இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






திரித்துவ பெருவிழா (அ)

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 34,4-9
பதிலுரைப் பாடல்: தானியேல் 3,52-56
இரண்டாம் வாசகம்: 2கொரிந்தியர் 13,11-13
நற்செய்தி: யோவான் 3,16-18


தாய் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான விசுவாச படிப்பினைகளில், தமதிரித்துவம் மிக முக்கியமான படிப்பினையாகும். புலன்களுக்கும், மனித அறிவுக்கும் உட்புக முடியாத இறைவன், தன்னுடைய இயல்பைப் பற்றி அங்கும் இங்குமாக விவிலியத்தில் வெளிப்படுத்துகிறார். இறைவனின் தன்மையையும், சாரத்தையையும் பற்றிய வெளிப்படுத்தல்களை இறைவாக்கினர், நீதி தலைவர்கள், அரசர்கள், விவிலிய ஆசிரியர்கள் என்று பலர் வெளிப்படுத்தினாலும், இயேசு ஆண்டவரே இறைவனின் உண்மைகளை நிறைவாக வெளிப்படுத்தினார் என்பது நமது விசுவாசம். அவர் கடவுளாகவும் அந்த சாரத்தையும், தன்மையையும் கொண்டுள்ளவர் என்பதனாலும் இந்த வெளிப்பாடு முக்கியம் பெறுகிறது. திரித்துவத்தின் விளக்கங்கள், 'தோற்றக்கொள்கை' (modalism) என்ற பேதகத்தின் காரணமாகவே வளர்ச்சியடைந்தது என வரலாற்றில் காணலாம். தோற்றக் கொள்கை, கடவுள் பல தோற்றங்களில் தோன்றினார் அவரில் மூன்று ஆட்கள் இல்லை என்று ஆரம்ப திருச்சபையுடன் வாதிட்டது. திரித்துவம் (Trinitas) என்ற நம்பிக்கை ஆரம்ப கால திருச்சபையில், தந்தை மகன் தூய ஆவியின் உறவை ஒரே கடவுள் விசுவாசத்தில் புரிந்து கொள்ள உருவானது. திருச்சபை தந்தை தெர்த்துல்லியன் இந்த சொல்லை அறிமுகப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தச் சொல்லை விவிலியத்தில் இவ்வாறே காண இயலாது, ஆனால் இதன் சிந்தனைகளை கத்தோலிக்க விசுவாசத்தின் படி, முதல் மற்றும் புதிய ஏற்பாடுகளில் காணலாம்.

முதல் ஏற்பாடு, கடவுளின் ஆவி, கடவுளின் தூதர், என்றபடி இறைவனில் ஆட்கள் தன்மையை அடையாளம் காட்டுகிறது (தொ.நூ. 1,2: வி.ப. 23,23). அத்தோடு கடவுளுக்கு பன்மை பதங்கள் பாவிக்கப்படுவதும், கடவுளின் வார்த்தையையும், மெய்யறிவையும், ஆட்களாகக் காட்டுவதும் இதற்கான உதாரணங்கள் என சிலர் வாதிடுகின்றனர் (தொ.நூ 11,7:தி.பா 33,6: நீமொ 8,12). முதல் ஏற்பாட்டில் மூன்று மனிதர்கள் ஆபிரகாமை சந்தித்த நிகழ்வு பாரம்பரியமாக முதலாவது திரித்துவ காட்சி என்று நம்பப்படுகிறது (காண் தொ.நூ 18,1-2). ஆனால் நேரடியாக எந்த இடத்திலும் திரித்துவக் காட்சிகளை முதல் ஏற்பாட்டில் காணுவது இலகல்ல. பல கடவுள் சிந்தனைகளைக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் இஸ்ரயேலர் வாழ்ந்த படியால், ஒரே கடவுள் நம்பிக்கையை விதைப்பது இஸ்ரயேல் சமய தலைவர்களின் முக்கியமான போராட்டமாக இருந்தது (இ.ச 6,4-5). இந்த ஒரே கடவுள் நம்பிக்கையை ஒரு இறைவாக்கு போராட்டமாக இறைவாக்கினர் எலியா முன்னெடுத்தார் என இஸ்ராயேல் பாரம்பரியம் நம்புகிறது, இதனை விவிலியத்திலும் ஆங்காங்கே காணலாம்.

