இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு

தீமை செய்து துன்புறுவதை விட நன்மை செய்து துன்புறுவது மேல்

திருத்தூதர் பணி 08:5-8,14-17
1பேதுரு 3:15-18
யோவான் 14:15-21

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே நன்றாக இருக்கின்றீர்களா? இன்றைய உலகமானது எதைநோக்கி பயணிக்கிறது? நல்லதை நோக்கி பயணிக்கிறதா? அல்லது தீமையை நோக்கி பயணிக்கிறதா? (இந்த கேள்வி நம்மை அதிகம் சிந்திக்க வைப்பதில்லை) சரி,
இன்று நாம் (நீங்கள்) எதை நோக்கி பயணிக்கிறேம்? நல்லதை நோக்கி பயணிக்கிறோமா? அல்லது தீமையை நோக்கி பயணிக்கிறோமா? (Personal question)
நல்லதை நோக்கி பயணிக்கிறோம் என்றால் யாருக்கு நல்லது? எனக்கு நல்லதா? அல்லது சமூதாயத்திற்கு நல்லதா?
இன்று சமுதாயத்தைக் காட்டிலும் எனக்கு(நான்) எது நல்லதோ அதை நோக்கித்தான் நமது வாழ்க்கையானது பயணித்துக் கொண்டிருக்கிறது. மழையிலும், வெள்ளத்திலும், பஞ்சத்திலும், தண்ணீர் பற்றாக் குறையிலும், கஸ்டப்படும் மக்களை பற்றிய கவலைகளே இல்லாமல் தங்களது அரசியல் பதவிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியிலும், தன்னுடைய படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவ்வப்போது நல்லவன் போல நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியிலும், சமுதாயம் எப்படி சீர்கெட்டாலும் தன்னையும் தனது குடும்பத்தையும் எதுவும் பாதிக்ககூடாது என வாழும் பெற்றோர்களுக்கு மத்தியில் வாழும் நம் அனைவரையும் பார்த்து தீமை செய்து துன்புறுவதைவிட நன்மை செய்து துன்புறுவது மேல் என இன்றைய வாசகங்கள் வழியாக ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். இன்றைய சூழலில் எது நன்மை எது தீமை என பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு நம் சமுதாயம் வளர்ந்து வருகிறது. இத்தருணத்தில் தீமை செய்து துன்புறுவதைவிட நன்மை செய்து துன்புறுவது மேல் என்று வாழ்ந்து காட்டிய மனிதர்கள் ஏராளம். இதற்கு நல்ல உதாரணமாக விவிலியத்தில் இரண்டு மனிதரைப் பற்றி இன்று சிந்திப்போம்.

தீமை செய்து துன்புற்ற மனிதன்
தான் படைத்த மக்களை வழிநடத்துவதற்காக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அருட்பொழிவு செய்யப்பட்ட மனிதன் சமுதாயத்தைப் பற்றி அக்கறையில்லாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய சுயநலத்தினால் தனக்கு நல்லது என நினைத்து மனித பலவீனத்தினால் கடவுளின் பார்வையில் தீமை செய்கிறான். அதனால் அவன் எந்த அளவிற்கு துன்பப்பட்டான் என்பதை அவரது வாழ்வு நமக்கு பாடம் புகட்டுகிறது.

