இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

வாயில்கள் இரண்டு!

எசா 66:18-21
எபி 12:5-7, 11-13
லூக் 13:22-30

ஏர்போர்ட், ஷாப்பிங் மால், ஸ்டார் ஹோட்டல், சுதந்திர தினக் காலத்தில் இரயில் நிலையங்கள், முக்கியமான ஆலயங்கள், அமைச்சர்கள் வருகை தரும் இடங்கள் - இவ்விடங்கள் பார்க்க பிரமாண்டமாய் இருக்கும். வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே நிறையப் பேர் இருப்பார்கள். நாம் நின்று கொண்டிருக்கும் இடத்திலும் நிறையப் பேர் இருப்பார்கள். ஆனால், இப்புறத்திலிருந்து அப்புறத்திற்கு ஒவ்வொருவராய் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அப்படி அனுமதிக்கப்படும் அனைவரும் ஒரு வீட்டு நிலைபோல நிற்கும் பிளாஸ்டிக் நிலைக்குள் செல்ல வேண்டும். இந்த பிளாஸ்டிக் நிலைச்சட்டம் தன்னைக் கடந்து செல்லும் அனைவரின் உடலையும் சில செகண்டுகளில் ஆராய்ச்சி செய்து, கடந்து செல்பவரின் உடலில் உள்ள உலோகத்தை உணர்ந்து மற்றவர்களுக்கு உணர்த்திவிடுகிறது. ஒருவர் மட்டுமே நுழையக் கூடிய இந்த இடுக்கமான வாயில் வழியே நாம் நுழைவது நம் பாதுகாப்பையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

மற்றொரு பக்கம் வங்கிகளுக்குள் நுழையும் போது நாம் கவனித்திருப்போம். க்ரில் கேட்டை மிகச் சிறியதாக அடைத்து சங்கிலி அல்லது பூட்டு போட்டு வழியைச் சுருக்கியிருப்பார்கள். வங்கியின் கதவு அகலமாக இருந்தாலும், அதன் நுழைவுப்பகுதி என்னவோ ஒருவர் மட்டுமே, அந்த ஒருவரும் மிகவும் சிரமப்பட்டு நுழையும்விதமே அமைக்கப்படுகின்றது. வங்கியின் 'இடுக்கமான வாயில்'கூட பாதுகாப்பு காரணத்திற்காகவே.

இன்றைய நற்செய்தியில் நாம் இரண்டு வாயில்களைப் பற்றி வாசிக்கின்றோம்.

ஒரு வாயில், இடுக்கமானது. மற்ற வாயில், அடைக்கப்பட்டது.

'இடுக்கமான வாயில் வழியே நுழையுங்கள்' என்று சொல்லும் இயேசு, சற்று விரைவா 'அடைக்கப்பட்ட வாயில்' பற்றியும் சொல்லுகின்றார்.

ஒருவரின் கேள்வியோடு தொடங்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம்: 'ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும் தானா?' அல்லது 'காப்பாற்றப்படுபவர்கள் சிலர் மட்டும்தானா?'

இந்தக் கேள்வியில் இரண்டு சொல்லாடல்கள் இருக்கின்றன: 'மீட்பு' என்பது ஒன்று. 'மீட்பைப் பெறுதல்' என்பது இரண்டு.

