இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 7ஆம் ஞாயிறு

தூய்மை எனப்படுவது யாதெனின்...

லேவியர் 19:1-2, 17-18
1 கொரிந்தியர் 3:16-23
மத்தேயு 5:38-48

புதிதாக அச்சிடப்பட்டு மின்னும் 2000 மற்றும் 500 ரூபாய் தாள்களில் 'ஸ்வாச் பாரதம்' என்பதன் லோகோ பதிவாயிருக்கிறது. 'தூய்மை இந்தியா' என்பதுதான் இதன் தமிழாக்கம்.

'தூய்மை' - இந்த வார்த்தை பல பொருள்களைக் கொண்டது. ஆங்கிலத்தில் 'ஹோலி,' 'க்ளீன்,' 'நீட்,' 'ப்யூர்' என பல வார்த்தைகளில் சொல்வதை நாம் 'தூய்மை' என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிடுகிறோம்.

'தூய அருளானந்தர்' என்று நாம் அழைக்கும் சொல்லாடலில், 'தூய்மை' என்பது புனிதத்தையும்,

'இந்த இடத்தை தூய்மையாக வைக்கவும்' என்று நாம் வைக்கும் வாசகத்தில், 'தூய்மை' என்பது சுத்தத்தையும்,

'இவர் தூய்மையான ஆடையை மட்டுமே அணிவார்' என்பதில், 'தூய்மை' என்பது நேர்த்தியாக துவைத்து மடிக்கப்பட்டதையும்,

'தூய்மையான தண்ணீரை மட்டுமே பருகவேண்டும்' என்ற அறிவிப்பில், 'தூய்மை' என்பது சுத்திகரிக்கப்பட்ட அல்லது அசுத்தம் நீக்கப்பட்ட என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

ஒரு வார்த்தை. ஆனால் அர்த்தங்கள் பல.

'தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!' என்று முதல் வாசகத்திலும் (காண். லேவி 19:1-2,17-18),

'ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில்' என்று இரண்டாம் வாசகத்திலும் (காண். 1 கொரி 3:16-23),

'உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்!' என்று நற்செய்தி வாசகத்திலும் (காண். மத் 5:38-48)

கையாளப்படும் 'தூயவர்,' 'தூயது,' 'நிறைவுள்ளவர்' என்ற வார்த்தை எபிரேய மற்றும் கிரேக்க பதங்களில் வேறு வேறு சொற்களாக இருந்தாலும் அவைகளுக்குள் இழைந்தோடும் ஒன்று என்ன என்றால், 'அழுக்கற்ற நிலை.'

ஆக, தூய்மை என்றால் 'அழுக்கற்ற நிலை' என வைத்துக்கொள்வோம். இந்த வரையறை நிறைவானது அல்ல. இருந்தாலும், இது போதுமானதாக இருக்கிறது.

சின்ன உருவகத்துடன் புரிந்துகொள்வோம்.

10க்கு 10 அடியில் ஒரு பெரிய வெள்ளை நிற கேன்வஸ் துணி. இந்தத் துணியில் ஓர் ஓவியம் வரைய வேண்டும். துணியை விரித்துப் பார்க்கையில் துணியின் மையத்தில் அல்லது மையத்துக்கு அருகில் ஒரு உள்ளங்கை அளவிற்கு கறுப்பாக ஏதோ அழுக்கு படிந்திருக்கிறது ('அழுக்கு' என்றாலே கறுப்பு என நினைத்துக்கொள்ள வேண்டாம். கறுப்புத் துணியில் வெள்ளை விழுந்தால், 'வெள்ளையும்' அழுக்கே!). அப்படி கறை படிந்த கேன்வஸ் ஓவியம் தீட்டுவதற்கு தகுதி இல்லாமல் போய்விடுகிறது. அந்தக் கறையை அப்படியே வைத்து ஓவியம் தீட்டினாலும் அந்த ஓவியத்தில் அந்தக் கறை தன் இருப்பைக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மேலும், 10க்கு 10 அடி தர வேண்டிய இடத்தின் ஒரு சிறுபகுதியை அழுக்கு ஆக்கிரமித்துக்கொள்கிறது.

ஆக, அழுக்கு என்பது ஆக்கிரமிப்பு.

இந்த உருவகத்தை அப்படியே நீட்டிப்போம்.

கணிணியில் விண்டோஸ் அல்லது மொபைலில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிகம் கடுப்பேற்றும் ஒரு வார்னிங் அடிக்கடி வருவதுண்டு:

'க்ளீன் யுவர் டிரைவ்'

அதாவது, உங்கள் கணிணியின் சேமிப்பை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் தேவையற்ற தற்காலிக ஃபைல்களை அழியுங்கள், அல்லது உங்கள் மொபைலில் இடத்தை நிரப்பியிருக்கும் செயலிகள் மற்றும் ஃபைல்களை அழியுங்கள் என்ற எச்சரிக்கையே இது.

