இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

Wife அன்ட் Wifi

2 மக்கபேயர் 7:1-2,9-14
2 தெசலோனிக்கியர் 2:16-3:5
லூக்கா 20:27-38

சில மாதங்களுக்கு முன் டுவிட்டரில் கண்ட ஒரு கீச்சு:

'Wife இல்லாம கூட வாழ்ந்திடலாம். Wifi இல்லாம வாழ முடியாது!'

ஒய்ஃபையை வைத்து நிறைய கீச்சுகள் வந்திருக்கின்றன.

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் - Wifi'

என்பது பல உயிர்கள் ஒரே ஒய்ஃபையில் வாழ முடிவதைச் சொல்கிறது.

ரோம் நகரில் ஓர் ஓட்டலில் இப்படி எழுதியிருப்பார்கள்:

'இங்கு Wifi இல்லை. ஒருவர் மற்றவரோடு பேசுங்கள்.'

'ஒய்ஃபை' என்னும் வார்த்தை ஒயர்-ஃப்ரீ (அதாவது, வயர் இல்லாத) என்ற இரண்டு வார்த்தைகளின் சுருக்கமே. இணையத்தை வயர் இல்லாமல் வழங்குகிறது ஒய்ஃபை.

ப்ளுடூத் மற்றம் இன்ஃப்ரா ரெட் என்னும் தொழில்நுட்பமும் வயர் இல்லாமல் ஒன்றோடு மற்றொன்றை இணைப்பவையே.

நிற்க.

ஒய்ஃப்க்கும் ஒய்ஃபைக்கும் என்ன சம்பந்தம்?

ராத்திரிக்கும் விளக்குத் திரிக்கும் என்ன சம்பந்தம்?

பன்னிகுட்டிக்கும் பட்டர் பிஸ்கட்டுக்கும் என்ன சம்பந்தம்?

இன்றைய நற்செய்தியில் (லூக் 20:27-38) இயேசுவிடம் சதுசேயர் குழுவினர் வருகின்றனர். காட்சியின்படி இயேசு இப்போது எருசலேமுக்குள் இருக்கிறார். எருசலேமில் இயேசு பலரின் எதிர்ப்பை சந்திக்கிறார். அந்தப் பலரில் முதல் குழுவினர் நம்ம சதுசேயர்கள்.

யாருப்பா இந்த சதுசேயர்கள்?

இயேசுவின் சமகாலத்தில் பரிசேயர்கள், சதுசேயர்கள், செலட்ஸ், எஸ்ஸீன்கள் என நான்கு குழுக்கள் இருந்தனர். இந்த நான்கு குழுக்களுமே யூதர்கள்தாம்.

சதுசேயர்கள் அறிவாளிகள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் எப்போதும் அரசவை உறுப்பினர்கள், அங்காளி பங்காளிகள் என்றுதான் இருப்பர்.

'நல்லா சாப்பிடு. நேரம் வந்தால் போய்ச் சேரு!' - இதுதான் இவர்களின் வாழ்க்கைத் தத்துவம்.

உயிர்ப்பு, வானதூதர், மறுவாழ்வு இப்படி காணாதவைகள் மேல் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இவங்களோடு பைபிளும் ரொம்ப சின்னது. தோரா எனப்படும் முதல் ஐந்து நூல்களை மட்டும்தான் கடவுள் வெளிப்படுத்திய நூல்களாக இவர்கள் ஏற்றுக்கொண்டனர். மற்ற நூல்கள் எல்லாம் சும்மா மனிதர்கள் தந்தது என்பது இவர்கள் வாதம். தாவீது மற்றும் சாலமோனின் காலத்தில் முதன்மைக்குருவாக இருந்த சாதோக் என்பவரின் வழிவந்தவர்கள் என தங்களையே அடையாளப்படுத்திக்கொள்வர்.

யூதர்கள் மத்தியில் உயிர்ப்பு பற்றிய எண்ணம் தானியேல் 12:2 நூலின் காலத்திலேயே இருந்திருக்கிறது. மேலும் கிரேக்கர்களைப் போல அவர்களும் ஆன்மா அழிவதில்லை என்னும் கோட்பாட்டை நம்பினர் (காண். சாஞா 3:4, 8:13, 15:3).

