இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு

என்னிடம் இருப்பது நம்பிக்கையா? துரோகமா?

ஏசாயா 5: 1-7
பிலிப்பியர் 4:6-9
மத்தேயு 21:33-43

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே அனைவரும் நலமாக இருக்கின்றீர்களா?
மனிதர்கள் வாழ அடிப்படை தேவையாக இருப்பது எது? உணவு, உடை, இருப்பிடம். இந்த மூன்றையும் வைத்து அவனால் சந்தோசமாக வாழ முடியுமா? நிச்சயம் முடியாது. மனிதர்கள் இவ்வுலகத்தில் வாழ வேண்டுமானால் நம்பிக்கை அவசியம். நம்பிக்கை இல்லாத மனிதன் வேறற்ற மரத்திற்கு சமம். அதனால் தான் சொல்வார்கள் யானையின் பலம் அதன் தும்பிக்கையில் இருக்கின்றது ஆனால் மனிதர்களின் பலம் அவனது நம்பிக்கையில் இருக்கிறது. இப்படி மனிதனுக்கு நம்பிக்கையை தரக்கூடிய காரணிகள் ஏராளம். உதாரணமாக மனிதனின் சிந்தனை அவனுக்கு நம்பிக்கையைத் தருகிறது, நல்ல நம்பிக்கைகுரிய நண்பர்கள் நம்பிக்கையைத் தருகின்றனர், கடவுள் பக்தி நம்பிக்கையைத் தருகின்றது.. இப்படி மனிதர்களுக்கு பலத்தை தரும் நம்பிக்கைளும், நம்பிய மனிதர்கள் நம்மை ஏமாற்றும் போது நம்முடைய மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கின்றது.

இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்பிக்கையையும், நம்பிக்கையினால் வரும் ஏமாற்றத்தையும், (நம்பிக்கை துரோகத்தையும்) பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய சமூக, அரசியல் சூழலில் இந்த நம்பிக்கைத் துரோகத்தை பற்றி சிந்திப்பது இன்னும் சாலச்சிறந்தது. இன்றைய நாட்களில் சிறுகுழந்தை முதல் பல்போன தாத்தா பாட்டி வரை அனைவரும் அதிகமாக பார்த்து வருவது அன்றாட பிக்பாக்ஸ் நிகழ்வும், அரசியல் துணுக்குச் செய்திகளும் தான். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஒருபுறம் ஊட்டி வளர்த்தாலும் மற்றொரு புறம் நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் நிகழ்வுகளும் அவர்களை பாதித்து வருகிறது. உதாரணமாக அண்ணன் தங்கை என்று சொல்லி உறவுகளை உற்சாகப்படுத்தி வாழ்ந்த பிக்பாகஸ் வீட்டில் நம்பிக்கை துரோகம் நிறைந்து காணப்பட்டது. பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக நம்பிக்கை துரோகம் செய்யும் அரசியல் தலைவர்கள் மற்றொருபுறம் என பல.. இன்று நமது குழந்தைகளும், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வுக்கு எதை வாழ்க்கைப்பாடமாக எதுக்கொள்ள போகின்றோம். நம்பிக்கையையா? நம்பிக்கை துரோகத்தையா? சிந்திப்போம்.

