இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து பிறப்புக்காலம்

திருக்குடும்பம்

1சாமுவேல்1:20-22.24-28
1யோவான் 3:1-2.21-24
லூக்கா 2:41-52

கிறிஸ்து பிறப்புக்காலம்
இவ்விழாவை ஏற்படுத்தியவர் 13ஆம் சிங்கராய பாப்பானவர். குடும்ப தலைவர்கள் புனித சூசையப்பரை போல பிறரது பெயர், புகழை மதிக்க வேண்டும். அன்னையர் தேவதாயைப் போல அடக்க ஒழுக்கத்தோடு இருக்கவேண்டும். சூசையப்பர் மரியா இயேசுவை கொண்ட குடும்பம். அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல், துன்பத்தைப் பகிர்தல், கடவுளால் கொடுக்கப்பட்ட நோக்கத்துக்காக வாழ்தல் போன்றவற்றிற்கு இக்குடும்பம் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் குடும்பம் பற்றிய தனது சிந்தனைகளை இவ்வாறாக பகிர்ந்து கொண்டார் செப்.27,2015
இறைவனின் பெரிய கொடை மற்றும் இது இறைவனின் படைப்பில் மிகவும் அழகானது என்று விவிலியம் கூறுகிறது. குடும்பம், இறைவனின் அழகு, உண்மை மற்றும் நன்மைத்தனத்தின் வாய்க்காலாகவும், அவற்றைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது. ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் திருமண அன்பில் ஊன்றப்பட்ட குடும்பமே, கடவுளின் சொந்தத் திட்டத்தின்படி வாழ்வைத் தோற்றுவித்து பேணுகிறது. இது நம்பிக்கையின் தொழிற்சாலை போன்றது. தவறுகளே இல்லாத நிறைவான குடும்பங்கள் இல்லையெனினும், எல்லாக் குடும்பங்களிலும் நெருக்கடிகளும், இன்னல்களும், மோதல்களும், சவால்களும் துன்பங்களும் உள்ளன. சில நேரங்களில் குடும்பங்களில் சண்டைகளின்போது உணவுத் தட்டுகள் பறக்கின்றன, பிள்ளைகள் தலைவலியாய் இருக்கின்றனர். மாமியாரோடு பேச மாட்டேன் என்று சொல்லப்படும். ஆயினும் இத்துன்பங்கள் அன்பால் எதிர்கொள்ளப்படுகின்றன. குடும்பங்களில் எப்போதும் ஒளி இருக்கின்றது. ஏனென்றால் இறைவனின் அன்பு அங்கு உள்ளது. அன்பு கொண்டாட்டத்தைப் பற்றியது. அன்பே மகிழ்ச்சி. அன்பு நம்மை முன்னோக்கிச் செல்ல வைக்கின்றது. அன்பால் அனைத்தையும் மேற்கொள்ள முடியும். பல தலைமுறைகள் குடும்பங்களில் உள்ளன. சிறார், இளையோர் மற்றும் வயதானவர்களே நம் எதிர்காலம். இந்த வலிமையே நம்மை முன்னோக்கிச் செல்ல வைக்கின்றது. தாத்தா பாட்டிகள் குடும்பத்தின் வாழும் நினைவுகள். இவர்கள் விசுவாசத்தை நமக்கு வழங்கியவர்கள். எனவே வயதானவர்களையும் சிறாரையும் பராமரியுங்கள்.
திருத்தந்தையின் பிரான்சிஸ் மறைக்கல்வி – குடும்பம் தேடும் 3 வாக்கியங்கள் மே.13,2015
குடும்பம் குறித்த மறைக்கல்விபோதனையில், மூன்று வாக்கியங்கள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். அவையாவன, 'தயவுசெய்து', 'நன்றி' மற்றும் 'மன்னிப்பு'. தயவுசெய்து எனக்கூறி தலையிடுவதும், நன்றியுரைப்பதும், என்னை மன்னியுங்கள் எனக் கேட்பதும் எளிமையான வாக்கியங்களாகத் தெரியலாம், ஆனால் அவற்றை நடைமுறையில் கொணர்வது அவ்வளவு எளிதல்ல. சாதாரண வாக்கியங்களாகத் தோன்றும் இவை புறக்கணிக்கப்பட்டாலோ, அவை குடும்பங்களில் இல்லாமல் போனாலோ, அது குடும்பங்களின் அடித்தளத்தில் விரிசல்களை ஏற்படுத்தவல்லது. இவ்வாக்கியங்கள் இன்மையால் ஏற்படும் விரிசல், குடும்பங்கள் சிதறிப்போவதற்கு இட்டுச்செல்லக்கூடும். தயவுசெய்து என்று உத்தரவு பெறுவது, நன்றிகூறுவது, மன்னிப்பை வேண்டுவது ஆகியவற்றை உள்ளடக்கிய வாக்கியங்கள், நற்குணங்களின் சாதாரண வெளிப்பாடாக இல்லாமல், நம் தினசரி வாழ்வில் ஒருவர் மற்றவர் மீது கொள்ளும் ஆழமான அன்பின் அடையாளமாக இருந்தால், அவை மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்வை பலப்படுத்தும். தம்பதியரும் சரி ஏனைய குடும்ப அங்கத்தினர்களும் சரி, நமக்கு உரிமை இருக்கும் இடங்களிலும், தயவுசெய்து எனக்கூறி கருணையுடன் உரையாடும்போது, உண்மையான குடும்ப உணர்வுடன் கூடிய ஒரு சூழலை நாம் உருவாக்குகிறோம். இத்தகைய நடவடிக்கை மூலம், நாம் பிறர்மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதன் வழியாக, நாம் ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் புதுப்பிப்பதோடு, நம் குடும்ப அங்கத்தினர்கள், தங்கள் இதயங்களை நமக்குத் திறக்கவும் அனுமதிக்கிறோம். நன்றி என்ற வார்த்தை முக்கியமானது. ஏனெனில், நம் சமூகத்திற்கு நன்றியுணர்வு அதிகம் அதிகமாக தேவைப்படுகின்றது. நன்றியுணர்வு என்பதே நம்மை, மனித மாண்பு மற்றும் சமூக நீதியின் தேவைகளுக்கு மேலும் உணர்வுடையவர்களாக மாற்றுகின்றது. நன்றி என்பது கடவுளின் மொழியும்கூட. அனைத்திற்கும் மேலாக அவருக்கே நாம் நன்றிகூற வேண்டும். 'என்னை மன்னியுங்கள்' என்ற வார்த்தை இல்லையென்றால், காயங்கள் பெரிதாக வளர்ந்து, குடும்பமாயிருக்கும் நம் வாழ்வை பலவீனப்படுத்திவிடும். ஆனால், நாம் மன்னிப்பை வேண்டும்போது, நாம் ஏற்கனவே இழந்துள்ள மதிப்பு, நேர்மை, அன்பு ஆகியவற்றை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஆவலை வெளியிடுகின்றோம். இதன் மூலம், குடும்பங்களிடையே குணப்படுத்தல் என்பது எளிதாகின்றது. ‘தயவுசெய்து என உரைப்பது’, 'நன்றி கூறல்', 'மன்னிப்பை வேண்டுதல்' ஆகியவற்றை நம் இதயங்களிலும், வீடுகளிலும், சமூகங்களிலும் போற்றிப் பாதுகாத்திட உதவுமாறு இறைவனை நோக்கி இறைஞ்சுவோம்.
