இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு.

இறையாட்சிப்பணி

ஆமோஸ் 7:12-15
எபேசியர் 1:3-14
மாற்கு 6:7-13

திருச்சபையில் இறையாட்சிப்பணி ஆற்ற அழைக்கும் 15ம் ஞாயிறுக்கு செல்வோம்.

உலக வாழ்வில் கடவுளின் பராமரிப்பு:-
உலகம் தோன்றும் முன்பே கடவுளாகிய தந்தை இவ்வுலகத்தை பராமரித்து காத்து வருகிறார். மனித குல வரலாற்றில் கடவுள் பாதுகாப்பு அளிக்கக் கூடியவராகவும், நம்மை தாக்கும் ஆபத்து, மற்றும் அச்சம் தரக்கூடிய சூழ்நிலைகளில் இருந்து தாங்கிப் பிடிப்பவராகவும், பாதுகாத்து வருகிறார். நம்மை பாதுகாக்க பராமரிக்க நம்மோடு நமக்காக இருக்கிறார். அந்த பராமரிப்பின் அடையாளத்தைக் கண்டுக்கொள்ள இன்றைய 15ஆம் பொதுக்காலம் நம்மை தூண்டுகிறது. மனித வாழ்விற்கு அத்தியாவசிய தேவையாகக் கருதும் உணவு, உடை, உறைவிடம் இதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் இறையாட்சிப்பணியை செய்ய இறைமகன் இயேசு அழைக்கிறார். தூய பவுலடியார் சொல்வதை போல் எனக்கு உறுதியுட்டும் இயேசு கிறிஸ்துவால் எதையும் செய்ய ஆற்றல் உண்டு என வெற்றிநடை போட நமக்கு வலிமை கொடுக்கிறார். இவ்வாறாக நமது வாழ்க்கை தொடங்கும் முன்பே நமக்குரிய திட்டத்தை திண்ணமாக செய்து கொண்டு இருக்கிறார் என்பதை திருவிவிலியத்தில் இருந்து காண்போம்.

• நீ வருகையிலும் செல்கையிலும் ஆசி பெற்றிடுவாய். (இச28:6)
• நீ செல்லும் வழியெல்லாம் வெற்றி பெறுவாய். (யோசு1:7)
• என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்; நான் உன்மேல் அன்பு கூர்கிறேன். (எசா43:4)
• தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன். (எரே1:5)
• கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள். (மத்4:6)
இவ்வாறாக கடவுளின் தொடர் பராமரிப்பு அடிப்படையானதாகவும், ஆதாரமானதாகவும் நம்மோடு பயணிக்கின்றது.

புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஒருவர் இருந்தார். அவர் கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் கற்று கொடுக்கும் ஆசிரியராகவும் பணி புரிந்தார். தன்னுடைய மீந்த நேரங்களில் நீந்துவது அவரது விருப்பமான பொழுதுபோக்காக இருந்து வந்தது. அவர் வேலை செய்த கல்லூரியில் ஒரு நீச்சல்குளம் ஒன்று இருந்தது. எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் அங்கு சென்று நீந்தி மகிழ்வது அவருடைய வழக்கம். அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரும் அவருக்கு நேரம் கிடைக்கும்போது இவரோடு நீந்த செல்வார். இவர் நீந்துவதற்கு முன் செய்த ஒரு காரியம் நண்பருக்கு புரியாத புதிராக இருந்தது. ஒருநாள் தன் நண்பரையே அவர் கேட்டார், ' நண்பரே, ஒவ்வொரு நாளும் மேலே ஏறி நீரில் குதிப்பதற்கு முன், நீர் உம்முடைய கால் விரல்களை தண்ணீரில் நனைத்து கொள்வது ஏன்?' என்று கேட்டார். அப்போது அவர் நடந்த சம்பவத்தை கூற ஆரம்பித்தார்;

பல ஆண்டுகளாக நான் இந்த குளத்தில் நீந்த வருகிறேன். ஒருநாள் இரவில் என்னால் தூங்க முடியவில்லை. நன்றாக நீந்தினால் அந்த களைப்பினால் ஒருவேளை தூக்கம் வரும் என்று நினைத்தவனாக இந்த குளத்திற்கு வந்தேன். அன்று நிலா முழுமையாக பிரகாசமாக இருந்தது. நன்கு பிரகாசமாக இருந்ததால் நான் மின்சார விளக்கை ஏற்றாமல், இந்த குதிக்கும் பலகையின் மீது ஏறி குதிக்க தயாரானேன்.

அப்போது சட்டென்று ஒரு நாளும் கவனித்திராத ஒரு நிழலை கண்டேன். நிலாவின் ஒளி பிரகாசத்தில் நான் கைகளை விரித்து தாவும் நிலையில் நின்ற என் சொந்த நிழல் குளத்தின் எதிர் சுவரில் அழகான சிலுவை வடிவமாக காட்சியளித்தது. இதற்கு முன் நான் ஒரு நாளும் அந்த சிலுவை போன்ற நிழலை கவனித்ததேயில்லை. அது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது. நான் குதிக்காமல், அந்த சிலுவையையே பார்த்தவாறு கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன். என்னையுமறியாமல், 'சிலுவை ஓரு புனித சின்னம்' என்று தியானித்தேன். அதன் பின் என்னையுமறியாமல், நான் அங்கு தண்ணீரில் குதிக்காமல், அதை தியானித்தப்படியே கீழே இறங்கினேன். சில படிகள் இறங்கியும் கால்களில் நீர் படவில்லை.

