இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

வாழ்வு தரும் தண்ணிர்

விடுதலைப் பயணம் 17:3-7
உரோமையர் 5: 1-2,5-8
யோவான் 4:5-42

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு. மனம் மாற்றத்தின் காலத்தில் பயணம் செய்யும் நமக்கு இன்றைய திருப்பலி வாசகங்கள் மனிதனின் ஆன்மாவின் தாகத்தைத் தீர்க்கும் தண்ணீரைப்பற்றி எடுத்துரைக்கின்றது. இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும். மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் " என்று கூறுவதை யோவான் நற்செய்தில்(7:37-38) காண்கின்றோம். இறைமகன் இயேசுவிடம்தான் உண்மையான வாழ்வு உண்டு. திருத்தூதர் தோமாவிடம் இறைமகன் இயேசு 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' (யோவான்14:6) என்று கூறுகின்றார். மேலும் "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்"என்று கூறுகின்றார்(யோவான்14:16-17). இறைமகன் இயேசுவின் ஒருவரால் மட்டும்தான் நமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுக்கமுடியும். இன்றைய முதல் வாசகத்தில் கூறுவது இஸ்ரயேல் மக்கள் சீன் பாலைவனத்தில் தண்ணீர்ன்றித் தவித்தபோது மோசேயிடம் முறுமுறுத்தபோது அவர் தன்னுடைய மக்களுக்காக இறைவனிடம் மன்றாடுகின்றார். அப்பொழுது இறைவன் அவருடைய மன்றாட்டைக் கேட்டு, நைல்நதியை அடித்த கொலைக் கொண்டு பாறையை அடித்து வாழ்வு தரும் தண்ணீரை அவர்களுக்கு கொடுத்து அவர்களுடைய தாகத்தை தீர்க்கின்றார். இறைவன் இஸ்ரயேல் மக்களை மோசேயின் வழியாக எகிப்தியரின் அடிமைதனத்திலிருந்து விடுதலையாக்கி அற்புதங்கள் பலவற்றை செய்து, இரவும் பகலும் அவர்களுக்கு துணையாக இருந்து, செங்கடலை இரண்டாகப் பிரித்து அதன் வழியே அவர்களை நடத்திச் சென்று, பாரவோனின் படைகளையும் செங்கடல் நடுவில் அமிழ்த்தியவரை மறந்து மறந்து அவருக்கு எதிராக முறுமுறுக்கின்றர். இன்று நாமும் சில நேரங்களில் அப்படித்தானே? ஆனால் இறைவன் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அளவிடமுடியாத பேரன்பையும், இரக்கத்தையும் நன்மைகளையும் செய்து வருகின்றார் என்பதுதான் உண்மை? இறைவனை முழுமையாக நம்பினால் தகுந்த நேரத்தில் செலாற்றுவார் என்பதுதான் உண்மை. இரக்கமும் அன்பும் மிகுந்த இறைவன் என்றும் வாக்கு மாறாதவர். அவரையே என்றும் நம்புவோம்.

