ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலத்தின் இருபத்திஆறாம் ஞாயிறு

இறை வாக்கினர்களாக வாழ.....

எண்11:25-29
யாக்5:1-6
மாற்9:38-43 45 47-48

அந்நாளில் ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்: அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார். ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர். ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு?. எண்ணிக்கை:11: 25, 29

மூவொரு இறைவனாகிய எங்கள் தந்தையும் தாயுமான அன்பு இறைவா! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். வல்லமை நிறைந்த இறைவா எங்களை ஆய்ந்து அறிந்திருப்பவர், எங்கள் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்து உய்த்துணர்பவர் என்பதை அறிவோம் இறைவா, உமது வாழ்வு தரும் ஆவியை எங்கள் அனைவர்மீதும் அனுப்பி, தயக்கமும் அச்சமும் இன்றி துணிவுடன் உமது வார்த்தையை எடுத்துரைக்க துணிவைத்தாரும். நீர் சினம் கொள்ளத் தாமதிப்பவர், எங்கள் குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர் உம்முடைய அளப்பரியா கருணைக்காக நன்றி இறைவா. இன்று பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களது கடினப்பாடுகளை இறைவனின் காதுகளில் படுமாறு முறையிடுகின்றர். இறைவனின் சினம் அவர்கள் மேல் கொழுந்துவிட்டு எரிவதைக் காண்கின்றோம். அடிமைகளாக இருந்தவர்களை மேசேயின் தலமையில் மீட்டு, பாலைவனத்தில் உண்ண மன்னா உணவைக் கொடுத்து, பாறையின் வழியாக தங்களுடைய தாகத்தை தீர்க்க தண்ணீரும் கொடுத்து, இரவில் நெருப்புத்தூணாகவும், பகலில் மேகத்தூணாகவும் இருந்து வல்ல செயல்கள் புரிந்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் முறையிடுகின்றனர். இறைவனின் அன்பின் பிரசன்னம் அவர்கள்மேல் தங்கியிருந்தும் அவர்கள் இறைவனின் வல்ல செயல்களுக்கு எதிராக எழுப்பும் அழுகுரலைக் மோசேயினால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இறைவனிடம் மனம் தளர்ந்து முறையிடுகின்றார். உமது அடியானுக்கு ஏன் இந்த நிலை? என்மேல் கருணை காட்டாமல் இம்மக்களின் எல்லாப் பளுவையும்; என்மேல் சுமத்தியது ஏன்? இம்மக்கள் அனைவரும் எனக்கு முன் வந்து அழுது உண்ண எங்களுக்கு இறைச்சி தாரும் என்று கேட்கின்றார்கள்? என்னால் இம்மக்களை தனியாக கொண்டு செல்லவே முடியாது, இது எனக்கு மிகப்பெரும் பளு என்று இறைவனிடம் உள்ளத்தின் ஆழத்தில் தனது முடியாத் தன்மையை எடுத்து கூறுகின்றார். அப்பொழுதுதான் இறைவன் மோசேயிடம் இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை தேர்ந்தெடுத்து இறைவனின் கூடாரத்தைச் சுற்றி அவர்கள் ஒன்று கூடியபொழுது. இறைவன் மேகத்தில் இறங்கி வந்து மோசேயிடம் உரையாடி அவரில் இருந்து கொஞ்சம் ஆவியை எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தபோது ஆவியாவனர் அவர்கள்மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர் என்று இறைவார்த்தையில் காண்கின்றோம். பல நேரங்களில் நாமும் மோசேயைப்போல் வாழ்க்கையின் சுமைகளைத் தாங்க முடியாமல் இறைவன் முன்னிலையில் முறையிடுகின்றோம். உண்மை நிறைந்த மன்றாட்டுக்கு இறைவன் பதில் தருகின்றார். நமது இறைவன் இரக்கம் உள்ளவர். இறைவனின் பிரசன்னம் ஆவியானவரின் வடிவில் நம்மில் கடந்து வரும்போது அவர் மனிதரில் செயலாற்றுவதை இறைவாக்கினர்களின் வாழ்க்கையிலும், அப்போஸ்தலர்களின் வாழ்க்கையிலும் அவர்களுடைய பணி வாழ்விலும் காண்கின்றோம். ஆவியானவரின் அருள் கொடைகளால் நாம் நிறையும் பொழுது இறைவனின் அருள் பிரசன்னத்தை முழுவதுமாக உணர்கின்றோம். அவரால் உருமாற்றம் பெற்று புது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிக்கின்றோம். அவருடைய அருள் கொடைகளால் ஆன்மாவில் அமைதியும் சாந்தியும் நிலவுகின்றது. இறைஅனுபவத்தை முழுமையாகப் பெற நம்மால் கண்டிப்பாக முடியும். ஆனால் உள்ளார்ந்த ஆன்ம தாகம் வேண்டும். ஆவியானவரே இறைஅனுபவத்தைப்பற்றி எடுத்துரைக்க ஆற்றலும் வலிமையும் நமக்கு கொடுத்து அவர் தாமாகவே செயல்படுவதை நாம் பலருடைய வாழ்க்கையில் கண்டுள்ளோம்.