இந்த உலகத்தில் வறுமையை சந்திக்காத மனிதர்கள் இருக்கலாம், நோயை சந்திக்காத மனிதர்கள் இருக்கலாம், ஏன் பிரட்சனைகளை சந்திக்காத மனிதர்கள் கூட இருக்கலாம் ஆனால் நம்பிக்கை துரோகத்தை சந்திக்காத மனிதர்கள் எவரும் இருக்க முடியாது. நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு சூழலில் இந்த நம்பிக்கை துரோகத்தை அனுபவித்திருக்கின்றோம். இன்று உயிர் போகும் வழியைக் கூட மக்கள் தாங்கிக்கொள்வார்கள் ஆனால் துரோகத்தினால் வரும் வழியை தாங்கிக்கொள்ளும் சக்தி எவரிடமும் இல்லை. எதையும் நான் தாங்கிக்கொள்வேன் நான் தைரியசாலி என்று சொல்பவர்கள் கூட தங்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தின் போது கண்கலங்கி விடுகின்றனர். உதாரணமாக இன்றைய சூழலில் கணவன் மனைவிக்கு செய்யும் துரோகம், மனைவி கணவனுக்கு செய்யும் துரோகம், நண்பர்கள் இழைக்கும் துரோகம், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் பெற்றோர்களும் இழைக்கும் துரோகம், ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் கூட சொத்துக்காகவும், பணத்திற்காகவும் இழைக்கும் துரோகங்கள், இன்று பதவிக்காக, அரசியல் சுயலாபத்திற்காக நடக்கும் துரோகங்கள் மலிந்து விட்டன. இந்த சூழலில் இன்றைய வாசகம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் நிலக்கிழார் தன்னுடைய திராட்சைத் தோட்டத்தை நன்கு பக்குவப்படுத்தி, திராட்சை பயிரிட்டு அதை சரியான முறையில் பாதுகாத்து வருகின்றார். திராட்சை தோட்டத்திற்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தாமே முன்னிருந்து செய்கின்றார். கடைசியில் தன்னுடைய தொழிலாளர்களுக்கே தனது திராட்சை தோட்டத்தை குத்தகைக்கு விடுகின்றார். காரணம் தன்னுடைய தொழிலாளர்களுக்கே குத்தகைக்கு விடுகின்றார் என்று சொன்னால் அதற்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றது. குறிப்பாக எங்களது கிரமங்களில் குத்தகைக்கு விடுவதற்கு ஒருசில சட்டங்கள் இருக்கின்றன. முதலில் குத்தகைக்கு எடுக்க கூடியவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். காரணம் வருடா வருடம் குத்தகைக்கு ஏற்ற பணத்தையோ பொருளையே தக்க நேரத்தில் கொடுக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக குத்தகைக்கு எடுப்பவர்கள் அந்த தொழிலை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக விவசாயம் தெரிந்தவர்தான் விவசாயத்தை குத்தகைக்கு எடுக்க வேண்டும். விவசாயம் தெரியாதவர் குத்தகைக்கு எடுத்தால் எவருக்கும் பயன் இல்லை. மூன்றாவதாக உறவுக்காரர்களுக்கே குத்தகைக்கு விடும்போது அது அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பையும், மரியாதையையும் குறிக்கும்.

இப்படியாக அந்த தோட்ட உரிமையாளர் தன்னுடைய தொழிலாளர்கள் நம்பிக்கைகு உரியவர்கள் எக்கருதினார். இரண்டாவதாக வேறெருவருக்கு குத்தகைக்கு விடுவதைக் காட்டிலும் தன்னுடைய தொழிலாளர்களுக்கு விட்டால் அவர்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதியிருக்க வேண்டும். முன்றாவதாக தன்னுடைய தொழிலாளர்கள் மீது அன்பும் பாசமும் வைத்திருக்க வேண்டும். இப்படி தன்னுடைய தொழிலாளர்களை நம்பி தனது திரட்சை தோட்டத்தை குத்தகைக்கு விடுகின்றார். ஆனால் இவரது இந்த அளவற்ற நம்பிக்கைக்கு உரிய அவருடைய தொழிலாளர்கள் அவருக்கு துரோகம் செய்ய ஆரம்பிக்கின்றனர். தனக்கு வரவேண்டிய பங்கை கேட்டு தனது பணியாள்களை அனுப்புகின்றார். ஆனால் அந்த தொழிலாளர்களோ ஒருமுறை அல்ல, இருமுறையல்ல பல முறை நம்பிக்கை துரோகம் செய்கின்றனர். கடைசியாக தனது மகனையும் நம்பிக்கையோடு அனுப்புகின்றார். எனது மகனை நிச்சம் மதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அனுப்புகின்றார். ஆனால் அவரையும் அவர்கள் கொன்று போடுகின்றனர்.

பிரியமானவர்களே நம்பிக்கை துரோகத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

நம்மிடம் இருக்கும் அளவுகடந்த ஆசையே நம்பிக்கை துரோகத்திற்கு காரணமாக அமைகிறது. இந்த துரோக்திற்கு மூன்று முக்கிய காரணங்களை பட்டியலிடலாம். 01. மண்ணாசை (நிலம் மற்றும் அதைச் சார்ந்த ஆசைகள்), பெண்ணாசை (பெண்கள் மீது வரும் தவறான ஆசைகள்), பொருளாசை (பணம், பதவி, பட்டங்கள்) ஆகிய இந்த மூன்றும் அளவுகடந்த ஆசைகளாக இருக்கும் போது அங்கு சொந்த தாயாக இருந்தாலும், தன்னுடைய பிள்ளைகளாக இருந்தாலும் துரோகம் செய்ய தயங்குவதில்லை. இங்கு இந்த நற்செய்தியிலே இந்த தோட்ட தொழிலாளர்கள் மண்ணாசை (நிலம் மற்றும் அதைச் சார்ந்த ஆசைகள்), குறுக்கு வழியில் முதலாளிகளாக வாழ ஆசைப்படுகின்றனர். எனவே தோட்ட உரிமையாளர் அனுப்பிய அனைவரையும் மண்ணாசைக்காக கொன்று போடுகின்றனர்.