தாவீது அரசர் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டு, அருட்பொழிவு செய்யப்பட்டு, மக்களை வழிநடத்தும் அரசராக பதவியேற்றவர். ‘அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி’ என்பர். ஒரு அரசன் நன்றாக இருந்தால் அந்த நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருப்பார்கள். ஆனால் இங்கு ‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’அரசனே தவறு செய்கிறான். போருக்கு சென்று போர்புரிய வேண்டிய அரசன் பத்சேபா என்ற பெண்மீது ஆசைகொண்டு, அடுத்தவர் மனைவி எனத் தெரிந்தும் அப்பெண்ணின் கற்புக்கு களங்கம் விளைவிக்கிறான். மேலும் அவளுடைய கணவனைக் கொன்று பத்சேபாவை தன்னுடைய மனைவியாக்குகிறான். (அவள் ஓர் ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் கடவுள் பார்வையில் தீயதாக இருந்தது) 2 சாமுவேல் 11:27. கடவுளுக்கு எதிராக தீமை செய்து விட்டதை உணர்ந்த தாவீது அன்று முதல் அக்குழந்தை இறக்குவரை துக்கம் கொண்டாடுகின்றான். தான் அரசனாக இருந்தாலும் தான் செய்த தவற்றிற்கு உண்ணா நோன்பிருந்து, வெறும் தரையில் படுத்து துக்கம் கொண்டாடுகின்றான். தீமை செய்தால் சந்தோசம் கிடைக்கும் என நினைத்தான் ஆனால் அதுவே மிகப்பெரிய துன்பத்தை தாவீதுக்கு கொடுத்தது (2சாமுவேல் 12).

நன்மை செய்து துன்புற்ற மனிதன் ஊஸ் என்னும் நாட்டில் வாழ்ந்து வந்த மிகப்பெரிய பணக்கார விவசாயி. இவர் ஏழு ஆண்பிள்ளைகளும் மூன்று பெண்குழந்தைகளையும் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்தார். இந்த விவசாயி மாசற்றவர். நேர்மையுள்ளவர். கடவுளுக்கு அஞ்சித் தீமையை விலக்கி வாழ்ந்து வந்தார். இவர் நன்மையை மட்டும் செய்ததால் தன் வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறார். ஆனால் ஆண்டவர் இவருக்கு அபரிவிதமாக ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். யார் அந்த மனிதர்? அவர் தான் யோபு.

யோபுவுக்கு தன்னுடைய பண்ணையில் ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர் மாடுகளும், ஐந்நூறு பெட்டைக் கழுதைகளும் இருந்தன. அவரிடத்தில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் வேலை செய்து வந்தனர். கீழ்த்திசை நாட்டு மக்கள் அனைவருள்ளும் அவரே பெரியவராக இருந்தார். அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளில் தங்களது வீட்டிலே விருந்து தயார் செய்வார்கள். அவ்விருந்தில் தங்களோடு பங்கெடுக்கும் படியாக தங்கள் சகோதரிகள் மூவரையும் அழைப்பார்கள். ஒவ்வொரு முறையும் விருந்து முடிந்த பிறகு அவர்களின் தந்தை யோபு தம் பிள்ளைகள் ஒருவேளை ஏதேனும் பாவம் செய்து தங்கள் உள்ளத்தில் கடவுளைப் பழித்துரைத்திருக்கக் கூடும் என்று தமக்குள் சொல்லிக் கொண்டு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விடியற்காலையில் எழுந்து அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் எரிபலிகளைச் கடவுளுக்குச் செலுத்துவார். கடவுளும் அவர்மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார். எந்த அளவிற்கு என்றால் சாத்தானிடத்திலே சவால் விடும் அளவிற்கு கடவுள் இவரை நம்பினார்.

