இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக் காலம் பதின்மூன்றாம் ஞாயிறு (அ)

முதல் வாசகம்: 2அரசர்கள் 4,8-11.13-16
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 89
இரண்டாம் வாசகம்: உரோமையர் 6,3-4.8-11
நற்செய்தி: மத்தேயு 10,37-42


முதல் வாசகம்
2அரசர்கள் 4,8-11.13-16
எலிசாவும் சூனேமியப் பெண்ணும்

8ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார். 9அவர் தம் கணவனை நோக்கி, 'நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன். 10ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும்' என்றார். 11ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வுஎடுத்துக் கொண்டிருந்தார். 12பின்பு அவர் தம் பணியாளன் கேகசியை நோக்கி, 'அந்தச் சூனேம் பெண்ணைக் கூப்பிடு' என்றார். 13அவனும் அவரை அழைத்துவர, அவர் அவர் முன்னே வந்து நின்றார். அப்பொழுது அவர் கேகசியை நோக்கி, 'நீ அவளிடம் 'அம்மா, நீங்கள் எங்களுக்காக இவ்வளவு சிரமம் எடுத்திருக்கிறீர்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? அரசரிடமோ படைத்தலைவரிடமோ பரிந்து பேசும்படி ஏதாவது உண்டா?' என்று கேள்' என்றார். அதற்கு அவர், 'என்னுடைய இனத்தாரிடையே நான் நலமாய்த்தான் வாழ்ந்து வருகிறேன்' என்று பதிலளித்தார். 14மீண்டும் எலிசா, 'வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்?' என்று கேட்டார். அதற்குக் கேகசி, 'அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது' என்றான். 15எலிசா, 'அவளை இங்கு வரச் சொல்' என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார். 16எலிசா அவரை நோக்கி, 'அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' என்றார். அதற்கு அவர், 'என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம்' என்றார். 17எலிசா, அப்பெண்ணுக்கு முன்னறிவித்தவாறே அவர் கருவுற்று அடுத்த ஆண்டு அதே பருவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

எலிசா கடவுளின் மனிதர் என அறியப்படுகிறார். வட அரசில் எலியாவிற்கு பிறகு எலிசா மிக முக்கியம் வாய்ந்த இறைவாக்கினராக பார்க்கப்படுகிறார். இவருடைய பெயருக்கு எபிரேய விவிலியம் 'என் கடவுள் மீட்கிறார்' என்ற அர்த்தத்தைத் தருகிறது (אֱלִישָׁע 'எலிஷா'). இவர் தண்ணீர் சார்ந்த பல புதுமைகளை செய்த படியால், இவரை நீர்ப் புதுமை இறைவாக்கினர் எனவும் அழைப்பதுண்டு. இவருடைய குருவான இறைவாக்கினர் எலியாவிற்கும் இவருக்கும் இடையிலான உறவு, மோசேக்கும் யோசுவாவிற்கும் இடையிலிருந்த உறவுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. எலிசா மற்றும் எலியாவினுடைய கதைகள் மற்றும் வரலாறுகள் விவிலியத்திற்கு வெளியே தனியாக இருந்ததாகவும், பின்னர் அவை விவிலியத்தினுள் உள்வாங்கப்பட்டதாகவும் ஒரு பலமான வாதம் உள்ளது. பெத்தேல், எரிக்கோ, கார்மேல், கில்கால் போன்ற இடங்களில் மறைமுகமாக இறைவர்ககினர்கள் குழுக்கள் இயங்கியிருக்கின்றன என்பதற்கு எலிசாவும் அவரைச் சுற்றியிருந்த சீடர்களும் நல்ல உதாரணங்கள்.

எலிசாவின் முக்கியமான புதுமைகளாக, அசுத்தமான நீரூற்றைக் குணப்படுத்தல் (காண்க 2அரசர் 2,19-22), எண்ணெய்யையும் அப்பத்தையும் பலுகச் செய்தல் (காண்க 4,1-7), கூழிலிருந்த நஞ்சை இல்லாமல் செய்தல் (4,38-41), இருபது அப்பத்தை நூறுபேருக்கு பலுகச் செய்து கொடுத்தல் (4,42-44), தொலைந்த கோடாரியை கண்டெடுத்தல் (6,1-7) போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிகமானவை வறுமையில் வாடிய இவருடைய சீட-இறைவாக்கினர்களுக்கு பொருளாதார உதவியை தருவதாக அமைந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் வட நாட்டினுடைய அரசியல் தீர்மானங்களிலும் எலிசா ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். அரசன் பலவீனமடைந்து மக்களை காக்க தவறி எலிசாவின் உதவியை கேட்கிறபோது எலிசா அவருக்கு உதவி செய்கிறார் (காண்க 2அரசர் 7). இப்படியாக எலிசா அரசனைவிட பலமானவராக காட்டப்படுகிறார். எலிசாவின் புகழ் சொந்த நாட்டினர்க்கு மட்டுமல்ல அயல் நாட்டினருக்கு தெரிந்திருந்தது இதற்கு நல்ல உதாரணம் நாமான் குணமடைதல் (காண்க 2அரசர் 5,1-27). இதே எலிசா சில தனிப்பட்ட ஏழை மக்களின் சாதராண வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி கடவுள் எவ்வளவு நல்லவர் அத்தோடு கடவுளின் பராமரிப்பு எவ்வளவு அன்பானது என்பதையும் காட்டுகிறார். இந்த பண்பினை இன்றைய முதல் வாசகம் காட்டுகிறது:

வ.8: இந்த வரிக்கு முன்னர் எலிசா ஏழைக் கைம்பெண் ஒருவருக்கு வழிகாட்டுகிறார் (காண்க வவ.1-7). நிரம்பி வழியும் எண்ணெய் கடவுளின் ஆசீரின் அடையாளமாக இருக்கலாம். சூனாம் என்கின்ற நகர் யோசுவா 19,18ல் முதன் முதலாக அறியப்படுகிறது. எஸ்ரில் மலையடிவாரத்தில் இந்த நகர் அமைந்திருந்தது. தற்போதைய சொலெம் கிராமம் இந்த பழைய நகர் என நம்பப்படுகிறது. கி.மு 1500 களில் இந்த நகரை எகிப்தியர் கைப்பற்றியிருந்ததாக விவிலியம் அல்லாத சான்றுகள் காட்டுகின்றன. வேறு நாட்டவர்களுடன் இந்த நகருக்கு பண்டைய காலத்திலிருந்தே தொடர்புகள் இருந்திருக்கின்றன. இந்த வரியில் சூனாமிய பெண்ணுக்கும்

இறைவாக்கினர் எலிசாவிற்கும் இடையில் இருந்த நட்பு காட்டப்படுகிறது. பணக்காரப் பெண்கள் இறைமனிதர்களுக்கு உணவளிப்பது அக்காலத்திலும் வழக்கிலிருந்தது என்பது தெரிகிறது. இவர் ஏன் இறைவாக்கினர்க்கு உணவளித்தார் என்பது சொல்லப்படவில்லை. ஒருவேளை இவர் எலிசாவைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்திருக்கலாம். அல்லது இவருக்கு நன்மை செய்வதன் வாயிலாக கடவுளின் ஆசீரை பெற முனைந்திருக்கலாம். இவருடைய பெயர் தரப்படவில்லை இதிலிருந்து இந்த கதையின் ஒரே ஒரு கதாநாயகன் எலிசா என்பது மட்டும் தெரிகிறது. இந்த பெண் எலிசாவிற்கு அன்று உணவளித்தது மட்டுமல்லாமல், எப்போதும் உணவளிக்க தயாராக இருந்திருக்கிறார். எபிரேய விவிலியம் உணவை பாண் (வெதுப்பி) என்று பெயரிடுகிறது (לֶאֱכָל־לָחֶם லெ'எகால்-லாஹெம் உண்ண உணவு (பாண்)).