புதிய ஏற்பாட்டில், நேரடியாக திரித்துவ வெளிப்பாட்டைக் காணமுடியாவிடினும், அதன் சிந்தனைகளை கொஞ்சம் திருப்தியாக காணலாம். திரித்துவத்தின் வெளிப்பாட்டை முதலில் அன்னை மரியாவின் மங்களவார்த்தை நிகழ்வில் காணலாம் (காண்க லூக் 1,35). இங்கணம் அன்னை மரியாவிற்குத்தான் திரித்துவம் முதன் முதலில் வெளிப்படுத்தப்பட்டது என்ற ஒரு கத்தோலிக்க வாதமும் இருக்கிறது. இயேசு பலவேளைகளில் தான் தந்தையிடம் இருந்து வந்ததாகவும், அவருடைய கட்டளைகளை மட்டுமே செய்வதாகவும், தானும் தந்தையும் ஒன்று என்றும், பின்னர் தனது துணையாளரை அனுப்புவதாகவும் கூறுகிறார் (காண்க யோவா 14-16). தன்னை மகன் என்று கூறுகின்ற ஆண்டவர், துணையாளரை தனது ஆவி, இறைவனின் ஆவி என்றும் கூறுகிறார். இறுதியான கட்டளையையும் திரித்துவத்தின் பெயரிலேயே ஆண்டவர் கொடுக்கிறார் (காண்க மத் 28,19). பவுலுடைய கடிதங்கள் இந்த திரித்துவ கடவுளின் ஆசீரை மையப்படுத்திய வாழ்த்துக்களை தொடக்கவுரையாகவும் முடிவுரையாகவும் கொண்டிருக்கின்றன (காண்க 2 கொரி 13,14). இந்த வாழ்த்துக்களில் இருந்து ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச சத்தியங்களை ஊகிக்கலாம். பிற்காலத்தில் நிசேயா பொதுச்சங்க முன்-பின் (கி.பி 325) காலத்தில் இந்த விசுவாச சத்தியம் மிக வளர்ச்சி பெற்றது.

இறைவனின் குழுவாழ்க்கை மற்றும் இறைவனின் ஆட்கள் மத்தியிலான அன்பு, உறவு, புரிந்துணர்வு போன்றவை சாதாரண கிறிஸ்தவ மனித வாழ்க்கைக்கு மிகவும் உதவக்கூடிய உதாரணங்களாகும். மற்ற சமய சகோதரர்களுடனான விட்டுக்கொடுப்பிலும், புரிந்துணர்விலும், இந்த திரித்துவ நம்பிக்கை முக்கியமான அடித்தளாமாக அமையலாம். முக்கியமாக சமகால இந்து மதம் மும்மூர்த்திகள் (பிரம்மன்-விஷ்ணு-சிவன்) நம்பிக்கையை அதிகமாகவே அறிக்கையிடுகிறது.

முதல் வாசகம்
விடுதலைப் பயணம் 34,4-9

4அவ்வாறே, மோசே முன்னவை போன்ற இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டார். ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டபடி, அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார். 5ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, 'ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார். 6அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், 'ஆண்டவர்! ஆண்டவர்!; இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர். 7ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்' என அறிவித்தார். 8உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, 9'என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்' என்றார்.

விடுதலைப் பயண நூலின் இந்த அதிகாரம், இரண்டாவது பத்துக்கட்டளையைப் பற்றி பேசுவதால் முக்கியத்துவம் பெறுகிறது. ஆண்டவர் மோசேக்கு பல செய்திகளையும் ஒழுங்குகளையும் கொடுத்த பின்னர், இறுதியாக அவருக்கு பத்துக்கட்டளையைக் கொடுக்கிறார் (ஒப்பிடுக வி.ப 32,15). மோசே மலையிலிருந்து இறங்கி வர காலம் தாழ்த்துவதைக் கண்ட மக்கள், ஆரோனை கட்டாயப்படுத்தி தங்களுக்கென்று பொற்சிலையை செய்து கொள்கிறார்கள். விவிலிய ஆசிரியர் இந்த இடத்தில் ஆரோனை குறைவான குற்றம் செய்தவராகக் காட்டி, மக்களைத்தான் பாவிகளாக காட்டுகிறார். ஆனால் மோசே ஆரோனுக்கு சொல்லும் வார்த்தைகளை அவதானித்தால் இந்த பொற்கன்று உருவாக்கத்திற்கும், மக்களின் பாவத்திற்கும், குருவான ஆரோனுக்கு முக்கிய பங்கு இருப்பது தெளிவாகக் தெரிகிறது (காண்க வி.ப 32,21-26). மோசே மக்களின் பாவ வாழ்க்கையை கண்டதாலும், கடவுளுடைய தண்டனை தரும் வாhத்தைகளை மீண்டும் மீண்டும் தியானித்ததாலும் தன்னுடைய கைகளில் இருந்த மரத்தால் செய்யப்பட்ட பத்துக் கட்டளைகளை உடைத்துப் போடுகிறார். மக்களை சுத்தப்படுத்திய பின்னரும் ஆண்டவரின் கோபம் தணிந்த பின்னரும், இப்போது மோசேக்கு புதிய பத்துக்கட்டளைகளின் பிரதி கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த முறை பலகையினால் அல்ல மாறாக கற்களினால் அது செய்யப்படுகிறது. எதற்காக இந்த முறை கற்களினால் கட்டளைகளின் பிரதி கொடுக்கப்படுகிறது என்பது தெரியவில்லை, ஒருவேளை இது உறுதியையும், அத்தோடு இனி இந்த பிரதி உடைக்கப்படாதது என்பதைக் குறிக்கவும் இப்படி செய்யப்படலாம்.

