இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா (அ)

முதல் வாசகம்: இணைச்சட்டம் 8,2-3.14-16
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 147
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 10,16-17
நற்செய்தி: யோவான் 6,51-58


(Corpus Cristi)

கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்த பெருவிழாவின் வரலாறு: இலத்தீன் திருச்சபையில் இந்த பெருவிழா திரித்துவ பெருவிழாவிற்கு அடுத்த வியாழன் கொண்டாடப்படுகிறது. இந்த வியாழன் பெரிய வியாழனை நினைவுபடுத்துகிறது. இதனை (Natalis Calicis) நடாலிஸ் காலிசிஸ் அதாவது கிண்ணத்தின் பிறப்பு என்றும் அழைப்பர். பெல்ஜிய புனிதையான தூய யூலியானாதான் இந்த பெருநாளின் ஆரம்பத்திற்கு காரணமானவர் என வரலாறு நம்புகிறது. சிறுவயதிலிருந்தே நற்கருணை ஆண்டவரில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இந்த புனிதை, ஒரு நாள், ஒரு காட்சியில், கரும் புள்ளியுடன் கூடிய முழு நிலவுக்கு கீழ் திருச்சபையை கண்டார். இந்த கரும் புள்ளி நற்கருணைக்கு ஒரு விழா இல்லாதனை தனக்கு உணர்த்தியதாக எண்ணினார். இதனை நெதர்லாந்து ஆயர்களுக்கும் தனது ஆயர்க்கும் அறிவித்த அவர், இறுதியாக இந்த எண்ணம் திருத்தந்தையை சென்றடைய காரணமானார். நெதர்லாந்திய ஆயர்கள் அக்கால முறைப்படி 1246ம் ஆண்டு இவ்விழாவை தொடங்க முடிவு செய்தனர், ஆனால் சில சிக்கல்களின் காரணமாக 1261ம் ஆண்டே முதன் முதலில் இப்பெருவிழா கொண்டாடப்பட்டது. இந்த மறைமாவட்ட பெருவிழாவில் தன் மனம் நிறைவடையாத தூய யூலியானா, படிப்படியாக திருத் தந்தை நான்காம் உர்பானுடைய கட்டளையால் அனைத்து திருச்சபையின் பெருவிழாவாக அது உருவெடுக்க தொடர்ந்தும் முயற்சி செய்தார்.

நற்கருணையில் அதிகம் விசுவாசம் கொண்டிருந்த இந்த திருந்தந்தை, இந்த விழாவை வருடாந்திர விழாவாக கொண்டாடும்படி தன்னுடைய திருத்தந்தை சுற்று மடல் (Bull Transiturus) புல் டிரான்ஸிடுருஸ் மூலமாக அனுமதியளித்தார். வரலாற்றில் திரித்துவ ஞாயிறுக்கு அடுத்த வியாழனே இந்த விழா இவ்வாறு உருவெடுத்தது. இந்த விழாவில் பங்கேற்றால் பல பாவங்களுக்கு பரிகாரம் ஆகும் வாய்ப்பினையும் திருத்தந்தை அறிவித்தார். தூய அக்குவினா தோமா திருத்தந்தையின் பணிப்புரையின் பேரில் இந்த பெருவிழாவிற்கு திருச்சபையின் பாரம்பரிய செபங்களை, திருப்புகழ்மாலை புத்தகத்திற்கு உருவாக்கினார். இந்த செபமும் அங்கே காணப்படும் பாடல்களும் இன்றளவும் மெச்சப்படுகிறது. இந்த திருத்தந்தையின் மரணம், இவ்விழாவின் உத்வேகத்தை சற்று பாதித்தது. திருத்தந்தை ஐந்தாம் கிளமந்து, இந்த முயற்சியை மீண்டும் வியான்னா பொதுச்சங்கத்தில் (1311ல்) மேற்கொண்டார். சில மாற்றங்கள் புதுமைகளோடு அன்றிலிருந்து திருச்சபை இந்த விழாவை பெருவிழாவாக கொண்டாடுகிறது. இன்றைய விழா-முறையான பாரம்பரிய ஊர்வலத்தை பற்றி திருத்தந்தையர்கள் பேசவில்லை, ஏனெனில் இப்படியான ஊர்வலங்கள் ஏற்கனவே, இந்த விழா அதிகாரமாக ஏற்படுத்தப்படும் முன்பே வழக்கிலிருந்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே, உரோமைய-மேற்கத்தேய திருச்சபையின் முக்கிய விழாவாக இது இவ்வாறு உருவெடுத்தது. கிரேக்க திருச்சபையிலும் இந்த திருவிழா சிரிய, ஆர்மேனிய, கொப்திக்க, மெல்கித்த, மற்றும் ருத்தேனிய திருச்சபைகளின் கால அட்டவணையில் காணப்பட்டு பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.

முதல் வாசகம்
இணைச்சட்டம் 8,2-3.14-16

2உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களைக் கூட்டிச் சென்ற எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளுங்கள். அதன்மூலமே அவர் உங்களை எளியவராக்கினார். அவர்தம் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார். 3அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார். 14நீங்கள் நெஞ்சில் செருக்குற்று, அடிமைத்தனத்தின் வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உங்களைக் கூட்டி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்துவிட வேண்டாம். 15அவரே, கொள்ளிவாய்ப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, நீரற்று வறண்ட நிலமான பரந்த கொடிய பாலைநிலத்தில் உங்களை வழி நடத்தியவர்; இறுகிய பாறையிலிருந்து உங்களுக்காக நீரைப் புறப்படச் செய்தவர். 16உங்கள் மூதாதையருக்குத் தெரிந்திராத மன்னாவால் பாலைநிலத்தில் உங்களை உண்பித்தவர்; இறுதியில் உங்களுக்கு நல்லது செய்வதற்காக உங்களை எளியவராக்கிச் சிறுமைப்படுத்திச் சோதித்தவரும் அவரே.

முதல் ஐந்து நூல்களின் இந்த இணைச்சட்ட நூல் இறுதியான நூலாக இருந்தாலும் இதன் முக்கியத்தும் கடைசியானது அல்ல. விவிலிய ஆய்வாளர்கள் இணைச்சட்ட நூலை தனி வரலாறாகவே பார்க்கும் அளவிற்கு இந்த நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. இணைச்சட்டம் என்ற பெயர் கிரேக்க மொழிபெயர்ப்பான தியேத்ரோ-நோமோஸ் (δεύτερος-νόμος- தெயுடெரொஸ்-நொமொஸ்: இரண்டாவது சட்டம், இணையான சட்டம்) என்பதிலிருந்து வருகிறது. இந்த புத்தகத்தின் முதல் இரண்டு எபிரேய சொற்களே, எல்லே ஹடெவாரிம் (אֵלֶּה הַדְּבָרִים எல்லேஹ் ஹட்வாரிம்) இந்த புத்தகத்தின் எபிரேய பெயராக கொள்ளப்பட்டுள்ளது. எபிரேய விவிலியம் இதனை 11 பிரிவுகளாக பிரித்துள்ளது, மற்றைய மொழிபெயர்ப்புக்கள் இந்த புத்தகத்தை 34 அதிகாரங்களாக பிரித்துள்ளன. மோசே தான் இறப்பதற்கு முன் மூன்று முக்கியமான உரைகளை மோவாபு சமவெளியில் உரைத்தார் அதனை இந்த புத்தகம் மையமான செய்திகளாக கொண்டுள்ளது.

