இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு (அ)

முதலாம் வாசகம்: 1அரசர்கள் 3,5-12
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 119
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8,28-30
நற்செய்தி: மத்தேயு 13,44-52


முதல் வாசகம்
1அரசர்கள் 3,5-12

5அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். 'உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!' என்று கடவுள் கேட்டார். 6அதற்குச் சாலமோன், 'உம் அடியாராகிய என் தந்தை தாவீது உமது பார்வையில் உண்மையுடனும் நீதியுடனும் நேரிய உள்ளத்துடனும் நடந்து கொண்டார். அதனால் நீர் அவருக்குப் பேரன்பு காட்டினீர். அந்தப் பேரன்பை அவருக்கு என்றும் காட்டி வந்து, இன்று அவரது அரியணையில் வீற்றிருக்கும் மகனை அவருக்குத் தந்தீர். 7என் கடவுளாகிய ஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. 8இதோ! உமக்கென நீர் தெரிந்து கொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். 9எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்கள் இனத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?' என்று கேட்டார். 10சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. 11கடவுள் அவரிடம், 'நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். 12இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை.

சாலமோன் இஸ்ராயேல் அரச வரலாற்றில் மிக முக்கியமான அரசர். தாவீது, தான் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ, அப்படியே தன் மகன் சாலமோன் வாழ ஆசைப்பட்டார். விவிலிய ஆசிரியர்கள் சாலமோனை ஒப்புயர்வற்ற அரசராக காண்கின்றனர். சாலமோனின் காலத்தில் அரசியல் அமைதி நிலவியதாகவும், அவர் அயல் நாட்டினரோடு அமைதியான அரசியலைக் கையாண்டார் எனவும் நம்பப்படுகிறது. விவிலியத்தில் மெய்யறிவிற்கு சாலமோன் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார். இன்னுமாக சில மெய்யறிவு நூல்களை, முக்கியமான சாலமோனின் ஞானப் புத்தகத்தை, சாலமோன் மன்னர்தான் எழுதினார் என்றும் பாரம்பரியம் நம்புகிறது. இதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.

கட்டடக்கலைக்கு பிரசித்தி பெற்ற இந்த அரசர், தன் தந்தை தாவீதின் கனவிற்கு ஒப்ப எருசலேம் தேவாலயத்தை பிரமாண்டமாக கட்டினார் என நம்பப்படுகிறது. சாலமோன்தான் எருசலேம் தேவாலயத்தை கட்டினார் என்று முதல் ஏற்பாடு பல இடங்களில் விவரிக்கின்றது. அரசர்கள் புத்தகங்களின் ஆசிரியர்களும், குறிப்பேடு புத்தகங்களின் ஆசிரியர்களும் சாலமோனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல விடயங்களில் ஒற்றுமையைக் காட்டுவது சாதாரணம் என்று சொல்லமுடியாது. இவைகள் சாலமோனின் முக்கியத்துவத்தையும், அவருடைய வரலாற்று சான்றுகளையும் காட்டுகின்றன.

விவிலியத்தில் அரசர்கள் புத்தகங்களும், குறிப்பேடு புத்தகங்களும் சாலமோனை விவரிக்கின்ற விதங்கள் பல நோக்கங்களைக் கொண்டாதாக இருக்கவேண்டும், இதனால்தான் ஒவ்வொருவரும், ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு காட்சி அமைக்கின்றனர். இணைச்சட்ட வரலாற்று ஆசிரியர்களுக்கு சாலமோனின் ஆட்சி வளர்ச்சியின் மற்றும் ஆசீர்வாதத்தின் ஆட்சி. அரசர்கள் புத்தக ஆசிரியர், சாலமோனின் மெய்யறிவை நிலையான மெய்யறிவாகக் காட்டுகிறார். சாலமோனின் இறுதிக் காலங்கள் அவ்வளவு மதிப்புக்குரியதாக இருந்திருக்கவில்லை. வெளிநாட்டு அரசர்களின் ஆதிக்கமும், பல கடவுள் வழிபாடுகளும் இஸ்ராயேல் நாட்டிற்குள் வருவதற்கு சாலமோனின் வெளிநாட்டுக் கொள்கைகளே காரணமாய் அமைந்தது என விவிலிய ஆசிரியர்கள் காட்டுகின்றனர். நாடு வடநாடு எனவும், தென்நாடு என பிரிந்ததற்கும், சாலமோனே காரணம் எனவும் காட்டப்படுகிறது. இந்த பார்வைகளை, அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைக்கிறேன். புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் சாலமோன் மன்னனின் மேன்மையை அடிக்கடி எடுத்துரைக்கின்றனர். புதிய ஏற்பாட்டில் சாலமோன் ஏழு தடவைகள் வருகிறார், மத்தேயுவின் பரம்பரை அட்டவணையில் சாலமோன் தாவீதின் வழிமரபில் வருகிறார் (காண்க மத் 1,6-7). லூக்கா தாவீதிற்கு பின் சாலமோனை விட்டுவிட்டு, நாத்தானை எடுக்கிறார் (காண்க லூக் 3,31) எது எவ்வாறெனினும் சாலமோன் இஸ்ராயேலரின் அடையாளத்தில் மிக முக்கியமானவர். இஸ்ராயேலின் வரலாற்றையும் தாண்டி, உலக இலக்கியங்களிலும் சாலமோனின் ஞானத்தின் பிரசித்தம் அறியப்படுகிறது.

1அரசர்கள் மூன்றாம் அதிகாரம் சாலமோன் மன்னன் கிபயோனில் உள்ள ஒரு தொழுகை மேட்டிற்கு பலி ஒப்புக்கொடுக்க வந்தார் எனக் காட்டுகிறது. அந்த நாட்களில் எருசலேம் தேவாலயம் கட்டப்பட்டிருக்கவில்லை, மக்கள் தொழுகை மேடுகளில் பலி ஒப்புக்கொடுத்தனர் (בָּמוֹת பாமோத்- மேடுகள்). இந்த தொழுகை மேடுகள், சிறிய குன்றுகளாகவோ அல்லது கற்களால் உயர்த்தப்பட்ட மேட்டு நிலங்களாகவே இருந்திருக்கலாம். இந்த குறிக்கப்பட்ட கிபயோன் என்னும் இடத்தில் மிக முக்கியமான தொழுகை மேடு இருந்தது. இங்கே அரசர் ஆயிரம் எரிபலிகளை செலுத்தியிருந்தார் என விவிலியம் சொல்கிறது.

வ.5: ஒரு நாள் இரவு கிபயோனில் கடவுள் சாலமோனுக்கு கனவில் தோன்றுகிறார். கனவில் கடவுள் தோன்றுவது அவருடைய முக்கியமான வெளிப்பாடுகளின் ஒன்றாகக் கருதப்பட்டது. தோன்றினார் என்பதை, 'தன்னை வெளிப்படுத்தினார்' என்று எபிரேயம் வாசிக்கிறது (נִרְאָה יְהוָֹה நிர்'அஹ் அதோனாய் கடவுள் தன்னை வெளிப்படுத்தினார்). என்ன வேண்டுமென்றாலும் கேள், என்பது போல சாலமோனிடம் சொல்லப்படுகிறது.

வ.6: கடவுளுக்கும் தாவீதிற்கும் இடையிலிருந்த உறவை, கடவுளுக்கே நினைவூட்டுகிறார் சாலமோன். தாவீதை, அரசர் என்று சொல்லாமல், அவர் கடவுளின் அடியார் என்கிறார் (עַבְדְּךָ 'அவ்தெகா- உம் அடியான்). சாலமோன் நல்லதொரு அரசியல் சாணக்கியன் என்பது இங்கேயே புலப்படுகிறது. இந்த அடியான்தான் தன் தந்தை என்பதையும் ஏற்றுக்கொண்டவராக, அவர் உண்மை (אֱמֶת 'எமெத்), நீதி (צְדָקָה ட்செதாகாஹ்- ), நேரிய உள்ளம் (יְשָׁרָה யெஷாராஹ்) போன்றவற்றுடன் இருந்தார் எனவும் ஏற்றுக்கொள்கிறார். இதன் காரணமாகத்தான் கடவுளின் பேரன்பை தாவீது பெற்றார் என்பதையும் இந்த இளம் அரசர் நினைக்கிறார். இதன் மூலம், அரசர்கள் புத்தக வாசகர்களுக்கு நல்ல பாடத்தையும் ஆசிரியர் மறைமுகமாக சொல்கிறார். தாவீதிற்கு காட்டிய பேரன்பின் அடையாளம்தான், தான் அரசராக இருப்பது என்பதையும் சாலமோன் நன்கு அறிந்திருக்கிறார்.