இதற்கென உள்ள மென்பொருள் அல்லது செயலியைப் பயன்படுத்தி, நாம் 'க்ளீன்' செய்தவுடன், நமக்கு சேமிப்பில் நிறைய இடம் கிடைக்கிறது. கணிணி அல்லது ஸ்மார்ட்ஃபோனின் செயல்பாட்டில் வேலை கூடுகிறது.

ஆக, நாம் 'க்ளீன்' செய்யும்போது என்ன நடக்கிறது என்றால், தேவையற்றது நீங்குவதால், தேவையானதற்கு நமக்கு இடம் கிடைக்கிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு சொல்வதும் இதுதான்:

'தூய்மை' என்பது 'தேவையற்றதை' நீக்குவது. 'தேவையானதை' அதிகப்படுத்திக்கொள்வது.

முதல் வாசகத்திலிருந்து தொடங்குவோம்.

இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டில் தங்கி குடும்பங்களாக, சமூகமாக வாழத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்ட பகுதியில், 'சகோதர வாழ்வின் இன்றியமையாமை' பேசப்படுகிறது.

தூய்மை என்பது கடவுளின் மிக முக்கிய குணம் என்று சொல்கின்ற ஆசிரியர், மனிதர்களும் அந்தத் தூய்மையை அணியலாம் என்றும், அதற்கு அடிப்படை தேவையாக இருப்பது 'அடுத்திருப்பவரோடு நல்லிணக்கம்' கொண்டிருத்தலாகும்.

'பகை உணர்வை உன்னுள் கொண்டிராதே!'

'குற்றம் கடி!'

'அடுத்தவரிடத்திலும் அன்புகூர்!'

இந்த அறிவுரைகளில் ஓரளவு பிறரன்பு இருந்தாலும் இங்கே ஒரு வகையான தன்னலமும் இருக்கிறது. எப்படி? இங்கே 'அடுத்திருப்பவர்' என்று சொல்லப்படுபவர் 'இனத்தவர்.' அதாவது, நான் ஒரு சமூகம் அல்லது இனத்தை அல்லது குழுவைச் சார்ந்திருக்கிறேன் என்றால், அந்த சமூகத்திற்கும், இனத்திற்கும், குழுவுக்கும் அன்பு காட்ட வேண்டும். இந்த மூன்றையும் தாண்டி நான் யாரையும் அன்பு செய்யத் தேவையில்லை.

இத்தகைய தன்னலம் ஒரு சமூகக் கட்டுமானத்திற்கு மிக அடிப்படையானது.

உதாரணத்திற்கு, என் ஊரில் வெள்ளம் வருகிறது என வைத்துக்கொள்வோம். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய நிறைய பண உதவி தேவைப்படும்போது, என் ஊரில் உள்ளவர்கள் வெளியூரில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்புவதை நான் நிறுத்தச் சொன்னால்தான், என் ஊரின் சேதாரத்தை நான் சரி செய்ய முடியும்.

ஆக, தூய்மை என்பது முதலில் நான், எனது என்று தொடங்க வேண்டும்.

என்னை அன்பு செய்ய வேண்டும். எனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்ய வேண்டும்.

இதை ஒட்டியே இன்றைய இரண்டாம் வாசகமும் அமைந்திருக்கிறது.

'பொறாமை, சண்டை சச்சரவு, பிரிவினை' என்று வாழ்ந்த கொரிந்து நகர திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், 'நீங்கள் கடவுளின் கோவில் உங்களுக்குத் தெரியாதா?' எனக் கடிந்து கொள்கிறார்.

இங்கே 'நீங்கள்' என்பது மரியாதைக்கான முன்னிலை ஒருமை அல்ல. மாறாக, முன்னிலை பன்மை.

அதாவது, திருச்சபையில் உள்ள நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கடவுளின் கோவில். கோவில் என்பதைச் சொல்வதற்கு முன் பவுல், 'நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்' என்கிறார். ஆக, கட்டடம் அல்லது தோட்டம் அல்லது கோவில் எழுப்பப்பட வேண்டுமென்றால் அங்கே ஓர் ஒருங்கியக்கம் இருக்க வேண்டும். ஒரு கட்டடத்தில் அடித்தளம், சுவர், மேற்கூரை, ஜன்னல், கதவு என அனைத்தும் ஒருங்கே இணைந்திருந்தால்தான் அது கட்டமாகத் துலங்க முடியும். கோவிலும் அப்படியே. அப்படி ஒரு கட்டமைப்பாக கோவில் துலங்கினால்தான் கடவுளின் பிரசன்னம் அங்கே தங்கி இருக்க முடியும். ஏதாவது ஓர் விரிசல் ஏற்பட்டது என்றால் அங்கே பிரசன்னம் மறைந்துவிடும்.

