றார் யோவான். 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். மருள வேண்டாம். கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். என்மேலும் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்று சொல்லும் இயேசு அவர்களின் கலக்கம் போக்கும் மருந்தாக தன் உடனிருப்பைத் தருகின்றார். இயேசுவின் உடனிருப்பு அவரின் உயிர்ப்புக்குப் பின் இன்னும் அதிக பரவலான ஒன்றாக மாறிவிடுகிறது. இப்போது உடல் கொண்டிருக்கும் இயேசு காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு இருக்கின்றார். ஆனால் உயிர்ப்புக்குப் பின் காலமும், இடமும் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க இயலாது. அவர் அவற்றைக் கடந்துவிடுகிறார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. என் வாழ்வின் திக்கற்ற நிலை எது?

இன்று நான் எதை நோக்கி அல்லது எந்த திசையில் பயணம் செய்கின்றேன்? என் பயணம் எப்படி இருக்கிறது? நாம் போகின்ற திசை சரியானது என்பதை நாம் எப்படி கண்டுகொள்வது? இன்றைய நமது சந்தைக் கலாச்சாரத்தில் ஒட்டுமொத்தமாக நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை. அன்றாடம் வேலை செய்கிறோம். படிக்கிறோம். பயணம் செய்கிறோம். நாள்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. கோயில், திருமணம், நல்லது, கெட்டது, மருத்துவம், உடல்நலம் என வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம் அனைவரின் வழிகளும் ஒன்றல்ல. இப்படி இருக்க என் வாழ்வின் திக்கற்ற நிலைக்கான மருந்தை நான் எங்கே கண்டுகொள்கின்றேன்? என் வாழ்வின் திசையை நான் கண்டுகொள்ள வேண்டுமென்றால் என் வாழ்வை நான் இயேசுவுக்குள் அல்லது அவருடைய ஆவியானவருக்குள் வைத்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு நடக்கும் எதன்மேலும் நமக்கு கன்ட்ரோல் இல்லை என்பது தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. 'ஆண்டவரே வீட்டைக் கட்டுகின்றார். ஆண்டவரே நகரைக் காக்கின்றார்.' நாம் வீட்டைக் கட்டுவதுபோலவும், நகரைக் காப்பதுபோலவும் தெரிகிறது. ஆனால் கட்டுவதும், காப்பதும் அவரே.

நாம் நிறைய கூட்டத்தில் இருந்தாலும், பெரிய குடும்பத்தில் இருந்தாலும், நம்மைச் சுற்றி நிறையப் பேர் இருந்தாலும் நாம் தனிமையாக, அநாதையாக இருக்கின்ற உணர்வு சில நேரங்களில் நம்மிடம் தோன்றுகிறது. ஏன்? படைக்கப்பட்ட நமக்கு படைத்தவரைத் தவிர வேறு யாரும் முழு பாதுகாப்பையும், உடனிருப்பையும் தர முடியாது என்பதையே இது காட்டுகிறது. நம்மிடம் இருக்கிற குறையை அல்லது வெற்றிடத்தை நிரப்ப வல்லவர் இறைவன் ஒருவரே. சக மனிதர்களும், படைப்பு பொருள்களும், பயன்பாட்டுப் பொருள்களும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது. ஏனெனில், வெற்றிடங்கள் எப்படி வெற்றிடங்களை நிரப்ப முடியும்?

2. எல்லைகள் தாண்டும் நற்செய்தி

யூத எல்லையைத் தாண்டி புறவினத்து எல்லைக்குள் நுழைகிறது நற்செய்தி. நற்செய்தியை யாரும் வேலி போட்டு வைக்க முடியாது. தூய ஆவியின் கொடைகளுக்கும் வேலிகள் போட முடியாது. நாம் இன்று நற்செய்தியை அறிவிக்கிறோமா? முதல் இரண்டு நூற்றாண்டுகள் நற்செய்தி வேகமாக பரவியது. அந்த வேகத்தின் 100ல் ஒரு பகுதி கூட இப்போது இல்லை. எல்லாம் நிறுவனமானபின் நாம் நற்செய்தியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மால் நம் வேலியைக்கூட தாண்ட முடியவில்லை. மேலும், தூய ஆவி எங்கே, யாரிடம், எப்போது செயலாற்றலாம், செயலாற்ற முடியாது என்ற வரையறைகளையும் வைத்துக்கொண்டோம். இந்நிலையில் தொடக்க காலத்தில் சமாரியக் கிறிஸ்தவர்கள் பெற்ற அனுபவத்தை நாம் எப்படி மற்றவர்களுக்குக் கொடுக்கப்போகிறோம்.

3. தீமையா அல்லது நன்மையா

எல்லாரும் தீமை செய்கிறார்கள் என்பதற்காகவும், தீமை செய்தால்தான் எல்லாரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்காகவும் நாம் தீமை செய்வதும், தீமையில் நிலைத்திருப்பதும் சரி அல்ல. மாறாக, ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை உருவாக்க நம் ஒவ்வொருவராலும் முடியும்.

இறுதியாக,

'அவர் உங்களுக்குள் இருக்கிறார்' என தூய ஆவியானவரைப் பற்றிச் சொல்கின்ற இயேசுவின் வாக்குறுதி, 'நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன். நான் உங்களிடம் திரும்பி வருவேன்' என்பதாக இருக்கிறது.

இந்த வாக்குறுதியை அனுபவிக்கின்ற நாம் நம் வாழ்வின் சின்ன ஓட்டத்தில் ஒருவர் மற்றவருக்கு திசைகாட்டியாகவும், திசையாகவும், தீர்வாகவும், உடனிருப்பாகவும் இருந்தால் எத்துணை நலம்!