இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு (அ)

முதல் வாசகம்: எசாயா 56,1-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 67
இரண்டாம் வாசகம்: உரோமையர் 11,13-32
நற்செய்தி: மத்தேயு 15,21-28


பிற இனத்தார்:

விவிலியத்தில் பிறவினத்தார் என்பவர்கள் யார், என்பதைப் பற்றிய அறிவு தெளிவாக இல்லை. எபிரேய விவிலியம் இரண்டு முக்கியமான வார்த்தைகளை பிறவினத்தாரைக் குறிக்க பயன்படுத்துகிறது, זָרִים (ட்சாரிம் - அந்நியர்), נֵכָר (நெகார்- புறவினத்தன்மை). பிறவினத்தார் என்பவர்கள் இஸ்ராயேலர் அல்லாதவர்கள் என்ற அர்த்தத்தில் பார்க்கப்பட்டது. இந்த இரண்டு சொற்களும் ஒத்த கருத்துச் சொற்கள் போல மாறி மாறி பயன்படுத்தப்படுகின்றன (வாசிக்க எரோமியா 5,19அ: நீதி 27,13: தி.பா 69,8). இந்த சொற்கள் வரலாற்று புத்தகங்களிலும், இணைச்சட்ட வரலாற்று நூல்களிலும், திருப்பாடல்களிலும் ஒரே விதத்தில் பாவிக்கப்படவில்லை. புறவினத்தவர்களிலும் இரண்டு வகையான புறவினத்தவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஒரு சாரார் இஸ்ராயேல் மக்கள் மத்தியில் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, அந்த சட்டத்தால் பாதுகாக்கப்படும் நிரந்தர வதிவிடம் பெற்ற புறவினத்தவர்கள். இவர்கள் இஸ்ராயேலின் விழாக்களில் பங்கெடுக்கவில்லை (காண்க வி.ப 12,49), அதே வேளை இவர்கள் இஸ்ராயேலின் அரசர்களாக தெரிவுசெய்யப்பட முடியாதவர்கள் (இ.ச 17,15). இந்த வரிகள் இஸ்ராயேல் வரலாற்றில் காலத்தால் மிகவும் பிந்தியதாக இருந்திருக்க வேண்டும். புறவினத்தவர்கள் கடன்களுக்காக வரி வசூலிக்கப்பட்டார்கள், அதேவேளை இவர்களுடைய கடன்கள் யூபிலி ஆண்டுகளில் மன்னிக்கப்படவில்லை.

இரண்டாவது வகையான புறவினத்தவர்கள், கானானியர் அல்லது வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார்கள். இவர்களுடன் இஸ்ராயேலர் எந்த விதமான தொடர்புகளையும் வைத்திருக்கக் கூடாது என கேட்கப்பட்டார்கள். இஸ்ராயேலின் உண்மையுள்ள இளைஞர்கள் வெளிநாட்டு பெண்களுடன் (אִשָּׁה זָרָה 'இஷ்ஷாஹ் ட்சாசாஹ்) தொடர்பு கொள்ளக்கூடாது என விரும்பப்பட்டார்கள், இந்த இளைஞர்கள் ஞானத்தின் பிள்ளைகளாக கருதப்பட்டார்கள், இந்த புறவின பெண்கள் ஞானமில்லாதவர்களாக கருதப்பட்டார்கள் (நீதி 2,16: 5,3: 7,5).

புதிய எற்பாடு மக்களை, இனத்தின் பொருட்டு பாகுபடுத்துவதை பெரிதாக முக்கியத்துவப் படுத்தவில்லை, மாறாக சில பிறவினத்தவர்கள் இயேசுவாலும், திருத்தூதர்களாலும் மெச்சப்படுகிறார்கள். கானானியப் பெண், நூற்றுவத்தலைவன், மற்றும் மத்தேயு நற்செய்தியில் வரும் இயேசுவின் பரம்பரை அட்டவனையில் உள்ள நான்கு புறவினப் பெண்கள், இயேசுவின் மூதாதையர்களாக உயர்த்தப்பட்டவர்கள் (ராகாபு, தாமார், பெத்செபா, ரூத்: காண்க மத் 1,1-18). இவர்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். புறவினத்தவர்களுக்கு இரக்கம் மற்றம் மனிதம் காட்டுவதும், இயேசுவின் சீடத்துவத்தின் மிக முக்கியமான பண்பாகவும் கருதப்பட்டது (மத்தேயு 25,35). இருப்பினும் பிறப்பால் இஸ்ராயேல் அல்லாதவர்கள் புறவினத்தவர்கள் என்பதை புதிய ஏற்பாடும் காட்டுகிறது (காண்க லூக் 17,18).

உண்மையில் கானான் நாட்டைப் பொறுத்த மட்டில், இஸ்ராயேலர்தான் புறவினத்தவர்கள். ஆபிரகாமின் அழைப்பு, யாக்கோபின் பெயர் மாற்றம்தான் இவர்களுக்கு அடையாளமும் உரிமையும் கொடுக்கிறது. (இன்று ஈழத்தின் அடையாளம் போல). புறவினம் அல்லது உரிமை மக்கள் என்ற அடையளாங்கள் சரியாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். அனைவருமே கடவுள் முன்னால் புறவினத்தவர்கள்தான் என்பதை விவிலியம் வெளிப்படையாகவே காட்டுகிறது. இஸ்ராயேல் தேசத்தை பலர் பல பெயர்களில் அழைக்கிறார்கள். முதலில் இது கானான் தேசம் என அழைக்கப்படுகிறது. கானான் என்பவர் நோவாவின் பேரன், இவர்தான் இந்த தேசத்தின் பெயர் கொடு மூதாதை (காண்க தொ.நூல் 9,18.22). கானானின் தந்தை ஹாம் தன் தந்தையின் வெற்றுடம்பை கண்ட படியால் சபிக்கப்பட்டவராக காட்டப்படுகிறார், இதனால் கானான் மக்களும் சபிக்கப்பட்டவர்கள் என காட்டபடுகிறார்கள். இந்த கதை சரியாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். (இன்று தந்தையர்க்கும் மக்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போக, ஒருவர் மற்றவரின் வெற்றுடம்பை சாதாரணமாக பார்க்கிறார்கள், அதனை சுதந்திரம் என்று வேறு சொல்கிறார், இதனை என்னவென்ற சொல்ல - பாரம்பரியத்திற்கு இவர்களும் சபிக்கப்பட்டவர்களே). கானானியர்கள் சில வேளைகளில் சில இஸ்ராயேலர்களால் தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்பட்டார்கள், இதற்கு நோவாவின் சாபம் காரணமாகக் காட்டப்படுகிறது. இஸ்ராயேலர்களால் மட்டுமா, அல்லது எகிப்தியர் மற்றும் இத்தியர்களாலும், கானானியர்கள் துன்புறுத்தப்பட்டார்களா? என்ற கேள்விகள் இன்று ஆராயப்படுகின்றன. இருப்பினும், கானானியர் என்ற மக்கள் கூட்டம் இஸ்ராயேலருடைய வருகைக்கு முன்பே இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

