இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் முதல் ஞாயிறு

எந்தப் பக்கம்?

தொநூ 2:7-9, 3:1-7
உரோ 5:12-19
மத் 4:1-11

'ஏங்க...உங்களத்தான்...
நீங்க எவ்வளவு நாளா இந்த ஏதேன் தோட்டத்தில் இருக்கீங்க.
இங்க இவ்ளோ மரங்கள் இருக்கே.
எல்லா மரங்களோடு பழங்களையும் நாம சாப்பிடலாமா?'

'எவ்ளோ நாளா இருக்கேன்னு தெரியல.
ஆனா, எல்லா மரங்களோடு பழங்களையும் சாப்பிடலாம்.
நன்மை தீமை அறியும் மரத்தின் பழத்தை சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொன்னார்.'

'அது என்னங்க நன்மை தீமை அறியும் மரம்?'

'அதோ...அந்தா தோட்டத்தின் நடுவுல தெரியுதா பார் ஒரு மரம்!'

இப்படித்தான் பேசியிருப்பார்கள் நம் முதல் பெற்றோர் ஆதாமும் ஏவாளும்.

இன்றைய முதல் வாசகத்தில் ஏவாளும், பாம்பும் பேசும் உரையாடலும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவும், அலகையும் பேசும் உரையாடலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைய இரண்டாம் வாசகம் இரண்டு பேரையும் பொருத்திப் பார்க்கிறது.

கடவுள் பழங்களைப் பற்றியும், மரத்தைப் பற்றியும் ஆதாமிடம் சொன்னபோது ஏவாள் 'பிறக்கவே' இல்லை. அப்படி இருக்க கடவுள் சொன்னதாக அவர் பாம்பிடம் சொல்வது அவருக்கு எப்படித் தெரிந்தது? நிச்சயமாக அவர் தன் துணைவரிடம் கேட்டுத்தான் தெரிந்திருக்க வேண்டும்.

ஆதாமும், ஏவாளும் இணைந்தே இருந்த நேரத்தில் பாம்பு ஏவாளை மட்டும் எப்படி தனியாக சந்தித்தது?

இன்றைய முதல் வாசகத்தை எடுத்து நிறுத்தி நிதானமாக வாசித்தால் பாம்பு ஏவாளைப் பார்த்து, 'நீ எடுத்து உண்!' என்று சொல்வதாக அங்கே இல்லை. ஏவாள் தாமாகவே கனியை உண்கின்றார்.

'ஏதாவது ஒரு மரத்திலிருந்து நீங்கள் உண்ணக்கூடாது என கடவுள் சொன்னாரா?' என்று கேட்கிறது பாம்பு.

இந்தக் கேள்விக்கு விடை, 'ஆம்' அல்லது 'இல்லை' என்று மட்டுமே இருந்திருக்க வேண்டும்.

ஆனால், ஏவாள் நிறைய எக்ஸ்ப்ளனேஷன் கொடுக்கிறார்:

'தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது. அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார்'

பெண் பேசத் தொடங்கியவுடன், பாம்பும் தொடர்ந்து பேசுகிறது:

'நீங்கள் சாகவே மாட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்.'

இவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொள்ளும் பழத்தை மூன்று அடைமொழிகளில் வர்ணிக்கிறார் ஆசிரியர்: அது 'உண்பதற்குச் சுவையானதாகவும், கண்களுக்கு களிப்பூட்டுவதாகவும், அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்தது'

இங்கே ஐந்து விடயங்கள் தெளிவாகிறது:

அ. தோட்டத்தில் பாம்பைக் கண்டு ஏவாள் பயந்திருக்கிறார். ஏனெனில் அவரது பேச்சில் பதற்றம் தெரிகிறது.

ஆ. உண்பதற்கு தடை செய்யப்பட்ட மரத்தின் பெயர் ஏவாளுக்குத் தெரியவில்லை. ஆகவே, அவர் 'நடுவில் உள்ள மரம்' என்று அந்த மரத்தின் இருப்பை மையப்படுத்தி விடை அளிக்கிறார்.

இ. 'அதைத் தொடவும் கூடாது' என்று கடவுள் சொன்னதாக ஏவாள் சொல்வது ஒரு எக்ஸ்ட்ரா பிட். கடவுள், 'சாப்பிடக் கூடாது!' என்றுதான் சொன்னாரே தவிர, 'தொடக்கூடாது' என்று சொல்லவில்லை.

ஈ. ஏவாள் 'சாவீர்கள்' என்று தன் உரையாடலை முடிக்கிறார். பாம்பு, அதே வார்த்தையைக் கையாண்டு, 'சாக மாட்டீர்கள்' என தன் உரையாடலைத் தொடங்குகின்றது.

