இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் பதிநான்காம் ஞாயிறு

உமது திருவுளம் நிறைவேற்ற…

செக்கரியா 9:9-10
உரோமையர் 8: 9, 11-13
மத்தேயு 11:25-30

இறைவா இதோ வருகின்றோம்- உம்
திரு உள்ளம் நிறைவேற்ற
கல்லான இதயத்தை எடுத்துவிடு -எமை
கனிவுள்ள நெஞ்சுடனே வாழ விடு-2
எம்மையே நாங்கள் மறக்கவிடு -கொஞ்சம்
ஏனையோர் துன்பம் நினைக்கவிடு
பலியென உணவைத் தருகின்றோம் -நிதம்
பசித்தோர்க்குணவிட மறக்கின்றோம்-2
கடமை முடிந்ததென நினைக்கின்றோம்- எங்கள்
கண்களைக் கொஞ்சம் திறந்துவிடு


இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே, இறைவனின் திருவுள்ளத்தை நிறைவேற்ற ஆலயம் வந்துள்ள உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் வரவேற்கின்றேன். எல்லோரும் நன்றாக இருக்கின்றீர்களா? இன்றைய மூன்று வாசகங்களும் கடவுளின் திருவுளத்தைப் பற்றி பேசுகின்றன. நற்செய்தி வாசகத்தில் இறைவன் தமது திருவுளத்தை ஞானிகளுக்கும், அறிவாளிகளுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகிறார். இரண்டாவது வாசகத்தில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றினால் பரிசுத்த ஆவி நம்மில் குடிகொள்வார் எனவும், முதல் வாசகத்தில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களின் வாழ்வில் சந்தோசமும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும் என கூறுகிறது. எனவே நம்முடைய மண்ணுலக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இறைவனின் திருவுளத்தை அறிந்து, அதை செயல்படுத்துவோம்.

இறைவனின் திருவுளம் என்றால் என்ன? அல்லது எதுவெல்லாம் இறைவனின் திருவுளம்?
பிரியமானவர்களே நாம் தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, பலவேளைகளில் “உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக” என்று ஒவ்வொரு முறையும் நாம் ஜெபிக்கின்றோம். ஆக கடவுளின் திருவுளம் என்ன?

இறைவனின் திருவுளம் என்பது இறைவனின் விருப்பத்திற்கு நமது விருப்பங்களை அடிபணியச் செய்வது தான் கடவுளின் திருவுளம் ஆகும். உதாரணமாக பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம் தொடங்கி புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாள் வரை பலர் இறைவனின் திருவுளத்திற்கேற்ப வாழ்ந்திருக்கிறார்கள். "இதோ ஆண்டவரின் அடிமை உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்” என்ற அன்னையின் வார்த்தைகள் அவர் இறைவனின் திருவுளத்திற்குத் தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்ததற்கு ஓர் உதாரணம்.

ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்" என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். தொநூல் 12:1-4 இவ்வாறு ஆபிரகாம் இறைவனின் திருவுளத்திற்குத் தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்தார்.

ஆண்டவர் “மோசே, மோசே" என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் "இதோ நான்" என்றார். இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன். எனவே இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன் என்றார். மோசே தம் மனைவியையும் தம் புதல்வர்களையும் ஒரு கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் சென்றார். வி.ப 3-4. எங்கு செல்லக்கூடாது என நினைத்தாரோ இறைவனின் திருவுளத்திற்க்காக தன்னுடைய சுய விருப்பத்தை விட்டு விட்டு கடவுளின் வார்த்தைக்கு அடிபணிந்து எகிப்திற்கு புறப்பட்டு சென்று இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்.

இப்படியாக இறைவனின் திருவுளம் எது என்பதைத் தங்கள் வாழ்வில் ஆய்ந்து அறிந்து நடைமுறைப்படுத்தியவர்கள்தான் இன்று புனிதர்களாக, மறைசாட்சிகளாக, விசுவாசிகளாகப் போற்றப்படுகின்றனர். இன்று நம்மில் எத்தனை பேர் இறைவனின் திருவுளத்தை அறிந்தவர்களளாக இருக்கின்றோம்? நம்முடைய வாழ்வில் நாம் எப்படியெல்லாம் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுகின்றோம்.?