கானானியர் என்ற சொல், 'தாழ்பணி' (כָּנַע கானா') என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது என்று மொழியியல் ஆய்வாளர்கள் சிலர் காண்கின்றனர். ஆப்பு வடிவ எழுத்துக் கடிதங்கள் (கியூனி போர்ம் cuneiform letter) முக்கியமாக அமர்னா (கி.மு 14ம் நூற்றாண்டு காலத்து கடிதங்கள்- இவை எகிப்திய பாரவோன்கள் மற்றைய சிற்றரசர்களுடன் கொண்டிருந்த உறவைக் காட்டுகின்றன) காலத்து கடிதங்கள், ஹின்னாஹி என்ற மக்களினத்தைப் பற்றி பேசுகின்றன. இவர்கள்தான் கானானியர்கள் என ஊகிக்கப்படுகிறது. கானான் பிரதேசம் தெற்கில் சாக்கடலையும், வடக்கில் எர்மோன் மலையையும், கிழக்கில் யோர்தான் நதியையும், மேற்கில் மத்தியதரைக் கடலையும் கொண்டிருக்கும் ஒரு பரந்த பிரதேசம் என எடுக்கலாம். இந்த நில அளவை அனைவரும் ஏற்றுக்கொள்வதில்லை. இஸ்ராயேலருடைய வருகையின் பின்னர் கானானியர் பல பிரதேசங்களை இழந்து தீர், சீதோன் மற்றும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் எல்லைக்கு தள்ளப்பட்டனர்.

யார் கானானியர், என்பதை விளக்குவது கடினமாக இருக்கிற வேளையில், கானான் நாட்டில் குடியேறியவர்கள் என்ற அடையாளத்திற்குள், இஸ்ராயேலர், பிலிஸ்தியர், எதோமியர், மோவாபியர், அமோரியர், பெரிசியர், போன்றவர்கள் வருகிறார்கள் (காண்க தொ.நூல் 15,19-22). இவர்களில் பிலிஸ்தியரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆதாம் ஏவாளின் பிள்ளைகளுடன் தொடர்பு படுத்தப்படுகிறார்கள். ஆக இவர்கள் உறவினர்கள். தொடக்க நூல் 10,16-18இல் அட்டவனைப் படுத்தப்பட்டுள்ள நகர்கள் பல கானானிய நகர்கள் என அறியப்படுகின்றன. கானானியர்க்கும் பொனிசியருக்கும் ஒரு வகையான தொடர்பு இருந்ததை யோசுவா புத்தகத்திலிருந்து காணலாம். இந்த இரண்டு நகரையும் யோசுவா கைப்பற்றாமல் விட்டுவிட்டார் (ஒப்பிடுக நீதித்தலைவர்கள் 1: 2 சாமு 24,7). எது எப்படியெனினும் கானானியர் யார் என்பதில் பல கேள்விகள் இருக்கத்தான் செய்யும். கானானியர்களைப் பற்றி கானானியர்கள் தெளிவு படுத்த வேண்டும், அப்படியானவர்கள் இன்று இருப்பதாக தெரியவில்லை, அல்லது அவர்கள் எழுதி விட்டுச் சென்ற வரலாறும் இருப்பதாக தெரியவில்லை.

விவிலியம் தன் மக்களின் தேவைக்காக புறவினத்தவர்களை பற்றி தெளிவுபடுத்த முயல்கிறது. பல இடங்களில் இவர்களின் பெருமைகளை அழகாகக் காட்டுகிறது. இன்றைய வாசங்கள் அதற்கு நல்ல உதாரணங்கள்.

முதல் வாசகம்
எசாயா 56,1-7

1ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைபிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். 2இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்; ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர். 3ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர், 'தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி' என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், 'நான் வெறும் பட்டமரம்' என்று கூறாதிருக்கட்டும். 4ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு, 5என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்; புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன். 6ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: 7அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய 'இறைமன்றாட்டின் வீடு' என அழைக்கப்படும்

எசாயா புத்தகம் 56வது அதிகாரம் மூன்றாவது எசாயா புத்தகத்தின் ஒரு பகுதி என அறியப்படுகிறது. இந்த பகுதி, மக்களினங்கள் அனைத்தும் கடவுளின் மக்கள் என்ற அழகான சிந்தனையை முன்வைக்கிறது. இந்த பகுதியை பபிலோனிய இடப்பெயர்விற்கு பின்னரான காலப்பகுதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதனால், அங்கே சகிப்புத்தன்மை, மற்றவர்களை ஏற்றுக்கொள்ளல் மற்றும் நம்பிக்கையின்மையிலும் எதிர்காலம் உண்டு என்ற சிந்தனைகள் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.