முதலாவது உரை, முதல் நான்கு அதிகாரங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது, அதில் கடவுள் கடந்த நாற்பது வருடங்களாக பாலைவனத்தில் இஸ்ராயேலருக்கு செய்த அனைத்து நன்மைத்தனங்களும் நினைவுகூறப்பட்டுள்ளன. கடவுளின் தூய சட்டங்களை மதிக்கவேண்டியதின் தேவையையும், சட்டங்கள் மீறப்பட்டால் அதன் விளைவுகளின் ஆபத்தையும் மோசே இதில் விளக்குகின்றார்.

இரண்டாவது உரை, 5-26 அதிகாரங்களுக்குள் அடங்கியிருக்கிறது. இந்த அதிகாரத்தில், ஏற்கனவே சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட கட்டளைகள் மீள ஆராயப்பட்டுள்ளன. அத்தோடு கானான் நாட்டில் மக்கள் வாழ தொடங்கிய பின்னர் அங்கே அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதும் இந்த அதிகாரங்களில் எதிர்கால கட்டளைகளாக தரப்பட்டுள்ளன.

மூன்றாவது உரையில் (27-30) சட்டங்களின் கட்டுப்பாடுகளை விளக்குகின்றது. அதேவேளை சட்டங்களை பின்பற்றுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் எனவும், பின்பற்றாதவர்கள் சபிக்கப்படுவார்கள் எனவும் சாற்றுகின்றது.

இறுதியான அதிகாரங்கள் 31-34, மோசே யோசுவாற்கு கொடுத்த அறிவுரைகளையும் அவருடைய இறுதியான உணர்வுகளையும் தாங்கி வருகின்றது. இந்த இணைச்சட்ட நூல் காலத்தால் பிந்தியது எனவும், இந்த இணைச்சட்ட நூல் இஸ்ராயேல் மக்கள் தங்கள் சட்டத்தை நினைவில்கொண்டு அதன்மூலமாக அவர்களுடைய புனிதமான வாழ்விற்கு திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பல ஆயிரம் ஆய்வுகள் இந்த நூலின் மீது மேற்கொள்ளப்பட்டும், இன்னும் இந்த நூலைப்பற்றி முழுமையான அறிவு போதுமாக கிடைக்கவில்லை மாறாக இந்த நூல் அதன் பின்புலம், அதன் செய்திகள் மற்றும் ஆசிரியர் போன்றவை ஆழம் காணமுடியாத சமுத்திரமாகவே காட்சியளிக்கிறது.

வ.2: முதலாவது வசனம் ஏற்கனவே அனைத்து கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருக்கும்படி கூறி, அதனால் மட்டுமே நாட்டை உடைமையாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. இந்த நாட்டிற்கு அவர்கள் சாதாரணமாக நுழைய மாட்டார்கள் ஆனால், அவர்கள் பலுகிப் பெருகி, அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

இரண்டாவது வசனத்தில், கடவுள் பாலைநிலத்தில் செய்த அனைத்து நன்மைத் தனங்களையும் மறக்கவேண்டாம் என்கிறார் மோசே. பாலை நிலத்தில் கடவுள் பல வழிகளில் (כָּל־הַדֶּ֗רֶךְ கோல்-ஹட்டெரெக்) நடத்திச் சென்றிருக்கிறார் என்கிறார். எபிரேய விவிலியம் பாலைநிலத்தில் நாற்பது வருடம் கூட்டிச்சென்றார் என ஒரு சொல்லை சேர்க்கிறது, இந்த சொல் தமிழ் பொது மொழிபெயர்ப்பில் விடப்பட்டுள்ளது (אַרְבָּעִ֥ים שָׁנָ֖ה ʾஅர்பாயிம் ஷனாஹ்). பாலைவன பயணம் நாற்பது நாட்கள் நடைபெற்றிருக்கிறது என்பதற்கு இது நல்லதொரு உதாரணம். கடவுள்; தன் மக்களை ஏன் இந்த பாலைநிலத்தில் அதுவும் நாற்பது வருடங்களாக கூட்டிச் செல்ல வேண்டும் என்பது பல புவியியல் மற்றும் இந்த பிரதேசங்களின் வரைபடத்தை அறிந்தவர்களின் கேள்வி. இஸ்ராயேல் மக்கள் உண்மையில் தேவைக்கு அதிகமாண பாலைவனத்தில் அலைந்திருக்கிறார்கள், அவர் சீக்கிரமாக கானானை அடைந்திருக்க முடியும். இந்த கேள்விக்கு ஆசிரியர் விடையளிக்கிறார். அதாவது கடவுள் இந்த பயணத்தை ஒரு சோதனையாக மேற்கொள்கிறார், இதனால்தான் இந்த துன்பங்களும், கால அவகாசங்களும் என்று வாசகர்களுக்கு இலகுவான விடையைத் தருகிறார்.

கடவுளுடைய கட்டளைகளை கடைப்பிடிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல, இந்த விசுவாசத்தில், இஸ்ராயேலின் தந்தையர்களே தவறியிருக்கிறார்கள், அத்தோடு அவர்கள் தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள். இதனால் தவறுகளும் தண்டனைகளும் இக்கால மக்களுக்கும் நடக்கலாம் என தன் வாசகர்களை திடப்படுத்துகிறார் எனவும் எடுக்கலாம்.

வ.3: இந்த வசனம் மிக முக்கியமானது. இந்த வசனத்தின் ஒரு பகுதியைத்தான் இயேசு ஆண்டவர் தான் சாத்தானால் சோதிக்கப்பட்டபோது பேசியிருப்பார் (காண்க மத்தேயு 4,4: லூக்கா 4,4), இங்கனம் இந்த பகுதியை யூதர்கள் நன்கு வாசித்து பரீட்சயமாய் இருந்தார்கள் என்பது புலப்படுகிறது.

இந்த வசனம் இஸ்ராயேலரின் பாலைவன அனுவத்தின் பல நிகழ்;ச்சிகயை விளக்குகின்றது. முதலாவதாக பசி ஆண்டவரின் சோதனையின் ஒரு கருவியாக பார்க்கப்படுகிறது. பாலைவனத்தின் வெயில், வெப்பக் காற்றும் சாதாரணமாக பெரும் பசியை உண்டாக்கும். இந்த பசியை போக்க கடவுள் சாதாரண உணவை தரவில்லை மாறாக தன்னுடைய வாக்கு பின்னால் இருக்குமாறு மன்னாவை தந்ததாக சொல்கிறார்.

