இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









மரியாள் இறைவனின் தாய் மற்றும் புத்தாண்டு பெருவிழா

தாய்மையுடன் புத்தாண்டில்

எண்ணிக்கை 6:22-27
கலாத்தியர் 4:4-7
லூக்கா 2:16-21

கிரகோரியன் காலண்டரின் முதல் நாளாகிய இந்த நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (1) இது ஆண்டின் தலைநாள். இன்று புத்தாண்டுப் பெருவிழா. புதிய குழந்தை, புதிய மலர், புதிய ஆடை, புதிய மனிதர், புதிய இடம், புதிய வீடு, புதிய வாகனம், புதிய வேலை என புத்துணர்ச்சி அளிக்கும் வரிசையில் புதிய ஆண்டும் அடக்கம். காலண்டர், டைரி என அனைத்தையும் புதிதாகத் தொடங்குகின்றோம்.  (2) இன்று கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள். இந்த நாள்தான் 'இயேசுவுக்கு' பெயர்சூட்டப்படும் நாள். 'பெயரில் என்ன இருக்கிறது?' எனக் கேட்கிறார் ஷேக்ஸ்பியர். ஆனால் பெயரில் நிறையவே இருக்கிறது. தனக்குச் சூட்டப்பட்ட பெயர்போலவே வாழ்ந்து முடிக்கிறார் இயேசு. நம் மீட்பராகின்றார். (3) இன்று மரியாளின் தாய்மையின் விழா. மூவொரு இறைவனின் இரண்டாம் நபரை திருவயிற்றில் தாங்கியதால் இறைவனின் தாய் என்ற நிலைக்கு உயர்கின்றார்.

2017 எப்படி இருக்கும்?

எண்களைக் கூட்டினால் 10 வருகின்றது. எண்ணியல்படி ஒன்று வருகிறது. நல்ல எண். முதல் எண். தொடங்கும் எல்லாம் வெற்றியாகட்டும். 2017ஆம் ஆண்டை சூழலியல் சுற்றுலா வளர்ச்சி ஆண்டு என அறிவித்திருக்கிறது. அன்றாடம் உணவுக்கே வழியில்லாத இடத்தில் சுற்றுலா ஒன்று வேண்டுமா? எனக் கேட்கலாம். நம் அன்றாட வேலை மற்றும் ஓட்டங்களுக்கு நடுவே கொஞ்சம் ஓய்வும் வேண்டும் என்பதை இந்த ஆண்டு நமக்கு உணர்த்துவதாக. அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் நம்ம டிரம்ப் முதல், ஆண்டிபட்டி கவுன்சிலர் அண்ணன் வரை எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்றும், இருக்கிற 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்கள் செல்ல வேண்டும் என்றும், நல்மாரி பொழிந்து வீடும், நாடும் செழிக்க இறைவன் அருள்கூர்வாராக.

'யோம் கிப்பூர்' நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே (காண். லேவி 9:22) இன்றைய முதல் வாசகம் (காண் எண் 6:22-27). இந்த ஆசீரின் இரண்டு முக்கிய கூறுகள் அருளும், அமைதியும். இந்த வார்த்தைகளை வைத்தே திருத்தூதர் பவுலும் பிற்காலத்தில் தன் கடிதங்களில் திருஅவையினரை வாழ்த்துகிறார் என்பதையும் நினைவில்கொள்வோம்.

  இந்த ஆசீரை இறைவனே மோசே வழியாக ஆரோனுக்கு கற்றுத் தருகின்றார். எபிரேயத்தில் 'ஆசீர்' என்றால் 'செல்வம்' அல்லது 'வளமை' என்பது பொருள். ஆக, ஒருவர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் இறைவனின் ஆசீர் பெற்றவர் என்று நாம் சொல்லலாம். அதற்காக செல்வம் இல்லாதவர்கள் எல்லாம் ஆசீர் இல்லாதவர்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த ஃபார்முலாவைத்தான் கால்வின் பயன்படுத்தி தன் சபையில் உள்ள எல்லாரையும் செல்வராக்கினார். எப்படி? கடவுள் உனக்கு ஆசீர் தருகிறார் என்றால் நீ செல்வந்தனாய் இருப்பாய். இதை அப்படியே கொஞ்சம் நீட்டி, நீ நன்றாக உழைத்து, செல்வம் சேர்த்தால், ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்று உணரலாமே என்று சொன்னார். இந்த பின்புலத்தில்தான் மேற்கத்திய ஐரோப்பாவில் தொழில்புரட்சி உருவானது.