வ.1: இதனைத்தான் ஆண்டவர் சொல்கிறார் (כֹּה אָמַ֣ר יְהוָה கோஹ் 'ஆமார் அதோனாய்) என்பதன் மூலம் இதுவரை காலமும் கொண்டிருந்த உதவாத படிப்பினை மற்றும் நம்பிக்கைகள் தேவையில்லை என்பது புலப்படுகிறது. இரண்டு முக்கியமான கட்டளைகள் முன்நிறுத்தப்படுகின்றன:

அ. நீதியை நிலைநாட்டுங்கள் (שִׁמְרוּ מִשְׁפָּט ஷிம்ரூ மிஷ்பாத்). எசாயா புத்தகம் நீதியைப் பற்றி பேசுகின்ற விவிலிய புத்தகங்களில் முக்கியமான ஒன்று. நீதியில்லாத தன்மையால்தான் பாவம் வருகிறது, இந்த பாவம்தான் அனைத்து தண்டனைகளுக்கும் காரணம் என்பது புலப்படுகிறது.

ஆ. நேர்மையை கடைப்பிடியுங்கள் (וַעֲשׂוּ צְדָקָה வா'அசூ ட்செதாகாஹ்). நேர்மை, நீதியின் ஒத்த கருத்துச் சொல்லாக பாவிக்கப்பட்டாலும், இது தனித்துவமான சொல்லாகக் காட்டப்படுகிறது. இதற்கான காரணமாக ஆண்டவருடைய மீட்பும் நேர்மைத் தன்மையும் அருகில் இருப்பதாகக் காட்டப்படுகிறது. இந்த வரிகள் மூலமாக எசாயா ஆண்டவருடைய நாளைப் பற்றி பேசுவததை தொடங்குகிறார் என எடுக்கலாம்.

வ.2: மேற்குறிப்பிட்டவற்றை செய்கிறவர்கள் பேறுபெற்றவர்கள் ஆகிறார்கள் (אַשְׁרֵי אֱנוֹשׁ יַעֲשֶׂה־זֹּאת 'அஷ்ரே 'எநோஷ் யா'அசெஹ்-ட்சொ'த்). அத்தோடு இவர்கள் மேலதிமாக செய்வது அல்லது நீதி நேர்மையை கடைப்பிடிப்பதற்கு ஒத்த பண்புகளாக மேலும் சில செயற்பாடுகள் காட்டப்படுகின்றன. இவர்கள் ஓய்வுநாளை தீட்டுப்படுத்தாது கடைப்பிடிக்கிறவர்கள் (שֹׁמֵר שַׁבָּת מֵחַלְּלוֹ ஷோமெர் ஷப்பாத் மெஹல்லெலோ), எந்த தீமையும் செய்யாமல் தம் கரங்களை காத்துக்கொள்கிறவர்கள் (שֹׁמֵר יָדוֹ מֵעֲשׂוֹת כָּל־רָע ஷோமெர் யாதோ மெ'அசோத் கோல்-ரா'),

ஓய்வு நாளை கடைப்பிடித்தல் என்பது ஒரு வெறும் சாதாரண சமய சடங்கு அல்ல, மாறாக அது சமூகம் சம்மந்தப்பட்டது, என்பதை இங்கே காணலாம். ஓய்வு நாள் என்பது நீதி, நேர்மை மற்றும் தீமையில்லா வாழ்வு, என்று விளங்கப்படுத்தப்படுகிறது.

வ.3: அக்கால சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு வகையான மக்கள் இந்த வரியில் உறுதிப்படுத்தப்படுகிறார்கள். முதலாவதாக புறவினத்தவர்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை, எனச் சொல்லப்படுகிறார்கள் (נֵּכָר நெகார்). ஆண்டவருடைய மக்களோடு இணைக்கப்பட்டவர்கள், ஆண்டவருடைய மக்களாகவே மாறுகிறார்கள், இவர்களுக்கு தாங்கள் ஆண்டவரிடமிருந்து பிரிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் வருகிறது. இது தேவையில்லாதது என்கிறார் எசாயா. இறுதிக்காலத்தில் இஸ்ராயேல் அல்லாதவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்ற வாதத்தை இந்த இறைவார்த்தை சரிப்படுத்துகிறது.

இரண்டாவதாக அண்ணகர்களுக்கு (סָּרִיס சாரிஸ்) சார்பாக இறைவார்த்தை வாசிக்கப்படுகிறது. இவர்களை மக்கள் பட்டமரம் (יָבֵשׁ யாவெஷ்- உலர்ந்த) என கருதியிருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. அண்ணகர்கள் சிலர் பிறப்பால் இப்படியாக உருவானார்கள், சிலர் தங்கள் பணியின் பொருட்டு மற்றவர்களளால் அண்ணகர்களாக மாற்றப்பட்டார்கள். இவர்கள் சில வேளைகளில் உயர்ந்த பதவிகளில் இருந்தாலும், சாதாரண வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்தர்கள். இவர்களை மக்கள் சபிக்கப்பட்டவர்கள் என நகைத்தார்கள் (இன்று சிலர் குழந்தையில்லாதவர்களை அநியாயமாக துன்புறுத்துவதைப் போல, அவர்களுக்கு எதிராக பிழையான மூட நம்பிக்கைகளை உருவாக்குவதைப் போல). (காண்க எஸ்தர் 4,4-5: திருத்தூதர் பணிகள் 8,27). சிலவேளைகளில் இவர்கள் திருமணம் முடித்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் (காண்க தொ.நூல் 39,1). யூத கலாச்சாரம் பிள்ளைகளை கடவுளின் பரிசு என கருதியதால், அண்ணகர்களை நிறைவில்லாத மக்கள் என கருதியது (காண்க இ.ச 23,1). விவிலியம் சில இடங்களில் நேர்மையான அண்ணகர்களுக்கு மிக உயர்ந்த இடத்தைக் கொடுக்கிறது. இயேசு இவர்களை தியாகிகள் என்ற இடத்தில் வைக்கிறார் (காண்க மத் 19,12).

