இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 28 ஆம் வாரம்

உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்

முதல் வாசகம் : எசாயா 25: 6-10a
இரண்டாம வாசகம் : பிலிப்பியர் 4 :12-14,19-20
நற்செய்தி வாசகம் : மத்தேயு 22:1-14

இன்று ஆண்டின் பொதுக்காலம் 28 ஆம் வாரத்தில் பயணிக்கின்றோம். இன்றைய இறைவாசகங்கள் விருந்து உபசரிப்பைப்பற்றி எடுத்துரைக்கின்றது. என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர், என்தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர், எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது, மேலும் ஆண்டவர் என் ஆயர் எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பறச் செய்வார், அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச செல்வார். அவர் எனக்குப் புத்துயர் அளிப்பார் என்று பதிலுரைப்பாடலில் காண்கின்றோம். மேலைநாடுகளில் வாழும் நமக்கு உணவுக்குப் பஞ்சமில்லை, பணத்திற்கும் பஞ்சமில்லை, வேலைக்குச் செல்லாவிட்டாலும், உண்ண உணவும், உறங்குவதற்கு இடமும் உண்டு. இறைவன் நல்கும் நன்மைகள் ஏராளம். இறைவனின் அன்புக் கரம் நம்மை விட்டு ஒருபோதும் அகலாது என்பதை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நாம் உணர்ந்து நன்றி கூறவேண்டும். மேலும் நம்முடைய கடின உழைப்பாலும் இன்பமாய் வாழமுடிகின்றது. நமது அனைத்துக் கொண்டாடங்களில், பண்டிகைகளில் செலவிடும் பணம், பொருட்கள், நன்கொடைகள் அனைத்தும் நம்முடைய சொந்த உழைப்பினால் சேர்க்கப்பட்டாலும் அவற்றிற்கு வழி அமைத்து தருவது எல்லாம் வல்ல இறைவன்தான் என்பதை நம்பிக்கையுடன் விசுவசிக்க வேண்டும். அவருடைய அன்புப் பிள்ளைகள் மகிழ்ச்சியாய் இருப்பற்கு வழிமுறைகளை அவரே நடுவராக இருந்து எல்லாச் சூழ்நலையிலும் உதவுகின்றார் எனவே நாம் அனைவரும் இறைவனுக்கு முழுமனதுடன் நன்றி சொல்லக் கடமைபட்டுள்ளோம். இன்று உலகில் எத்தனையோ மக்கள் உண்ண உணவின்றி தவிக்கின்ற நிலையைக் காண்கின்றோம். சிறு குழந்தைகள் குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் உணவை உண்பதைக் பார்த்திருக்கின்றோம். அகதி மூகாம்களில் உண்ண உணவின்றி தவிக்கின்றார்கள். அண்மையில் நடபெற்ற சூறாவளி தாக்கத்தினால் அனைத்தும் இழந்து உண்ண உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களை சமூக ஊடகங்களின் வழியாக காணும்போது கண்ணீர்த் துளிகள் வருகின்றது இல்லையா? ஏன் இப்படிபட்ட துன்பங்கள்? அகதிகள் உணவுக்காக வரிசையில் தட்டை ஏந்திக் கொண்டு நிற்கும் காட்சிகள் நமது உள்ளத்தை தொடுகின்றதுதானே? இவர்கள் இப்படி தவிக்கின்ற வேளையில் இறைவனின் நமக்கு அருளும் பாதுகாப்பும் அவருடைய பேரன்பும் எவ்வளவு பெரிது என்று சற்று சிந்திப்போம்.

இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளை ஆழமாக சிந்திப்போம். இவரே நம் கடவுள், இவருக்கென்றே நாம் காத்திருந்தோம், இவர் நம்மை விடுவிப்பார், இவரே ஆண்டவர், இவருக்காகவே நாம் காத்திருந்தோம், இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்நது அக்களிப்போம் "ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும் என்று. அவசர உலகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நம் அனைவருக்கும் ஆண்டவர் யார்? அவருக்காக நாம் காத்திருக்கின்றோமா? ஆண்டவரிடம் தான் விடுதலை உண்டு என்று நம்புகின்றோமா? இவரே என் கடவுள் என்று நம்மால் சொல்ல முடியமா? ஆபிரகாம், மோசே, யாக்கோபு மற்றும் இறைவாக்கினர்கள் அனைவரும் அனுபவித்து உணர்ந்ததுபோல் அவரை சுவைத்திருக்கின்றோமா? இறைவார்த்தை வாசிப்பதிலும், நற்கருணை ஆராதனையிலும், திருப்பலியில் பங்குபெற்றும், செப உறவிலும், அவரைக் கண்டுகொள்ள முடியும் என்பது உண்மை.