இயேசுவிடம் வந்த சதுசேயர்களை லூக்கா, 'உயிர்த்தெழுதலை மறுக்கும் சதுசேயர்' என அறிமுகம் செய்கின்றார்.

வந்தவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

கேள்விக்கு மையமான வார்த்தை 'ஒய்ஃப்'

ஒரு வீட்டுல ஏழு ஆண்கள் இருக்கிறார்கள். எல்லாருக்கும் தலைப்பிள்ளை கல்யாணம் முடிக்கிறார். மகப்பேறு இல்லாம இறந்து போயிடுறார். எத்தனை வயசுல இறந்தார்? ஏன் இறந்தார்? - இப்படி எல்லாம் நாம கேட்கக் கூடாது.

யூதர்களின் லெவிரேட் சட்டம் என்ன சொன்னது தெரியுமா?

ஒரு ஆணுக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லை என்றால், அந்த ஆணின் தம்பி அந்த பெண்ணை திருமணம் செய்து குழந்தை தர வேண்டும். 'லெவிர்' என்றால் 'கொழுந்தன்' என்பது பொருள்.

ஒருவேளை எனக்கு மனைவி இருக்கிறாள் என வைத்துக் கொள்வோம். நான் குழந்தைப்பேறு பெறாமல்(!) இறந்து போனால், என் தம்பி அதாவது என் மனைவியின் கொழுந்தன் அவளை மணக்க வேண்டும். அது எப்படி ஃபாதர் மணக்க முடியும்? அவளுக்கு கொழுந்தனைப் பிடிக்க வேண்டுமே?

பிடிக்குது, பிடிக்கல என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.

இந்தச் சட்டம் ஆணுக்கும், அவனது வாரிசுக்கும்தான் முக்கியத்துவம் கொடுத்ததே தவிர பெண்ணின் இன்ப, துன்பங்களைப் பற்றி அக்கறைப்படவே இல்லை. என்ன ஒரு ஆணாதிக்கம்?

எதற்காக இப்படி செய்ய வேண்டும்?

யூதர்களின் சிந்தனைப்படி இறப்பை நம்மால் வெல்ல முடியும். எப்படி? என் வித்தை நான் என் குழந்தையாக உருவாக்கி இவ்வுலகில் விட்டுச் செல்வேன். அவன் இன்னொரு குழந்தையை பெற்றெடுப்பான். அவன் இன்னொன்று. இப்படி வரிசை சென்று கொண்டே இருக்கும். ஆக, என் மகன், பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன் என என் வித்து வாழ்ந்து கொண்டே இருக்கும். எனக்கு அல்லது என் வித்துக்கு இறப்பே இருக்காது. வாரிசு ஆணாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்!

ஆகையால்தான், யூத மரபில் மணத்துறவு என்பது அறவே கிடையாது. ஒருவர் மணத்துறவை மேற்கொள்ளும்போது தன் மூதாதையர்களின் வாரிசு வரிசையைத் தடை செய்கிறார்.

சரி. நம்ம கதைக்கு வருவோம்.

ஏழு பேரும் மகப்பேறு இல்லாமல் இறந்துவிடுகின்றனர். கடைசியில் பாவம் அந்த மனைவியும் இறந்து விடுகிறாள்.

இப்ப கேள்வி என்னன்னா?

உயிர்ப்புக்குப் பின் ஏழு ப்ளஸ் ஒன்னு என எட்டு பேரும் இருப்பர்.

இப்போ, இந்த பெண் இந்த ஏழு பேரில் யாருக்கு மனைவியாய் இருப்பார்?

ரொம்ப லாஜிக்கான கேள்வி.

பயபுள்ளைகளுக்கு மூளை எப்படி எல்லாம் வேலை செய்யுது?

முதலாமவர்க்கு என்று சொல்லிவிட்டால், இயேசு லெவிரேட் சட்டத்தை மீறியவர் ஆவார். ஏழு பேருக்கும் என்றால் மோசேயின் விபச்சாரச் சட்டப்படி அது செல்லாது.

