இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பொதுக்காலம் பதின்நான்காம் வாரம் (அ)

முதல் வாசகம்: செக்கரியா 9,9-10
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 145
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8,9-13
நற்செய்தி: மத்தேயு 11,25-30


முதல் வாசகம்
செக்கரியா 9,9-10

வருங்கால அரசன்
9மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். 10அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்;ழூ எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்ழூ போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும். கடவுளின் மக்களுக்குக் கிடைக்கும் மீட்பு


செக்கரியாவின் தாத்தாவாக இத்தோவை அடையாளப்படுத்துகின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். இத்தோ பபிலோனிலிருந்து நாடுதிரும்பிய ஒரு லேவியராக இருந்திருக்க வேண்டும் (காணக் நெகேமியா 12,4). இவரைப்போல, செக்கரியாவும் ஒரு லேவிய குருவாகவும் அத்தோடு இறைவாக்கினராகவும் இருந்திருக்க வேண்டும். இவர் எருசலேம் தேவாலயத்தினுள் படுகொலை செய்யப்பட்டார் என்ற வாதமும் இருக்கிறது. நற்செய்தியாளர் மத்தேயு இந்த செக்கரியாவின் படுகொலையைப் பற்றி அறிந்திருக்கிறார் எனலாம் (காண்க மத் 23,35). எபிரேய மொழியில் செக்கரியா என்றால் 'கடவுள் நினைவுகூறுகிறார்' என்று பொருள் (זְכַרְיָה ட்செகர்யாஹ், זָכַר ட்சகர், நினைவுகூர், יהּ யாஹ்- கடவுள்). முதல் ஏற்பாட்டில் இந்த பெயர் அதிகமாக பாவனையில் உள்ளது. சுமாராக முப்பது நபர்கள் இந்த பெயரில் முதல் ஏற்பாட்டில் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இந்த பெயர், நம் இறைவாக்கினருக்கு சரியாகவே பொருந்துகிறது. ஏனெனில் இவர், மக்களை தங்கள் பழைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கையை நினைவு கூறச்சொல்லி கேட்கிறார். இதுதான் இவருடைய இறைவாக்கின் சுருக்கமும் கூட. செக்கரியா, இறைவாக்கினர் அக்காயுடன் சேர்ந்து எருசேலம் தேவாலய கட்டுமானப் பணியில் மும்முறமாக உழைத்திருக்கிறார். ஆலயத்தின் அசுத்தம், அதில் வசிக்கும் ஆண்டவரை அசுத்தப்படுத்துகிறது என்பது இவர் நம்பிக்கை. ஆய்வாளர்கள் செக்கரியாவின் புத்தகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

அ. அதிகாரங்கள் 1-8: இதனை இத்தோவின் பேரனும், பெரக்கியாவின் மகனுமான இறைவாக்கினர் செக்கரியா எழுதினார் என நம்பப்படுகிறது. இவர் இதனை மேதிய பேரரசர் தாரியுசின் காலமான கி,மு 520 ஆண்டளவில் எழுதியிருக்கலாம்.

ஆ. அதிகாரங்கள் 9-14: இவை மொழியிலும் அமைப்பிலும் முன்னைய அதிகாரங்களில் இருந்து வேறுபடுகின்றன. இந்த அதிகாரங்கள், இறைவாக்குகள் என்ற பல பிரிவுகளாகக் காணப்டுகின்றன. மலாக்கி என்ற இறைவாக்கினருடைய சாயலை இவை பெற்றிருக்கின்றன.

செக்கரியாவின் புத்தகம், கடவுள்தான் உலகத்தின் அரசர் என்கின்ற இறையியலை மையமாகக் கொண்டுள்ளது. உலக நாடுகள் யூதேயாவின் மீது ஆதிக்கம் செலுத்தினாலும், இறுதியில் கடவுள் யூதேயாவை காப்பாற்றுவார், அத்தோடு அவருடைய தீர்ப்பு உலக நாடுகள் மீதும் இருக்கும் என்கிறார்.

ஒன்பதாம், பத்தாம் அதிகாரங்களின் பெரும்பான்மையான பகுதிகள் பாடல் வடிவில் அமைந்திருக்கின்றன. அதில் இன்றைய வாசகப் பகுதி, 'இனிமையான எளிமையான அரசர் வருகிறார்' என்ற தலைப்பில் அமைந்திருக்கிறது. சாதாரண எபிரேய கவிநடையான திருப்பிக்கூறுதல் மற்றும் மோனை ஒலியமைப்புக்கள் என்ற வகையில் அமைந்திருக்கின்றன.

வ.9: யூதேய நாட்டிற்கு அழகான இரண்டு பாரம்பரிய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் அது மகளே சீயோன் என அழைக்கப்படுகிறது (בַּת־צִיּוֹן பாத்-ட்சீயோன்). சீயோன் என்ற இந்தப் பெயர் தாவீதோடு சம்பந்தப்பட்டது. தாவீதின் நகரான பழைய எருசலேமும் சீயோன் மலை என அழைக்கப்படுகிறது. இது சிலவேளைகளில் முழு இஸ்ராயேல் நாட்டையும் குறிக்கும். இதனுடைய மூல அர்த்தம் அல்லது புராதன அர்த்தம் யாருக்கும் தெரியாது. சிலர் இதனை பாறை அல்லது நீருற்று என்று காண்கின்றனர். 2சாமுவேல் 5,6-10ல் முதன் முதல் விவிலியம் இந்த பெயரை பாவிக்கிறது. தாவீதுடைய வருகையின் பின்னர்; எருசலேம் மற்றும் சீயோன் என்ற சொற்கள் ஒத்தகருத்துச் சொற்களாக பாவனைக்கு வந்தன.

இரண்டாவதாக யூதேயா எருசலேம் மகளே என அழைக்கப்படுகிறது (בַּ֣ת יְרוּשָׁלַ֔ם பாத் யெரூஷாலாயிம்). எருசலேம் என்பது, எருசலேம் நகரை மட்டும் குறிக்காது, அது முழு யூதேயாவையும் குறிக்கும். சில முக்கியமான இடங்களில் இது முழு இஸ்ராயேல் நாட்டையும் குறிக்கும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மதுரை போன்ற நகர்களின் பெயர்கள், நகர்களையும் தாண்டி நாடுகளைக் குறிப்பது போன்று.