இவ்வாறாக, ஒட்டுமொத்த திருச்சபை இணைந்திருக்கும்போது கடவுளின் கோவிலுக்குரிய தூய்மை உருவாகிறது என்கிறார் பவுலடியார்.

இன்றைய நற்செய்தி வாசகம் கடந்த வார வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது.

'கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, பொய்ச்சான்று சொல்லாதே' என்று முன்னோர்க்கு வழங்கப்பட்ட கட்டளைகளை நிறைவு செய்து, உயிர்மை, பெண்மை, உண்மை என வழங்கிய இயேசு, 'பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்' என்ற விதிமுறையை 'தூய்மை' என மாற்றி நிறைவு செய்கின்றார்.

பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற நிலை சமூகத்தில் உள்ள அனைவரையும் பொக்கையாக்கி அல்லது குருடாக்கிவிடும்.

ஆனால், இயேசுவின் தூய்மை என்னும் மாற்றுப்பாதை குறையை அகற்றி நிறைவைக் கொண்டுவரும்.

எப்படி?

அ. நீதி

இயேசு தன் சமகாலத்தில் நடந்த மூன்று அநீதிகளை முன்வைத்து அவற்றுக்கு மாற்று கற்பிக்கின்றார்.

1. வலது கன்னத்தில் அறைபவருக்கு இடது கன்னம்

நாம் (வலது கை பழக்கம் உள்ளவர்கள்) நமக்கு முன் இருக்கும் ஒருவரின் கன்னத்தில் அறைந்தால் நம் கையில் படுவது அவரது இடது கன்னம்தான். பின் எப்படி முன் இருக்கும் நபரை வலது கன்னத்தில் அறைய முடியும்? நம் புறங்கையால் அறைந்தால் அறையலாம். இதுதான் நடந்தது இயேசுவின் காலத்தில். தங்களை உயர்ந்தவர்களாகக் கருதிய உரோமையர்கள் அல்லது உரோமை படைவீரர்கள் தங்களுக்கு கீழே இருக்கும் யூதர்களை அறையும்போது, அல்லது தண்டிக்கும்போது தங்களின் புறங்கைகளையே பயன்படுத்தினர். ஏனெனில் தங்கள் உள்ளங்கைகள் யூதர்களின் கன்னத்தில் பட்டு தீட்டாவதை அவர்கள் விரும்பவில்லை. ஆக, உரோமைப் படைவீரர் அறையும் அறை முன்னிருப்பவரின் வலது கன்னத்தில்தான் விழும். இப்போது அறைவாங்கிய நபர் தன் மறு கன்னத்தைக் காட்டும்போது அறைபவர் தன் உள்ளங்கையைப் பயன்படுத்தியே தீர வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது அவர் செயல் இழந்து நிற்பார். தன் செயலுக்காக வெட்கப்படுவார்.

2. அங்கியை எடுத்தால் மேலாடை

யூதர்களின் ஆடை அங்கி, மேலாடை என இரண்டு அடுக்காக இருந்தது. ஒருவர் ஒரு வழக்கில் தோற்றி தன் அங்கியை இழக்கும்போது, தன் மேலாடையைக் கொண்டு தன் மானத்தை மறைத்துக்கொள்ளலாம். ஆனால், ஒருவர் பொய் வழக்கு அல்லது அநீதி வழக்கு தொடர்ந்து அவ்வாறு செய்யும்போது, நான் என் மேலாடையையும் கொடுத்துவிடச் சொல்கின்றார் இயேசு. அப்படிக் கொடுக்கும்போது நான் மானமிழந்து நிற்கும் நிலையே அவரின் கன்னத்தில் விழுந்த அறையாக இருக்கும். அவர் தன் செயலுக்காக வெட்கப்படுவார்.

3. ஒரு கல் வரச் சொன்னால் இரண்டு கல்

உரோமைப் படைவீரர்கள் தங்களது படைக்கலங்களை எடுத்துக்கொண்டு ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்குச் செல்லும்போது வழியில் தாங்கள் காண்பவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து அவர்கள்மேல் சுமையை ஏற்றி ஒரு கல் வரை தங்களுக்குப் பதிலாக சுமந்து வர கட்டாயப்படுத்தலாம். சீரேனே ஊரானாகிய சீமோன் இப்படித்தான் மாட்டிக்கொள்கின்றார். ஆனால், இரண்டு கல் சுமந்து வர கட்டாயப்படுத்த முடியாது. அப்படி ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டு, கட்டாயப்படுத்தப்பட்ட நபர் புகார் செய்தால் அந்த உரோமை வீரர் தண்டிக்கப்படுவார். ஆக, மற்றவர் உன்னை அநீதிக்கு உட்படுத்தும்போது நீ இன்னும் ஒரு படி சென்றால் அநீதியாளருக்கும் தண்டனை பெற்றுவிடலாம் என்கிறார் இயேசு.

