இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக் காலம் 23 ஆம் ஞாயிறு

அவர்களிடையே நான் இருக்கின்றேன்

முதல் வாசகம் : எசேக்கியல் 33: 7-9
இரண்டாம் வாசகம் : உரோமையர் 13: 8-10
நற்செய்தி :மத்தேயு 18: 15-20

இன்று பொதுக்காலம் 23 ஆம் வாரம். வாருங்கள் தாள்பணிந்து அவரைத் தொழுவோம், நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள் நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிகாக்கும் ஆடுகள் என்று இன்றைய பதிலுரைப்பாடலில் தியாணிக்கின்றோம். நற்செய்தியில் உள்ள இறைவசனத்தையும் கருத்தில் கொள்வோம் 'உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன்". என்று கூறிய இறைமகன் இயேசுவின் வார்த்தை நம்முடைய குடும்ப செப உறவிலும், திருப்பலியின் போது இறைக்குலம் ஒன்று கூடலிலும், யாத்திரை ஒன்று கூடலிலும், இறைசமூகம் ஒருமனத்துடன் அவருடைய அருள்பிரசன்னத்தில் வழிபாட்டு சமயத்தில் ஒன்று கூடி இறைவனைப் போற்றிப் புகழும்போது அவர் நம்முடைய ஒவ்வொருவரின் உள்ளத்தில் பிரசன்னமாய் இருக்கின்றார் என்பது உண்மை அதோடு அவருடைய அருள் பிரசன்னத்தை உண்மையாக உணர்ந்திருக்க முடியும். பல சமயங்களில் பலர் நம்மிடம் செபிக்கும் படியும், துன்ப நேரங்களின் போது நம்முடைய செப உதவியைக் கேட்டவர்களுக்கும். நான் உங்களுக்காக செபிக்கின்றேன் என்று சொல்லுகின்றோம். அவர்களுடைய செபவேண்டுதலை இறைவனிடம் சமர்ப்பிக்கும் போது இறைவன் நம்மோடு வாசம் செய்கின்றார். இறைசமூகத்தில் ஆவியானவரின் துணையுடன் இறைவார்த்தை வாசிக்கும்போது இறைவனுடைய அருள்பிரசன்னத்தை நம்மால் உணரமுடிகின்றது. ஆலயத்தில் ஒன்று கூடும்போதும், பாத்திமா, லூர்து, மற்றும் எத்தனையோ புனித தளங்களுக்கு யாத்திரைக்குச் சென்று ஆண்டவருடைய ஆசீரை பெற்று மனமகிழ்நதிருக்கின்றோம். அவருடைய வாக்குமாறா இம்மானுவேலாகிய அருள்பிரசன்னம் நம்மோடு என்றும் உண்டு என்பதை உணர்கின்றோம். இறைமகன் இயேசு கூறிய வார்த்தையை உண்மையில் நம்பி விசுவசிக்க வேண்டும். இன்று நாம் அனைவரும் சந்திக்கும் சோதனைகள், துன்பங்கள், சவால்கள், நெருக்கடி வேளையில், ஆபத்தை எதிர்கொள்ளும் நேரம் இறைவனுடைய துணையை பல சமயங்களில் உணர்ந்துள்ளோம். ஏனென்றால் இறைவனுடைய உறைவிடம் மக்களின் மத்தியில் உள்ளது. "இதோ கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்." என்று திருவெளிப்பாடு நூலில் காண்கின்றோம். எனவே நமது இறைவன் உண்மையுள்ளவர், வாக்கு மாறாதவர் என்பதை உணர்ந்து அவரிடம் நம்பிக்கை கொள்வோம்.

இறைவனின் உடனிருப்பை அவருடைய வார்த்தையின் வழியாக தியானித்து கடந்து வரும் நாட்களில் அவருடைய உறவில் வளர்வோம். ஆபிரகாம்: இறைவன் ஆபிரகாமிடம் கூறுகின்றார் " ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன் உனக்குப் பெரும் கைமாறு கிடைக்கும். தொடக்க நூல்15:1 ஈசாக்: அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி, உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே. ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன். உனக்கு ஆசி வழங்கி என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு உனது வழிமரபைப் பெருகச் செய்வேன். தொடக்கநூல் 26 :24 யாக்கோபு: நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில் நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னை கைவிடமாட்டேன் " என்றார். யாக்கோபு தூக்கம் தெளிந்து உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார், நானோ இதை அறியாதிருந்தேன். தொடக்கநூல் 28:15-16 மோசே: அப்போது கடவுள், நான் உன்னோடு இருப்பேன். விடுதலைப்பயணம் 3; 12 கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே 'என்றார். மேலும் அவர் நீ இஸ்ரயேல் மக்களிடம். இருக்கின்றவர் நானே 'என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல். விடுதலைப்பயணம் 3:14

இறைவாக்கினர் மோசே இறைவனிடம் அவருடைய மாட்சியை காட்டும் என்ற வேண்டுதலுக்கு இறைவன் கூறும் பதிலை சற்று கவணிப்போம். என் நிறை அழகை உன் முன் கடந்து போகச் செய்து ஆண்டவர் என்ற பெயரை உன்முன் அறிவிப்பேன். நான் கடந்து செல்லும் வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன். மேலும் எனது பிரசன்னம் உன்னோடு செல்லும் என்று இறைவன் வாக்கு தருகின்றார். இறைவன் தனது சொந்த மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அவரது பணியை துணிவுடன் செய்வதற்கு அவர் எப்போதும் அவர்களுடன் இருப்பார். இறைவன் யோசுவாவிடம் கூறுகின்றார் : வீறு கொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன். உன் கடவுளாகிய ஆண்டவர் மோசேயுடன் இருந்ததுபோல் உம்மோடும் இருப்பாராக என்று வாக்கு தருகின்றார். ஆம் நம் இறைவன் பாசமும் நேசமும் நிறைந்தவன். நமது கால் கல்லில் மோதாதபடி பாது காப்பவர். இரவெல்லாம் உறங்காமல் காப்பவர். கண்விழித்து காப்பவர். எங்கு சென்றாலும் நம்மைக் காக்கும்படி தம் தூதரை அனுப்புகிறவர். அவர் சிறகுகளின் நிழலில் நம்மை அரவணைப்பவர். இறைமகன் இயேசு இதோ! உலகம் முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன் என்று தன்னுடைய சீடர்களுக்கு வாக்கு கொடுத்தவர் வாழ்கின்றார். அவரை நம்பி அவரிடம் செல்வோம். முதலும் முடிவும் நானே, வாழ்பவரும் நானே என்று சொன்னவர் நம்மிடையே வாழ்கின்றார். ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவரைப் புகழ்ந்து துதித்து ஆராதித்து அவரை அனுபவிப்போம்.

நீர்நிலைகள் வழியாக நீ செல்லும் போது நான் உன்னோடு இருப்பேன், ஆறுகளைக் கடந்து போகும் போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா. தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய். எசாயா 43:2