இந்த ஒத்தகருத்துச் சொற்களால் எருசலேமை வர்ணித்தவர், அதன் அரசர் அதனிடம் வருகிறதாகச் சொல்லி அவருடைய பண்புகளை அடுக்குகிறார். உன் அரசர் உன்னிடம் வருகிறார் என்ற வரி நாடில்லாமல் வாழ்ந்த யூதர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் (מַלְכֵּךְ יָבוֹא לָךְ மல்கெக் யாவோ' லாக்). இது இவர்களுக்கு தாவீதின் சந்தியை நினைவூட்டினாலும், இங்கே இது கடவுளையே குறிக்கிறது. பபிலோனிய மற்றும் மேதிய மன்னர்களை தங்கள் அரசர்களாக ஏற்க பழகியவர்களுக்கு, நிலத்தின் மன்னர் வருகிறார் என்ற மகிழ்ச்சி செய்தி கொடுக்கப்படுகிறது. இது ஒரு தேசியவாத வார்த்தை. இந்த மன்னருடைய பண்புகள் வித்தியாசமாக இருக்கிறது.

அ. அவர் நீதியுள்ளவர்: (צַדִּיק ட்சாதிக்) இதனால் பழைய மன்னர்கள் நீதி செலுத்துவதில் தவறினார்கள் என ஆசிரியர் சொல்ல வருகிறார் போல.

ஆ. அவர் வெற்றிவேந்தர்: (נוֹשָׁע நோஷா') இதற்கு 'மீட்கிறவர்' என்ற சொல் பயன்பட்டிருக்கிறது. இந்த சொல்லை 'மீட்கப்பட்வர்' அல்லது 'மீட்கக்கூடியவர்' என்றும் மொழிபெயர்க்கலாம். அதாவது பல இஸ்ராயேலின் அரசர்கள் பல பேரரசுகளுக்கு அடிமைகளாக வாழந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரசர் அப்படியல்ல என காட்டுகிறார்.

இ. அவர் எளிமையானவர்: (ה֑וּא עָנִי֙ ஹு 'அனி) இஸ்ராயேல் மற்றும் யூதேயாவின் பல அரசர்கள் எளிமையானவர்களாக இருந்திருக்கவில்லை. ஆடம்பரமான வாழ்கை சிலவேளைகளில் இவர்களுக்கு மக்களின் துன்பங்களை கண்டுணர இடைஞ்சலாக இருந்திருக்கிறது. இவ்வாறில்லாமல் இந்த புதிய அரசர் எளிமையானவராக அதாவது எளிய மக்களை கவருகின்றவராக இருப்பார் என்பதே செய்தி.

ஈ. இந்த அரசர் கழுதைக் குட்டியின் மீது வருகிறவர் - கழுதை, கழுதைக் குட்டி மற்றும் பெண்கழுதை என்று மூன்று முறை இந்த சொல் பாவிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் செமித்திய நாடோடி மக்களுக்கு கழுதை மிக முக்கியமான போக்குவரத்து வாகனம். (חֲמ֔וֹר ஹமோர்- கழுதை, עַיִר 'அயிர்- கழுதைக் குட்டி, אָתוֹן 'ஆதோன்- பெண் கழுதை). குதிரைகளை முதன் முதல் கிரேக்கர்கள்தான் மத்திய கிழக்கு உலகத்திற்கு அறிமுகம் செய்தார்கள். அத்தோடு சாதாரண மக்களால் குதிரைகளை வாங்கவும் பராமரிக்கவும் முடியாமல் இருந்தது. ஆனால் கழுதை மற்றும் காட்டுக் கழுதை இந்த இடத்தின் விலங்காக அக்காலத்தில் இருந்திருக்கிறது. இதனுடைய எளிமையான உணவு முறை மற்றும் கழைக்காமல் சுமைகளை சுமக்கும் தன்மை போன்றவை, சாதாரண மக்களின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இப்படியாக புதிய மன்னர் சாதாரண மக்களின் உணர்வுகளை புரியக்கூடியவராக இருப்பார் என்பதே செக்கரியாவின் செய்தி.

வ.10: இந்த எளிமையான மன்னரின் அரசியல் மற்றும் இராணுவ சாணக்கியம் விளங்கப் படுத்தப்படுகிறது. இவர் எப்ராயிமின் தேர்ப்படையை இல்லாமல் செய்வார் என்று சொல்லப்படுகிறது. எப்ராயிம் (யோசேப்பின் மகன்) இங்கே வடநாட்டைக் குறிக்கலாம். இவர் வடநாட்டின் தேர்ப்படையையும், தென்நாட்டின் குதிரைப்படையையும் இல்லாமல் செய்வாராம். அதாவது சாதாரண மன்னர்கள் தங்கள் படைப்பலத்தை அதிகரித்தே நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவார்கள். இவர்களுக்கு தேர்ப்படையும், குதிரைப்படையும் மிக முக்கியமானதாக இருந்தன. தாவீதின் காலத்திற்கு முன்னர் இந்த இரண்டு படைகளும் இஸ்ராயேலரிடம் சொல்லும் அளவிற்கு இருந்ததில்லை. இஸ்ராயேலை சுற்றியிருந்த மன்னர்கள் இவற்றை அதிகமாக பயன்படுத்தினர். முக்கியமாக அசீரியர் மற்றும் மேதியர் இவற்றின் பாவனையில் சிறந்து விளங்கினர். இந்த இராணுவ பலத்தை இஸ்ராயேலர் நன்கு அறிந்திருந்தனர். ஆனால் எருசலேமின் புதிய மன்னர் இவற்றின் முக்கியத்துவத்தை விலக்கிவிடுகிறார் என்பது செக்கரியாவின் இறையியல். அத்தோடு அக்காலத்தில் இருந்த மிக மிக முக்கியமான போர்க்கருவியான வில்லும் முறிக்கப்படுமாம்.

