இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலத்தின் முதலாம் ஞாயிறு (A)

ஆசைகள் + சோதனைகள் = பாவம்

ஆதியாகமம் 2:7-9,3:1-7
உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11

கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே! எல்லோரும் நன்றாக இருக்கின்றீர்களா?
இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை சிறப்பிக்கிறோம்.
தவக்காலம் என்றால் என்ன?
இயேசுவின் பாடுகளை தியனிக்கும் காலம், ஒருத்தல் முயற்ச்சிகளை மேற்கொள்ளும் காலம், ஒருவர் சொன்னார் இது சோதனையின் காலம் என்று. காரணம் இந்த தவக்காலத்தில் தான் மனிதர்கள் ஏரளமான சோதனைகளை சந்திக்க நேரிடும் என்றார். இப்போது உங்களிடம் கேட்கிறேன். மனிதர்களுக்கு சோதனைகள் வருமா? வராதா?
சோதனைகள் வரும் அப்படித்தான!

இயேசுவில் பிரியமானவர்களே ஒரு முறை அந்த கிரமத்திலே மக்களோடு மக்களாக சேர்ந்து நானும் பேருந்துக்காக காத்திருந்தேன். வரக்கூடிய பேருந்தானது வரவில்லை. அங்கிருந்த ஒரு மனிதர் இவ்வாறக பேசிக்கொண்டார் ‘எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை’. நான் எப்ப வந்தாலும் இந்த பேருந்து சரியான நேரத்திற்கு வருவதில்லை என்று சலித்துக்கொண்டார். சிறிது நேரம் களித்து பேருந்து வந்தது அனைவரும் எறினோம். அந்த பேருந்திலே மற்றொரு மனிதர் இன்னக்கி காலையிலே இருந்தே எனக்கு நேரம் சரியில்லை என்று சலித்துக் கொண்டவர், அவரும் இவ்வாறாக கூறினார் கடவுளே! ‘எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை’ சரியான நேரத்திற்குள் போகவில்லையென்றால் அந்த மனிதர் எனக்கு பணம் தரமாட்டார் என்று வேதனைப்பட்டார். ஒரு சிற்றாலயத்திலே ஒரு போதகர் மக்களைப் பார்த்து ‘உங்களிடத்திலே சாத்தானின் சோதனை நிறைய இருக்கிறது’ என்று கூறினார். ஆம் அன்புக்குரிவர்களே! இப்படிப்பட்ட சொல்லாடல்களை நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். இன்றைய வாசகங்களும் சோதனைகளை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. அப்படியென்றால், உங்களில் அல்லது நம் உலகத்தில் சோதனைகளை சந்திக்காத மனிதர்கள் யாரேனும் உண்டா? (ஆம், இல்லை)

சோதனைகளை சந்திக்காத மனிதர்கள் யாரும் இருக்கமுடியாது. ஏன் நம்முடைய கடவுளாகிய இயேசுவும் தன் வாழ்க்கையில் பலநேரங்களில் சோதனையை சந்தித்திருக்கிறார். அதில் ஒன்றைத்தான் இன்றைய நற்செய்தியிலே வாசிக்க கேட்டோம். மேலும் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் 4:15-ல் “இயேசு கிறிஸ்து எல்லா வகையிலும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டவர் என வாசிக்கிறோம். ஆக, சோதனைகள் என்பது அனைவருக்கும் உண்டு என்பதை நாம் நன்கு அறியமுடிகிறது.