எசாயாவின் இந்த வரி அண்ணகர்களுக்கு புத்துணர்ச்சியையும் கடவுளின் பார்வை மனித பார்வையல்ல என்பதையும் தெரிவிக்கிறது. வவ.4-5: இந்த வரிகள் மேலதிமாக அண்ணகர்களுக்கு நற்செய்தி உரைக்கிறது. உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் ஆண்டவர் சொல்வது இதுதான் (כִּי־כֹ֣ה ׀ אָמַ֣ר יְהוָה கி-கோஹ் 'ஆமார் அதோனாய்) என்று தொடங்குகிறார் எசாயா-ஆசிரியர்.

இந்த குறிப்பிட்ட அண்ணகர்கள், கடவுளின் ஓய்வு நாளை கடைப்பிடிக்கிறவர்கள் (שַׁבָּת ஷபாத்- ஓய்வு நாள்), கடவுள் விரும்புகிறவற்றை தேர்ந்து கொள்கிறவர்கள் (חָפֵץ ஹாபெட்ஸ்- விருப்பம்), மற்றும் உடன்படிக்கையை உறுதியாய் பற்றிக் கொள்கிறவர்கள் (בְּרִית பொரித்- உடன்படிக்கை). இந்த குணாதிசயங்கள் நல்ல யூதருடைய விழுமியங்களாக கருதப்பட்டவை. இதனை அண்ணகர்கள் செய்கின்றபோது அவர்கள் நீதிமான்களாகவே கருதப்படுவார்கள். மனிதர் பிறப்பால் எப்படியிருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை, மாறாக குணத்தால் எப்படி வாழ்கிறார்கள் என்பதுதான் மாற்றத்தை உண்டாக்குகிறது, என்பது தெளிவாகிறது.

இவர்களுக்கு உயரிய அந்தஸ்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆண்டவர் தன்னுடைய இல்லதிலே, அதுவும் சுற்றுச் சுவர்களுக்கிடையே இவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்டும் என்கிறார். இவ் வார்த்தைகள் இக்குறிப்பிட்ட இடத்தை எருசலேம் என்பது போல காட்டுகின்றன. சுற்றுச் சுவருக்குள் நினைவுச்சின்னம் என்பதை 'ஒரு கையும் ஒரு பெயரும்' என்று எபிரேய வழக்கு காட்டுகிறது (בְחֽוֹמֹתַי יָד וָשֵׁם வெஹோமோதாய் யாத் வாஷெம்- என் சுவருக்குள் கரமும் பெயரும்). அத்தோடு, தன்புதல்வர் புதல்வியரைவிட சிறந்த பெயர் இவர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த பெயர் நித்தியத்திற்கும் அழியாது இருக்கும் எனப்படுகிறது. பெயர் கொடுத்தல் இஸ்ராயேல் பாரம்பரியத்தில் அடையாளம் மற்றும் உரிமை கொடுத்தல் என்று பொருள் படும். இப்படியாக உரிமையில்லாத அண்ணகர்கள் உரிமை மட்டுமல்ல மாறாக சொந்த பிள்ளைகள் என்ற அடையாளத்தையும் பெறுகிறார்கள்.

இந்த இரண்டு வரிகளில் பாவிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் மிகவும் ஆழமானவை. வழமையாக, மக்கள்தான் கடவுளுக்கு நினைவுச் சின்னம் அல்லது சுவர்களை அமைப்பார்கள், ஆனால் இங்கே கடவுளே கைவிடப்பட்ட ஆனால் நேர்மையான மக்களுக்கு அவற்றை அமைக்கிறார். அத்தோடு இவர்கள் புறவினத்தவர்கள் என்பதிலிருந்து விடுபட்டு சொந்த மக்களாகின்றனர். அழியாத பெயர் என்பது முறிவு படாத உறவைக் குறிக்கிறது, ஆக இனி கடவுளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உறவு முறிவு படாத உறவாகின்றது (אֲשֶׁר לֹא יִכּרֵת 'அஷெர் லோ' யிக்காரெத்- அது வெட்டப்படாது)

வ.6: இந்த வரி பிற இனத்தாரைப் பற்றியும் அவர்கள் ஆண்டவருக்காக செய்யும் பணிகளைப் பற்றியும் விவரிக்கின்றது. இவர்கள் ஆண்டவருக்கு திருப்பணி செய்வார்கள் (לְשָׁרְתוֹ லெஷார்தோ- அவருக்கு பணியாற்ற), இங்கனம் அவர்கள் ஆண்டவரின் குருக்களாகின்றார்கள். ஆண்டவரின் பெயர் மீது அன்பு கூர்கிறார்கள் (לְאַהֲבָה֙ லெ'அஹவாஹ்- அன்புசெய்ய), இங்கனம் அவர்கள் ஆண்டவரின் சொந்த மக்களாகிறார்கள். அவர்கள் ஆண்டவரின் ஊழியர்களாக இருக்கிறார்கள் (לַעֲבָדִים லா'அவாதிம்- பணியாளர்களாக), இங்கனம் அவர்கள் ஆண்டவரின் சேவையில் இணைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் ஆண்டவரோடு இணைக்கப்பட்டு ஓய்வு நாளை தீட்டுப்படுத்தாது, ஆண்டவரின் உடன்படிக்கையை உறுதியாக கடைப்பிடிக்கிறார்கள். இந்த செயல்கள் வழமையாக ஆண்டவரின் மக்கள் அவரோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் பொருட்டு செய்ய வேண்டிய கடமைகள், இதனை செய்கிறபோதுதான் அவர்கள் கடவுளின் மக்களாகின்றார்கள். இதனையே இந்த புறவின மக்கள் செய்கிறார்கள் அதாவது அவர்களும் உரிமைக் குடிமக்கள் ஆகிறார்கள் என அழகாக சொல்கிறார் எசாயா.