மன்னா (מָן הוּא மன் ஹூʾ) என்கின்ற சொல்லிற்கு 'அது என்ன' என்ற அர்த்தமே நேரடியான மொழிபெயர்ப்பாக இருந்தாலும், இதனை ஒரு வகை பாலைவன பனியுணவு என்று ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். இதனை கொத்தமல்லி விதையின் வடிவை ஒத்ததாகவும், வென்பனியின் நிறத்தை ஒத்ததாகவும், காலையில் தோன்றி மலையில் மறையக்கூடியதாகவும் விளக்குகின்றனர். இதனை இஸ்ராயேலர்கள் அப்படியே உண்டார்களா அல்லது அதனை தங்களது அப்பங்களுக்கு பயன்படுத்தினார்களா என்பதில் பல விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது எப்படியெனினும், கடவுள்தான் மக்களை பாலைநிலத்தில் உண்பித்தார், இது தற்செயலான நிகழ்வு அல்ல என்பதில் ஆசிரியர் கவனமாக இருக்கிறார். அத்தோடு இந்த மன்னாவை இஸ்ராயேலரின் முன்னோர்கள் இதற்கு முன் அறிந்திருக்கவில்லை என்ற ஒரு தகவலையும் தருகிறார்.

வவ.4-10: இந்த வரிகள் கடவுள் எப்படியெல்லாம் இஸ்ராயேலரை காத்தார் என்பதை விளக்குகின்றன:

அ. ஆடைகள் அழுக்காகமலும், காலடிகள் வீங்காமலும், கடவுள் இஸ்ராயேலரை காத்தார்.

ஆ. ஒருவர் தன் மகனுக்கு கற்றுக்கொடுப்பது போல கடவுள் கற்றுக்கொடுத்தார்.
இ. ஆண்டவரின் கட்டளைகளை கடைப்பிடிப்பதுதான், அவருக்கு கொடுக்கும் மரியாதை.
ஈ. கடவுள் வளமான நாட்டிற்கு உங்களை அழைத்துச் செல்கிறார், அந்த நாடு மலைகளாலும், ஆறுகளாலும், நீரூற்றுக்களாலும் மற்றும் ஏரிகளாலும் நிறைந்துள்ளது.
உ. அங்கே கோதுமை, திராட்சை, அத்தி, வாற்கோதுமை, ஒலிவ எண்ணெய் மற்றும் தேன் நிறை நாடு.
ஊ. அங்கே அப்பத்திற்கும் உணவிற்கும் குறையிராது, அத்தோடு அந்நாட்டின் பாறைகள் இரும்பையும் மலைகள் செம்பையும் கொண்டுள்ளன.
எ. மக்கள் உண்டு நிறைவடைவதன் வாயிலாக கடவுளை நினைவிற் கொள்ளவர். இப்படியாக கடவுளின் நன்மைத்தனங்களும், அவர் தரவிருக்கின்ற நாட்டின் செழுமையும் ஆசிரியரால் விவரிக்கப்படுகின்றன. இவருடைய விவரிப்புக்களின் வாயிலாக இவர் இந்த நாட்டில் ஏற்கனவே வாழ்ந்திருக்கிறார், அல்லது கானான் நாட்டைப் பற்றி நன்கு தெரிந்தவராக இருந்திருக்கவேண்டும் என்பதுபோல தெரிகிறது.

வவ.11-13: இந்த வரிகள் கடவுளின் கட்டளைகள் மற்றும் முறைமைகள் வழுவப்படுவதற்கான (மீறப்படுதல்) காரணங்களை விவரிக்கின்றன.

அ. கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் போன்றவை வழுவப்பட்டால் (மீறப்படுதல்) அவை கடவுளை மறக்கப்பண்ணும்.

ஆ. உண்டு நிறைவடைகின்ற உணவுகள், கட்டப்படுகின்ற வீடுகள், பல்கி பெருகும் ஆடு மாடுகள், மிகுதியாகும் வெள்ளியும், சொத்துக்களின் பெருக்கம் போன்றவை, நெஞ்சில் செருக்கு தோன்றுவதற்கு காரணமாகும்.

வ.14: இந்த வரி முக்கியமான வேண்டுதல் ஒன்றை முன்வைக்கிறது. நெஞ்சிலே இருக்கும் செருக்கு பழைய அனுபவங்களை மறக்கப்பண்ணும் என்கிறார். நெஞ்சிலே செருக்கு கொள்ளுதலை எபிரேய விவிலியம் 'இதயத்திலே பெரியவன் என எண்ணுதல்' என சொல்கிறது (רָם לְבָבֶךָ ராம் லெவாவெக்). எகிப்திற்கு புதிய பெயர் ஒன்று கொடுக்கப்படுகிறது. எகிப்தை அடிமை வீடு என்கிறார் ஆசிரியர் (מִצְרַ֖יִם מִבֵּית עֲבָדִֽים மிட்ராயிம் மிபெட் அவாதிம்). எகிப்தை அடிமை வீடு என்று அழைப்பதை விவிலியம் அதிகமாக முதலாவது ஏற்பாட்டில் கையாள்கிறது. இந்த அடிமை வீட்டிலிருந்து கடவுள்தான் இஸ்ராயேலரை கூட்டிவந்தார் என்பதையும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறது.

வ.15: இந்த வரியில் கொடிய பாலைவனத்தில் கடவுள் செய்த அற்புதமான பராமரிப்புக்களை படம் போல சொல் சொல்லாக விவரிக்கிறார் ஆசிரியர். பாலைவனத்தை கொல்லிவாய்ப் பாம்புகளும், தேள்களும் நிறைந்த இடமாகக் காட்டுகிறார் (נָחָ֤שׁ ׀ שָׂרָף֙ וְעַקְרָ֔ב நாஹாஷ்| சராப் வெ'அக்ராவ்). இந்த இரண்டு ஊர்வனவும் வரண்ட பாலைநிலத்தில் இயற்க்கையாக தக்கிவாழக்கூடியவை, அத்தோடு மற்றைய விலங்குகளுக்கு எதிரியாக வரக்கூடியது. ஆசிரியர் பாம்பை உரித்துக் காட்ட 'கொள்ளிவாய்' (שָׂרָף֙ சாராப்) என்ற சொல்லை பாவித்துள்ளார், இதற்கு நெருப்பு என்ற அர்த்தமும் தருகிறது, சில வேளைகளில் இந்த சொல் செராபின் என்ற ஒருவகை வானதூதர்களையும் குறிக்கும். இங்கே நெருப்பு சம்மந்தமான அர்த்தம் வருவதைக் காணலாம். கொள்ளிவாய் என தமிழில் மொழி பெயர்ப்பது அழகான முயற்ச்சி. சீனாய் பாலைவனத்தின் நிலை ஆசிரியால் 'நீரற்ற வரண்ட நிலம்' (וְצִמָּא֖וֹן אֲשֶׁ֣ר אֵֽין־מָ֑יִם வெட்ஸ்மா'வோன் அஷேர் ’ஏன்-மாயிம்) என்று வர்ணிக்கப்பட்டுளளது. அதேவேளை பாறையிலிருந்து ஆண்டவர் கொடுத்த நீரும் நினைவுகூரப்பட்டுள்ளது. இங்கே கடவுள்தான் அனைத்தையும் செய்தவர் என்பதைக் காட்டுவதில் கவனமாக இருக்கிறார்.