“சோதனைகள் வரும் போது ‘இச் சோதனை கடவுளிடமிருந்து வருகிறது’ என்று யாரும் சொல்லக் கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை” .மேலும் சோதனைகள் சாத்தானிடமிருந்தும் வருவதில்லை. யாக்கோபு 4:7-ல் “அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும் ”. சாத்தான் நம்மைவிட்டு ஓடிவிட்டது என்றால் சோதனைகளுக்கு அங்கு இடம் கிடையாது. மேலும் இயேசு இன்றைய நற்செய்தியிலே ‘ஆண்டவரை சோதிக்க வேண்டாம்’ என சாத்தானைப் பார்த்து எச்சரிக்கிறார். எனவே சோதனைகள் கடவுளிடமிருந்தும் வருவதில்லை, சாத்தானிடமிருந்தும் வருவதில்லை.
அப்படியென்றால் சோதனைகளுக்கு காரணம் யார்?
நம்முடைய சோதனைகளுக்கு நம்முடைய தீய எண்ணங்கள் அதாவது ஊனியல்பின் இச்சைகள் தான் காரணம். யாக்கோபு 1:14-ல் “ஒவ்வொருவரும் தம் சொந்த தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர்” . மேலும் திப. 5:3-4 அனனியாவின் தீய எண்ணம் அவரை சாவுக்கு உட்படுத்துகிறது. ‘தன் நிலத்தை விற்று ஒரு பகுதி பணத்தை தனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியரிடத்தில் பொய் சொல்லுகிறான்… பின்பு ஏன் இந்த தீச் செயலுக்கு உன் உள்ளத்தில் இடமளித்தாய்?’ ஆக மனிதர்களின் தீய எண்ணங்களே சோதனைகளுக்கு காரணமாகும்.

சோதனைகள் நம்மை பாவ வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறதா? அல்லது புண்ணிய வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறதா?
சோதனைகள் பாவம் கிடையாது. எனவே சோதனைகள் நம்மை பாவ வாழ்வுக்கு அழைத்துச் செல்வதில்லை (எபிரேயர் 4:15-ல் “இயேசு கிறிஸ்து எல்லா வகையிலும் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டவர் எனினும் பாவம் செய்யாதவர். ஆனால், சோதனைகள் என்பது ஒரு விதமான ஈர்ப்புசக்த்தி. அந்த ஈர்ப்பு சக்தியில் விழுந்து விட்டோம் என்று சொன்னால் அது நம்மை பாவ வாழ்வுக்கு ஈட்டுச் செல்கிறது. ஆனால் சோதனைகள் மனிதனை புண்ணிய வாழ்வுக்கு புடப்படுத்தும் ஒரு கருவி. எப்படி தங்கமானது நெருப்பில் புடமிடப்படுவது போல!

எந்த வகையான சோதனைகள் நம்மை பாவத்திற்கு இட்டுச்செல்கிறது? ஊனியல்பின்; இச்சைகள் வழியாக வரக்கூடிய சோதனைகள் தான் நம்மை பாவத்திற்கு இட்டுச் செல்கிறது. கலாத்தியர் 5:16-ல் ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. எவையெல்லம் ஊனியல்பின் இச்சைகள்? “அதாவது பாரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லிசூன்யம், பகைமை, சண்டை சச்சரவு, பொறமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் போன்றவை ஊனியல்பின் இச்சைகளாகும் (கலாத்தியர் 5:19-21)”.

எப்படி இந்த தீய இச்சைகள் நம்மை பாவத்திற்கு இட்டுச்செல்கிறது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, கடவுளுடைய படைப்பை சற்று தத்ருபமாக சிந்தித்து பார்ப்போம். கடவுள் தனக்கு வேண்டிய நேரத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு படைப்பையும் படைக்கிறார். இதைத்தான் இறையியலார்கள் கூறுவார்கள் கடவுள் இந்த உலகை மூன்று நாள் தான் படைக்கிறார், அடுத்த மூன்று நாட்களில் படைப்பை அழகுபடுத்துகிறார். தன்னுடைய படைப்பை மிக அழகாக, மிக நேர்த்தியான முறையிலே படைக்கிறார், ஏன் அந்த நடுமரத்தின் கனியையும் நல்லதாகத் தான் கடவுள் படைத்தார். படைத்தது அனைத்தையும் நல்லது என காண்கிறார். அதன் பிறகுதான் மனிதனை அங்கு குடியேறச் செய்கிறார். அதிலும் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்துவிட்டு அவனிடம் சொல்கிறார் ‘தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்தில் இருந்தும் உன் விருப்பம் போல் உண்ணலாம், தான் படைத்த படைப்புக்கு மனிதனே பெயர் வைப்பதற்கு உரிமையைக் கொடுக்கிறார். அவன் தனியாக இருப்பது நல்லது அல்ல என்று நினைத்து அவனுக்கு ஏற்ற துணையை ஏற்ப்படுத்துகிறார்’. இப்படியாக ஆதாமும், ஏவாளும் அந்த ஏதேன் தோட்டத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பழங்களை பறித்து உண்கின்றனர். கடவுளிடம் உரையாடுகின்றனர். இப்படி சகல வசதிகளை கடவுள் செய்து கொடுத்தாலும் அவர்களது எண்ணம் அனைத்தும் நடு மரத்தை நோக்கியதாகவே இருந்தது. நடுமரம் பற்றிய சிந்தனைதான் அவர்களை வெகுவாக ஈர்கிறது, பாதிக்கிறது.