நம்முடைய வாழ்வில் இறைவனின் திருவுளம்:
மனித இயல்பைக் கொண்டுள்ள நம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான விருப்பு வெறுப்புகள் உண்டு. நாம் நினைக்கின்ற விருப்பங்கள் எல்லாம் நிறைவேற வேண்டும் என்று ஆவல் கொள்வதும், அவை நடந்தேறுகின்றபோது மகிழ்வு அடைவதும் இயல்பு. அதே வேளையில், நாம் நினைத்தது நடக்காதபோது வருத்தம் கொள்வதும், அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இறைவன் நம்மை கைவிட்டு விட்டதாக நினைப்பதும் உண்டு.

அருண் - சாந்தி என்ற தம்பதிகளுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள். ஆனால் அந்த அருணுக்கு தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என நினைத்து இறைவனிடம் கேட்டாராம். ஆனால் இறைவன், மகனே நான்தான் உனக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்து இருக்கிறேனே, அது போதாதா?என்று கேட்டுவிட்டு நீ சென்று அவர்களோடு சந்தோஷமாக வாழ்ந்து நிம்மதியாக இரு என்று சொன்னாராம். ஆனால் அந்த அருனோ இல்லை ஆண்டவரே! நீர் எனக்கு அவசியம் ஒரு ஆண் குழந்தையை கொடுத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக கேட்டாராம். இறைவனும் அவர் அவ்வாறு பிடிவாதமாக கேட்டதால் சரி தருகிறேன் என்று வாக்களித்து அதன்படியே ஒரு ஆண் குழந்தையை கொடுத்தாராம். அருணுக்கு மிகவும் சந்தோஷம்.

இப்படியாக சில வருஷங்கள் சென்றன. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாய் ஆனார்கள். ஆனால் அந்த பையனோ தன் தகப்பன் பேச்சை ஒருநாளும் கேட்காமல் தினமும் குடித்துவிட்டு, போதைப்பொருளுக்கு அடிமையாகி மிகவும் துன்பத்தை கொடுத்து வந்தானாம். அப்பொழுது அந்த தகப்பன் இறைவனிடம் சென்று தன் மகன் செய்யும் காரியத்தை சொல்லி புலம்பி அழுதாராம். அப்பொழுது இறைவன் முந்திய நாட்களை ஞாபகப்படுத்தி நான்தான் சொன்னேனே, நீ உன் இரண்டு பெண் பிள்ளைகளுடன் சந்தோஷமாக இரு என்று சொன்னேனே. நீதான் கேட்காமல் பிடிவாதமாக எனக்கு ஒரு ஆண்குழந்தை வேண்டும் என்று கேட்டாய். இப்பொழுது எதற்காக புலம்புகிறாய்? என்று இறைவன் கேட்டாராம். அந்த தகப்பன் உடனே மனம் வருந்தி ஆம் ஆண்டவரே! நான் உமக்கு முன் பாவம் செய்தேன். உமது திருவுளத்தை நான் கேட்டும் அதன்படி நடக்காமல் என் மனம் விரும்பியதை அடைய நினைத்தேன். அதனால் இப்பொழுது அதை நினைத்து கஷ்டப்படுகிறேன். ஆண்டவரே என்னை மன்னியும், எனக்கு இரங்கும் என்று அழுது இனி என் விருப்பப்படி எதுவும் கேட்காமல் உமது திருவுளப்படியே கேட்பேன் என்று சொன்னாராம்.

ஆம்இ பிரியமானவர்களே! நம்மை உருவாக்கிய கடவுளுக்கு நமக்கு எது தேவை எது தேவையில்லை என்று முற்றிலும் அறிந்துள்ளார். நாம் நினைப்பதற்கும், வேண்டுவதற்கும் அதிகமாகவே நமக்கு செய்ய காத்திருக்கிறார். ஆகையால் சில வேளைகளில் நம்முடைய ஜெபங்கள் கேட்கப்படவில்லை என்றால் நாம் வருத்தப்படாமல் இறைவா! உமது திருவுளப்படி தந்தருளும் என்று நம்மையே முழுவதுமாக அவரிடம் ஒப்புக்கொடுத்தால் அவரின் செயல்பாடு அனைத்தும் மிகவும் இனியதாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். எனவே நமது விருப்பத்தை இறை விருப்பத்தற்கு அடிபணியச் செய்யும் போது இறைவனின் திருவுளம் நம்முடைய வாழ்வில் அர்த்தம் பெறுகிறது.

