இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு

நமக்காக, நம்மோடு!

எசாயா 7:10-14
உரோமையர் 1:1-7
மத்தேயு 1:18-24

திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் மெழுகுதிரி 'அமைதி' என்ற மதிப்பீட்டைக் குறிக்கிறது. இயேசுவின் வாழ்க்கை 'அமைதி' என்ற வார்த்தையில் தொடங்கி, அதே வார்த்தையில் நிறைவு பெறுவதாக லூக்கா எழுதுகின்றார். இயேசுவின் பிறப்புச் செய்தி இடையர்களுக்கு அமைதியின் செய்தியாக வழங்கப்படுகிறது. தான் விண்ணேற்பு அடையும் முன் இயேசு தன் சீடர்களுக்கு தன் அமைதியை விட்டுச் செல்கின்றார்.

அமைதி நமக்கு வெளியில் இருந்து கிடைக்கக் கூடியதா? அல்லது நம் உள்ளேயே நாம் கண்டுகொள்ளக் கூடியதா?

இதை மாற்றியும் கேட்கலாம்.

நம் அமைதி கெடுவது நமக்கு வெளியே நிகழ்வும் நிகழ்வுகளாலா? அல்லது நமக்கு உள்ளே நிகழும் நிகழ்வுகளாலா?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 7:10-14) யூதா நாட்டை போர் மேகம் சூழ்ந்திருக்கும் நேரத்தில் ஆகாசு அரசன் அமைதி இழந்த சூழலை வாசிக்கின்றோம். வெளியிலிருந்து வந்த பகைவர்களால் தன் அமைதியை இழந்தார் ஆகாசு. ஆண்டவரிடம் அடையாளம் கேட்கத் தயங்கிய ஆகாசுக்கு 'இம்மானுவேல்' அடையாளம் தரப்படுகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 1:18-24) மற்றொரு சூழலை வாசிக்கின்றோம். தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மனைவி கருத்தாங்கியிருப்பதை உணர்ந்து அவரை மறைவாக விலக்கிவிடும் நோக்கோடும், கலங்கிய உள்ளத்தோடும் தூங்கச் செல்கின்றார் யோசேப்பு. மனதில் கலக்கம் எழும்போது மன அமைதி குலைந்துவிடுகிறது.

வெளியிலிருந்து வரும் காரணிகளாலும், உள்ளிருந்து எழும் காரணிகளாலும் கலைக்கப்படும் மன அமைதியை மீட்டுத்தருபவர் யார்?

இவரைத் தான் நாம் எதிர்பார்த்திக் காத்திருக்கிறோம்.

'தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்து' என்ற தன் நற்செய்தியைத் தொடங்குகின்ற (1:1) மத்தேயு நற்செய்தியாளர், இன்றைய நற்செய்திப் பகுதியில் இயேசுவை 'தாவீதின் மகன்' என்பதை முன்வைக்கின்றார். மரியாவின் கணவர் யோசேப்பை தாவீதின் வழி மரபினராகக் காட்டியபின் அந்த வழியில் இயேசுவின் பிறப்பை எழுதுகின்றார்.

இயேசுவின் பிறப்பு வரலாறு மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தி நூல்களில் மட்டுமே காணக்கிடக்கிறது. இந்த இரண்டு வரலாறுகளுமே ஒன்றிற்கு ஒன்று முரண்படுகின்றன என்று சொல்வதைவிட, ஒன்றை ஒன்று நிரப்புகின்றன என்று நாம் எடுத்துக்கொள்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை கதையாடல் கூறுகளைக் கொண்டு ஆய்ந்து பார்ப்போம்.