வ.7: தாவீதை கடவுளின் அடியான் என்று சொன்னவர், இப்போது தன்னையும் கடவுளின் அடியான் என அடையாளப்படுத்துகிறார். தன்னை மிக சிறியவன் என்கிறார் (אָֽנֹכִי נַעַר קָטֹן 'அநோகி நா'அர் காதோன்). இஸ்ராயேலர்களின் பார்வையில் சிறியவர்கள் யார் என்பதை இறுதியான பகுதி காட்டுகிறது (לֹא אֵדַע צֵאת וָבֹֽא׃ லோ' 'அதா' ட்செ'ட் வாவோ'- வெளியே போகவும் வரவும் தெரியாது). ஒருவர் தனித்து தன்னுடைய வருகையையும், போகுதலையும் தீர்மானிக்கின்றபோது அவர் வளர்ந்தவராக கருதப்பட்டார்.

வ.8: தன் தந்தையையும் தன்னையும் பற்றி பேசியவர், இப்போது தமது நாட்டு மக்களைப் பற்றி பேசுகிறார். சாலமோனின் காலத்தில் இஸ்ராயேலர் என்ன எண்ணிக்கையில் இருந்தனர் என்பது தெரியவில்லை, ஆனால் சாலமோன் மற்றும் அரசர்கள் புத்தகங்களின் ஆசிரியரின் கருத்துப்படி இஸ்ராயேலர்கள் அதிகமான எண்ணிக்கையில் இருந்திருக்க வேண்டும்.

வ.9: மக்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதனால், இவர்களுக்கு தீர்ப்பு வழங்க மெய்யறிவு தேவையாக இருக்கிறது என்பதை சாலமோன் நன்கு அறிந்திருக்கிறார். இநத வரிகள் எழுதப்பட்ட போது, சாலமோன் உயிரோடு இருந்திருக்க மாட்டார். மெய்யறிவு இல்லாமல் பல அரசர்கள் தீர்மானங்களை மேற்கொண்டு பல சிக்கல்களை உருவாக்கிய வேளை, சாலமோன் போன்ற மிக பிரசித்தி பெற்ற அரசரே மெய்யறிவின் தேவையை உணர்ந்திருக்கிறார் என்பது போல இந்த வரி அமைந்துள்ளது. ஞானம் இல்லாமல் கடவுளின் மக்களுக்கு யாராலும் தீர்ப்பு வழங்க முடியாது என்பதுதான் இந்த வரியின் நோக்கமாக உள்ளது. சாலமோன் தீர்ப்பளிப்பதில் அதிசிறந்தவராக இருந்தார் என்பதை அரசர்கள் புத்தகங்களும் மற்றைய முதல் ஏற்பாட்டு புத்தகங்களும் காட்டுகின்றன. திருப்பால் 72,1-4 அரசருக்கு ஞானத்தை அளித்தருளும் என்ற தோறணையில் வரிகளைக் கொண்டுள்ளது.

வ.10: சாலமோனின் இந்த வித்தியாசமான வேண்டுதல், கடவுளின் பார்வையை ஈர்க்கிறது. தொடக்கத்தில் ஆபிரகாமின் நம்பிக்கை கடவுளுக்கு உகந்ததாக இருந்ததுபோல, சாலமோனின் ஞானத்திற்கான வேண்டுதல் கடவுளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அரசர்கள் கடவுளுக்கு உகந்த வேண்டுதல்களை முன்வைக்க வேண்டும் என்ற சிந்தனையும் இதனுள் இருக்கிறது.

வ.11: சாதாரணமாக அரசியல் தலைவர்கள் எதனை வேண்டுவர் என்பதை ஆசிரியர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார். முதலில் அரசர்கள் நீடிய ஆயுளைக் கேட்பார்கள். இஸ்;ராயேலின் சில அரசர்கள் கூட இந்த வேண்டுதல்களை தங்களுடைய மரணப்படுக்கையில் கேட்டிருந்தார்கள். ஆட்சியிலிருப்பவர்கள், தொடர்ந்து அந்த சுகத்தை அனுபவிக்க முயல்வார்கள், முடியாவிடில் சட்டங்களை தங்களுக்கு ஏற்றபடி மாற்றி ஆட்சியை தக்கவைக்க முயல்வார்கள். (தென் ஆசிய நாடுகளில் இந்த நோய் பரவலாகவே காணப்படுகிறது). இரண்டாவதாக ஆட்சியாளர்கள் தங்கள் செல்வத்தை பெருக்கிக்கொள்ள முயல்வார்கள். செல்வம், ஒரு ஆட்சியாளருடைய பலமாக கருதப்படுகிறது. ஆட்சியிலிருக்கும்போதும், ஆட்சியதிகாரம் போனபின்பும் இந்த செல்வம், பாதுகாப்பு தரக்கூடியது என்று இன்றுவரை அரசியல்வாதிகள் நினைக்கிறாhர்கள். இதனால்தான் தங்கள் பரம்பரையை நினைத்து நாட்டை சுரண்டுகிறார்கள். விவிலியம் செல்வத்தை நேராகவும், மறையாகவும் நோக்குகின்றது. கடவுள் கொடுக்கின்ற செல்வம், நல்லதாகவும், மனிதர்கள் தாங்கள் தேடுகின்ற செல்வம் ஆபத்தானதாகவும் காட்டப்படுகிறது.

மூன்றாவதாக அரசியில்வாதிகள், தங்கள் எதிரிகள் அனைவரும் அழியவேண்டும் என நினைப்பார்கள். பாசிச வாதிகள் தங்களுடையதைத் தவிர மாற்றுக்கருத்துக்கள் நாட்டில் இருக்கக்கூடாது என்பதில் கருத்தாய் இருப்பார்கள். இஸ்ராயேல் வரலாற்றிலும், பல அரசர்கள் தங்கள் எதிரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அழித்து பல இரத்தக்களரிகளை உருவாக்கினர். இந்த அநியாயம் வட நாடு தனியே பிரிந்ததன் பின்னர் அதிகமாக அரங்கேறியது. சாலமோன் தன் எதிரிகள் சாகவேண்டும் என்று விரும்பவில்லை என்கிறார் ஆசிரியர். சாலமோன் அரசராக முடிசூடிய போது அவருக்கு பல எதிரிகள் இருந்தார்கள், அதில் அவர் சகோதரர்கள் மற்றும், தாவீதின் மிக முக்கியமான நண்பரும், படைத்தளபதியுமான யோவாபுவும் அடங்குவார். இவர்களையெல்லாம் சாலமோனின் வீரர்கள் கொலை செய்தார்கள் எனவும் விவிலியம் காட்டுகிறது, இதற்கு தாவீதும் உடந்தையாய் இருந்திருக்கிறார் (காண்க 1அரசர்கள் 2).

எல்லாவற்றையும் காட்டிலும், சாலமோன் நீPதி வழங்க தேவையான ஞானத்தை கேட்கிறார். ஞானம் இல்லாமல் தீர்ப்பு வழங்க முடியுமா, முடியாது என்பது ஆசிரியரின் கருத்து. இதனைத்தான் ஆட்சியாளர்கள் தேடவேண்டும் என்று சாலமோன் வாயிலாக அறிவுறுத்துகிறார் (הָבִין לִשְׁמֹעַ מִשְׁפָּט ஹாவின் லிஷ்மோ' மிஷ்பாட்- சட்டங்களை விளங்க அறிவு).