இவற்றிக்கு பதிலாக இந்த மன்னர் புற நாடுகளுக்கு அமைதியை அறிவிக்கிறார் (דִבֶּר שָׁלוֹם לַגּוֹיִם திப்பெர் ஷலோம் லாகோயிம்- நாடுகளுக்கு அமைதி பேசுவார்.). இவருடைய ஆட்சியை விவரிக்க கடல்கள் அடையாளங்களாக கொடுக்கப்படுகின்றன. ஒரு கடலிலிருந்து மறு கடல் என்பது, மத்திய தரைக் கடலிலிருந்து சாக்கடலைக் குறிக்கலாம். பேராறு என்பது இங்கே யூப்பிரதீஸ் நதியைக் குறிக்கலாம் (נָּהָר நாகார்- ஆறு, யூப்பிரதீஸ் நதி.). வான் என்கின்ற துருக்கி ஏரியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த நதி சிரியா மற்றும் ஈராக் வரை பாய்கின்றது. ஆரம்ப காலத்திலே பல கலாச்சாரங்களுக்கும் நாகரீகங்களுக்கும் இந்த நதி தொட்டிலாக இருந்திருக்கிறது. பபிலோனிய, மொசப்தேமிய, அக்காடிய, சுமேரிய நாகரீகங்கள் இந்த நதியை அண்டியே உருவாகியிருக்கின்றன. பல இடங்களில் இந்த நதி விவிலியத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. உலகின் முடிவு என்பது அக்கால புவியியலின் அறிவில் வித்தியாசமாக இருந்திருக்கும். இந்தச் சொல்லை பயன்படுத்தி முழு உலகையும் குறிக்க ஆசிரியர் முயன்றிருக்கலாம்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 145

அரசராம் கடவுள் போற்றி!
(தாவீதின் திருப்பாடல்)
1என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.
2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.
4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன்.
6அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்,
7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.
8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.
10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.
12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.
14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்.
15எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.
16நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார்.
20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார்.
21என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!


திருப்பாடல் புத்தகத்தில் காணப்படும் அகரவரிசைப் பாடல்களில் இந்த 145வது சங்கீதமும் ஒன்று. நுன் (נ , ן ந, பதினான்காவது எழுத்து) வருகின்ற வரி மட்டும் இதில் இல்லாமல் இருக்கிறது. இதனால்தான் இந்த பாடல் 21வரிகளைக் கொண்டிருக்கிறது, இல்லாவிடில் இதில் 22வரிகள் காணப்படும். காலத்தின் ஓட்டத்தில் இந்த வரி அழிந்து போயிருக்கலாம் என நம்பப்படுகிறது. இருந்தாலும், மனித மொழியான எபிரேயம், ஆண்டவரின் மறைபொருளை முழுமையாக விளங்கப்படுத்த முடியாதது என்பதைக் காட்டவே ஆசிரியர் வேண்டுமென்றே இந்த ந (நுன்) வரியை (14ம்) விட்டிருக்கலாம் என்ற ஒரு பலமான வாதமும் இருக்கிறது.

இந்தப் பாடல், கடவுள் பாடப்படவேண்டியவர், மற்றும் அவருடைய மாட்சிமை புகழப்படவேண்டியது என்பதைக் காட்டுகிறது. தாவீதின் திருப்பாடல் என்று தொடங்கும் இந்த திருப்பாடல், அதிகமான திருப்பாடல்களைப் போல் தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. (תְּהִלָּה לְדָוִד தெஹிலாஹ் லெதாவித் - தாவீதின் (தாவீதுக்கு) பாடல் (புகழ்))

வ.1 (א '- அலெப்): திருப்பாடல் ஆசிரியர் கடவுளை தன்னுடைய அரசராக காண்கிறார் (אֱלוֹהַי הַמֶּלֶךְ 'எலோஹாய் ஹம்மெலெக்- என்கடவுள் அரசர்). கடவுளைப் போற்றுவதும் அவர் பெயரைப் போற்றுவதும் சமனாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் புகழ்ச்சி என்றென்றைக்கும் நடைபெற வேண்டியது என்கிறார்.

வ.2 (בּ ப- பெத்): மீண்டுமாக ஆண்டவரும் அவர் பெயரும் ஒத்தகருத்துச் சொற்களாக பார்க்கப்டுகின்றன. ஆண்டவரை போற்றுதலும் அவருடைய பெயரை புகழ்தலும் நாள் முழுவதும் செய்யப்பட வேலை என்பதை விளக்குகின்றார்.

வ.3 (גּ கி- கிமெல்): ஆண்டவரை புகழ்வதற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பெரியவர், மாட்சிக்குரியவர். இந்த சொற்கள் மனிதர்கள் மற்றும் மனித தலைவர்கள் எவ்வளவு சிறியவர்கள் என்பதைக் காட்டுகிறது. அத்தோடு ஆண்டவருடைய உயரிய தன்மைகள் தேடிக்கண்டுபிடிக்க முடியாதவை என்பதையும் விளக்குகிறார் (אֵין חֵקֶר 'ஏன் ஹகெர்- தேட முடியாதது).

வ.4 (דּ த- தலெத்): ஒரு தலைமுறையின் நோக்கத்தை கடவுள் அனுபவத்தில் பார்க்கிறார் ஆசிரியர். அதாவது ஒரு தலைமுறையின் நோக்கம், அடுத்த தலைமுறைக்கு கடவுளின் புகழை எடுத்துரைப்பதாகும் என்கிறார். இந்த புகழை அவர், வல்லமையுடைய செயல்கள் என்கிறார்.

வ.5 (ה ஹ- ஹெ): மனிதர்கள் எதனைப்பற்றி சிந்திக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. கடவுளுடைய வியத்தகு செயல்கள், மாண்பின் மேன்மை இவற்றைப் பற்றியே தான் சிந்திப்பதாகச் சொல்கிறார். இது கடவுளை புகழ்தலுக்கு சமமானது என்ற அர்த்தத்தில் வருகிறது.

வ.6 (ו வ- வாவ்): கடவுளுடைய செயல்கள் அச்சம்தருபவை என சொல்லப்படுகின்றன. இந்த அச்சம் பயத்தினால் ஏற்படுபவையல்ல மாறாக கடவுள்மேல் உள்ள மாறாத அன்பினால் வருபவை. கடவுளுடைய இந்த அச்சந்தரும் செயல்கள், மாண்புக்குரிய உயரிய செயல்கள் என்று ஒத்த கருத்தில் திருப்பிக்கூறப்பட்டுள்ளது (גְּדוּלָּה கெதூலாஹ்- உயர்தன்மை).

