இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









உயிர்ப்புக் காலம் மூன்றாம் ஞாயிறு

என் வாழ்வின் எம்மாவு

திப 2:14, 22-33
1 பேதுரு 1:17-21
லூக் 24:13-35

'வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அந்த ஊரின் பெயர் எம்மாவு' எனத் தொடங்குகிறது இன்றைய நற்செய்தி. இந்தச் சீடர்கள் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்கள் அல்லர். ஒருவேளை இயேசு தனக்கு முன் இருவர் இருவராய் அனுப்பிய 72 அல்லது 70 சீடர்களில் இருவராக இவர்கள் இருக்கலாம். அல்லது இயேசுவின் போதனைகளைக் கேட்டு அவரை மனதளவில் ஏற்றுக்கொண்ட நிக்கதேம், அரிமத்தியா நகர் யோசேப்பு போன்றவர்களாக இருக்கலாம். இந்த இருவரில் ஒருவர் பெயரை மட்டும் கிளயோப்பா என பதிவு செய்கிறார் லூக்கா. இருவர்தாம் சென்றார்களா அல்லது இருவர் சாட்சிக்குத் தேவை என்பதால் இருவரை லூக்கா தேர்ந்தெடுக்கிறாரா என்பது பற்றிய தெளிவு இல்லை.

ஆனால், ஒன்று மட்டும் தெளிவாக இருக்கின்றது. தங்கள் சொந்த ஊரான எருசலேமை விட்டு அகன்று 11 கிமீ தூரமுள்ள எம்மாவு நோக்கி வேகமாக செல்கின்றனர். வாரத்தின் முதல் நாள் காலையில் கல்லறைக்குச் சென்ற பெண்கள் திரும்பி வந்து கல்லறையில் இயேசு இல்லை என்ற செய்தியைச் சொல்கின்றனர். இந்த செய்தி படிப்படியாகப் பரவி இவர்கள் காதுக்கு வர எப்படியும் காலை 8 அல்லது 9 மணி ஆகியிருக்கும். அப்போது எருசலேமை விட்டு புறப்படுகிறார்கள். மாலை 6 மணிக்கு எம்மாவு வந்துவிடுகிறார்கள். 9 மணி நேரத்திற்குள் 11 கிமீ தூரத்தைக் கடக்கிறார்கள் என்றால் அவர்கள் வேகமாகவும், பதற்றமாகவும் நடந்திருப்பார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது. ஏன் இந்த வேகம்? ஏன் இந்த பதற்றம்? ஏன் இந்த கலக்கம்?

தங்கள் சொந்த ஊரை, எருசலேமை, இவர்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? தங்கள் தலைவரை அது சிலுவையில் அறைந்து கொன்றதலா? அல்லது தங்களையும் தேடி அது வருவதாலா? அல்லது உயிர்ப்பு பற்றிய செய்தியை ஏற்றுக்கொள்வதில் தயக்கமா?

இவை எல்லாம்கூட காரணமாக இருந்திருக்கலாம்.

  நம் வாழ்விலும் சில நேரங்களில் நாம் நம் வாழ்வின் எருசலேமை நோக்கி தப்பி ஓடுகிறோம். எம்மாவு என்பது ஒரு தற்காலிக ஆறுதல். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்ற நேரத்தில் மொபைல், டிவி என எல்லாவற்றையும் அணைத்தவிட்டு தலையனையை நனைத்துக்கொண்டே அல்லது தலையணையை இறுக்கிப் பிடித்துக்கொண்டே தூங்கத் துணியும் தருணம்தான் எம்மாவு.

  வேகமாக நடந்து செல்லும் இந்த இரு இளவல்களும் தங்களுக்குள் ரொம்ப சீரியஸா ஏதோ பேசிக்கொண்டே செல்கிறார்கள். இவர்களின் பயணம் இலகுவாக அமைய ஒருவர் மற்றவரின் உடனிருப்பும் இவர்களுக்கு உதவியிருக்கும். வாழ்க்கை என்ற பயணத்திலும் ஒருவர் மற்றவரின் துணை அவசியம் என்பதற்காகத்தான் சபை உரையாளரும், 'ஒருவர் தனியாக இருப்பதைவிட இன்னொருவரோடு சேர்ந்திருப்பது நல்லது' என்று சொல்கிறார். இவர்கள் எந்த அளவிற்கு தங்கள் உரையாடலில் ஆழ்ந்திருக்கிறார்கள் என்றால், அருகில் ஒருவர் நடந்து வருவதைக்கூட அவர்கள் கவனிக்கவே இல்லை.

நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். அன்றாட கவலைகளில் மூழ்கியிருக்கும் நாம் அந்த நேரங்களில் கடவுள் நம்மோடு வருகிறார் என்பதைக்கூட பார்க்கத் தவறிவிடுகிறோம். 'வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?' எனக் கேட்கின்றார் இயேசு என்ற மூன்றாம் நபர். இயேசுவின் உரையாடல் ரொம்ப நேரிடையாக இருக்கிறது. 'நீங்க யாரு? என்ன? எங்க போறீங்க? எங்கிருந்த வர்றீங்க?' என்ற எந்த ஃபார்மாலிட்டியும் இல்லாம, 'நேரிடையாக' இருக்கிறது இயேசுவின் கேள்வி. 'நாங்க என்ன பேசினா உனக்க என்ன?' என்று சொல்லியிருக்கலாம் அவர்கள். ஆனால், தங்கள் துன்பத்தை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் நலமாக இருக்கும் என எண்ணியதால் அவர்கள் இயேசுவிடம் மனம் திறந்து பேசுகின்றனர்.

சில நேரங்களில் சிலர் நம்மிடம் தங்கள் மனத்தைத் திறந்து பேசுவார்கள். ஆச்சர்யமாக இருக்கும். முன்பின் தெரியதா என்னிடம் அவர்கள் ஏன் இதைச் சொல்கிறார்கள்? என்று நினைப்போம். ஆனால், சில நேரங்களில் நாம் முன்பின் தெரியாத நபராவது நாம் சொல்வதைக் கேட்கமாட்டாரா என நினைத்து அவர்களிடம் மனம் திறக்கிறோம்.

அந்த இரு சீடர்களின் உள்ளுணர்வுகளை மூன்று வார்த்தைகளில் பதிவு செய்கின்றார் லூக்கா:

அ. முகவாட்டம்
ஆ. ஏமாற்றம்
இ. மலைப்பு அல்லது வியப்பு

அ. முகவாட்டம்

தன் சகோதரன் ஆபேலின் காணிக்கை ஏற்கப்பட்டு, தன் காணிக்கை நிராகரிக்கப்பட்டபோது முகவாட்டத்தோடு நிற்கிறார் காயின். மனதின் சோகத்தின் காணக்கூடிய வடிவம் முகவாட்டம். மனதின் கவலை, இயலாமை முகவாட்டமாக வெளிப்படுகிறது. முகவாட்டத்தின் எதிர்ப்பதம் முகமலர்ச்சி. நிறைவு இருக்கும் போது முகம் மலர்கிறது. குறை இருக்கும் போது முகம் வாடுகிறது. தாவரம் போலத்தான் மனமும். தண்ணீர் நிறைவாக இருந்தால் மலரும் செடி, தண்ணீர் குறையும் போது வாடுகிறது. எம்மாவு இளவல்களின் வாழ்வில் நம்பிக்கை தந்த இயேசு இன்று குறைந்துவிட்டதால் இவர்கள் முகம் வாடிவிடுகிறது.

ஆ. ஏமாற்றம்

'அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்து சிலுவையில் அறைந்தார்கள்.' அவர் அப்படி இருப்பார், இப்படி இருப்பார், அப்படி வருவார், இப்படி வருவார் என எதிர்பார்த்தோம். ஆனால் இப்படி ஒரு தோல்வியாக இறந்துவிட்டாரே என ஏமாந்துவிட்டனர் சீடர்கள். திருவிளையாடல் ஸ்டைலில், 'பிரிக்க முடியாதது எது?' என்று கேட்டால், 'எதிர்பார்ப்பு - ஏமாற்றம்' எனச் சொல்லிவிடலாம்.