'மீட்பு' என்றால் என்ன? என்று நாம் கேட்டுக் குழம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், நம் பக்கத்தில் கடந்து போகும் பாஸ்டர் ஒருவர், 'நீங்க மீட்கப்பட்டுவிட்டீர்களா?' என்று கேட்டு நம்மை இன்னும் அதிகம் குழப்பிவிட்டுச் செல்வார். 'மீட்பு என்பது இவ்வுலகு சார்ந்ததா?' அல்லது 'மறுவுலகு சார்ந்ததா?' என்ற கேள்வியும், 'கிறிஸ்தவர்கள் மட்டும் மீட்பு பெறுவார்கள் என்றால் மற்றவர்கள் என்ன ஆவார்கள்?' என அடுத்தடுத்து கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல இன்னும் அதிகம் இறையியல் பின்புலம் தேவைப்படும். ஆகவே, மீட்பு என்பது நிலைவாழ்வு என்றும், இதைத் தருபவர் இயேசு மட்டுமே என்றும் மட்டும் இப்போதைக்கு எடுத்துக் கொள்வோம். ஆக, மீட்பு என்பது இறப்பிற்குப் பின் நிகழ்வது. இன்றைய நற்செய்திப் பகுதிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு பற்றிப் பேசுவதாலும், வீட்டுக் கதவை கடவுளே திறக்க முடிகிறது என்பதாலும், மீட்பு என்பது நிலைவாழ்வு அல்லது மறுவுலகு சார்ந்தது என்பதை நாம் உறுதியிட்டுச் சொல்ல முடிகிறது. இரண்டாவதாக, இயேசு 'எருசலேம் செல்லும் நோக்கில்' இருக்கும்போது இந்தக் கேள்வி அவரிடம் கேட்கப்படுகிறது. இயேசுவின் எருசலேம் பயணத்தின் நோக்கம் பலியும், அந்தப் பலி கொண்டுவரும் மீட்பும். ஆக, இந்தச் சூழலில் மீட்பு பற்றிய கேள்வி கேட்கப்படுவது சரியே. ஆனால், இயேசுவின் பதில் நமக்கு விவிலியத்தின் பல பகுதிகளை நினைவுபடுத்துகிறது.

'இடுக்கமான வாயில்' இயேசுவின் மலைப்பொழிவையும் (காண். மத் 7:13-14), 'அடைக்கப்பட்ட கதவு' தூங்கிக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரரையும் (லூக் 11:5-7), 'தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்' என்னும் இயேசுவின் அறிவுரையையும் (11:9), பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டையும் (மத் 25:10-12) நமக்கு நினைவுபடுத்துகிறது.

முதலில் இடுக்கமான வாயில் பற்றிச் சிந்திப்போம்.

இரண்டு வழிகளைச் சொல்லி, ஒரு வழி வாழ்விற்கும், அடுத்த வழி சாவிற்கும் இட்டுச் செல்கிறது என்று சொல்வதும், ஒரு வழி சிறந்தது எனவும், அடுத்த வழி சிறந்தது அல்ல எனவும் சொல்வது நம் கிறிஸ்தவ விவிலிய மற்றும் இலக்கியங்களில் காணக்கிடக்கிறது (காண். எரே 21:8, திபா 1:6, 4 எஸ்ரா 7:1-9, திதாகே 1-6). நம் தற்கால இலக்கியத்தில்கூட, 'அனைவரும் செல்லும் வழி,' 'யாரும் செல்லாத வழி' என்று இரண்டு வழிகள் பேசப்படுகின்றன (cf. Robert Frost). இவ்வனைத்திலும் நாம் வாழ்வின் வழி செல்ல வேண்டும் எனவும், அழிவின் வழி செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.

'இடுக்கமான வாயில்' என்பது ஓர் உருவகம்.

நாம் நம் அன்றாட வாழ்வில் நிறைய இடுக்கமான வாயில்களைப் பார்க்கிறோம். இந்த இடுக்கமான வாயில்கள் ஐந்து பண்புகளைக் கொண்டிருக்கின்றன:

அ. 'இடுக்கமான வாயில்கள் நமக்கு சுயஅறிவைத் தருகின்றன'

வங்கிக்குள் அல்லது விமான நிலையத்திற்குள் நாம் இடுக்கமான வாயில் வழியே நுழையும்போது, நம்மிடம் இருப்பது அனைத்தும் நம் நினைவிற்கு வருகிறது. நம் உடலை ஒட்டியிருக்கும் உலோகங்கள், நம் பேண்ட்டில் இருக்கும் பக்கிள் என அனைத்தும் நினைவிற்கு வருகிறது.