வ.9: இந்தப் பெண் தன் கணவருக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் எலிசா யார் என்று அறிக்கையிடுகிறார். அவர் எலிசாவை 'புனிதர்' என அறிக்கையிடுகிறார். இதனை எபிரேய விவிலியம் 'அவர் கடவுளின் தூய மனிதர் ஆவார்' எனக் காட்டுகிறது (כִּי אִישׁ אֱלֹהִים קָדוֹשׁ הוּא கி 'இஷ் 'எலோஹிம் காதோஹ் ஹு'). 'நான் கருதுகிறேன்' என்பது எபிரேய விவிலியத்தில் 'எனக்கு தெரியும்' (יָדַעְתִּי யதா'தி) என்றுள்ளது.

வ.10: அவருக்கு மேலதிகமாக செய்யவேண்டியவற்றை தன் கணவருக்கு எடுத்துரைக்கிறார். இவர் ஒரு பணக்காரப் பெண், இருந்தும் ஓர் இறைவாக்கினருக்கு உதவி செய்ய தன் கணவரின் அனுமதியை அல்லது புரிதலை பெற விழைகிறது தெரிகிறது. இந்த வரியில் உள்ள விளக்கங்கள் அந்த காலத்தில் பணக்காரர்களின் வீட்டில் பாவனையில் இருந்த தளபாடங்களை நமக்கு விளக்குகின்றன. அவை: மேல்தள சிற்றறைகள் (עֲלִיַּת־קִיר֙ 'அலியாத்-கிர்), கட்டில்-படுக்கை (מִטָּה மித்தாஹ்), மேசை (שֻׁלְחָ֖ן ஷுல்ஹான்), கதிரை-இருக்கை (כִסֵּא கிஸ்ஸா'), மற்றும் விளக்கு (מְנוֹרָה மெனோறாஹ்).

இதற்கான காரணத்தையும் இந்த பெண்மணி சொல்கிறார், அதாவது இறைவாக்கினர் வரும் பொழுதெல்லாம் இந்த அறையில் ஓய்வெடுக்க அது உதவியாக அமையும். இதிலிருந்து இறைவாக்கினர் இந்த வழியாக அடிக்கடி வந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது.

வ.11: அவர் ஊகிக்ததைப் போலவே எலிசா அந்த அறையில் ஓய்வெடுக்கிறார். பல சவால்கள் மற்றும் துன்பங்கள் நிறைந்த இறைவாக்கினர் வாழ்வில் இந்த இடம் அவருக்;;கு ஓய்வெடுக்கும் இடமாக அமைகிறது.

வ.12: கதையில் இன்னொரு நபர் இந்த வரியில் அறிமுகப்படுத்தப்படுகிறார், அவர் கேகசி. இவர் இறைவாக்கினரின் பணியாளர். இவரை வேறு இடத்தில் பேராசை பிடித்தவராக ஆசிரியர் காட்டுவார் (காண்க 5,20-27). கேகசியை அழைத்த இறைவாக்கினர், வீட்டு பெண்மணியை கூப்பிடச் சொல்கிறார். எலிசா தான் அவரைக் கூப்பிடாமல், தன் பணியாளர் வாயிலாக அவரை கூப்பிடுவது, எலிசா அவருடன் நட்பு வைத்திருந்தாலும் அதில் தனித்துவம் இருந்தது என்பது புலப்படுகிறது.

வ.13: இந்த வரி, எலிசா மற்றவர்களின் தேவைகள் மேல் எந்தளவிற்கு கரிசனையுள்ளவராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. அந்த பெண்மணிக்கு என்ன வேண்டும் என்பதை தன் பணியாளரின் மூலமாகத்தான் கேட்கிறார். ஆக அவர் எலிசாவின் அறைக்குள் வரவில்லை மாறாக வாயிலில் நின்றிருப்பார் என எடுக்கலாம்.

எலிசா இந்த பெண் எடுக்கும் கரிசனைகளை மெச்சுகிறார் (הִנֵּ֣ה חָרַ֣דְתְּ ׀ אֵלֵינוּ֮ ஹின்னாஹ் ஹறாத் 'எலெனூ - எங்களுக்காக எவ்வளவு சிரமம்). அதேவேளை எதாவது கைமாறு வேண்டுமா எனவும் வினவுகிறார். இந்த வினவுதலில் இருந்து இந்த பெண் அனைத்து உதவிகளையும் எலிசாவிற்கு இனாமாகத்தான் செய்கிறார் என்பது புலப்படுகிறது. (திருச்சபை பணியாளர்களை வைத்து தங்களின் வியாபாரங்களை செய்யவிழையும் பண்காரர்களுக்கும், நல்லவர்களின் உதவிகளை மதியாது அல்லது அதன் பெறுமதிகளை உணராது இருக்கும் அருட்பணியாளர்களுக்கும் இவ்விருவரும் நல்ல உதாரணங்கள் என நினைக்கிறேன்).

எலிசாவின் கேள்விகள், அவர் அரசவையில் பலமான மனிதராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. அரசர் மற்றும் படைத்தலைவர் (מֶּלֶךְ மெலெக்- அரசன், שַׂר הַצָּבָא சார் ஹட்சாவா'- படைகளின் அதிகாரி), நாட்டின் முக்கியமாக அரச தலைவர்கள், உதவிகள் மற்றும் பாதுகாப்பு அளிப்பவர்கள், அதேவேளை பண்காரர்களுக்கு இவர்களால் பல துன்பங்களும் ஏற்பட்டதை விவிலியத்தில் வாசிக்கின்றோம். இரண்டையும் மனதில் வைத்து எலிசா இந்த பெண்ணை வினவியிருக்கலாம்.

இந்த பெண்ணின் பதில் வியப்பாய் இருக்கிறது. வழக்கமாக பணக்காரர்கள் திருப்தி அடையமாட்டார்கள் என்ற ஒரு வாதம் இருக்கிறது. ஆனால் இந்த பெண் உண்மையான பணக்காரி. தன் நிலைமையைப் பற்றி சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.

வ.14: இந்த பதிலால் திருப்தியடையாத இறைவாக்கினர் கேகசியிடம் அந்த பெண்ணின் பொருட்டு கேள்வி கேட்கிறார். தன்னைவிட தன் பணியாளருக்கு உலகம் தெரியும் என்பதும் எலிசாவிற்கு நன்கு தெரிந்திருந்தது. அதாவது கேகசி மற்றவர்களின் உலகத்தில் மூக்கை நுழைப்பவர் என்பது அவருக்கு நன்கு புரிந்திருந்தது. அவர் எதிர்பார்த்த மாதிரியே, கேகசியும் பதிலளிக்கிறார். இந்த பெண் குழந்தையில்லாமல் இருக்கிறார் அத்தோடு அவர் கணவரும் வயதானவர் என்பது இறைவாக்கினருக்கு அறிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு ஆபிரகாம் மற்றும் சாராவின் நிலையை நமக்கு நினைவூட்டுகிறது. குழந்தை இல்லாமல் இருப்பது அக்காலத்திலிருந்தே பெண்களுக்கான பெரும் துன்பமாக பார்க்கப்படுகிறது. இது பெரு மன உழைச்சலை தரவல்லது. இந்த துன்பத்தை இவ்வுலகில் பெண்கள் அதிகமாக சுமக்கிறார்கள்.

