இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு

என் அமைதியை உங்களுக்கு அளிக்கின்றேன்

தி ப 15: 1-2,22-29
தி வெ 21: 10-14,22,23
யோவான் 14 :23-29

உயிர்ப்புக்காலம் ஆறாம் ஞாயிறுக்கிழமையைக் கடந்து செல்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருத்தூதர் யோவான் மிகவும் ஆழமான ஓர் உண்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றார். இறைமகன் இயேசுவைக் காண்பது தந்தையை காண்பதும், இறைமகன் இயேசுவுடன் அவருடைய தந்தை வாழ்கின்றார். அவரை அன்பு செய்பவர்கள் அவருடைய கட்டளைகளை கடைபிடிப்பவர்கள் வாழ்வில் இறைமகன் இயேசுவும் அவருடைய தந்தையான இறைவனும் வாசம் செய்வார்கள் என்கின்றார். திருத்தூதர் யோவான் நற்செய்தி 14 ஆம் அதிகாரத்தில் தங்களுடைய அன்பு சீடர்களுக்கு ஆறுதலான கூறும் வார்த்தைகள். நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன் தந்தையாம் இறைவன் உங்களோடு இருப்பார். எனவே உள்ளம் கலங்க வேண்டாம். என்னிடமும் தந்தையிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். நான் தந்தையுள் இருக்கின்றேன், தந்தை என்னுள் இருக்கின்றார். நான் சொல்வதை நம்புங்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். இறைவனும் அவருடைய அன்பு மகன் இயேசுவையும் நாம் முழு இதயத்தோடு அன்பு செய்கின்றோம் என்று சொன்னால், அவர்களுடைய கட்டளைகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும். வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்று கூறியவரிடம்தான் நிறைவான அமைதியும் அருளும் உண்டு. அன்னை மரியாள் கூறியது 'அவர் சொல்லுவதை செய்யுங்கள் என்று. இந்த அதிகாரத்தில் இயேசு இரண்டுமுறை தூயஆவியானவரைப் பற்றி கூறுகின்றார். இறைமகன் இயேசு நம்மோடு என்றும் வாழ்பவர். அவருடைய ஆவியானவர் வாழும் கோவில் நாம். அவரை நம்பும்போது விசுவசிக்கும் போது அவருடைய செயல்பாடுகளையும் அறிவுரைகளையும், வழிநடத்துதலையும் ஆழமாக நம்மால் அனுபவிக்க முடியும்.

இறைவன் ஒருவரால் மட்டும்தான் உண்மையான நிரந்தர அமைதியை கொடுக்க முடியும். அவர் தரும் அமைதி உலகம் தரும் அமைதியைப் போன்று அல்ல. நாம் அனுதின வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்கள், ஏமாற்றமங்கள் அனைத்தும் நிரந்தரமல்ல அவைகளை ஒரு நொடிப்பொழுதில் மாற்றக்கூடியவர்தான் நமது இறைவன். இன்று சமூக ஊடகங்கள் வழியாக அனுதினம் காண்பது மனிதன் அமைதியின்றி வாழும் உலகம். சமயப் போர்களின் வழியாக மனிதகுலத்தை அழிப்பது, அமைதி நிறைந்த இடங்களில் யாரும் அறியாத நேரங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள். அமைதியான வாழ்வைத் தேடி மனிதன் ஓடுகின்ற நிலை. தனிவாழ்வில், குடும்பத்தில், சமூகத்தில், இயற்கையில் அமைதியற்ற நிலை. இன்று மனிதன் ஆயுதங்கள் வழியாக அமைதியைத் தேடுகின்றான் ஆனால் இறைவன் கொடுக்கும் அமைதி ஆயதங்கள் வழியாக அல்ல மாறாக அவருடைய கட்டளைகளை கடைபிடித்து அவர் அன்பில் வளர்வது. அப்பொழுது அவர் அமைதியான நீர்நிலைகளுக்கு அனைவரையும் அழைத்துச் செல்வார். இருள்சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும், நீர்நிலைகள் வழியாக நாம் செல்லும்போதும் இறைவன் நம்மோடு உள்ளார். ஆறுகளைக் கடந்து போகும் போதும் அவர் நம்மை மூழ்கடிக்க மாட்டார். தீயில் நடந்தாலும் நெருப்பு நம்மேல் பற்றியெரியாது ஏனெனில் அவர் பார்வையில் நாம் அனைவரும் விலையேறப் பெற்றவர்கள், மதிப்புமிக்கவர்கள். எனவே நாம் எதைக் கண்டும் உள்ளம் கலங்க வேண்டாம் மருள வேண்டாம். உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருப்பவர். நமது வலக்கரத்தை பற்றி நடப்பவர். இறைமகன் தரும் உயிருள்ள வார்த்தைகளை நம்புவோம், விசுவசிப்போம் அப்போது அமைதி நம்மில் நிலவும். இறைவினிடம் பெற்ற அமைதியை மற்றவருக்கு பகிர்ந்து வாழும் இறைத்தூதனாக விளங்குவோம்.