இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு

கடவுளின் கோலை கையில் பிடித்தவாறு

விடுதலை பயணம் 17: 8-13
2 திமொத்தேயு 3 : 14-4 :2
லூக்கா 18: 1-8

பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் இறைஉறவில் மனம் தளராமல் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆழமான உண்மையையும், இறைவார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது. உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது என்ற இறைவார்த்தையின் ஆழமான உண்மையையும், நேர்மையான வாழ்வைப்பற்றியும், கைம்பெண் தனக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக நடுவரிடம் மனம் தளராமல் முயற்சிப்பதையும் எடுத்துரைக்கின்றது. நவீன உலகத்தில் பயணம் செய்யும் நாம் மனம் தளராமல் இறைஉறவில் ஆழமாக வளர விரும்பினால், இறைவனின் கோலாக விளங்கும் இறைவார்த்தையை நமது கையில் பிடிக்க வேண்டும். இறைவாக்கினர் மோசே இறைவனின் கோலை என்றும் கையில் ஏந்தி, இறைவன் கூறிய உயிருள்ள வார்த்தையை நம்பி, அவர் கூறிய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவர் கூறியபடி செயல்பட்டதால் இறைவனின் அருளும் வல்லமையும் ஆற்றலும் அற்புதங்களும் அவர் வாழ்விலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.. இன்றைய முதல்வாசகத்தில் விடுதலைப்பயணம் நூல் 17ஆம் அதிகாரத்தில் 8-13 வரை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் முழுவதையும் வாசிக்கும் போது அங்கே கடவுளின் கோலை கையில் பிடித்த மோசேயின் கரங்களால் இறைவன் இரண்டு அற்புதங்களை இஸ்ரயேல் மக்களின் நடுவில் நடத்துகின்றார். அன்று மோசேயின் வழியாக வல்ல செயல்கள்புரிந்த வார்த்தையான இறைவன் இன்று நமது வாழ்க்கையிலும் அடையாளங்களும், அற்புதங்களும் செய்ய விரும்புகின்றார். எனவே இறைஅருளுடனும் ஆவியானவரின் துணையுடனும் அவர் வழங்கும் உயிருள்ள வார்த்தைக்கு செவிமடுப்போம்.

பாறையிலிருந்து தண்ணீர்: சீன் பாலைநிலத்தில் இஸ்ரயேல் மக்கள் பயணிக்கின்ற வேளையில் குடிக்க தண்ணீர் இல்லை என்று மீண்டும் மோசேயிடம் முறுமுறுத்தார்கள். நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும் எங்கள் பிள்ளைகளையும், கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா? என்று கேட்ட வார்த்தைகளை எண்ணி மோசே கண்ணீருடன் இறைவனிடம் அவர்களுக்காக வேண்டுகின்றார். மோசேயின் கண்ணீர்த் துளிகள் நிறைந்த மன்றாட்டிற்கு இறைவன் பதில் தருகிறார். நையில்நதியை அடித்த கோலை எடுத்துக் கொண்டு ஒரேபில் உள்ள பாறையின் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி அதிலிருந்து தண்ணிர் புறப்படும் என்று கூறிய இறைவனின் வார்த்தையை நம்பி அவர் கொடுத்த கோலை எடுத்து பாறையை அடித்து அவர்களுடைய தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கின்றார். யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும், என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும். (யோவான்:7,37-38). ஆன்ம தாகத்தை தீர்ப்பவர் நமது இறைவன் ஒருவரால்தான் முடியும். அவர்தான் மூவொரு இறைவனாம் தூய ஆவியானவர். தூய ஆவியானவர் அனைத்தும் கற்றுத் தருவார் என்று கூறிய இயேசுவின் உயிருள்ள வார்த்தையை விசுவசித்து ஆவியானவரின் வரங்களை பெற மன்றாடுவோம். விவிலியத்தில் இறைவன் கொடுத்த திருப்பாடல்கள் தினமும் செபிக்க நமக்கு உதவியாக இருக்கும். தாவீது அரசர் அன்று இறைவனிடம் மன்றாடியது போல் இன்று நாமும் மன்றாடுவோம். எனவே விவிலியம் என்ற வாழ்வு தரும் கோலைக் கையில் எடுக்கத் தயங்க வேண்டாம்.