வ.1: பின்வரும் அதிகமான வரிகளில் கடவுளே எழுவாயகவும் பேசுபவராகவும் இருக்கிறார். இந்த வரி கடவுள் மோசேக்கு கொடுத்த கட்டளையை நினைவூட்டுகிறது. கடவுள் மோசேக்கு முன்னைய பலகையிலாலான கட்டளைகளை நினைவூட்டுகிறார் அதாவது தன்னுடைய கட்டளைகளில் மாற்றம் இல்லை என்பதை உணர்த்துகிறார். இந்த முறை கற்களினால் புதிய பிரதியை வெட்டச் சொல்கிறார், அத்தோடு அது முன்னயைதப் போல இருக்கவேண்டும் என்கிறார் (פְּסָל־לְךָ שְׁנֵֽי־לֻחֹת אֲבָנִים כָּרִאשֹׁנִים).

வ.2: ஆண்டவருடைய சீனாய் மலையுச்சியில் தான் முதல் கட்டளைகளும் கொடுக்கப்பட்டன, அதே மலையில் இப்போது இரண்டாம் முறையாகவும் புதிய பிரதிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த சீனாய் மலை (סִינַי) என்பது பாலஸ்தீன வரைபடத்திலும் இஸ்ராயேல் மக்களின் விடுதலைப் பயண அனுபவத்திலும் முக்கியமான இடத்தை பெறுகிறது. விவியத்தில் சில இடங்களில் இந்த மலை ஒரேபு மலை அல்லது பரான் மலை என அழைக்கப்படுகிறது. மேற்கிலே சுயஸ் வளைகுடாவை மற்றும் கால்வாயையும், கிழக்கிலே அக்காபா வளைகுடா மற்றும் நெகெப் பாலைவனத்தையும், வடக்கிலே மத்தியதரைக் கடலையும், தெற்கிலே செங்கடலையும் கொண்டு, மிக முக்கியமான பிராந்தியத்திலே இது அமைந்திருக்கிறது. இன்று இந்த இடம் எகிப்து நாட்டிற்கு சொந்தமாக இருக்கிறது. விவிலிய மற்றும் அரேபிய பாரம்பரியங்கள், சீனாய் மலையை மோசேயின் மலை எனவும் அழைக்கின்றன (ஜெபெல் மூசா). விவிலிய விளக்கங்களின் படி இந்த சீனாய் மலையின் அத்திவாரத்திலிருந்த பகுதியில்தான் இஸ்ராயேல் மக்கள் அதிக காலம் தங்கி, தங்கள் கூடாரங்களை அடித்து வாழ்ந்தனர். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கான பயணத்தின்போது இந்த இடம் மிக முக்கியமான அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. இந்த இடத்தில் இவர்கள் மோசயின் மத்தியஸ்துவத்தின் முக்கியத்தை உணர்ந்தார்கள், இங்கேதான் அவர்கள் கடவுளோடு மிக முக்கியமான உடன்படிக்கையை செய்தார்கள், இங்கேதான் இவர்கள் இறைவெளிப்பாட்டையும் பார்த்தார்கள், இங்கேதான் அவர்கள் இறைவனின் கோபத்தையும் தண்டனையும் பெற்றார்கள்.

வ.3: இந்த வரியில், ஆசிரியர் கடவுளின் தூய்மையை அடையாள வார்த்தைகள் வாயிலாக காட்டுகிறார். கடவுள் எவ்வளவுதான் இஸ்ராயேல் மக்களோடு அந்நியோன்யமாய் இருந்தாலும், அவருடைய பரிசுத்த தன்மையை அவர் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. இதனை இஸ்ராயேல் மக்களுடைய தனித்துவமான அடையாளமாகவும், மற்றைய கானானிய மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளின் அக்கால கடவுள் சிந்தனைகளிலிருந்து வேறுபடுவதாகவும் காட்டுகின்றார் ஆசிரியர். ஆண்டவருடைய சீனாய் மலையில் யாரும் ஏறிவராமல் இருக்க கடவுள் எச்சரிக்கை விடுகிறார், இந்த எச்சரிக்கை விலங்குகளுக்கும் கொடுக்கப்படுகிறது. அத்தோடு இந்த மலைக்கு எதிராக எந்த விலங்கும் மேயவும் கூடாது என்பதும் காட்டப்படுகிறது. இவை ஆண்டவர் பரிசுத்தமானவர் என்பதனை காட்டும் அடையாளங்கள்.