வ.12: சாலமோன் எப்படி அதிஞானம் உள்ளவராய் இருந்தார் என்பதற்கு இந்த வரி சான்று தருகிறது. சாலமோனுக்கு முன்னும் பின்னும், அவரைப்போல சிறந்த ஞானி இருந்ததில்லை என்பது இஸ்ராயேலருடைய நம்பிக்கை அதற்கான காரணம் இங்கே வருகிறது. இந்த ஞானத்தை அரசர் கேட்டார், கடவுளும் கொடுத்தார் என ஆசிரியர் காட்டுகிறார். மெய்யறிவு அல்லது ஞானத்தை குறிக்க அறிவுத்தெளிவுள்ள இதயம் என்ற சொல்லை எபிரேய விவிலியம் பாவிக்கிறது (לֵב חָכָם וְנָבוֹן லெவ் ஹாகாம் வெநாவோன்- ஞானமும் பகுத்தறிவும் உள்ள இதயம்), இதிலிருந்து, ஞானம் இதயத்திலிருந்து வருகிறது என்ற நம்பிக்கை புலப்படுகிறது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 119

திருச்சட்டத்தின் மீது ஆர்வம்

57ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன்.
58என் முழுமனத்தோடு உம் திருமுகத்தை நாடினேன்; உமது வாக்குறுதிக்கேற்ப எனக்கு அருள்கூரும்.
59நான் நடக்கும் வழிகளை நன்கு ஆய்ந்தேன்; உம் ஒழுங்குமுறைகளின் பக்கமாய் அடியெடுத்து வைத்தேன்.
60உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நான் விரைகின்றேன்; காலம் தாழ்த்தவில்லை.
61தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன் ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.
62நீதிநிறை உம் தீர்ப்புகளைக் குறித்து, உம்மைப் புகழ்ந்துபாட நள்ளிரவில் எழுகின்றேன்.
63உமக்கு அஞ்சி நடப்போர் யாவர்க்கும் உம் நியமங்களைக் கடைப்பிடிப்போர்க்கும் நான் நண்பன்.
64ஆண்டவரே! உமது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது உம் விதிமுறைகளை எனக்குக் கற்பியும்!

திருச்சட்டத்தின் பயன்

65ஆண்டவரே! உமது வாக்குறுதிக்கேற்ப, உம் ஊழியனுக்கு நன்மையை செய்துள்ளீர்!
66நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்; ஏனெனில், உம் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
67நீர் என்னைத் தண்டிக்குமுன்பு நான் தவறிழைத்தேன்; ஆனால், இப்போது உம் வாக்கைக் கடைப்பிடிக்கின்றேன்.
68நீர் நல்லவர்! நன்மையே செய்பவர்;
எனக்கு உம் விதிமுறைகளைக் கற்பியும். 69செருக்குற்றோர் என்னைப்பற்றிப் பொய்களைப் புனைகின்றார்கள்; நானோ முழுமனத்துடன் உம் நியமங்களைக் கடைப்பிடிக்கின்றேன்.
70அவர்கள் இதயம் கொழுப்பேறிப் போயிற்று. நானோ உம் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுகின்றேன்.
71எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்.
72நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது.



விவிலியத்திலுள்ள அனைத்து அகரவரிசை பாடல்களுக்கும் தலையாகவும், பெரிய பாடலாகவும் உள்ள இந்த அழகான 119வது திருப்பாடல், ஒவ்வொரு எபிரேய எழுத்தையும் மையப்படுத்தி பல பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. எந்த காலத்தில் இந்த பாடல் எழுதப்பட்டது, ஒரே காலத்தில் இந்த 176 வரியும் எழுதப்பட்டதா, இதனை எழுத எத்தனை தோற் படிவங்களை பயன்படுத்தினர்? என்ற பல ஆச்சரியமான கேள்விகள் இன்னும் பதிலளிக்கப்படாமல் உள்ளன. திருப்பாடல் 119இன் மையப் பொருளாக 'திருச்சட்டம்' காண்பிக்கப்படுகிறது. இன்றைய வாசகத்தின் இரண்டு பகுதிகள், திருச்சட்டத்தின் பயன் மற்றம் திருச்சட்டத்தின் மீது ஆர்வம் போன்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

வ.57: பலர் தங்களுடைய பங்குகளாக பலவற்றைக் கொண்டிருக்கின்ற வேளை, ஆண்டவரை தன்னுடைய பங்கு (חֶלְקִי ஹெல்கி) என்கிறார் ஆசிரியர். ஆண்டவர் ஒருவருடைய பங்காக இருந்தால் அந்த ஆண்டவரை அவர் திருப்திப்படுத்த வேண்டும். ஆண்டவரை எப்படி திருப்திப்படுத்துவது, அவர் சட்டங்களை கடைப்பிடிப்பது என்கிறார். அவர் சட்டங்கள் என்பதற்கு 'உம் சொற்கள்' என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது (דְּבָרֶיךָ தெவாரெகா).

வ.58: ஆண்டவருடைய திருமுகத்தை நாடுதல் என்பது, ஆண்டவரை நாடுதல் என்பதைக் குறிக்கும். ஆண்டவரை யாரும் காண முடியாது, ஆனால் ஆண்டவருடைய கட்டளைகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக ஆண்டவரை நாட முடியும் என்பது இஸ்ராயேலர்களின் நம்பிக்கை. முழு மனதோடு என்பதற்கு, எபிரேய விவிலியம் முழு இதயத்தோடு, என்ற சொல்லை பயன்படுத்துகிறது (בְכָל־לֵב வெகோல்-லெவ்). இந்த வரியின் இரண்டாவது பகுதி, ஒரு வேண்டுதலை முன்வைக்கிறது. அதாவது தான் ஆண்டவரை நாடுகின்ற படியால், அவர் தன் வேண்டுதலைக் கேட்க வேண்டும் என்கிறார்.

வ.59: தன்னுடைய பாதைகள் எப்படியானவை என்பதை தான் நன்கு அறிந்திருப்பதாகச் சொல்கிறார். இதனால்தான் தன்னுடைய கால்களை கடவுளுடைய சொற்களை நோக்கி திருப்பியுள்ளதாகச் சொல்கிறார் (אִמְרָתֶֽךָ 'இம்ராதாகா).

வ.60: பலர் பலவற்றுக்காக விரைகின்றபோது, தான் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்க விரைகின்றேன் என்கிறார். விரைகின்றேன் என்று மட்டும் சொல்லாமல், தான் காலம் தாழ்த்தாமல் அதனைச் செய்வதாகச் சொல்கிறார். காலம் தாழ்த்தாமல் என்பதைக் குறிக்க, கித்பாலெல் என்ற அரியவகை வினைச் சொல் ஒன்று பாவிக்கப்பட்டுள்ளது (הִתְמַהְמָהְתִּי ஹித்மஹ்மாஹ்தி- מָהַהּ மாஹஹ்).

வ.61: தீயவர்களின் கட்டுக்கள் தன்னை இறுக்குவதாகச் சொல்கிறார். இந்த தீயவர்கள் (רְשָׁעִ֣ים ரெஷா'யிம்) சட்டத்திற்கு எதிரானவர்களாக இருக்கலாம். இதில் ஒரு பறவை வேடனின் கண்ணியினால் சுற்றப்படுவதை ஒத்த படத்தை முன்நிறுத்துகிறார். இருந்தாலும் தான் கடவுளின் சட்டத்தை (תּוֹרָה தோறாஹ்) மறக்கமாட்டார், என்பதை அறிக்கையிடுகிறார். தீயவர்களின் கட்டுக்கள் எவ்வளவுதான் பலமாக இருந்தாலும், அதனை சார்பாகக் கொண்டு, ஆண்டவரின் சட்டங்களை மீறுவது சரியாக அமையாது என்பது சொல்லப்படுகிறது.