இயேசுவில் பிரியமானவர்களே! இன்று உங்கள் மனைவிக்கு பிறந்த நாள் என்று வைத்துக் கொள்வோம். பிறந்தநாள் பரிசாக ஏதாவது அவர்களுக்கு கொடுக்க ஆசைப்பட்டு துணிக்கடைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறீர்கள். அந்த கடைக்காரர் பலவிதமான புடவைகளை காண்பிக்கிறார். ஆனால் உங்கள் மனைவிக்கு எதுவம் பிடிக்கவில்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் அந்த கடையில் புடவை வாங்குவார்களா? என்ன பதில். அதேவேளையில் ஒரு புடவையானது அவருக்கு மிகவும் பிடித்து விடுகிறது. அதை வாங்கச்செல்லும் போது அதன் விலையானது மிகவும் அதிகமாக இருக்கிறது, உங்களிடத்திலே போதுமான பணம் இல்லை என வைத்துக்கொள்வோம். நீங்கள் கூறுகிறீர்கள் போதுமான பணம் இல்லாததால் வேறு புடவை எடுக்க சொல்கிறீர்கள் என்றால், உங்கள் மனைவியின் எண்ணங்கள் எப்படியெல்லாம் வெளிப்படும். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து மாற்று புடவை எடுத்தால் அங்கு நல்லவிதமான எண்ணம் வெளிப்படும். ஆனால் அதற்குப்பதிலாக இதே புடவை தான் வேண்டும் என கட்டாப்படுத்தி வாங்கச்செல்லும் போது அதை வாங்குவதற்கு பலவிதமான தீய எண்ணங்கள் அப்போது வெளிப்படும். இது தான் சோதனையின் உச்சக்கட்டம். தீய எண்ணத்தை செயல்படுத்தி அதை வாங்கும் போது பாவத்திலே வீழ்கிறோம்.

இதைப்போலத் தான் ஆதாமுக்கும், ஏவாலுக்கும் எவ்வளவோ நல்ல கனிகளைத் தரும் மரங்கள் அங்கு இருந்தாலும் அவர்களின் எண்ண ஓட்டமெல்லாம் அந்த நடுமரத்தை மையப்படுத்தியதாகவே இருக்கிறது. காரணம் “அந்த மரத்தின் கனி உண்பதற்கு சுவையானதாகவும், கண்களுக்கு களிப்புட்டுவதாகவும், அறிவுபெறுவதற்கு விரும்பதக்கதாவும்” இருந்த காரணத்தினால் ஏவாலுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது (எப்படி அந்த மனைவிக்கு சேலை பிடித்ததோ) எனவே ஏவாள் உண்கிறாள். தனது கணவனையும் உண்ண வைக்கிறாள். இப்படியாக இருவரும் பாவம் செய்கின்றனர். எனவே அன்புக்குரியவர்களே! சோதனைகள் நம்மை தாக்குகின்ற போது அந்த சோதனையின் பாதையிலே சென்றோமென்றால் நிச்சயம் அவ்வழி நம்மை பாவத்திற்கு இட்டுச் செல்லும்.

எந்தெந்த சோதனைகள் நம்மை பாவத்திற்கு இட்டுச்செல்கிறது?
நாம் அனைவருமே ஏதோ ஒருவகையில் தினமும் சோதனைகளை அனுபவிக்கிறோம். எனவே எப்படிப்பட்ட சோதனைகள் எல்லாம் நம்மை பாவத்திற்கு இட்டுச்செல்கிறது என்பதை நமக்கு பட்டியலிட்டு காண்பிக்கிறார் யோவான். 1யோவான் 6:16-ல் 1. உலகு சார்ந்தவையான உடல் ஆசை, 2. இச்சை நிறைந்த பார்வை, 3. செல்வச் செருக்கு. இந்த மூன்று வகையான சோதனைகள் வழியகத்தான் நாமும், நம்முடைய ஆதிப்பெற்றோரும் பாவம் செய்தோம், இன்றும் செய்கிறோம். ஆனால் இயேசுவும் இந்த மூன்று வகையான சோதனைகளை அனுபவிக்கிறார், ஆனால் பாவம் மட்டும் செய்யவில்லை.