அத்துன்பத்திலிருந்து அவர்கள் மீண்டாலும், இந்த உலகின் அசுத்தமான வாய்கள், அவர்களை மீளவிடுவதில்லை. எபிரேய விவிலியம் 'மலடி' போன்ற அசிங்கமான வார்த்தைகளை பாவிக்காமல் 'குழந்தை இல்லாதவர்' என்று சற்று மரியாதையாக அழைக்கிறது (בֵּן אֵין־לָהּ பென் 'என்-லாஹ் - மகன் இல்லை அவளுக்கு). அத்தோடு அவருடைய கணவருக்கு வயதாகிவிட்டது என்பதன் வாயிலாக ஒருவேளை இந்தப் பெண் இளவயதினராக இருந்திருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

வ.15: எலிசா அழைக்க அந்த பெண் அவர் கதவண்டை வருகிறார். இப்பொழுதான் முதல் தடவையாக அவர் எலிசாவின் கதவிற்கு அருகில் வருகிறார். தனக்கு எதுவும் பொருள் உதவி வேண்டாம் என்று சொன்னாலும், தன் மனதிற்கு நிம்மதி இல்லை என்பதை இந்த பெண் உணர்ந்திருக்கிறார் என்பதை இந்த வசனம் காட்டுகிறது.

வ.16: இந்த பெண்ணிற்கு மகன் வாக்களிக்கப்டுகிறார். எலிசா, அடுத்த ஆண்டு இவருக்கு மகன் கிடைப்பான் என அழுத்தமாகச் சொல்கிறார். அடுத்த ஆண்டு என்பதை எபிரேய விவிலியம், 'இந்த காலம் வரும் பொழுது' (לַמּוֹעֵד הַזֶּה כָּעֵת חַיָּה லாமோ'த் ஹட்சேஹ் கா'எத் ஹய்யாஹ்), என்று வாசிக்கிறது. பெண்ணின் மரியாதையான பதில் அவருடைய இயற்கையான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. அவர் தன்னுடைய நம்பிக்கையின்மையையும் மிக மரியாதையாக வெளிக்காட்டுகிறார். எலிசாவை தன் தலைவராகவும், அவரை கடவுளின் மனிதராகவும் அறிக்கையிடுகிறார் (אַל־אֲדֹנִי֙ 'எல்- 'அதோனி - என் தலைவரே, אִישׁ הָאלֹהִים 'இஷ் ஹஎலோஹிம்- கடவுளின் மனிதரே). தன்னை ஏமாற்ற வேண்டாம் என்கிறார். தமிழ் விவிலியம் மிக மரியாதையாக இந்த வரியைக் கையாண்டிருக்கிறது, ஆனால் எபிரேயம் இதனை 'பொய் சொல்ல வேண்டாம்' என்று காட்டுகிறது (אַל־תְּכַזֵּב எல்'-தெகட்செப்). இதனை, அந்தப் பெண் இறைவாக்கினரை திட்டுகிறார் என்று எடுக்க முடியாது, மாறாக அவர் இயற்கையின் விதிகளை நன்கு அறிந்திருக்கிறார் என்றே எடுக்கவேண்டும். இயற்கையின் விதிகளை இறைவன் மாற்றலாம் என்பதை அவர் சீக்கிரத்தில் அறிவார்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 89,1-18
நாடு இடருற்றபோது பாடியது
(எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்)
(1 அர 4:31)

1ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது.
3நீர் உரைத்தது: 'நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்' (சேலா)
5ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் புகழ்கின்றன் தூயவர் குழுவினில் உமது உண்மை விளங்கும்.
6வான்வெளியில் ஆண்டவருக்கு நிகரானவர் யார்? தெய்வ மைந்தர் குழுவில் ஆண்டவருக்கு இணையானவர் யார்?
7தூயவர் குழுவில் அவர் அஞ்சுதற்குரிய இறைவன்; அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர்.
8படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார்? ஆண்டவரே! உம் உண்மை உம்மைச் சூழ்ந்துள்ளது.
9கொந்தளிக்கும் கடல்மீது நீர் ஆட்சி செலுத்துகின்றீர்; பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர்.
10இராகாபைப் பிணமென நசுக்கினீர்; உம் எதிரிகளை உம் வலிய புயத்தால் சிதறடித்தீர்.
11வானமும் உமதே! வையமும் உமதே! பூவுலகையும் அதில் நிறைந்துள அனைத்தையும் நிலைநிறுத்தியவர் நீரே!
12வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே! தாபோரும் எர்மோனும் உம் பெயரைக் களிப்புடன் புகழ்கின்றன.
13வன்மைமிக்கது உமது புயம்; வலிமைகொண்டது உமது கை; உயர்ந்து நிற்பது உம் வலக்கை;
14நீதியும் நேர்மையும் உம் அரியணைக்கு அடித்தளம்; பேரன்பும் உண்மையும் உமக்கு முன்னே செல்லும்.
15விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
16அவர்கள் நாள்முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள்.
17ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது.
18நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர்.


திருப்பாடல் 89, 52 வரிகளைக் கொண்ட நீண்டதொரு பாடல். எஸ்கியரான ஏத்தானின் அறப்பாடல் என இதன் முகவுரை விளக்கம் கொடுக்கிறது. ஏத்தான் என்பவர் (אֵיתָן 'எதான்), ஒரு பிரசித்தி பெற்ற ஞானியாக இருந்திருக்க வேண்டும். இஸ்ராயேல் இனம் தனித்துவமாக உருவாகுவதற்கு முன்பிருந்த சிறு குழுக்களில் இந்த எஸ்கியர் குழு, அவற்றில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் பாடகர் குழுமமாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய சில பாடல்களை திருப்பாடல் புத்தகம் கொண்டிருக்கிறது. இவர்களுடைய பாடலை விவிலியம் மஸ்கில் என அழைக்கிறது, இதனை தமிழ் விவிலியம் அறப்பாடல் என மொழிபெயர்க்கிறது. மஸ்கில் என்றால் ஞானம், அறிவு, நன்மை, மற்றும் மெய்யறிவு நிறை பாடல் என எடுக்கலாம் (מַשְׂכִּיל).

இந்த திருப்பாடலை தமிழ் விவிலியம், நாடு இடருற்றபோது பாடியது (வவ.1-18), கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்குறுதி (வவ.19-37), அரசரின் தோல்வி குறித்து புலம்பல் (வவ.38-45) மற்றும் விடுதலைக்காக மன்றாட்டு (வவ.46-52) என வகைப்படுத்துகிறது. திருப்பாடல் புத்தகத்தின் ஆய்வாளர்கள் இந்த பாடலை அரச மற்றும் புலம்பல் பாடல் என வகைப்படுத்துகின்றனர். இந்த பாடலில் தாவீதின் அரியணை மற்றும் அவருடைய அரச வம்சத்தின் நிலைப்பாட்டை அன்றைய இஸ்ராயேல் மக்கள் எப்படி அறிந்திருந்தார்கள் என்பதைக் காணலாம். தாவீதை அவர்கள் அரசர் என்பதைவிட தங்கள் கடவுளின் பிரதிநிதியாகவே கண்டார்கள். தாவீது எப்படி இஸ்ராயேலுக்கோ, அதேபோல் கடவுள் முழு உலகிற்கும் அரசராக இருக்கிறார், அவர் அரசில் மட்டுமே நீதியும் உண்மையும் நிலைத்திருக்கிறது என்பது இந்தப் பாடலின் உயிர் மூச்சாக இருக்கிறது.

வ.1: ஆண்டவர் உண்மையுள்ளவர் (אֱמוּנָתְךָ֣ 'எமூனாதெகா- நீர் உண்மையுள்ளவர்) என்பது ஆண்டவருக்கான மிக முக்கியமான பெயர்களில் ஒன்று. துன்பங்கள் வருகின்றபோது, கடவுள் ஆபிரகாமிற்கும், தாவீதிற்கும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார் என நம்பவும், பிற்கால தாவீதின் குடும்ப அரசர்கள் தங்கள் செயல்களில் பாவம் செய்தபோது, மக்கள் மனம்சோராது தம் பழைய கால நினைவுகளை மீட்டிப்பார்க்கவும் இந்த சொற் பிரயோகங்கள் உதவியாக இருந்திருக்கும்.