வ.62: திருச்சட்டத்தின் மீதான ஆர்வம் அழகாகக் காட்டப்படுகிறது. நள்ளிரவில் தான் எழும்புவதற்கு காரணம், கடவுளின் தீர்ப்புக்களைப் புகழ்ந்து பாடுவதற்காகும் என்கிறார். நள்ளிரவில் (חֲצֽוֹת־לַיְלָה ஹட்சோத்-லாய்லாஹ், நடுவிரவு) கூட ஆண்டவரின் தூயவர்கள் எழும்புகிறார்கள் என்ற வரலாறு காட்டப்படுகிறது. ஆண்டவருடைய சட்டங்கள் நீதி நிறைந்தவை என்பது மிகவும் அழகான சொற்பிரயோகம் (מִשְׁפְּטֵי צִדְקֶךָ மிஷ்பெதே ட்சித்கெகா- நீதி நிறைந்த உம் சட்டங்கள்).

வ.63: கடவுளுடைய நியமங்களைக் கடைப்பிடிப்பவர்களும், கடவுளுக்கு அஞ்சுபவர்களும் தனக்கு தோழர்கள் என்கிறார், அதாவது தானும் கடவுளின் சட்டங்களை கடைப்பிடிப்பதாகவும், கடவுளுக்கு அஞ்சுகிறவர் என்பதையும் காட்டுகிறார். சட்டங்களைக் குறிக்க (פְּקוּדִים) பெகூதிம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது.

வ.64: இந்த பகுதியின் இறுதிவரியாக இந்த வரி அமைந்துள்ளது. இந்த பூவுலகு கடவுளின் பேரன்பால் நிலைத்துள்ளது என்கிறார், இதன் வாயிலாக அடிப்படையில் இந்த உலகம் நல்லது என்பது புலப்படுகிறது. இதனை அனுபவிக்க ஆண்டவர் தன் சட்டங்களை கற்பிக்க வேண்டும் என்கிறார், சட்டங்களைக் குறிக்க (חֵיק) ஹெக் என்ற இன்னொரு சொல் பாவிக்கப்பட்டுள்ளது.

வ.65: ஆண்டவர் வாக்குறுதி அளிக்கிறவர், அதற்கேற்ப அதனை நிறைவேற்றுகிறவர், என்பதையும் ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். ஆண்டவர் நன்மை செய்கிறவர் என்பது முதல் ஏற்பாட்டு அனுபவங்களில் முக்கியமான ஒன்று (טוֹב עָשִׂיתָ עִֽם־עַבְדְּךָ தோவ் 'அசிதா 'இம் 'அவ்தெகா- உம் அடியானுக்கு நன்மை செய்துள்ளீர்).

வ.66: ஆண்டவரிடம் அழகான இரண்டு வேண்டுதல்களை முன்வைக்கிறார். நன்மதியையும் (טוּב טַעַם தோவ் த'அம்), அறிவாற்றலையும் (דַ֣עַת தா'அத்) புகட்டச் சொல்லிக் கேட்கிறார். நன்மதி என குறிப்பிடுவதற்கு பாவிக்கப்பட்டுள்ள சொல் 'சுவை' என்ற அர்த்தத்தையும் கொடுக்கும். சுவை என்பது ஆண்டவருடைய சட்டங்கள் என்ற அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தான், கடவுளின் கட்டளைகள் மீது நம்பிக்கை வைக்கிறவர் என்கிறார்.

வ.67: கடவுளுடைய தண்டனை இப்போது தனக்கு பொருந்தாது என்கிறார். அவர் தண்டிக்கும் முன்பு தான் பாவி, இப்போது சட்டங்களைக் கடைப்படிக்கும் நீதிமான் என்கிறார். இதன் மூலமாக தன்னை தண்டிக்க வேண்டாம் எனச் சொல்வது போல உள்ளது.

வ.68: கடவுளை நல்லவர் எனச் சொல்லும் வரிகள் இந்த 119வது திருப்பாடலில் மீண்டும் மீண்டும் வருகின்றது. தனக்கு ஆண்டவரின் கட்டளைகளை கற்பிக்கச் சொல்லி கேட்பதன் மூலம் ஒவ்வொரு வாசகருக்கும் அதனை கற்பிக்கச் சொல்லி கேட்கிறார்.

வ.69: செருக்குற்றோர்கள் என்று தன்னுடைய எதிரிகளை வரையறுக்கிறார், இவர்கள் ஆசிரியரைப் பற்றி பொய்கள் புனைகிறார்கள் என்கிறார். எப்படியான பொய்களை புனைகிறார்கள் என்பது சொல்லப்படவில்லை, இந்த பாடல் திருச்சட்டத்தைப் பற்றியதாய் இருக்கின்ற படியால், இவர்களின் குற்றச்சாட்டுக்களும் சட்டத்தை மையப்படுத்தியதாகவே இருந்திருக்கவேண்டும். இந்த ஊகத்தை இந்த வரியின் இரண்டாவது பாகம் உறுதிப்படுத்துகிறது. அதாவது ஆசிரியர் கடவுளின் சட்டத்தை நிறைவேற்றுகிறவர் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கலாம். இருப்பினும் தான் சட்டத்தை கடைப்பிடிக்கிறேன் என்கிறார்.

வ.70: இதயத்திற்கும் சட்டத்திற்கும் நிறையவே தொடர்புகள் உள்ளன. இதயம்தான் சட்டதை கடைப்பிடிக்க தூண்டும் உறுப்பு என்ற சிந்தனையும் இருந்திருக்க வேண்டும். எதிரிகளின் இதயம் கொழுப்பேறிவிட்டது என்கிறார், இதனால் அவர்களால் சரியாக சிந்திக்க முடியாது என்கிறார் போல. இந்த வரியை 'அவர்களின் இதயம் கொழுப்பைப்போல உணர்வில்லாமல் இருக்கின்றன' (טָפַשׁ כַּחֵלֶב לִבָּם தாபாஷ் காஹெலெவ் லிவெம்) என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. தன்னுடைய இதயம் இப்படி கொழுப்பேறவில்லை இதனால் தான் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுவதாக சொல்கிறார்.

வ.71: இந்த வரியின் ஆசிரியர் தான் கடவுளால் தண்டிக்கப்பட்டதை நேர்முறையாக நோக்குவது புலப்படுகிறது. தண்டனைகள் திருந்துவதற்கான வாய்ப்பு, மற்றம் அவை நல்ல அனுபவங்கள் என்பதையும் நோக்குகிறார். ஆண்டவருடைய விதிமுறைகளை தான் அவற்றின் மூலமாக கற்றுக்கொண்டாதாகச் சொல்கிறார். தான் துன்பம் அடைந்ததை 'நான் தாழ்த்தப்பட்டேன்' என எபிரேயம் காட்டுகிறது (כִי־עֻנֵּיתִי கி-'உன்னேதி). தாழ்த்தப்படுவது தண்டிக்கப்படுவதற்கு சமன் என பல இடங்களில் விவிலியம் காட்டுகிறது.

வ.72: இந்த வரி மிக மிக அழகான வரி. உலகிலே விலையுயர்ந்தது எது? என்ற கேள்விக்கு இந்த வரி விடை காண்கிறது. 'உமது வாய் எனக்கு தந்த கட்டளைகள் நல்லது (טֽוֹב־לִ֥י תֽוֹרַת־פִּ֑יךָ தோவ்-லி தோராத் பீகா), அது ஆயிரமாயிரம் தங்கத்தையும் மற்றும் வெள்ளியையும் விட மேலானது' (מֵאַלְפֵי זָהָב וָכָסֶף׃ மெ'அல்பீ ட்சாஹாவ் வாகாசெவ்) என்கிறார். பொன்னையும் வெள்ளியையும் தேடும் உலகில், ஆசிரியர் ஆண்டவரின் திருவாய்ச் சட்டங்களை தேடுவதன் மூலம், அவர் ஒரு உண்மையான ஞானி என்பதை மெய்ப்பிக்கிறார்.



இரண்டாம் வாசகம்
உரோமையர் 8,28-30

28மேலும், கடவுளிடம் அன்புகூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். 29தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார். 30தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரானோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

கடந்த வாரங்களைப்போலவே இன்றைய இரண்டாம் வாசகமும், உரோமையர் எட்டாம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. உரோமைய திருச்சபை சந்தித்த மிக முக்கியமான சவால்களுக்கு இந்த அதிகாரம் உற்சாகத்தையும், சில பதில்களையும் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த இரண்டு வரிகளில் பவுல் தூய ஆவியாரின் செயற்பாடுகளைப்பற்றி நன்கு விவரிக்கின்றார்.