வ.7 (ז ட்ச- ட்சயின்): ஆண்டவரின் உயர்ந்த நற்பண்புகளை நினைப்பது அவரை புழந்து பாடுவதற்கு சமன் என்கிறார். ஒருவருடைய நற்பண்புகளை நினைத்தல் அவர்மேல் உள்ள நல்மதிப்பு மற்றும் விசுவாசத்தை ஆழப்படுத்தும் என்ற தற்கால உளவியல் சிந்தனைகளை அன்றே அறிந்திருக்கிறார் இந்த ஆசிரியர்.

வ.8 (ח ஹ- ஹத்): முதல் ஏற்பாடு அடிக்கடி கொண்டாடும் கடவுளைப் பற்றி பல நம்பிக்கைகளை இந்த வரி அழகாக தாங்கியுள்ளது. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உள்ளவர் என்பது இஸ்ராயேலருடைய நாளாந்த நம்பிக்கை. இந்த இரக்கமும் கனிவும்தான் கடவுளின் மன்னிப்பை மக்களுக்கு பெற்றுத்தருகிறது என இவர்கள் நம்பினார்கள் (חַנּוּן וְרַחוּם יְהוָה ஹனூன் வெராஹும் அதோனாய் - இரக்கமும் பரிவும் உள்ளவர் ஆண்டவர்). இந்த ஆண்டவர் எளிதில் சினம் கொள்ளாதவர் என்கிறார் ஆசிரியர். தெய்வங்களின் கோபம்தான் நோய் மற்றும் போர் போன்ற துன்பங்கள் உலகில் ஏற்படுத்துகின்றன என்று அக்கால ஐதீகங்கள் நம்பின, இதனை மறுத்து உண்மையான இஸ்ராயேலின் தேவனின் குணங்கள் பாராட்டப்படுகின்றன (אֶרֶךְ אַפַּיִם 'எரெக் 'அபிம்- மூக்கில் மெதுமை, கோபத்தில் மெதுமை). ஆண்டவருக்கு பேரன்பு என்ற அழகான பண்பு மகுடமாக சூட்டப்படுகிறது (חָסֶד ஹெசெட்- அன்பிரக்கம்). மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த பண்புகள் ஆண்டவருக்கு மட்டுமே அதிகமாக விவிலியத்தில் பாவிக்கப்படுகின்றன என்பதை அவதானிக்க வேண்டும்.

வ.9 (טֹ த- தெத்): ஆண்டவர் அனைவருக்கும் (அனைத்திற்கும்) நன்மை செய்கிறவராக பார்க்கப்படுகிறார். இந்த அனைத்து (כֹּל கோல், சகலமும்) என்பதை அவர் உருவாக்கியவை என காட்டுகிறார் ஆசிரியர். ஆக இந்த உலகத்தில் கெட்டவை என்பது கிடையாது, அனைத்தும் நல்லவை, அவையனைத்தையும் ஆண்டவரே உருவாக்கியுள்ளார் எனக் காட்டுகிறார். ஆண்டவருடைய இரக்கம் யூதர்களுக்கு மட்டுமல்ல மாறாக அது அனைத்திற்கும் உரியது. இந்த சிந்தனை சாதாரண யூத சிந்தனையிலிருந்து மாறுபட்டது.

வ.10 (יֹ ய- யோத்): இப்படியாக ஆண்டவர் உருவாக்கிய (מַעֲשֶׂה மா'அசெஹ்- உருவாக்கியவை) அனைத்தும் அவருக்கு நன்றி செலுத்துகின்றன. இந்த ஆண்டவர் உருவாக்கியவை என்பவை ஆண்டவருடைய அன்பர்கள் (חָסִיד ஹசிட்- தூயவர், அன்பர்) என பெயர் பெறுகின்றன.

வ.11 (כּ க- கப்): இந்த அன்பர்கள் கடவுளுடைய ஆட்சியின் வித்தியாசத்தை அறிவிக்கிறவர்கள் அதாவது அவருடைய வல்லமையை நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆண்டவரை அரசராக பார்ப்பதும் அவருடைய அரசில் நன்மைத்தனங்களை பாடுவதும், முதல் ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான செயல். இதனைக் கொண்டு அவர்கள் மனித அரசர்களை பாராட்டவும், எச்சரிக்கை செய்யவும் செய்தார்கள்.

வ.12 (ל ல- லமெத்): இந்த தூயவர்கள் மானிடர்க்கு ஆண்டவரின் வல்ல செயல்களை சொல்கிறார்கள். மானிடர்கள் என்பவர்கள் இங்கே ஆண்டவரை அறியாத வேற்றின மக்களைக் குறிக்கலாம். இந்த மானிடர்களைக் குறிக்க ஆதாமின் மக்கள் (בְנֵי הָאָדָם வெனே ஹ'ஆதாம்) என்ற சொல் பயன்படுகிறது. இந்த சொல் சில வேளைகளில் இஸ்ராயேல் மக்களையும் குறிக்க பயன்படுகிறது. ஆண்டவருடைய ஆட்சிக்கு பேரொளி உள்ளதாகவும் ஆசிரியர் காட்டுகிறார்.

வ.13 (ם ,מ ம- மெம்): அனைத்து மன்னர்களுடைய ஆட்சியும் காலத்திற்கு உட்பட்டதே. மன்னர்களின் ஆட்சிகள் தொடங்குகின்றன பின்னர் அவை முடிவடைகின்றன. ஆளுகை என்பது அவர்களின் ஆட்சி நடைபெறும் இடங்கள். இவையும் மாற்றமடைகின்றன. ஆனால் கடவுளைப் பொறுத்தமட்டில் அவர் இடத்தாலும் காலத்தாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர். இதனைத்தான் ஆசிரியர் அழகாகக் காட்டுகிறார். ஒருவேளை இந்தப் பாடல் இடப்பெயர்விற்கு பின்னர் அல்லது யூதேய அரசு சிக்கலான காலங்களில் இருந்த போது எழதப்பட்டிருந்தால், இந்த வரி அதிகமான அர்த்தத்தைக் கொடுத்திருக்கும்.