வ.4: மோசே கடவுள் கொடுத்த கட்டளைகளை நிறைவேற்ற இரண்டு கற்பலகைகளை வெட்டிச் செய்கிறார் அத்தோடு இவை முன்னையதை ஒத்திருக்கின்றன (וַיִּפְסֹ֡ל שְׁנֵֽי־לֻחֹ֨ת אֲבָנִ֜ים כָּרִאשֹׁנִ֗ים). மோசே அதிகாலையில் மலைக்கு சென்று ஆண்டவரை தரிசிக்கிறார். அதிகாலை செபம் செய்யும் நேரம் அத்தோடு அதிகாலையில் ஆண்டவரின் பிரசன்னத்தை பெறலாம் என்பது அக்காலத்திலே சிந்தனையில் இருந்திருக்கிறது என்பதை இங்கே காணலாம். இயேசுவும் பல வேளைகளில் அதிகலையில் எழுந்து செபம் செய்வதாக நற்செய்தியாளர்கள் காட்டுவதை இங்கே நினைவிற்கு எடுக்கலாம் (காண்க மாற் 1,35). இப்படியாக அதிகாலையில் எழுதல் என்பது (וַיַּשְׁכֵּ֨ם מֹשֶׁ֤ה בַבֹּ֨קֶר֙) இறைவனின் அனுபவத்தை பெறும் நல்ல சந்தர்ப்பம் என்பதைக் காட்டுகிறது.

வ.5: இந்த வரியிலிருந்து பேசுகிறவராக ஆசிரியர் கடவுளைக் காட்டுகிறார். ஆண்டவர் மேகதில் இறங்கி வருகிறார் என தமிழ் விவிலியம் மொழிபெயர்க்கிறது (וַיֵּרֶד יְהוָה בֶּֽעָנָן). இதனால் கடவுள் மேகத்திற்கு மேலாக எதோ ஒரு இடத்தில் இருக்கிறார் என விவிலிய ஆசிரியர் கூற விழைகிறார் எனலாம். அத்தோடு இறங்கி வருகின்ற ஆண்டவர் முதல் முறையாக விவிலியத்தில் ஒரு மனிதருடன் நிற்கிறார். மோசே இந்த இடத்தில் மிக முக்கியமான நபராக காட்டப்படுகிறார். கடவுள் மோசேக்கு அருகில் நிற்கிறார் (וַיִּתְיַצֵּב עִמּ֖וֹ שָׁם). அடுத்ததாக வருகின்ற சொற்றொடரை விளக்குவது மிக கடினமாக இருக்கும். கடவுள் தன்னுடைய பெயரை அவரே அறிக்கையிடுகிறார் (וַיִּקְרָא בְשֵׁם יְהוָה). இதன் வாயிலாக அருகில் நிற்பவர் கடவுள் என்பதும், அவருடைய பெயர் யாவே என்பதும் புலப்படுகிறது.

வவ.6-7: அருகில் நின்ற கடவுள் இப்போது கடந்து செல்கிறார் என்று ஆசிரியர் காட்டுகிறார். இதன் வாயிலாக கடவுள் ஒரே இடத்தில் இருப்பவராகவோ அல்லது அவரை மோசே முழுமையாக புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் உள்ளவராகவோ காட்டவில்லை. கடவுள் இடங்களை கடந்து போகிறார் இங்கே மோசேயின் முகத்தைக் கடந்து போகிறார் (וַיַּעֲבֹר יְהוָה). இந்த கடவுள் தன்னைப் பற்றி இரண்டு வகையான வரைவிலக்கணங்களை சொல்கிறார். இந்த கடவுள் வரைவிலக்கணங்கள் முதல் ஐந்து நூல்களில் (தோறா) மீண்டும் மீண்டும் எதிரொலிக்கினறன. இந்த வரைவிலக்கணங்களை சொல்பவராக மோசே இருக்க முடியாது, இதனை சொல்பவராக கடவுளே இருக்கிறார். அத்தோடு இந்த வரைவிலக்கணங்களை அல்லது கடவுளின் பண்புகளை, செபம் மற்றும் புகழ்ச்சியாகவும் எடுக்க இயலாது. இவை பிரகடனங்களாகவே எடுக்கப்படவேண்டும். முதல் ஏற்பாட்டில் 'யாவே' என்கின்ற பெயரின் அர்த்தமாகவும் இதனை எடுக்கலாம்.