ஆ. 'இடுக்கமான வாயில்கள் அனானிமிட்டியிலிருந்து நம்மை விடுவிக்கின்றன'

நாம் கூட்டமாக இருக்கும்போது நமக்குப் பெயர் அல்லது அடையாளம் என எதுவும் இல்லை. நாம் நினைப்பதையும், சில நேரங்களில் நினைக்காததையும்கூட நம்மால் செய்ய முடிகிறது. இடுக்கமான வாயில்கள் நம்மைக் கூட்டத்திலிருந்து பிரித்து நம்மைத் தனித்தனி நபர்களாக, தான்மை உள்ள நபர்களாக்கிவிடுகின்றன.

இ. 'இடுக்கமான வாயில்கள் துன்பத்தைத் தருகின்றன'

அகலமான வாயில்களில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நுழையும் நாம் இடுக்கமான வாயில் வழியே நுழைய துன்பப்பட வேண்டும். நம் கைகளை ஒடுக்கி, அல்லது நம் உடலைத் திருப்பி நுழைய வேண்டிய கட்டாயம் சில நேரங்களில் அமைந்துவிடுகிறது.

ஈ. 'இடுக்கமான வாயில்கள் நம் வேகத்தைக் குறைக்கின்றன'

வங்கியிலிருந்து திருடிக்கொண்டு ஒருவர் வேகமாக வெளியேறினால் அவரின் வேகத்தைக் கட்டுப்படுத்தவே வெளியில் இருக்கும் வாயில் இடுக்கமாக உள்ளது. வேகமாக ஓடி வரும் ஒருவர் முழுவதும் நின்று தன் வேகத்தைக் குறைத்தபின்தான் இடுக்கமான வாயிலுக்குள் நுழைய முடியும்.

உ. 'இடுக்கமான வாயில்களைக் கண்டுபிடிக்காமல் நுழைவது ஆபத்தாக முடியும்'

வேகமாக வண்டியில் செல்கிறோம். நம் வண்டியின் அளவு நம் மனத்தில் இல்லாமல் இருந்தாலோ, அல்லது நமக்கு முன் இருக்கும் கேட்டின் அளவு நமக்குத் தவறாகப் பட்டாலோ நாம் அவற்றில் மோதிவிட வாய்ப்பும் உண்டு. இடுக்கமான வாயில்களைக் கண்டுபிடிக்காமல் போவதும் சில நேரங்களில் பேராபத்தில் முடிகின்றது.

'இடுக்கமான வாயில்' என்று இயேசு சொல்லும் போது அவரின் எண்ணத்தில் இவ்வைந்து கூறுகளும் இல்லை எனினும், 'துன்பம்' என்ற கூறு மேலோங்கி நிற்கின்றது.

ஆக, 'துன்பத்தின் வழியே மீட்பு' என்பதே இயேசுவின் உருவகத்தின் பொருள். இந்நற்செய்திப் பகுதியின் பின்புலத்தில் 'துன்பம்' என்பது இயேசுவுக்காக எருசலேமில் காத்திருக்கும் சிலுவை. முதல் கிறிஸ்தவர்களுக்கு 'துன்பம்' என்பது அவர்கள் அனுபவித்த பிரச்சினைகள் மற்றும் மறைச்சாட்சி துன்பங்கள்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து நாம் வாசிக்கக் கேட்ட இன்றைய இரண்டாம் வாசகமும் (12:57, 11-13) துன்பத்தின் முக்கியத்துவத்தையே மையப்படுத்திறது. 'கடவுளை' தந்தையாகவும், 'நம் அனைவரையும்' பிள்ளைகள் எனவும் உருவகிக்கும் ஆசிரியர், மகனைக் கண்டித்துத் திருத்தாத தந்தை உண்டோ என்று கேட்கின்றார். ஆக, நம் துன்பங்கள் எல்லாம் நம்மைக் கண்டித்துத் திருத்தவும், நம்மை நல்வழிப்படுத்தவுமே என்பது ஆசிரியரின் அறிவுரை.