வ.14 (סֹ ச- சாமெக்): இந்த பதிநான்காவது வரி எபிரேய (அரமேயிக்க) எழுத்தில் நுன்னாக (נ , ן ந,) இருந்திருக்க வேண்டும். எதோ ஒரு முக்கிய தேவையை கருத்தில் கொண்டு இந்த நுன் விடப்படுகிறது. அதற்கு பதிலாக சாமெக் வருகிறது, இது பதினைந்தாவது எழுத்து. சில கும்ரானிய படிவங்கள் இந்த பதிநான்காவது எழுத்திற்கும் ஒரு வரியை புகுத்த முயன்றிருக்கின்றன, ஆனால் பிற்காலத்தில் அவை மூலப் பாடலின்படியே விடப்பட்டுள்ளன. கும்ரானிய சோக்கப்பட்ட வரி இவ்வாறு வருகிறது: 'ஆண்டவருடைய வார்த்தைகள் எக்காலத்திற்கும் நம்பக்கூடியவை, அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிகைக்கு உரியவை'

சாமெக் வரி பாதிக்கப்பட்டவர்களை கடவுள் எப்படி காக்கிறார் எனக் காட்டுகிறது. கடவுள் தடுக்கி விழுகிறவர்களை காக்கிறவராக காட்டப்படுகிறார். இந்த தடுக்கி விழுகிறவர்களை எபிரேய விவிலியம், துன்புறுகிறவர்கள் மற்றும் மற்றவர்களால் பாதிக்கப்படுகிறவர்களைக் குறிக்கிறது (הַנֹּפְלִים ஹநோப்லிம்- விழுகிறவர்கள்: הַכְּפוּפִים ஹப்பூபிம்- ஊக்கமிழந்தவர்கள்).

வ.15 (ע '- அயின்): அனைத்து உயிரினங்களுக்கும் உணவு வழங்குபவராக கடவுள் காட்டபடுகிறார். இந்த வரியை எபிரேயே விவிலியம், 'அனைத்து கண்களும் உம்மையே எதிர்பார்க்கின்றன' என்ற வரியில் காட்டுகிறது, அத்தோடு கடவுள் அனைத்திற்கும் தக்க காலத்தில் உணவளிக்கிறவர் எனவும் காட்டுகிறது. இங்கே கடவுள் அதிசயம் செய்து, காலங்களை கடந்து அல்லது காலத்திற்கு புறம்பாக உணவளிப்பவராக காட்டப்படவில்லை, மாறாக அவர் தக்க காலத்திலேயே உணவளிக்கிறார். அதாவது காலங்களை அவர் நெறிப்படுத்துகிறார் எனலாம். இது அதிசங்களை இயற்கைக்கு வெளியில் தேடாமல், இயற்கையே அதிசயம்தான் என்ற அழகான அர்த்தத்தைக் கொடுக்கிறது.

வ.16 (פּ, ף ப- பே): ஆண்டவர் தன் கைகளை திறந்து அனைத்து உயிரினங்களினதும் தேவைகளை நிறைவேற்றுகிறவராக பாடப்படுகிறார். ஆண்டவர் கரங்களை திறத்தல் என்பது, வானங்களை திறந்து மழைநீரை வழங்குவதைக் குறிக்கலாம். மழைநீர் அனைத்து உயிரினங்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்வதால் இப்படி உருவகிக்கப்பட்டிருக்கலாம். ஆண்டவரின் கரங்களில் அனைத்து விதவிதமான உணவுகளும் அடங்கியிருக்கின்றன என உருவகங்கள் மூலமாகக் காட்டுகிறாh.

வ.17 (צ, ץ, ட்ச- ட்சாதே ): உலக அரசர்கள் தங்களுக்கென்று நீதியை வைத்திருக்கிறார்கள். நாடுகள், கலாச்சாரங்கள், தேவைகள் என்பவற்றிருக்கு ஏற்ப நீதி மாற்றமடைகிறது அல்லது திரிபடைகிறது. ஆனால் கடவுளை பொறுத்தமட்டில் அவரது நீதிக்கு மாற்றம் கிடையாது அவர் செய்யும் அனைத்திலும் நீதியுள்ளவராகவே இருக்கிறார். இந்த அனைத்து செயல்களில் ஆண்டவரின் தண்டனையும் உள்ளடங்கும். ஆண்டவர் தண்டிக்கும்போதும் நீதியுள்ளவராகவே இருக்கிறார்.

வ.18 (ק க- கோப்): ஆண்டவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வி விவிலியத்தில் மிக முக்கியமானது. பல இடங்களில் ஆண்டவர் வானத்தில் இருக்கிறார் என விவிலியம் காட்டினாலும், ஆண்டவர் தன்னுடைய விசுவாசிகளுக்கு மிக அருகில் இருக்கிறார் என்பதை இந்த வரி ஆழமாகக் காட்டுகிறது. அதுவும் அந்த விசுவாசிகள் கடவுளை உண்மையில் அழைக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பையும் தருகிறது.

வ.19 (ר ர- ரெஷ்): ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள் மெச்சப்படுகிறார்கள். காட்டுச் சுதந்திரத்தையும், பொறுப்பில்லாத தனிமனித சுதந்திரத்தையும் பாராட்டுகின்ற இந்த உலகிற்கு கடவுள் அச்சம் ஒரு உரிமை மீறலாகவே காணப்படும். விவிலிய ஆசிரியர்கள் காட்டுகின்ற கடவுள் அச்சம் என்பது, மரியாதை மற்றும் அன்பு கலந்த விசுவாச அச்சத்தைக் குறிக்கும். இங்கே மனிதர்கள் பயத்தால் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கிறார்கள் இல்லை, மாறாக சட்டங்களில் உள்ள தேவைகள் மற்றும் கடவுளில் உள்ள அன்பின் பொருட்டு அதனை செய்கிறார்கள். இதனைத்தான் ஆசிரியர் பாராட்டுகிறார். இவர்களின் தேவையை கடவுள் நிறைவேற்றுகிறார் என்கிறார்.

வ.20 (שׁ ஷ- ஷின்) இந்த வரி கடவுளை பாதுகாக்கிறவராகக் காட்டுகிறது (שׁוֹמֵר ஷோமெர்). ஆண்டவர் தம்மிடம் பற்றுக்கொண்டவர்களை பாதுகாக்கின்றவேளை பொல்லார்களை அழிக்கிறார். பாதுகாக்கிறவர் அழிக்கிற வேலையையும் செய்கிறவர் என்ற சிந்தனை பழைய ஏற்பாட்டில் மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. இந்த சிந்தனை புதிய ஏற்பாட்டில் மெதுவாக மாற்றம் பெறுகிறது.