வ.16: ஏற்கனவே மூன்றாவது வரியில் சொல்லப்பட்டது அப்படியே மீண்டும் சொல்லப்படுகிறது. அதாவது மன்னாவை பற்றி இஸ்ராயேல் மக்கள் விடுதலைப்பயணத்தின் முன்னர் அறிந்திருக்கவில்லை, அத்தோடு கடவுள் இஸ்ராயேல் மக்களை எளியவராக்கி, அவர்களை சிறுமைப்படுத்தியது, அவர்களுக்கு நன்மை செய்வதற்காகவே என காட்டப்பட்டுள்ளது. இங்கே எளியவராக்கி சிறுமைப்படுத்தியதை, எபிரேயம் (לְמַ֣עַן עַנֹּתְךָ֗ וּלְמַ֙עַן֙ נַסֹּתֶ֔ךָ லெமாஷன் ‘அனொ வெலெமா‘ன் நாஸ்ஸோடெகா), 'உன்னை தாழ்ச்சிப்படுத்தி, சோதித்தல்' என்று உள்ளது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 147

எல்லாம் வல்ல இறைவன் போற்றி
1அல்லேலூயா! நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது அவரைப் புகழ்வது இனிமையானது அதுவே ஏற்புடையது.
2ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார்;
3உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார்.
5நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.
6ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார்.
7ஆண்டவருக்கு நன்றி செலுத்திப் பாடுங்கள்; நம் கடவுளை யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.
8அவர் வானத்தை மேகங்களால் மறைக்கின்றார்; பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்; மலைகளில் புல்லை முளைக்கச் செய்கின்றார்.
9கால்நடைகளுக்கும் கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும், அவர் இரை கொடுக்கின்றார்.
10குதிரையின் வலிமையில் அவர் மகிழ்ச்சி காண்பதில்லை; வீரனின் கால்வலிமையையும் அவர் விரும்புவதில்லை.
11தமக்கு அஞ்சி நடந்து தம் பேரன்புக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம் அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.
12எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக! 13அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார்.
14அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.
16அவர் வெண்கம்பளிபோல் பனியைப் பொழியச் செய்கின்றார்; சாம்பலைப்போல் உறைபனியைத் தூவுகின்றார்;
17பனிக்கட்டியைத் துகள் துகள்களாக விழச் செய்கின்றார்; அவர் வரவிடும் குளிரைத் தாங்கக் கூடியவர் யார்?
18அவர் தம் கட்டளையால் அவற்றை உருகச் செய்கின்றார்; தம் காற்றை வீசச் செய்ய, நீர் ஓடத் தொடங்குகின்றது.
19யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது; அல்லேலூயா!


திருப்பாடல்கள் 146-150 வரையான பாடல்கள் அல்லேலூயா பாடல்கள் என அறியப்படுகின்றன. இந்த பாடல்கள் கடவுளை புகழ்கின்ற பாடல்களாக இருக்கின்ற படியால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட குழுவில்லுள்ள திருப்பாடல்களைப்போல இந்த பாடலும் அல்லேலூயா என்ற சொல்லிலிருந்து தொடங்கி அல்லேலூயா என்ற சொல்லிலே முடிவடைகிறது. புகழ்ச்சிப்பாடலாக தொடங்கினாலும், மறைமுகமாக ஒரு கட்டளை பாடல் போல பின்புலத்திலே செயற்படுகிறது. இந்த திருப்பாடலில் அதிகமாகவே திருப்பிக்கூறுதல் என்ற எபிரேய கவி நடை பாவிக்கப்பட்டுள்ளது.

வ.1: அழகான ஹா ஓசையுடன் கூடிய மோனை வார்த்தைகளின் இந்த முதலாவது வரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரியில் கடவுளைப் பாடுவது நல்லது, அதுதான் இனிமையானதும் மற்றும் ஏற்புடையதும் என்பது பாடப்படுகிறது. 'கடவுளை பாடுவது எவ்வளவு நல்லது' (כִּי־ט֭וֹב זַמְּרָה אֱלֹהֵ֑ינוּ கி-டோவ் ட்சாம்மெராஹ் ’எலோஹெனூ) என்றும் இதனை மொழி பெயர்க்கலாம். இரண்டாவது பகுதியையும் இவ்வாறே மொழிபெயர்க்கலாம் (எவ்வளவு இனிமையானதும் பொருத்தமானதும் அவரை புகழ்வது).

வ.2: எருசலேமை கட்டுதல் என்பது அந்த நகரிலிருந்து சிதறடிக்கப்பட்டவர்களை கூட்டிச் சேர்த்தலாகும் என்பது காட்டப்படுகிறது. இந்த வரியின் இரண்டாவது பகுதியின் காரணமாகத்தான், கட்டுதல் என்ற எபிரேய சொல்லை, தமிழ் விவிலியம் சூழலியலின் பொருட்டு மீள கட்டுதல் என காட்டுகிறது (בּוֹנֵה போனெஹ் கட்டுகிறவர்). இந்த வரியிலிருந்து, இந்த பாடல் எதோ ஒரு எருசலேம் இடப்பெயர்வின் பின்னர் எழுதப்பட்டிருக்கிறது என்ற முடிவிற்கு வரலாம்.

வ.3: ஆண்டவர் குணப்படுத்துபவராக காட்டப்படுகிறார். ஹராபே (הָרֹפֵא ஹரோபெ’) என்ற சொல் கடவுள் குணப்படுத்துகிறவர் என்பதைக் குறிக்கிறது. உள்ளம் உடைந்தோரை குணப்படுத்துகிறவர் என்பதை 'இதயம் உடைந்தோரை குணப்படுத்துகிறவர்' என எபிரேய விவிலியம் காட்டுகிறது. அத்தோடு அவர்தான் 'காயங்களை கட்டுகிறவர்' என்பதையும் இந்த வரி காட்டுகிறது. இந்த வரி கடவுளை ஒரு மருத்துவர் போலக் காட்டுகிறது. கடவுள் உடல் காயங்களை விட உள்ளக் காயங்களை அல்லது சமூக ஆன்மீக காயங்களை கட்டுகிறவர் என்ற அர்த்தத்தில் இந்த வரியை நோக்கலாம்.

வ.4: கடவுள் வான் பொருட்களை உருவாக்கியவர் மட்டுமல்ல அவற்றை நிர்வகித்து கட்டுப்படுத்துகிறவரும் அவர்தான் என்பது இஸ்ராயேலர்களின் நம்பிக்கை. இஸ்ராயேலை சுற்றி வாழ்ந்தவர்களில் சிலர், விண்மீன்களை வான தெய்வங்களாக கண்டனர், ஆனால் இஸ்ராயேல் தீருப்பாடல் ஆசிரியருக்கு அது வெறும் படைப்பே. அதனை உருவாக்கி அத்தோடு அதனை எண்ணக் கூடியவர் கடவுள், இவ்வாறு கடவுள் இந்த விண்மீன்களின் கடவுள் என்ற அர்த்தத்தை பெறுகிறார். ஒவ்வொரு விண்மீன்களுக்கும் அக்காலத்திலேயே தனித்துவமான பெயர்கள் இருந்திருக்கிறது என்பதையும் இந்த வரி நினைவூட்டுகிறது.

