இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து அரசர் பெருவிழா

அவரும், நீங்களும், நானும் - அரசரே!

2 சாமுவேல் 5:1-3
கொலோசையர் 1:12-20
லூக்கா 23:35-43

இன்றைய நாள் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

அ. கடந்த ஆண்டு டிசம்பர் 8 அன்று நாம் தொடங்கிய இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு இன்று நிறைவு பெறுகிறது. உரோமை தூய பேதுரு பசிலிக்காவின் யூபிலி கதவுகளை மூடி யூபிலியை இன்று நிறைவு செய்கிறார் நம் திருத்தந்தை.

ஆ. இன்று திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு. இந்த ஆண்டு முழுவதும் நாம் இரக்கத்தின் நற்செய்தியாளராம் லூக்கா நற்செய்தியாளரோடு இறைவாhத்தைப் பயணம் செய்தோம். அந்தப் பயணம் இன்று நிறைவு பெறுகிறது.

இ. இன்று கிறிஸ்து அரசர் பெருவிழா. 'வெள்ளை ஆண்தான் எங்களை அரசாள வேண்டும்' என்ற சொல்லாத கோஷத்தோடு மக்கள் டிரம்பை தேர்ந்தெடுத்ததும், நம் இந்தியப் பிரதமர் அவர்களின் அதிரடி பண முடக்கத்திட்டங்களும், நாம் இன்னும் அரசர்களுக்காக ஏங்குகிறோம் அல்லது அரசர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம் என்ற நிலைக்குத் தள்ளிவிடும் ஆபத்தில் இருக்கும் நமக்கு கிறிஸ்து அரசர் எப்படித் தெரிகிறார் என்ற கேள்வியை இந்த நாள் நமக்கு எழுப்புகிறது.

கதவு, இரக்கம், அரசர் - இந்த மூன்றையும் இணைத்துச் சிந்திப்போம்.

அ. கதவு என்றால் என்ன?

கதவு என்றால் ஒரு ஓட்டையோ அல்லது துவாரமோ அல்ல. மார்ட்டின் ஹைடக்கர் என்ற மெய்யியலாளர் கூறுவது போல, 'கதவு என்பது ஒரு சாத்தியம்.' அதாவது, ஒருவர் ஒரு இடத்திற்கு உள்ளே வருவதையும், அந்த இடத்தை விட்டு அவர் வெளியே செல்வதையும் சாத்தியப்படுத்துவது கதவு. கதவு எனக்கு என்னையே அறிமுகப்படுத்துகிறது. அதாவது, கதவு வழியே நான் நுழையும்போது என் உடல், என் உணர்வு, என் அறநெறி எனக்கு தெளிவாகிறது. எப்படி? என் உடல் உள்ளே நுழைய முடியாதபடி கதவு ஒடுக்கமாக இருந்தால் அங்கே நான் குண்டாக இருப்பது எனக்குத் தெரிகிறது. இறந்து போன ஒருவரைக் கிடத்தியிருக்கும் வீட்டின் கதவு வழி நான் நுழையும்போது நான் சிரித்துக்கொண்டிருந்தால், சிரிப்பு உணர்வும் அழுகை உணர்வும் ஒன்றிற்கொன்று பொருந்தாமல் இருக்கிறது என கதவு காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆக, நான் கதவருகில் வந்தவுடன் சிரிப்பை நிறுத்திவிட்டு உள்ளே செல்கிறேன். நாள் முழுவதும் கொலை உணர்வு, கொள்ளை, விபச்சார எண்ணங்கள் என என் மனத்தில் நிறைந்திருந்தால் ஆலயத்திற்குள் நுழையும்போது கதவு என் அறநெறியையும் சுட்டிக்காட்டுகிறது. 'நீ இந்தக் கதவிற்குள் நுழைய தகுதியற்றவன்' எனச் சொல்லிவிடுகிறது. இவ்வாறாக, கதவு ஒருவரின் உடல், உணர்வு, அறநெறி என்ற மூன்றை அவருக்கு அறிமுகம் செய்கிறது.

'கதவு' என்ற வார்த்தை விவிலியத்தில் 21 முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், 'ஆடுகளுக்கு கதவு நானே' (யோவான் 10:7) என்ற இயேசுவின் வார்த்தைகளில் இருந்துதான் யூபிலி கதவு என்ற சொல்லாடல் பிறக்கிறது. இயேசுவின் சமகாலத்து ஆடுவளர்ப்பில் ஆட்டுக் கொட்டகைக்கு கதவு இருக்காது. மாறாக, வாயிலின் குறுக்காக ஆயன் படுத்துக்கொள்வார். தன்னைத் தாண்டி ஆடு வெளியே போனாலோ, அல்லது வெளியிலிருந்து உள்ளே எந்த ஒரு விலங்கோ, மனிதரோ சென்றாலோ அவர் உடனே கண்டுபிடித்து அதை தடுத்துவிடுவார். ஆடுகளைக் காப்பாற்றிவிடுவார். யூபிலி கதவுகளுக்குள் நாம் நுழையும்போது நாம் நல்லாயனாம் இயேசுவுக்குள் நுழைகின்றோம். மற்ற கதவுகளைப் போல யூபிலி கதவும், இயேசு என்னும் கதவும் நமக்கு நம் உடல், உணர்வு, அறநெறி என்ன என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.