வ.28: கடவுளுடன் அன்புகூர்கிறவர்களை, கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் என்று விவரிக்கிறார் (τοῖς ἀγαπῶσιν τὸν θεὸν - κλητοῖς οὖσιν டொய்ஸ் அகாபோசின் டொன் தியோன் - கிலேடொய்ஸ் ஊசின்). இவர்களுடைய நன்மைக்காகவே அனைத்து விடயங்களிலும், தூய ஆவியார் ஒத்துழைக்கிறார் என்கிறார். தூய ஆவியாரின் ஒத்துழைப்பு என்பது, இவர்களோடு கடவுள் இருக்கிறார் என்ற பொருளைத் தருகிறது.

வ.29: இவர்கள் கடவுளால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்கிறார் பவுல் (οὓς προέγνω ஹுஸ் புரொஎக்னோ- அவர்களை அவர் முன்னமே அறிந்தார்), அதவாது இவர்களின் அழைப்பு ஒரு தற்செயலான அழைப்பு அல்ல, மாறாக அது காலங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இதனால் இவர்கள், எவருக்கும் இரண்டாம் தரமான மக்கள் இல்லை என்பது புலப்படுகிறது. இவர்கள் தன் மகனின் (υἱοῦ αὐτοῦ ஹுய்யூ அவ்டூ- அவர் மகன்) சாயலுக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும் என ஏற்கனவே முன்குறித்து வைக்கப்பட்டவர்கள் (προώρισεν புரொஓசிசென்- அவர் முன்குறித்தார்).

இதற்கான காரணத்தையும் பவுல் விளக்குகிறார். அதாவது இவர்கள் கடவுளின் பிள்ளைகளாக மாறுகின்றனர். இவர்கள் சகோதர சகோதரிகளாக வர, இயேசு இவர்களில் தலைப்பேறானவர்களாக வருகிறார் (πρωτότοκος புரோடொ'டொகொஸ்).

வ.30: உரோமையர் திருமுகத்தில் இந்த வரி மிக முக்கியமான வரி. இந்த வரியில் பவுல் தன்னுடைய அனைத்து இறையியல் சிந்தனைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.

அ. கடவுள் தான் முன்குறித்து வைத்தவர்களை அழைத்திருக்கிறார் - οὓς δὲ ⸀προώρισενஇ τούτους καὶ ἐκάλεσεν· (ஹுஸ் தெ புரொஓசிசென், டூ'டூஸ் காய் எகா'லெசென்).

ஆ. தாம் அழைத்தவர்களை அவர் ஏற்புடையவர் ஆக்கியுள்ளார் - καὶ οὓς ἐκάλεσεν, τούτους καὶ ἐδικαίωσεν· (காய் ஹுஸ் எகா'லெசென், டூ'டூஸ் காய் எதிகாய்'சென்).

இ. தமக்கு ஏற்புடையவர்களை தன் மாட்சியில் பங்குகொள்ளச் செய்துள்ளார் - οὓς δὲ ἐδικαίωσενஇ τούτους καὶ ἐδόξασεν. (ஹுஸ் தெ எதிகாய்'ஓசென், டூ'டூஸ் காய் எதொ'ட்ஸ்சாசென்).

இப்படியாக முன்குறிப்பு (புரொஓரி'ட்சோ προορίζω), அழைப்பு (காலெ'யோ καλέω), ஏற்புடமை (திகாய்யோ'ஓ δικαιόω) மற்றும் மாட்சிப்படுத்தல் (தொக்ஸ்சா'ட்ஸ்ஓ δοξάζω) போன்றவற்றிக்கான நெடும் தொடர்பை அழகாகக் காட்டுகிறார். இதனால் எந்த நிகழ்வும் சாதரணமானவையல்ல, மாறாக அவை கடவுளின் திட்டத்தால் நன்கு அறியப்பட்டவை என்பது புலப்படுத்தப்படுகிறது. இந்த வகையான வாதங்கள் கிரேக்க மெய்யியிலில் நன்கு அறியப்பட்டவை, இவற்றை பவுல் நன்கு அறிந்திருக்கிறார் என்பது இங்கனம் புலப்படுகிறது.


நற்செய்தி வாசகம்
மத்தேயு 13,44-52

புதையல் உவமை

44'ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

முத்து உவமை

45-46'வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

வலை உவமை

47'விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். 48வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். 49இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; 50பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.'

முடிவுரை

51'இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா?' என்று இயேசு கேட்க, அவர்கள், 'ஆம்' என்றார்கள். 52பின்பு அவர், 'ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்' என்று அவர்களிடம் கூறினார்.


கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகவே இந்த வார நற்செய்தி வாசகமும் வருகின்றது. மத்தேயு தான் ஒரு நல்ல மறைநூல் அறிஞர் என்பதை இந்த வரிகள் மூலமாக அழகாக காட்டிவிட்டார். இந்த பகுதி இறையரசை (வானகங்களின் அரசை) எழுவாய்ப் பொருளாகக் கொண்டுள்ளன. இறையரசு என்ற கருப்பொருள் விவிலியத்தில் பலவாறு நோக்கப்படுகிறது. இந்த வரிகளை வாசிக்க முன், இறையரசின் விவிலிய சுட்டுப் பொருட்களை மீண்டும் ஒரு முறை நினைவூட்ட விரும்புகின்றேன். இறையரசு, விண்ணரசு

(கடந்த வாரம் முன்னுரையில் எழுதப்பட்டது)

மத்தேயு இதனை விண்ணகங்களின் அரசு (ἡ βασιλεία τῶν οὐρανῶν ஹே பசிலெய்யா டோன் ஹுரானோன்) என அழைக்க, மற்யை நற்செய்தியாளர்கள் இதனை இறைவனின் அரசு (ἡ βασιλεία τοῦ θεοῦ ஹே பசிலெய்யா டூ தியூ) என அழைக்கிறார்கள். முதல் ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, இந்த விண்ணரசு என்ற சிந்தனை, மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. விவிலிய ஆசிரியர்கள் இதனை, கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என நினைக்கிறார்கள். இயேசுவை நற்செய்தியாளர்கள் இறைவனின் வாரிசு எனக் காட்டுவதால் அவர்தான் இறையரசின் வாரிசு எனவும் காட்டவேண்டிய தேவை முக்கியமாக இருக்கிறது.

முதல் ஏற்பாட்டில் இறையரசு:

முதல் ஏற்பாட்டில் ஒரே கடவுள் நம்பிக்கையை, பல கடவுள் நம்பிக்கை சதாரணமாக இருந்த சூழலில் தக்க வைக்க, மிகவே போராடினார்கள். இஸ்ராயேலை சுற்றியிருந்த மக்கள் தங்கள் அரசர்களின் ஆட்சி வானத்திலிருக்கும் தங்கள் தெய்வங்களின் அடையாளம் என கருதினார்கள். வானத்தில் நல்ல தெய்வங்கள், தீய தெய்வங்களை வென்று நல்லாட்சிகளை நடத்துகிறார்கள் அதன் வெளிப்பாடுதான் மண்ணக அரசு என நம்பினார்கள். இந்த தெய்வங்கள்தான் மண்ணகத்தை உருவாக்கினார்கள் அத்தோடு அவர்கள் ஒவ்வொரு வருடமும் மண்ணகத்தை வளப்படுத்துகிறார்கள் எனவும் நம்பினார்கள். இதால், மண்ணகத்தில் இராணுவங்கள் சண்டைபோடுகின்ற போது அவர்கள் தங்கள் அரசர்களுக்காக மட்டுமல்ல, மாறாக வானகத்திலுள்ள தங்கள் தெய்வங்களுக்காகவும் போராடுகிறார்கள் என இவர்கள் நம்பினார்கள். மண்ணக வெற்றியோ அல்லது தோல்வியோ, அந்தந்த தெய்வங்களின் தோல்விகள் அல்லது வெற்றிகள் என கருதப்பட்டன.