அ. ஆண்டவர் ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு செய்கிறவர் (נֹצֵ֥ר חֶ֙סֶד֙ לָאֲלָפִ֔ים). ஆயிரம் தலைமுறைகள் என்பது இங்கு எண்ணமுடியாத தலைமுறைகளைக் குறிக்கிறது. அதாவது ஆண்டவருடைய பேரன்பிற்கு முடிவே கிடையாது என்பதை இது காட்டுகிறது. அவர் தவறுகளையும், குற்றங்கையும், பாவத்தையும் மன்னிக்கிறவர் (נֹשֵׂ֥א עָוֹ֛ן וָפֶשַׁע וְחַטָּאָה). இப்படியாக கடவுளுடைய செயற்பாடுகளை குறிக்க பெயரெச்சங்கள் வினைக்காக பயன்படுகின்றன, இதனால் கடவுளுடைய செயற்பாடுகள் முடிவற்றவை மற்றும் மாறாதவை என்பது காட்டப்படுகிறது.

ஆ. ஆண்டவரின் நேர் முகம் காட்டப்படுகின்ற அதே வேளை, அவருடைய மறை முகமும் காட்டப்படுகிறது. இந்த பண்புகள் ஆண்டவர் ஒரு விளையாட்டுப் பொருளல்ல, மாறாக அவர் நீதியின் தேவன் என்பதும் காட்டப்படுகிறது. ஆண்டவரின் தண்டனையிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பது சொல்லப்படுகிறது (וְנַקֵּה֙ לֹ֣א יְנַקֶּ֔ה). இன்னொரு புரியாத விளக்கம் இந்த இடத்தில் வருகிறது, அதாவது பெற்றோரின் குற்றங்கள் பிள்ளைகள் மீது கண்டிக்கப்படும் எனவும், அது மூன்றாம் நான்காம் தலைமுறைவரை கண்டித்து தீர்க்கப்படும் என்னும் ஒரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது. கடவுள் ஏன் பெற்றோர்களின் பாவங்களுக்கு பிள்ளைகளை கண்டிக்கிறார்? இந்த கேள்வியை பல விவிலிய ஆர்வலர்களும் வாசகர்களும் கேட்கிறார்கள்.

இந்த வரியை மிகவும் கவனமாக பாhக்கவேண்டும். விவிலிய ஆசிரியர் ஆண்டவருடைய இரக்கத்தையும் அன்பையும் இரக்கத்தையும் ஆயிரம் தலைமுறைகளுக்கு ஒப்பிடுகிறார் ஆனால் அவருடைய தண்டனையை நான்கு தலைமுறைகளுக்கு மட்டுமே ஒப்பிடுகிறார். ஆண்டவர் முடிவடையாத அன்புடையவர் அதேவேளை அவர் நீதியின் கடவுள் என்பதையும் அவர் நினைவூட்ட மறக்கவில்லை. பெற்றோரின் குற்றங்களும், பாவங்களும் பிள்ளைகள் மேல் தாக்கத்தை செலுத்துகின்றன என்பது ஆரம்ப கால விவிலிய ஆசிரியர்களின் கருத்து. பிற்கால இறைவாக்கினர்கள் முக்கியமாக எசேக்கியேல் போன்றவர்கள் இந்த சிந்தனையிலிருந்து மாறுபடுகிறார்கள். அவரவர்கள், அவரவர்களின் பாவங்களின் பொருட்டே தண்டிக்கப்படுவார்கள் என்பது பிற்கால சிந்தனை (פֹּקֵ֣ד ׀ עֲוֹ֣ן אָב֗וֹת עַל־בָּנִים֙ וְעַל־בְּנֵ֣י בָנִ֔ים עַל־שִׁלֵּשִׁ֖ים וְעַל־רִבֵּעִֽים׃). எது எவ்வாறெனினும், இந்த பகுதி கடவுளின் முடிவற்ற இரக்கத்தையும், மனிதர்கள், கடவுளின் இரக்கத்தை சுவைத்தும், மீண்டும் மீண்டும் பாவம் செய்வதனை மையமாகக் கொண்ட பகுதி என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.

வவ.8-9: இந்த வரிகளை விளங்கிக்கொள்ள 33ம் அதிகாரத்தில் முன்னைய வரிகளை விளங்கிக்கொள்ள வேண்டும். மக்களின் பாவத்தைக் கண்ட ஆண்டவர், சினம்கொண்டு உடனடியாக அவர்களை அழித்துவிட நினைக்கிறார், ஆனால் மோசேயின் தொடர்ச்சியான மன்றாட்டு கடவுளின் சினத்தைக் குறைக்கிறது. இருப்பினும் கடவுள் மனம்நொந்தவராகவே காட்டப்படுகிறார். கொள்ளைநோய் போன்ற ஒரு நோய் (נֶגֶף) இவர்கள் மத்தியில் ஏற்பட்டு மக்கள் தண்டிக்கப்படுகிறார்கள். மோசேயும் தன்பங்கிற்கு பலரை தண்டிக்கிறார்.

