இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு

இயல்பு மாற்றம்!

எசாயா 11:1-10
உரோமையர் 15:4-9
மத்தேயு 3:1-12

ஜென் துறவி ஒருவரிடம் சீடராகச் சேர வருகின்றாள் ஒருத்தி:

'நான் தியானம் செய்ய வேண்டும்!'

'வா!'

'ஜென் எப்படி இருக்கும்?'

'அங்கே என்ன தெரிகிறது?'

'மலைகள்'

'இங்கே?'

'ஆறுகள்'

'தியானத்திற்கு முன் மலைகள் மலைகளாகவும், ஆறுகள் ஆறுகளாகவும் தெரியும். தியானத்தின்போது மலைகள் ஆறுகளாகவும், ஆறுகள் மலைகளாகவும் தெரியும். தியானத்தின் முடிவில் மலைகள் மலைகளாகவும், ஆறுகள் ஆறுகளாகவும் தெரியும்!'

'முன்பிருப்பதே பின்னும் தெரியுமென்றால் தியானம் எதற்கு?'

'நீ இருப்பதே தியானநிலைதானே!'

ஞானம் பெற்றாள் சீடத்தி.

திருவருகைக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் நாம் ஏற்றும் மெழுகுதிரி, 'அமைதி' என்ற பண்பைக் குறிக்கிறது.

பிறக்கும்போது நாம் அமைதி நிலையிலிருந்து வருகிறோம்.
இறக்கும்போது நாம் அமைதி நிலைக்கு கடக்கிறோம்.
இரண்டிற்கும் இடையில் நாம் அமைதி இன்றி இருக்கிறோம்.
- இப்படிச் சொன்னால் நீங்க என்னை அடிக்காம விட மாட்டீங்க!

'அமைதி' என்ற இந்த பண்பை மதிப்பீட்டை நாம் எப்படி புரிந்து கொள்வது? அமைதியைப் பற்றி இன்றைய இறைவாக்கு வழிபாடு சொல்வது என்ன?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத்தேயு 3:1-12) தன்னிடம் திருமுழுக்கு பெற வந்த பரிசேயர் மற்றும் சதுசேயரைப் பார்த்து, 'விரியன் பாம்பு குட்டிகளே!' என்கிறார் திருமுழுக்கு யோவான். காட்டில் தீ மூண்டால் அந்த வெப்பத்திற்கு ஈடுகொடுக்காமல் பாம்புகள் வேகமாக காட்டைவிட்டு வெளியேறும். 'மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' என்ற போதனையைக் கேட்ட மக்கள் (பரிசேயர், சதுசேயர் உள்பட) திருமுழுக்கு யோவானை நோக்கி ஓடி வருவதால் அவர் இப்படிச் சொல்கின்றார்.

'மனம் மாறுங்கள்!' என்பதன் பொருள் என்ன?

'மனம் மாறுவது' என்பதை பல நேரங்களில் நாம் பாவத்திலிருந்து மனம் திரும்புதல் என்றே நினைக்கிறோம். உதாரணத்திற்கு, தன் 35ஆவது வயதில் தூய அகுஸ்தினார் மனம் மாறினார் என்று சொல்லும் போது, அந்த வயதில் அவர் தன் பாவத்திலிருந்து மனம் திரும்பினார் என்றே பொருள்கொள்கின்றோம்.

பாவத்திலிருந்து திருந்துதல் மட்டும் மனம் மாறுவது அல்ல.

நீங்க என்னை உங்களோடு கடைக்கு வரச் சொல்றீங்க என வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களோடு வர எனக்கு மனமில்லை. ஆகையால், 'நான் வரல!' என்று உடனடியாக சொல்லி விடுகிறேன். கொஞ்ச நேரம் கழித்து, 'நானும் வரேன்!' என்று சொன்னால், அங்கே 'நான் மனம் மாறிவிட்டேன்' என்று அர்த்தம்.

கடவுள் இஸ்ரயேல் மக்கள் மேல் கோபப்படுகின்றார். அவர்கள் பொன்னாலான கன்றுக்குட்டியை வணங்கியதால் அவர்களை அழிக்க நினைக்கின்றார். ஆனால் மோசேயின் பேச்சைக் கேட்டவுடன் மனம் மாறுகிறார் (காண். விப 32).