என்ன சொன்னாலும் இயேசு மாட்டிக் கொள்வார்.

ஆனா, இயேசு பலே புத்திசாலி.

'அட முட்டாள்களா! இந்த உலகத்துலதான் ஒய்ஃப்ன்னு சொல்றீங்க. கல்யாணம் பண்ணுறீங்க. குழந்தை பெத்துக்குறீங்க.

ஆனா,

அந்த உலகத்ததுல எல்லாம் ஒய்ஃபைதான். அதாவது, யாரும் யாரையும் தொட்டுக்கிட்டு இருக்க மாட்டாங்க. அங்க ஒய்ஃப் கொள்வதுமில்லை. ஒய்ஃப் கொடுப்பதுமில்லை. எல்லாரும் வானதூதர் மாதிரி ஒரே மாதிரி இருப்பாங்க. எல்லாரும் கடவுளின் மக்களாவும் இருப்பார்கள்'

என்கிறார்.

அதாவது, இயேசு அவர்களை புதியதொரு சிந்தனைத் தளத்திற்கு எடுத்துச் செல்கிறார்.

இந்த உலகில் நாம் வாழும்போது காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு வாழ்கின்றோம்.

அந்த உலகில் காலம்-இடம் என்பது கிடையாது.

காலம்-இடம் என்று இருக்கும்போதுதான் வரிசை உருவாகிறது. ஆனால் அங்கே வரிசை இல்லை. எல்லாரும் ஒன்று போல ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் இருப்பர்.

இது இயேசுவின் முதல் பதில்.

இரண்டாவது, 'பெண் கொள்வதுமதில்லை. பெண் கொடுப்பதுமில்லை.' அதாவது, 'திருமணம் செய்து கொள்வதில்லை.'

அதாவது, தன் சந்ததியை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நிலை அங்கே இல்லை. ஆக, திருமணம் செய்வதில்லை.

மேலும், அந்த நிலை 'கடவுளின் மக்கள்' என்ற நிலையை அவர்களுக்குப் பெற்றுத் தரும்.

திருமணம் என்ற நிலையிலிருந்து தள்ளி இருப்பவர்களே கடவுளின் மக்கள் (காண். தொநூ 6:1-4).

ஆக, உயிர்ப்பு என்பது நாம் இங்கு வாழும் வாழ்வின் அடுத்த கட்டம் அல்ல. அது வரிசையாக நிகழும் அடுத்த நிகழ்வு அல்ல. மாறாக, அது முற்றிலும் மாறுபட்ட நிலை.

ஒய்ஃபை வந்த காலத்தில் அப்படித்தான் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஒரு வயர், அடுத்த வயர், அடுத்த வயர் என வரிசையாக நின்ற கணிணிகள் வயர்கள் பிடுங்கப்பட்டு ஒய்ஃபையில் இணைக்கப்பட்டபோது, அங்கே அவைகளுக்கு 1, 2, 3 என்ற வரிசை எண்கள் கிடையாது. அவைகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வயரே இல்லாமல் இணைக்கப்பட்டன.

நாம் இங்கு வாழும்வரை ஒய்ஃப், ஹஸ்பண்ட், சன், டாட்டர், மாமன், மச்சான், அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி என வரிசையில் இணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் அங்கு சென்றவுடன் எந்த வரிசையும் இல்லாமல் ஒய்ஃபை போல இருப்போம்.

இந்த சிந்தனை ஓட்டத்தையே நாம் இன்றைய முதல் வாசகத்திலும் (காண். 2 மக் 7:1-2, 9-14) பார்க்கிறோம். அந்தியோக்கு மன்னனின் சித்திரவதைக்கு உட்பட்டு சகோதரர்கள் எழுவர் கொல்லப்படுகின்றனர். எழுவரில் இரண்டாம் சகோதரர் தான் இறப்பதற்கு முன் மன்னனிடம் மொழிந்த வார்த்தைளில் மேலோங்கி இருப்பது உயிர்ப்பு என்ற எண்ணமே: 'நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்.' ஆக, உயிர்த்தெழுபவர்கள் என்றென்றும் வாழ்வார்கள் என்ற எண்ணத்தையும் நாம் இங்கே காண்கிறோம்.

