இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் முப்பதிரெண்டாம் றஞாயிறு

ஆண்டவர் நம்பிக்கைகுரியவர், அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார்

2 மக்கபேயர் 7:1-2.9-14
2 தெசலோனிக்கர் 2:16-3:5
லூக்கா:20:27-38

பொதுக்காலம் முப்பத்திரெண்டாம் ஞாயிறு. வாழ்வு கொடுத்த இறைவன் என்றும் நம்பிக்கைகுரியவர். நேற்றும், இன்றும், என்றும் மாறாத இறைவன். இறைவாக்கினர் எசாயாநூல்: (54,10) - 49,15-16) கூறுவது மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது. பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கமாட்டேன் இதோ, என் உள்ளங்கையில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன் உன் சுவர்கள் எப்பொழுதும் என் கண்முன் நிற்கின்றனன ". இறைவனுடைய வார்த்தைகள் அனைத்தும் மனதிற்கு ஆழமான வலிமையையும் நம்பிக்கையையும் தருகின்றது. ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன் என்றும் நம்பிக்கைகுரியவர் அவருடைய திருச்சட்டங்களும் நம்பிக்கைகுரியது என்று நம்பியவர்கள் தான் இரண்டு மக்கபேயர் நூலில் கூறப்படும் எழு சகோதரர்களும் அவருடைய அன்புத் தாயும் அந்தியோக் மன்னனின் கொடூரமான தீச்செயல்களைக் கண்டு அஞ்சாமல் தங்களுடைய வாழ்வை வாழ்கின்ற இறைவனுக்கும், அவர்களை உயிர்த்தெழச் செய்ய வல்லமை கொண்ட அனைத்துலக அரசருக்காக தங்களை கொடையாக கொடுக்கின்றார்கள். இந்த நூல்அதிகாரம் ஏழு முழுவதையும் பொறுமையுடன் இறைத்துணையுடன் வாசிக்கும் போது ஒரு தாயும் அவர்களுடைய எழு பிள்ளைகளும் இறைவன்மேல் கொண்ட நம்பிக்கையானது மிகவும் அசைக்க முடியாததாகவும், ஆழமானதாகவும் இருக்கின்றது என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றது. சுடாக்கப்பட்ட தட்டுகளிலும் கொப்பரைகளிலும் போட்டு உயிருடன் இருக்கும் போதே தட்டிலில் போட்டு வாட்டுவதையும், நாக்கை துண்டிப்பதையும், குடுமித் தோலைக் கீறி எடுப்பதையும் தாயும் மற்ற சகோதரர்களும் கண்டு மதிப்போடு ஒருவருக்கு ஒருவர் ஊக்கம் அளித்துகூறும் வார்த்தைகளைப்பற்றி சிந்திப்போம்.