1. உடல் ஆசை:-
மனிதனுடைய ஆசைக்கு எல்லைகளே கிடையாது என்பார்கள். ஆசையை அடக்கி விட்டோமென்றால் நாம் பாதி புனிதர்களாகி விடுவோம். இதைத்தான் புத்தர் அழகாக கூறுவார் ‘ஆசையே துன்பத்திற்கு வழி’ என்று. மனிதனுடைய இந்த உடல் ஆசைதான் பலவிதமான பாவங்களுக்கு காரணமாக அமைகிறது. இதைத்தான் புனித பவுலடியார் ஊனியல்பின் இச்சை என காலத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் வரிசைப்படுத்துகிறார். பாரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லிசூன்யம், பகைமை, சண்டை சச்சரவு, பொறமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் போன்றவை ஊனியல்பின் இச்சைகளாகும் (கலாத்தியர் 5:19-21)”

ஆதிப்பெற்றோரின் சோதனை: “அந்த மரத்தின் கனி உண்பதற்கு சுவையானதாக” இருந்தது. அதை உண்டு பாவத்தில் வீழ்ந்தனர்.
இயேசுவின் சோதனை: “நீர் இறைமகன் என்றால் இந்த கற்களை அப்பமாகும் படி கட்டளையிடும்” . ஆனால் இயேசு “மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வான்” என்று சொல்லி தன் சோதனையை முறியடிக்கிறார்.
இன்று நம்முடைய ஆசையின் வழியில் வரும் சோதனைகளுக்கு நாம் பலியாக போகிறோமா? அல்லது இயேசுவைப் போல சோதனையை முறியடிக்கப் போகிறோமா?

2. இச்சை நிறைந்த பார்வை
மத்தேயு நற்செய்தி 6:22-23-ல் ‘கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளிபெற்றிருக்கும். ஆனால் அது கெட்டுப்போனால் உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும்’ என்கிறார் இயேசு. மேலும் 2சாமுவேல் 11:2-ல் தாவீது அரசனின் பார்வை தவறாக இருந்ததால் கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறான். (தாவீது – பத்சேபா)
அந்த நடுமரத்தின் கனியை உண்ணும் நாளில் உங்களது கண்கள் திறக்கப்படும், மேலும் அந்த கனியானது கண்களுக்கு களிப்புட்டுவதாக இருந்தது. எனவே அந்த கனியை உண்டு ஆதாமும், ஏவாலும் பாவத்தில் வீழ்ந்தனர்.
இயேசுவின் சோதனை: எருசலேம் நகரமானது கண்களுக்கு அழகான தென்படும் நகர்களில் ஒன்று. அப்படிப்பட்ட கண்ணகளுக்கு களிப்புட்டக்கூடிய நகரத்திற்கு இயேசுவை அழைத்துச்சென்று “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்… என்றது ஆனால் இயேசு உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம் என்று சொல்லி தன் சோதனையை முறியடிக்கிறார். இன்று நம்முடைய பார்வையானது எப்படிப்பட்டதாக இருக்கின்றது.

3. செல்வச் செருக்கு
இந்த செல்வச் செருக்கு தான் நல்ல மனிதர்களையும் கெட்டவராக மாற்றுகிறது. வானதூதர்கள் அனைவருமே நல்லவர்கள் தான். ஆனால் எப்பொழுது லூசிபர் என்ற வானதூதர் நான் தான் பெரியவன். எனக்குத்தான் எல்லம் தெரியும், எனக்கு கீழ் தான் மற்ற அனைவரும் என்று நினைத்த போது கடவுள் அவரை தனது வானதூதர் கூட்டத்திலிருந்து விரட்டியடிக்கிறார் (ஏசாயா 14:14).
ஆதிப்பெற்றோரின் சோதனை:
அந்த நடுமரத்தின் கனியை உண்டால் நீங்கள் கடவுளைப் போல நன்மை எது தீமை எது என அறிந்து கொள்வீர்கள். கடவுளை போல நீங்களும் மாறுவீர்கள் என்றது சாத்தான். சோதனைக்கு இடம் கொடுத்த போது இந்த கனியானது அறிவுபெறுவதற்கு விரும்பதக்கதாக இருக்கிறது எனச்சொல்லி இருவரும் உட்கொண்டு பாவம் செய்கின்றனர்.
இயேசுவின் சோதனை:
சாத்தான் இயேசுவை மிக உயர்ந்த மலைக்கு அழைத்துச் சென்று உலக அரசகள் அனைத்தையும், அதன் மேன்மையையும் அவருக்கு காட்டி நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் என்றது சாத்தான், ஆனால் இயேசுவோ உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணிசெய் எனச்சொல்லி தான், பட்டம் பதவிக்கு ஆசைப்படாதவர் என்பதை நிருபித்து தன் சோதனையை முறியடிக்கிறார். இன்றும் நமது குடும்பத்திலும், சமுதாயத்திலும் யார் பெரியவன் என்ற எண்ணம் மிகவும் மேலோங்கி நிற்கிறது.