நம் மனித மனம் 'நன்மை-தீமை' என்ற கட்டமைப்பில் இயங்க அறிவுறுத்தப்பட்டாலும், அது 'இன்பம்-துன்பம்' என்ற கட்டமைப்பில்தான் இயங்குகிறது. 'இன்பம்' தருவதைப் பற்றிக் கொள்ளவும், 'துன்பம்' தருவதை ஒதுக்கிவிடவும் செய்கிறது. உதாரணத்திற்கு, அதிகாலையில் எழுந்து தனிச்செபம் செய்வதோ, வாக்கிங் அல்லது ஜாக்கிங் செய்வதோ நமக்கு 'நன்மை' எனப்பட்டாலும், அதைச் செய்வதற்கு நாம் கட்டிலை விட்டு எழ வேண்டியது 'துன்பமாக' இருப்பதால், நம் மனம் அதைச் செய்ய மறுக்கிறது. ஆக, அதிகாலையில் துயில் எழுவதும் கூட இடுக்கமான வாயிலே. கடின உழைப்பு செய்வது, நன்றாகப் படிப்பது, உறவில் விழுந்த விரிசலை சரி செய்வது, அடுத்தவரைத் தேடிச் செல்வது, மற்றவருக்கு உதவி செய்வது - என இடுக்கமான வாயில்கள் நிறைய உள்ளன. இடுக்கமான வாயில்கள் வழி நாம் நுழைவதே, அல்லது துன்பங்களின் வழியே மீட்பு.

அடுத்ததாக, 'அடைக்கப்பட்ட வாயில்' பற்றிப் பார்ப்போம்.

மீட்பு என்னும் கதவு அடைக்கப்பட்டிருக்கிறது. அதைத் திறக்கும்படி வெளியே இருப்பவர் வீட்டு உரிமையாளரிடம் கேட்கின்றார். ஆனால், வீட்டு உரிமையாளர் திறக்க மறுக்கிறார். வெளியில் இருப்பவர் தான் யார் என்பதையும் அடையாளப்படுத்துகிறார்: 'நாங்கள் உம்மோடு உண்டோம், குடித்தோம். நீரும் எங்கள் வீதிகளில் போதித்தீர்' என வீட்டு உரிமையாளருக்கு நினைவுபடுத்துகிறார். ஆனால் உரிமையாளர் இவர்களைத் தெரியாது என்று சொல்லி வீட்டைத் திறக்க மறுத்ததோடல்லாமல், 'தீங்கு செய்வோரே என்னைவிட்டு அகன்று போங்கள்' என அவர்களை விரட்டுகின்றார்.

தொடக்கத் திருச்சபையின் பின்புலத்தில் பார்த்தோமென்றால், 'உண்பதும் குடிப்பதும்' அப்பம் பிட்குதலையும், 'வீதிகளில் போதிப்பது' திருத்தூதர்களின் போதனையையும் குறிக்கின்றன. ஆக, அப்பம் பிட்குதல் என்ற வழிபாட்டு நிகழ்விலோ, அல்லது திருத்தூதர்களின் போதனையைக் கேட்பதிலோ மீட்பு அடங்கி இருப்பதில்லை. பின் எதில் அடங்கி இருக்கிறது? நன்மை செய்வதில்.

ஆக, மீட்பு பெற முக்கியமானது நற்செயல்கள்.

நம் நற்செயல்களால்தாம் நமக்கு மீட்பு கிடைக்கிறது என்றால் இயேசுவின் இறப்பு மற்றும் தியாகப் பலி எதற்காக? - இந்தக் கேள்வியின் தேடலும் இறையியலே.

இயேசுவின் போதனை பிற இனத்தார் பற்றித் தொடர்கிறது: 'ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும், இறைவாக்கினர்களும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பர். 'நீங்கள்' புறம்பே தள்ளப்படுவீர்கள்.' 'இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

இங்கே, 'நீங்கள்' என்பது இயேசுவின் சமகாலத்து யூதர்களையோ, அல்லது 'எங்களுக்கு மீட்பு நிச்சயம் உண்டு' என்ற தன்னிறைவில் இருந்த லூக்காவின் திருஅவை மக்களையோ குறிக்கும். இந்த வாக்கியங்கள் சொல்வது இரண்டு:

ஒன்று, மீட்பு என்பது நம் பிறப்பால் அல்லது நம் அடையாளத்தால் நாம் ஆட்டோமேடிக்காக பெற்றுக்கொள்ளும் ஒன்று அல்ல.