திருத்தூதுப் பணிகள் குடும்பங்களில் ஆரம்பமாக வேண்டும் ஏப்.30,2015.
அமைதியையும், நீதியையும் நிலைநிறுத்தும் கலாச்சாரத்தை வளர்ப்பது,திருத்தூதுப் பணிகள் குடும்பங்களில் ஆரம்பமாவது, மறைபரப்புப் பணியாளர்களாக மாறுவது என்ற மூன்று கருத்துக்களில் இவ்விரு குழுக்களையும் சார்ந்தவர்கள் தங்கள் சிந்தனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை வேண்டுகோள் விடுத்தார்.
விவிலியத்தில் இருந்து கொடுக்கப்படும் விளக்கம்
குடும்பத்தில் பெண்ணின் அன்பும், மரியாதையும்:
இளம்பெண்கள் தங்கள் கணவரிடமும் பிள்ளைகளிடமும் அன்பு காட்டி,கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டுவேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். (தீத்து 2:4-5) திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.“திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு; அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே” என்று அவன் சொல்வான். (நீதிமொழிகள் 31:10, 28-29)
சிறு பிள்ளைகளை இயேசு எவ்வாறு நடத்தினார், பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு என்ன தேவைப்படுகிறது?
சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார். (மாற்கு 10:13-16)
சிறு பிள்ளைகளோடு இயேசு நேரம் செலவிட்டார். நாமும் குழந்தைகளோடு நிறைய நேரம் செலவிட பழகுவோம், அவர்களுக்கு கற்றுக்கொடுப்போம். இதை தான் பெற்றோர்களுக்கு கட்டளையாக கொடுக்கப்படுகிறது. இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. உன் கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும். உன் வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது. (இச 6:4-9)
பிள்ளைகளைப் பாதுக்காக்க பெற்றோர்கள் என்ன செய்யலாம்
பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். (யோ 13:33) நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் நீர் என்னிடம் சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். (யோ 18:7-9) தவறுகளை கூறித்து கவனமாக எளிமையாக எச்சரிக்கை கொடுத்து வளர்த்தெடுப்போம்.
இயேசுவைப் பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்ள முடியுமா
பெற்றோர்களுக்கு எப்படிக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை இயேசு தம்முடைய சொந்த முன்மாதிரியின் மூலம் காண்பித்தார்.இயேசு அவர்களிடம்,“நீங்கள் மானிட மகனை உயர்த்திய பின்பு, ‘இருக்கிறவர் நானே’; நானாக எதையும் செய்வதில்லை; மாறாகத் தந்தை கற்றுத் தந்ததையே நான் எடுத்துரைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வீர்கள். என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்” என்றார். (யோ 8:28-29 ) பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது.“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட” என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை.“இதனால் நீ நலம் பெறுவாய்; மண்ணுலகில் நீடுழி வாழ்வாய்” என்பதே அவ்வாக்குறுதி. (எபே 6:1-3) அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார். (லூக் 2:51-52)
சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு முக்கிய வழி
நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார். (நீதிமொழிகள் 22:6) தமது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி, தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகுந்த கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும். (1தீமோ3:4) பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும். (கொலொசெயர் 3:20) திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். (எபே5:25-29) நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள். (எபே 5: 1-2)உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக. (மத் 5:43)
அன்பு கொண்டு வாழும் போது நாம் மகிழ்ச்சி கொண்ட மனிதராக வாழ்ந்து, நம்மை சுற்றியிருப்போரையும் மகிழச்செய்கிறோம். குடும்ப நலனில் தியாகம், விட்டுக்கொடுத்தல், ஊக்குவித்தல், ஆலோசனை கூறுதல், குற்றம் குறைகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் இவையே குடும்பத்திற்கு தேவையானவை. ஆமென்