இன்று யூபிலி கதவுகள் மூடப்பட்டதால் இனி நாம் இயேசுவுக்குள் நுழைய முடியாதா?

இன்று நாமே கதவுகளாக மாறுகின்றோம். எப்படி?

'இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது, எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவேன்' (திவெ 3:20) என்னும் இயேசுவின் வெளிப்பாட்டு வார்த்தைகளின்படி, இன்று 'நான்' என்னும் என் கதவுகளுக்குள் நுழைந்து வர அவர் தயாராக இருக்கின்றார். அந்தக் கதவை நான் திறந்து அவரை உள்ளே அழைக்கத் தயாரா?

ஆக, இவ்வளவு நாள்கள் யூபிலி ஆண்டின் கனிகளை ஒப்புரவு அருளடையாளம், இறைவார்த்தை கேட்டல், உடல்சார்ந்த, மனம் சார்ந்த இரக்கச் செயல்கள் என உண்ட நாம் இப்போது எல்லாவற்றையும் அசைபோடவும், அவற்றை அப்படியே நம் உடலாக, உணர்வாக, அறநெறியாக மாற்றிக்கொள்ளவும் தொடங்குகிறோம் இன்று. அப்படிப்பட்ட ஒரு மனநிலையில்தான் நான் எழுந்து கதவருகில் நிற்கும் அவருக்கு கதவுகளைத் திறந்துவிட முடியும்.

ஆக, இன்று ஆலயத்தின் யூபிலி கதவுகள் மூட, நம் மனக் கதவுகள் திறக்கட்டும்!

ஆ. இரக்கம் என்றால் என்ன?

இரக்கம், காருண்யம், கருணை, பரிவு, அன்பு, பரிவிரக்கம், கரிசணை, தயை, தயவு, அருள்கூர்தல் என நிறைய பதங்களை நாம் தமிழில் பயன்படுத்தினாலும், இரக்கம் என்ற உணர்வை 'கண்கள் சந்தித்தல்' என்றே நான் புரிந்து கொள்கிறேன். மேலிருப்பவரின் கண்களும், கீழிருப்பவரின் கண்களும் சந்தித்துக்கொண்டால் அங்கே இரக்கம் பரிமாறப்படுகிறது. பால்கொடுக்கும் தாய் தன் மடியிலிருக்கும் குழந்தையின் கண்களைப் பார்க்க, குழந்தையின் கண்களும் தாயின் கண்களைப் பார்க்கின்றன. தாயின் கண்களில் அந்நேரம் சுரக்கும் உன்னத உணர்வே பரிவு. ஆகையால்தான், 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்று கடவுளைப் பாடுகின்றார் மாணிக்கவாசகர். இப்படி நாம் மேலிருந்து பெற்ற இரக்கத்தை கீழ்நோக்கி மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது நாம் மேலிருப்பவரின் குணங்களைப் பெற்றவர்களாகின்றோம். அப்போது அவரின் கண்களும், நம் கண்களும் ஒன்றாகிவிடுகின்றன. இந்த ஒன்றாகும் கண்களைத்தான் நம் இரக்கத்தின் யூபிலி ஆண்டு இலச்சினையும் நமக்கு பிரதிபலித்தது.

லூக்கா நற்செய்தியாளர் முழுக்க முழுக்க இயேசுவை மனிதர்களைப் பார்க்கும் கடவுளின் கண்கள் என்றே அடையாளப்படுத்துகின்றார். காண முடியாத கடவுளின் காணக்கூடிய முகமாக இருக்கும் இயேசுவின் கண்கள் வழியே கடவுள் மனுக்குலத்தை குனிந்து பார்க்கின்றார். பரிவு காட்டுகின்றார். தன் பரிவை அனுபவித்த அனைவரும் அதை மற்றவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதை இயேசுவும் விரும்புகிறார். ஆகையால்தான், நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் (காண். லூக் 10:25-37), 'அவருக்கு பரிவு காட்டியவரே!' என்று மறுமொழி சொன்ன திருச்சட்ட அறிஞரிடம், 'நீரும் போய் அப்படியே செய்யும்' என்கிறார்.

ஆக, நாம் அனுபவித்த இரக்கத்தை மற்றவர்களுக்கு இன்றும் என்றும் காட்ட முயல்வோம்!