வ.2: இந்த வரியில் கடவுளின் பேரன்பும் (חֶסֶד ஹெசெத்), அவரது உண்மையும் (אֶמוּנָה 'எமூனாஹ்) விளக்கப்படுகிறது. அவருடைய பேரன்பும் உண்மையும் ஒத்த கருத்துச் சொற்கள் போல ஒப்பிடப்படுகின்றன அவை அழியாதவை என்பதே இந்த வரியின் செய்தி. மனிதர்களுடைய அன்பு காலத்திற்கு உட்பட்டது ஆனால் கடவுளுடையது நித்தியத்திற்குமானது (עוֹלם חֶסֶד 'ஓலாம் ஹெசெத்). அவருடைய உண்மை வானைப் போல என்றும் உறுதியானது என்கிறார் (שָׁמַיִם תָּכִן אֱמוּנָתְךָ֣ ஷமாயிம் தாகின் 'எமுனாதெகா). உறுதிக்கு அடையாளமாக வானம் அக்காலத்தில் நோக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்புமை அதிகமாக விவிலியத்தில் வருகிறது.

வ.3: கடவுள் தாவீதோடு செய்த உடன்படிக்கை நினைவுகூரப்படுகிறது. தாவீது தேர்ந்து கொள்ளப்பட்டவர் என்ற பெயரை பெற்றவர் என்பதும் இங்கே நினைவுகூரப்படுகிறது (בָּחִיר பஹிர் தெரிவு செய்யப்பட்டவர்). அதேவேளை தாவீது 'கடவுளின் ஊழியர்' என்று அதிகமாக விவிலியத்தில் மோசேக்கு பிறகு, அறியப்படுகிறார் (עַבְדִּי 'அவ்தி- என் ஊழியன்). இவரோடு உடன்படிக்கை செய்து கொள்ளப்ட்டதை 'உடன்படிக்கை வெட்டினேன்' என்று எபிரேயம் காட்டுகிறது (כָּרַתִּֽי בְרִית கராத்தி வெரித்). அக்காலத்தில் கற்களில் உடன்படிக்கை செய்யப்படுவதால் அதனை உடன்படிக்கை வெட்டுதல் என அழைத்தார்கள்.

வ.4: கடவுள் தாவீதுக்கு கொடுத்த வாக்குறுதியின் வரிகளின் சுருக்கம் வாசிக்கப்படுகிறது. சவுலுடைய வழிமரபைப் போலல்லாது தாவீதின் வழிமரபும் அரசாட்சியும் அழியாது என்பது கடவுள் நாத்தான் வாயிலாக தாவீதுக்கு உரைத்தது (ஒப்பிடுக 2சாமு 7,12-16: 1குறி 17,11-14: தி.பா 132,11: தி.பணி 2,30). பபிலோனிய அடிமைத்தனதில் இந்த வாக்குறுதி கேள்விக்குள்ளானது. கடவுளின் வாக்குறுதி எப்படி பொய்ப்பிக்கும் என்ற கேள்வி இவர்கள் மத்தியில் எழுந்தது. விவிலிய ஆசிரியர்கள் இந்த கேள்விக்கு வேறு விளக்கங்களைக் கொடுத்தனர். அதாவது மெசியா தாவீதின் வழிமரபிலே வருவார், அவர் வழியாக தாவீதுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதி நிலைநிறுத்தப்படும் என விளக்கம் கொடுத்தனர். இந்த வரிக்கு பின்னர் வரும் சேலா என்கின்ற வார்த்தை (סֶלָה செலாஹ்), இந்த பாடலின் போக்கு மாறுகிறது என்பதற்கு அடையாளமாக இருக்கலாம்.

வ.5: ஆண்டவரின் மாட்சி உதாரணங்களோடு விளக்கப்படுகிறது. வானங்கள் ஆண்டவரின் வியத்தகு செயல்களை புகழ்கின்றனவாம், அத்தோடு தூயவர் குழு ஆண்டவரின் உண்மையை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து ஆண்டவரின் உண்மைதான் அவருடைய வியத்தகு செயல்களில் மிக முக்கியமானது என்பது போல காட்டப்படுகிறது. உண்மையில்லாத உலகத்தில் இது இப்படித்தான் பார்க்கப்படும்.

வ.6: மிக வித்தியாசமான வரி. இஸ்ராயேல் மக்கள் ஒரு கடவுள் நம்பிக்கை உரியவர்கள் என்பது பலருடைய கருத்து, ஆனால் அவர்கள் தங்களை சுற்றியிருந்தவர்களுடைய பல கடவுள் நம்பிக்கையை அறிந்திருந்தார்கள் என்பதற்கு இந்த வரி ஒரு உதாரணம். ஆசிரியர் வானவெளி மைந்தர்கள் மற்றும் தெய்வங்களை பற்றி பாடுகிறார் (בִּבְנֵי אֵלִים பிபெனே 'எலிம்- தெய்வங்களின் மைந்தர்களில்). ஆசிரியர் இந்த வானக வாசிகளை நம்பினாரா, அத்தோடு வானக தெய்வங்களுக்கு மைந்தர்கள் இருந்ததாகவும் இவர் நம்பினாரா என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் இவர் இவற்றை நம்பினாற் போல தெரியவில்லை மாறாக இங்கனம் ஒப்பிட்டு பார்க்கிறார் என்றே தோன்றுகிறது.

வ.7: இந்த வரியில் தூயவர் குழு (סוֹד־קְדֹשִׁים சோத்-கெடோஷிம்- தூயவர்கள் குழு) என்ற ஒரு குழு அறியப்படுகிறது. பாடல் ஆசிரியரின் கருத்துப்படி இவர்கள் தெய்வங்களாக இருக்க வாய்ப்பில்லை, மாறாக இவர்கள் வானதூதர்கள் அல்லது கெரூபின்களாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அத்தோடு கடவுள் மட்டுமே அஞ்சுதற்குரியவர் எனப்படுகிறார். இந்த அஞ்சுதல் (נוֹרָא நோரா') என்பது பயம் என்பதைவிட மரியாதை கலந்த வணக்கம் என்ற பொருளையும் தரும்.

வ.8: ஆண்டவா,; படைகளின் ஆண்டவர் என்ற முக்கியமான பெயரில் விழிக்கப்படுகிறார் (אֱלֹהֵי צְבָאוֹת 'எலோஹே ட்செவா'ஓத்). இந்த பெயரிலிருந்து கடவுளைச் சுற்றி எண்ணிலடங்கா வானதூதர் படைகள் உள்ளன என்ற ஒரு நம்பிக்கை புலப்படுகிறது. இந்த நம்பிக்கை அடிக்கடி முதல் ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வெளிப்படுகிறது. கடவுள் ஆற்றல் மிக்கவராகவும், உண்மை அவரைச் சூழ்ந்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறார்.