'ஒரு ஊர்ல ஒரு ஆணும் பெண்ணும் இருந்தார்கள்' என்ற கதையாடல் பாணியில் தொடங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

'இயேசுவின் தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது' என கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது ஆசிரியரின் குரல். 'இயேசுவின் தாய் மரியா' என்று அவர் எழுதும் விதம் கதையில் வரப்போவதை நமக்கு முன்உரைப்பதாக இருக்கிறது. அதாவது, யோசேப்பின் துணையில்லாமலேயே நிகழ்ந்தது இயேசுவின் பிறப்பு என்று சொல்ல வருகின்றார் ஆசிரியர். மேலும் மரியா கருவுற்றிருப்பதையும், அவர் தூய ஆவியால்தான் கருவுற்றிருப்பதாகவும் சொல்கின்றார் அவர். ஆக, மரியா கருவுற்றிருப்பது மரியாவுக்கும், ஆசிரியருக்கும் தெரியும். ஆனால், யோசேப்புக்குத் தெரியாது.

இங்கேதான் வருகின்றது பிரச்சினை.

'யோசேப்பு ஒரு நேர்மையாளர்' என யோசேப்பு அறிமுகப்படுத்தப்படுகின்றார்.

'நேர்மை' என்பது மத்தேயு நற்செய்தியில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. யார் நேர்மையாளர்? 'ஆண்டவரின் சட்டத்திற்குக் கீழ்ப்படிபவரே நேர்மையாளர்!'

நிச்சயம் செய்யப்பட்டாலே யூத மரபில் திருமணம் நடந்துவிட்டதாக பொருள். கணவரின் துணையின்றி ஒரு பெண் கருவுற்றிருந்தார் என்றால் அவரை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசேயின் சட்டம். இயேசுவின் சமகாலத்தில் இந்தச் சட்டம் நடைமுறையில் இல்லை என்றாலும் மிகப் பெரிய அபராதம் கட்டவேண்டும் என்ற வழக்கம் இருந்தது. அவ்வாறு ஒருவர் செய்யும்போது மற்றவர்கள் அவரை இகழ்வர்.

மரியாவை இத்தகைய இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பவில்லை யோசேப்பு.

'நேர்மையாளர்' என்றால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமே! ஆனால், யோசேப்பு ஏன் நிறைவேற்றவில்லை?

வெளியே இருந்து கொடுக்கப்பட்ட சட்டத்தையும் தாண்டிய மனச்சான்றின் சட்டத்தையும், சக மனிதரின் மாண்பையும் உயர்வாக நினைக்கின்றார் யோசேப்பு.

இருந்தாலும், மரியாவை விலக்கிவிட திட்டமிடுகின்றார்.

அந்த இரவில் ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றுகின்றார்.

லூக்கா நற்செய்தியாளர் காட்டும் மரியா அதிகம் பேசுபவராக இருக்கின்றார். ஆனால், யோசேப்பு இறுதிவரை மௌனியாகவே இருக்கின்றார். யோசேப்பு வான தூதரிடம் பேசவில்லை. வானதூதர் மட்டுமே இங்கே பேசுகின்றார்.

'தாவீதின் மகனே' என யோசேப்பை அழைக்கின்றார் தூதர். இந்த அடைமொழி இயேசுவுக்கும் பொருந்தும் என்பது முன்னோட்டமாகக் காட்டப்படுகிறது.

மரியா பற்றியும், பிறக்கப்போகும் குழந்தை பற்றியும் அவருக்கு அறிவிக்கின்றார் தூதர்.

இன்றைய நற்செய்திப் பகுதியில் குழந்தைக்கு இரண்டு பெயர்கள் வழங்கப்படுகின்றன:

அ. 'யோசுவா' - 'இயேசு'

'யோசுவா' என்றால் 'யாவே மீட்கின்றார்' அல்லது 'காக்கின்றார்' என்பது பொருள். முதல் ஏற்பாட்டில் மோசேயைத் தொடர்ந்து இஸ்ரயேலுக்குத் தலைமை ஏற்கும் யோசுவா தனது படைத்திறத்தால் மக்களை வழிநடத்தி பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் கூட்டிச் சேர்க்கின்றார். இதே பெயரை இயேசுவுக்கு வழங்குவதன் வழியாக இயேசுவில் நிகழும் மீட்பு அடிக்கோடிடப்படுகின்றது. 'இயேசு' என்ற வார்த்தை நமக்குச் சொல்லும் பாடம் 'நமக்காக கடவுள்' என்பதுதான்.