ஆண்டவர் சாத்தானைப் பார்த்து “நம் ஊழியனாகிய யோபுவைக் கவனித்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையுள்ளவனும் கடவுளுக்கு அஞ்சித் தீமையை விலக்கி நடக்கிறவனும் வேறெவனும் இவ்வுலகில் இல்லை!" என்றார். இப்படிப்பட்ட இந்த மனிதன் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். மாசற்ற மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்தால் தன்னுடைய சொத்துக்களை இழக்கின்றான், ஆயிரக்கணக்கான கால்நடைகளை இழக்கிறான், தான் பெற்ற பிள்ளைகளை இழக்கின்றான், தன்னுடைய உடம்பில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எரியும் புண்களால் துன்பப்படுகிறான். குப்பையில் அமர்ந்து ஓட்டை வைத்து செரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் மரணவேதனையை அனுபவிக்கிறான். ஏன் தன்னுடன் இருந்த நண்பர்கள் கூட அவனை விட்டு பிரிந்துவிட்டனர், அவர்களே அவனுக்கு எதிராக பழிசுமத்துகின்றனர். தான் கட்டிய மனைவியும் அவரை புறக்கணிக்கிறார். “இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளை பழித்து மடிவது தானே என தூற்றுகிறார்”. இவ்வளவு கொடிய வேதனையிலும் நன்மையை மட்டுமே ஆடையாக யோபு அணிந்திருக்கிறார். “தன் மனைவியைப் பார்த்து அறிவற்ற பெண்போல பேசுகிறாய்! நன்மையை கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையை பெறக்கூடாது”. ஆக நன்மை செய்ததால் இந்த உலகம் அவரை ஒதுக்கியது, கட்டிய மனைவி அவரை விட்டுச் சென்றாள், நண்பர்கள் பழித்துரைத்தனர் ஆனால் கடவுள் அவரைக் கைவிடவில்லை. ஆண்டவர் அவருக்கு வரச்செய்த தீமை அனைத்திற்காகவும் ஆறுதல் கூறி யோபுவைத் தேற்றினார். அத்தோடு மட்டுமல்லாமல் முன்னைய நாட்களில் இருந்ததைவிட பின்னைய நாட்களில் ஆண்டவர் அதிகமாக ஆசிவழங்கினார்.

தீமை செய்து துன்புறுவது மேலானதா? அல்லது நன்மை செய்து துன்புறுவது மேலானதா?
இறைஇயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே! இயேசுவின் இறப்பிற்கு பிறகு பல சீடர்கள் குழப்பமான வாழ்க்கையில் பயணித்தனர். அவருடைய உயிர்பிற்கு பிறகு இயேசுவை பற்றி போதித்த மனிதர்கள் அனைவரையும் கொன்று குவித்துக் கொன்டிருந்தனர். உதாரணமாக திருத்தூதார் பணி 6-ம் அதிகாரத்தில் ஸ்டிபன் (ஸ்தேவன்) அப்போஸ்தலர்களால் அர்சிக்கப்படுகிறார். 7-ம் அதிகாரத்தில் இயேசுவைப் பற்றி போதிக்கிறார். 8-ம் அதிகாரத்தில் இயேசுவைப்பற்றி போதித்ததால் கல்லால் எறிந்து கொல்லப்படுகிறார். ஆக நன்மையை பற்றி பேசினால் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் எனத் தெரிந்தாலும் சீடர்கள் அனைவரும் நன்மையைப் போதித்தனர். ஊர் ஊராக நாடு நாடகச் சென்று நன்மை பற்றி எடுத்துரைக்கின்றனர்.

இன்று நம்மில் எத்தனை பேர் தீமையை ஒதுக்கி நன்மை செய்கிறோம்? உதாரணமாக பொய் சொல்வது தவறு என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் பொய் சொல்லாமல் வாழ்கிறோம்? கணவன் மனைவியிடத்தில், மனைவி கணவனிடத்தில், பிள்ளைகள் பெற்றோரிடத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில், பிள்ளைகள் ஆசிரியரிடத்தில், வீடுகளில், பணிபுரியும் இடங்களில் எங்கும் பொய்மை நிறைந்து காணப்படுகிறது.

இன்று பொய் பேசுவது நன்மை செய்வது போல நினைத்து வாழக்கூடிய மனிதர்கள் நம்மில் எத்தனை பேர்? பிலத்து இயேசுவிடத்தில் “உண்மையா, அது என்ன?” என்று கேட்டார் என்றால் எந்த அளவிற்கு பொய்மையிலே தனது வாழ்கையை அவர் வாழ்ந்திருக்க வேண்டும். மேலும் இன்று எத்தனைப் பெற்றோர்கள் நன்மையை செய்ய தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றனர்? “உனக்கு எதுக்கு ஊர் வம்பு, எப்படி போனாயோ அப்படியே திரும்பி வா” என்றுதானே நம்முடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கிறோம். பிரியமானவர்களே நமக்கு ஏன் பிரச்சனைகள் என்று ஒதுங்கி விடாதீர்கள். உங்களுக்கும் ஒருநாள் பிரட்சனைகள் வரும் அப்போது ஆறுதல் சொல்லவோ, உதவி செய்யவோ யாரும் இருக்க மாட்டார்கள். எனவே தீமையை ஒதுக்கி நன்மை செய்ய முற்படுவோம்.