தமிழ் மொழிபெயர்ப்பில் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது, 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!' என்பது 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' என்று இருக்க வேண்டும். ஒருவேளை எபிரேயத்தின் மொழிநடை எல்லாவற்றையும் பிரித்து எழுதுகிறதோ என்னவோ.

மேலும், எபிரேய வாக்கிய அமைப்பில் முதல் ஆசியில் மூன்று வார்த்தைகளும், இரண்டாம் ஆசியில் ஐந்து வார்த்தைகளும், மூன்றாம் ஆசியில் ஏழு வார்த்தைகளும் இருக்கின்றன. மூன்று - ஐந்து - ஏழு என ஆசீர் வளர்கிறது. ஆக, இது சும்மா 'நல்லா இரு!' என்று சொல்லப்பட்ட ஆசீர் அல்ல. மாறாக, யோசித்து, நிறுத்தி, நிதானமாக எழுதப்பட்டுள்ளது.

மூன்று ஆசிகள். ஒவ்வொரு ஆசியிலும் இரண்டு கூறுகள்.

1. 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர். இருந்தாலும், இங்கே அந்த பணியை இங்கே அருட்பணியாளர்தான் செய்கிறார். ஆக, அருட்பணியாளர் தன் கரத்தில் ஆண்டவரின் கரம் கொண்டு ஆசீரளிக்கின்றார். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. ஆக, ஆண்டவரின் பிரசன்னத்தில் கூட்டம் போடுவதற்கே இடமில்லை. ஒவ்வொருவரும் அவரின் பார்வையில் விலைமதிப்பு உடையவர். 'பராகா' என்பதை 'புகழ்வது' என்றும் 'ஆசீர்வதிப்பது' என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்திலும் இதை நாம் பார்க்கலாம்: 'லெட் அஸ் ப்ளஸ் தெ லார்ட்' என்னும் வாக்கியத்தில் 'ப்ளஸ்' என்பது மனிதர்கள் இறைவனைப் புகழ்வதையும், 'பழன பளஸ் யூ' என்னும் வாக்கியத்தில் 'ப்ளஸ்' என்பது இறைவன் மனிதர்களுக்கு ஆசீர்வதிப்பதையும் குறிக்கிறது. 'பராகா' என்பதை நாம் இரண்டாம் அர்த்தத்தில் எடுத்துக்கொள்வோம். இரண்டாவதாக, 'காத்தல்' என்பதை 'கண்களைப் பதித்தல்.' ஒரு ஆயன் தன் மந்தையைக் காக்கிறான் என்றால், அவன் தன் மந்தையின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கிறான்.

2. 'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும் பொருள் படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக் குறிக்கிறது. ஆக, ஆண்டவரின் ஒளி சூரியனின் ஒளி போல எல்லாருக்கும் பொதுவாக இல்லாமல், ஒவ்வொருவர் மேலும் அவரின் தனிப்பட்ட அருளாக ஒளிர்கிறது.

3. 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார்.

  இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன தோன்றுகிறது?

நான் என் உள்ளங்கையில் ஐஃபோனை வைத்திருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். எனக்கு வெளியில் இருப்பது ஐஃபோன். இந்த ஐஃபோனை தொட்டுக் கொண்டிருப்பது என் தோல். இந்த ஐஃபோனின் நிறையை, குளிர்ச்சியை, வெதுவெதுப்பை உணர்வது என் உள்ளுணர்வு அல்லது மூளை. ஆக, எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே என்று மூன்று எதார்த்த நிலைகள் உள்ளன. இறைவனின் ஆசிமொழி எனக்கு வெளியே தொடங்கி, என்மேல் ஒளிர்ந்து, எனக்குள் பாய்கின்றது. ஆக, இறைவனின் ஆசி முழுமையான ஆசியாக இருக்கிறது.

இதை ஆண்டின் முதல் நாளில் நாம் வாசிக்க என்ன காரணம்?