இறைவன் நம்மை ஒவ்வொரு நிமிடமும் அழைக்கின்றார். அவரது அழைப்பை எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றோம்? திருத்தூதர் மத்தேயு நற்செய்தியில் அரசர் ஒருவர் திருமணம் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களைக்பற்றி கூறுகின்றது. அழைக்கப்பட்டவர்கள் அவருடைய அழைப்பை பொருட்படுத்தாமல் தங்களுடைய அனுதின வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவருடைய அழைப்பை மறுத்து தகுதியற்றுப் போகின்றார்கள். ஆனால் அவர் சாலையோரங்களில் கண்டவர்களையும், வழியோரத்தில் கண்ட நல்லோர் தீயோர் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி திருமணம் விருந்தில் பங்குபெற அனுமதிக்கின்றார் . இன்று நானும் நீங்களும் எந்த குழுவில் இருக்கின்றோம் என்று நம்மை நாமே ஆய்வு செய்வோம். என் இறைவனை முழுமனத்துடன் அன்பு செய்கின்றேனா? எனக்கு வேற்றுத் தெய்வம் ஏதும் உண்டா? கடந்து வந்த நாட்களில் இறைவாக்கினர் யோனா நூலின் வாசகங்கள் வழியாகவும், இறைவாக்கினர் யோவேல் நூலின் வாசகங்கள் வழியாகவும் கொடுக்கின்ற அறிவுரைகள் மனம்மாறவேண்டும் என்றும், ஆண்டவருடைய நாள் அன்மையில் உள்ளது என்றும் நம்மை விழிப்பாய் இருக்க வேண்டுமென்று எச்சரிக்கின்றார். அதற்கான அடையாளங்கள் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இறைவனுடைய அருள்பிரசன்னத்தை உணர்வதற்கும், திவ்ய நற்கருணை விருந்தில் பங்குபெறுவதற்கும் நேரம் காணாமல், உலகக் காரியங்களில் பங்குபெறுவதற்கு முதலிடம் கொடுத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம். நமது தாய் நாட்டில் வாழும்போது ஞாயிறு திருப்பலி, செபவழிபாடு மற்றும் ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து அவற்றில் பங்குபெற தவறியதில்லை. ஆனால் மேலைநாடுகளில் வாழும் நாம் கொண்டாட்டங்களுக்கும், ஆடம்பர விழாக்களுக்கும், வேலைகளுக்கும் முதலிடம் கொடுத்து, அருளின் வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அவசியமான ஒன்றை மட்டும் மறந்து வாழ்கின்றோம். இன்று இறைமகன் இயேசு என்ன கூறுகின்றார் என்று கவணிப்போம், "மனிதர் உலக முழுவதையும் ஆதயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? எனவே திருத்தூதர் பவுல் கூறுவது போல் எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வயிறார உண்ணவோ, பட்டனி கிடக்கவோ, நிறைவே குறைவே எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்க ஆற்றல் உண்டு என்று கூறிய பவுலடிகளாரின் வார்த்தையை நமது உள்ளத்தில் ஏற்று தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக இருக்க முயற்சி எடுப்போம். ஆகவே அனைத்திற்கும் மெலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்ந்து கொடுக்கப்படும் என்று மொழிந்த இறைவனின் அழைப்பை மறுக்காமல் இறைவனின் திருமணம் விருந்தில், திருமண உடை அணிந்து அவற்றில் பங்குபெற நம்மை நாமே தயார் செய்வோம். தூய தந்தையே உமது அன்பு மக்களாகிய நாங்கள் உம்மைப்போல் நல்லவைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய ஞான அருளைத் தந்தருளும்.

இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். திருவெளிப்பாடு3:20