எத்தனை பேர் ஆண்டவர் இயேசுவை அன்பு செய்கின்றீர்கள்? (கைகளை உயர்த்தவும்)
மீண்டும் கேட்கிறேன் சற்று யோசித்து பதில் கூறவும் எத்தனை பேர் ஆண்டவர் இயேசுவை அன்பு செய்கின்றீர்கள்? (கைகளை உயர்த்தவும்)
முதலில் கேட்டபோது நிறைய கைகள் தென்பட்டது. அடுத்த கேள்விக்கு கைகள் குறைந்து விட்டன. இப்படியே ஒரு மூன்று முறை கேட்டால் எத்தனை கைகள் உயரும் என்று தெரியவில்லை. இயேசுவில் பிரியமானவர்களே கடவுளை அன்ப செய்ய வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?....

இன்றைய நற்செய்தியிலே ஆண்டவர் “என்மீது அன்புகொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடிப்பீர்கள்” எனக் கூறுகிறார். ஆக கடவுளின் கட்டளைகளை யாரெல்லாம் கடைபிடிக்கின்றனரோ அவர்கள் மட்டும் தான் கடவுளை அன்பு செய்ய முடியும். இன்று நம்மில் எத்தனை பேர் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கிறோம்? பழைய ஏற்ப்பாட்டிலே 10 கட்டளைகளை கடவுள் கொடுக்கிறார். அதை கடைபிடிப்பது கடினம் எனத் தெரிந்தால் புதிய ஏற்ப்பாட்டில் கடவுள் இரண்டே இரண்டு கட்டளைகளைக் கொடுக்கிறார். இந்த இரண்டு கட்டளைகளை ழுமுமையாக எத்தனைபேர் கடைபிடிக்கிறோம்?

ஓர் உண்மைச் சம்பவம்
அந்த பேருந்து நிலையத்திலே மக்கள் பரபரப்பாக அங்கும் இங்குமாக அழைந்து கொண்டிருந்தனர். அந்த சாக்கடைக்கு அருகில் பரட்டைத் தலையுடன் ஒரு மனிதர், பைத்தியக்காரனைப் போல கிழிந்த ஆடையோடு, உடல் முழுவதும் அழுக்குகள் நிறைந்து பார்ப்பதற்கு இவன் ஏன் மனிதனாக பிறந்தான் என்று எண்ணும் அளவிற்கு அவரது தோற்றம் இருந்தது. ஒவ்வொருநாளும் கீழே கிடக்கும் பொருட்களை எடுத்து சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்து உறங்கி விடுவான். ஒவ்வொருநாளும் இவரை பார்ப்பது எனக்கு வழக்கமாகி விட்டது. ஏன்னென்றால் நான் அப்போது அங்கு உள்ள ஒரு கடையில் எடுபிடி வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் கடையை அடைப்பதற்கு முன் அங்கிருந்த மீதமுள்ள வடைகள், பிஸ்கட், அனைத்தையும் நாய்க்கு போட்டுக் கொண்டிருந்தேன். அந்த மனிதரும் நாய்களோடு ஒன்று சேர்ந்து அவற்றை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுமுதல் ஒவ்வொருநாளும் கடை அடைப்பதற்கு முன்பாக அவரிடம் எதாவது உணவுப்பொருட்கள் கொடுப்பது வழக்கமாகி விட்டது. நாட்கள் நகர்ந்தோடின. ஒருநாள் அவரிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். அவரும் என்னிடம் பேசத்தொடங்கினார். மறுநாள் அவரை அழைத்துச் சென்று தலைமுடிகளை வெட்டவைத்து, பேருந்து நிலையத்தில் இருந்த குளியலரையில் அவரைக் குளிப்பாட்டி என்னிடம் இருந்த ஓர் ஆடையை அவருக்கு கொடுத்து அவருடன் பழக ஆரம்பித்தேன். அவரும் எனது வருகைக்காக தினமும் காத்திருப்பார். நான் வேலைபார்த்த கடை அருகிலே அமர்ந்திருப்பார்.