'மனம் மாறுவது' என்பதற்கு 'மெட்டனோயா' என்ற கிரேக்க பதம் பயன்படுத்தப்படுகிறது. இதன் எபிரேய பதம் 'சுப்' - அதாவது, போகின்ற வழியை அப்படியே மாற்றுதல். பாவ வழியோ, பாவம் இல்லாத வழியோ, 'உங்கள் வழியை மாற்றுங்கள்' என்கிறார் திருமுழுக்கு யோவான்.

இதை நாம் கொஞ்சம் மாற்றி, 'மனம் மாறுவது' என்றால் 'இயல்பு மாறுவது' என்று பொருள் கொள்ளலாம்.

அதாவது, 35ஆவது வயது நிறைவில் (எனக்கும் 35 வயது ஆகப்போகிறது!) அகுஸ்தினாரின் இயல்பு மாறுகிறது.

கடைக்குச் செல்வதற்காக என் இயல்பு மாறுகிறது.

மக்களை அழிப்பதிலிருந்து கடவுளின் இயல்பு மாறுகிறது.

'இயல்பு மாற்றம்!' என்றால் என்ன?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசாயா 11:1-10) அதற்கான விளக்கம் இருக்கிறது.

'நீதியுள்ள அரசரின் வருகை' பற்றி இறைவாக்குரைக்கும் எசாயா மிக அழகான உருவகங்களைப் பதிவு செய்கின்றார்:

'ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும். அக்குட்டியோடு சிறுத்தைப்புலி படுத்துக்கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும் கொழுத்த காளையும் கூடிவாழும். பச்சிளம் குழந்தை அவற்றை வழிநடத்திச் செல்லும். பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும். அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக் கிடக்கும்.'

மேற்காணும் உருவகங்களைக் கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், தொடர்ந்து, 'சிங்கம் மாட்டைப்போல புல்தின்னும். பால்குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும். பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும்' என்கிறார்.

'புலி புளியோதரை சாப்பிட்டது!' என்ற வடிவேலு காமெடி போல இருக்கிறது.

மொத்தத்தில் எசாயா குறிப்பிடும் விலங்குகள் எல்லாம் தங்கள் இயல்பில் மாற்றம் பெற்றுவிட்டன.

இதுதான், அரசரின் வருகையின்போது இருக்கும்.

தொடர்ந்து, 'என் திருமலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை. கேடு விளைவிப்பார் எவருமில்லை' என்றும் சொல்கிறார் இறைவன்.

ஒரு விலங்கு மற்ற விலங்கிற்கோ, குழந்தைக்கோ தீங்கு செய்யாது.

'தீமை செய்யும், கேடு விளைவிக்கும் குணத்திலிருந்து' அவற்றின் இயல்பு மாறிவிட்டது.

இது எப்போது நிகழுமாம்?

'கடல் தண்ணீரால் நிறைந்திருப்பதுபோல மண்ணுலகம் ஆண்டவரைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்போது!'

ஆக,

மனமாற்றத்திற்கு - அதாவது, இயல்பு மாற்றத்திற்கான (attitudinal change) - முதல் படி, 'ஆண்டவரைப் பற்றிய அறிவு.'

இந்த அறிவு எங்கிருந்து வருகிறது?

'மனவுறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!' என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோமையர் 15:4-9) அறிவுறுத்துகின்றார் பவுல்.

ஆக, ஆண்டவரைப் பற்றிய அறிவின் ஊற்று அவரே.

ஆல்கஹாலிக் அனானிமஸ் (AA) - அதாவது, குடிப்போர் மறுவாழ்வு - நிகழ்வில் முதன்மையாகச் சொல்லப்படுவது இதுதான். ஒருவர் விடமுடியாத குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் அவர் கடவுளின் அல்லது மேலிருக்கும் ஆற்றலின் துணையை அழைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

குடிக்கும் இயல்பு நீங்கி குடிக்காத நிலைக்கு நான் கடக்க இறைவனின் அருள்கரம் பிடிக்க வேண்டும். அப்படி அவரின் அருள்கரம் என்மேல் தங்கும்போது நான் அவரது அறிவால் நிரப்பப்படுகிறேன்.