வ.9: கடல் (יָּם யாம்), அக்கால மனிதருக்கு மிக ஆச்சரியத்தை தந்த ஒரு பௌதீக படைப்பு. இஸ்ராயேலர் கெனசரேத் ஏரியையும், சாக்கடலையும், மத்தியதரைக் கடலையும், கடலாகவே கண்டார்கள். இந்த கடல் தீய சக்திகளின் உறைவிடமாக இருக்கிறது என்பதையும் சில கோணங்களில் நம்பினார்கள். கடலின் பொங்கி எழும் (גַּל கால்) அலைகள் இந்த சக்திகளின் கோபமாகவும் வல்லமையாகவும் பார்க்கப்பட்டது. அக்காலத்தில் கடலின் உள்ளடக்கங்களை மனிதர்கள் அதிகமாக அறிந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்திருக்கும் இதனால் இவர்களுக்கு கடல் ஒரு ஆச்சரியமான படைப்பாகவே பார்க்கப்பட்டது. இன்று கூட, அதிகமான கண்டுபிடிப்புக்களின் பின்னரும், கடல் அப்படியாகத்தான் பார்க்கப்படுகிறது. பாலஸ்தீன நம்பிக்கைகள், பபிலோனிய மற்றும் மத்திய கிழக்கு நம்பிக்கைகள், அத்தோடு கிரேக்க உரோமைய நம்பிக்கைகளும் கடலை ஒரு தெய்வ சக்தியாகவே பார்த்தன. மற்ற பௌதீக வளங்களும் அப்படித்தான் நோக்கப்பட்டன.

இஸ்ராயேலர் கடலை ஆச்சரியத்தோடு பார்த்தாலும், தங்கள் கடவுள் இந்த கடல்மீதும் அதன் அலைகள் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறவர் என பார்க்கின்றனர். இதுதான் இவர்களின் தனித்துவம்.

வ.10: இந்த வரியில் ஆசிரியர் இராகாபு என்ற ஒரு உயிரினத்தை அறிமுகம் செய்கிறார் (רָהַב றாகவ்). முதல் ஏற்பாடு இதனை ஆரம்ப கால உலகில் இருந்து ஒரு குழப்பத்தின் வேதாளம் அல்லது ஒரு பறவைநாகம் என பார்க்கின்றனர். அத்தோடு கடவுள் உலகை படைத்தபோது இந்த அரக்க பாம்பை அழித்தார் எனவும் விவிலியம் காட்டுகிறது. இதே நம்பிக்கையை பபிலோனிய 'மார்டுக்' மற்றும் 'தியமாத்' புராணக் கதையில் பார்க்கலாம்.

வ.11: வானம் மற்றும் பூமி இவற்றை படைத்தவர்கள் யாவர், இவை யாருக்குரியன என்பதில் பல வாதங்கள் இருந்த வேளை இவை தம் கடவுளுக்கு உரியன என்று இஸ்ராயேலின் விசுவாசத்தை அறிக்கையிடுகிறார் ஆசிரியர். வானம் (שָׁמַיִם ஷமாயிம்), கடவுளின் அரியணையாகவும் பூமி (אָ֑רֶץ 'ஆரெட்ஸ்) கடவுளின் கால்மனையாகவும் பார்க்கப்பட்டது. முன்னையது உயர்ந்ததாகவும், பின்னையது சற்று குறைவானதாகவும் நம்பப்பட்டது. இருப்பினும் அவை கடவுளுக்கே உரியன என்பது இவர் நம்பிக்கை அதுமட்டுமல்லாமல் அதில் நிறைந்துள்ள அனைத்தும் கடவுளுக்கே உரியது என்பதும் இங்கே சேர்க்கப்படுகிறது. வ.12: வடக்கும் தெற்கும் (צָפוֹן וְ֭יָמִין ட்சாபோன் வெயாமின்), தாபோருக்கும் ஆர்மோனுக்கும் ஒத்த சொல்லாகப் ஒப்பிடப்படுகிறது. இந்த வடக்கும் தெற்கும் உலகின் வடதெற்கு நிலைகள் என்பதைவிட இவை இஸ்ராயேல் நாட்டின் வட தெற்கு நிலங்களாக பார்க்கப்படவேண்டும். இந்த இடங்களில்தான் தாபோர் மலையும் (תָּב֥וֹר தாவோர்), ஆர்மோன் மலையும் (חֶרְמ֗וֹן ஹெர்மோன்) இஸ்ராயேல் நாட்டின் வடபகுதியில்தான் அமைந்துள்ளன இருப்பினும் அவை ஒன்றுக்கொன்று வடக்காகவும் தெற்காகவும் உள்ளதாக இவர் காண்கின்றார். மலைகளை ஆட்களாகவம், அவற்றில் ஏற்படும் காற்று ஒலிகளை புகழ்பாவாகவும் கணிப்பிட்டு, அவை கடவுளை புகழ்வதாக இவர் புகழ்கிறார்.

வ.13: இன்று மனிதரின் பலமாக பார்க்கப்படுவது அவருடைய மூளை, ஆனால் அன்று மனிதரின் பலமாக பார்க்கப்பட்டது அவரின் கை. இதனையே கடவுளுக்கும் ஒப்பிட்டு கடவளுக்கு கை உள்ளது போல வர்ணிக்கிறார். கடவுளுக்கு கை இருக்குதா என்பது இவர் கேள்வியல்ல மாறாக கடவுளின் வல்லமை மனிதரின் அல்லது பிறதெய்வங்களில் வல்லமையைவிட மேலானது என்பதே இவர் பாடல். கை (זְרוֹעַ ட்செறொ'அ), புயம் (יָד யாத்), வலது கரம் (יָמִין யாமின்) இவை ஒத்த கருத்துச் சொற்கள்.

வ.14: இந்த பாடலிலே உருவகங்களைத் தாண்டி வருகின்ற மிக அழகான மற்றும் இதயத்திற்கு இனிமையான வரி இந்த வரி. மனிதரின் அரியனைகளுக்கு பணமும், பலமும் அடித்தளமாக இருக்கின்றபோது, கடவுளின் அரியணைக்கு நீதியையும் நேர்மையையும் (צֶדֶק וּמִשְׁפָּט ட்செதெக் வுமிஷ்பாத்) அடித்தளங்களாக காண்கிறார் ஆசிரியர். மனித தலைவர்களுக்கு முன்பாக அவருடைய படைபலங்களும், பொய் பிரச்சாரங்களும் செல்லுகின்றவேளை, தன் கடவுளுக்கு முன்னால் அவர் பேரன்பும், உண்மையும் (חֶסֶד וֶאֱמֶת ஹெசெத் வெ'எமெத்) செல்லவதாக காண்கிறார். இந்த திருப்பாடலில் அதிகமான வரிகளில் கடவுளின் பேரன்பு மற்றும் உண்மை மையப்பொருளாக வருவதை அவதானிக்கலாம்.

வ.15: விழாவின் பேரொலியும், ஆண்டவர் முகத்தின் ஒளியும் ஒப்பிடப்படுகின்றன. விழாவின் பேரொலி (תְרוּעָה தெரூ'ஆஹ்- மகிழ்ச்சி சத்தம்) என்பது மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் குறிக்கிறது. இது நம்பிக்கையின் அடையாளமாகப் பாhக்கப்படுகிறது. ஆண்டவரின் முகத்தின் ஒளி (אוֹר-פָּנֶה 'ஓர்-பாநெஹ் - முகத்தின் ஒளி), என்பது ஆண்டவரின் முகத்தின் புன்முறுவல் என்பதற்கான ஒரு மரபுக்கூறு. இந்த சத்தத்தை ஏழுப்புகிறவர்கள் பேறுபெற்றவர்கள் (אַשְׁרֵי அஷ்ரே- பேறுபெற்றோர்) எனவும், ஒளியில் நடப்பவர்கள் எனவும் பாராட்டப்படுகிறார்கள்.

வ.16: இவர்கள் நாள்முழுவதும் கடவுளின் பெயரில் களிகூர்கிறவர்கள் அத்தோடு, கடவுளுடைய நீதியால் மேன்மையடைகிறவர்கள் என்று இந்த மக்களை உற்சாகப்படுத்துகிறார். கடவுளின் பெயரில் மகிழ்ச்சியுறுதல் என்பது ஆண்டவருடைய சட்டங்கை மதித்து அதன் படி நடத்லைக் குறிக்கும். இதனை ஆண்டவருடைய பெயரை மேன்மைப் படுத்தல் என்ற அர்த்தத்திலும் நோக்கலாம். இந்த பணி முழுநாளுக்கும் உரிய பணி என்று அழகாகச் சொல்கிறார்.