இறைவனின் ஆசி நமக்கு வெளியில் இருக்கவும் - அதாவது, நம் வெளிப்புற காரணிகளால் நமக்கு தீங்கு நிகழாமல் இருக்கவும், நம் மேற்புறத்தில் தொடர்ந்து, நம் உள்புறத்தில் அமைதியாக நிலைத்திருக்கவும் வேண்டும். இல்லையா?

இந்த ஆசியை ஆண்டின் முதல் நாள் மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் நாமும் ஒருவர் மற்றவருக்கு வழங்கலாம். வழங்குவதன் வழியாக நாமும் பெறலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா 4:4-7) கலாத்திய திருச்சபைக்கு தான் எழுதும் கடிதத்தில் சட்டம் மற்றும் தூய ஆவி என்ற இரண்டு கூறுகளை விளக்கும் பவுலடியார், சட்டத்தின் வழி பிறப்பவர்கள் அடிமைகள் எனவும், தூய ஆவி வழி பிறப்பவர்கள் உரிமைக் குடிமக்கள் எனவும் முன்வைக்கின்றார். சட்டத்திலிருந்து, தூய ஆவியானவரை நோக்கிய நம் பயணம் இயேசுவில் தொடங்குகிறது.

  காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேருமும் இடமும் தேவை. இந்த நேரத்தையே, பவுல், 'காலம் நிறைவுற்றபோது' என்றும், இந்த இடத்தையே, 'பெண்ணிடம்' என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார்.

'கடவுளின் மகன்.' இயேசுவை ஆண்டவர் என்றோ, கிறிஸ்து என்றோ அழைப்பதற்குப் பதிலாக 'கடவுளின் மகன்' என அழைக்கின்றார். இயேசுவின் இந்த கடவுளின் மகன் நிலையை ஏற்றுக்கொள்ளும் அனைவரும், அந்த நிலையில் பங்கேற்கின்றனர். இந்த நிலைதான் தூய ஆவி. இந்த நிலையினால்தான் நாமும் கடவுளை, 'அப்பா, தந்தையே' என அழைக்க முடிகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தை இன்று நாம் ஏன் வாசிக்கின்றோம்?

1. 'காலம்.' இன்று ஆண்டின் புதிய நாளைத் தொடங்குகிறோம். ஆண்டு அல்லது காலம் என்பது கடவுளுக்கும், நமக்கும் வௌ;வேறு எதார்த்தங்கள் அல்ல. காலம் கடவுளுக்கும், மனிதர்களுக்கும் பொதுவானது. ஏனெனில் கடவுளின் மகனே இந்தக் காலம் என்னும் நீரோட்டத்தினுள் இறங்கிவிட்டார்.

2. 'கடவுளின் மகன்.' இன்று அன்னை மரியாளை 'இறைவனின் தாய்' என்று கொண்டாடுகிறோம். இயேசு கடவுளின் மகன். ஆகையால், இந்த மகனை கருத்தாங்கிய மரியாள் கடவுளின் தாயாக மாறுகிறார்.

3. 'இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்!' - இது புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் நமக்கு நல்ல பாடம். நாம் யாருக்கும், எந்தப் பழக்கத்திற்கும், எந்த சூழலுக்கும் அடிமைகள் அல்லர். நாம் அப்படி யாருக்காவது அல்லது எதற்காவது அடிமையாக இருந்தால் அதை நாம் கண்டறிந்து அந்த அடிமைத்தளையிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். எந்த சின்ன நூற்கண்டும் நம்மை சிறைப்படுத்திவிடக் கூடாது.

அடுத்ததாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண் லூக் 2:16-21) 'மரியா இந்நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்' என வாசிக்கின்றோம். தனக்கு என்ன நடந்தாலும், தன்னைச் சுற்றி பல வியப்பான காரியங்கள் நடந்தேறினாலும் தன் மனத்தில் அனைத்தையும் சேமித்து சிந்திக்கின்றார் மரியா. மேலும், இயேசுவுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வும் இன்றைய நற்செய்தியில் நடந்தேறுகிறது.