இன்று நமது ஆன்மீக உள்ளமும், அனு தின வாழ்வும், சீன் பாலைவனம் போல் வறண்டு காணலாம். பாலைவனம் மணல், வெப்பக் காற்று, பசி, தாகம், பயணக் களைப்பு, பாலைவனச் சூழ்நிலைகள் நமக்கு பயத்தையும், மன அழுத்தத்தையும், துன்பத்தையும், கவலையையும் கொடுக்கலாம். இறைவனுக்கு எதிராக செயல்படுகின்ற அனைத்து பாவங்களும் இத்தகைய அனுபவத்தையும் உணர்வையும் கொடுக்கலாம். நமது ஆன்மாவிலும் வாழ்க்கையிலும் படிந்து கிடக்கின்ற பாலைவனப் பாரங்களை அகற்றிவிட எங்கே செல்வது? மீண்டும் அவற்றை எப்படி சரி செய்வது, அதன் வளர்ச்சிக்கு எங்கே போவது? என்று சிந்திக்கலாம். நம்முடைய ஆன்மீக வாழ்வுக்கு ஊக்கம் தரும் ஒரே மருந்து வாழ்வு தரும் தண்ணிர். அவற்றை ஒருவரால் மட்டும் தான் நமக்கு கொடுக்க முடியம். அவர்தான் சமாரியாப் பெண்ணிடம் உரையாடும் இறைமகன் இயேசு. இன்று திருப்பலியில் வாசிக்கப்படும் நற்செய்தியில் இயேசு சமாரியப் பெண்ணிடம் கூறும் உரையாடலைக் கவணிப்போம். "இயேசு அவரைப் பார்த்து, "கடவுளுடைய கொடை எது என்பதையும் குடிக்கத் தண்ணீர் கொடும் எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர், அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்". (யோவான்4:10) நமது வாழ்வுக்கு தேவையான அனைத்து கொடைகளும் இறைமகன் இயேசுவிடம் உண்டு என்பதை இங்கு நன்றாக உணரமுடிகின்றது. யாக்கோப்பின் கிணற்றில் உள்ளத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது, நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும் "என்று இயேசு கூறுகின்றார். இறைமகன் இயேசுவினால் மட்டும்தான் நமக்கு நிலைவாழ்வு அளிக்கமுடியும். நாம் வாழ்கின்ற உலகில் எவ்வளவுதான் உலகச் செல்வம், புகழ், பட்டம், படிப்பு இருந்தும் நமது ஆன்மா என்னும் சிறிய கோவிலில் வாழும் இறைவனுக்கும் அவர் படைத்த மனிதருக்கும் எதிராக குற்றங்கள் செய்யும்போது இறைவன் அங்கு வாழ்வதில்லை. அவரின் அருளின் பிரசன்னத்தை உணரமுடியாமல் பல நேரங்களில் தவிக்கின்றோம். சமாரியப் பெண்ணின் பாவநிலையைக் கண்ட இறைமகன் இயேசு அவரிடம் உரையாடுகின்றார். இயேசு அவருடைய துன்பநிலையையும் பாவ நிலையையும் நன்கு அறிந்து அவருடன் உரையாடி அப்பெண்ணின் துன்ப வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து, அவளைப் புதுப்படைப்பாக மாற்றுகின்றார். இறைமகன் இயேசுவின் நேரடித் தொடர்பும், அவருடைய கனிவான உரையாடலும் சமாரியப் பெண்ணை புதுப்படைப்பாக மாற்றுகின்றது. நமது வாழ்வாகிய கிணற்றில் பலவகையான குற்றங்கள் இருப்பினும் அவற்றை மன்னிக்க கூடியவர்தான் நமது மன்னிக்கும் இறைமகன் இயேசு. இறைவாக்கினர் எசாயா கூறுகின்றார் "அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார், நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார், நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார், அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம் 'என்று. தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையில் பயணிக்கின்றோம் வாழ்வு தரும் இறைவனுக்கும் அவருடைய வார்த்தைக்கும் செவிமடுத்து தூயவாழ்வு வாழ்வதற்கு அவருடைய அருளை இறைஞ்சுவோம். நம்முடைய வாழ்வில் எவ்வளவுதான் நாம் குற்றம் குறைகளோடு வாழ்ந்தாலும் அவற்றை மன்னிக்க கூடியவர்தான் நமது இறைவன். வாழ்வின் ஊற்றாகிய இறைமகன் இயேசுவிடம் நமது குற்றம் குறைகளை செபத்தின் மூலமாகவும், ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாகவும் இறைவன்முன் அறிக்கையிட்டு இறைவனுடனும் நம்முடைய உறவுகளுடனும் ஒப்புரவாகி ஆண்டவராகிய இறைமகன் இயேசுவின் இரக்கத்தைப் பெறுவோம்.

உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவார். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக் ஏற்ப உள்ளத்தில்தான் வழிபடுவர். யோவான் 4:23