வ.17: ஏன் இஸ்ராயேலர் இப்படிச் செய்யவேண்டும் என்பதும் பாடப்பட்டுள்ளது. கடவுள்தான் இஸ்ராயேலருடைய ஆற்றலின் மேன்மை, அவர்தான் அவர்களுடைய வலிமை என்பது இதன் விடை. ஆண்டவருடைய தயவால்தான் இஸ்ராயேலருடைய வலிமையுயர்த்தப்பட்டுள்ளது என்பதை எபிரேய விவிலியம் 'உம்முடைய தயவில் உயர்த்தப்பட்டுள்ளது, எம்முடைய கொம்புகள்' (בִרְצֹנְךָ֗ תָּר֥יּם קַרְנֵֽנוּ விறெட்சோநெகா தாறியிம் கர்நெநூ) என காட்டுகிறது. கொம்பு பலத்தைக் குறிக்கும் ஒரு அடையாளம்.

வ.18: இது தேசியவாத வரி. இங்கே கேடயமும் (מָֽגִנֵּנוּ மாக்னெனூ- நம் கேடயம்), நாட்டு அரசரும் (מַלְכֵּֽנוּ மல்கேநூ- நம் அரசர்) ஆண்டவருக்கு உரியவை என பாடப்படுகிறது. ஆண்டவருக்கு (יַהְוֶה யாஹ்வேஹ் (இந்த சொல் வாசிக்கப்படுவதில்லை, பதிலாக ஆதோனாய் என்று வாசிக்கப்படும்)), இஸ்ராயேலின் தூயவர் (קְדוֹשׁ יִשְׂרָאֵל கெதோஷ் இஸ்ரா'எல்) என்ற அழகான காரணப்பெயர் ஒன்றும் கொடுக்கப்படுகிறது.



இரண்டாம் வாசகம்
உரோமையர் 6,3-4.8-11

3திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? 4இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். 8கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. 9இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்; இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். 10அவர் இறந்தார்; பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்; அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். 11அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்; கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.

உரோமையர் திருமுகத்தின் ஆறாவது அதிகாரத்தை பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை என்ற தலைப்பிலே அறிஞர்கள் வகைப்படுத்துகின்றனர். இந்த விடுதலை கிறிஸ்துவின் உயிர்ப்பினாலும், அவர் மேல் மக்கள் கொள்கின்ற நம்பிக்கை மற்றும் உறவோடு, இந்த விடுதலை இணைந்துள்ளது. ஆறாம் அதிகாரம் பவுலுடைய சிந்தனைகளில், கிறிஸ்துவோடு வாழ்தல் என்ற தலைப்பில் மிக முக்கியமான இறையியல் சிந்தனைகளைக் கொண்டுள்ளது. ஐந்தாவது அதிகாரம், கடவுளுக்கு ஏற்புடையவராவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் ஆதாம் கிறிஸ்துவிற்கான வேற்றுமைகளை தெளிவுபடுத்தியதன் பின், இந்த அதிகாரம் பாவம், மற்றும் அதனை விடவேண்டியதன் தேவையைப் பற்றி பிரசங்கிக்கிறது.

வவ.1-2: பாவத்தால் சாவு, இயேசுவால் அருள் என்று ஏற்கனவே ஐந்தாம் அதிகாரம் நிறைவடைந்து, இந்த அதிகாரத்தில், அருள் பெறுவதற்காக ஒருவர் பாவத்தில் நிலைத்திருந்து இயேசுவை எதிர்நோக்கக்கூடாது என்கிறது. பாவம் அது மரணம், இந்த மரணத்தில் வாழ்வில்லை எனவே பாவத்தில் வாழ்வில்லை என்பது பவுலுடைய வாதம்.

வ.3: திருமுழுக்கு என்றால் என்ன, என்ற திருச்சபையின் படிப்பினையை அப்படியே இரத்தினச் சுருக்கம் செய்கிறார் இந்த புறவின திருத்தூதர் பவுல். திருமுழுக்கு என்பது பாவத்திற்கான மரணம், அதாவது பாவத்தை வெற்றி கொள்வதற்கான மரணம். திருமுழுக்கை ஒரு விதமான மரணம் என்கிறார் பவுல். இது இயேசுவின் மரணம், அழிப்பதற்கல்ல மாறாக வாழ்வு தரும் மரணம். திருமுழுக்கு ஒரு இணைப்பு, அந்த இணைப்பு இயேசுவின் மரணத்திலும் அவருடன் மக்களை இணைக்கிறது (εἰς τὸν θάνατον αὐτοῦ ἐβαπτίσθημεν எய்ஸ் டொன் தனாடொன் அவுடூ எபாப்டஸ்தேமென் - அவருடைய சாவினுள் திருமுழுக்குபெற்றுள்ளோம்). இந்த விசுவாச கோட்பாடு உரோமையருக்கு தெரியாதா என்பதே பவுலுடைய கேள்வி. அதாவது இவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டும் என்பது அவர் நியாயம். (இக்கால கிறிஸ்தவர்களுக்கு தெரிந்திருந்தால் சரி).

வ.4: இறந்த கிறிஸ்து தந்தையால் உயிர் பெற்றார், அதே போல் கிறிஸ்துவில் இறந்தவர்களும் உயிர் பெறுகிறார்கள். தந்தையாகிய கடவுளை மாட்சிமை பொருந்திய தந்தை என பெயரிடுகிறார் பவுல் (τῆς δόξης τοῦ πατρός டேஸ் தொட்சேஸ் டூ பட்றோஸ்). இதன் வாயிலாக இயேசுவை கடவுள்தான் உயிர்பெறச் செய்தார் என்பதில் கவனமாக இருக்கிறார். இதேபோல திருமுழுக்கும் ஒருவகையான மரணம், இந்த மரணம் புதுவாழ்வை தருவதற்கான ஒரு அடக்கம். இயேசுவோடு அடக்கம் செய்யப்படல் என்பது உரோமையர் திருமுகத்தின் முக்கியமான ஒரு இறையியல் அடி, (συνετάφημεν οὖν αὐτῷ சுநெடாபேமென் ஹுன் அவுடோ - அவரில் அடக்கம்செய்யப்பட்டோம்).

புதிய வாழ்வு என்பதை, கிரேக்க விவிலியம் 'புதிய வாழ்வில் நடப்போம்' என்று மொழிபெயர்க்கிறது (ἐν καινότητι ζωῆς περιπατήσωμεν என் கைநொடேடி ட்சோஏஸ் பெரிபாடேசோமென்- புதிய வாழ்வில் நடக்கவிருப்பதற்காக).

வவ.5-7: இந்த வரிகள் சில ஒப்புவமைகளை முன்வைக்கின்றன:

அ. இயேசுவைப் போல இற்க்கிறவர்கள் அவரைப்போல உயிர்ப்பார்கள்.

ஆ, நம்முடைய பழைய வாழ்வு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, இதனால் இனி பாவத்தின் அடிமைத்தனம் இல்லை.

இ. இறந்தோர் பாவத்தினின்று ஏற்கனவே விடுதலை பெற்றுவிட்டனர்.

வ.8: நம்முடைய நம்பிக்கை எது என்பதை விளக்குகிறார், அது, கிறிஸ்துவோடு இறந்தவர்கள் அவரோடு வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை. துன்புறுத்தப்பட்டு கொலையும் செய்யப்பட்ட உரோமைய கிறிஸ்தவர்களுக்கு இந்த வரி மருந்தாக அமைந்திருக்கும்.

