இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









ஆண்டவரின் உயிர்ப்பு ஞாயிறு

கிறிஸ்து உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்

திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43
கொலோசையர் 3:1-4
யோவான் 20:1-9

ஆண்டவரின் உயிர்ப்பின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். தவக்காலம் 5ஆம் வாரம் இறைமகன் லாசரின் கல்லறையின் முன்பு மார்த்தாவிடம் "உயிரத்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார் " என்று மொழிந்த வாக்கு அவருடைய மரணத்திலும் உயிர்ப்ப்பிலும் உண்மையாகின்றது. இறைமகன் இயேசு இருளின் மீது வெற்றி கொண்டு நம் அனைவருக்கும் நிறைவாழ்வை அளித்தவர் என்பதை அவருடைய உயிர்ப்பு உணர்த்துகின்றது. யூதர்களுடைய பாஸ்கா விழாவின் போது, கோவிலைத் தூய்மைப்படுத்துதல் நிகழ்வில், ஆடு மாடு புறா விற்போரை சாட்டையால் துரத்தினார். அப்பொழுது யூதர்கள் அவரிடம் இவற்றையெல்லாம் செய்ய உரிமை உண்டு என்பதற்கு அவரிடம் அடையாளம் கேட்டனர், அவர்களுக்கு இயேசு மறுமொழியாக இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் என்று அவர்கூறியது அவருயைட உயிர்ப்பில் நிறைவேறுகிறது. அவர் கூறிய இவ்வாக்கு அவருடைய மரணத்தையும் உயிர்ப்பையும் குறித்துதான் என்பதை அவருடைய சீடர்களும், நாம் அனைவரும் இன்று நம்புகின்றோம். பெரிய வியாழன் அன்று தாழ்மையுடன், தான் அன்புசெய்த சீடர்களின் காலடிகளைக் கழுவி நமக்கு தாழ்மையின் செயலைத் தொடர்ந்து செய்வதற்கு வழிகாட்டித் தருகின்றார். அன்பின் உன்னதமான கட்டளையைக் நமக்குத் தருகின்றார். திருப்பாடுகளின் வெள்ளி அன்று இறைமகன் இயேசுவின் பாடுகள், சிலுவை மரணம் பற்றி தியானிக்கையில் மனக்கலக்கமும் வேதனையும் அடைகின்றோம். அவர் அன்பு செய்த சீடர்களின் மறுதலிப்பு, முத்தம் கொடுத்து முப்பது வெள்ளிக் காசுக்காக காட்டிக் கொடுத்தது, சாட்டை அடிகள், முள்முடியின் வேதனைகள், ஏளனமானப் பேச்சுக்கள், அனைத்தையும் அமைதியுடன் ஏற்றுக் கொண்டு, அனைவருக்காகவும் இறைவனிடம் மன்னிக்கும்படி மன்றாடுகின்றார். அமைதியின் நாயகனாகவும், மன்னிப்பின் அரசராகவும் விளங்கினார். மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசுவின் உள்ளம் மிகவும் கருணையும் இரக்கமும் உள்ளது, அவர் தந்தையின் திருவுள்ளத்தை நிறைவேற்ற அனைத்தையும் தாங்கிக்கொண்டார். நம் அனைவரின் குற்றங்களுக்காகக் காயமடைந்தார், நொறுக்கப்பட்டார், நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். இறைமகன் இயேசு அருடைய தந்தையின் வல்லமையால் மூடியிருந்த கல்லறையின் கதவை அகற்றி வெற்றியின் வேந்தனாக வந்தவர் என்றும் நம்முள் வாழ்கின்றார். இன்று நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் பலவகையானக் மனிதக் கல்லறைகளின் கதவுகளை, உயிர்த்து வாழ்கின்ற இயேசுகிறிஸ்துவின் வல்லமையால் அகற்றப்ட வேண்டும். பாஸ்கா பெருவிழாவைக் கொண்டாடுகின்ற இப்புனித நாளில் தன்னுடைய வாழ்வையே கொடையாக கொடுத்த இறைமகன் இயேசுவுக்கு நன்றி கூறுவதுடன், இன்று உலகில் பல்வேறு வடிவத்தில் எழுகின்ற தீயசக்திகளின் கல்லறைகளை உடைத்தெரிய வல்லவராம் மீட்பரிடம் மன்றாடுவோம். நாம் வாழுகின்ற சிறிய வட்டாரத்தில் உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக தூய்மையுடன் வளர்ந்து வாழ்வதற்கு அவருடைய அருள் வேண்டுவோம்.