சரி. எனக்கு இந்த அறிவு வந்துவிட்டது. அருள் கிடைத்துவிட்டது. இது மட்டும் போதுமா?

இல்லை.

இன்னும் இரண்டு படிகளைச் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்:

படி இரண்டு: 'மனம் திரும்பியவர் என்பதை உங்கள் செயல்களால் காட்டுங்கள்!'

ஆக, என் இயல்பும் என் செயலும் ஒன்று போல இருக்க வேண்டும்.

'குடிக்க மாட்டேன்' என்று என் இயல்பு இருக்க, நான் மதுபானக்கடை நோக்கி செல்கிறேன் என்றால் அது சரியா? இல்லை. 'மாட்டேன்' என்ற இயல்பு போல என் செயலும் இருக்க வேண்டும்.

இதைத்தான் கவியரசு கண்ணதாசன் அவர்களும், 'ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி' என்று பாடுகின்றார். ஆக, சொல்லும், செயலும், இயல்பும், செயலும் ஒருங்கிணைந்தால் அங்கே என் உள்ளத்தில் அமைதி பிறக்கிறது.

படி மூன்று: 'ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை' என்று சொல்லி பெருமை கொள்ள வேண்டும்.

இதற்கு இரண்டு பொருள்கள் உண்டு: ஒன்று, 'நீங்கள் உங்கள் பழம்பெரும் அடையாளங்களைப் பற்றிக்கொண்டிராதீர்கள்!' இரண்டு, 'ஆபிரகாமின் மீட்பால் நாங்களும் மீட்கப் பெறுவோம்' என்ற ஆட்டோமேடிக் மீட்பு எண்ணம் கொண்டிராதீர்கள்!

'என் அப்பா குடிப்பழக்கத்தை விட்டார்!' அல்லது 'என் நண்பர் விட்டார்!' என்பதற்காக, 'நானும் விட்டதாக' ஆகிவிடுமா? இல்லை. 'நான் விட்டால்தான்,' 'நான் விட்டேன்' என்று சொல்ல முடியும்.

அதாவது, சச்சினாக இருந்தாலும் அடிச்சாதான் ரன்னு!

ஆக, ஒட்டுமொத்த அல்லது கூட்டு மனமாற்றத்தில் நாம் பங்காளிகளாக இருக்க ஆவல் கொள்தல் கூடாது. ஒவ்வொருவரும் தானே இடுக்கமான வாயில் வழியே நுழைய வேண்டும்.

திருமுழுக்கு யோவானிடம் வந்த பரிசேயரும், சதுசேயரும் தங்களுக்கு ஆபிரகாமும், அவரின் வழிமரபில் வந்த மாண்பும் போதும் என நினைத்தனர்.

பல நேரங்களில் நம் அடையாளங்கள் நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து பிரித்து விடுகின்றன. பரிசேயரும், சதுசேயரும் தங்களை ஆபிரகாமின் வழிமரபினர் எனச் சொல்லிக்கொண்டு, மற்றவர்களை 'பாவிகள்' என்றும், 'சபிக்கப்பட்டவர்கள்' என்றும் சொல்லிக்கொண்டிருந்தனர். இவர்களின் இந்தச் செயலைச் சாடுகின்றார் திருமுழுக்கு யோவான்.

மேற்காணும் மனமாற்றப் படிகளை இன்று நாம் எப்படி புரிந்து கொள்வது?

படி 1: 'ஆண்டவரைப் பற்றிய அறிவு'

இறைவனின் அருளை நாம் பெற வேண்டுமா? அல்லது அது தானாகவே கிடைக்குமா? என்பது முதலில் எழும் கேள்வி. சிலருக்கு இறைவனின் அருள் கிடைக்கிறது, சிலருக்கு கிடைக்க மறுக்கிறது எனச் சொல்லலாமா? இல்லை. இறைவனின் அருள் எல்லாருக்கும் கிடைக்கிறது. ஆனால், அதை வெகு சிலரே புரிந்து கொள்கின்றனர். ஏற்றுக்கொள்கின்றனர். அகுஸ்தினாரின் காலத்தில் எல்லாருக்கும் அருள் கிடைத்தது. ஆனால் அகுஸ்தினார் மட்டுமே அந்த அருளை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார். ஆனால், அவரிலும் அந்தப் போராட்டம் இருந்தது. ஆகையால்தான், அவரின் 'உள்ளக்கிடக்கைகள்' நூலில், 'இறைவா, எனக்கு கற்பை கொடு. ஆனால் இன்று வேண்டாம்!' என்கிறார்.