இரண்டு, மீட்பு என்பது ஓர் இனத்திற்கும், நாட்டிற்கும், மக்களுக்கும் மட்டும் உரித்தானது அல்ல. அதை தன் கொடையாகக் கொடுக்க கடவுளுக்கு வல்லமை உண்டு. (இங்கே, 'மீட்பு என்றால் கொடையா?' என்ற எதிர்கேள்வி எழும் அபாயம் இருக்கிறது). இன்றைய முதல் வாசகம் (காண். எசா 66:18-21) சொல்லும் கருத்தும் இதுவே. பாபிலோனியாவிற்கு அடிமைகளாக நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவிக்கும் எசாயா, தொடர்ந்து, பிற இனத்தவரும் இஸ்ரயேலின் மாட்சி நோக்கி வருவர் என்று இறைவாக்கு உரைக்கின்றார். எருசலேமின் கதவுகள் பிற இனத்தாருக்கும் திறந்துவிடப்படுகின்றன. உள்ளே நுழையும் அவர்கள் இறைவனின் மாட்சிமையை உணர்ந்து கொள்வார்கள். இறைவனின் மேய்ச்சல் நிலத்தைக் கண்டு கொள்வார்கள். இறைவன் அவர்களின் உரிமைச்சொத்தாகவும் மாறுவார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. மீட்பு என்பது கொடை-செயல்

'மீட்பு' என்பது நாம் நம் நற்செயல்களால் உரிமையாக்கிக் கொள்வது என்பது மேலோங்கி நின்றாலும், இது இறைவனின் கொடை என்பதும், அது எவருக்கும் கொடுக்கப்படலாம் என்பதும் மறுக்க இயலாத ஒன்று. மீட்பு என்பது செயல் என்பதால் நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையைப் பொறுப்புணர்ந்து செய்வதிலும், மனந்தளராமல் நன்மை செய்வதிலும் நாம் துணிந்து நிற்க வேண்டும். மீட்பு நமக்கு தட்டில் வைத்து நீட்டப்படுவது அல்ல. நாமாகவே, நம் மீட்பை, நிலைவாழ்வை தேடிக்கொள்ள வேண்டும். மற்ற பக்கம், மீட்பு என்பது கொடை என்பதால் அதை கடவுள் யாருக்கும் கொடுக்கலாம் என்றும், எல்லாருக்கும் மீட்பு பெற தகுதி உண்டு என்பதையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த உள்ளம் வேண்டும். 'அடுத்த வீட்டு வேலையாளைக் குறை சொல்ல நீ யார்?' எனக் கேட்கிறது விவிலியம். மீட்பை கடவுள் தாம் விரும்பியவருக்குக் கொடுக்க முடியும். 'எனக்கு மீட்பு உண்டு!' என மார்தட்டிக் கொள்வதும், 'உனக்கு மீட்பு இல்லை!' என்று அடுத்தவரை தடை செய்வதும் சால்பன்று.

2. 'நன்மை செய்வது' என்றால் 'இடுக்கமான வாயில் வழியே நுழைவது'

தீமைகள் மலிந்திருக்கும் சூழலில் நன்மைகள் செய்ய துணிவு கொள்வதும் இடுக்கமான வாயில் வழியே நுழைவது. 'எனக்கு உகந்ததை மட்டும் நாடாமல் பிறருக்கு உகந்ததை நாடுவதும்' இடுக்கமான வாயில் வழியே நுழைவதுதான். வாயிலின் இடுக்கு அல்லது குறுக்கம் தனிநபரைப் பொறுத்தது. எனக்கு இடுக்கமாக தெரிவது உங்களுக்கு அகலமாகத் தெரியலாம். ஒவ்வொருவரும் தனது வாயிலை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

3. 'எனக்கு உங்களைத் தெரியாது!'