ஆம் அன்புக்குரியவர்களே! நாம் அன்றாடம் செய்யும் அனைத்து பாவங்களும் இந்த மூன்று விதமான சோதனைகளை சுற்றிதான் இருக்கின்றன. சாத்தானும் இந்த மூன்று சோதனைகளை மையப்படுத்தி தான் நம் ஆதிப்பெற்றோரையும், இயேசுவையும், நம்மையும் சோதனைக்கு உட்படுத்துகிறான். அதனால் தான் இயேசு மத்தேயு 6:13-ல் நாம் இறைவனிடம் வேண்டும் போது சோதனைக்கு உட்படாமல் இருக்கவும், தீயோனின் ஆதிக்கத்தில் இருந்து நம்மை விடுவிக்கவும் ஜெபிக்க அழைக்கிறார். அதைப்போலவே கெத்சமனி தோட்டத்தில் தனது சீடர்களைப் பார்த்து சோதனைக்கு உட்படாதிருந்து ஜெபியுங்கள் என்கிறார் (மத்26:41). காரணம் சோதனையில் நாம் வீழ்ந்து விட்டால் நிச்சயம் அது நம்மை பாவத்திற்கு இட்டுச் செல்லும். அப்படி பாவம் செய்கின்ற போது நம்மாலே, நாம் செய்த தவற்றை ஒப்புக்கொள்ள முடியாத சூழலுக்குத் தள்ளப்படுவோம். நம்முடைய பாவத்திற்கு பிறரை பழிசொல்லவும் நாம் தயங்கமாட்டோம். ஏன் ஆதாமும், ஏவாளும் இருவரும் பாவம் செய்தனர். ஆனால் கடவுள் கேட்டபோது நாங்கள் தான் பாவம் செய்தோம் என அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆதாம் கடவுளைப்பார்த்து “என்னுடன் இருக்கும்படி, நீர் தந்த, அந்தபெண் மரத்தின் கனியை எனக்கு கொடுத்தாள், நானும் உண்டேன்”. அதைப்போலவே ஏவாளும் “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என மற்றவர்கள் மீது பழி சுமத்துகின்றனர்.

எனவே அன்புக்குரியவர்களே! தவக்காலத்தில் பலவிதமான தவ முயற்ச்சிகளை நாம் மேற்க்கொள்வோம். நம்முடைய தவ முயற்ச்சியின் ஒரு பகுதியாக நம்முடைய அளவு கடந்த ஆசைகளை இனம் கண்டு கொள்ள முயற்ச்சிப்போம். காரணம் ஆசைகள் நம்மை சோதனைக்கு இட்டுச் செல்கிறது. சோதனைகள் நம்மை பாவத்திற்கு அழைத்துச் செல்கிறது. பாவம், நாம் கடவுள் மீது கொண்டுள்ள உறவையும், அயாலான் மீது உள்ள பாசத்தையும் பிரிக்கிறது. எனவே இன்றைய நாளிலே நம்முடைய ஆசைகளையும், சோதனைகளையும் பட்டியலிட்டு, அதிலிருந்து எவ்வறெல்லாம் நாம் விடுபடமுடியும் என்பதை சுய பரிசோதனை செய்து கடவுளுக்கும், பிறருக்கும் உகந்தவர்களாக வாழ முயற்ச்சிப்போம். சோதனைகளை வென்ற கடவுள் நம்மோடு இருந்து நம்முடைய சோதனைகளை வெல்ல நமக்கு அசீர் அளிப்பாராக!.