இ. மலைப்பு

'ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர். அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை' என ஒரே மூச்சில் சொல்லி முடிக்கின்றார் கிளயோப்பா. செய்வதற்கு நம் முன் நிறைய வேலைகள் கிடந்தால், அல்லது நெடுந்தூர பயணத்திற்கு தயாரிக்க வேண்டியிருந்தால், அல்லது ஒரு வீட்டைக் காலி செய்து அடுத்து வீட்டிற்கு இடமாற்றம் செய்வதாக இருந்தால் நம்மில் எழும் உணர்வு மலைப்பு. இயேசு உயிர்த்துவிட்டதைக்கூட நம்பிவிடலாம். ஆனால், பெண்கள் சொல்லி நம்புவதா என்பதுதான் சீடர்களுக்கு மலைப்பாக இருக்கின்றது. இந்த மூன்று உணர்வுகளையும் கொண்டிருந்த சீடர்கள் மேல் பரிதாபப்படாமல், 'அறிவிலிகளே' எனச் சாடுகின்றார் இயேசு. நம்ம வீட்டிற்கு வருகிற ஒருவர், நம் சோகக் கதைகளை எல்லாம் கேட்டுவிட்டு, 'நீ ஒரு முட்டாள்' என்று நம்மிடம் சொன்னால் நமக்கு எவ்வளவு கோபம் வரும்? இயேசு அவர்களின் அறியாமையை எடுத்துச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், மறைநூல் (சட்டநூல்கள் மற்றும் இறைவாக்கு நூல்களின் துணைகொண்டு) மெசியா நிலை பற்றிய விளக்கமும் தருகிறார்.

இப்படி விளக்கிச் சொன்ன இயேசுவை இருவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது: 'எங்களோடு தங்கும். ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று. பொழுதும் போயிற்று' என்று கூறி கட்டாயப்படுத்தி இணங்க வைக்கின்றனர்.

'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!' என வியக்கின்ற சீடர்கள், 'எம்மாவிலும் எங்களோடு தங்கும்!' எனச் சொல்கின்றனர். அதாவது, எங்கள் துன்பத்தில் எங்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைத் தந்த நீர் இப்போது இந்த ஆறுதலான இடத்திலும் தங்கும் எனச் சொல்கின்றனர்.

இங்கே லூக்காவின் இலக்கியத்திறத்தைப் பாராட்ட வேண்டும். ஏன்?

இயேசு தன்னை அப்பம் பிட்குதலில் வெளிப்படுத்தியவுடன், இச்சீடர்கள் திரும்பவும் எருசலேம் நோக்கி புறப்படுகின்றனர். தன் சக வழிப்போக்கனிடம், 'ஐயோ, போகாதீங்க, இருட்டாயிடுச்சு, பொழுது சாஞ்சிடுச்சு' என்று தடுத்தவர்கள் தாங்களே இரவோடு இரவாக புறப்பட்டுச் செல்கின்றனர். இப்படியாக ஒரே நாளில் ஏறக்குறைய 20 மணி நேரங்கள் நடக்கின்றனர்.

இவர்களுக்கு இனி இரவு பற்றிய பயம் இல்லை.

மேலும், அவர்கள் எருசலேம் நோக்கி மீண்டும் செல்கின்றனர். அப்படி என்றால் எருசேலம் பற்றியும், எருசலேம் தரும் துன்பம் மற்றும் கொடுமை பற்றியும் இவர்களுக்குப் பயமில்லை.

இயேசுவை இவர்கள் எப்படி கண்டுகொள்கின்றனர்?

'அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்' - இந்த மூன்று வார்த்தைகளைக் கொண்டுதான் லூக்கா நற்செய்தியாளர் இயேசு நற்கருணையை ஏற்படுத்திய நிகழ்வை வர்ணிக்கின்றார். இயேசு இறுதி இராவுணவில் - வியாழன் அன்று - நற்கருணையை ஏற்படுத்தியது எல்லா சீடர்கள் மத்தியிலும் வேகமாக பரவி இருக்கின்றது. ஆகையால்தான், 'அப்பம் எடுத்தல், கடவுளைப் போற்றுதல், அவர்களுக்குக் கொடுத்தல்' என்னும் செயல்களை இயேசுவோடு பொருத்திப்பார்க்கின்றனர். இச்சீடர்கள் அறிவிலிகள் அல்லர். மாறாக, இயேசு என்றால் யார்? அவர் என்ன செய்தார்? அவர் எப்படி நினைவுகூறப்படுகின்றார்? என எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றனர்.

அவர்களின் கண்கள் திறந்தவுடன் அவர் மறைந்துவிடுகின்றார். இதுதான் கடவுளின் திருவிளையாடல். அவர் இன்னும் கண்களுக்குப் புலப்பட்டுக்கொண்டிருந்தால் அவர் கடவுள் அல்லர். காண்பவை எல்லாம் மனிதநிலை சார்ந்தவை. காணாதவை அனைத்தும் இறையியல்பு சார்ந்தவை. ஆகையால்தான், காண்பவற்றைவிட காணாதவற்றை நம் மனதில் பதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார் தூய பவுல்.