ஏன் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும்?
இன்றைய உலகில் மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அல்லது தேடக்கூடியது எதுவென்றால் அமைதியும், நிம்மதியுமே. இந்த அமைதியும், நிம்மதியும் எங்கு கிடைக்கும்? பணத்தில் அமைதி கிடைக்கும் என்று பணத்தை தேடுகின்றோம் ஆனால் பணம் வந்த பிறகு நம்மிடம் இருந்த அமைதியும் நம்மை விட்டு சென்று விடுகிறது. திருமணம் முடித்தால் நிம்மதி கிடைக்கும் என்று திருமணம் முடிக்கின்றனர் ஆனால் திருமணம் முடித்தவர்கள் திருமண வாழ்வில் நிம்மதியில்லை என்று கூறுகின்றனர், இப்படியாக பதவி, சொத்து, பிள்ளைகள், படிப்பு என பலவற்றை தேடி ஓடி அழைகின்றோம் ஆனால் கடைசியில் அமைதியையும், நிம்மதியையும் இழந்து வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறாக மனிதன் தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள், அல்லது நிம்மதியையும், அமைதியையும் தருபவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று தேடுகிறான். மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்; கேலி செய்கிறார்கள். ஆகவே, அவன் அவன் கடவுளை நோக்கி சரணடைகிறான். இந்தத் கடவுள் அவன் குறையைக் கேட்டு அவனுக்கு நிம்மதியையம், அமைதியையம் தருகிறார்.

கடந்த வருடம் விடுமுறைக்காக எனது வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம். குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. அரசாங்க உதவியில் இரண்டு மூன்று இடங்களில் போர் போட்டும் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. எனவே இரண்டு மூன்று மைல்கள் நடந்தும், சைக்கிளில் தண்ணீர் எடுத்து வந்தனர். அப்போது நீரோட்டம் பார்க்கும் ஒரு மனிதர் எங்களது தோட்டத்தின் அருகில் நின்றுகொண்டு இங்கு நீங்கள் போர் (ஆள்துளை கிணறு )போட்டால் நிச்சயம் தண்ணீர் கிடைக்கும் என்றார். அவர் சொல்லி முடித்தவுடன் அருகில் இருந்த மரத்தில் இருந்து ஒரு பல்லி சத்தம் போட்டது. அதேவேளையில் எங்களது கோவிலில் ஒவ்வொரு மணிக்கும் ஒரு மணிஅடித்து இறைவசனம் சொல்லும் கருவியை பொருத்தியிருந்தனர். அந்த மணியும் அப்போது அடித்தது அதிலிருந்து இறைவார்த்தை மத்தேயு 7:7 ஐ வாசித்தது “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்”.

இந்த இறைவார்த்தையை நம்பி அடுத்த ஒருசில நாட்கள் கழித்து போர் போட ஆரம்பித்தோம். 550அடி ஆழம் வரைச் சென்றது. ஆனால் தண்ணீருக்காக ஒரு அறிகுறியும் கூட தென்படவில்லை. அங்கிருந்த ஒருசிலர் தவறாக பேச ஆரம்பித்தனர். நான் எங்களது ஆலயத்திற்கு சென்று சற்று அமைதியாக ஜெபிக்க ஆரம்பித்தேன். மீண்டும் ஆலயத்தின் இருந்த மணி அடித்தது அதிலே மத்தேயு 6:30-ல் “நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா” என்ற இந்த வசனம் ஒலித்தது. இது எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது மீண்டும் 50 அடி போடச்சொன்னோம் மிகவும் அற்பதமாக நீருற்று பொங்கி வந்தது. இந்த செயல் அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. காரணம் பல இடங்களில் தேடியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இறைவார்த்தையை நம்பி வேலையை தொடங்கினோம் அதிலே வெற்றியும் அடைந்தோம். இன்று ஊர் மக்கள் அனைவரும் அதிலே தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

பிரியமானவர்களே இன்றைய முதல் வாசகத்தில் “மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி” என்று நம்மை வாழ்த்துகிறது. காரணம் நாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றும் போது நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும், நிம்மதியையும் நாம் பெற்றுக்கொள்கின்றோம்.

ஆனால் இறைவனின் திருவுளத்திற்கு மாறாக நமது விருப்பத்தை நாம் நிறைவேற்றும் போது அங்கு துன்பங்களையும், சோதனைகளையும் நாம் சந்திக்கின்றோம். உதாரணமாக ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்"; என்று கட்டளையிட்டுச் சொன்னார்… ஆனால் ஆதாமும் ஏவாளும் பார்க்கின்றனர் அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்புட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, ஏவாள் அதன் பழத்தைப் பறித்து உண்கிறாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுக்கிறாள். அவனும் உண்கிறான். இங்கே இருவரும் கடவுளின் திருவுளத்தை மறந்து தங்களுடைய சுய விருப்பங்களையும், தங்களுடைய ஆசைகளையும் நிறைவேற்றுகின்றனர். அதானல் துன்பங்களையும், கடவுளின் சாபத்தையும் அனுபவிக்க ஆரம்பிக்கின்றனர்.

இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் கூறுகிறார் மனிதர்களாகிய நாம் அனைவருமே ஊனியல்பைக் கொண்டிருக்கின்றோம். இந்த ஊனியல்புக்கு ஏற்ப நம்முடைய சுய விருப்பங்களை நிறைவேற்றும்போது சாவு நிச்சயம் என்பதை நன்கு தெளிவுபடுத்துகிறார். “நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள் ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்” ஆதாமும், ஏவாளும் தங்களுடைய ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தனர். அதனல் சாவும், துன்பமும் அவர்களை கவ்விக்கொண்டது.

எனவே இன்று நம்முடைய வாழ்விலும் கூட எப்பொழுதெல்லாம் இறைவனின் திருவுளத்தை மறந்து நம்முடைய சிறுசிறு ஆசைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுகின்றோமோ அப்போதே துன்பத்தை அனுபவிக்க ஆரம்பித்து விடுகின்றோம். ஆனால் நம்முடைய கடவுள் நாம் துன்பப்படுவதை விரும்புவதில்லை. நாம் கடவுளை விட்டு எவ்வளவு தூரம் விலகிச்சென்றாலும் அவர் நம்மோடு வந்து நம்மை காக்கின்றார். கடவுளின் திருவுளத்தை மறந்து நம்முடைய சுய விருப்பத்தின் பேரில் செயல்களைச் செய்யும்போது நாம் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தாலும் நம்மை காக்கும் தேவன் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்த ஆசைப்படுகிறார். அதனால் தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்றர். எனவே இறைவனின் திருவுளத்தை எப்படியெல்லாம் நாம் அறிந்து நம்முடைய வாழ்வில் செயல்படுத்துகின்றோம் என்பதை சிந்திப்போம்.

இறைவனின் திருவுளத்தை அறிந்துகொள்ளுதல்:
நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது எங்கள் கிராமங்களில் நான் பார்த்தது. ஏதாவது ஒரு செயல் செய்யும்போதோ, அல்லது திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் பல சுபகாரியங்கள் தங்களது குடும்பங்களில் அல்லது ஊரில் நடந்தேரும்போது அவை நல்லவிதமாக நடக்குமா நடக்காத? என்பதை அறிந்து கொள்வதற்கு பூக்கட்டி வைத்துப் பார்ப்பார்கள். வெற்றிலைப் பாக்கு வைத்துக் கேட்பார்கள். இன்னும் ஒருசில பேர் கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் பல்லி சப்தமிட்டால் இது இறைவனின் திருவுளம் என மகிழ்வார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லையென்றால், அந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள். கடவுள் அனுமதித்தால் மட்டுமே அந்தக் காரியத்தைச் செய்வார்கள்.

குறிப்பாக நம்முடைய கத்தோலிக்க திருச்சபையில் விவிலியத்தை திறந்து பார்த்து அதிலே வரும் இறைவார்த்தையை படித்து திருவிழாக்கள், திருமணங்கள் நடந்ததையும் நான் பார்த்திருக்கின்றேன். இப்படி எல்லாவற்றிற்குமே தெய்வத்தை நம்பி, அதன் மூலம் தங்களது காரியத்தை தொடங்குவார்கள். அதிலே வெற்றியும் அடைந்து இருக்கின்றார்கள். இன்று விஞ்ஞான உலகில் வளர்ந்து வரும் நாம் எந்தெந்த வழிகளில் இறைவனின் திருவுளத்தை அறிகிறோம்? நம்முடைய இறைவன் பலவேளைகளில் தன்னுடைய திருவுளத்தை நமக்கு தெரியப்படுத்துகிறார். நம்மில் எத்தனைப் பேர் அவரின் திருவளத்தை அறிந்தவர்களாக இருக்கின்றோம்? அல்லது உண்மையிலே இறைவனின் திருவுளத்தை அறிந்து பிறகு அவரில் நம்பிக்கை வைத்து நமது காரியங்களை நாம் தொடங்குகின்றோமா? அல்லது நம்முடைய சுய விருப்பத்தின் பேரில் நமது செயல்களை நாம் செய்கின்றோமா? சிந்திப்போம்.

இறைவா உமது திருவுளத்தை நிறைவேற்ற நான் தயாராக இருக்கின்றேன். என்னை உமது கருவியாக பயன்படுத்தும் என வேண்டுவோம். ஆமென்.