இயேசுவின் பதில் தொடர்கிறது.

மோசேயின் அழைப்பு (விப 3) நிகழ்வை மேற்கோள்காட்டி கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, மாறாக, வாழ்வோரின் கடவுள் என்கிறார். சதுசேயர்கள் முதல் ஐந்து நூல்களை மட்டும்தான் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் என்பதால், அவர்களின் இரண்டாம் நூலிலிருந்து எடுத்துக்காட்டு தருகிறார்.

கடவுள் தன்னையே மோசேக்கு வெளிப்படுத்தும்போது தன்னை 'ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள்' என முன்மொழிகின்றார். அல்லது, 'நான் உன் கடவுள், அவர்களின் கடவுள்' - ஆக, கடவுளைப் பொறுத்தவரையில் அவருக்கு நிகழ்காலம் மட்டுமே உண்டு. இறந்தவர்கள்கூட அவரின் நிகழ்காலத்தில் வாழ்கின்றனர். கடவுளைப் பொறுத்த மட்டில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே என அனைவரும் ஒரே நிலையில் உள்ளவர்கள். இறந்தவர் - இருக்கிறர் என்ற வரிசையே அங்கு இல்லை.

'அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை' என்ற லூக்காவின் வார்த்தைகளோடு நற்செய்தி வாசகம் நிறைவு பெறுகின்றது.

ஆகையால் நாமும் இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு வைக்கும் மூன்று வாழ்க்கைப் பாடங்கள் எவை?

1. ஒய்ஃப் வேண்டுமா? வேண்டாமா?

அல்லது திருமணம் வேண்டுமா? வேண்டாமா? திருமண வாழ்வு சிலருக்கு நரகமாக இருப்பதாக நான் சொல்லக் கேட்டிருக்கிறேன். புரிதல் இல்லாமை, சந்தேகம், வன்முறை போன்ற காரணிகளால் சில நேரங்களில் திருமண வாழ்வு கசந்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்கள் இயேசுவின் இன்றைய போதனை ஆறுதல் அளிக்கலாம். அங்கே திருமணம் செய்துகொள்வதில்லை என்றால் நல்லதுதானே. ஒருவேளை அங்கேயும் திருமணம் என்றால், இவர்கள் எல்லாம், 'மறுபடியும் முதல்ல இருந்தா?' எனக் கேட்க நேரிடம். சிலருக்கு திருமண வாழ்வு இனிய அனுபவமாக இருக்கும். ஒருவர் மற்றவரில் நிறைவு கொள்வர். அன்பு, ஆறுதல், இனிமை, ஈகை, உறவு, ஊக்கம் என அ-ஆ வரிசையில் வாழ்க்கை இன்பமாக நகரும். இப்படிப்பட்டவர்களுக்கு மறுவாழ்வில் திருமணம் இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கும்.

இயேசுவின் போதனையின் நோக்கம் திருமணம் பற்றியது அன்று. மாறாக, உயிர்ப்பு பற்றியது.

இருந்தாலும், நம் திருமண வாழ்விற்கு இயேசு தரும் முக்கியமான பாடம் என்னவென்றால், 'நம் பார்ட்னரை ஒரு பொருளாக பார்க்காமல் தன்னைப்போல ஒரு மனிதராக, கடவுளின் பிள்ளையாக பார்ப்பது.' இந்தப் பாடத்தை நாம் கற்றுக்கொண்டால் திருமண உறவு இனிதாகிவிடும்.

மணத்துறவை மேற்கொண்டுள்ள அருள்நிலை இனியவர்கள் இந்த உலகிலேயே உயிர்ப்பின் மக்களைப் போல வாழ்கிறார்கள் என்பது கடவுள் அவர்களுக்குத் தரும் போனஸ். ஆக, வானதூதர்கள் போல கள்ளம் கபடம் இல்லாமல், எல்லாரையும் கடவுளின் மகன், மகள் என்ற ஏற்று வாழ்தல் சால்பு.

