இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பதிமூன்றாம் ஞாயிறு

தூய ஆவியின் தூண்டுதுலுக்கேற்ப வாழுங்கள்

1 அரசர்கள் 19:16,19-21
கலாத்தியர் 5:1.13-18
லூக்கா 9:51-62

பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. இன்று திருப்பலியின் மூன்று இறைவாசகங்களின் வழியாக இறைவன் நமக்கு கூறுவது, இறைவனின் அழைப்பு, ஆவியானவரின் அருள்பொழிவு, இறைவனைப்போல் அன்புறவிலும் இறைஉறவிலும் வளர்வது, இறைப்பணிக்காக நமது உடமைகள், செல்வங்கள், தந்தை, தாய், உடன்பிறப்புக்கள் துறப்பதுபற்றிய மையக்கருத்தினை முன்வைக்கின்றது. திருத்தூதர் லூக்கா எழுதிய நற்செய்தியில் (9:23) காண்பது "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" என்று இயேசு தன்னுடைய சீடர்களிடம் கூறுகின்றார். இறைப்பணியைச் செய்ய முன்வரும் அனைவருக்கும் இறைவன் முன்வைக்கும் மிகமுக்கியமான ஒரு வேண்டுகோளாகும். மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய அழைப்பு தந்துள்ளார். நமது பணிவாழ்வில் நம்முடைய மனநிலை, பிரமாணிக்கம், தியாகம், அன்பு, இறைவனின் உடனிருப்பு, இறைவனுடைய செயல்பாடுகளுக்கும் சித்தத்திற்கும் செவிகொடுத்து பயணிக்கும் வாழ்க்கை முறைகள். குடும்ப வாழ்விலும்சரி, துறவு வாழ்விலும்சரி இறைவனுக்கும் நமது உறவினர்களுடன் அன்புடன் வாழ்ந்து பணிசெய்வதுதான் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உண்மையான பணியாகும். இறைவனின் பணியைத் திறமுடனும் சாட்சியுடனும் செய்ய வேண்டுமென்றால் நமக்கு ஆவியானவரின் துணையும் அவருடைய வழிநடத்துதலும் தேவை, அவருடைய உடனிருப்பும் மிக அவசியமானது

இறைவனின் மீட்பு வரலாற்றில் இறைப்பணிக்காக பலரை அழைத்து, அவருடைய பணியை வெற்றிகரமாகவும் துணிவுடனும் செய்து இறைவனுக்கு ஏற்புடையவராக வாழ்ந்தவர்களின் வாழ்க்கையை விவிலியத்தில் காண்கின்றோம். அழைப்பவருக்கு இறைவன் கொடுக்கும் கைமாறு என்னெவென்றால் ஆவியானவரின் அருள்பொழிவும் அவருடைய உடனிருப்பும்தான். அவருடைய குரலுக்கு அனுதினம் ஜெபவேளையில் செவிகொடுத்து அவருடைய வார்த்தைக்கு அடிபணிந்து வாழ்வதுதான் சீடத்துவ வாழ்க்கை. தூயஆவியானவரின் உடனிருப்பு நம்மோடு இருக்கும்போது எப்படிபட்ட சவால்களையும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என்பது நிச்சயம். இன்றைய முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எலியா தன்னுடைய மேலுடையை எலிசாவின் மீது தூக்கிப்போட்டார் என்று காண்கின்றோம். எலிசா இறைவனின் அழைப்பை உணர்ந்து அனைத்தையும் துறந்து இறைவாக்கினர் எலியாவை பின்பற்றி அவருக்கு பணிவிடை செய்கின்றார். இரண்டு அரசர்கள் நூல்(2:9) இறைவாக்கினர் எலியா யோர்தான் நதியைக் கடந்த பின் இறைவாக்கினர் எலியா எலிசாவை நோக்கி, உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுமுன் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்று கேட்டபோது, அதற்கு அவர் உமது ஆவி என்மீது இருமடங்காக இருப்பதாக என்று வேண்டுகிறார். அவருடைய வேண்டுதலுக்கு இறைவன் பதிலளித்து ஆவியானவரின் துணையிருப்பால் அற்புதங்களும் அடையாளங்களும் செய்கின்றார். இறைவாக்கினர் எலியா இறந்தபின்பும்கூட அவருடைய கல்லறையில் உயிர் இழந்தவருக்கு வாழ்வு தருகின்றார். இறைவாக்கினர் எலியாவைப்போல் தாழ்மையாக இறைமகனிடம் மன்றாடுவோம், இருள் சூழ்ந்து காணப்படும் மனித வாழ்க்கையில் இறைவனின் வாழ்வுதரும் ஆவியானவரை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று.

