இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு

மனம் மாறுங்கள்

எசாயா 9: 1-4
முதல் கொரிந்தியர் 1: 10-13, 17
மத்தேயு 4: 12-23

இன்று பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு. "ஆண்டவரே என் ஒளி, அவரே என் மீட்பு, யாருக்கு நான் அஞ்ச வேண்டும். ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம், யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும் என்று தாவீது அரசர் இறைவனை நோக்கி உள்ளத்தின் ஆழத்தில் எழுப்பிய ஒரு மனித உணர்வின் உன்னத செபமாகும். நீதியோடுகூடிய உண்மையான வாழ்க்கை வாழ்வதற்கு ஆண்டவரின் ஒளி நமக்கு மிகவும் அவசியம். இறைவாக்கினர் எசாயா "காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள், சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது" என்று கூறுகின்றார். காரிருளில் நடந்து வந்த பிற இனத்தவர்களாகிய நமக்கு ஒளியின் இறைவனாக இறைமகன் இயேசு தனது வாழ்வையே கொடையாக கொடுத்து, சிலுவை மரணத்தை ஏற்று நிலையான ஒளியின் வாழ்வுக்கு வழியை காண்பித்து இன்றும் என்றும் நம்மோடு வாழ்பவர். அவருடைய ஒளியின் பாதையில் நடந்தவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று இன்று இறைவனின் மாட்சியில் பங்கு பெற்றுள்ளார்கள். இறைவனின் ஒளியை நம்முடைய வாழ்வில் அனுபவிக்க வேண்டுமென்றால் நமக்கு மனம் மாற்றம் தேவை. நம்மிடம் காணப்படும் வலைகளையும் மிதியடிகளையும் அகற்ற வேண்டும். இறைவன் ஓரேபு மலையில் எரியும் முட்புதர் நடுவிலிருந்து மோசேயை அவருடைய பணிக்காக அழைத்தபோது "இங்கே அனுகி வராதே உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றி விடு, ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம் "என்று கூறுகின்றார். மோசே ஒளியான இறைவனிடம் செல்வதற்கு அவரது மிதியடிகள் தடையாக இருந்தது. மேலும் அவர் இறைவனை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக் கொண்டார் என்று இறைவார்த்தையில் காண்கின்றோம். மோசே தனது மிதியடிகளை அகற்றிய பொழுது இறைவன் அவருடைய வாழ்க்கையில் செயலாற்றத் தொடங்குகின்றார். எகிப்தில் இறைவனின் அன்பு மக்களாகிய இஸ்ரயேல் படும் துன்பத்தையும், அழுகுரலையும், துயரங்களையும் கண்ட இறைவன் மோசேயை தலைவராக அழைக்கின்றார். மோசே இறைவனிடம் நான் நாவன்மை அற்றவன், எனக்கு வாய் திக்கும், நாவும் குழறும் என்று கூறியபோது, இறைவன் அவரிடம் கூறுவது நானே உன் நாவில் இருப்பேன், நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன் என்று. ஆம் இறைவன் மோசே வழியாக வல்ல செயல்கள் புரிந்து இஸ்ரயேல் மக்களை பாரோவோனின் கையிலிருந்து விடுவித்து தான் வாக்களித்த நாட்டிற்கு அழைத்து வருகின்றார். மோசே இஸ்ரயேல் மக்களுக்கு மீட்பராகவும், இறைவாழ்வுக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் மக்களுடன் ஒருவராக வாழ்ந்து இறைவனின் வழிமுறைகளை கற்பித்து மாபெறும் இறைவாக்கினராக திகழ்ந்தார். இன்று உலகில் மக்களை வழிநடத்துவதற்கு இப்படிபட்ட இறைவாக்கினர்கள் தேவையாக உள்ளது. அறுவடையோ மிகுதி வேளையாட்களோ குறைவு என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தை உண்மைதானே!

இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் கடலில் வலைவீசிக் கொண்டிருந்த மீனவர்களைப் பார்த்து என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்று கூறி தன்னுடைய முதல் சீடர்களை அழைக்கின்றார். இன்று இயேசுவின் பணியைத் தொடர்ந்து செய்வதற்கு நிறைய இளம் உள்ளங்கள் தேவைப்படுகின்றன. உலகிற்கு ஒளியாகவும் உப்பாகவும் விளங்க இளம் உள்ளங்கள் வேண்டும்தானே!. இறைமகன் இயேசு தனது பணியைத் தொடங்கிய போது "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்று பறைசாற்றுகின்றார். இறைவனின் பணியைச் செய்ய முன்வரும் போது பலவையான வாழ்க்கை வலைகளை விட்டு விட்டு மனம் மாற்றம் பெற்று இயேசுவில் ஒன்றாக இணைந்து அவருடைய தன்மைகளைப் முழுமையாகப் பெற்று பிறரை அவரது பாதையில் ஒளியில் நடத்திச் செல்ல வேண்டும். இன்று கிறிஸ்துவில் இணைந்துள்ள நம் அனைவரின் கடமை என்னவென்றால், அவரைப்போல் துணிவுடன் இறைஉண்மைகளையும் நற்செய்தியின் விழுமியங்களையும் மற்றவர்களுக்கு பறைசாற்ற வேண்டும். இறைமகன் தனது பணியைச் செய்வதற்கு முன்பு இரவும், பகலும், விடியற்காலைப் பொழுதும் செபத்தில் தந்தையுடன் உரையாடி அவருடைய திட்டத்தை அறிந்து அதன்படி செயலாற்றகின்றார். ஆண்டவராகிய இயேசுவைப் போல் இறைப் பணியாற்ற வேண்டுமென்றால் நாம் அனுதினம் இறைவனுடன் உரையாட வேண்டும். ஆவியானவரின் வழிநடத்தலும் இறைவார்த்தையும் முக்கிய ஆயுதமாக நமது கையில் இருக்க வேண்டும். "எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும். மீட்பைத் தலைச்சீராகவும், கடவுளின் வார்த்தையைத் தூய ஆவி அருளும் போர்வாளாகவும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுக்களையும் இறைவனிடம் எழுப்புங்கள், எப்போதும் ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைதத்திருந்து விழிப்பாய்யிருங்கள் இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள் " என்று எபேசியர் திருமுகத்தில் காண்கின்றோம். என்றும் செபத்தில் அவருடன் உரையாடி அவருடைய வழிநடத்தலுக்காக செபிக்கவேண்டும். அவ்வாறு செய்தோம் என்றால் இறைவன் நம் அனைத்து முயற்சியையும் ஆசீர்வதிப்பார் என்பது உண்மை. உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருப்பேன் என்று கூறிய இறைமகன் நம்மோடு என்றும் இருக்கின்றார் என்ற முழு நம்பிக்கையுடன் துணிவுடன் அவரது பணியைச் செய்ய முயற்சிப்போம். இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடிகளார் கூறியது போல் கிறிஸ்துவர்களாகிய நாம் அனைவரும் ஒத்தக் கருத்துடையவர்களாய் இருக்கவும், ஓரே மனமும் ஒரே நோக்கமும், பிளவுபடாத இறைசமூகமும் நம்மில் நிலவிட எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுவோம். இன்று மீண்டும் உலகை பல்வேறு வழிகளில் இருளானவன் ஆட்சி செய்ய ஒவ்வொரு நொடியும் முயன்று கொண்டுதான் இருக்கின்றான். அவற்றை அழிப்பதற்கு மோசேயைப் போல் இளம் உள்ளங்கள் நமது மத்தியில் எழும்ப வேண்டும் என்று அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுவோம்.

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித்திரிகிறது. அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். 1பேதுரு:5:8-9a