உ. ஏற்கனவே ஆதாமும், ஏவாளும் கடவுளின் சாயலாகத்தான் இருக்கின்றனர். இங்கே 'நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள்' என்று சொல்வது பாம்பு போடும் எக்ஸ்ட்ரா பிட்.

பின், ஏவாள் கனியைப் பறித்து உண்கிறார். அதை தன் கணவருக்கும் கொடுக்கிறார். அவரும் உண்கிறார்.

இங்கே இரண்டு கேள்விகள்:

அ. பாம்பு செய்த சோதனை என்ன?

ஆ. ஏவாள் செய்த தவறு என்ன?

இரண்டிற்கும் ஒரே விடைதான்.

'தேவையான இடத்தில் தேவையானதை மட்டும் பேசுதல்!'

'இவள் பேசுகிறாளா? இல்லையா?' என சோதித்தது பாம்பு.

'பேசக்கூடாத இடத்தில் அதிகம் பேசினார் ஏவாள்'

'பேச வேண்டிய இடத்தில் பேசாமல் விட்டார் ஆதாம்'

ஆக, பேச்சும், பேச்சின்மையுமே இவர்கள் செய்த தவறு.

மத்தேயு நற்செய்தியில மலைப்பொழிவை நிறைவு செய்கின்ற இயேசு, 'ஆகவே, நீங்கள் பேசும் போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது' (மத் 5:37) என்கிறார்.

ஆக, மிகுதியான பேச்சு தீயோனிடமிருந்து வருகிறது.

மிகுதியாக நாம் பேசும்போது தீயோனிடம் நாம் மாட்டிக்கொள்கிறோம்.

'ஆமாம். சொன்னாரு!' என்று ஏவாள் முடித்திருந்தால், பாம்பு தொடர்ந்து பேசியிருக்காது. 'ஆம்' அல்லது 'இல்லை' என்று மட்டும் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நீட்டிப் பேசுகிறார் ஏவாள்.

இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு வருவோம்:

அங்கே இயேசுவும் பாம்பும் (அலகை).

முதல் வாசகத்தில் போலவே, இங்கும் அலகைதான் முதலில் பேசத் தொடங்குகிறது:

'நீர் இறைமகன் என்றால்...'

அங்கே 'நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள்' அதாவது, 'கடவுளின் மகன் அல்லது மகள் ஆவீர்கள்' என்ற சொன்ன அலகை, இங்கே 'நீ கடவுளின் மகன் என்றால்' என தொடங்குகிறது.

  அங்கேயும் இங்கேயும் சோதனை சாப்பிடுவதில்தான் வருகிறது.

அங்கே கனி. இங்கே அப்பம். இங்கே இயேசுவுக்கு இருந்தது பசி. அங்கே ஏவாளுக்கு இருந்தது கவர்ச்சி.

ஏவாளை விட இயேசுதான் எளிதாக விழுந்திருக்க வேண்டும். ஏனெனில் நாற்பது நாள்கள் பசியாக இருக்கிறார் இயேசு.

  பாலைவனத்தில் இயேசு சோதிக்கப்பட்ட நிகழ்வை ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா)  மட்டும் பதிவு செய்ய, யோவான் அதை எழுதாமல் விடுகின்றார். மாற்கு நற்செய்தியாளரின் பதிவு மிகவும் சுருக்கமாக இருக்கிறது. மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் மூன்று சோதனைகளைப் பதிவு செய்திருந்தாலும், அவற்றின் வரிசை இரண்டிலுமே மாறுகிறது. இயேசு சோதிக்கப்பட்டாரா? எத்தனை சோதனைகள்? என்ன வரிசையில் சோதனைகள் நிகழ்ந்தன? அலகை இயேசுவை சோதிக்கிறது என்றால் அலகை இயேசுவைவிட பெரியதா? என்ற தேவையற்ற கேள்விகளை விடுத்து நேரே நிகழ்விற்குப் போவோம்.

மூன்று சோதனைகளை முதலில் புரிந்து கொள்வோம்:

அ. 'நீர் இறைமகன் என்றால் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்!'

ஆ. 'நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்!'

இ. 'நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால்!'

இந்த மூன்று சோதனைகளைக்கும் மூன்று அர்த்தங்களை நாம் கொடுக்க முடியும்.

அ. உளவியல் பொருள்

இந்த மூன்று சோதனைகளும் இயேசுவின் உள்ளத்தில் நடந்த மனப்போராட்டமாக இருந்திருக்கலாம். தான் இறைமகன் என்பதை எப்படி மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது? அப்பம் பெருக்குதல் வழியாகவா? அருஞ்செயல்கள் வழியாகவா? அல்லது ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் அடிபணிவது வழியாகவா? நன்மைக்கும், தீமைக்கும் எதிரான இந்தப் போராட்டம் ஒவ்வொருவரின் உள்ளத்தில் நிகழும் போராட்டடும் கூட.