எபிரேயர்களுடைய இறையரசு (மல்கோத் அதோனாய்) என்ற சிந்தனை கானானிய மற்றும் மொசப்தேமிய சிந்தனைகளை உள்வாங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களுடைய சிந்தனை வியக்கத்தக்க வகையில் மிகவும் இறையியல் ஆழமுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட கானான் நாடு, அவர்கள் கடவுளின் வல்லமையின் அடையாளம் என்பதையும், அதனைக் கொடுக்க அவர் பொய்த் தெய்வங்களை இல்லாமல் ஆக்கினார் என்றும் நம்பினர். இது மற்றயவர்களுடைய நம்பிக்கையிலும் சற்று வித்தியாசப்படுகிறது. அதாவது இஸ்ராயேலின் கடவுள் பூமியை உருவாக்கினவர் மட்டுமல்ல மாறாக அவர்தான் அனைத்தையும் தீர்மானிக்கறவர் என்பதையும் இது காட்டுகிறது. கடவுள் முழு உலகத்தையும் படைத்தார் எனினும், ஆபிரகாம் என்ற ஒரு தனி மனிதர் தன்னுடைய விசுவாச கீழ்படிதலால் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தையும் கானான் நாட்டையும் பெற்றுக்கொன்டார் என்பதும் பழைய ஏற்பாட்டின் நம்பிக்கை. இதே வேளை இஸ்ராயேலின் கடவுளின் ஆட்சி கானான் நாட்டிற்கு மட்டும் உட்பட்டதல்ல, மாறாக அது வடக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு, என அனைத்து உலகையும் ஆட்கொள்கிறது என்பதையும் அவர்கள் நம்பினார். இந்த சிந்தனை திருப்பாடல் ஆசிரியரால் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். விடுதலைப் பயணம் என்ற அனுபவும் இந்த இறையாட்சியுடன் ஒப்பிட்டு நேக்கப்பட வேண்டும். பாரவோன் என்கின்ற மனித மன்னன், அல்லது அவனது தெய்வங்கள், இஸ்ராயேலின் கடவுளால் தோற்றகடிக்கப்பட்டன. இதனால்தான் அவர் இஸ்ராயேல் மக்களை வெளியே கொணர்ந்து, செங்கடலை கடக்க வைத்து, உடன்படிக்கை செய்த வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியமர்த்துகிறார். இஸ்ராயேலரின் இந்த தனிப்பட்ட இறையியல், சவுல் மற்றும் தாவீது போன்ற அரச வம்சங்களின் வருகையுடன், சற்று மாற்றமடைகிறது. சாதரணமாக இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கு கடவுளைத்தான் அரசராக ஏற்றுக்கொண்டார்கள். இதனால் அதிகமான விவிலிய ஆசிரியர்கள் சவுலையும், தாவீதையும் அரசர்களாக ஏற்றுக்கொள்வதில் அல்லது அவர்களை விவரிப்பததில் வித்தியாசம் காட்டுகிறார்கள். இந்த மனித அரசர்களின் தோற்றம் ஆபத்தானது, பிழையானது மற்றும் தேவையில்லாதது என்பதையும் காட்டுகின்றனர் (காண்க 2சாமுவேல் 7: 1அரசர் 9). இந்த சிந்தனையும் மெது மெதுவாக மாற்றம் பெறுகிறது. சில புத்தகங்கள் தாவீதை கடவுளுடைய பணியாளர் அல்லது மகனாக காட்டி உண்மையான அரசர் கடவுள் எனவும் காட்டுகின்றனர்.

ஏற்பாட்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இறையரசு:

அரசர்களின் தோல்வியும், அடிமை வாழ்வும், பபிலோனிய நாடுகடத்தலும், இஸ்ராயேலர்களின் இறையியலில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. ஆண்டவர் தாவீதிற்கு, அவரின் அரசும் வாரிசும் அழிந்து போகாது என்று வாக்களித்திருந்தார். இப்படியிருக்க எப்படி அவர் சந்ததி அழியலாம்? என்ற கேள்வி பலமாக விவாதிக்கப்பட்டது. தாவீதின் நிலையான அரச வம்சம்தான் கடவுளின் அழிக்க முடியாத அதிகாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டபடியால், இந்த இழப்புக்கள் கடவுளின் வார்த்தையையே கேள்வியாக்கிறதோ, என்றும் எண்ணினார்கள். இந்த காலத்தில் தோன்றிய ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் புத்தகங்கள், கடவுளுடைய அரசோ அல்லது ஆட்சியோ மண்ணக அரசர்கள் மற்றும் நிலங்களில் தங்கியிருப்பதில்லை. மாறாக அது மண்ணக அரசர்கள் மற்றும் நாடுகளையும் தாண்டியது என்கிறார்கள். இஸ்ராயேலின், கடவுளின் ஆட்சி என்பதை இவர்கள் முனணிருத்துகிறார்கள்.

தாவீதுடைய வம்சாவளியின் தோல்வியோ, இடப்பெயர்வோ இஸ்ராயேல் கடவுளை ஒன்றும் செய்ய முடியாது, மாறாக அவர்தான் இந்த தண்டனைகளை அனுமதித்திருக்கிறார் என்ற புதிய செய்தியை அவர்கள் முன்வைத்தார்கள். ஒரு அரசரோ அல்லது அரசாட்சியோ நிலைக்க வேண்டும் என்றால், அவர்கள் கடவுளின் வார்த்தையை கேட்டு அதற்கு ஏற்ப வாழ வேண்டும், இல்லாவிடில் அழிவார்கள, என்பதையும் அனுபவத்தைக் கொண்டு விளக்கப்பட்டது.

இந்த காலத்தில்தான் இறுதிக்கால சிந்தனைகள் முதன் முதலாக இஸ்ராயேலருக்கு வழக்கில் வந்தன. அதாவது இறுதிக்காலத்தில் இஸ்ராயேலின் அரசர் முழு உலகையும் தனதாக்கப்போகிறார், அது கடவுளின் நாள் எனப்படும், அந்நாளில் அனைத்து நாடுகளுக்கும் அவர் தீர்ப்பளிப்பார் என்ற சிந்தனையும் வருகிறது. பின்னர் அவர் யூதேயாவையும், தாவீதின் அரசாட்சியையும் என்றென்றைக்கும் நிலைநிறுத்தப் போகிறார் என்ற சிந்தனையும் உருவாகின. இந்த சிந்தனையுன் மெசியாவின் வருகையும் உருவானது. இந்த மெசியா, அபிசேகம் செய்யப்பட்டவர் அவர்தான் கடவுளின் அரசை நிறுவப்போகிறவர் என்று ஆழமாக நம்பப்பட்டது. கடவுளின் எதிரிகள்தான் யூதேயாவின் அல்லது இஸ்ராயேலின் எதிரிகள் என்றும் அவர்களுக்கு இந்த மெசியா தண்டனை அளிப்பார் என்றும் காத்திருக்க தொடங்கினர்.

இறையரசுதான் மெசியாவின் அரசு அதனை அவர் கானானில் தொடங்குவார், அங்கு அடாத்தாக குடியிருப்பவர்களை அவர் விரட்டுவார், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதையும் இக்கால புத்தகங்கள் காட்டுகின்றன.