வ.5: கடவுளின் ஞானம் அளவிடப்படுகிறது. 'கடவுள் பெரியவர்' (גָּדוֹל אֲדוֹנֵינוּ காதோல் ’அதோனேனூ) என்பதும் ஒரு புகழ்ச்சிப் பெயராக எடுக்கப்படவேண்டும். இதற்கு விளக்கமாக இரண்டாவது பகுதி வருகிறது அது கடவுள் ஏன் பெரியவர் என்பதைக் காட்டுகிறது. அதாவது கடவுள் வல்லமையில் பெரியவராய் இருக்கிறார் (רַב־כֹּחַ ராவ்-கோஹா), இதனால் அவர்தான் பெரியவர். அதேவேள இந்த சிந்தனை அடுத்த பகுதியில் மீள கூறப்பட்டுள்ளது. கடவுளுடைய நுன்னறிவிற்கு எண்ணிக்கையே இல்லை என்கிறார்.

வ.6: ஆறாவது வரி கடவுளுடைய சமூக செயற்பாட்டைக் காட்டுகிறது. கடவுள் கீழ்மட்டத்தில் இருப்பவர்களை உயர்த்துகிறவர் (מְעוֹדֵד עֲנָוִים יְהוָה மெஷஓதெத் ஷஅனாவிம் யாவே), பொல்லாதவர்களை நிலமட்டும் சிதறடிக்கிறவர் (מַשְׁפִּיל மஷ்பில்) என்றும் காட்டப்படுகிறார். நிலமட்டத்திற்கு தாழ்த்துதல் என்பது ஒருவரை வாழ்வின் அடிமட்டத்திற்கு கொண்டுவருதலைக் குறிக்கிறது. இந்த வரியிலுள்ள அனைத்து வினையெச்சங்களும் காலத்தை கடந்து கடவுளின் செயற்பாட்டைக் காட்டுகின்றன.

வ.7: இப்படியான கடவுளுக்கு என்ன செய்யவேண்டும் என்பது சொல்லப்படுகிறது. இப்படியான கடவுளுக்கு நன்றியில் பாடுங்கள், அந்த நம் ஆண்டவருக்கு நரம்பிசைக் கருவியில் புகழ்பாடுங்கள் என்கிறார் ஆசிரியர்.

வ.8-9: இந்த வரிகள் மேலுமாக இயற்கை மீது ஆண்டவரின் செயற்பாடுகளை விவரிக்கின்றன. வானத்தை ஒரு சிறிய தரைபோல வர்ணித்து கடவுள் அதனை மூடுகிறவராக காட்டப்படுகிறார் (הַמְכַסֶּה שָׁמַיִם ஹம்காசெஹ ஷமாயிம்) அவர் வானங்களை மூடுகிறார்). வானத்தை மூடக்கூடியவர் இருக்கமுடியுமா அப்படியாயின் அது இஸ்ராயேலின் கடவுள் ஒருவரே என்று சொல்லி கடவுளை வானத்தின் உயரத்திற்கு உயர்த்துகிறார் ஆசிரியர். மேகங்கள்தான் மழைக்கு காரணம் என்பதையும் ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். குன்றுகளில் எப்படி புற்கள் முளைக்கின்றன என்பதும் இயற்கையின் ஆச்சரியம், இது ஆசிரியருக்கு கடவுளின் வல்லமையைக் காட்டுகிறது.

மனிதர்கள் உணவிற்காக பெரும் முயற்சிகளை செய்கின்றபோது இயற்கை எப்படி விலங்குகளுக்கு உணவளிக்கிறது, இதுவும் ஆசிரியருக்கு கடவுளின் ஆச்சரியத்தை காட்டுகிறது, அதுவும் முக்கியமாக காக்கை குஞ்சுகளின் வாழ்க்கை இவரை ஆச்சரியப்பட வைக்கிறது. மிகவும் முக்கியமில்லாத இந்த காக்கை பறவைகளின் வாழ்வே இப்படியாக இருக்கிறது என்பதைக் காட்ட இவர் இந்த காக்கை குஞ்சுகளை உதாரணத்திற்கு எடுத்திருக்கலாம் (בְנֵי עֹרֵב வெனே ஷஓரெவ்).

வவ.10-11: கடவுளை திருப்திப்படுத்துவது எது, என்ற கேள்விக்கு அழகாக விளக்கம் கொடுக்கிறார். குதிரையின் வலிமையும், மனித கால்களின் வல்லமையும் காலாட்படையையும், குதிரைப்படையையும் நினைவூட்டுகின்றன. குதிரைகளின் பெருக்கமும், போர்வீரர்களின் அதிகமான எண்ணிக்கையும் அக்காலத்தில் போரின் வெற்றியை தீர்மானிப்பவையாய் இருந்தன. இவை கடவுளுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று தன் கடவுளை மிக உயரத்தில் வைக்கிறார் ஆசிரியர்.

இதற்கு எதிர்மாறாக கடவுளை திருப்திப்படுத்துவனவாக ஆன்மீக விழுமியங்களை முன்வைக்கிறார், அவை: கடவுளுக்கு அஞ்சுதல், அன்பிரக்கமுள்ள நம்பிக்கையோடு காத்திருத்தல் என்பனவாகும். கடவுளுக்கு அஞ்சுதல் என்பது, பயம் என்பதைவிட தெய்வ மரியாதையையே குறிக்கும் (אֶת־יְרֵאָיו ’எட்-ஜெரெ’அவ்).

வ.12: இந்த வரியிலிருந்து எருசலேமிற்கு அன்புக்கட்டளை கொடுக்கப்படுகிறது. ஆசிரியர் எருசலேமை அதன் இதயச் சொல்லான, சீயோன் என அழைக்கிறார். சீயோன் என்ற இந்த சொல் (צִיּֽוֹן ட்சியோன்) இஸ்ராயேலருக்கு தாவீதையும் அவர் மாட்சியையும் நினைவூட்டும். (இலங்கை என்பதை விட ஈழம் என்பது நம்மவர்களுக்கு உணர்வுபூர்வமானது என்பதைப்போல எடுக்கலாம்). எருசலேம், சீயோனின் புகழ்ச்சியாக இருக்கவேண்டியது, ஆண்டவர் ஒருவரே என்பது ஆசியரின் மிக முக்கியமான நோக்கம்.

வ.13: ஆண்டவருடைய எருசலேமிற்கான செயற்பாடுகள் விளங்கப் படுத்தப்படுகின்றன. ஒரு நகருடைய வாயிற் கதவுகள் எவ்வளவு பலமாக இருக்கிறதோ அது அந்த நகரின் பலத்தை காட்டும், அதேவேளை அந்த வாயிற் கதவின் பலத்தை, அக்கதவை பாதுகாக்கும் கிடைச்சட்ட பலகைகள் அல்லது தடுப்புக்கள் தீர்மானிக்கின்றன. இது நகரிற்குள் உள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு சமன் என்பது போல காட்டப்படுகின்றன.

வ.14: இந்த வரி எருசலேமிற்கான பொருளாதார ஆசிர்வாதத்தை காட்டுகிறது. நாட்டின் சமூக அமைதி அதன் பொருளாதார வளத்தில் மிகவே தங்கியிருக்கிறது என்பதை அழகாக பாடுகிறார். அதாவது கடவுள் கொடுக்கும் கோதுமைப் பெருக்கம் எருசலேமின் எல்லைகளுக்கு அமைதியைக் கொண்டுவருகிறது என்கிறார். கோதுமை (חִטָּה ஹிட்டாஹ்), இஸ்ராயேலர் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகள் மக்களுக்கு சாதாரண உணவின் தானியம்.