பிரியமானவர்களே அந்த பங்கிலே அந்தோணி மற்றும் பவுல் ராஜ் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். அந்த பங்கு மக்கள் அனைவருமே நம்பிக்கைக்கும், நல்ல நட்பிற்கும் இவர்கள் இருவரைத்தான் உதாரணமாக காட்டுவார்கள். ஒரு முறை இருவரும் சேர்ந்து பைனான்ஸ் கம்பெனி தொடங்கினர். மக்களும் ஆர்வமாக இவர்களது நன்னடத்தையை பார்த்து நிறையபேர் பணம் முதலீடு செய்யத் தொடங்கினர். ஒருநாள் அந்தோணிக்கு தான் வைத்திருந்த பணத்தின் மீது அளவுகடந்த ஆசை, கம்பெணியில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக யாருக்கும் தெரியமல் ஊரைவிட்டு ஓடிவிட்டான். மறுநாள் பணம் கொடுத்த மக்கள் அனைவரும் பவுலை சிறைபிடித்து, துரோகிகளே என்று பட்டம் சூட்டி, பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் கெலைசெய்யவும் தயங்கமாட்டோம் என எச்சரித்தனர். பவுலுக்கு என்ன செய்வது எனத் தெரியமால் சிந்தித்துக்கொண்டிருந்தான். எனக்கும் என்னை நம்பிய இந்த மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு ஓடிவிட்டானே என்று அந்தோணியை நினைத்து அழத்தொடங்கி விட்டான். ஆம் அன்புக்குரியவர்களே பல ஆண்டுகளாக நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் இன்று துரோகிகள் என்ற பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

முன்பெல்லாம் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை கேள்விப்பட்டிருக்கின்றோம் அதிலே அதிகமான பாதிப்பு இல்லை. ஆனால் இன்று நமது அன்றாட வாழ்வில் நாமும் நமது பிள்ளைகளும் இதுபோன்ற சம்பவங்களை கண்கூடாக பார்த்து வருகின்றோம். இதிலே மற்றவர்களைப் பார்த்து நாம் துரோகிகள் என்று கூறுகின்றோம். ஆனால் நாம் ஒவ்வருவருமே நம்பிக்கை துரோகிகள் என்பதை மறந்து மற்றவர்கள் மீது பழிசுமத்தி வருகின்றோம்.

இன்று நாம் எப்படி? நம்பிக்கைக்கு உரியவர்களா? அல்லது நம்பிக்கைத் துரோகிகளா? என சிந்திக்க இன்றைய முதல் வாசகம் நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது. ஏசாயா இறைவாக்கினர் எழுதிய திராட்சை தோட்டம் பற்றிய கவிதையை இன்று நாம் படித்தோம்.

இந்த வாசகத்தில் வரும் நண்பர் கடவுள் யாவே இறைவனைக் குறிக்கின்றது. திரட்சைத் தோட்டம் அன்றைய இஸ்ராயேல் மக்களையும், இன்றைய கிறித்தவர்களையும் குறிப்பாக உங்களையும் என்னையையும் குறிக்கின்றது. பழைய ஏற்பாட்டிலே இஸ்ராயேல் மக்களை தன்னுடைய மக்களாக யாவே இறைவன் தோர்ந்து கொள்கின்றார். இப்படி தேர்ந்து கொண்டவர்களை ஒவ்வொருநாளும், ஒவ்வொரு நொடிப்பபொழுதும் கண்ணின் மனிபோல அவர்களை காத்து வருகின்றார்.