இதன் பின்னர், கடவுள் தன்னுடைய மனத்தை மாற்றி மக்களை தண்டிப்பதை விடுத்து அவர்களை மீண்டும் ஆசீர்வதிக்கிறார். ஆனால் அவர் இனி முன்பு போல மக்களுடன் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்லப்போவதில்லை என அறிவிக்கிறார்;. அவருக்கு பதிலாக ஒரு தூதரை அனுப்புவதாகச் சொல்கிறார் (מַלְאָךְ). இது மோசேக்கு பலத்த துன்பத்தை ஏற்படுத்துகின்றது. இதனால்தான் மோச தரைமட்டும் தாழ்ந்து வணங்கி (וַיִּקֹּ֥ד אַ֖רְצָה וַיִּשְׁתָּֽחוּ׃), தன்னுடைய மரியாதையும் நம்பிக்கையையும் காட்டுகிறார். மோசேக்கு கடவுள் ஏற்கனவே, இவர் தன்னுடைய பார்வையில் தயைபெற்றவர் என்பதை சொல்லியிருக்கிறார் (காண்க வி.ப 33,17) כִּֽי־מָצָ֤אתָ חֵן֙ בְּעֵינַ֔י அதனை இப்போது மோசே கடவுளுக்கு சொல்லிக் காட்டுகிறார். இதனைவைத்துக் கொண்டே, இந்த மக்கள் வணங்கா கழுத்துள்ளவர்கள் எனினும் கடவுளை தம்மோடு வரும்படி கேட்கிறார்.

வணங்கா கழுத்துள்ள மக்கள் (עַם־קְשֵׁה־עֹ֨רֶף֙ ה֔וּא) என்பது அழகான விவிலியச் சொல். இதனை எபிரேயம், கடினமான கழுத்துள்ள மக்கள் என சொல்கிறது, அதாவது கழுத்தின் கடினம், ஒருவரின் இதயத்தின் கடினத்தை அல்லது அவருடைய முரட்டுத்தனமாக குணத்தைக் காட்டுகிறது. இதனை 'அடங்காதவர்' எனவும் நம் மொழியில் சொல்லலாம். இறுதியாக அவர்களுடைய கொடுமையையும், பாவத்தையும் மன்னித்து (עֲוֹנֵ֥נוּ וּלְחַטָּאתֵ֖נוּ) அவர்களை அவரின் உரிமைச் சொத்தாக மீண்டும் ஏற்படுத்தும்படி கேட்கிறார். கடவுளுடைய பிரசன்னம் மக்களை விட்டுப்போனால் அது அந்த மக்களுடைய தோல்வியின் அடையாளம் என்பதை மோசே நன்கு அறிந்திருக்கிறார். இதனால்தான் கடவுள் தம்மோடு மீண்டும் வரவேண்டும் என்பதில் மோசே கருத்தாய் இருக்கிறார்.



பதிலுரைப் பாடல்
தானியேல் (இ) 1,29-33 தானியேல் (இ) 1,29-33

(செப்துவாஜின்ந்த் தானியேல் 3,52-56)

(52) 29'எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர். மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. எக்காலத்துக்கும் அது புகழ்ந்தேத்தற்குரியது; எத்திப் போற்றற்குரியது.
(53) 30உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக் உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர்.
(55) 31கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப்பெறுவீராக நீர் என்றென்றும் புகழப்படவும் ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர்.
(54) 32உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக் என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக, ஏத்திப் போற்றப்பெறுவீராக.
(56) 33உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக் என்றென்றும் நீர் பாடல் பெறவும், மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.


தானியேல் புத்தகம் எபிரேய விவிலியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த எபிரேய தானியேல் புத்தகம், 12அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இதில் அதிகமான பகுதிகள் எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் தானியேல் புத்தகத்தை இறைவாக்கு புத்தகமாக கருதினாலும், இலக்கிய வகையில் தானியேல் புத்தகம் வெளிப்படுத்தல் வகையையே சார்ந்திருக்கிறது. இந்த எபிரேய தானியேல் புத்தகத்தை விட, கிரேக்க மொழியில் மட்டும் (செப்துவாஜின்ந்) சில பகுதிகள் காணப்படுகின்றன, அவை: அசிரியாவின் மன்றாட்டு, மூவர் பாடல், சூசன்னா மற்றும் பேலும் பறவை நாகமும் போன்ற பகுதிகளாகும்.