வ.15: இந்த வரியை ஒரு மெய்யறிவு வரி என எடுக்கலாம். ஆண்டவருடைய கட்டளையையும் (אִמְרָה இம்ராஹ்), வாக்கையும் (דָּבַר டவார்) ஒப்பிடுகிறார் ஆசிரியர். கடவுளுடைய வார்த்தை மற்றும் கட்டளை என்பவை தன்னுடைய செயற்பாட்டை நிறைவேற்றாமல் திரும்பா, அதாவது அது மனிதரின் வார்த்தைகளைப் போலல்லாது தன்னிலே சக்திமிக்கது என்பது பாடப்படுகிறது. முதல் ஏற்பாடு பல இடங்களில் கடவுளுடைய வார்த்தை மற்றும் கட்டளையின் வல்லமையை முக்கியப்படுத்துவது நினைவுகூரப்படவேண்டும் (காண்க தி.பா 12,6: 18,30).

வ.16: பனியையும், மூடுபனியையும் விவரிக்கிறார். அவற்றை வெண்கம்பளத்திற்கும், சாம்பலுக்கும் ஒப்பிடுகிறார். பனியும் மூடுபனியும் அக்காலத்தில் கானானில் அதிகமாகவே இருந்திருக்கலாம். இருப்பினும் இவை மத்திய கிழக்கு பிரதேசங்களில் ஆண்டவரின் ஆசீரின் உண்மையான அடையாளமாகவே பார்க்கப்பட்டன. வரண்ட பிரதேசங்களில் இதன் நிறம், இதன் நீர்த்தன்மை, மற்றும் இதன் குளிர்மை பல அனுபவங்களை மக்களுக்கு கொடுத்தன. இதனைத்தான் ஆசிரியர் கடவுளின் ஆசீராகப் பார்க்கிறார். (שֶׁלֶג ஷெலெக் வெண்பனி, כְּפוֹר கெபோர் மூடுபனி).

வ.17: இந்த வரியில் இன்னொரு படி மேலே சென்று பனிக்கட்டிகளைப் பற்றி பேசுகிறார். இந்த பனிக்கட்டிகளை ஆலிக்கல் என எடுக்கலாம். இது பனியைவிட சற்று கடினமாக இருக்கும், பொடி வடிவான பனிக்கட்டிகளாக விழக்கூடியவை. இவை ஐரோப்பிய நாடுகளில் சாதாரணமாக நிகழக்கூடியவை. கானான் நாட்டில் இவற்றின் விழுகை ஆசிர்வாதமாகவே பார்க்கப்படும் (קֶרַח கெராஹ்| ஆலிக்கல்). வ.18: இந்த ஆலிக்கற்கள், பாலஸ்தீன நாட்டில் நில வெப்பம் மற்றும் தட்ப வெப்பம் காரணமாக உடனடியாக உருகக்கூடியவை அத்தோடு அவை சிறிய ஆறாக பெருகி ஓடும். இதனை கடவுளுடைய வல்லமை என்பது இவருடைய பார்வை. இயற்கையின் கடவுள்தான் இதற்கு காரணம் என அழகாக காண்கிறார் ஆசிரியர்.

வ.19: யாக்கோபை அவருடைய இன்னொரு பெயரால் அழைக்கிறார். இங்கே யாக்கோபு மற்றும் இஸ்ராயேல் ஈசாக்கின் மகனை குறிக்கிறது என்பதைவிட இஸ்ராயேல் நாட்டையும் அதன் மக்களையும்தான் குறிக்கிறது என்றுதான் எடுக்க வேண்டும் (יַעֲקֹ֑ב யா'கோவ்| יִשְׂרָאֵל யிஸ்ரா'யேல்). அதேபோல தன்னுடைய வாக்கையும், நியமங்களையும் ஒத்தகருத்துச் சொற்களாக பாவிக்கிறார் (דָּבַר டவார் வாக்கு, חֹק ஹொக் நியமம்).

வ.20: இஸ்ராயேலின் முக்கியத்துவமும் தனித்துவமும் காட்டப்படுகிறது. கடவுள் இஸ்ராயேலுக்கு செய்த நன்மைத்தனத்தின் அடையாளமாக, இஸ்ராயேல் மக்கள் கொண்டுள்ள கடவுளின் நியமங்கள் பார்க்கப்படுகிறது. அதேவேளை கடவுள் இதனை வேறெவர்க்கும் செய்யவில்லை என்றும் நினைவூட்டப்படுகிறது. முதலாவது வரியில் தொடங்கியது போலவே இறுதி வரியிலும் அல்லேலூயா என்று இந்த திருப்பாடல் நிறைவடைகிறது (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்| ஆண்டவரைப் புகழுங்கள்).



இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 10,16-17

16கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்கு கொள்ளுதல் அல்லவா! 17அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்.

கொரிந்து திருச்சபையில் நிலவிய பல நடைமுறை சிக்கல்கள் மற்றும் கிரேக்க மதங்களின் தாக்கங்கள் போன்றவற்றை திருத்த வேண்டிய தேவை பவுலுக்கு இருந்தது. சிலைவழிபாடு கிரேக்க கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது. கிரேக்கத்திலே பல தெய்வங்களுக்கு வழிபாடுகள் நடந்துகொண்டிருந்தன. இவற்றில் சீயூஸ், தியானா, அர்தமிஸ் போன்ற தெய்வங்களும், அவற்றிற்கான ஆலயங்களும் பிரசித்தி பெற்று விழங்கின. இவற்றின் தாக்கம் ஆரம்ப திருச்சபையில் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது இந்த பத்தாவது அதிகாரத்திலே புலப்படுகிறது. சிலைவழிபாட்டை εἰδωλολατρία| எய்தோலொலாத்ரியா என்று கிரேக்க மொழி அழைக்கிறது. இதனைவிட பிழையான வழிபாடுகள், உதாரணமாக பிரிவினை, குழுவாதம், பண மோகம், விபச்சாரம், அகங்காரம், கட்டுப்பாடற்ற வாழ்வு போன்றவையும் சில வேளைகளில் சிலைவழிபாடாக பார்க்கப்பட்டது. இந்த இரண்டாவது அர்த்தத்தையே பவுல் இந்த அதிகாரத்தில் கொரிந்தியருக்கு நினைவூட்டுகிறார் போல தென்படுகிறது.

வ.16: புதிய ஏற்பாட்டில் நற்கருணையைப் பற்றி பேசுகின்ற மிக முக்கியமான வரிகளில் இந்த வரியும் ஒன்று. இந்த வரியில் நற்செய்தியாளர்கள் சொல்லவந்த ஆண்டவரின் இறுதி இராவுணவு மற்றும் நற்கருணைவிருந்து போன்றவற்றை அப்படியே இரத்தினச் சுருக்கம் செய்துவிட்டார் பவுல் அடிகளார்.