வ.21 (ת த- தௌ): இந்த இறுதி வரியில் தன்னுடைய வாயையும், உடல் கொண்ட அனைத்து உயிரினங்களையும் ஒன்றாக்கி, இவை ஆண்டவரின் திருப் பெயரின் புகழை அறிவிப்பதாக என்று ஒரு விருப்பு வாக்கியத்தை அமைக்கிறார். உடல் கொண்ட அனைத்தும் என்பது அனைத்து உயிர்களையும் குறிக்கும்.



இரண்டாம் வாசகம்
உரோமையர் 8,9-13

9ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. 10பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். 11மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார். 12ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. 13நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.

உரோமையர் எட்டாம் அதிகாரம் அதன் தூய ஆவி பற்றிய படிப்பினைக்கு பிரசித்தி பெற்றது. தூய ஆவி பற்றிய உரோமையர் திருமுகத்தின் படிப்பினைகள், ஆரம்ப கால திருச்சபையில் பல முக்கியமான இறையியல் கோட்பாடுகள் வளர்ந்திருந்ததைக் காட்டுகின்றன. உரோமைய திருச்சபையில் காணப்பட்ட பலதரப்பட்ட மனப்போக்குகள் மற்றும் கிறிஸ்தவத்திற்கு முரணான வாழ்க்கை முறைகள் அதனால் எழுந்த பல கேள்விகள், இப்படியாக பல படிப்பினைகளுக்கு உயிரூட்டம் கொடுத்திருக்கின்றன.

வவ.1-4: இயேசுவோடு இணைந்திருப்பவர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் இந்த வரிகளில் காட்டப்படுகின்றன. கடவுள் ஊனியல்பின் பாவங்களை தன் ஒரே மகனால் இல்லாமல் செய்திருக்கிறார். இதனால் மனிதர்கள் ஆவிக்குரிய வாழ்வு வாழ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

வவ.5-8: ஊனியல்பிற்கேற்ப வாழ்வோரின் வாழ்வும், ஆவிக்குரிய வாழ்வு வாழ்வோரின் வாழ்வும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது. ஊனியல்பு சாவைக் கெண்டுவர, ஆவிக்குரிய வாழ்வு, வாழ்வையும் அமைதியையும் கொண்டுவருகிறது. ஊனியல்பு கடவுளுக்கு எதிராக இருப்பதனால், அதனால் அழிவே வருகிறது. இதனால் ஊனியல்பின் படி வாழ்கிறவர்கள் இயற்கையாகவே கடவுளுக்கு எதிராக இருக்கிறார்கள்.

வ.9: கடவுளின் ஆவி என்பது இங்கே திரித்துவத்தின் மூன்றாவது ஆளைக் குறிக்கிறதா அல்லது கடவுளைக் குறிக்கிறதா என்பதில் மயக்கம் உள்ளது போல தோன்றுகிறது (πνεῦμα θεοῦ புனூமா தீஊ- கடவுளின் ஆவி). ஊனியல்பு என்று பவுல் இந்த அதிகாரத்தில் குறிப்பிடுவது சாதாரண மனித இச்சைகள் மற்றும் ஆசைகள் அடங்கிய வாழ்வை. சில வேளைகளில் இது கிறிஸ்தவ வாழ்விற்கு அப்படியே எதிராக அமைவதால் இதனை பாவ வாழ்வு என குறிப்பிடுகிறார் (σάρξ சார்க்ஸ்- ஊனுடல்). இந்த சொல் எல்லா இடங்களிலும் பாவத்தைக் குறிக்காது. இது சாதாரண மனித உடலைக் குறிக்கும் ஒரு கிரேக்கச் சொல். இந்த ஊனுடலுக்கு எதிராகவே ஆவிக்குரிய வாழ்வு முன்வைக்கப்படுகிறது. இந்த வரியில் கடவுளின் ஆவி என்று தொடங்கிய பவுல் இறுதியில் கிறிஸ்துவின் ஆவி என்று முடிக்கிறார் (πνεῦμα Χριστοῦ புனூமா கிறிஸ்தூ- கிறிஸ்துவின் ஆவி). இப்படியாக கடவுளின் ஆவி, கிறிஸ்துவின் ஆவி, மற்றும் தூய ஆவி போன்ற சொற்பதங்கள் மாறி மாறி பாவிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

வ.10: பாவத்தின் விளைவு மரணம் என்பது உரோமையர் திருமுகத்தின் முக்கியமான செய்தி. இந்த மரணம் அனைவருக்கும் உண்டு ஆனால் கிறிஸ்துவின் ஆவி, இந்த இயற்கையான நிலையை மாற்றியமைக்கிறது. இதனை பவுல் இறப்பிலும் வாழ்வு என்கிறார். இந்த இறப்பிலும் வாழ்வு கடவுளுக்கு ஏற்புடையவராக ஒருவரை மாற்றுகிறது என்கிறார். கடவுளுக்கு ஏற்புடைமையாகுதல் என்பதும் உரோமையர் திருமுகத்தில் ஒரு முக்கியமான இறையியல் (δικαιοσύνη திகையோசுனே- ஏற்புடையவாழ்வு). வ.11: இயேசுவை உயிர்த்தெழ செய்தவரின் ஆவி என்பது இங்கே கடவுளின் ஆவியைக் குறிக்கிறது. இதே ஆவிதான் கிறிஸ்துவில் வாழ்கிறவர்களின் ஆவியையும் உயிர்தெழ செய்கிறது என்கிறார். இந்த வரியில் பாவிக்கப்பட்டுள்ள ஏழுவாய்ப் பொருள் கடவுளின் ஆவியா அல்லது கிறிஸ்துவின் ஆவியா என்பதில் ஒரு சிறு மயக்கம் உள்ளது. அநேகமாக இது கடவுளின் ஆவியைக் குறிப்பதாகவே விளங்கப்படுகிறது. தமிழ் விவிலியத்தின் மொழி பெயர்ப்பு இந்த வரியில் தெளிவாக உள்ளது.

வ.12: ஊனியல்பிற்கு கடமைப்படுதல் என்று இன்னொரு வாதத்தை முன்வைக்கிறார் பவுல். மனிதர்கள் ஊனியல்பிற்கு உட்பட்டவர்கள்தானே இதனால் பாவம் செய்தல், சாதரணம் என்ற வாதத்தை இங்கனம் பவுல் சாடுகிறார். கிறிஸ்துவிற்குள் வாழ்கிறவர்கள் ஊனியல்பின் படி வாழவேண்டிய தேவையற்றவர்கள் என்பதுதான் அவர் வாதம். உட்படுதலை, கடன்படுதல் என்ற வணிகச் சொல்லைக் கொண்டு குறிப்பிடுகிறார் (ὀφειλέτης ஒபெய்லெடேஸ்- கடனாளி).

