இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம 21 ஆம் வாரம்

நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்

எசாயா 22 : 19-23
இரண்டாம் வாசம் 11: 33-36
மத்தேயு 16: 13-20

பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு. ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு. உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன். அவர் உன்னதத்தில் உறைபவர். எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர் என்று பதிலுரைப் பாடலிலும், அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன, அவராலேயே உண்டாயின, அவருக்காகவே இருக்கின்றன, அவருக்கே என்றேன்றும் மாட்சி உரித்தாகுக என்று உரோமையர் திருமடலிலும், தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான், எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான், எவனும் திறக்கமாட்டான். அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான் என்று இறைவாக்கினர் எசயா நூலிலும் காண்கின்ற பொதுவான மையக்கருத்து இறைமகன் கிறிஸ்து இயேசுவைக் குறித்து என்பதையும் மேலும் திருவெளிப்பாடு நூல் ( 3:7) இறைவார்த்தையில் குறிப்பிடுவது : தூயவரும் உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும் எவருடம் பூட்ட முடியாதவாறு திறந்து விடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும் என்று குறிப்பிடுபவரும் இறைமகன் இயேசு கிறிஸ்துதான் என்பதையும் அறிகின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு தம் சீடர்களை நோக்கி இரண்டு விதமான கேள்விகளைக் கேட்கின்றார். "மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள் ? நீங்கள் யார் எனச் சொல்கிறீர்கள்? என்று. பொதுமக்கள் அவரை, திருமுழுக்கு யோவான், இறைவாக்கினர் எலியா, இறைவாக்கினர் எரேமியா, பிற இறைவாக்கினர் என்று கருதுகின்றார்கள் என்றனர். இறைமகன் இயேசுவோடு வாழ்ந்து, உண்டு, அனைத்திலும் பங்குபெற்று, அவரால் அன்பு செய்த சீடர்களில் ஒருவர் மட்டுமே அவரை யாரென்று புரிந்து கொள்ள முடிந்தது. விண்ணரசின் திறவுகோல்களை பெறும் சீமொன் பேதுருவால் மட்டுமே அவர் மெசியா, வாழும் இறைவனின் மகன் என்று அறிக்கையிட முடிந்தது. இறைவனையும் அவருடைய செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள ஆவியானவரின் துணையும், அகத்தூண்டுதலும் மிகவும் அவசியம் என்பதை நன்றாக விளங்குகின்றது. நம்முடைய அனுதின வாழ்க்கைச் சூழ்நிலையில் கேள்விகள் கேட்பதும், அதற்கு ஏற்றப் பதில்கள் தருவதும் மிகவும் முக்கியமான ஒன்று. அவை நமக்கு ஒரு பெரும் மாற்றத்தைக் ஏற்படுத்தக் கூடும் என்பதுதான் உண்மை. அதோடு தெளிவான எண்ணத்தையும் கொடுக்கும்.

நமது வாழ்க்கை முழுவதும் வினாக்கள் நிறைந்தவைகளாக உள்ளது. என் வாழ்க்கையில் நான் என்ன செய்யப் போகிறேன்? எந்த தொழிலை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்? எந்த படிப்பை நான் படிக்கப் போகின்றேன்? எனக்கு திருமண வாழ்க்கையா அல்லது துறவற வாழ்க்கையா? எனது வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன? என் குடும்பத்தை எப்படி கட்டி எழுப்பப் போகின்றேன்? என் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நான் ஏன் வாழ வேண்டும்? நான் எதற்காக வாழவேண்டும்? போன்ற பல கேள்விகள் நம் ஒவ்வொருவரின் உள்ளத்தின் ஆழத்தில் எழும்பிக் கொண்டு இருக்கலாம். இறைமகன் இயேசுவைப் போல் நாமும் பிறரிடம் கேட்களாம். என்னை யாரென்று கூறுகிறார்கள்? எங்கிருந்து வந்தவர்? என்ன தொழில் செய்கின்றவர்? எந்த இனம்? எந்த சாதி? எந்த நாடு? என்ற கேள்விகளை அடிக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அவைகளுக்கு ஒவ்வொரு நொடிப் பொழுதும், ஒவ்வொரு நாளும் பதில் கொடுக்க வேண்டியது நமது கடைமையாகும். சிலநேரங்களில் நம்முடைய கேள்விகளுக்கு பதில் கிடைக்காமலும் போகலாம். இறைமகன் இயேசுவின் வாழ்க்கை வரலாறு மிகவும் வித்தியாசமானது. சிந்திப்போம்.