மரியாளை இறைவனின் தாய் என்று எபேசு நகர திருச்சங்கம் அறிவித்தது (கி.பி. 434). நெஸ்டோரியஸ் என்பவர் இயேசுவை இறைமை-மனிதம் என இரண்டு கூறுகளாகப் பிரித்து, மனிதம் என்னும் இயேசுதான் மரியாளின் வயிற்றில் தோன்றினார் எனவும், மனிதரான இயேசுவுக்கே மரியாள் தாய் என்றும் மொழிந்தார். இதை எதிர்த்து விளக்கம் தருகின்ற திருச்சங்கம் மரியாளை 'இறைவனின் தாய்' என அறிவிப்பதில், இயேசுவின் இறைமைதான் அடிக்கோடிடப்படுகிறது. ஆக, இது இயேசுவின் இறைமை-மனிதம் சங்கம திருநாள்.

  இயேசு நம் அனைவரின் சகோதரர் என்ற அடிப்படையில் மரியாள் நம் ஒவ்வொருவரின் தாய் ஆகிறார் இன்று.

இன்று நம் தமிழ்நாட்டில் ஓர் அம்மாவின் மறைவிற்குப் பிறகு, நிறைய சின்ன அம்மாக்கள் உதயமாகிக்கொண்டிருக்கிறார்கள். சின்ன அம்மா, தோழி அம்மா, அக்கா என்ற விளிச்சொற்கள் எல்லாம் இன்று வெறும் உதட்டுச்சாயங்கள்தாம் என எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும், ஏதாவது ஓர் அம்மா வந்து நம்மை வழிநடத்த மாட்டார்களா என்பது சாமானியர்களின் ஏக்கமாக இருக்கிறது.

இந்த புதிய ஆண்டை இனிய ஆண்டாக வாழ இறைவனின் தாய் வைக்கும் ஏழு வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. எல்லாவற்றுக்கும் ஆச்சர்யப்படுங்க!

வானதூதரின் மங்கள வார்த்தையைக் கேட்ட மரியாவின் முதல் உணர்வு ஆச்சர்யம். 'இது எங்ஙனம் ஆகும்?'  (லூக் 1:34) என்னும் மரியாவின் வார்த்தைகள் அவரின் நம்பிக்கையின்மையில் உதித்த கேள்வி அல்ல. மாறாக, வியப்பில் உதித்த ஆச்சர்யக்குறி. தன்னந்தனியே அமர்ந்திருந்த ஒரு இளவலுக்குத் தோன்றிய தேவதூதன், 'நீ அப்படியாக்கும்! இப்படியாக்கும்! நீ அப்படி இருப்ப! இப்படி இருப்ப!' என அடுக்கிக்கொண்டே போனபோது அந்த இளவல் மௌனமாக ஒரு புன்னகை பூக்கின்றாள். அனைத்தையும் வியந்து பார்க்கின்றாள். நாம் வளர வளர இழந்துபோன ஒரு அற்புதமான உணர்வு 'ஆச்சர்யம்'. இரயில் ஏன் முன்னால போகுது? செடி ஏன் பச்சையா இருக்கு? பஸ் போகும்போது மரங்கள் ஏன் ஓடுகின்றன? அது ஏன்? இது ஏன்? என்று அனைத்தையும் பற்றி கேள்வி கேட்ட நாம் இன்று எதைப்பற்றியும் கேள்வி கேட்க மறுக்கின்றோம். நம் உள்ளத்தில் ஆச்சர்யம் போய் இன்று சந்தேகம் வந்துவிட்டது. சந்தேகத்தின் உடன்பிறப்பு எல்லாம் தெரியும் என்ற மனநிலை.

  மரியாள் மாதிரி எல்லாவற்றுக்கும் ஆச்சர்யப்படுவோம் இந்த புதிய ஆண்டில்.

'சார், உங்களுக்கு சுகர் இருக்கு!' 'மேடம், உங்க ப்ரஸர் கூடியிருக்கு!' என்று யார் என்ன சொன்னாலும், 'அப்படியா!' என வியந்து பார்ப்போம்.

2. சரண் அடையுங்க!