இச்சீடர்கள் தாங்கள் சொந்த ஊர் திரும்பியது மட்டுமல்லாமல் தங்களுக்கு நிகழ்ந்ததை அடுத்தவர்முன் எடுத்துரைக்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றும் பகர்கின்றனர். முகவாட்டம், ஏமாற்றம், மலைப்பு என இருந்தவர்கள் இப்போது சான்று பகரும் துணிச்சல் பெறுகின்றனர்.

இவர்கள் பெற்ற உயிர்ப்பு அனுபவமே இவர்களின் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருக்கிறது. இப்படிப்பட்ட உயிர்ப்பு அனுபவம் பெற்ற பேதுரு எருசலேமில் துணிந்து நின்று, எருசலேம் மக்களை நோக்கிப் பேசுவதை இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:14, 22-33) வாசிக்கின்றோம்.

தாவீதின் கல்லறை மற்றும் இயேசுவின் கல்லறை ஆகியவற்றை ஒப்பீடு செய்து, தாவீதின் கல்லறை இன்றுவரை நம்மிடம் இருக்கிறது. அவருடைய உடல் பாதாளத்தின் அழிவைக் கண்டது. ஆனால், இயேசுவின் கல்லறை வெற்றுக் கல்லறையாக இருந்துது. அவருடைய உடல் பாதாளத்தின் அழிவைக் காணவில்லை.

  உயிர்ப்புக்கு பெரிய சான்று சீடர்களின் மாறிய வாழ்வு மட்டுமே.

ஆக, உயிர்ப்பை நாம் ஓர் அனுபவமாக மட்டுமே பார்க்க வேண்டும். உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தவர்களும், உயிர்ப்பு அனுபவம் பெற்றவர்கள் முன்மாதிரியே இருக்க முடியாது. அவர்கள் மாறித்தான் ஆகவேண்டும். அப்படி மாறாமல் இருக்கிறவர்கள் உயிர்ப்பு அனுபவம் பெறவில்லை என்றே பொருள். ஆகையால்தான், தூய பவுலடியார், 'கிறிஸ்துவையும் அவரின் உயிர்ப்பின் ஆற்றலையும் நான் அறிய விரும்புகிறேன்' (பிலி 3:10) என்கிறார்.

  இந்த அனுபவத்தையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 பேதுரு 1:17-21) பதிவு செய்யும் பேதுரு, 'இறந்த அவரை கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்' என எழுதுகின்றார். ஆக, இயேசுவின் உயிர்ப்பு மற்றவர்களின் நம்பிக்கைக்கு விதையாகவும் அமைகின்றது.

மொத்தத்தில், உயிர்ப்பு என்பது ஒரு அனுபவம். அதை அனுபவிப்பவரின் வாழ்வில் அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எருசலேமிலிருந்து தப்பித்து எம்மாவு சென்ற சீடர்கள் மீண்டும் எருசேலம் திரும்புகின்றனர். யூதர்களுக்கு அஞ்சி அறையில் ஒடுங்கிக் கிடந்த பேதுருவும் உடன் திருத்தூதர்களும் தெருக்களில் வந்து போதிக்கின்றனர். திருத்தூதர்கள் வழியாக இயேசுவைப் பற்றி அறிந்துகொண்டவர்கள் அவர்மேல் நம்பிக்கை கொண்டு கடவுளை நோக்கி திரும்பி வருகின்றனர்.

  இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் மூன்று:

1. வழியில் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

லூக்கா நற்செய்தியாளரின் இயேசு 'வழியில்' நடக்கின்றார். லூக்கா நற்செய்தி எருசலேமில் தொடங்கி எருசலேமில் முடிகிறது. லூக்கா நற்செய்தியாளரில் வரும் அனைவருமே பயணம் செய்கின்றனர்: சக்கரியா, எலிசபெத்து, மரியா, இயேசு, நல்ல சமாரியன், ஊதாரி மகன். இன்று நாம் காணும் எம்மாவு சீடர்களும் வழியில் தான் இயேசுவைச் சந்திக்கின்றனர். வழி எதைக் குறிக்கிறது? வழி வாழ்க்கைக்கான ஒரு உருவகம். வாழ்வில் நாம் பயணியர்கள், வழிப்போக்கர்கள். எந்நேரமும் நாம் எதையாவது ஒன்றை நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றோம். எருசலேமிலிருந்து எம்மாவு நோக்கிச் செல்கின்றனர் சீடர்கள். எருசலேம் துன்பத்தின் உருவகம். தன் தலைவர் அழிக்கப்பட்டுவிட்டார், தங்களையும் அழித்து விடுவார்கள் என்று பயந்து ஓடுகின்றனரா? அல்லது 'எல்லாம் முடிந்து விட்டது. இனி ஒன்றும் இல்லை' என விரக்தியில் நடக்கிறார்களா? விரக்தியில் நடக்கும் போது நம்மையறியாமலேயே நம் நடை சுருங்கி விடுகிறது. இந்தச் சீடர்களும் அப்படித்தான் சுருங்க நடந்திருக்க வேண்டும். விரக்தி, பயம், குழப்பம், கவலை. இனி என்ன நடக்கும்? இயேசு உயிர்த்துவிட்டாரா? பெண்கள் சொல்வதை நம்பலாமா? இப்படிக் கேள்விகளோடும், ஆச்சர்யங்களோடும் நடந்தவர்களைச் சந்திக்கின்றார் இயேசு ஒரு வழிப்போக்கன் போல. நம் வாழ்விலும் கேள்விகள், ஆச்சர்யங்கள் வரும்போது அங்கேயும் இயேசு ஒரு வழிப்போக்கனாக நடந்து வருகிறார். இயேசு சீடர்களைப் பார்த்துக் கேட்கும் கேள்வி: 'நீங்கள் ஒருவரோடு ஒருவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?' இதற்கு விடையாக சீடர்கள் எருசலேமில் நடந்தவற்றையெல்லாம் சொல்கின்றனர். இயேசுவும் அவர்களுக்கு இறைவாக்குகளை எடுத்துரைக்கின்றார்.

  இந்தக் கேள்விக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு: (அ) நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? (ஆ) அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? (இ) அவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்?

நாம் வாழும் இந்தச் செல்லுலார் உலகத்தில் அன்றாடம் 'பேச்சு' வழியாக பல டேட்டாக்கள் பரிமாறப்படுகின்றன. இந்த நொடி எவ்வளவோ பேர் பேசிக்கொண்டிருப்பார்கள்: தொலைபேசிப் பேச்சு, நேருக்கு நேர் பேச்சு, நமக்குள் நாமே பேசும் மொளனப் பேச்சு, வலியின் முணகல், போரின் சத்தம், அலைகளின் சத்தம், மேடைப் பேச்சு, சினிமா, பாடல் என நம்மைச் சுற்றி பேச்சு இருந்து கொண்டே இருக்கின்றது. முதலில் நாம் கேட்க வேண்டியது: 'அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள்?' அதாவது இன்று உலகம் என்ன பேசிக் கொண்டிருக்கிறது. பேஸ்புக், ஸ்கைப், டுவிட்டர், வாட்ஸ்ஆப் என எல்லாத் தளங்களிலும் மக்கள் இன்று பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள்? நாம் டிவியை ஆன் செய்தால் யார் யாரோ வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்க்கும் விளம்பரங்கள், சினிமாக்கள், மெகாசீரியல்கள் என எல்லாவற்றிலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்று அவர்கள் நமக்குச் சொல்வது என்ன? இன்றைய உலகம் கருத்தடை, கருக்கலைப்பு, பிளாஸ்டிக், புவிவெப்பமயம், நாகரீகம் பற்றிப் பேசுகின்றது. கடவுள் இல்லை எனவும் 'நம்மால் எல்லாம் முடியும்!' என்று சொல்கின்றது. இன்றைய உலகம் பேசும் பல நம் செவிகளுக்கு இனிமையாய் இருக்கின்றன. ஆனால் அவற்றால் காலப்போக்கில் நமக்குத் துன்பமும், விரக்தியுமே மிஞ்சுகின்றது. இரண்டாவதாக, சீடர்களாகிய நாம் இன்று எதைப் பேசிக் கொண்டிருக்கிறோம்? நம் பேச்சு உலகின் பேச்சு போலவே இருக்கின்றதா? நம் பேச்சு உலகின் பேச்சுக்கு நடுவில் மறைந்து போகின்றதா? இன்று நம் கண்முன் அநீதி, வன்முறை, ஏற்றத்தாழ்வு இருக்கும்போது அதை எதிர்த்து நம்மால் பேச முடிகிறதா? நாம் பேசுவதற்குத் தடையாக இருப்பது என்ன? நம் பயமா? நம் கவலையா? நம் விரக்தியா? நம் நடையும் சுருங்கிப் போய் இருக்கின்றதா? மூன்றாவதாக, அவர் இன்று என்ன பேசுகிறார்? இயேசு எதைப் பற்றி நம்மிடம் உரையாடுகின்றார்? இயேசுவின் உரையாடல் எப்போதும் நம்பிக்கை தருவதாகவே இருக்கின்றது. நம் அறியாமையைக் கண்டு சில நேரங்களில் 'மந்தப் புத்தி உள்ளவர்களே!' என்று இயேசு நம்மையும் சாடுகின்றார். துன்பங்கள் வழியே மீட்பு எனச் சொல்கின்றார் இயேசு. 'கண்களுக்குக்        களிப்பூட்டுவதாகவும், செவிகளுக்கு இனிமையாய் இருப்பவை எல்லாம் நல்லது என நினைத்து விடாதீர்கள்' என்கிறார்.