இயேசுவை நாம் அறிந்திருப்பதும், 'ஆண்டவரே, ஆண்டவரே' என்று வழிபாடு செய்வதும், அப்பம் பிட்டு உண்பதும், இரசம் குடிப்பதும், இறைவார்த்தை கேட்பதும் மட்டும் நம்மை ஆண்டவருக்கு உரியவர்களாக்கிவிடுவதில்லை. இதையும் தாண்டி அவர் நம்மை அடையாளம் காண வேண்டுமென்றால் நாம் நன்மை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். பாவத்தைப் பற்றிச் சொல்லும்போது, 'நாம் செய்த பாவங்கள்,' 'நாம் செய்யத் தவறிய நன்மைகள்' என்று குறிப்பிடுகின்றோம். தீமைகளில் இருந்து ஒதுங்கி நிற்பது போல, நன்மைகள் செய்யவும் நாம் பழக வேண்டும். கோபம் கொள்ளாமல் இருந்தால் போதுமா? எல்லாரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பயம் இல்லாமல் இருந்தால் போதுமா? துணிவு வேண்டும். குற்ற உணர்வு இல்லாமல் இருந்தால் போதுமா? என்னையும் பிறரையும் மன்னிக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருந்தால் போதுமா? என்னையே நான் முழுமையாக அறிதல் வேண்டும். இப்படி நன்மைகள் செய்தால் நாம் அவருக்கு அறிமுகம் ஆவோம். அவரும் நமக்குக் கதவுகளைத் திறந்துவிடுவார்.

4. 'இரண்டு அறிவுரைகள்'

'திருத்தப்படுவதற்காக துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுங்கள்' என அறிவுறுத்தும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இறுதியாக இரண்டு அறிவுரைகளை வழங்குகின்றார்: (அ) 'தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்'. இன்று நாம் பல நேரங்களில், தளராத கைகளையும், தள்ளாடாத முழங்கால்களை மட்டுமே தேடுகிறோம். ஆனால் உறுதியற்றவைகளைத் தேடி உறுதியூட்ட நம்மை அழைக்கிறது முதல் அறிவுரை. (ஆ) 'நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்' - எனக்கு துன்பம் வருகிறது என்பதற்காகவோ, அல்லது மற்றவர்களைத் தண்டிக்கும் நோக்குடனோ நான் தீமையான பாதையை தெரிவு செய்துகொள்ளக் கூடாது. எப்போதும் நேர்மை அல்லது நாணயம் அவசியம்.

5. 'அழுது அங்கலாய்ப்பீர்கள்'

'நீங்கள் வெளியே தள்ளப்படும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள்' என்கிறார் இயேசு. ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளாத எந்த உள்ளமும் அழுதுவிடுகிறது. நமக்குப் பிடித்தவர் எந்நாளும் நம்மோடு இருக்கிறார் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர் இறந்துபோய் அந்த எதிர்பார்ப்பு தகர்க்கப்படும்போது நாம் நம்மை அறியாமல் அழுதுவிடுகிறோம். எதிர்பார்ப்பு நமக்குக் கடவுளிடம்கூட இருக்கக் கூடாது. 'எனக்கு மீட்பு கிடைக்கும்' என்று நான் எதிர்பார்த்து அவரின் கதவுகளைத் தேடிச் சென்று தட்ட எனக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சினால் எனக்கும் அழுகையும், அங்கலாய்ப்புமே கிடைக்கும்.

என் வாழ்விற்கு எப்போதும் இரண்டு வாயில்கள். இவற்றில் இடுக்கமான வாயிலே மேல். இந்த வாயிலும்கூட எப்போதும் திறந்திருப்பதில்லை. இதன் வழி நான் நுழைய வேண்டும். இது திறந்திருக்கும்போதே நான் நுழைய வேண்டும்.

மீட்பு என்ற ஒன்றை கடவுளே ஏற்படுத்தி, அந்த மீட்பை பெறுவதற்கான வழியை அவரே அடைத்தும் வைத்து, நீயாக திறந்து கொள் என்று சொல்வதற்குப் பதிலாக,

அவரே அனைவரையும் மீட்பு பெற்றவர்களாக, நன்மை செய்பவர்களாகப் படைத்திருக்கலாமே?

ஏன் இரண்டு வேலை? - கேட்கிறது என் பாமரன் மனம்!