ஆ. 'இம்மானுவேல்' - 'கடவுள் நம்மோடு'

எசாயா இறைவாக்கினர் ஆகாசு அரசனுக்கு வழங்கிய அடையாளத்தை இங்கே மேற்கோள் காட்டும் மத்தேயு இயேசுவை இம்மானுவேலராகவும், கன்னியிடம் பிறந்தவராகவும் காட்டுகின்றார். 'கன்னி' என்ற சொல்லை 'கன்னித்தன்மை உடையவர்' என்றும் 'இளம்பெண்' என்றும் பொருள் கொள்ளலாம். மரியாவின் கன்னித்தன்மை பற்றிய கோட்பாடுகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருப்பது இந்தப் பொருள் மாற்றமே.

தூக்கத்திலிருந்து எழும் யோசேப்பு தன் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்கின்றார்.

கலக்கத்தோடு உறங்கச் சென்றவர் மன நிம்மதியோடு விழித்தெழுகின்றார். ஓர் இரவில் என்ன நடக்கும்? என்று நாம் அடிக்கடி கேட்போம். ஆனால், ஓர் இரவில் என்னவும் நடக்கலாம் என்பது நமக்கு இங்கே தெரிகிறது.

ஆக, நம் வாழ்வில் நாம் அமைதியைக் கண்டடைய இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டு வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன:

அ. இயேசு - கடவுள் நமக்காக

ஆ. இம்மானுவேல் - கடவுள் நம்மோடு

இவற்றை நாம் எப்படி நம் வாழ்வியல் செயல்பாடுகளாக மாற்றுவது?

1. எல்லாமே நம்மால் முடியாது!

'எல்லாமே என்னால் முடியும்!' என்று சொல்கிறது நம் குட்டி மூளை. ஆனால், அதற்கே தெரியும் அது பொய் என்று. இருந்தாலும் அது அந்த மாயையிலே வாழ்கிறது. நமக்குத் தெரியாதவைகளும், நாம் புரிந்து கொள்ள முடியாதவைகளும் இந்த உலகில் இருக்கின்றன என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுளைப் பற்றி மட்டுமல்ல, ஒருவர் மற்றவரைப் பற்றியே நம்மால் அறிந்து கொள்ள முடியாதவைகள் நிறைய இருக்கின்றன. ஆகையால்தான், தாகூரின் அமைதி பற்றிய கருத்தும் கூட, 'மாற்ற இயல்வதை மாற்றவும், அதற்கு மேல் அதை ஏற்கவும் வரம்தா!' என இறைவனிடம் வேண்டுகிறது. ஆகாசு அரசன் தனக்கு எல்லாம் முடியும் என நினைக்கிறான். ஆனால், இறைவனின் துணை இன்றி எதுவும் நடக்காது என்பது எசாயாவால் சுட்டிக்காட்டப்படுகிறது. யோசேப்பும்கூட இப்படித்தான் நினைக்கின்றார். தன் வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வு தன்னிடமே இருப்பதாக நினைக்கிறார். நம்மையும் தாண்டிய தீர்வுகளை நாம் அடையாளம் காணுதல் அவசியம்.

2. நேர்மை என்றால் என்ன?

நேர்மை என்றால் திருச்சட்டங்களைக் கடைப்பிடிப்பது அல்ல. நான் வண்டியில் செல்கிறேன். சிகப்பு விளக்கு எரிகிறது. நிற்கிறேன். பச்சை விளக்கு எரிகிறது. செல்கிறேன். அந்த நேரம் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்கின்றார். பச்சை எரிவதால் நான் செய்வது சரி என்று சொல்லி அவர் மேல் நான் மோதலாமா? இல்லை. அன்றாட சட்டங்களையும் தாண்டி நம் மனச்சான்றும், பிறரது மாண்பும் இருக்கின்றது என்பதை யோசேப்பின் நேர்மை சுட்டிக்காட்டுகின்றது.