அ. திருவிருந்துக் கிண்ணத்தில் பங்குகொள்ளுதல் கடவுளைப் போற்றுதல் என்கிறார்- இதனை கிரேக்க விவிலியம் 'ஆசீரின் கிண்ணம் அதனை நாம் ஆசிக்கிறோம்' என்று கொண்டுள்ளது (ποτήριον τῆς ⸀εὐλογίας ὃ εὐλογοῦμεν பொடேரியென் டேஸ் எவுலொகியாஸ் ஹோ எவுலெகூமென்). இந்த கிண்ணம் என்ற சொல் சாதாரண கிண்ணத்தை குறிக்காமல், இராவுணவு மற்றும் அதில் குடித்த பானத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. இந்த பருகுதல் ஆண்டவரின் இரத்தில் பங்குகொள்ளுதலை நினைவூட்டவில்லையா என்ற கேள்வியை கேட்கிறார். இதிலிருந்து ஆரம்ப கால திருச்சபையில் இப்படியான வழிபாடு தொடங்கிவிட்டது என்பது புலப்படுகிறது.

ஆ. அப்பம் பிட்டு உண்ணுதல்- இயேசு இறுதி இராவுணவில் செய்தது அவருடைய உயிர்ப்பின் பின் தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது என்பதை இந்த பகுதி காட்டுகிறது. அப்பத்தை பிட்டு உண்ணுதல் இஸ்ராயேல் மக்களுக்கு மிக சாதாரண விடயம். மோசேயுடைய காலத்திற்கு பின் இது பாஸ்காவை குறித்தது. இயேசுவின் காலத்தில் இது அவருடைய சாவையும் மீட்பையும் குறிக்கும் விருந்தாக மாறியிருக்கிறது. அப்பம் பிடுதலை, கிரேக்க விவிலியம் 'அப்பத்தை அதை உடைக்கிறோமே' என்ற மொழிபெயர்க்கிறது (τὸν ἄρτον ὃν κλῶμεν டொன் அர்டொன் ஹொன் கிலோமென்).

இந்த இரண்டு செயற்பாடுகளையும் பவுல் கேள்விகளாக கேட்பதன் வாயிலாக, கிரேக்க கொரிந்திய கிறிஸ்தவர்கள் இதனை அர்த்தம் புரியாமல் செய்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. (இன்று சில இடங்களில் நற்கருணை பந்தி என்வென்று தெரியாமல் பகிரப்படுவது போல).

வ.17: கிறிஸ்துவிலே எந்த பாகுபாடும் கிடையாது. கிறிஸ்தவத்துள் பிரிவினையும் பாகுபாடும் அடிப்படையிலே பிழையானவை என விளக்க இந்த ஒரு வரி மட்டுமே போதுமானது. நாம் உண்ணுவது அப்பம் அல்ல அது கிறிஸ்துவின் உடல், ஆக அப்பம் ஒன்றே அதேபோல் கிறிஸ்துவும் ஒருவரே, இதனால் அதனை உண்பவர்களும் ஒன்றானவர்களே என்ற அழகான வாதத்தை பவுல் பிளவுபட்டிருந்த கொரிந்திய சபைக்கு புரியவைக்கிறார்.


நற்செய்தி வாசகம்
யோவான் 6,51-58

மானிட மகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.' 52'நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது. 53இயேசு அவர்களிடம், 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். 54எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 55எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். 56எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். 57வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். 58விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.'


யோவான் நற்செய்தியில் ஆண்டவரின் இறுதி இராவுணவு மற்றும் நற்கருணை ஏற்படுத்தல் நிகழ்வு வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். யோவான் அதிகமான அடையாளங்கள் வாயிலாக பேசுகிறவர் என்பதை இந்த பகுதியை வாசிக்கும் போது சிரத்தையில் கொள்ளவேண்டும். இந்த ஆறாவது அதிகாரம் ஆண்டவர் இயேசு சீடர்களோடு இரண்டாவது பாஸ்கா விழாவை கொண்டாடியபோது நடந்தவையாக எழுதப்பட்டுள்ளன. இந்த அதிகாரத்தில் முதலில் இயேசு பெருந்திரளான மக்களுக்கு திபேரியக் கடற்கரையில் அப்பத்தையும் மீனையும் பெருகச் செய்து உண்ணக்கொடுக்கிறார் (வவ.1-15). இது பெரும் ஆச்சரியத்தை இயேசு மீது மக்களுக்கு உண்டாக்குகின்றது. ஏற்கனவே வயிறாற உண்ட மக்கள் அடுத்த நாளும் இதே போல் அப்பத்தை எதிர்பார்த்து இயேசுவை வேண்டுகின்றனர். இதற்கு முன் இயேசு ஏற்கனவே கடல் மீது நடந்து தன்னுடைய சீடர்களின் பார்வையை ஈர்க்கிறார் (வவ.16-21). மக்கள் உணவிற்காக இயேசுவை தேட அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி அழியாத உணவு பற்றிய படிப்பினையை போதிக்கிறார் (வவ.22-33).

இயேசு அழியாத உணவாக தன்னுடைய உடலைக் காட்டி, தான் தான் விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு என்கிறார் (ἐγώ εἰμι ὁ ἄρτος ὁ καταβὰς ἐκ τοῦ οὐρανοῦ எகோ எய்மி ஹொ அர்டொஸ் ஹொ கடாபாஸ் எக் டூ ஹூராநூ) இருப்பினும் மக்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர். அத்தோடு இது அவர்கள் மத்தில் பலமான சலசலப்பை ஏற்படுத்துகிறது. யூதர்கள் மாமிசத்தை இரத்தத்தோடு உண்பது கிடையாது அதேவேளை மனித மாமிசத்தை அவர்கள் நினைத்தும் பார்க்க முடியாதவர்கள். இந்த இரண்டையும் இயேசு தருவதாக சொல்லி அவர்கள் தம் கோபத்தின் உச்சத்திற்கே போகிறார்கள். சிலர் இயேசுவை விட்டு பிரிந்தும் சென்றுவிடுகிறார்கள் (வவ.34-50).

இயேசுவும் விடுவதாக இல்லை தன்னுடைய உண்மையை இன்னும் ஆழமாக விளங்கப் படுத்த இந்த பகுதியில் முயற்ச்சிக்கிறார். இங்கே தன்னுடைய உடலும் இரத்தமும்தான் உண்மையான உணவு அது அழியா உணவு என்று கற்பிப்பதில் கருத்தாய் இருக்கிறார்.

வ.51: தன்னை, விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என்கிறார் (ἐγώ εἰμι ὁ ἄρτος ὁ ζῶν ὁ ἐκ τοῦ οὐρανοῦ καταβάς எகோ அர்டொஸ் ஹொ ட்சோன் ஹொ எக் டூ ஹூராநூ காடாபாஸ்). இதன் மூலம் மன்னா என்ற இஸ்ராயேலர் பாலைநிலத்தில் உண்ட உணவு பின்னுக்கு தள்ளப்படுகிறது. மன்னாவை உண்டவர் மீண்டும் பசியால் வாடினர், அவர்கள் அனைவரும் இறந்தும் போயினர். ஆனால் இந்த புதிய வானக உணவு பசியையும், சாவையும் இல்லாமல் ஆக்குகின்றது.