வ.7: ஆண்டவருடைய திரு மலைக்கு வழக்கமாக அவர் மக்களாகிய இஸ்ராயேலர் மட்டும்தான் வரமுடியும் என நம்பப்பட்டது. இந்த திருமலை என்பது சீயோன் அல்லது எருசலேமைக் குறிக்கும் (אֶל־הַר קָדְשִׁי 'எல்-ஹர் காத்ஷி- என் திரு மலை). இங்கே புறவினத்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை அல்லது அவர்கள் வரவிரும்புவதில்லை. இங்கே அனுமதிக்கிறவர்கள் இஸ்ராயேலர் அல்ல, அல்லது வருவிரும்புகிறவர்களும் புறவினத்தவர்கள் அல்ல, மாறாக கடவுளே முதலாவது அடியை எடுத்து வைக்கிறார் அதாவது அவர்தாம் புறவினத்தாரை அழைத்து வருகிறார் (הֲבִיאוֹתִים ஹவி'ஓதிம்- அவர்களை நான் அழைத்துவருவேன்). இறைவேண்டல் செய்யப்படும் இடத்தில் இவர்கள் மகிழ்வார்கள் அதாவது இவர்களின் வேண்டுதல் கேட்கப்படும் எனப்படுகிறது. வேறொருவரின் ஆலயத்தில் மற்றவரின் வேண்டுதல் கேட்கப்படுவது, அனைவருக்கும் ஒரே கடவுள் அனைவரும் ஒரே மக்கள் என்ற எண்ணத்தைக் கொடுக்கும், இதனைத்தான் எசாயா இறைவாக்குரைக்கிறார் (ஒருவனே தேவன், ஒன்றே குலம்).

வழமையாக புறவினத்தவர்கள் ஆண்டவரின் ஆலயத்தின் உட்பகுதிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இஸ்ராயேல் பெண்களே அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த சட்டங்கள் அனைத்தையும் மாற்றுகிறார் கடவுள். இந்த புறவின மக்கள் கடவுளுக்கு படைக்கும் படையல்கள் மற்றும் எரி பலிகள் ஆண்டவரின் பீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதற்கான காரணத்தையும் கடவுள் விளக்குகிறார், அதாவது இனி கடவுளின் இல்லம் ஒரு சாரார்க்கு மட்டும் உரிய இல்லம் கிடையாது மாறாக அது அனைத்து மக்களுக்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படவிருக்கிறது (בֵּית־תְּפִלָּה יִקָּרֵא לְכָל־הָעַמִּים பேத்-தெபில்லாஹ் யிக்காரெ' லெகோல்- ஹா'ம்மாயிம்- எல்லா மக்களுக்கும் உரிய செப வீடு என அழைக்கப்படும்).

ஆலயத்தை தங்களுடைய பரம்பரை சொத்து என கருதி, உண்மையாக செபிக்கும் மக்களை, அவர்களது பிறப்பு அடையாளங்களைக் கொண்டு வெளியேற்றுவது எவ்வளவு கொடுமையானது என்பதை இந்த மக்கள் உணர்ந்திருப்பார்கள். இந்த கொடுமைக்கெல்லாம் முடிவு கட்டப்படுகிறது. ஆண்டவரின் இல்லம், ஒரு சாராருடைய அதிகார இல்லம் அல்ல, மாறாக அது செபிக்கும் மக்கள் அனைவரின் செபவீடு என்ற அர்த்தத்தை திரும்பப் பெறுகிறது. (இதனைத்தான் இயேசு எருசலேம் தேவாலயத்தில் பிற்காலத்தில் நினைவுபடுத்தினார் காண்க யோவான் 2,16).

வ.8: இந்த வரி சற்று வித்தியாசமாக இருக்கிறது. இவ்வளவு நேரமும் அண்ணகர்களையும், புறவினத்தவரையும் பற்றி பேசிய ஆண்டவர் இங்கே சிதறிப்போன இஸ்ராயேலரைப் பற்றி பேசுகிறார். தன்னை, சிதறிப்போன இஸ்ராயேலரை கூட்டிச் சேர்க்கிறவர் என அறிமுகப்படுத்துகிறார் (מְקַבֵּץ נִדְחֵי יִשְׂרָאֵל மெகபெட்ஸ் நித்ஹெ யிஸ்ரா'எல்-). சிதறியவர்கள் மற்றவர்களோடு சேர்க்கப்படுவதாக நம்பிக்கை கொடுக்கிறார். இது பபிலோனிய இடப்பெயர்வின் பின்னர் இருந்த நிலையைக் காட்டுகிறது. இந்த வரியிலிருந்து பார்க்கின்றபோது முன்னைய வரிகள் புறவினத்தவர்களாகவும், அண்ணகர்களாகவும், இந்த சிதறிய இஸ்ராயேலரைத்தான் குறிக்கிறதா, அல்லது இந்த வரி மட்டும் இறுதியாக இஸ்ராயேலரைக் குறிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இந்த வரி இஸ்ராயேலரையும் முன்னைய புறவினத்தவர்கள் அனைவரையும் குறிக்கிறது என்று எடுக்கலாம்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 67

1கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா)

2அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (சேலா)

3கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

4வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (சேலா)

5கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!

6நானிலம் தன் பலனை ஈந்தது; நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 7கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!



இந்த திருப்பாடலை அரச மகுடம் சூட்டல் பாடல்களில் ஒன்று என அடையாளப்படுத்துகின்றனர். சிலர் இதனை அறுவடைத் திருவிழாப் பாடல் எனவும் அழைக்கின்றனர். ஆனால் அறுவடை மக்களை அழைத்தல் என்ற அர்த்தத்தில் வருவதால் இது கட்டாயம் அறுவடைத் திருவிழாப் பாடலாக இருக்க வேண்டிய தேவையில்லை எனலாம். இந்த பாடலில் பாவிக்கப்பட்டடுள்ள வார்த்தைகள் மிகவும் அழகான எபிரேய கடவுள் சிந்தனையைக் காட்டுகின்றன.