வ.13: இந்த வரி சற்று காட்டமாக வருகிறது. ஊனியல்பின் படி வாழ்கிறவர்கள் சாகத்தான் போகிறார்கள் என்கிறார். ஆனால் ஆவியின் பண்புகளில் வாழ்கிறவர்கள் அல்லது ஆவியின் துணையால் வாழ்கிறவர்கள், சாகார்கள் என்கிறார்.


நற்செய்தி வாசகம்
மத்தேயு 11,25-30

தந்தையும் மகனும் (லூக் 10:21 - 22) 25அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். 26ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். 27என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்' என்று கூறினார்.இயேசு தரும் இளைப்பாறுதல் 28மேலும் அவர், 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது' என்றார்

மத்தேயு நற்செய்தியை இறையரசு நற்செய்தி என்றும் ஒரு சிலர் அழைப்பதுண்டு. இறையரசை, மத்தேயு யூத அடையாளத்தின் படி 'விண்ணகங்களின் அரசு' என்றுதான் அழைப்பார் (ἡ βασιλεία τῶν οὐρανῶν.. ஹே பசிலெய்யா டோன் ஹுரானோன்- விண்ணகங்களின் அரசு). இந்த அதிகாரத்தில் மத்தேயு, விண்ணரசின் தன்மைகளை விளக்குகிறார். அத்தோடு திருமுழுக்கு யோவானுக்கும் விண்ணரசிற்குமான உறவு, அத்தோடு திருந்தாத நகர்களுக்கு சாபம் என்ற பல முக்கியமான விடயங்கள் காட்டப்பட்டுள்ளன. தந்தை மகனை பற்றிய உறவை யோவான் நற்செய்தி மிக ஆழமான முறையில் காட்டுகிறது. மத்தேயுவும் இப்படியான ஒரு உதாரணத்தை இந்த வரிகளில் முன்வைக்கிறார். ஆனால் யோவானின் பார்வையும் மத்தேயுவின் பார்வையும் ஒன்றல்ல. இரண்டும் இரண்டு விதமான கிரேக்க-யூத சிந்தனைகளை முன்வைக்கின்றன. மத்தேயு இயேசுவை தாவீதின் உண்மை வாரிசாக காட்டுகின்ற படியால், இயேசுவிற்கும் கடவுளுக்குமான உறவு, மெசியாவிற்கும் கடவுளுக்கும் இடையிலான உறவாக பார்க்கப்பட வேண்டும்.

வ.25: இயேசு தந்தையாகிய கடவுளை விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே என்றழைப்பது ஒரு சாதாரண யூத செபம். உம்மைப் போற்றுகிறேன் என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, உமக்கு நன்றி செலுத்துகிறேன் (ἐξομολογέω எட்சொமொலொகெயோ) என்றுதான் கிரேக்க மூல மொழியில் உள்ளது. இதற்கான காரணத்தை வித்தியாசமாக இயேசு முன்வைக்கிறார். கடவுள் குழந்தைகளுக்கு மிக முக்கியமானவற்றை வெளிப்படுத்தி, ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் மறைத்துள்ளதாகச் சொல்கிறார்.

ஞானிகள் மற்றும் அறிஞர்கள் போன்றோரைக் குறிக்க σοφῶν καὶ συνετῶν சொபோன் காய் சுநெடோன், என்ற வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன. இவை கிரேக்க ஞானிகளையும் மெய்யியல் வாதிகளையும் குறிக்கும் சொற்கள். சூழலியலில் இது யூதேய அறிஞர்களைக் குறிக்கலாம். குழந்தைகள் என்பதற்கு நேபியோஸ் (νηπίοις) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது படிக்காத, தொழிற்பயிற்சியற்ற, மற்றும் பக்குவப்படாத நிலையில் உள்ளோர்களைக் குறிக்கிறது. சூழலியலில் இது சாதராண கிறிஸ்தவர்களைக் குறிக்கலாம். எதை மறைத்தார் கடவுள் என்பது, இந்த வரியில் சொல்லப்படவில்லை, ஆனால் முழு அதிகாரத்தையும் வாசிக்கின்றபோது, இங்கே எழுவாய்ப் பொருள், 'இயேசுதான் மெசியா' என்பது புலப்படுகிறது. இதனைத்தான் மத்தேயு மறைபொருள் என்கிறார். ஞானிகளுடையய ஞானமும், அறிவாளிகளுடைய அறிவும் இதந்த மறைபொருளுக்கு எதிராக உள்ளன என்பது மத்தேயுவின் கருத்து

வ.26: இந்த மறைப்பும், வெளிப்பாடும் தந்தையுடைய திருவுளம் என வலியுறுத்துகிறார் இயேசு. அதவாவது இந்த செயற்பாடுகள் தற்செயலானவை அல்ல மாறாக அவை ஆண்டவருடைய திட்டத்திலே நடைபெறுகின்றன, இதனால் யாரும் இதனைப் பற்றி பெருமை பாராட்ட முடியாது என்கிறார்.

வ.27: தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு விளங்கப்படுத்தப்படுகிறது. அரசருக்கும் முடிக்குரிய இளவரசருக்கும் இடையிலான அமைதியான மற்றும் போட்டியற்ற உறவு விளங்கப்படுத்தப்படுவது போல இந்த வரி அமைந்துள்ளது. வழமையாக மனித அரசர்கள் தாங்களுக்கு முதிர் வயது வந்தாலும் அரச பதவியை வாரிசுகளுக்கு அவ்வளவு இலகுவாக கையளிக்க மாட்டார்கள். ஆனால் இந்த உறவைப் போல் அல்லாமல், தந்தையான கடவுள் அனைத்தையும் மகனிடம் ஒப்படைத்துள்ளார் என இயேசு காட்டுகிறார். அனைத்தையும் என்பது எவற்றை என்று குறிப்பாக சொல்லாவிட்டாலும் அது இறையாட்சியின் அதிகாரம் என்பதைக் குறிக்கிறது எனலாம் (Πάντα பந்டா- அனைத்தும்).