இதனை 'தானியேல் இணைப்புக்கள்' என தமிழ் விவிலியம் காட்டுகிறது. இன்றைய பகுதி இந்த தானியேல் இணைப்புக்கள் பகுதியிலுள்ள மூவர் பாடலில் இருந்து எடுக்கப்படுகிறது. இதனை விளங்கிக் கொள்ளவதற்கு முன், இந்த பாடலின் பின்புலத்தையும் சூழலலையும் நோக்குவோம். தானியேலும் அவர் நண்பர்களான அனனியா, மிசாவேல் மற்றும் அசரியா போன்றோர், நெபுக்கத்னேசர் மன்னனினால் பபிலோனியாவிற்கு நாடுகடத்தப்படுகின்றனர். இவர்களுக்கு அந்த மன்னன் முறையே பெல்தசாச்சர், சாத்ராக்கு, மேசாக்கு, மற்றும் ஆபேத்நெகோ என்று பெயர்களையும் மாற்றினான். இவர்களோடு சேர்த்து பல யூதேய இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பபிலோனிய உணவு பழக்கங்களை பழக்கி, அவர்களை திடமுள்ளவர்களாக மாற்றி அரசசேவைக்கு இணைக்க முயன்றான். ஆனால் இந்த மூவரும் கடவுளின் அருளால் மற்ற இளைஞர்களைவிட அறிவிலும், ஞானத்திலும் மற்றும் உடல் வலிமையிலும் வளர்ந்தனர்.

இவர்களில் தானியேல் மிக அறிவுள்ளவர்களாக இருந்தார். இது விவிலிய பாரம்பரிய நம்பிக்கை. தானியேல் என்பவர் யார் என்பதில் வாதங்களும் பிரதிவாதங்களும் இருக்கின்றன. தானியேல் என்பவர் ஒரு கதாபாத்திரம் என்றும், அவர் தானியேல் புத்தகத்தைவிட காலத்தால் முந்தியவர் என்றும் பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த தானியேல் புத்தகம், தானியேல் என்ற அந்த பிரசித்தி பெற்ற கதாபாத்திரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் சில நவீன ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கு உதாரணமாக தானியேல் புத்தகத்தில் வரும் தானியேலுக்கும், சூசன்னா கதையில் வரும் தானியேலுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதைக் காணலாம். தானியேல் புத்தகம் கி.மு 2ம் நூற்றாண்டில் எழுத்தப்பட்டிருக்க வேண்டும் என தற்போது ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர் இருப்பினும் கி.மு 6ம் நூற்றாண்டில் தானியேல் என்ற வீர மகன் ஒருவர் வாழ்ந்திருப்பதை அவர்கள் மறுக்கவில்லை. தானியேல் புத்தகம், கிரேக்க செலுக்கிய துன்புறத்தலால் துவண்ட யூத மக்களுக்கு உற்சாகம் கொடுக்க எழுதப்பட்டது என்பதை அதன் அடையாளங்கள் மற்றும் சொற்பதங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். முக்கியமாக பபிலோனிய அரசன் நெபுக்கத்னெசார் இந்த புத்தகத்தின் வில்லன் என்பதை விட, கிரேக்க செலுக்கிய மன்னன் நான்காம் அந்தியோக்குதான் இதன் உண்மையான வில்லன் என்பது தெளிவு. எப்படி தானியேலும் அவர் நண்பர்களும் பபிலோனிய துன்புறத்தலையும் தாண்டி உண்மையான எபிரேய மதத்தை காத்தார்களோ அதனைப்போல, தற்கால யூதர்கள் கிரேக்க துன்புறுத்தலைத் தாண்டி தங்கள் மதத்தை காக்க வேண்டும் என்பது இந்த ஆசிரியரின் நோக்கம்.

நம்முடைய இன்றைய வாசக பகுதி தானியேல் புத்தகத்தில் 3,24வது வரிகளுக்கு பின் இருந்திருக்க வேண்டும். இது செப்துவாஜின்து விவிலியத்தில் இந்த இடத்தில் காணப்படுகிறது. எபிரேய விவிலியத்தில் இல்லை. இந்த பாடலின் பின்புலம்: நெபுக்கத்னெசார் மன்னன் ஒரு உயர்ந்த பொற்சிலையை செய்து அதனை வணங்குமாறு தன் பேரரசை பணிக்கிறான், அனைவரும் பணிய, இந்த மூவர் மட்டும் எதிர்கின்றனர் (வாசிக்க தானியேல் 3). இதனால் கோபம்கொண்ட மன்னன் இவர்களை எரியும் தீச்சூழைக்குள் எறிகின்றான். அப்போது கடவுளின் தூதர் இவர்களை காக்கிறார், இந்த வேளையில் அசரியாவின் மன்றாட்டு மன்றும் மூவரின் பாடல் என இந்த பகுதி அறியப்படுகிறது. ஆனால் இதன் மொழி அமைப்பைக் கொண்டு இந்தப் பாடல் வேறு காலத்தில் எழுதி பின்னர் இந்த இடத்துள் புகுக்கப்பட்டது எனவும் தானியேல் புத்தக ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். எது எவ்வாறெனினும் இந்த பாடலில் உள்ள இறையியலும், வார்த்தைகளும் அழமான எபிரேய இறையியல் சிந்தனையை வாசகர்களுக்கு தருகின்றது என்பதில் சந்தேகமில்லை.