வாழ்வின் எதார்த்தங்கள் புரியாதபோது அவற்றை எதிர்கொள்ள மிகச்சரியான வழி அவற்றிற்குச் சரணாகதி ஆவதே. 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே நிகழட்டும்!' (லூக் 1:38) என சரணடைகின்றார் மரியாள். நாம் கேட்கும் பல கேள்விகளுக்கு நம்மிடம் விடை இல்லை. அல்லது நாம் விரும்பும் விடை இல்லை. ஒரு விடையே அடுத்த கேள்வியாகிவிடுகிறது சில நேரங்களில். விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதில் நேரம் மற்றும் ஆற்றல் விரயமாகிறது.

'அவன் ஏன் என்னைப் பார்த்து இப்படிச் சொன்னான்?' என்ற கேள்விக்கு நான் விடை தேடத் தொடங்கி, இறுதியில் அப்படிச் சொன்னவனை என்னால் அன்பு செய்ய முடியாமல் போய்விடுகிறது. 'அவன் ஏன் இப்படி இருக்கிறான்?' 'எனக்கேன் இப்படி நடக்கிறது?' 'அவள் நல்லவளா?' 'அடுத்து என்ன நடக்கும்?' 'நான் இப்படி செய்தால் அப்படி இருக்கலாமா?' என கேள்விகள் தவிர்த்து மரியாளின் சரணாகதி மனம் கொள்தல் இரண்டாம் பாடம்.

3. மனிதர்களை நாடி ஓடுங்க!

காலையில் நாம் தொடங்கும் வாழ்க்கை ஓட்டம் இரவு ஆகியும் இன்று முடியாமல் போகிறது. பணம், பொருள், பதவி, புகழ், பெயர் என இவற்றை நாம் தேடி ஓடுகிறோம். ஆனால், நாம் எதைத் தேடி ஓட வேண்டும்? மனிதர்களை அல்லவா.

கபிரியேல் தூதரின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மரியாள் நேராக எருசலேம் ஆலயத்திற்கோ, தலைமைக்குரு அல்லது ஆளுநரின் அலுவலகங்களுக்கோ ஓடவில்லை. மாறாக, தன் உறவினரான எலிசபெத்தின் வீட்டை நோக்கி ஓடுகின்றார். ஒரு பிள்ளைத்தாங்கி (பிள்ளைத்தாச்சி) மற்றொரு பிள்ளைத்தாங்கியை நோக்கி ஓடுகின்றார். சென்ற அவர் தன் பெருமை பற்றிப் பேசாமல் எலிசபெத்தை வாழ்த்துகின்றார்.

மனித உறவு மேம்பட மிக முக்கியமான ஒன்று, 'அடுத்தவருக்கும் எனக்கும் எது பொதுவானது' என்று பார்க்கும் மனநிலைதான். 'நான் உன்னைவிட பெரியவன், படித்தவன், தெரிந்தவன்' என்ற நிலையில் வேற்றுமையை மையப்படுத்தி நான் மற்றவரோடு உறவை வளர்க்க முடியாது.

'நான் மெசியாவின் அம்மாவாக்கும்!' 'நீயோ முன்னோடியின் மகன்தானே!' என்று தன் நிலையை உயர்த்தி, எலிசபெத்து நிலையை தாழ்த்தவில்லை மரியாள். 'உன் நிலையில் நீ பெரியவள்!' என அவருக்கு உரியதை அவருக்கு கொடுக்கின்றார். 'நீயும், நானும் இறைத்திட்டத்தால் வழிநடத்தப்படுபவர்கள்' என்ற பொதுப்பண்பில் மரியாள் எலிசபெத்தோடு தன்னை இணைத்துக் கொள்கின்றார்.

மேலும், தன்னை விலக்கி விட நினைத்த யோசேப்பின்மேல் எந்த வெறுப்பும் இல்லாமல் வாழ்கின்றார் மரியா. ஆக, பரந்த உள்ளம் கொண்ட மரியா அனைவரையும் தன் அன்புக் கரத்தால் தழுவிக்கொள்ள நினைக்கின்றார்.

4. பாத்ரூம்லயாவது பாடுங்க!