3. கடவுள் நமக்காக

நாம் வாழும் இந்த உலகில் நாம் காணக்கூடியவைகளும், காணக்கூடியவர்களும் நமக்கு அர்த்தம் தர இயலாதபோது, காண முடியாத இறைவன் துணைவருகின்றார். பாவங்களிலிருந்து நம்மை மீட்கின்றார். மீட்பு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்கிறோம். மீட்பு என்றால் கட்டின்மை. யாருக்கும், எவற்றிற்கும் அடிமையாக இல்லாத ஒரு நிலையே மீட்பு. 'பாவம் செய்யும் யாவரும் பாவத்திற்கு அடிமை' என்கிறார் இயேசு. அதாவது, நாம் எதற்காவது அடிமையாக இருந்தால் நாம் அது பற்றியே சிந்திக்கின்றோம். ஒரு வேலைக்காரன் எந்நேரமும் தன் தலைவன் பற்றியே சிந்திக்கின்றான் என்றால் அவன் அவருக்கு அடிமையாக இருக்கிறான். நாம் ஒவ்வொருவருமே எந்தவித கட்டுக்களும் இல்லாமல் இந்த உலகிற்கு வந்தவர்கள். ஆனால், நாமே விரும்பி பல கட்டுக்களை ஏற்றுக்கொள்கின்றோம். கட்டின்மையில் இருக்க இயேசு நம்மைத் தூண்டுகின்றார். கட்டின்மையே அமைதிக்கான முதல் படி.

4. கடவுள் நம்மோடு

இந்த வார்த்தை நாம் கொஞ்சம் கவனமாகப் படிக்க வேண்டும். 'கடவுள் நம்மோடு' என்றால், 'கடவுள் அவர்களோடு இல்லை' என்று பொருள் அல்ல. இங்கே முன்னிலைப்படுத்தப்படுவது கடவுளின் உடனிருப்பே. போர்க்காலத்தில் யாரும் இல்லை என்ற திக்கற்ற நிலையில் இந்த செய்த ஆகாசுக்கு பெரிய உடனிருப்பாக இருக்கின்றது. கடவுள் நம்மோடு என்றால் நம் செயல்கள் கடவுளுக்குரிய செயல்களாக இருக்க வேண்டும். நான் ஒளியோடு இருக்கிறேன் என்றால் அங்கே இருளுக்கு இடமில்லை. ஒளியோடும், இருளோடும் என்னால் ஒரே நேரத்தில் இருக்க முடியுமா? இல்லை.

5. ஏற்றுக்கொண்டார்!

'கனவில்தானே வந்தது' என கடவுளின் செய்தியை ஒதுக்கிவிடவில்லை யோசேப்பு. 'அறிகுறிகளும் அற்புதங்களும் அவற்றை நம்புபவர்களுக்கே நடக்கும்' என்கிறார் பவுலோ கோயலோ. யோசேப்பு சிறந்த நம்பிக்கையாளர். கடவுளின் பிறப்பு ஓர் அற்புதமாகவே நடக்கும் என்பதை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார். நம்பிக்கைக்கு எதிராக இருப்பது சந்தேகம் அல்லது கடின உள்ளம். இவை இரண்டும் இல்லை யோசேப்பிற்கு. சந்தேகமும், கடின உள்ளமும்கூட நம் வாழ்க்கையில் அமைதியைக் கெடுத்துவிடுகின்றன.

இறுதியாக,

நம் மனம் ஒரு அமைதியான நீர்நிலை. அதில் சில நேரங்களில் கற்கள் விழும். விழுகின்ற கற்கள் மேலோட்டமாக அலையை உருவாக்கி நீர்நிலையின் அமைதியில் கலக்கம் உண்டாக்கும். ஆனால், மீண்டும் நீர்நிலை அமைதிக்குத் திரும்பும். நம் வாழ்வில் எல்லாமே நல்லா இருக்கும், அமைதியாக இருக்கும் என்ற போலியான வாக்குறுதியை இன்று இயேசு தரவில்லை. அமைதியின்மைக்கு இதுவே மருந்து என்று அவர் எதையும் விட்டுச்செல்லவில்லை.

ஆனால், 'நமக்காக, நம்மோடு அவர்' என்பதே அவரின் வாக்குறுதி.