கடைசி படியையும் விட்டிறங்கி, குளத்தின் அடித்தளத்தில் நின்றேன். குளத்தை சுத்தப்படுத்த குளத்தின் காவலாளி தண்ணீர் முழுவதையும் அகற்றியிருந்ததை அப்போதுதான் நான் உணர்ந்தேன். அந்த சிலுவை நிழலால் நான் கவர்ச்சிக்கப்பட்டு, என் கவனம் திசை மாற்றப்படாதிருந்தால் நான் தண்ணீரில்லாத குளத்தில் குதித்திருந்திருப்பேன், மரணத்தை தழுவியிருப்பேன். தண்ணீர் இல்லாததால் தான் என நிழல் எதிர் சுவரில் தெரிந்தது என்றும், மற்ற நாட்களில் என் நிழல் கீழே நீரில் விழுகிறதால் தெரியவில்லை என்றும் உணர்ந்தேன்.

அந்த அற்புத விடுதலையை உணர்ந்த போது என் உடல் சிலிர்த்தது. அந்த குளத்தின் அடித்தளத்திலேயே முழங்கால் படியிட்டு என்னை பாதுகாத்த இயேசுகிறிஸ்துவுக்கு நன்றி சொன்னேன். அந்த நாளிலிருந்து இன்று வரை குதிக்குமுன் நான் என் கால் விரல்களை தண்ணீரில் நனைத்து நீர் அகற்றப்படவில்லை என்பதை அறிந்து பின் குதிப்பது எனக்கு வழக்கமாகி விட்டது' என்று உணர்ச்சி மேலிட கூறினார்.

ஆம் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இறைவன் எல்லாச்சூழலிலும் நம்போடு இருக்கிறார். இயேசு கிறிஸ்துவை நம் வாழ்வில் ஏற்கும் போது அவரது பாதுகாப்பு நமக்கு அருளப்படுகிறது. நாம் அறிந்துக்கொள்ளாதப்படி நம்மை சூழ்ந்து இருக்கிற ஆபத்துக்கள், துன்பங்கள், சோதனைகள் மற்றும் கலக்கங்கள் அதிகம். நாம் தெரியாமல் மாட்டிக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களும் அதிகம். ஆனாலும் திருச்சபையை அறிந்து அதில் வாழ்கின்ற இயேசுவில் இருக்கும் போது நம்மை அவர் பாதுகாத்து உயர்த்துகின்றார்.

உலக இன்பங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திட அழைப்பு:-
மனித வாழ்வில் முதியவர், தொடங்கி சிறியவர் வரை விரும்புவது, மேலும் ஆசிப்பது இன்பத்தை கொடுக்கக் கூடிய சூழ்நிலைகளும், வாழ்க்கை நிலையும்.இதை பெறுவதற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்யத் துணிகிறான். அவ்வாறு துணிவை மேற்கொண்டு இன்பத்தை தக்க வைத்துக்கொள்ள தன்னில் காணப்படும் பண்பு நலன்களை, குணநலன்களை, சமுதாய சூழ்நிலைகளை அறிந்துக்கொள்ளவும், வளப்படுத்திக்கொள்ள மேடுபள்ளங்களை சந்திக்கின்றான்.

கடவுள் இந்த உலகை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தார். நாமும் ஒன்றுமில்லாதவர்களே. இருப்பினும் எல்லாம் வல்ல கடவுள் நம்மைப் படைத்து பாதுகாத்துப் பலன் கொடுக்கும் மனிதர்களாக மாற்ற முனைகிறார். நாமோ பலன் கொடுக்க காலம் தாமதித்து சுயநல விருப்பங்களை கண்முன் கொண்டு செயல்படுகிறோம். குடும்பத்தில், நாட்டில், சமூகத்தில் என தனது வாழ்க்கைத்தரம் உயர்வாகவும், மேலோங்கியும் அமைய வேண்டும் என்ற கருத்தை வைத்துக் கொண்டு மனித நேயம் குறைவுப்பட்டு ஆடம்பரமான வாழ்க்கை, பேராசை நிறைந்த பொருள் சேகரிப்பு, என மனிதன் தேவைக்கு மீறி அங்காடிகளில் பதுக்கி வைக்கிறான். தன்னோடு வாழும் சக மனிதர்களை பற்றி நினைக்க வாய்ப்பு குறைவுப்பட்டு இன்ப மோகம் இதயங்களை சூழ்ந்துக் கொள்கிறது.

ஆம் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே மனித வாழ்வில் மையம் பகிர்தல். இறைவன் நமக்கு கொடுத்த அனைத்து விதமான திறமைகள். செல்வங்கள், பண்புநலன்கள் அனைத்தையும் பகிர்ந்து வாழுவோம். அவ்வாறு வாழும் போது, இறைவன் எதிர்ப்பார்க்கும் இறையாட்சி பணியை நிறைவுடன் செய்ய ஆற்றல் பெறுவோம். கடவுளின் திட்டம் திருச்சபையில் பன்னிரு சீடர்கள் வழி தொடங்கியதோ, அதேப்போல் அதில் வாழும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளையும், பொறுப்புக்களையும் அறிந்து செயல்பட அழைக்கிறார். தேர்ந்தெடுத்த வாழ்வில் துணிவுடன் பொறுப்பு மிக்க நபர்களாக செயல்பட்டு இறையாட்சி பணியை செய்ய முன் வருவோம். ஆமென்