வ.0: இந்த பாடலின் தலைப்பு இது ஒரு நரம்பிசைக் கருவிகளினால் பாடப்பட்ட பாடல் என்பதைக் காட்டுகிறது. இந்த முன்னுரை பிற்காலத்தில் இணைக்கப்பட்டது என்ற பலமான வாதம் ஒன்றும் இருக்கிறது. இந்த பாடலின் முதலாவது வார்த்தை מְנַצֵּח (மெநட்செஹ்) பாடகர் தலைவரைக் குறிக்கும் வார்த்தையாக இருக்கலாம். வ.1: கடவுள் இரக்கம் காட்டுவதும் ஆசீர் வழங்குவதும் ஒத்த செயல்களாக பார்க்கப்படுகிறது. கடவுள் இரக்கம் காட்டினாலொழிய அவர் ஆசீரை பெற முடியாது, அதாவது அவரது ஆசீருக்கு யாரும் இயற்கையாக தகுதியானவர்கள் அல்ல என்பது புலப்படுகிறது. ஆசீர் வழங்குவதற்கு 'உம் திருமுக ஒளியை எமக்கு வீசுவீராக' என்ற அழகான இன்னொரு ஒத்த கருத்து வரி பாவிக்கப்பட்டுள்ளது (יָאֵר פָּנָיו אִתָּנוּ யா'எர் பாநாவ் 'இத்தாநூ). கடவுளுடைய திருமுகம் ஒளி தருகிறது, அந்த ஒளிதான் ஆசீர்வதிக்கிறது என்பது ஒரு நம்பிக்கை.

இந்த வரியின் பின்னர் சேலா (סֶלָה) என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அர்த்தம் இன்னமும் தெளிவாக அறியப்படவில்லை. இது ஒருவேளை வரிகளை பிரிக்கும் அளவு வார்த்தையாக அல்லது இசையை காட்டும் மாத்திரையாகவும் இருக்கலாம்.

வ.2: ஆண்டவர் இஸ்ராயேல் மக்களை ஆசீர்வதிக்கவேண்டியதன் தேவையையும், அதனால் மற்றவர்களுக்கு கிடைக்கும் நன்மைத்தனத்தை ஆண்டவருக்கே விளங்கப்படுத்த ஆசிரியர் முயல்கின்றார். அதாவது ஆண்டவர் இஸ்ராயேலருக்கு திருமுக ஒளியைக் காட்டுவதனால், உலகம் அவரது வழியை அறிந்து கொள்கிறது (דַעַת בָּאָרֶץ דַּרְכֶּךָ தா'அத் பா'ஆரெட்ஸ் தார்கெகா- உலகில் உள்ளவர்கள் உம் வழியை அறிந்து கொள்வார்கள்).

இதனை மேலும் விளங்கப்படுத்த, பிற இனத்தார் அனைவரும் ஆண்டவர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர் எனப்படுகின்றனர். இங்கனம் பிறவினத்தார் அனைவரும் ஆண்டவரின் மீட்புக்கு உட்பட்டவர்கள் என்பது தெளிவாகின்றது. இந்த வரியின் பின்னரும் சேலா என்ற வார்த்தை பயன்பட்டுள்ளது.

வ.3: ஆசிரியர், மக்கள் இனத்தார் எல்லாரும் கடவுளை புகழ்ந்து, போற்றுவார்களாக என்று ஆசிக்கிறார். மக்கள் இனத்தார் அனைவரையும் இஸ்ராயேலின் கடவுளை புகழும்படி இவர் கேட்பதன் மூலம் அனைவரும் இந்த இறைவனின் மக்கள் என்பதை அழகாகச் சொல்கிறார். மக்களினங்களைக் குறிக்க பயன்பட்டுள்ள இந்த சொல் עַמִּים (அம்மிம்) வேற்று நாட்டினர் மற்றும் அனைத்து உலக மக்களையும் குறிக்கும் சொல் என்பது அவதானிக்கப்படவேண்டும்.

வ.4: இந்த வரியில் நேரடியாக வேற்று நாட்டினரை எழுவாய்ப் பொருளாக எடுக்கிறார். இந்த வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடுவார்கள் என ஒரு இஸ்ராயேலர் விரும்புகிறார். இது இந்த இஸ்ராயேலரின் உண்மைத் தன்மையையும் ஆன்மீக முதிர்ச்சியையும் காட்டுகிறது. வேற்று நாட்டினரை சபிக்கப்பட்டவர்கள், தீட்டுப்பட்டவர்கள் என்று அக்காலத்தில் வஞ்சிக்க, உண்மையில் அவர்களும் ஆண்டவரின் பிள்ளைகள் என்பதை அழகாகக் காட்டுகிறார்.

இதற்கான காரணத்தையும் ஆசிரியர் முன்வைக்கிறார். அதாவது உலகை ஆளுகிறவர்கள் மனித அரசர்கள் அல்ல, மாறாக அவர் கடவுள். இந்த கடவுள் உலகை நேர்மையுடன் ஆண்டு வழிநடத்துகிறார். இதன் காரணமாக அனைத்து நாடுகளுக்கும் தலைவர் இஸ்ராயேலின் கடவுள் என்பது புலப்படுத்தப்படுகிறது. இந்த வரியின் பின்னரும் சேலா (סֶלָה) என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது.

வ.5: ஏற்கனவே மூன்றாம் வரியில் பாடப்பட்டது, மீண்டுமாக பாடப்படுகிறது. இதிலிருந்து இது ஒரு பதிலுரைகளைக் கொண்ட வழிபாட்டு அல்லது முக்கியமான நிகழ்வுகளில் பாடப்படும் ஒரு குழுப் பாடல் என்ற முடிவிற்கு வரலாம்.

வ.6: நானிலம் தன் பலனை ஏன் தருகிறது, இந்த பலன் ஆண்டவரின் ஆசீர்வாதம் என்கிறார். இயற்கையின் சாதாரண நிகழ்வை சாதாரணம் தாண்டி அதன் பின்புலத்தை ஆய்வு செய்கிறார் இந்த விசுவாச விஞ்ஞானி. இந்த வரியிலிருந்து இவர் இயற்கையை ஆய்ந்து அவதானிக்கிறவர் என்பது புலப்படுகிறது.