ஆக, தூய்மை என்பது அநீதியை அகற்றுவது.

எடுத்துக்காட்டாக, ஊழல் அரசியல்வாதிகள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். நீதி நிலைநாட்டப்படுகிறது. இப்படி அவர்கள் களையப்படும்போது இயல்பாகவே ஊர் தூய்மை ஆகி விடுகிறது.

ஆ. நேர்முக மனநிலை

'என் தேவையை நிறைவு செய்!' என வருபவர்களின் தேவையை நிறைவு செய்வதும், 'நான் உன்மேல் பகையாய் இருக்கிறேன்' என்று சொல்பவரிடம் நட்பு பாராட்டுவதும் இங்கே நேர்முக மனநிலையாக முன்வைக்கப்படுகிறது. நாம் மற்றவர்களின் செயல்களுக்கு எதிர்செயல் புரிகின்றோம். ஃபோன் வருகிறது. பேசுகின்றோம். அழைக்கிறார்கள். போகின்றோம். சில நேரங்களில் பேசுவதில்லை. போவதில்லை. இவ்வாறாக, நாம் நேர்முகமாகவும் செயலாற்ற முடியும். எதிர்மறையாகவும் செயலாற்ற முடியும். எதிர்மறையாகச் செயலாற்றும்போது ஒருவரை நாம் இன்னும் குறைவுள்ளவராக்குகிறோம்.

'எனக்கு பசிக்குது!' என்று என்னிடம் வருபவருக்கு, நான் முகம் திருப்பினால், நான் அவரை இன்னும் அவரது பசியில்தான் வைத்திருக்கிறேன். ஆனால், அவருக்கு நான் உணவிட்டால் அவரை அவரது பசியிலிருந்து நான் விடுவிக்கின்றேன்.

நேர்முக மனநிலை மற்றவர்களின் குறையைக் களைவது மட்டுமன்றி நம்மையும் நிறைவாக்குகிறது.

இ. சமமான பார்வை

அனைத்தையும், அனைவரையும் ஒரே மாதிரி பார்க்கும் மனநிலை. இதுதான் கடவுள் மனநிலை. 'நல்லோர் மேலும் தீயோர் மேலும் கதிரவன் உதிக்கச் செய்யும், நேர்மையுடையோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்யும்' கடவுள் போன்ற மனநிலை. நம் வாழ்வில் நாம் மகிழ்ச்சியை இழக்கக் காரணமாக இருப்பது 'பார்ஷியாலிட்டி' - 'என்னைச் சார்ந்தவர்,' 'சாராதவர்,' 'பிடித்தவர்,' 'பிடிக்காதவர்' என்ற இருதுருவங்களாலேயே நாம் கட்டப்பட்டிருப்பது நம் பார்வையைச் சுருக்கி அழுக்காக்கி விடுகிறது.

'நான் ஆண் - நீ பெண்' என்று பார்க்கும்போது நான் என்னை உன்னிடமிருந்து பிரிக்கிறேன். ஆனால் 'நாம் மனிதர்கள்' என்று சொல்லும்போது நான் என்னை உன்னோடு இணைத்துக்கொள்கிறேன். இந்த சமமான பார்வையை அடைந்துவிட்டால் நம் வாழ்வில் நாம் கொண்டிருக்கும் அனைத்து மாயைகளும் தானாகவே மறைந்துவிடும்.

இறுதியாக, இயேசு கேட்கும் கேள்வி இதுதான்:

'மற்றவர்களுக்கும் மேலாக நீங்கள் செய்துவிடுவதென்ன?'

அவனும் அவளும் அப்படி இருக்கிறார்கள் என்றால் நானும் அப்படித்தான் இருக்க வேண்டுமா? நான் ஏன் இன்னும் கொஞ்சம் அதிகம் நல்லவராக இருக்கக் கூடாது?

இன்று நான் செய்ய வேண்டியது ஒன்றே: என் மொபைலின் டிஸ்க்கையும், என் வீட்டையும், என் ஆடைகளையும் 'க்ளீன்' ஆக வைத்துக்கொள்ள மெனக்கெடும் நான் கொஞ்ச நேரம் எடுத்து என்னை தூய்மையாக்க முயல்வேன்.

தூய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
அழுக்கு இலாத நிலை!