இறைமகன் இயேசு நம் அனைவரின் மீட்பிற்காக ஏற்றுக் கொண்ட உன்னதமானக் கொடைதான் சிலுவை மரணும், அதன் வழியாக உயிர்ப்பின் நிறைவாழ்வு. இறைமகன் இயேசுவிடம் தான் நிறைவாழ்வு உண்டு என்பதை முன்கூட்டியே திருதூதர் யோவான் நற்செய்தியில் (1:4) கூறுகின்றார், "அவரிடம் வாழ்வு இருந்தது, அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது, இருள் அதன்மேல் வெற்றி கொள்ள வில்லை" என்று. திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு நாம் அனைவரும் அவரோடு ஒன்றாக இணைந்துள்ளோம். நமது ஆழ்ந்த நம்பிக்கையின் விசுவாசத்தின் வழியாக அவரோடு இறந்து உயிர்பெற்றுள்ளோம் என்பது முற்றிலும் உண்மை. இறைமகன் இயேசு தம் சீடர்களிடம் நிலைவாழ்வைப்பற்றி மொழிந்த உயிருள்ள வார்த்தைகளைப்பற்றி சிந்திப்பது நமக்கு உயிர்ப்பின் நாட்களில் நன்மை விளைவிக்கும். - அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். (யோவான் 6:27) - வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது. (யோவான் 6: 32b-33) - வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. ( யோவன் 6:35) - மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன். ( யோவான் 6:40) - என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொலிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்தெழச் செய்வேன். ( யோவான் 6:44) - உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வுதரும் உணவு நானே. (யோவான் 6:47-48) - விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். (யோவான்6:51) - வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். (யோவான்6:57) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறைமகன் இயேசு மொழிந்த ஒவ்வொரு வாக்குகளும் உண்மையும் வாழ்வும் நிறைந்த கொடையாகும். அவர் முன்கூட்டியே மனிதருக்கு கூறிய அறிவுரையாகும். ஆண்டாண்டு காலமாக இறைவனுடைய வார்த்தையையும் அவருடைய உடலையும் பானமாக உண்டும் கேட்டும் கிறிஸ்துவர்களாக வாழ்ந்து வந்திருக்கின்றோம். இறைமகன் இயேசுவை உண்மையில் அவருடைய பிரசன்னத்தை அனுபவித்து உள்ளோமா என்று நம்மை நாமே ஆய்வு செய்வோம். நமது கிறிஸ்துவ வாழ்வு இறைவன் இல்லாத வெறும் கல்லறையாக இருக்கின்றதா? நமது ஆன்மாவாகிய உள்ளக் கல்லறையில் இறைவன் வாழ்வதற்கு எதிராகவும் தடையாகவும் உள்ளப் பாவங்களை களைந்து எரிந்துவிடுவோம். மனம் மாற்றம் பெற்று நமது ஆன்மாவான உள்ளத்தின் கதவை திறந்துவிடுவோம், உயிர்த்த இயேசுவின் அமைதி சாந்தி மன்னிப்பின் கனிகள் நம் ஒவ்வொருவரின் உள்ளத்தைப் புதுப்பிக்கட்டும். கிறிஸ்துவோடு உயிர்பெற்றவர்களாகிய நமக்கு அவர் ஒரு முக்கியமான வேண்டுகோளை நம்முன் வைக்கின்றார். மேலுலகு சார்ந்தவற்றை நாட வேண்டுமென்று. அமைதியின் மகிழ்ச்சியின் பெருநாளைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது அவருடைய விருப்பத்திற்கு ஏற்ற வாழ்வு வாழ வேண்டுமென்று. இந்த உலகத்தில் வாழும்போது நமக்கு அனுதின வாழ்க்கைக்குத் தேவையானவைகளை தேர்ந்து எடுத்து வாழ்க்கையில் முன்னேறுவதுபோல், இறைமகன் இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பின் அருளை நிறைவாக பெற்று அருள் வாழ்வில் உயர்வோம். இறைவன் இயேசு இன்று ஒவ்வொரு நாளும் மனிதரால் நிந்திக்கப்பட்டு மரணவேதனை ஏற்று என்றும் நம்மத்தியில் பல்வேறு உருவில் இறந்து கொண்டுதான் இருக்கின்றார். மனிதனாகிய நமக்கு மனம் மாற்றம் தேவை.

நீங்களும் நானும் உயிர்த்த இயேசு கிறிஸ்துவை இறைவார்த்தையின் வழியாகவும், திருவழிபாட்டின் வழியாகவும், அருட்சாதனங்களின் வழியாகவும் அவருடன் முழுமையாக இணைந்துள்ளோம். நம்முடைய பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள் எனவே பாவ மன்னிப்பு பெற்று இறைவனுடைய வாழ்வை முழுமையாகப் பெறுவோம். சமயப் போர்கள் நீங்கி, உலகம் அமைதி பெறவும், ஆப்பிரிக்கா கண்டத்தில் பஞ்சம் பசி தீரவும், விவசாய்களின் கண்ணீர் துளிகளும், நீதியின் குரலும், பயங்கரவாதம், வன்முறைகள், இறைவனுக்கு எதிராகப் புரியும் அனைத்துப் பாவங்களும் முழுமையாக நீக்கம் பெறவும், தீய சக்திகளும் மனித உள்ளத்தைப் தீண்டாமல் இருக்க நாம் அனைவரும் விழிப்போடும் நன்றி உணர்வோடும் இறைவேண்டல் செய்வோம். நவீனப் பொருட்களும், உலக சுகங்களும், செல்வம், பணம், பதவி முதலியவை ஒருபோதும் நிறைவாழ்வை கொடுக்கப் போவதில்லை. இறைமகன் இயேசு ஒருவரால் மட்டும்தான் நமக்கு அமைதியான வாழ்வு கொடுக்க முடியும். எனவே நாம் பெற்ற நம்பிக்கையும் விசுவாசத்தையும் இறைவனுடைய பொக்கிஷமாக ஏற்று அவருடைய வாழ்வில் வளர்ந்து அழியா நிறைவாழ்வைப் பெறுவதற்கு அனுதினம் முயற்சிப்போம். மேலே கூறப்பட்ட யோவான் நற்செய்தியின் இறைவார்த்தையை அனுதினம் தியானித்து பயன்பெற்று, இறைவனின் அருள் வாழ்வில் வளர்வோம்.

கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர் . அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவிர்கள். கொலோசையர்:34