எலிசபெத்தோடு அன்பு பாராட்டும் மரியாள் தன் உள்ளம் நிறை உணர்வுகளைப் பாடலாக வடிக்கின்றார். 'ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது' (1:47) என்று பாடுகின்றார் மரியாள். மரியாளின் பாடல் கடவுள் வரலாற்றில் நிகழ்த்திய அனைத்து புரட்டிப் போடுதல்களையும் ஒருசேரப் பதிவு செய்கின்றது. இறுதியாக, 'இஸ்ரயேலுக்குத் துணையாக ஆண்டவர் இருந்து வருகிறார்' என பாடலை நிறைவு செய்கிறார் மரியாள்.

'வாயில் பாடலை ஹம் செய்து கொண்டிருப்பவர்களை சாத்தான் நெருங்காது!' என்பது போர்த்துகீசிய பழமொழி.

பாடல்கள் மற்றும் நமக்கு இசை பிடிக்கக் காரணம் அவைகளுக்கு நம் மனத்தை ஆட்கொள்ளும் திறன் உண்டு என்பதால்தான். பாடலின் ஒற்றைச் சொல் கூட நம் கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது.

இந்தப் புதிய ஆண்டில் நல்லதோ, கெட்டதோ அதைப் பாடலாக பாடிவிடுவோம் - பாத்ரூம்லயாவது!

5. இணைந்து தேடுங்க!

காணாமல் போன 12 வயது இயேசுவை தேடுகின்றார் மரியாள். இந்தத் தேடலில் யோசேப்பும் உடன் நிற்கின்றார். மனித குலத்தின் பெருமுயற்சிகள் எல்லாம் கூட்டு முயற்சிகளே. மூன்று ஞானியர் விண்மீன் வழிகாட்டுதலில் இயேசுவைக் கண்டதும் கூட்டுமுயற்சியாலே.

இன்று நாம் தனிமரங்களாக வாழ நினைக்கின்றோம். நான் யாரையும் சாராதவன், சாராதவள் என்று தன்னந்தனியாக நிற்க நினைக்கின்றோம். ஆனால், அது நம்மால் இயலாத ஒன்று. நாம் இருப்பதே அடுத்தவரின் இருப்பால்தான்.

கணிணியை இயக்கும் ஒரு மென்பொருளின் பெயர் 'உபுந்து.' 'உபுந்து' என்றால் ஸ்வாகிலி மொழியில், 'நான் இருக்கிறேன். ஏனெனில், நாம் இருக்கிறோம்' என்பது பொருள். 'நான்' என்று என்னை அடையாளப்படுத்தக்கூட, 'நீ' அல்லது 'அவர்;' என்ற ஒருவர் தேவைப்படுகிறார்.

இதையே மேலாண்மையியலில், ஒன்றும், ஒன்றும் மூன்று என்றும், ஒருங்கியக்கம் என்றும் சொல்கின்றனர்.

6. தூலிப்ஸ் விதை போல இருங்க!

எல்லா மலர்களுக்கும் விதைகள் உண்டு. ஒவ்வொரு மலரின் விதையும் அந்தந்த மலரை மட்டுமே உருவாக்க முடியும். உங்க கைநிறைய நான் தூலிப்ஸ் விதைகளைக் கொடுத்து, ரோஜா மலர் கொண்டு வாங்க என்று சொன்னால், உங்களால் உருவாக்க முடியுமா? அழுதாலும், புரண்டாலும் தூலிப்ஸ் தூலிப்ஸை மட்டுமே உருவாக்க முடியும். அப்படி இருக்க மனிதர்கள் மட்டும்தான், 'நான் அவரைப்போல இருக்க வேண்டும். இவளைப் போல இருக்க வேண்டும்' என மெனக்கெடுகிறோம்.

'விஜய் வீட்ல இருக்கு, சூர்யா வீட்ல இருக்கு, தனுஷ் வீட்ல இருக்கு, உங்க வீட்ல இருக்கா' என கேட்கும் டேபிள்மேட் விளம்பரம் முதல், நாம் குளிக்கும், துவைக்கும் சோப் வரை நாம் அடுத்தவரைப் போல இருக்க விரும்புகிறோம்.

அவனாக, அவளாக நான் இருக்க முனைந்து கொண்டே கடைசியில் என்னைப்போல இருக்க என்னால் முடியாமல்போய் விடுகிறது.

மரியாள் இறுதி வரை தன்னைப்போல மட்டுமே வாழ்ந்தார்.