வ.7: இறுதியாக பாடுகிறவர்கள் அனைவருக்கும், அல்லது வழிபாட்டில்-நிகழ்வில் இருக்கும் அனைவருக்கும் ஆசி வழங்கப்படுகிறது. இஸ்ராயேல் மக்களுக்கு ஆசி ஆசிக்கப்படும் அதேவேளை அனைவருக்கும் விசுவாசம் ஆசிக்கப்படுகிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது, கடவுளில் நம்பிக்கை வைத்தல் என்ற அர்த்தத்தை தருகிறது (יִֽירְאוּ யிர்'னூ- பயப்படுவார்களாக). அனைத்துலக மக்களைக் குறிக்க, உலகின் கடையெல்லைகள் என்ற சொல் பாவிக்கப்படுகிறது (כָּל־אַפְסֵי־אָֽרֶץ கோல்-'அப்செ-'ரெட்ஸ்- உலகின் அனைத்து முடிவுகளும்). இதன் மூலம் கடவுளின் எல்லைகள் இல்லாத உலகம் காட்டப்படுகிறது.



இரண்டாம் வாசகம்
உரோமையர் 11,13-15.29-32 பிற இனத்தாரின் மீட்பு

13பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்; உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன். 14இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்கமுடியும் என நம்புகிறேன். 15யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர்பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா? 29ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை. 30ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். 31அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்குரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. 32ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

உரோமையர் திருமுகத்தின் பதினொராவது அதிகாரம் மூன்று முக்கியமான தலைப்பில் இறையியல் செய்கிறது. வவ.1-10: இஸ்ராயேலருள் எஞ்சியோரைப் பற்றிப் பேசுகிறது. வவ.11-24: பிற இனத்தாரின் மீட்பை பற்றிப் பேசுகிறது. வவ.25-36: இஸ்ராயேலர் இழந்த நிலையை மீண்டும் அடைதல் என்று பிரிக்கப்பட்டுள்ளது. உரோமைய திருச்சபை பிறவினத்தாரை மையமாக கொண்டுள்ள திருச்சபை என்பதால் யார் பிறவினத்தவர், அவர்களின் நிலை என்ன, கடவுள் பார்வையில் அவர்களின் பெறுமதி என்ன? போன்ற கேள்விகளை பவுல் அவதானமாக விளங்கப்படுத்த வேண்டியவராக இருக்கிறார். பவுல் பிறவினத்தவர்களின் திருத்தூதர் என அறியப்பட்ட அதேவேளை அவர் யூத மக்களை வெறுக்கும் திருத்தூதர் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த வேண்டியவராக இருக்கிறார்.

வவ.11-12: இஸ்ராயேல் மக்களை தண்டிப்பதோ அல்லது அவர்களை தெரிவிலிருந்து விரட்டிவிடுவதோ கடவுளுடைய நோக்கமல்ல என்பதை தெளிவுபடுத்துகிறார். இஸ்ராயேலரின் கீழ்ப்படியாமை, பிறவினத்தவருக்கு புதிய வாய்ப்பைக் கொடுக்கிறது என்பது பவுலுடைய வாதம். யூதர்களின் வீழ்ச்சி மற்றவர்களுக்கு அருள் வளங்களைக் கொடுக்கிறது என்றால், யூதர்களின் கீழ்ப்படிவு இன்னும் மிகுதியாக அனைவருக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுக்கும் என்பதை பவுல் முன்னுரைக்கிறார்.

வ.13: பவுல் புறவினத்தவரின் திருத்தூதர். இந்த அடையாளத்தை அவரே ஏற்றுக்கொள்கிறார் (εἰμι ἐγὼ ἐθνῶν ἀπόστολος எய்மி எகோ எத்னோன் அபொஸ்டொலொஸ்- நாம் புறவினத்தவரின் திருத்தூதன்). பவுல் தன்னுடைய பணிகளைப் பொருத்த மட்டில் முழுவதுமாக திருப்தியடையும் ஒருவர், அதனைத்தான் தன்னுடைய திருத்தூதுவத்தையும் பொருத்து சொல்கிறார்.

வ.14: தான் பிற இனத்தாருக்கு திருத்தூதராய் இருப்பது, தன் சொந்த மக்களை வெறுப்பதன் அடையாளம் அல்ல, மாறாக அவர்களின் ஆவலைத் தூண்டி, அவர்களையும் மீட்க வேண்டும் என்ற நோக்கத்தோடே, என்று வாதிடுகிறார். தன் இனத்தாரைக் தன்னுடைய சதை, என்று சொல்கிறார் (σάρκα சார்கா- சதையான). பொறாமையை தூண்டிவிட்டு அதன் வழியாக அவர்களை மீட்கவே என்று வித்தியாசமான வார்த்தையை பாவிக்கிறார். இங்கே பொறாமை நேர்முகச் சொல்லாக பயன்படுகிறது (παραζηλόω பாராட்செலொஓ).

வ.15: ஆண்டவரை யூதர்கள் ஏற்றுக்கொள்ளாதபோது யூதர்கள் தள்ளப்பட்டவர்கள் ஆகிறார்கள், இருந்தும் புறவினத்தவர்கள் கடவுளோடு ஒப்புரவாகினார்கள். ஆண்டவரை யூதர்கள் ஏற்றுக்கொண்டிருந்து, அதன் பின்னர் புறவினத்தவர்களும் கடவுளோடு ஒப்புரவாகியிருந்தால் அந்த மகிழ்ச்சி அளப்பரியதாக இருக்கும் என்கிறார். இதனை அவர் இறந்தவர்கள் உயிர்த்தெழுதல் நிகழ்விற்கு ஒப்பிடுகிறார்.

பவுல் ஒரு நல்ல யூதனாக தன்னுடைய இனம் நன்மைபெறவேண்டும் என்ற உயரிய சிந்தனையில் இருக்கிறார். அதே வேளை புறவினத்தார் நன்மையடைந்ததை முன்னிட்டும் அவர் மகிழ்ச்சியடைகிறார்.

வவ.16-25: இந்த வரிகளில் தன்னுடைய சிந்தனையை மேலும் அவர் விளக்க முயல்கிறார். பிசைந்த மாவு, மற்றும் வேர் போன்ற உதாரணங்களை முன்வைத்து, மாற்றம் அனைத்திலும் உண்டாக வேண்டும் என ஆசிக்கிறார்.