அதே வேளையில் இந்த தந்தையை, மகன் மட்டுமே அறிவார் என்கிறார். இதிலிருந்து சாதாரண மக்களுக்கும், மகனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பது புலப்படுகிறது. மகன் முழு உரிமையோடு இருக்கிறார் என்பதையும் இது காட்டுகிறது. மகன் உரிமையோடு மட்டுமல்ல முழு சுதந்திரத்தோடும் இருக்கிறார். அவர் யாருக்கெல்லாம் இந்த உறவை வெளிப்படுத்த முயல்கிறாரோ அவர்களுக்கும் அது வெளிப்படுத்தப்படுகிறது. இங்கே கிறிஸ்தவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள். இவ்வாறு மகனுடைய நன்மைத்தனங்களை அவரை நம்புகிறவர்களும் பெறுகிறார்கள்.

வ.28: இயேசுவுடைய காலத்திலும் முக்கியமாக மத்தேயுவுடைய காலத்திலும் மக்கள் பலவிதமான பெரும் சுமைகளோடு வாழ்ந்திருந்தார்கள். இதனை கிரேக்க விவிலியம் பாரத்தோடும் பெரும் சுமையோடும் இருப்பவர்கள் என்று அழைக்கிறது. பெருளாதராம், சமயம், அரசியல் என்ற பல விதமான துன்பங்களை இவர்கள் சந்தித்தார்கள்.

மத்தேயு நற்செய்தி எழுதிய அந்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு, இந்த வரிகள் மிகவும் இதமாக இருந்திருக்கும். இவர்கள் உரோமையர்களாலும், யூதர்களாலும் பல துன்பங்களையும் சித்திரவதைகளையும் சந்தித்தார்கள். இதனை இந்த வார்த்தைகள் குறிக்கலாம். இவர்களை இயேசு அழைத்து இளைப்பாறுதல் தருவதாக சொல்வது, துன்பங்களில் அவர் இவர்களோடு இருக்கிறார் என்ற உணர்வைத் தருகிறது.

வ.29: இந்த வரி மத்தேயு நற்செய்தியிலும் முழு புதிய ஏற்பாட்டிலும் மிக இதமான வரி. இதனை வைத்துத்தான் பல ஆசீர்வாதங்கள் வழங்கப்படுகின்றன. அத்தோடு பலவிதமான இடுக்கண்கள், மற்றும் துயரமான வேளைகளில் இந்த வரி ஆண்டவருடைய உடனிருப்பை பாதிக்கப்படுகிறவர்களுக்கு காட்டுகின்றது. ஆண்டவர் தன்னை கனிவும் மனத்தாழ்மையும் உடையவர் என்கிறார் (πραΰς பராஉஸ்- கனிவு: ταπεινὸς τῇ καρδίᾳ டபெய்நொஸ் டே கார்தியா- இதயத்தில் எளிமை). இது ஒரு முதல் ஏற்பாட்டுச் சிந்தனை. இதனை யூத மறையை நன்கு அறிந்த மத்தேயு நிச்சயமாக அறிந்திருப்பார். அதாவது துன்பங்களில் தூர இருக்கிறவர் அல்ல இஸ்ராயேலின் கடவுள், மாறாக அவர் உடன் இருக்கிறார் என்பதை இது விளக்குகிறது.

ஆண்டவர் தன் நுகத்தை ஏற்றக்கொள்ளச் சொல்கிறார். நுகம் என்பது மாடுகள் மற்றும் பொதி சுமக்கும் விலங்குகள், சுமையின் பாரத்தை இலகுவாக சுமக்க ஏற்படுத்தப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட ஒரு சாதனம் (ζυγός ட்சுகொஸ்- நுகம்). யூதர்கள் மோசேயின் சட்டத்தை நுகம் என்றே கருதினார்கள். இதன் மூலம் வாழ்வில் வெற்றியடைய முயன்றார்கள் எனலாம். யூத இராபிக்கள் இந்த சொல்லை தங்கள் படிப்பித்தலுக்கு பயன்படுத்தினார்கள். இயேசு இதனை மாற்றி தன்னுடைய படிப்பினைகள் மற்றும் சட்டங்களை காட்டுகிறார். அவை புதிய நுகமாக மாறுகிறது. இந்த புதிய நுகம் இதயத்திற்கு இளைப்பாறுதல் தரவல்லது என்று சொல்லப்படுகிறது. இது மிகவும் அழகான வரி.

வ.30: இந்த வரியும் மிகவும் முக்கியமானதும் மற்றும் இறையியலில் ஆழமானதுமான வரி. இயேசு கிறிஸ்தவ சீடத்துவம் இலகுவான வாழ்க்கை முறை என்று சொல்லவில்லை. அத்தோடு அது சட்டங்கள் அற்ற ஊதாரி வழக்கம் என்றும் சொல்லவில்லை. மாறாக இங்கே ஒரு வித்தியாசம் இயேசுவால் முன்வைக்கப்படுகிறது. அதாவது இங்கே நுகம் இருக்கும் ஆனால் அது அழுத்தாது, சுமை இருக்கும் ஆனால் அது இனிமையாக இருக்கும். ஆக கிறிஸ்தவ சீடத்துவம், அல்லது இயேசுவில் வைக்கும் நம்பிக்கை என்பது இதமான நுகம் மற்றும் இனிமையான பாரம் என்பது மத்தேயுவால் அழகாகக் காட்டப்படுகிறது.

கிறிஸ்தவம் என்பது பொறுப்பற்ற வாழ்க்கைமுறையல்ல,
கிறிஸ்தவம் ஒரு நாகரீகம், அத ஒரு கலாச்சாரம்.
இது சுமையற்ற ஒரு பயணமும் அல்ல,
இங்கே சட்டங்கள் இருக்கும், துன்பங்களும் இருக்கும்,
துயரங்களும் இருக்கும், காட்டிக்கொடுப்புக்களும் இருக்கும்.
ஆனால்,
இங்கே சுமை சுமக்கக்கூடிய விதத்தில் எளிமையாய் இருக்கும்,
பாரம், அழுத்தாமல் இனிமையாய் இருக்கும்.
அன்பு ஆண்டவரே!
இந்த சுமையையும், பாரத்தையும் தாங்க
வலிமை தாரும், ஆமென்.