திருத்தூதர் பவுலடிகளார் இரண்டு முக்கியமான மதிப்பீடுகளை எடுத்துரைக்கின்றார். இயேசுகிறிஸ்துவின் வழியாக நிலைவாழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளோம் அதனால் ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருக்கும்படியும், தூய ஆவியானவரின் தூண்டுதலுக்கேற்ப வாழவேண்டும் என்று அழைக்கின்றார். இன்று நாம் அனைவரும் சமூக ஊடகங்களை நம்பி அதன் வழியில் வாழ முயற்சிக்கின்றோம். இறைவன் வழியாக நமக்கு கிடைக்கும் ஞானக்கொடைகள் ஏராளம். அவற்றைப் பெற்றுக்கொள்ள வாஞ்சையோடும் தாகத்தோடும் உள்ளவர்கள்மீது இறைவன் செயலாற்றுகின்றார். இன்று மனித உள்ளங்கள் ஆன்மிக வாழ்விற்காக தாகம் கொண்டு அங்கும் இங்கும் அலைவதைக் காண்கின்றோம் ஆனால் அவனுக்கு நிம்மதி எங்கிருந்து வரும் நிலைவாழ்வைத் தரும் இறைவனிடமிருந்துதான். இறைமகன் இயேசு கிறிஸ்து நம் எல்லோருக்கும் அவருடைய வார்த்தையால் வாக்குறுதி தந்துள்ளார், "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உண்மையான தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார் " என்ற உயிருள்ள வார்த்தையை நம்புவோம். நம் உள்ளத்தில் வாழும் தூயஆவியானவரை உண்மையிலும் ஆவியிலும் வழிபட்டு அவரைப்போல் எளிய உள்ளத்தோடும் தாழ்மையோடும் இறைப்பணியைச் செய்வோம்.

இறைமகன் இயேசு பணிவாழ்வை தொடங்கும் முன்பு யோர்தான் நதியில் திருமுழுக்குப் பெற்றபோது வானம் திறந்து இறைவனின் ஆவி புறா வடிவில் அவர்மீது இறங்கி, என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் " என்று கூறியது போல், இறைவன் திருமுழுக்கின்போது நம்மிடமும் கூறியுள்ளார். எனவே தனிவாழ்விலும், குடும்பவாழ்விலும், துறவர வாழ்விலும் தூய ஆவியானவரின் தூண்டுதுலுக்கேற்ப வாழ இறைவனின் துணைவேண்டுவோம். இரக்கத்தின் ஆண்டில் பயணம் செய்யும் நாம் அனைவரும் ஆவியானவரின் துணையுடன் ஒருவருக்கு ஒருவர் அன்போடும் தாழ்மையோடும் பணிபுரிந்து இறையாட்சி பணியை துணிவுடன் செய்வோம். ஏனெனில் தாகமுற்ற நிலத்தில் நீலை ஊற்றுவேன், வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன், உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன் உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன் என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தையை நம்பி ஆவியானவரின் குரலுக்கு செவிமடுத்து அதன்படி வாழ வரம் வேண்டுவோம். இறைமகன் இயேசுவின் பாதையில் பயணிப்போம் ஏனெனில் அவரிடம் வாழ்வு உண்டு. இரக்கம் உண்டு. அன்பு உண்டு, மன்னிப்பு உண்டு.