வ.9: சாவின் ஆட்சியுள் கிறிஸ்தவர்கள் இல்லை. இறந்த கிறிஸ்து, உயிர்த்து சாவின் ஆட்சியை கலைத்து விட்டார், இதனால் கிறிஸ்துவோடு இறந்தவர்கள் இந்த சாவின் ஆட்சியில் இல்லை என்பதைக் காட்டுகிறார். சாவின் ஆட்சி என்பதை பவுல் பாவத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்று சூழலியலில் இருந்து நோக்கலாம்.

வ.10: இயேசுவின் இறப்பும் அவர் வாழ்வும் ஒப்பிடப்படுகிறது. இயேசு இறந்தார் ஒரே ஒரு முறை அதுவும், பாவத்தை ஒழிக்க ஆனால் அவர் வாழ்கிறார் அது கடவுளுக்காக. இறந்தார் என்பதை குறிக்க சாதாரண இறந்தகால வினைச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது (ἀπέθανεν அபெதானென்- இறந்தார்), வாழ்கிறார், என்பதைக் குறிக்க சாதாரண நிகழ்கால வினைச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது (ζῇ ட்சோஏ- வாழ்கிறார்).

வ.11: இங்கே முடிவுரை கொடுக்கப்படுகிறது. பாவத்தை பொறுத்தமட்டில் கிறிஸ்தவர்கள் இறந்தவர்கள். ஆனால் அவர்கள் அருளைப் பொருத்தமட்டில் கிறிஸ்துவோடு இணைந்து வாழ்கிறவர்கள. பாவம் இறந்தகாலம், அருள்வாழ்வு நிகழ்காலத்தொடர்ச்சி (ζῶντας ட்சோன்டஸ்- வாழ்ந்துகொண்டிருக்கிறவர்கள்).


நற்செய்தி வாசகம்
மத்தேயு 10,37-42
பிளவு ஏற்படுதல்
(லூக் 12:51 - 53; மாற் 14:26 - 27)

34'நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். 35தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். 36ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். 37என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். 38தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். 39தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

கைம்மாறு பெறுதல்

(மாற் 9:41)

40'உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். 41இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். 42இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.'


மத்தேயு ஒரு பெரிய ஆசிரியர் என்பதை பல சந்தர்பங்களில் பார்த்திருக்கின்றோம். இந்த போதனை ஊடாக அதனை மீண்டுமொரு முறை அவர் நிரூபிக்கிறார். மத்தேயுவின் திருச்சபை பல துன்பங்கள் மற்றும் காட்டிக் கொடுப்புகளுக்கு உள்ளானது. ஏன் இந்த துன்பங்கள், ஏன் இந்த காட்டிக் கொடுப்புக்கள். சில வேளைகளில் குடும்பங்களுக்குள்ளே துன்பங்களும் காட்டிக் கொடுப்பக்களும் நடந்தேரின. இதற்கான காரணம், திருச்சபை வளர வளர அது யூதேயாவைத் தாண்டி கிரேக்க-உலகை அடைகிறது. இந்த சந்தர்பங்களில் ஒரே குடும்பத்தில் சிலர் கிறிஸ்தவர்களாகவும், சிலர் கிறிஸ்தவர்களல்லாத யூதர் அல்லது வேறு மதத்தை சார்ந்தவர்களாக இருந்தனர். இதனால் பிளவுகள் துன்பங்கள் குடும்பத்திற்குள்ளேயே ஆரம்பித்தது. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கிறிஸ்தவர்களை காட்டிக் கொடுத்தவர்களும், அதனை வேடிக்கையாக செய்தவர்களும் அதிகரித்தனர். இதனை நாம் ஆபத்தான கும்பல் மனநோக்கு என்கின்றோம். (இன்றைய உலகில் அப்பாவியான வேற்றுமதத்தவர், சுயநலவாதம் பிடித்த விலங்கு மனப்பான்மையுடைய பெரும்பான்மை மதத்தவர்களால் கூச்சலிடப்பட்டு துன்புறுவதைப்போல. உதராணம், மத நிந்தனை என்ற பெயரில் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் சித்திரவதை அனுபவிக்க்கிறார்கள். பசுவதை என்ற பெயரில் இஸ்லாமியரும், மிதவாதிகளும் அதே துன்பத்தை இந்தியாவில் அனுபவிக்கிறார்கள்.)

துன்புறுத்தப்பட்டு நம்பிக்கையிழக்கும் கிறிஸ்தவர்களுக்கு இயேசு ஆண்டவரின் நம்பிக்கை தரும் வார்த்தைகளையும், இப்படியான துன்பங்கள் நடக்கத்தான் போகிறது என்ற அவரின் வார்த்தைகளையும் மீள் நினைவூட்டுகிறார் மத்தேயு நற்செய்தியாளர். இந்த வரிகளை அறிந்து கொள்ள மத்தேயு நற்செய்தியின் பத்தாவது அதிகாரத்தை முழுமையாக வாசிக்க வேண்டும். இந்த அதிகாரத்தில் மத்தேயு, திருத்தூதுப் பொழிவு மற்றும் சீடத்துவத்தின் விலை போன்ற இயேசுவின் உயரிய வரிகளை நினைவூட்டுகிறார். திருத்தூதர்கள் தெரிவுசெய்து அனுப்பப்பட்டவர்கள் (வவ.1-15), அவர்கள் ஆடுகள் போல் ஓநாய்களால் துன்பமடைவார்கள் (வவ.16-25). இருப்பினும் அவர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை (வவ.16-31). சீடர்கள் கிறிஸ்துவை மறுதலிக்காமல் மக்கள் முன் அவரை அறிக்கையிடவேண்டியவர்கள் (வவ.32-33). இதன் பின்னர்தான் இன்றை வாசகப் பகுதி அமைவிடம் பெற்றுள்ளது.

வ.34: மிகவும் வித்தியாசமான வரி. வழமையாக இயேசு அமைதியின் அரசர் என அறியப்படுகிறார். ஆனால் இந்த அமைதியின் அரசர் வன்முறையின் அடையாளமான வாளை கொணர்ந்ததாகச் சொல்கிறார் (οὐκ ἦλθον βαλεῖν εἰρήνην ἀλλὰ μάχαιραν. ஊக் ஏல்தோன் பாலெய்ன் எய்ரேநேன் அல்லா மகய்ரன்- அமைதியைக் கொண்டு வரவில்லை மாறாக வாளை). இயேசுவை பின்பற்றுவதன் விலை என்பதை மத்தேயு அடையாள வரிமூலம் காட்டுகிறார். இயேசுவை பின்பற்றுகிறவர்கள் உலகம் தருகின்ற மாயையான உலக அமைதியை பெறமுயலக்கூடாது. இந்த உலகின் மாயை நிறைந்த அமைதி, அது தேவையில்லை மாறாக இயேசுவின் சீடர்களுக்கு தங்கள் சீடத்துவத்தின் காரணமாக மறைசாட்சிய துன்பம் காத்திருக்கிறது என்று இந்த வரி காட்டுகிறது.

வ.35: சீடத்துவத்தின் விலை வெளியில் அல்ல சொந்த குடும்பத்துள்ளே விலைபோகும் என்கிறார் இயேசு. இயேசுவைப் பொருட்டு அப்பா மகனுடனும், அம்மா மகளுடனும், மாமியார் மருமகளுடனும் பரிந்திருப்பார்கள் என்கிறார். இந்த குடும்ப சண்டைகள் அக்காலத்தில் பொதுவாக இருந்தாலும், இயேசுவின் பொருட்டு அதாவது சீடர்களின் விசுவாசத்தின் பொருட்டு வருவதே இங்கே நோக்கப்படவேண்டும். இயேசு ஏன் மாமாவைவும் மருமகனையும் விட்டுவிட்டார் என தெரியவில்லை. அவர்கள் சண்டைபோடமாட்டார்கள் என மத்தேயு நினைத்திருக்கலாம். சில வேளைகளில் உண்மை, பொய்யான உறவுகளை பிரிக்கும் என்பதற்கு இந்த வரி நல்ல உதாரணம்.