அப்போது ஒருநாள் அவர் மனம் திறந்து பேசலானார். தம்பி என் பெயர் ஆறுமுகம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் ஆனாலும் வீட்டிலே நான் தான் செல்லப்பிள்ளை. ஒவ்வொருநாளும் எனது தந்தை எங்களிடம் ஏதவது ஒரு பொய் சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிடுவார். நாளடைவில் நானும் பொய்சொல்லக் கற்றுக்கொண்டேன். பத்தாம் வகுப்பு படித்த போது பள்ளிக்கு செல்கிறேன் எனச் பொய் சொல்லிகொண்டு சினிமாவிற்கு தினமும் செல்வேன். பொய்சொல்வது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பணம் இல்லாத நேரத்தில் சிறுசிறு திருட்டுத்தனங்கள் செய்தேன். திருடுவது எனக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. என்னை யாரும் கட்டுப்படுத்தவில்லை. என்னுடைய வாழ்வு மிகவும சந்தோசமாக இருந்தது.

காலப்போக்கில் எல்லாவிதமான போதைப் பொருட்களுக்கும் அடிமையானேன். பலவேலைகளில் வீட்டிற்குச் செல்லாமல் தெருவிலே ஆங்காங்கே படுத்து உறங்குவேன். கடைசியாக எங்களது ஊரைவிட்டு இந்த ஊருக்கு வந்தேன். இங்கு வந்த நாள்முதல் பல தீய செயல்களைச் செய்தேன். அதிலும் குறிப்பாக சுயஇன்பம் அனுபவிக்க தொடங்கினேன். சுய இன்பம் அனுபவிக்கும் போது ஒவ்வொரு முறையும் சந்தோசமாக இருப்பதை உணர்ந்தேன். எனவே அடிக்கடி செய்யத் தொடங்கினேன். தினமும் ஏதாவது தீய சிந்தனைகளைத் தரும் புத்தகம் படிப்பேன், அந்த சிந்தனை என்னை முற்றிலும் தீயவனாக மாற்றியது. ஒருசில நேரங்களில் பைத்தியக்காரன் போல செயல்படத் தொடங்கினேன். எனது சுய நினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கினேன். என்னிடம் பேசுவதற்கே மக்கள், குழந்தைகள் பயந்தனர்.

இத்தருணத்தில் நீர் எனக்கு ஒவ்வொரு நாளும் உணவு கொடுக்க ஆரம்பித்தீர், நான் பீடி குடித்தபோது அதை பிடுங்கி எறிந்தீர், தீய வார்த்தைகள் பேசியபோது அப்படியெல்லாம் பேச்கூடாது எனக் கூறினீர். நான் பைத்தியக்காரன் எனத் தெரிந்தும் என்மீது நீர் காட்டிய பாசம் இன்று என்னை அறியாமலேயே அழுது கொண்டிருக்கின்றேன் என்றார். அத்தருணத்தில் எனக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் அவரை அருகில் இருந்த ஆலயத்திற்க்கு அழைத்துச் சென்றேன். அப்போது அந்த ஆலயத்தில் இருந்த திருவிவிலியத்தை நாங்கள் திறந்து பார்த்தபோது நாங்கள் கண்ட வாசகம் “தீமை செய்து துன்புறுவதை விட கடவுளுக்கு திருவுளமானால் நன்மை செய்து துன்புறுவது மேல்” என வாசித்தார். அதே ஆலயத்தில் இருந்த மாதா திருவுருவத்திற்கு முன்பு தீமை செய்தால் மகிழ்ச்சியை கொடுக்கும் என செய்தேன் ஆனால் அதுவே இன்று என்னை பைத்தியக்காரனாக மாற்றியது. இன்று முதல் நன்மை செய்யப் போகிறேன். அதனால் எத்தனை துன்பங்களையும் நான் தாங்கிக்கொள்வதற்கு நான் தயார் என எரிந்து கொண்டிருந்த மெழுகுதிரிமேல் சத்தியம் செய்ய ஆரம்பித்தார்.