ஆக, இறைவனின் அருளை ஏற்றுக்கொள்வது நாம் அன்றாடம் செய்ய வேண்டிய ஒரு பயணம். இந்தப் பயணத்தில் சிலர் வேகமாக இலக்கை அடைவர். சிலருக்கு நாட்கள் கூடும். சிலர் எளிதாக அடைவர். சிலருக்கு பயணம் கடினமாக இருக்கும்.

'கற்களிலிலிருந்தும் தனக்குப் பிள்ளைகளை எழுப்ப கடவுள் வல்லவர்!' என்கிறார் திருமுழுக்கு யோவான். ஆக, அவரின் அதிசயமான அருளே நம்மைத் தாங்கும்!

படி 2: 'மனமாற்றத்தை அதற்கேற்ற செயல்களில் காட்டுங்கள்!'

'கடைக்கு உன்னுடன் வருகிறேன்' என என் மனம் மாறினால், நான் கடைக்கு உங்களுடன் வரவேண்டும். அப்படி நான் வரவில்லை என்றால், என் செயல் மனமாற்றத்திற்கான செயல் அல்ல. இன்று நாம் நம்மையே ஆய்ந்து பார்க்கலாம்?

எத்துணை முறை நான் மனம் மாறிவிட்டதாக எனக்கு நானே, அல்லது கடவுளுக்கு முன் சொல்கிறேன். ஆனால், சோதனை வரும்போது நான் ஏன் எளிதாக விழுந்துவிடுகிறேன்? காரணம், என் மனமாற்றம் செயலில் வெளிப்படாமல் இருப்பதால்தான். ஆக, உள்மாற்றம் வெளிப்புற செயலோடு கைகோர்த்து நிற்க வேண்டும்.

படி 3: 'பழைய அடையாளங்களையும், ஆட்டோமேடிக் மாற்றங்களையும் விட்டுவிடுங்கள்!'

'நான் நினைச்சா ஒரே நைட்டுல மாறிடுவேன்!' என்றும், 'நான் யார் தெரியுமா?' என்றும் பல நேரங்களில் நாம் பழைய அடையாளங்களை அள்ளிக்கொண்டு திரிகிறோம். ஆனால், அடையாளங்கள் இன்றி இன்றில் வாழ்வதே சால்பு. மேலும், என் தலைவலிக்கு நான் தான் மாத்திரை சாப்பிட வேண்டும்.

நிற்க.

'சிகரெட்டை விடுவது எளிது. நான் 23 முறை விட்டிருக்கிறேன்!' என்று நகைச்சுவையாகச் சொல்வார் பெர்னார்ட் ஷா.

இந்த 23 முறையும் சிகரெட் பிடிக்கும் இயல்பை விடவில்லை. மாறாக, வெறும் 23 சிகரெட்டுக்களை மட்டுமே விட்டிருக்கின்றார்.

வீட்டுல ஃபிரிட்ஜைத் திறந்து ஒரு ஐஸ் க்யூபை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போடுங்க.

வெறும் 5 சதவிகித ஐஸ் க்யூப் தண்ணீருக்குள் வெளியே இருக்கும். ஆனால் 95 சதவிகிதம் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும். வெளியே தெரியும் ஐஸ்க்யூப் போலத்தான் நம் செயல்கள். வெறும் 5 சதவிகிதம்தான். ஆனால் நம் இயல்பு என்பது உள்ளே இருக்கும் 95 சதவிகித ஐஸ்க்யூப் போன்றது. இதுதான் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானது. இதுதான் மாற வேண்டும். இது மாறினால் எல்லாம் மாறும்.

இதையே, 'உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும்' (எபே 4:23) என்றும், 'ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள். மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்...அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்!' (பிலி 4:4,7) சொல்கிறார் பவுல்.

நம் மனப்பாங்கே நம் இயல்பு.

இந்த இயல்பு மாறினால்தான் மனம் மாற்றம்.

இந்த மாற்றமே நமக்கு அமைதி தரும் - இன்றும், என்றும்!