வ.36: வழமையாக பகைவர்களை வெளிநாட்டிலும், தூர இடங்களிலும் பாhத்து பழகிய கிரேக்க-உரோமைக் கால பாலஸ்தீனர்களுக்கு, மத்தேயு புதிய விளக்கம் கொடுக்கிறார். வீட்டிலே பகைமை உள்ளது என்கிறார். அதாவது வீட்டில் உள்ளவர்களே சீடர்களை வதைக்க இருக்கிறார்கள்.

வ.37: இந்த வரி மேல் சொன்ன அனைத்து ஊகங்களையும் மெய்ப்பிக்கிறது. அதாவது இங்கே எழுவாய் பொருள், இயேசுவா அல்லது அவரை ஏற்காத உறவா என்பதாகும். யூத நம்பிக்கை மற்றும் கலாச்சாரம், கிரேக்க-உரோமை நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரம் இங்கே கிறிஸ்தவ நம்பிக்கையோடு போர் செய்கிறது. இயேசுவை முன்னிலைப் படுத்தினால்தான் வீட்டில் யார் ஏற்காவிடினும், இயேசுவை வாழ முடியும். ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் பலர் தங்கள் வீட்டில், ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் நடைமுறை சிக்கல்களால் இயேசுவை உடனடியாக மறுதலித்தனர். இவர்கள் இயேசுவிற்கு இரண்டாம் இடத்தையும், தங்கள் தாய், தந்தை, மகன், மகள் அதாவது அவர்களின் பழைய நம்பிக்கைக்கு முதல் இடம் கொடுத்தனர். இதனைத்தான் மத்தேயு அலசுகிறார்.

வ.38: இதனைத்தான் 'தன் சிலுவை' என இப்போது வெகு தெளிவாகவே உரைக்கிறார் மத்தேயு (σταυρός ஸ்டௌரொஸ்). யார் கிறிஸ்துவின் சீடர் என்பதற்கும் இந்த வரி அழகான வரைவிலக்கணம் கொடுக்கிறது. சிலுவையை சுமத்தல் என்பது இலகுவான அனுபவமாக இருக்காது. ஒரு வேளை தங்க மற்றும் ஆபரண சிலுவைகள் கழுத்தில் தொங்குவது இலகுவாக இருக்கலாம். ஆனால் உண்மைச் சிலுவை கடினமானது. இதனைத்தான் இயேசுவிற்காக காதலை துறந்தவர்கள், உறைவை மற்றும் உயரிய தொழிலை துறந்தவர்கள் அனுபவிக்கிறார்கள்.

வ.39: இங்கே உயிர் என்று மத்தேயு சொல்வதை நிலைவாழ்வு என எடுக்கலாம் (ψυχή ப்ஸ்சுகே- உயிர், மூச்சு, உள்ளுயிர்). இயேசுவை மறுதலித்து இந்த உலக வாழ்வை காக்க நினைக்கிறவர்கள் உண்மையிலேயே இறக்கிறார்கள் என்பதே மத்தேயு இங்கே வைக்கும் வாதம்.

வ.40: பின்வரும் மூன்று வரிகள் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு கைமாறு செய்தவர்கள் அதாவது அவர்கள் துன்புற்றவேளை அவர்களுக்கு ஆறுதல் தந்தவர்களை மெச்சுவதாக அமைந்துள்ளது.

சீடர்களை ஏற்றுக்கொள்கிறவர்கள், மனித சீடர்களை மட்டுமல்ல மாறாக இயேசுவையும், அவரை அனுப்பிய கடவுளையும் ஏற்றுக்கொள்கிறவர்கள் ஆகிறார்கள் என்கிறார் மத்தேயு. இந்த வரி நற்செய்தியாளர் யோவானின் சாயலைக் கொண்டுள்ளது. யோவான்தான் இந்த சீடர், இயேசு மற்றும் தந்தை உறவை அதிகமாக பாவிக்கிறவர். ஏற்றுக்கொள்ளுதல் (δέχομαι தெகோமாய்- வரவேற்றல், அங்கிகரித்தல்) இங்கே இயேசுவின் போதனைகள் மற்றும் நம்பிக்கைகளைக் குறிக்கின்றது.

வ.41: மத்தேயு நற்செய்தியில் இந்த வரி மிக அவதானமாக நோக்கப்படவேண்டும். இறைவாக்கினர்களும், நேர்மையாளர்களும் அவர்களுடைய இயல்பிற்காகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டு;ம். அவர்களின் பின்புலம், மற்றும் உலக அந்தஸ்துகள் அதில் ஆதிக்கம் செலுத்தப்படக்கூடாது அப்படிச் செய்யின் ஒருவேளை இந்த ஏற்றுக்கொள்ளல் கைமாறு எதிர்பார்க்கும் ஏற்றுக்கொள்ளலாக மாறலாம். மத்தேயு ஏன் இந்த இரண்டு வார்த்தைகளை ஒத்தகருத்தில் பாவித்திருக்கிறார் என்பது புலப்படவில்லை, ஒருவேளை ஆரம்ப கால திருச்சபையில் நேர்மையாளர்கள் இறைவாக்கினர்களாக கருதப்பட்டிருக்கலாம் (προφήτης புரொபேடேஸ்- இறைவாக்கினர்: δίκαιος திகாய்யோஸ்- நீதிமான்கள்).

வ.42: சிறியோருக்கு குளிர்ந்த நீர் கொடுப்பவர் நிச்சயமாக கைமாறு பெறுவர் என்கிறார் ஆண்டவர். பாலஸ்தீனம் போன்ற வெப்ப நாடுகளில் குளிர் நீர் நிச்சயமாக வரவேற்பின் மகத்துவத்தைக் காட்டும். உண்மையில் நண்பர்களுக்கே இந்த குளிர்ந்த நீர் வழங்கப்பட்டது. ஆக சிறியவர்களுக்கு (சீடர்களுக்கு) இந்த தண்ணீர் கொடுக்கிறவர்கள் இயேசுவிற்கே கொடுக்கிறார்கள். இதனால் சன்மானம் அடையாமல் போகிறார்கள். விவிலியத்தில் சில இடங்களில் சீடர்கள், சிறியவர்கள் என அறியப்படுகிறார்கள்.

உலகத்தின் இயேசு எதிர்ப்பு போக்குகளுக்கும், மெய்யறிவிற்கும் சீடர்களாக இருக்கிறவர்கள்
இயேசுவிற்கு இருக்க முடியாது.
உலகத்தின் அமைதி, வெற்றி, வளமை என்பது
இயேசுவின் பார்வையில் மடமையாக இருக்கலாம்.
உலக சமாதனம் வேண்டி
அடக்குமுறைகளையும், ஆதிக்கத்தையும், மூட நம்பிக்கைகளையும்,
சுயநல அரசியல்களையும், சமாதானமாக ஏற்க முடியாது.
ஏற்காவிட்டால் வருவது சாட்சிய வாழ்வு, அதனைத்தான்
வாள் என்கிறார், மத்தேயுவின் இயேசு.
அன்பு ஆண்டவரே உம்முடைய அன்பு வாள்
உலகத்தின் மாயை நிறைந்த அமைதியை அழிக்கட்டும்.
ஆமென்.
இயேசுவின் பெயருக்காக துன்புறும் உடன் சீடர்களுக்கு சமர்ப்பணம்!