இயேசு தன்னுடைய உடலான உணவான உலகு வாழ்வதற்காகவே கொடுப்பதாகச் சொல்கிறார். மன்னா கடவுளால் கொடுக்கப்பட்டது, இங்கே இயேசுவுடைய உடலை கொடுப்பவரும் இயேசுவாகவே இருக்கிறார், இதனால் அவர் முதல் ஏற்பாட்டு கடவுள்தான் என்பதைக் காட்டுவது போல இருக்கிறது. இங்கே உலகு (κόσμος கொஸ்மொஸ்) என்பது சாதாரணமான உலகை குறிக்காமல் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்பவரையே குறிக்கும். இதே நற்செய்தியில் வேறு இடங்களில் இதே சொல் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களை குறிக்கும்.

வ.52: யூதர்களின் கேள்வி நியாயமானதாக தோன்றும். யூதர்கள் மனித சதையை உண்பவர்கள் அல்ல. அவர்கள் நாகரீகமடைந்தவர்கள், அத்தோடு இரத்தத்தை உண்ணாதவர்கள். இதனால் இவர்களின் கேள்வி நியாயமானதாக தோன்றலாம். யோவான் தொடக்கத்திலிருந்தே யூதர்கள் இயேசு சொல்ல வருகின்ற செய்தியை புரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறார். இங்கே யூதர்கள் என்பவர்களும் அனைத்து யூதர்களையும் குறிக்கமாட்டார்கள், இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களையே குறிப்பார்கள் (Ἰουδαῖοι யூதாய்யொய்- யூதர்கள்).

வ.53: யோவான் நற்செய்தியில் இயேசு அனைவரின் உள்ளத்தையும் அறிகின்ற சர்வ வல்லமையுடைய கடவுள், இதனால் அவர் இவர்களின் முணுமுணுப்பை இலகுவாக அறிகிறார், இதனால் தன் செய்தியை மீண்டுமாக வலியுறுத்துகிறார். அதாவது அனைவரும் தன்னுடைய சதையை உண்ணவேண்டும், அவர் இரத்தத்தை குடிக்கவேண்டும் என்பது அந்தச் செய்தி. இல்லையெனில் இவர்களுக்கு வாழ்வு இல்லை (οὐκ ἔχετε ζωὴν ἐν ἑαυτοῖς ஊக் எகெடெ ட்சோஏன் என் எயாவ்டொய்ஸ்). இப்படியாக யூதர்கள் வாழ்ந்தும் வாழமலேயே இருக்கிறார்கள் என்பதை யோவான் அடையாளமாக காட்டுகிறார்.

வ.54: இதற்கு எதிர்மாறாக இயேசுவின் சதையை உண்டு அவர் இரத்தத்தை குடிப்பவர் நிலைவாழ்வை கொண்டுள்ளவர் அத்தோடு அவர்கள்தான் இறுதி நாளில் உயிர்த்தெழுகிறவர்கள் என்பதும் சொல்லப்படுகிறது. இது ஆரம்ப கால கிறிஸ்தவர்களை குறிக்கிறது. ஆக நம்பிக்கையில்லா யூதர்களுக்கு வாழ்வில்லை மாறாக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கே நிலைவாழ்வு என்பது காட்டப்படுகிறது.

வ.55: இந்த வசனம் மீண்டுமாக இயேசுவின சதையையும் அவர் இரத்தத்தையும் விளக்குகிறது. இயேசுவின் சதை உண்மையான உணவு (σάρξ μου ⸀ἀληθής ἐστιν βρῶσις சார்க்ஸ் மூ அலெதேஸ் எஸ்டின் பிரோசிஸ் - என் உடல் உண்மையான உணவு), அவர் இரத்தம் உண்மையான பானம் (αἷμά μου ⸁ἀληθής ἐστιν πόσις ஹாய்மா மூ அலெதேஸ் எஸ்டின் பொசிஸ் - என் இரத்தம் உண்மையான பானம்.)

வ.56: இந்த வரி இணைப்பைப் பற்றி சொல்கிறது. இந்த உடலும் இரத்தமும்தான் ஒருவரை இயேசுவோடு இணைந்திருப்பதாகச சொல்கிறது. கடவுளோடு இணைந்திருப்பதற்காக இதுமுதல் இருந்த சட்டங்கள் மற்றும் விருத்த சேதனம் போன்றவை இப்போது கேள்விக்குரியாகிறன. இந்த வரியை கிரேக்க விவிலியம் இப்படி காட்டுகிறது (ἐν ἐμοὶ μένει κἀγὼ ἐν αὐτῷ - என் எமொய் மெனெய் காகோ என் எவ்டோ - என்னில் அவர் நிலைக்கிறார் அதேபோல் அவரின் நான்). நிலைத்திருத்தல் அல்லது இணைந்திருத்தல் என்பது யோவான் நற்செய்தியில் மிக முக்கியமான சொற்பிரயோகம் இதற்கு பின்னால் பலமான இறையியல் பொருள் ஒன்று உள்ளது.

வ.57: இந்த வரி யூதர்களின் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது. தந்தை என்கிறவர் வாழுகின்ற கடவுள் (ὁ ζῶν πατὴρ ஹொ ட்சோன் பாடேர் - வாழும் தந்தை). இது யூதர்களுக்கு நன்கு தெரியும். முதல் ஏற்பாடு பல முறை இதனை விளங்கப்படுத்துகிறது. இவர்தான் இயேசுவை அனுப்பியவர் (ἀπέστειλέν με அபெஸ்டெய்லென் மெ). இது யூதர்களின் கேள்வியான, யார் இயேசுவை அனுப்பியது என்பதற்கான விடை. அதேபோல இயேசுவை உண்கிறவர்கள் அவரால் வாழ்கிறார்கள் அதாவது அவரை உண்ணாதவர்கள் வாழ்ந்தும் இறந்தவர்களே என்பது செய்தி. இதிலிருந்து உண்மையாக வாழ்கிறவர்கள் யார், அவர்கள் யாரால் வாழ்கிறார்கள் அத்தோடு வாழ்ந்துகொண்டும் இறந்தவர்கள் யார் என்பதும் சொல்லப்படுகிறது.

வ.58: இந்த இறுதி வசனம், மன்னாவின் இரண்டாம் தரத்தை காட்டுகிறது. இயேசு தன்னுடைய முன்னோர்களை ஏற்றுக்கொள்கிறார். அதாவது அவருக்கு யூத இனத்தோடு பகையில்லை மாறாக நம்பிக்கையின்மையோடுதான் பகை. மன்னாவை உண்டவர்கள் அனைவரும் இறந்தார்கள். அது யூதர்களுக்கும் நன்கு தெரியும். அதற்கு மாறாக இயேசுவை உண்பவர்கள் இறவாதவர்கள் இதுதான் இந்த பகுதியின் மையச் செய்தி (ζήσει εἰς τὸν αἰῶνα ட்சேசெய் எய்ஸ் டொன் அய்யோனா - உண்பவர் என்றும் வாழ்வார்).

இயேசு ஆண்டவர் கொடுத்த நற்கருணை என்பது அவரது உடல்,

நாம் உண்ணும் நற்கருணை, வாழ்வின் உணவு,

இது சாகா வரம் தரும் சகா உணவு.

இது நம்மில் வேலை செய்யாவிடில்,

அது பல கேள்விகளை நம் விசுவாசத்திலுல் வாழ்விலும் எழுப்பும்.

அன்பு ஆண்டவரே நற்கருணை என் வாழ்வாக

வரம் தாரும், ஆமென்.