இ. அரசர் என்றால் என்ன?

அரசரைப் பற்றிய பின்புலம் முதல் ஏற்பாட்டில் நேர்முகம்-எதிர்மறை என இரண்டு நிலைகளில் இருக்கிறது. 'அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மையெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர்' (நீத 21:25) என்று அரசனின் தேவை ஒருபுறம். 'அரசன் உங்கள் புதல்வர்களைத் தன் தேரோட்டிகளாகவும் தன் குதிரை வீரர்களாகவும், உங்கள் புதல்வியரை அப்பம் சுடுபவர்களாகவும் வைத்துக் கொள்வான். உங்கள் திராட்சை மற்றும் ஒலிவத் தோட்டங்களில் சிறந்தவற்றை எடுத்துக்கொள்வான்' (காண். 1 சாமு 8:10-18) என்று அரசன் பற்றிய எச்சரிக்கை மறுபுறம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 சாமு 5:1-3) தாவீது இஸ்ரயேலின் அரசராக திருநிலைப்படுத்தப்படுகின்றார். 'நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய். நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்' என்று தாவீதுக்குச் சொல்லப்பட்டாலும், அவரும், இஸ்ரயேலின் (மற்றும் யூதா) அரசர்கள் அனைவரும் காலப்போக்கில் தன்னலம் கொண்டவர்களாவும், சிலைவழிபாடு செய்பவர்களாகவும், வேற்றுநாட்டினரோடு திருமணம் செய்துகொள்பவர்களாகவும், இரத்தம் மற்றும் பணவெறி கொண்டவர்களாகவும் மாற, பாபிலோனிய படையெடுப்போடு (கிமு 587) அரசாட்சி முடிவுக்கு வருகிறது.

மெசியா அரசராக வருவார் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது.

இப்படி மெசியாவை அரசவையில் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்க மாட்டுக்கொட்டகையில் வந்து பிறக்கின்றார் அவர்.

இயேசு ஓர் அரசரா?

இந்தக் கேள்விக்கு இல்லை என்றும் ஆம் என்றும் பதில் சொல்லலாம்.

மூன்று இடங்களில் இயேசுவே தன்னை மற்றவர்கள் அரசன் என்று சொல்லும்போது வௌ;வேறான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்:

1. ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுக்க, அவரைக் கூட்டிக்கொண்டு அரசராக்கப் போகிறார்கள் மக்கள். அதை உணர்ந்த இயேசு அவர்களிடமிருந்து தப்பித்து தனியே செல்கின்றார். (காண். யோவா 6:1-15)

2. 'ஓசன்னா, ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சீடர்கள் வெற்றி ஆரவாரத்தோடு இயேசுவை எருசலேமுக்குள் வரவேற்க அங்கே அதைக் கொண்டுகொள்ளாமல் இருக்கிறார் இயேசு. (காண். யோவா 12:13)

3. 'அப்படியானால் நீ அரசன்தானோ!' என்று பிலாத்து கேட்க, 'அரசன் என்று நீர் சொல்கிறீர்!' என அப்படியே பிலாத்திடம் திருப்பிப் போடுகின்றார் இயேசு. (காண். யோவா 18:37)

இயேசு தன்னை மூன்று இடங்களில் அரசன் இல்லை என்று சொன்னாலும், மூன்று இடங்களில் தான் அரசன் என்பதை உள்ளுறை செய்தியாக சுட்டிக்காட்டுகின்றார்:

1. தன்னை நாடிவந்த கீழ்த்திசைநாட்டு ஞானியர் கொண்டு வந்த காணிக்கைகளை- பொன், தூபம்,வெள்ளைப்போளம் - ஏற்றுக்கொள்கின்றார். (காண். மத் 2:11). இந்தக் காணிக்கைகளில் பொன் அரச தன்மையை குறிக்கிறது. (அவர் குழந்தையாய் இருந்ததால் ஒரு ரியாக்ஷனும் இல்லை எனவும் எடுத்துக் கொள்ளலாமே!)

2. சீமோன் என்னும் ஒரு பரிசேயர் வீட்டில் உணவருந்த இயேசு அமர்ந்திருக்க, அங்கே வரும் 'பாவியான பெண்' நறுமணத்தைலம் பூசுவதை மறுப்பு ஏதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்கின்றார். அப்படி ஏற்றுக்கொண்டதோடல்லாமல், 'நீர் என் தலையில் நறுமணத்தைலம் பூசவில்லை' என சீமோனை கடிந்தும் கொள்கின்றார். (காண். 7:36-50). நறுமணத் தைலம் பூசுவது அரசர்நிலையை அடைவது அல்லது அரசர் நிலையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும்.