அதன்பிறகு அவரது வாழ்வு முற்றிலும் மாறியது. இருவரும் தினமும் வேலைக்குச் செல்வோம். நேரம் கிடைக்கும்போது அந்த ஆலயத்திற்குச் சென்று இருவரும் பேசிக்கொண்டிருப்போம். அவ்வப்போது தீமையை விடுவதற்கு முயற்ச்சிகள் எடுக்கிறேன் ஆனால் எவ்வளவு கடினமாக இருக்கிறது என்று கூறுவார். வருடங்கள் உருண்டோடின. இரண்டு வருடம் கழித்து ஒரு பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பேருந்தில் உள்ளே இருந்து சகாயம் சகாயம் எனக் குரல் கேட்டது. அவர் அருகில் சென்றேன். அப்போது அவர் என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டார். நான் தெரியவில்லை என்று கூறினேன். அப்போது அவர் கூறினார் நான் தான் பைத்தியக்கரான் என்றார். இன்றும் அந்த நிகழ்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அப்போது அவர் என்னிடம் என்ன படிக்கின்றீர்கள்? என்று கேட்டார் அதற்கு நான் குருவாக படிக்க போகிறேன் என்றேன். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் பசுமரத்தானிபோல என்னில் பதிந்து விட்டன. இன்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு ஹீரோ தேவைப்படுகிறார். எனக்கு ஹீரோவாக கெட்ட நண்பர்கள் கிடைத்தனர். உனக்கு ஹீரோவாக இயேசு கிடைத்துள்ளார் என்றார்.

ஆம் அன்புக்குரியவர்களே நமது குழந்தைகள் படித்து கற்றுக்கொள்வதை விட பார்த்து அதிகம் கற்றுக்கொள்கின்றனர். இன்று குழந்தைகள் எதிர்பார்ப்பது எல்லாம் தங்களுக்கு ஒரு நல்ல ஹீரோ தங்களது வாழ்விற்கு முன்னுதாரனமாக கிடைக்க மாட்டாரா? என்று தான். இன்றைய சூழலில் அரசியல் தலைவர்கள் நல்ல ஹீரோக்கள் கிடையாது, சினிமா நடிகர் நடிகைகள் காசுக்காக எதையும் எப்படி வேண்டுமானாலும் நடிக்க கூடியவர்கள் எனவே அவர்களும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஹீரோக்கள் கிடையாது, பணத்தை வாங்கிக்கொண்டு சூதாட்டம் விளையாடும் விளையாட்டு வீரர்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஹீரோக்கள் கிடையாது, ஆகவே உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே ஹீரோவக இருக்க முடிவெடுங்கள். எனவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஹீரோவாக நீங்கள் இருக்க வேண்டுமானால் நீங்களும் “தீமை செய்து துன்புறுவதை விட கடவுளுக்கு திருவுளமானால் நன்மை செய்து துன்புறுவது மேல்” என உங்கள் எடுத்துக்காட்டான வாழ்வினால் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இயேசு இன்று நம்மைப் பார்த்து “நான் வாழ்கிறேன் அதைப்போல நீங்களும் வாழ்வீர்கள்” என்கிறார்.

துன்பங்களுக்கு மத்தியில் தான் நல்ல வாழ்வு கிடைக்கும் என்பதை இயேசு தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிவிட்டார். நாம் வாழத் தயாரா? வாழவேண்டுமானால் நம்முடைய வாழ்வு தீமையை நோக்கி பயணிக்கிறதா? அல்லது நன்மையை நோக்கி பயணிக்கிறதா?