2. நல்லதையே சொல்லவும், செய்யவும்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 தெச 2:16-3:5) தெசலோனிக்கியருக்கான தன் இரண்டாம் மடலை நிறைவு செய்கிறார் பவுல். அவர் இறுதியாக அவர்களுக்கு முன்வைக்கும் அறிவுரை என்ன? 'நல்லதையே சொல்லவும், நல்லதையே செய்யவும் நீங்கள் ஊக்கம் பெறுவீர்களாக!' நம் எண்ணங்களே சொற்களாக மாறுகின்றன. நம் சொற்களே செயல்களாக மாறுகின்றன. அதாவது, நமக்கு என்ன நடந்தாலும் நம் 'நற்குணத்தை' விடாமல் இருப்பது. இதைச் செய்ய யாரால் முடியும்? இந்த உலகத்தைக் கடந்து, இந்த வாழ்வைக் கடந்து சிந்திக்கும் ஒருவரால்தான் இப்படி இருக்க முடியும். ஆக, நம் பார்வை விசாலமாக இருக்க வேண்டும். எந்த ஒரு நபரையும், பிரச்சினையையும், எதிர்மறை நிகழ்வையும் கிட்டப் பார்க்கக் கூடாது. அவற்றை ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாக பார்த்தால் நம் பார்வை விரிவடையும். அதாவது, என் நண்பர் எனக்கு கோபம் ஊட்டுகிறார் என்றால், அவரின் கோபத்தைப் பார்த்து நான் அவரை கடிந்து கொள்ளக் கூடாது. மாறாக, அந்த நபரை நான் எங்கள் நட்பு தொடங்கிய காலம்-இடம் தொட்டு ஒரு உறுப்பாகப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாக அவரை நிறுத்திப்பார்க்கும்போது அவரின் இந்தக் கோபம் சின்னதாகிவிடும். உறவும் இனிமையாகத் தொடங்கும். இதற்குப் பெயர்தான், நல்லதை சொல்வது, செய்வது.

3. இன்றின் இறைவன்

நம் கடவுள் இன்றின் இறைவன். வாழ்வின் கடவுள். வாழ்வு என்பது இப்போது இருப்பது. நேற்று நடந்ததை நாம் இறந்த காலம் என்றும், நாளை நடப்பதை நாம் எதிர்காலம் என்றும் அழைக்கின்றோம். இன்று என்பது வாழ்வு. இன்று என்பதை ஆங்கிலத்தில் 'ப்ரசன்ட்' ('கொடை') என்கிறோம். வாழ்வின் கொடைதான் இன்று. வாழ்வு என்னும் இறைவனின் கொடைதான் இன்றும் இப்போதும். ஆக, வாழ்வை நாம் இன்றில், இப்போதில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த கால காயங்களும், எதிர்கால ஏக்கங்களும் நம்மை பாதித்துவிடவே கூடாது.

எப்படி என்றால், புலியால் விரட்டப்படும் ஒருவன் ஒரு குழிக்குள் விழுந்துவிடுகிறான். விழும் வழியில் ஒரு வேரைப் பிடித்து தொங்குகிறான். மேலே குழிக்கு வெளியே புலி உறுமிக்கொண்டிருக்கிறது. கீழே குனிந்து பார்க்கிறான். அங்கே ஆழத்தில் பாம்பு படமெடுத்து நிற்கின்றது. இதற்கிடையில் இவன் பற்றிக்கொண்டிருந்த வேர் அறுபட ஆரம்பக்கிறது. அந்த நேரத்தில் அவன் கண்களில் அங்கிருந்த கொடியில் கனிகள் கண்ணில்படுகின்றன. எதையும் கண்டுகொள்ளாமல் கனியைப் பறித்து உண்ண ஆரம்பிக்கின்றான்.

ஆம், நமக்கு கடந்தகாலமும் பயம்தான். எதிர்காலமும் பயம்தான். வாழ்க்கை வேகமாக அறுந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும், கொஞ்சம் கனிகளை சாப்பிட்டு இனிமை காணலாமே!