இன்று நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர்களாக வாழ வேண்டியவர்கள். திருமுழுக்கின் வழியாக இறைவனின் ஆவியானவர் பிரசன்னமாகி நம்மில் என்றும் வாழ்கின்றார். திருத்தூதர் பவுல் மிகத் தெளிவாக கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின்றார் "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார். இறைவன் வாசம் செய்யும் கோவில் தூயது, நீங்களே அக்கோவில் என்று தௌ;ளத்தெளிவாகக் கூறியுள்ளார். இறைவாக்கினர் யோவேல் வழியாக இறைவன் கூறுகின்றார் "இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கின்றேன். நான் மாந்தர் யாவர்;மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். இம்மானுவேலாகிய இறைவன் நம்மோடு உடன் இருக்கின்றார் என்பதை உணர்ந்து அவருடைய ஏவுதலுக்கு செவிமடுக்கின்றோமா என்று சிந்திப்போம். இறைவன் உருவமற்றவர். அவரை உண்மையிலும் ஆவியலும் உள்ளத்தில்தான் வழிபடமுடியும். மேலும் இறைமகன் இயேசு தன்னுடைய சீடர்களிடம் உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்று அவர்களிடம் கூறிய வாக்கு உண்மையானது. ஆவியானவரின் துணையால்த்தான் இறைவனிடம் செப உறவு கொள்ள முடியும். திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்துவன் நான் ஆனால் என்னில் மற்றவர்களால் இறைபிசன்னத்தை உணர முடியுமா?

இறைவனோடு நான் கொண்டுள்ள இறைஉறவின் வழியாக ஆவியானவர் செயலாற்றுகின்றாரா? நம்முடைய செப உறவில் இறைவனுடைய குரலுக்கும் ஆவியானவரின் செயல்பாடுகளுக்கும் செவிமடுக்கின்றோமா?

இறைவன் இன்று நம்மை அவருடைய பிரசன்னத்தில் அழைத்து நம்மில் உள்ள இறைவனின் ஆவியை எடுத்து நம்முடன் வாழும் மற்றவர்களுக்குக் கொடுக்க நாம் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றோமா?
பாவம் என்ற சமூகத் தீமைகள் நம்மில் செயல்படும்போது, ஆவியானவர் அங்கு வாசம் செய்ய முடியாது. எனவே துய்மையான உள்ளத்துடன்தான் இறைஅனுபவம் பெறமுடியம். நமது குற்றங்களை கார்மேகம் போலும், நமது பாவங்கள் பனிப்படலம் போலும் அகற்றக் கூடியவர். மனம் மாற்றம் பெற்று ஆவியானவரின் கொடைகளால் அருள் பெறுவோம்.
இறைவார்த்தை சொல்லுகின்றது பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார் என்று. ஆவியானவரின் கொடைகளாகிய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, மன்னிப்பு, ஆகிய அருளின் கொடைகளால் அணிசெய்து இறைவனுக்கு ஏற்ற மகனாக மகளாக வளர்வோம்.
இறைவாக்கினர் மோசே இறைவனோடு தன்னுடைய மக்களுக்காக பரிந்துரைப்பது மனதை தொடும் செபமாகும். மக்களின் முணுமுணுத்தல், மக்களின் அழுகுரல், மக்களின் நம்பிக்கையின்மை, மக்களின் விசுவாசக் குறைவு அனைத்தையும் எதிர் கொண்டாலும் மக்களுக்காக இடைவிடாது இறைவனிடம் பரிந்துரை செய்து இறைவனின் கோபத்தை நீக்கி மக்களுக்கும் இறைவனுக்கும் வலிமையூட்டும் பாலமாக இருக்கின்றார்.
இறைவாக்கினர் மோசேயைப்போல் நாமும் நோய், துன்பம், மனஅழுத்தும், நம்பிக்கையற்ற நிலை, இறைபயமற்ற நிலை, சமூகத் தீமைகள், கொடுமைகள். நம்மை துன்புறுத்தும் நல்ல உள்ளங்களுக்காகவும் இறைவனிடம் பரிந்துரையாடி அவர்களுக்கு இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும் கருவியாக விளங்குவோம்.
இறைவாக்கினர் மேசேவைப்போல் செப உறையாடலின் வழியாக இறைநட்பை வளர்ப்போம். நமது நேசமுள்ள இறைவன் இரக்கம் உள்ளவர், பாவிகளைத் தேடி வருபவர். வரும் போதும், போகும் போதும் நமது வலக்கையைப் பற்றி பிடித்து நம்மோடு நடப்பவர். எனவே இறைவனுடைய ஆவியானவரின் வரங்களைப் பெற, தாழ்ச்சி நிறைந்த மனதுடன் இறைவனைக் கண்நோக்கி உண்மையிலும் ஆவியிலும் வழிபட வேண்டும். உலகச் செல்வங்களாகிய பணம், பதவி, பட்டம், செல்வங்கள் நமக்குத் தேவைதான் ஆனால் அவை நம்மை இறைவனிடம் கொண்டுச் செல்வதில்லை. எனவே வாழ்வாகிய இறைவனின் வழிமுறைகளை நன்கு அறிந்து அதன்படி பயணித்து இறைவனில் நட்பு கொள்வோம்.

சிந்தனை: நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைபிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குத் தந்த வாக்குறுதியின்படி உனக்கு ஆசி வழங்குவார். இணைச்சட்டம்: 15:5-6