புதிய ஏற்பாட்டு காலத்தில் இறையரசு:

இஸ்ராயேலருடைய இறையரசு பற்றிய சிந்தனைக்கு, இஸ்ராயேலில் உரோமையரின் ஆட்சி மிகவும் இடைஞ்சலாக இருந்தது. இதனை எதிர்க்கவே மக்கபேயர் பல யுத்தங்களைச் செய்தனர். மக்கபேயருடைய சண்டைகள் முதலில் கிரேக்கர்களுக்கு எதிராக இருந்து பின்னர் உரோமையர்களுக்கு எதிராகவும் இருந்தது. சந்தர்ப்பத்தை சாதகமாக பாவித்த எரோதியர் குடும்பம், உரோமையரின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றி, சீசரை ஏற்றுக்கொண்டு அரசாள தொடங்கினர். எரோது தாவீதின் வழிமரபில் வராத முழுமையில்லாத ஒரு யூதன். இந்த நிகழ்வுகளும் யூதர்களின் இறையரசு மற்றும் கடவுளின் அதிகாரம் என்பதில் பல கேள்விகளை எழுப்பின. இந்த நிகழ்வுகள் ஆண்டவருடைய நாள் மற்றும் இறுதி தண்டனை என்ற சிந்தனையை வேகப்படுத்தின. இயேசு ஆண்டவர் பணிவாழ்வை தொடங்கிய காலத்தில், இறுதி நாள் பற்றிய சிந்தனைகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்திருந்தன. சீசருடைய ஆதிக்கம் பாலஸ்தீனாவை மட்டுமல்ல அதிகமான மத்திய கிழக்கு பிரதேசங்களை ஆட்கொள்ள முயன்ற வேளை, பல உரோமைய மாகாணங்கள் சீசரை அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி கடவுளாக பார்க்க முயன்றனர். இது இஸ்ராயேலருக்கு பெரிய சவால். கடவுளால் மட்டும்தான் இந்த உரோமைய ஆதிக்கத்தில் இருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டையும், கடவுளின் சொந்த மக்களையும் காக்க முடியும் என்ற சிந்தனை வளர்ந்தது.

இப்படியான காலப்பகுதியில்தான் திருமுழுக்கு யோவான் வந்து இறையரசு வந்துவிட்டது மற்றும் மெசியா வந்துகொண்டிருக்கிறார் என்று முழங்கினார். இது யூதர்களின் இதயங்களை கவர்ந்தது, புருவங்களை உயர்த்தியது. உடனடியாக இயேசு பொதுவில் தோன்றி நேரம் வந்துவிட்டது, இறையரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று போதிக்க தொடங்கினார். இயேசுவின் போதனைகளில் இறையரசு மத்திய செய்தியாக அமைந்தது. அனைத்து செய்திகளும் இந்த மையச் செய்தியை சுற்றியே அமைக்கப்பட்டன. இதன் காரணமாக இயேசு அனைவரினதும் அவதானங்களை ஈர்த்தார். இந்த இறையரசை அமைப்பது மெசியாவின் கடமை மட்டுமல்ல அனைவரினதும் என்று சொல்லி விசுவாசத்தில் கீழ்ப்படிவை எதிர்பார்த்தார். இயேசுவுடைய போதனையுடன் இறையரசு என்பது முழுமையான ஒரு ஆன்மீக அரசு என்ற அடையாளத்தை பெறுகிறது. இதனை சில ஆய்வாளர்கள் எதிர்கிறார்கள் சிலர் ஆதரிக்கிறார்கள். யூதர்களுடையதும் கிறிஸ்தவர்களுடையதும் இறையரசு சிந்தனை இந்த இடத்துடன் இரண்டு விதமான பாதைகளில் செல்லத் தொடங்குகின்றது.இயேசுவுடைய அநேகமான உவமைகள் இறையரசை தன் மக்களுக்கு புரிய வைப்பதற்கான முயற்ச்சிதான். இந்த உவமைகள் சாதாரண எளியவர்களின் நாளாந்த கதைகளாக இருந்த படியால் அதிகமானவர்களால் இலகுவாக புரியப்பட்டன. ஆண்டவருடைய உயிர்ப்பிற்குப் பின்னர், அவருடைய இரண்டாம் வருகைதான் இறையரசின் நிறைவு என எதிர்பார்க்கப்பட்டது. ஆண்டவருடைய இரண்டாம் வருகை காலம் தாழ்த்தவும், அதனை பற்றி சரியான நேரக்கணிப்புக்களை கொடுக்க முடியாமல் போகவும், புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதனை கணிக்க முடியாது என்கின்றனர்.

முடிவாக, இறையரசு என்கின்ற சிந்தனை இன்றுவரை விவிலிய ஆய்வாளர்களின் தூக்கத்தை கலைக்கும் முக்கியமான சிந்தனையாக இருக்கிறது. இருப்பினும் இயேசுவுடைய பிறப்பின்போதே இறையரசு ஏற்கனவே முழுமையாக நிறைவேறிவிட்டது என்று சில கிறிஸ்தவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இப்பபோதைய தேவை, தனிப்பட்டவர்களின் மீட்பு மட்டுமே என்றும் வாதிடுகின்றனர். புதையல் உவமை வ.44: இந்த வரியில் விண்ணரசு புதையலுக்கு ஒப்பிடப்படுகிறது (θησαυρῷ κεκρυμμένῳ ἐν τῷ ἀγρῷ, தேசாவ்ரோ கெக்ரும்மெனோ என் டோ அக்ரோ- நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் புதையலுக்கு). புதையல் அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி, ஒருவருடைய பொருளாதார நிலையை அப்படியே மறுபக்கம் மாற்றவல்லது. பரம ஏழை ஒருவர் புதையல் கிடைத்தால் கோடீஸ்வரர் ஆகிவிடுவார். அனைவரும் புதையலை நல்ல மனத்தோடு வரவேற்பார்கள், அதனை எதிர்பார்ப்பார்கள். ஆனால் புதையல் அனைவருக்கும் சாதாரணமாக கிடைப்பது இல்லை. அப்படி கிடைக்கின்றபோது, அந்த புதையலை அடைய அல்லது அது நிச்சயமாக பாதுகாப்பாக தோண்டுகிறவறை அடைகிறது என்பதில் கவனமாய் இருப்பார்கள். கிரேக்க உலகத்திற்கு புதையல் மற்றும் அதன் பெறுமதி நன்கு தெரிந்திருந்தது (θησαυρός தேசாவ்ரொஸ்- புதையல், பொக்கிசம்).

புதையலைக் காண்கிறவரின் செயற்பாடுகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் முதலில் அதனை மூடி மறைத்துவிடுவார். நிலம் அவருடையதாக இல்லாவிட்டால் அவர் புத்தியை பாவித்து அந்த நிலத்தை முதலில் தன்னுடையவை அனைத்தையும் விற்று வாங்குவார். ஏனெனில் உள்ளே இருக்கும் புதையல், விற்ற அனைத்தையும் மீள வாங்குவதற்கு உதவி செய்யும் என்பதை அவர் நன்கு அறிவார். தன்னுடையவை அனைத்தும் என்பது, அவருடைய குடும்ப உறவுகளையும் குறிக்கும் (πάντα ὅσα ἔχει பான்டா ஹொசொ எகெய்- அவருக்குள்ள அனைத்தும்). ஆக இவர் தன் வீட்டாரையும் விற்றார் என்றும் கூட எடுக்கலாம். பின்னர் நிலத்தை தன்னுடைமையாக்குவார். இப்படியாக புத்திசாலித்தனமாக விண்ணரசு கொள்வனவு செய்யப்படவேண்டும் என்கிறார் இயேசு.

முத்து உவமை

வவ.45-46: முத்து காலங்களைக் கடந்த பொக்கிசம் (μαργαρίτης மார்காரிடேஸ்). முத்துக்களை தேடிச் செல்வதும் அதனை வாங்கிச் சேர்ப்பதும், பின்னர் அவற்றை பல மடங்கு விலைக்கு விற்பதும் கிரேக்க-உரோமைய உலகில் நன்கு அறியப்பட்ட வியாபாரம். அரசர்கள் மற்றும் அரச மக்கள் வியாபாரத்திற்காக மட்டுமன்று, தமது மாட்சிக்காகவும் பெறுமதியான முத்துக்களை வாங்கிச் சேர்த்தார்கள். மேலைத்தேய நாட்டு வணிகர்கள் தென்னாசியாவிற்கு, உரோமையர் காலத்திலேயே இந்த நோக்கத்தைக் கொண்டு வந்திருக்கிறார்க்ள. தென்னாசியர்களும் இந்த பகுதிகளுக்கு சென்று முத்துக்களை வாங்கியிருக்கிறார்கள். ஆக முத்து என்பது ஒரு சொத்து, அது விரும்பித் தேடப்படுவது, பின்னர் வாங்கப்படுவது என்பது புலப்படுகிறது. முத்தை வைத்திருக்கிறவர் அந்த முத்தைப் போல பெறுமதியானவராக மாறுகிறார் என்பதும் தெரிகிறது.

