இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு

இறைவனில் நட்புறவு

இணைச்சட்ட நூல்: 30:10-14
கொலோசையர் 1:15-20
லூக்கா 10:25-37

இன்று பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் இறைஉறவு, பிறர் உறவு, நிலைவாழ்வு என்ற மூன்று மையக்கருத்துக்களை முன்வைக்கின்றது, இறைவனின் நட்பு என்றும் மாறாத ஒன்று. ஓர் உள்ளத்தின் ஆன்மாவின் இறைத்தேடல் மிகவும் ஆழமான ஒன்றாகும். இறைத்தேடலின் வழியாக இறைவனை கண்டுகொள்ள முடியும். உள்ளத்தின் ஆழத்தில் நடக்கின்ற ஆன்மீகப் பயணமாகும். இறைஉறவில் வளர்வது என்பது அவருடைய குரலுக்கு செவிகொடுப்பது, அவருடைய கட்டளைகளை கடைபிடிப்பது. இணைச்சட்ட நூலில் மோசே இஸ்ரயேல் மக்களிடம் கூறுவது உன் இறைவனாகிய ஆண்டவரின் குரலுக்கு செவி கொடு, நியமங்களைக் கடைபிடி, உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா என்று. அன்று மோசே கூறிய இவ்வார்த்தைகளைப்பற்றி தியானிப்போம். நானும் நீங்களும் இறைவனின் குரலுக்கு செவிகொடுக்க விரும்புகின்றோமா? அவருடைய அளவற்ற அன்பை சுவைத்துள்ளோமா? முழு இதயத்தோடு அவரை அன்பு செய்கின்றோமா? என்று நம்மை நாமே இரக்கத்தின் ஆண்டில் ஆய்வு செய்வது மிகப் பொருந்தும். இறைவன் தன்னை இறைவார்த்தையின் வழியாகவும், திருஅவை நிறைவேற்றப்படும் அருள் அடையாளங்களின் வழியாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார். மிக உன்னதமான முறையில் அருள்பணியாளர் நிறைவேற்றப்படும் திருப்பலியின் வழியாக தன்னையே முழுவதும் அப்பத்தின் வழியாக தன்னை மீண்டும் கொடையாக தருகின்றார். அவருடைய அருள்பிரசன்னம் நம்மில் குடிகொள்ள வேண்டுமென்றால் இடைவிடாது செப உறவில் அவரை அனுக வேண்டும். இறைவனிடம் திரும்பி வந்து அவருடைய அன்பை சுவைப்பதற்கு தூய்மையான உள்ளம் அவசியம். பாவிகளாகிய நம்மை அன்பு செய்கின்றார் ஆனால் இறைவன் நம் பாவத்தைவிட்டு மனம்திரும்ப ஆசிக்கின்றவர். எனவே இறைமகன் இயேசு தனது மலைப்பொழிவு மறையுரையில் தெள்ளத்தெளிவாக கூறுகின்றார் "தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்", நாம் அனைவரும் இறைவனின் தூய ஆலயம், இறைவனின் ஆவியானவர் நம்மில் வாசம் செய்கின்றதனால் அவருடைய குரலைக் எளிதாக கேட்கமுடியும். விவிலியத்தில் காணப்படும் வார்த்தை ஒவ்வொன்றிலும் இறைவன் குடிகொண்டுள்ளார் எனவே தூயஆவியானவரின் துணையுடன் இறைவனை நம்மால் முழு அன்பு செய்ய முடியும். இறைமகன் இயேசுவின் சிலுவைமரணம்தான் அவருடைய அளவற்ற அன்பின் வெளிப்பாடு. திருத்தூதர் யோவான் தனது திருமுகத்தில் கூறுவது "நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார் இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. இறைவன் நமது சாயலிலும் உருவிலும் படைத்த அனைவரையும் அன்பு செய்வது உண்மை. நாம் எத்தனை பாவிகளாய் இருப்பினும் அவர் நம்மை பராமரித்து அன்புடன் வழிநடத்துபவர். என்றும் மாறாதவர்.

இறைஅனுபவம் பெற வேண்டுமென்றால் தங்கள் வாழ்வின் உள்ளறைக்குச் சென்று மறைவாய் உள்ள நம் தந்தையை நோக்கி மன்றாட வேண்டுமென்று இறைமகன் இயேசுதாமே நமக்கு கற்பித்து தந்தார். இறைமகன் இயேசு இரவு முழுவதும், விடியற்காலை வேளையிலும், தன்னுடைய பணிவாழ்வில் எடுத்த அனைத்து தீர்மானங்களுக்கு முன்பும், நோயாளிகளை குணமாக்கும் முன்பும் இறைத் தந்தையுடன் செபத்தின் வழியாக உரையாடி அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி வாழ்ந்து இறையாட்சிப் பணியை சிறப்புடன் செய்து அதன் வழியாக தந்தையின் அன்பை மக்களுக்கு வெளிப்படுத்தினார். வழியும் வாழ்வும் உண்மையும் உயிருமான இயேசுவை அனுகினால் அவர் நமக்கு செபத்தின் ஆழத்தையும், ஆவியானவரின் வழிநடத்தலையும் மேலும் இறைவனை முழுமையாக எப்படி அன்பு செய்ய வேண்டுமென்று கற்றுத்தருவார் என்பது உண்மை. மத்தேயு நற்செய்தி 15 ஆம் அதிகாரத்தில் இறைமகன் இயேசு பரிசேயரிடமும் மறைநூல் அறிஞரிடமும் இவ்வாறு சொல்லுகின்றார் : இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது என்று. வழிபாட்டு நேரங்களிலும், தனி செபம், குழும செபம் நேரங்களில் நம்முடைய எண்ணங்களும் வேண்டுதல்களும் என்னவாக இருக்கும் என்று சிந்திப்போம். இறைவனுக்கா நாம் செலவழிக்கின்ற நேரங்களில் நமது மனநிலை எப்படி உள்ளது. இறைவனோடு ஐக்கியத்தில் இணைந்து ஒரு நண்பனிடம் பேசுவது போல் மனம்திறந்து பேசலாம் தானே. யோவான் நற்செய்தியில் இயேசு சமாரியாப் பெண்ணிடம் கூறுவது "உண்மையில் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும். ஆகையால் ஆவியானவரைப் பெற்றிருக்கும் கிறிஸ்துவர்களாகிய நாம் அவரின் துணைகொண்டு உண்மையாக இறைவனை அன்பு செய்து அதன்வழியாக நம்முடன் வாழ்பவரை தூய உள்ளத்தோடும், கபடமற்ற உள்ளத்தோடும் அன்பு செய்வோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு நமக்கு கற்பிக்கும் பாடம் என்னெவென்றால் பிறருடைய கருத்துக்களையும், வேண்டுதலைகளையும், உணர்வுகளையும் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும். திருசட்ட அறிஞருடைய கேள்வியை இயேசு மதித்து அவருக்கு இறைவனின் அன்பு மனிதரின் அன்புக்கு சமம் என்பதை விளங்கப்படுத்துகின்றார். நல்ல சமாரியரைப்போல் நம்முடன் வாழ்க்கைப் பயணம் செய்யும் நல்ல உள்ளங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் மதித்து புரிந்து கொண்டு இரக்கத்தின் ஆண்டில் இரக்கச் செயல்களின் வழியாக இறைவனையும் அடுத்திருப்பவர்களையும் ஆழமாக நேசித்து நிலை வாழ்வுக்கு நம்மை நாமே தயார் செய்வோம்.