2. இல்லாமையே இறைமை

இயேசு இன்னும் நடப்பது போல காட்டிக் கொள்கின்றார். 'எங்களோடு தங்கும்!' என்கின்றனர் சீடர்கள். முன்பின் தெரியாத ஒருவரைத் தங்களோடு தங்கிக் கொள்! என்று சொல்லும் சீடர்கள் மிக எளிமையானவர்கள். தாராள உள்ளத்தினர். இந்தத் தாராள உள்ளம் நம்மிடம் இருக்கின்றதா? நாம் யாரையாவது சந்திக்கும்போது, 'இவன் எப்படா போவான்?' என நினைக்கிறோம். பிறரை நம் தனித்தன்மைக்கு எதிரானவர்களாகப் பார்க்கிறோம். கடவுளையும் சில நேரங்களில் எதிரியாகப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம். அப்பம் பிட்குதலில் இயேசுவைக் காண்கின்றனர் சீடர்கள். அவர் மறைந்தவுடன் தான் அவர் யார் எனத் தெரிகின்றது அவர்களுக்கு. கடவுளின் 'இல்லாமையே' அவரின் இருத்தலை நமக்குக் காட்டுகின்றது. இறைவார்த்தையிலும், இறைவுணவிலும் இன்றும் இயேசு நம்மோடு வருகின்றார். அவர் பேசுவதை நாம் கேட்போம். அவர் நம்மோடு தங்கட்டும். அவரைச் சந்தித்தபின் எந்த எருசலேமும் நமக்குத் துன்பமில்லை. எந்த நிலையிலும் நமக்கு இறப்பில்லை, விரக்தியில்லை, பயமில்லை, கவலையில்லை.

3. என் வாழ்வின் எம்மாவு எது?

என் வாழ்வில் இன்று நான் அனுபவிக்கும் எருசலேம் எது? என் வாழ்வில் முகவாட்டம், ஏமாற்றம், மலைப்பு தருவது எது? எம்மாவு சீடர்களின் வாழ்வு நமக்கு ஒரு அழகிய இறைத்தேடலை முன்வைக்கின்றது. எந்த அளவிற்கு இயேசுவை இவர்களுக்குப் பிடித்திருந்தால் அவர்கள் இவ்வளவு சோகமாக மாறியிருப்பார்கள்? 'என் இறைவன் என்னோடு இல்லை' என்ற உணர்வு அவர்களை இந்த நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இறைவன் என்னோடு இல்லாத நேரத்தை நான் எப்படி உணர்கிறேன்? இறைவனை நான் வேண்டுமென்றே என் வாழ்வை விட்டு வெளியேற்றிவிடுகிறேனா?

இறுதியாக, என் வாழ்வின் எருசலேம் எது? நான் எதிலிருந்து தப்பி ஓட நினைக்கிறேன்.

தற்காலிகமான ஆறுதல் எம்மாவு கூட இயேசுவின் பிரசன்னத்தால் நிரந்த ஆறுதலாகிறது. ஏனெனில் அவர் நிரந்தரமானவர்.

  நம்மோடு வழிநடக்கும் இறைவனைக் கண்டுகொள்தலே ஆறுதல் - அதுவே என் வாழ்வின் எம்மாவு!