நாசரேத் என்னும் ஊரில் ஒரு கன்னியிடம் பிறந்தவர். ஏழ்மையின் கோலத்தில் மாட்டு தொழுவத்தில் பிறந்தவர். தன்னுடைய வளர்ப்புத் தந்தை சூசையுடன் தச்சுத் தொழில் செய்தவர். மூன்று ஆண்டுகளாக தங்க இடம் ஏதும் இல்லாமல் அலைந்து திரிந்து இறையாட்சிப் பணியைச் செய்தவர். தன்னுடைய மூன்று ஆண்டுப் பணிவாழ்க்கையில் தன்னைத் தேடிவந்த நோயாளிகளுக்கு சுகமும், குருடர்களுக்குப் பார்வையும், தொழுநோயாளர்களுக்கு குணமும், இறந்தவர்களுக்கு வாழ்வும், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு மதிப்பும் மறியாதையும், பசியாய் இருந்தவர்களுக்கு உணவும் கொடுத்து, மக்களின் மனங்களில் இடம் பெற்றவர். ஆனால் அவருக்கு தலைசாய்க்க இடம் இல்லை, பட்டப்படிப்பு இல்லை, பதவி இல்லை, பாதுகாப்பு படை இல்லை, அவர் உயர்வான பதவி எதுவும் செய்ய வில்லை. ஆனால் அவருடைய இளம் வயதில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டன. அவருடைய சீடர்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர், அவர் அன்பு செய்த ஒருவரால் மூப்பது வெள்ளிக் காசுக்கு காட்டி கொடுக்கப்ட்டார், ஒருவரால் மறுதலிக்கப்பட்டார், மூப்பர்கள் முன்பு இகழ்ச்சிக்கும், கிண்டலுக்கும் தள்ளப்பட்டார், இரண்டு குற்றவாளிகளின் நடுவில் சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டவர், தனக்கென்ற இருந்த உடைகளைக்கூட அவர்கள் அவரிடமிருந்து எடுத்துக் கொண்டனர். அவர் இறந்தபிறகு அவரை பிறருடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவர். இருபது நூற்றாண்டுகள் கடந்து சென்றாலும் அவருடைய பெயரும் வல்லமையும் , வரலாற்றில் சிறந்த தலைவராகவும், ஆண்டவராகவும் இன்றும் என்றும் விளங்குகின்றவர். இறைமகன்இயேசுவின் வாழக்கைப் பாதை எத்தனையோ மனித உள்ளங்களை மாற்றியது. ஏனென்றால் அவருடைய குரல் உண்மையையும் நேர்மையையும் எடுத்துரைத்தது. துன்பப்படும் உள்ளங்களைக் கண்டு அவருடைய மனம் உருகியது. யாரையும் அவர் தீர்ப்பிடவில்லை. உண்மையை மட்டும் எடுத்துரைப்பது அவருடைய பணியாக இருந்தது. ஏன் இன்று மனிதன் மாறிக்கொண்டுள்ளான்?

இன்று சமூக ஊடகங்களின் வழியாக நாம் அனைவரும் அனுதினம் காண்பது உண்மைக்கு எதிரான வன்முறைகள், அநீதிகள், போராட்டங்கள், ஏழை எளியவர்களை அடிமையாக்குதல், சிறு பிள்ளைகளை தீயவழிகளில் கொண்டு செல்லுதல், கொலைகள், பாலியல் தொல்லைகள், இறைவனின் பெயரில் பயங்கர வாதம், இயற்கை அழிவுகள், எங்கும் பாதுகாப்பு அற்ற நிலை, குடும்பத்திலும், சமுதாயத்திலும் அமைதியற்ற நிலை, சுயநலத்தை மட்டும் விரும்பும் அரசியல் தலைவர்கள், பதவிக்காக பிறரை கையுட்டுக் கொடுத்து வீழ்த்தும் தலைவர்கள், மதப்போராட்டத்தை தூண்டிவிடும் தலைவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மனித குலத்தை மீட்பதற்கு இன்று யார் உண்டு. யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தை உம்மிடம்தானே உண்டு என்ற வார்த்தையை நம்பி, உண்மைக்கும் நிலைவாழ்வுக்கும் இட்டு செல்பவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவை உற்று நோக்குவோம். இறைமகன் இயேசு நமக்கு கொடுத்த விழுமியங்களை பின்பற்றி அவர் வழியில் செல்வோம். இன்று இறைமகன் இயேசு என் வாழ்க்கையில் யார் என்று கேட்டால், நான் அதற்கு என்ன பதில் கொடுப்பேன். சீமோன் பேதுருவைப்போல் நீர் மெசியா? வாழும் கடவுளின் மகன் என்று சொல்ல எனக்கு முடியுமா? என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் அவரை முழுமையாக அனுபவித்து உள்ளேனா? அவருடைய ஆவியானவர் என்னில் செயலாற்றுகின்றாரா? சிந்திப்போம். செப உறவில் அவரை சுவைப்போம். உலகத்தை எல்லா தீயசக்தியிலிருந்து பாதுகாக்க செப ஆயுதத்தை கையில் எடுப்போம்.

கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். கொலோசையர்3:16