ஆ. அறநெறி பொருள்

முதல் சோதனை உணவு, இரண்டாம் சோதனை பாதுகாப்பு, மூன்றாம் சோதனை தன்மதிப்பு என மனித வாழ்வின் மூன்று தேவைகளைக் குறிக்கிறது. இந்த மூன்றும் ஒன்றிற்குப் பின் ஒன்றாக வரிசையாக நிகழக்கூடியவை. இவற்றை அடைவதற்கான குறுக்கு வழிகளை நாம் தேர்ந்துகொள்வது சரியா என்ற பின்புலத்தில் புரிந்துகொள்வது.

இ. கிறிஸ்தியல் பொருள்

இயேசுவின் வாழ்வும், போதனையும் தன்மையம் கொண்டதாக இல்லை. மாறாக, பிறர்மையம் கொண்டதாக இருக்கிறது. தனக்காக அப்பம் செய்து கொள்ளாத இயேசு அவற்றை பிறருக்காக செய்கின்றார். தான் மற்றவர் முன் குதித்து இறைமகன் ஆவதற்குப் பதிலாக மற்றவர்களின் இறைச்சாயலை அவர்களுக்கு உணர்த்துகின்றார். தான் நெடுஞ்சாண்கிடையாக விழாமல் இருப்பதோடு தீயோனை நாடும் மற்றவர்களைத் தூக்கிவிடுகின்றார்.

இறுதியாக,

இயேசு அலகையின் எந்த சோதனையிலும் விழுந்தவிடவில்லை.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டை நாம் எப்படி வாழ்வாக்குவது?

அ. நம் பேச்சு

இன்று நாம் நிறைய பேசுகிறோம். நாம் டிவி, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் என எதைத் திறந்தாலும் யாராவது ஒருத்தர் எழுதியதை, பேசியதைக் கேட்கிறோம். சில பேச்சுகள் நம்மை கவர்ந்திழுக்கின்றன. சில பேச்சுகள் நம்மை வசியம் செய்கின்றன. சில பேச்சுகள் நம்மை ஏமாற்றுகின்றன. சில நேரங்களில் நாம் குறைவாகப் பேசுகிறோம். இல்லாதது பொல்லாதது பேசுகிறோம். தேவைக்கு அதிகமாக பேசுகிறோம். முன்னுக்குப் பின் முரண்பட்டுப் பேசுகிறோம். மட்டம் தட்டி பேசுகிறோம். நம் பேச்சுதான் நாம் நமக்கே விரித்துக்கொள்ளும் கண்ணி.

எப்படிப் பேச வேண்டும் என்பதை இயற்கை நமக்கு 5 வயதுக்குள் கற்றுக்கொடுத்துவிடுகிறது. ஆனால் நாம் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது, யாரிடம் எதைப் பேச வேண்டும், பேசக் கூடாது என்பதை வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கிறோம்.

ஏவாளின் முதல் பாவம் கனியை உண்டது அல்ல. மாறாக, பாம்புடன் பேசியதுதான். அதுவும் தேவையற்றவற்றையும், சொல்லாதவற்றையும் பேசியது.

'கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கிறார் மனிதர்' என்கிறார் இயேசு. இன்று என் வாய்ச்சொல் கடவுளின் வாய்ச்சொல்லை ஒத்திருக்கிறதா? அல்லது நான் என் வாய்ச்சொல்லால் மற்றவர்களின் பசியை, காயத்தை, கோபத்தை, இல்லாமையை அதிகப்படுத்துகிறேனா?

ஆ. நோ குறுக்குவழி

மீட்பிற்கு நிறைய எளிய வழிகள் கிடைக்க இயேசு கஷ்டமான வழியைத்தான் தெரிந்து கொள்கின்றார். அந்த கஷ்டத்தை வாழ்வின் எதார்த்தமாக்குகின்றார். இன்று குறுகிய வழிக்குள் வேகமாக நுழைய நாம் விரும்புகின்றோம். ஆகையால்தான் யூடியுபில் நாம் பார்க்கும் ஒரு நிமிட வீடியோவைக்கூட ஓட்டி விட்டு வேகமாக பார்த்துவிட நினைக்கிறோம். எதையும் நின்று, நிதானமாக அனுபவிக்கும் பக்குவம் நமக்கு இல்லை.

குறுக்கு வழியில் வருபவை சீக்கிரம் வருகின்றன. குறுகிய வழியில் வருபவை நம்மோடு ஒட்டிக்கொள்வதில்லை. எல்லாரும் போக விரும்பும் வழி குறுக்குவழி. வலி இல்லாமல் வாழ நினைப்பவர்கள் தேர்வு செய்யும் வழியும் குறுக்குவழியே.