பவுல் யூதர்களை ஒலிவ மரமாகவும், பிறவினத்தவர்களை காட்டொலிவ மரக் கிளைகளாகவும் வர்ணிக்கிறார். கடவுள் நல்ல ஒலிவ மரத்தின் கிளைகளை உடைத்து அந்த இடத்தில் காட்டொலிவ கிளைகளை ஒட்டவைத்திருக்கிறார். இருப்பினும் இந்த பிந்திய கிளைகள் கர்வம் கொள்ளக்கூடாது என்கிறார்.

தறிக்கப்பட்ட கிளைகள் உயர்வு மனப்பான்மை கொள்ளாமல், அச்ச உணர்வை கொண்டிருக்க வேண்டும் என்கிறார். ஏனெனில் இயற்கையான கிளைகளையே கடவுள் தண்டிக்கிறார் என்றால் ஒட்டப்பட்ட கிளைகளையும் அவர் தண்டிப்பார் என்பதை இந்த கிளைகள் உணரவேண்டும் என்பது அவர் வாதம் (κλάδος கிளாதோஸ்- கிளைகள்) ஆகவே பிறவினத்தார் கடவுளின் பரிவையும் அவர் கண்டிப்பையும் மறக்காமல் இருந்து யூதர்களைப் போல தறிபடாமலிருக்க வேண்டப்படுகிறார்கள். யூதர்கள் மனமாறினால் அவர்கள் ஒட்டப்படுவார்கள், அது மிகவும் எளிது என்கிறார்.

இந்த வரியில் யூதர்கள் ஒலிவ மரத்திற்கும், புறவினத்தவர்கள் காடடொலிவ மரத்திற்கும் ஒப்பிடப்படுகிறார்கள் (ἀγριέλαιος அக்ரிலய்யோஸ்- காட்டொலிவ மரம்: ἐλαία எலாய்யா- ஒலிவ மரம்)

வவ.26-28: இந்த வரிகளில் இஸ்ராயேலருக்கு மீண்டும்மொரு வாய்ப்பு இருக்கிறது, எனவே புறவினத்தவர்கள், அவர்களை ஏளனமாகப் பார்க்கக்கூடாது என்பது விளங்கப்படுத்தப்படுகிறது.

பிறவினத்தார் இறைவனிடம் வந்துசேரும் வரைதான் இஸ்ராயேலில் ஒரு பகுதியினர் மந்த நிலையில் இருக்கிறார்கள். இங்கே அனைவரையும் உள்வாங்காமல் ஒரு பகுதியினர் என்று தெளிவாக காட்டுகிறார் பவுல். எசாயாவின் 59,20 வசனத்தையும், எசாயாவின் 27,9 மற்றும் எரேமியாவின் 31,33.34 போன்ற இறைவார்த்தைகளையும் கோடிட்டு, மெசியா சீயோனிலிருந்த சீயோனுக்காக வருகிறவர் என்பதை நிறுவுகிறார்.

யூதர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாததால் இறைவனுக்கு பகைவர்கள் ஆகினர், அது பிறவினத்தாருக்கு வாய்ப்பாக மாறியது. இருப்பினும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவர்களின் மூதாதையரின் பொருட்டு அவர்கள் ஆண்டவரின் அன்பிற்கு உரியவர்கள் என்பதையும் காட்டுகிறார்.

வ.29: இதற்கான காரணத்தை விளங்கப்படுத்துகிறார். அதாவது கடவுளின் அழைப்பும், அருள்கொடைகளும் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் இஸ்ராயேல் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ உயர்ந்த நிலையில்தான் இருக்கிறார்கள் (χάρισμα காரிஸ்மா- அருட்கொடை: κλῆσις கிலேசிஸ்- அழைப்பு).

வ.30: கீழ்படிவுதான் ஆண்டவரின் அருளைக் கொண்டுவருகிறது என்பது பவுலுடைய மிக முக்கியமான இறையியல் சிந்தனை (ἀπειθής எபெய்தேஸ்- கீழ்படியாமை). கீழ்படியாமையின் காரணமாகத்தான் முன்நாட்களில் பிறவினத்தார் அருள் இல்லாமல் இருந்தார்கள், அதே நிலைதான் இப்போது யூதர்களுக்கு என்கிறார். இருப்பினும் யூதர்களின் கீழ்படியாமைதான் பிறவினத்தார்க்கு வாய்ப்பானது என்றும் சேர்த்துச் சொல்கறிhர்.

வ.31: பிறவினத்தவர்கள் தற்போது கடவுளின் இரக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள், இது நல்ல அடையாளம், வெகு விரைவாக யூதர்களும் ஆண்டவரின் இரக்கத்திற்கு உள்ளாவார்கள் என்ற நம்பிக்கையையும் பவுல் கொண்டிருக்கிறார். கடவுளுடைய இரக்கத்தையும் கீழ்படிவே கொண்டுவருகிறது என்றும் பவுல் வாதிடுகிறார்.

வ.32: கீழ்ப்படியாமையை வித்தியாசமான கோணத்தில் நோக்கி, அதனையும் கடவுள் நேர்முகமாக மாற்றக்கூடியவர் என்கிறார் பவுல். மக்களின் கீழ்ப்படியாமை இறுதியில் கடவுளின் இரக்கத்தைக் கொண்டு வருகிறது என்கிறார்.

வவ.33-36: பின்வரும் வரிகள் கடவுளின் செல்வம், ஞானம், அறிவு, தீர்ப்பு, போன்றவை மனித அறிவிற்கு அப்பாற்பட்டவை, அத்தோடு அவற்றை மனிதர் ஆராச்சிக்கு உட்படுத்த முடியாது என்றும் முடிக்கிறார். இதற்கு எசாயா 40,13: தி.பா 139,17-18: எசாயா 55,8 போன்ற இறைவார்த்தைகளை பயன்படுத்தி தன்னுடைய விவாதத்தை முன்வைக்கிறார்.