போரில் வெற்றி பெறுதல்: மோசே, நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று மன்றாடுவேன் என்று யோசுவாவிடம் கூறி போரிட அனுப்புகின்றார். மோசே, ஆரோன், கூர் குன்றின் உச்சியில் குழுமமாக தங்களுடைய மன்றாட்டை செபிக்கின்றார்கள். மோசே கைகளை உயர்த்தி வேண்டுதல் செய்யும் போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றி பெற்றார்கள். அவருடைய கைகள் தளர்ந்த போது தோல்வி அடைந்தனர். ஆனால் ஆரோன்,கூர் இருவரும் விடா முயற்சியுடன் மோசேயின் கைகளைத் தாங்கி கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில் மன்றாடிய போது யோசுவா அமலேக்கியரை முறியடித்தார் என்று காண்கின்றோம். ஆம் இறைவன் அவர்களுடைய மன்றாட்டுக்கு செவிமடுத்து, யோசுவாவின் முன் நின்று அவர்களுக்காக போரிட்டார். இறைவன் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார். அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தால், அவரின் துணையுடன் எப்படிபட்ட சூழ்நிலையையும் கடக்க அவர் உதவுவார் என்பது நிச்சயம். அவர் நம்மோடு இருந்து நமக்காக போரிடுவார். நம்முடைய வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் சமாதானமும் பெற வேண்டுமென்றால் இறைவனிடம் நம் கண்களை உயர்த்த வேண்டும். விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய இறைவனிடம் இருந்துதான் நமக்கு உதவி வரும். நம்மைக் காக்கும் இறைவன் கண்ணயர்வதுமில்லை உறங்குவதும் இல்லை, எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பவர்.( திருப்பாடல்:121) நமது இறைவன் நம்மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்று பாருங்கள். இறைவனுடன் செப உறவில் செலவழிக்க நமக்கு நேரம் இல்லை. தொலைக் காட்சிக்கும், மற்றும் நவீன ஊடங்களுக்கும் செலவழிக்க அதிக நேரம் உண்டு. பிறருக்காக நாம் இறைவனிடம் பரிந்துரை செய்து செபிக்கும்போது அவர் நிறைவாக நம்மை ஆசீர்வதிக்கின்றார் எனவே பரிந்துரை செபம் மிகவும் வல்லமை உள்ளது என்பதை விசுவசித்து பிறருக்காக இறைவனிடம் பரிந்துரைப்போம்.

நம்முடைய முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும், மனத் தூய்மையோடும் இறைஉறவில் இணையும்போது ஆவியானவர் நம்மில் இருந்து செயலாற்றி உண்மையாக செபிக்க துணைசெய்வார். விழிப்போடும் நன்றி உணர்வோடும் இறைஉறவில் ஈடுபட வேண்டுமென்றும், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் என்று திருத்தூதர் பவுல் தனது திருமுகத்தில் கூறுகின்றார். இறைமகன் இயேசு கெத்சமனித் தோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த சீடர்களிடம் "ஒரு மணி நேரம்கூட என்னொடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான் ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் என்று கூறுகின்றார். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை இறைவனிடம் ஒப்புக்கொடுத்து அவருடைய ஆசீரால் நிரப்பி வழிநடத்த வேண்டுமென்று இடைவிடாது அவரிடம் செபிக்க வேண்டும். இருள் நிறைந்து காணப்படும் உலகில் இளம் உள்ளங்கள் இறைவனின் ஞானத்தோடு வளர பெற்றோர்கள் துணையிருக்க வேண்டும். குடும்பமாக சேர்ந்து இறைவார்த்தைக்கு செவிமடுத்து, செபமாலை வழியாக மறைஉண்மைகளை தியானித்து செபிக்கும் போது பிள்ளைகள் இறைஞானத்திலும் இறைஉறவிலும் வளர உதவியாக இருக்கும். அதோடு குடும்பத்திற்கு நிறைய ஆசீர்வாதங்களை கொண்டுவரும். குடும்பமாக திருப்பலியில் பங்கு பெறுவது நமது வாழ்க்கையில் நாம் செபிக்கும் ஓர் உன்னத செபமாக இருக்க வேண்டும்.

ஐரோப்பா கண்டத்தில் வாழும் நமக்கு வேலைப் பழுவினால் நேரம் கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் இறைவனுக்கு முதலிடம் கொடுக்கும் போது அவர் நம்மை நிறைவாக ஆசீர்வதிப்பார். ஒரு மணி நேரம், அரைமணி நேரம்கூட என்னோடு இறைஉறவில் செலவழிக்க உங்களால் முடியாதா? என்று இறைவன் நம்மிடம் இன்று கேட்டால் என்ன பதில் சொல்லுவோம்? சிந்தித்து செயலாக்கவும். இறைவன் கொடையாக வழங்கிய விவிலியம் என்னும் வாழ்வு தரும் உயிருள்ள வார்த்தை என்னும் கோலைக் கையில் எடுத்து தினமும் தியானித்து இறைவன் கூறும் உயிர் தரும் வார்த்தையை நம்பி, அவருடன் உள்ளத்தின் ஆழத்தில் பகிர்ந்து இறைஉறவில் உறவாடி, வளர்ந்து, கீழ்படிந்து, வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம். அவருடைய வார்த்தையை நம்பி முன்நோக்கி பயணித்தால் உறுதியாக இறைவன் நமக்கு முன்பாக சென்று நமக்காகப் போரிடுவார். இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள் தாமே அவர்களோடு இருப்பார், அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார் என்ற உயிருள்ள வார்த்தையை நம்பி அவர் நம்மோடுதான் வாழ்கின்றார் என்பதையும் விசுவசித்து இரக்கத்தின் ஆண்டில் இறைவனின் உறவில் மனம் தளராமல் நாம் அனைவரும் வளர ஆவியானவரின் துணை வேண்டுவோம். இறைவனின் மக்களாக வாழ அழைப்பு தந்ததற்கு நன்றி கூறுவோம். இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவ அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள். திருவெளிப்பாடு:3,20