யாவே இறைவன் எந்த அளவிற்கு தன்னுடைய மக்களை பேணிவளர்த்தார் என்பதை ஒசோயா இறைவாக்கினர் 11 வது அதிகாரத்தில் குறிப்பிடுகின்றார். “இஸ்ராயேல் குழந்தையாய் இருந்த போது அவன் மேல் அன்பு கூர்ந்தேன். எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தோனோ அவ்வளவுக்கு என்னை விட்டு பிடிவாதமாய் விலகிப்போனார்கள். பாகால்களுக்கு பலியிட்டார்கள், சிலைகளுக்கு தூபம் காட்டினார்கள், ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே, அவர்களை கையிலேந்தியதும் நானே, அவர்களை குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமல் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்பு கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன். அவர்கள் கழுத்தின் மேல் இருந்த நுகத்தை அகற்றினேன். அவர்கள் பக்கம் சாய்ந்து உணவுட்டினேன்… ஆனாலும் என் மக்கள் என்னைவிட்டு விலகிப் போவதிலே கருத்தாய் இருக்கின்றார்கள். எப்ராயிமே! உன்னை எப்படி கைவிடுவேன், இஸ்ராயேலே உன்னை எப்படி கை நெகிழ்வேன்…”

பிரியமானவர்களே ஒரு தாயும், தந்தையும் தான் பெற்றெடுத்த குழந்தைகளை கவனிப்பது போல யாவே இறைவன் இஸ்ராயேல் மக்களை வழிநடத்தினார். ஏன் இன்றும் கூட நம் ஒவ்வொருவரையும் கடவுள் நல்ல உடல் சுகத்தோடும், நல்ல பிள்ளைச் செல்வங்களோடும், நல்ல தொழிலையும், அந்த தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் கொடுத்து, இரவு பகலாக நம் அனைவரையும் அனைத்துவித ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்து வருகின்ற இறைவனுக்கு நாம் எப்படி நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றோமா?

முதல் வாசகத்தின் வழியாக இறைவன் கூறுகின்றார். அந்த நான்காவது வசனத்தில் இருந்து திராட்சை தோட்டத்திற்கு பதிலாக நம்முடைய பெயரை சொல்லி படித்து பார்ப்போமா!. உதாரணமாக (சகாயம் என்ற பெயர்) “என் அன்பர் சகாயத்திற்கு நான் செய்யாது விட்டுவிட்டதும், இனி செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தருவான் என்று நான் காத்திருக்க காட்டுப்பழங்களை தந்தது ஏன்?” பிரியமானவர்களே இன்று நமது ஒவ்வொவரின் பெயரையும் சொல்லி படித்து பார்ப்போம். கடவுள் நமக்கு செய்யாது விட்டது என்ன? தாயின் கருவில் இருந்து இந்த நிமிடம் வரை நம் ஒவ்வொருவரையும் கடவுள் காத்து வருகின்றார். அப்படி காத்து வரும் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? நல்ல கனிகள் தான். உதாரணமாக பரிசுத்த ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சிஇ அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் போன்றவை.

கடவுள் முன்னிலையில் நாம் அனைவரும் நம்பிக்கையானவர்கள் என்றால்: இன்று நம்மில் எத்தனை பேர் நம்முடைய பகைவர்களை முழுமையான மனத்தோடு மன்னித்து அன்பு செய்து வாழ்கின்றோம்? நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சி குடிகொண்டுள்ளதா? அல்லது சோகமும், கவலையும் குடிகொண்டுள்ளதா? நம்முடைய குடும்பத்திலே எத்தனை பேர் பொறுமையை கையாளுகின்றோம்? இன்று நாம் அனைவருமே நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றோமா? எத்தனை மனிதர்களை நாம் முழுமையாக நம்புகின்றோம்? கனிவுடையவர்களாக இருக்கின்றோமா? கடவுள் நம்மிடமிருந்து பணத்தையையோ, பொருளையோ விரும்புவதில்லை மாறாக நாம் அனைவரும் நல்ல மனிதர்களாக, நம்பிக்கை உள்ள மனிதர்களாக வாழ விரும்புகின்றார். மேலே சொல்லப்பட்ட செயல்களுக்கு எதிராக நம்முடைய வாழ்க்கை அமைந்ததென்றால் நாமும் நம்பிக்கை துரோகிகளே!

இன்றைய இரண்டாவது வாசகத்தில் தூய பவுல் கூறுகின்றார்: அன்பு பங்கு மக்களே உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பதக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, இவற்றை மட்டும் நம்முடைய மனதில் இருத்தி வாழும் போது கடவுளின் அமைதியும் அருளும் நம்மோடு குடியிருக்கும். நம்மை தேர்ந்தெடுத்த கடவுள் நம்பிக்கைகு உரியவர் எனவே நாமும் நம்பிக்கைக்கு உரியவர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

பிரியமானவர்களே கடவுள் எதிர்பார்க கூடிய அளவிற்கு கடவுள் முன்னிலையில் நாம் நம்பிக்கை உரியவர்களா? அவரது நம்பிக்கை துரோகிகளா?