விண்ணரசிற்கான தேடலையும் ஆண்டவர் வணிகர் ஒருவரின் முத்து தேடலுக்கு ஒப்பிட்டு, பின்னர் வாங்கப்படும் சொத்தாகப் பார்க்கிறார். முத்தைப் போல மிகவும் பெறுமதி வாய்ந்தது, விண்ணரசு என்பது இங்குள்ள எழுவாய்ப் பொருள்

வலை உவமை

வவ.47: வலை என்கின்ற அடையாளத்தையும் பாலஸ்தீன யூத கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். முன்னைய இரண்டு உருவகங்களும், நிலத்தோடு சம்மந்தப்பட இந்த அடையாளத்தை கடலோடு சம்மந்தப்படுத்துகிறார் மத்தேயு. இவர் ஒரு நல்ல ஆசிரியர் என்பது இங்கே தெளிவாகிறது. ஆண்டவருடைய காலத்தில் எப்படியான வலைகளை பாவித்தார்கள் என்பது அறியப்படவேண்டும். அநேகமாக வீசுவலைகளை பயன்படுத்தியிருக்கலாம், சில வேளைகளில் இழுவை வலைகளையும் பயன்படுத்தியிருக்கலாம். இந்த இரண்டு வகையான வலைகளையும், ஆய்வுகள் காட்டுகின்றன. மத்தேயு வலைகளை விண்ணரசிற்க்கு ஒப்பிட்டு கலிலேய மீனவர்களின் பார்வையை ஈர்க்கிறார் போல தோன்றுகிறது (σαγήνη சாகேனே- பெரியவகை இழுவை வலை).

வ.48: வலைத் தெறிக்கும் பாணியை அழகாக் காட்டுகிறார் மத்தேயு. மீனவர்கள் வலையை முதலில் கரைக்கு கொண்டு வந்து அதனை தெரிப்பார்கள் (மீன்களை பிரித்தெடுப்பார்கள்). இந்த வலை தெரித்தல் முறை மிக அழகானது. இங்கே பலவிமான செயற்பாடுகள் இருக்கும். இன்று இந்த வேலையை அதிகமான இயந்திரங்கள் செய்கின்றன.

மீனவர்கள் வலையில் உள்ள மீன்களை எடுத்துவிட்டு, தேவையில்லாத பாசிகள், முள்ளுகள், இறந்த வேறு கடல் உயிரினங்கள் போன்றவற்றை எறிந்துவிடுவர். இன்று எறிவதற்கு பெரிதாக வலைகளில் ஒன்றுமில்லை. மீன்பாடு குறைவாக இருக்கின்ற படியால், அனைத்தும் விலைப்படுகிறது. இன்று கூடாதவை என்று ஒன்றுமில்லைபோல, மத்தேயு இதனை அறிந்திருக்கவில்லை போல.

வ.49: இந்த வரியில் வானதூதர்களை மீனவர்களுடைய வேலையைச் செய்வதாகச் சொல்லகிறார் ஆசிரியர் மத்தேயு. இந்த வலைதட்டுதல் அதாவது பிரித்தல் வேலை உலக முடிவில் செய்யப்படும் என்கிறார். இதனால் விண்ணரசிற்கும், உலக முடிவிற்கும் தொடர்புள்ளது என்பது புலப்படுகிறது (ἐν τῇ συντελείᾳ τοῦ ⸀αἰῶνος என் டே சுன்டெலெய்யா டூ அய்யோநொஸ்- யுகங்களின் முடிவில்). நேர்மையாளருக்கும் தீயவர்களுக்கும் பொனேரோஸ் (πονηρός) மற்றும் திகையோஸ் (δίκαιος) என்ற சொற்கள் பாவிக்கப்படுகின்றன. வானதூதர்கள் இறுதிநாட்களில் இந்த வேலையைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் இந்த வரியில் புலப்படுகிறது.

வ.50: தீயவர்கள் தீச்சுழையில் தள்ளப்பட்டு அழுகையையும் அங்கலாய்ப்பையும் பெறுவார்கள் என்பது யூதர்களுடைய சிந்தனை. இது காலங்களில் மிகவும் பிந்தியது ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் இந்த சிந்தனை ஆழமாக வளர்ந்திருந்தது (εἰς τὴν κάμινον τοῦ πυρός· எய்ஸ் டேன் காமிநோன் டூ புரோஸ்- தீச் சுவாளையுள்). மத்தேயுவிற்கும் அவர் வாசகர்களுக்கும் இது நரக நெருப்பைக் குறிக்கலாம். எருசலேமிற்கு வெளியிலிருந்து கெஹெனா பள்ளத்தாக்கில் இருந்த அணையாத நெருப்பு இதன் அடையாளமாக பார்க்கப்பட்டது. நெருப்புசுவாலை இங்கே தண்டனையையும் ஆண்டவர் இல்லாத நிலையையும் காட்டுகிறது. அழுகையும் அங்கலாய்ப்பும் (பற்கடிப்பு) தண்டனையின் வலிகளைக் காட்ட பாவிக்கப்படும் சொற்பிரயோகம் (ὁ κλαυθμὸς καὶ ὁ βρυγμὸς τῶν ὀδόντων ஹொ கிலாவ்த்மொஸ் காய் ஹொ புருக்மொஸ் டோன் ஒதொன்டோன்).

முடிவுரை

வ.51: இயேசுவின் கேள்வி சீடர்களுக்கு மட்டுமல்ல மாறாக ஒவ்வொரு வாசகருக்கும் கேட்கப்படுகிறது போல அமைக்கப்பட்டுள்ளது. புரிந்துகொண்டீர்களா (Συνήκατε ட்சுநேகாடெ) என்ற கேள்வி, புரிந்து கொள்ளுங்கள் என்பது போல உள்ளது. வ.52: மத்தேயுவைப் பற்றி ஆய்வுசெய்கின்ற ஆய்வாளர்கள் அவரை ஒரு மறைநூல் அறிஞராகவும் அல்லது பரிசேயராகவும் காட்டுகிறார்கள். இந்த எடுகோலுக்கு இந்த வரியை உதராணமாக பாவிக்கின்றனர். விண்ணரசு பற்றி கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞர்களையும், கருவூலத்திலுள்ள புதிய மற்றும் பழைய சொத்துக்களின் பெறுமதியை தெரிந்த வீட்டு உரிமையாளர்கள் என்று மத்தேயு சொல்கிறார். இந்த மறைநூல் அறிஞர்களைக் குறிக்க கிரேக்க விவிலியம் γραμματεὺς μαθητευθεὶς (கிராம்மாடெயுஸ் மாதேடெயுதெய்ஸ்) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இதற்கு பயிற்சி பெற்ற பிரதிசெய்கிறவர்கள், அல்லது பயிற்ச்சி பெற்ற மறைநூல் அறிஞர்கள் என்ற பொருள் கிடைக்கிறது. இப்படியாக விண்ணரசைப் பற்றி தெரியாத அல்லது விருப்பமில்லாத மறைநூல் அறிஞர்கள் உண்மையில் விடயம் தெரியாதவர்கள் என்பது போல நக்கலடிக்கிறார் மத்தேயு.

விண்ணரசு ஒரு தேடல்,
தொடங்கிவிட்டது, ஆனால் நிறைவுபெறவில்லை.
ஒவ்வொரு விசுவாசியும் விண்ணரசின் பங்காளியாகலாம்.
இயேசுதான் இந்த விண்ணரசு தரும் புதையலும், முத்தும்.
உலக புதையலும், முத்தும் அரசாங்கத்துடையது.
பல அரசுகள் அதனைத் தேடி நாடுகளைக் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள்.
ஆனால் இயேசு என்கின்ற இந்த புதையலும் முத்தும்,
யாராலும் கொள்ளையடிக்கப்பட முடியாதது.
விலைமதிப்பற்றது.
விற்க முடியாதது, ஆனால்
வாங்க முடியுமானது.
ஆண்டவரே உம்மை பற்றிக் கொள்ள வரம் தாரும், ஆமென்