"கடவுளாகிய ஆண்டவர் நம்மைக் கண்காணித்துவருகிறார். மக்களுக்கு எதிராகச் சான்று பகர்ந்து அவர்கள்முன், 'ஆண்டவர் தம் ஊழியர்கள்மீது இரக்கம் காட்டுவார் "என்று மோசேயின் திருப்பாடலில் வெளிப்படுத்தியருப்பதுபோல் அவர் நம்மீது பரிவு காட்டுகிறார் "என்று சொல்லிக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் உறுதிப்படுத்துகின்றனர், ஊக்கமூட்டுகின்றர். அதனால் அவர்கள் இறைவனுக்காக தங்களுடைய வாழ்வை அர்ப்பணிக்க துணிவும் மனவலிமையும் பெறுகின்றார்கள். பன்றி இறைச்சியை உண்ணாமல் கொடிய துன்பங்களுக்கு தங்களை கையளிக்கின்றார்கள். எதற்காக ? அவர்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார், ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே " என்று கூறினார்கள். இவர்களின் வாழ்க்கை நமக்கு ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இன்று தாய்மார்கள் நம்முடைய குழந்தைகளை இறைவிசுவாசத்திலும் இறைநம்பிக்கையிலும் வளர்க்க வேண்டும். அவரச உலகத்தில் வாழும் நமக்கு நேரம் இல்லை. குழந்தைகளுக்கு உலக காரியங்களை கற்றுக் கொடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றோம் ஆனால் இறைவார்த்தையையும், திருச்சபை சட்டங்களையும், செபங்களையும் கற்றுத் தருவதற்கு நேரம் எடுக்கின்றோமா அல்லது முயற்சிதான் செய்கின்றோமா? கம்பூட்டர்கள், நவீனமான தொலை பேசிகள், டெப்லெட்கள் போன்ற நவீனப் பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றோம். இவைகள் அனைத்தும் இன்று தேவைதான், அதோடு ஏன் வாழ்வுக்கு வழிகாட்டும் வார்த்தையை கற்றுத் தருவதற்கு மறக்கின்றோம். திருப்பலியின் நன்மைகள், அருட்சாதனங்களின் வல்லமைகள், அருட்கொடைகளின் தனிச் சிறப்புக்கள் இவைகளைப்பற்றி கற்றுத்தரலாம் அல்லவா. சிந்திப்போம்? மக்கபேயர் நூலில் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் எழு சகோதரர்கள், அவர்களுடைய தாயைப் போல் துணிவுடனும் வலிமையுடனும் வாழ்வதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் முயற்சி எடுத்தால் எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கும். இன்று நாம் அனைவரும் இறைநம்பிக்கையில் வளர்ந்தால் தான் எதிர் வரும் காலங்களில் துணிவுடனும் மனவலிமையுடனும் சவால்களை சந்திக்க முடியும். சமூக ஊடங்கள் வழியாக கண்டிருக்கின்றோம். மத்திய கிழக்கு நாடுகளாகிய சிரியா, ஈராக், மற்றும் பல நாடுகளில் இறைவனுக்காக பெரியவர்கள் முதல் சிறியவர்கள்வரை தங்களுடைய வாழ்வை கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்தவர்களின் எண்ணிக்கைதான் எத்தனை.

திருத்தூதர் பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தில் கிறிஸ்துவ வாழ்வின் போராட்டத்தைப்பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். க "நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள். அலகையின் ஏமாற்ற வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள் என்று விளக்குகின்றார். எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைத் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்து விட முடியும் "என்று ( காண்க எபெசியர்:6:10-11, 16) எனவே இனிவரும் நாட்களை எதிர் கொண்டு பயணிக்கப்போகும் நாம் அனைவரும் தூய ஆவியார் அருளும் போர்வாளான இறைவனின் வார்த்தையை எடுத்துக் கொள்வோம். இயேசு யூதர்களைப் பார்த்து கூறுகின்றார் "கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்களே தெய்வங்கள் என்று. இறைவா உமது வார்த்தை எங்கள் வாழ்வுக்கு ஒளியாகவும் விளக்காகவும் இருக்க துணைபுரியும்.

ஐரோப்பா நாட்டில் தற்பொழுது இலையுதிர் காலத்தில் பயணிக்கின்றோம். பசுமையாக இருந்த இலைகள் பல நிறங்களைப் பெற்று, இறுதியில் பழுப்பு நிறங்களைப் பெற்று மண்ணில் உதிர்ந்து மடிகின்றது. மீண்டும் வசந்த காலத்தில் துளிர்விட்டு பசுமையாக வளர்கின்றது. இவை நமக்கு ஓர் ஆழமான உண்மையை எடுத்துரைக்கின்றது. மனிதனுடைய வாழ்வும் இப்படித்தான் என்று. பழுப்பு நிறம் பெற்ற இலைகள் மண்ணில் மடிவது போல் இறைமகன் இயேசுவில் நம்பிக்கை கொண்டவர்கள் மண்ணில் மடிந்து , மீண்டும் பசுமை நிறைந்த இலைகளாக துளிர்விட்டு வருவதைப்போல் நாமும் மறுவாழ்வில் இயேசுவுடன் உயிர்ப்போம் என்பது உண்மை. இறந்த லாசரின் கல்லறையின் முன்பு கண்ணீர் சிந்திய இயேசு மார்த்தாவிடம் கூறியது, "உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடுஇருக்கும் போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். (யோவான்:11,15-16) . நிலை வாழ்வைத் தரும் வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்றுரைத்த இறைமகன் இயேசுவில் முழு நம்பிக்கை கொண்டு மனம் தளராமல் துணிவுடன் மனவலிமையுடனும் அவர் வழிநடத்தும் பாதையில் பயணம் செய்வோம்.

எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். யோவான்:6,54