கீழ்ப்படிதல் - இதை இயேசு செய்தார். ஆதாம் செய்யவில்லை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் இதையே ஓர் இறையியலாக பதிவு செய்கிறார். ஆதாமினால் குற்றம் வந்தது. இயேசுவால் அருள்கொடை வருகின்றது. குறுக்குவழி குற்றத்தைக் கொண்டுவருகிறது. கீழ்ப்பதில் அருள்கொடையைக் கொண்டுவருகிறது.

இ. அலகையும் வானதூதரும்

தூய ஆவி வந்தார். அலகை வந்தது. அலகை போனது. வானதூதர் வந்தனர். நம் வாழ்வும் இப்படித்தான். இரண்டு பேரும் வருவார்கள். போவார்கள். நம் மனநிலை இயேசுவின் மனநிலை போல ஒன்றுபோல இருக்க வேண்டும். தூய ஆவி வந்துவிட்டார் என இயேசு கொண்டாடவும் இல்லை. அலகை வந்துவிட்டது என இயேசு வருந்தவும் இல்லை. பசிக்கிறது என விரக்தி அடையவும் இல்லை. 'வானதூதர் பணிவிடை செய்கின்றனர்' என புளகாங்கிதம் அடையவில்லை. யார் வந்தாலும், யார் போனாலும் என் வாழ்க்கையை நான் வாழ்வேன் என்று இருக்கிறார் இயேசு.

ஈ. சாத்தானின் வேதம்

'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்ற பழமொழி உண்டு. முதல் சோதனையின் இயேசு மறைநூலை மேற்கோள் காட்டியதுபோல, இரண்டாவது சோதனையில் அலகை மறைநூலை மேற்கோள் காட்டுகிறது. ஆக, மறைநூலை அறிவதும், மேற்கோள் காட்டும் திறமையும் பெரிதல்ல. அலகை கூட அந்த வேலையைச் செய்யும். நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான்: என் இயல்பு எது? பேயின் இயல்பா அல்லது இயேசுவின் இயல்பா?

உ. சுவை, களிப்பு, விருப்பம்

இந்த மூன்று வார்த்தைகளில் வர்ணிக்கப்படுகிறது விலக்கப்பட்ட கனி. 

நம்ம வாழ்க்கையிலயும் சில விலக்கப்பட்ட கனிகள் இருக்கின்றன. சிலவற்றை நாமே விலக்கி வைத்திருக்கிறோம். சிலவற்றை நமக்கு மேல் இருப்பவர்கள் விலக்கி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், விலக்கப்பட்ட கனிகள் நமக்கு சுவை, களிப்பு, விருப்பம் தருவதாகவே தெரிகின்றன. அவற்றை நாம் கையில் எடுக்கின்றோம். யாரும் பார்க்கவில்லை என்றால் சில நேரங்களில் கடித்துப் பார்க்கின்றோம். 'எல்லாரும் சாப்பிடுகிறார்களே. நான் சாப்பிட்டா என்ன?' என ஆறுதல் சொல்லிக்கொள்கிறோம். ஆனால், விலக்கப்பட்ட கனி விலக்கப்பட்ட கனியே. அந்தக் கனியோடு நான் ஏன் சமரசம் செய்து கொள்கிறேன்?

ஏவாள் ஒட்டுமொத்த தோட்டத்தின் அழகை பார்ப்பதற்குப் பதிலாக அந்தக் கனியை மட்டுமே பார்த்தால். 'கனி இருக்க காய் கவர்ந்தற்று' என நினைத்தாள். ஆனால் அந்தக் கனியே அவளின் கண்ணியானது அவளது சோகம்.

வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்க்க முடிந்தால் கனியை எளிதாக விலக்கிவிடலாம். ஏனெனில் இயேசுவும் அப்படித்தான் செய்தார். ஒட்டுமொத்த வாழ்க்கையின் தொடக்கம்தான் பாலைவனம் எனப் பார்த்தார். பாலைவனம்தான் எல்லாம் என நினைத்திருந்தால் அவரும் சோதனையில் விழுந்திருப்பார். ஆக, என் பார்வை விரியும்போது நான் சோதனையில் வீழ்வது குறையும்.

இறுதியாக,

'நெஞ்சில் உரமும் இன்றி
நேர்மை திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி!' என்றார் பாரதி.

நெஞ்சில் உரம் இல்லாமல்,
பொய் பேசி
பாம்பின் வஞ்சனையாலும்
தன் வாய்ச்சொல்லாலும் வீழ்ந்தாள் ஏவாள் என்ற கிளி.

நெஞ்சில் உரத்துடன்
நேர்மை திறத்துடன்
உன் சொல் இது - என் சொல் இது என
சொல்வரையறை செய்து வென்றார் இயேசு.

நீங்களும் நானும் எந்தப் பக்கம்?