3. இன்றைய நற்செய்திப் பகுதியில் (காண். லூக் 23:35-43) நாம் வாசிக்கும் நிகழ்வில், நல்ல கள்வன் இயேசுவிடம், 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என, இயேசுவும், 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்!' என்று மறுமொழி சொல்கிறார். தான் ஓர் அரசன் என்பதை மறைமுகமாகச் சொல்லிவிடுகின்றார்.

இந்த மூன்று நிகழ்வுகளும் இயேசுவை மட்டும் அரசராக நமக்குக் காட்டவில்லை. மாறாக, நாமும் அரசராக முடியும் என்பதை நமக்குக் காட்டுகின்றன. எப்படி?

1. அரசர்கள் சமரசம் செய்துகொள்வதில்லை

இயேசுவை சந்தித்த கீழ்த்திசை ஞானியர் ஏரோதிடம் செல்லாமல் வேறு வழியாக தங்கள் நாடு திரும்புகின்றனர். அதாவது, உண்மையைச் சந்தித்த கண்கள் பொய்யைச் சந்திக்க முடியாது. ஒளியிடம் தெண்டனிட்ட கால்கள் இருளிடம் தெண்டனிட முடியாது. வாழ்வைத் தொட்ட கரங்கள் இறப்புடன் கைகுலுக்க கூடாது. உண்மை-பொய், ஒளி-இருள், வாழ்வு-இறப்பு என்னும் பொருந்தாதவைகளோடு அவர்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. ஆக, சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பது அரசனின் முதல் பண்பு. 'இது வேண்டும் - அது வேண்டாம்' என முடிவெடுத்து, அந்த முடிவில் நிலைத்திருப்பவரே அரசர். 'இதுவும் வேண்டும் - அதுவும் வேண்டும்', 'இயேசுவும் வேண்டும் - ஏரோதும் வேண்டும்' என்று சொல்பவர் அரசர் அல்லர்.

2. அரசர்கள் மற்றவர்களின் எண்ணங்களால் ஆட்டுவிக்கப்படுவதில்லை.

இயேசுவிடம் நறுமணத் தைலத்தோடு வந்த பெண்ணுக்கு மற்றவர்களைப் பற்றியோ, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியோ கவலையில்லை. அவரின் கண்களுக்கு இயேசு மட்டுமே தெரிந்தார். அவரின் கண்களுக்கு வெற்றிக்கனி மட்டுமே தெரிந்தது. நம்மை அரசராக்கும் இரண்டாம் குணம் இதுவே. அடுத்தவரின் எண்ணம்போல என் வாழ்வை அமைத்துக்கொள்ள நான் ஆரம்பித்தேன் என்றால், ஒவ்வொருவரின் எண்ணம்போல நான் என் வாழ்வை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய நிலை வந்துவிடும். இல்லையா? என் மனமும், என் எண்ணமும் தூய்மையாக, என் கைகளும், என மனமும் கறைபடாமல் இருந்தால் போதும்.

3. அரசர்கள் அநீதியை பொறுத்துக்கொள்வதில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவைவிட நல்ல கள்வனே என் கண்களுக்கு அரசராகத் தெரிகிறார். எப்படி? குற்றம் செய்த தன் கூட்டாளி குற்றம் செய்யாத இயேசுவைப் பார்த்து ஏளனம் செய்கின்றான். ஆனால், அநீதியாளன் பக்கம் சேராமல், நீதியாளர் பக்கம் - அதுவும், மௌனியின் பக்கம் - கரம் கோர்க்கின்றார் நல்ல கள்வன். 'நாம் தண்டிக்கப்படுவது நீதியானதே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே' என்று மௌனிக்காக வாதாடுகின்றார் நல்ல கள்வன். பல நேரங்களில் நான் சத்தம் அதிகம் இருக்கும் பக்கமே சேர்ந்து கொள்ள நினைக்கிறேன். மௌனிகள் பக்கம் சேரவும், அவர்களுக்காக குரல் கொடுக்கவும் மறுக்கிறேன். அந்த நேரங்களில் நான் என் அரசர்நிலையிருந்து தவறுகிறேன்.

இறுதியாக,

கிறிஸ்துவை அரசராக கொண்டாடும் இந்நாளில், இரக்கத்தின் யூபிலி ஆண்டுக் கதவுகள் மூடப்படும் இந்நாளில், இரக்கத்தின் லூக்கா நற்செய்தி நிறைவுபெறும் இந்நாளில், 'நானும் ஓர் அரசர்!' என்ற பெருமிதத்தில் சமரசம் செய்துகொள்ளாமல், மற்றவர்களின் எண்ணங்களால் ஆட்டுவிக்கப்படாமல், அநீதியைப் பொறுத்துக்கொள்ளாமல் அவர்வழி நடப்போம்.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்.
தொன்மைமிகு கதவுகளே உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்! (திபா 24)

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? அவரும் - நீங்களும் - நானுமே!