'மெசியாவின் தாய்' என்ற புதிய நிலை வந்துவிட்டதால் அவர் உருமாறிவிட விரும்பவும் இல்லை. உருமாறவும் இல்லை.

7. பூக்களிடம் கற்றுக்கொள்ளுங்க!

என்னதான் பூக்கள் அழகாக காலையில் பூத்துக் குலுங்கினாலும் மாலையில் அவை கீழே விழத்தான் வேண்டும். கீழே விழுந்தால்தான் புதிய விதைகளை அவைகள் உருவாக்க முடியும். எனக்கு இந்த காம்பு பிடித்திருக்கிறது என அவைகள் செடிகளையே பற்றிக்கொண்டிருந்தால் அவைகள் வதங்கிவிடும்.

கைகளை விரித்துக் கொடுப்பதுதான் மரியாள் சொல்லும் இறுதிப் பாடம்.

நாம் சேமித்து உழைத்து வாங்கிய ஒரு பைக் அல்லது கார் மேல் ஒரு ஸ்க்ராட்ச் விழுந்து அதை மெக்கானிக்கிடம் எடுத்துச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அவர் அதை கடா முடா என்று கையாள்வார். அது நமக்கே வலிப்பது போல இருக்கும். ஆனால், நம்மால் என்ன செய்ய முடியும்? என்னதான் பாதுகாத்து பொக்கிஷமாக வைத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் அதை நாம் விடத்தான் வேண்டும். அப்படி விடுவதற்கு தயாராக இருப்பவர்தான் மகிழ்ச்சியை சொந்தமாக்க முடியும்.

கல்வாரியில் தன் மகனை விரித்துக்கொடுக்குமுன், மரியா தன் உள்ளத்திலிருந்து இயேசுவை விரித்துக் கொடுத்தார்.

எடுத்து வைத்தல்போல, விரித்துக் கொடுத்தலும் இனிய செயலே!

இறுதியாக,

இளவல் ஒருத்தி கடற்கரை ஓரம் நடந்து கொண்டிருந்தாள். தூரத்தில் ஏதோ ஒரு குழந்தை விளையாடுவது போல தெரிந்தது. அந்தக் குழந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். குழந்தை கரையிலிருந்து எதையோ கடலுக்குள் தூக்கிப் போடுவது தெரிந்தது. கரைக்கும் நீருக்குமாய் குழந்தை ஓடிக்கொண்டிருந்தது. அதன் கையில் நட்சத்திர மீன். 'என்ன செய்கிறாய்?' என்று கேட்கிறாள் இளவல். 'இந்த நட்சத்திர மீனை கடலில் தூக்கி போடுகிறேன். கரையில் இருந்தால் அது இறந்துவிடும்' என்கிறது குழந்தை. 'கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஒதுங்கியிருக்கின்றன. அனைத்தையும் உன்னால் தூக்கிப் போட முடியுமா?' எனக் கேட்கிறாள் இளவல். 'அனைத்தையும் தூக்கிப் போட முடியாதுதான். ஆனால், நான் தூக்கிப்போடும் ஒவ்வொரு மீனும் மீண்டும் வாழ ஆரம்பிக்கிறதே!' என்று சொல்லி தொடர்ந்து கரையை நோக்கி, கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது குழந்தை.

கடலுக்கும், கரைக்கும் நடுவில் நாம் நிற்கிறோம் இன்று.

நான் செய்யும் ஒவ்வொரு செயலும் உலகத்தையே மாற்றவில்லை என்றாலும், என்னையும், என் உடனிருப்பவரையும் மாற்றும். பெரிய மாற்றங்கள் சிறியவற்றில்தான் தொடங்குகின்றன.

புத்தாண்டில் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைப்போம். ஒவ்வொரு அடியிலும் அன்னை மரியாள் கற்றுத்தரும் தாய்மை நிரம்பட்டும்.

இத்தாலியன் மொழியில் ஒரு விநோதமான பழமொழி உண்டு:

'உங்கள் கவலைகளெல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல மறைந்து போகட்டும்!'

மகிழ்ச்சி...மகிழ்ச்சி மட்டுமே பிறக்கட்டும் உங்களுக்கு இந்த புதிய ஆண்டில்!