வ.29: ஆசிரியர் தன் கடவுளை தம் மூதாதையரின் கடவுள் என விழிக்கிறார் (ὁ θεὸς τῶν πατέρων ἡμῶν), இதன் மூலம் அவர் தேசியவாதத்தை தூண்ட முயற்ச்சிக்கிறார் என எடுக்கலாம். இந்த கடவுள் மட்டும்தான் எக்காலத்திற்கும், வாழ்த்தப்படவும் புகழப்படவும் தகுதியுள்ளவர் என வலிறுத்துகிறார். இந்த வரிகளுக்கு பின்னால் பல செய்திகள் உள்ளதை அவதானிக்கலாம். கிரேக்க அந்தியோக்கசின் கிரேக்க தெய்வங்கள் புகழப்படக்கூடாதவை அத்தோடு அவை நமது மூதாதையரின் விசுவாச தெய்வங்கள் இல்லை என்பதை சொல்கிறார் என எடுக்கலாம். ஆண்டவருடைய பெயரை வர்ணிக்கிறார் அதனை மாட்சியும், தூய்மையும் உடையது என்கிறார் (εὐλογημένον τὸ ὄνομα τῆς δόξης σου).

வ.30: இந்த வரி கடவுளின் இல்லத்தைப் பற்றி பேசுகிறது. ஆண்டவரின் இல்லத்தில் அவருடைய தூய மாட்சி விளங்குகிறது என்று பாடுகிறார். அந்தியோக்கசுடைய காலத்தில் இந்த கோவிலின் தூய்மை பலவிதத்தில் பாதிக்கப்பட்டது. இங்கே அவர்கள் கிரேக்க தெய்வ சிலைகளை கொண்டுவந்து நிறுவினார்கள். பின்னர் பன்றி இறைச்சியையும் இங்கே வைத்து பரிமாறி யூதர்களின் கலாச்சாரத்தை மாற்ற நினைத்தார்கள் என வராலாறு சொல்கிறது. வ.31: இந்த வரி செப்துவாஜிந்த் விவிலியத்தில் 3,55 வது வரி. ஆண்டவர் கெரூபீன்களில் வீற்றிருந்து பாதாளத்தை நோக்குபவராக சொல்லப்படுகிறார் (ὁ βλέπων ἀβύσσους καθήμενος ἐπὶ χερουβιμ). முதல் ஏற்பாடு இந்த கெருபீனை (כְּרוּב), ஒருவகையான இறக்கைகள் உடைய வானதூதர் இனம் என காட்டுகிறது. இந்த அறிவை இஸ்ராயேலர்கள் அக்காடிய அல்லது புராதன மத்திய கிழக்கு நம்பிக்கையிலிருந்து பெற்றார்கள் என வாதிடப்படுகிறது. இந்த வகை வானதூதர்களின் உருவங்கள் மொசெப்தேமியா புராதண ஆலயங்களில் இருந்திருக்கின்றன. விவிலியத்தில் இந்த கெரூபீன்கள் ஆண்டவரின் காவலாளிகள் போல காட்டப்படுகிறார்கள். உடன்படிக்கை பேழையின் மீது இப்படியான இரண்டு கெரூபீன்களே அமைக்கப்பட்டிருந்தன. அக்கால பபிலோனிய மற்றும் மொசப்தேமிய நம்பிக்கையிலும் இந்த வானதூதர்கள் காவல் செய்யும் பணிகளை செய்வதாகவே நம்பப்பட்டது.

ஆசிரியர், இந்த கெரூபீன்களை கட்டுப்படுத்துகிறவர் தம் ஆண்டவர் என்கிறார், இதனால்தான் அவர் கெரூபீன்களின் மேல் அமர்ந்திருக்கிறார் (καθήμενος ἐπὶ χερουβιμ), அத்தோடு அங்கிருந்துகொண்டுதான் அவர் பாதாளத்தை உற்று நோக்குகின்றார் என்றும் விளக்குகின்றார்.

வ.32: அரியணை அரசரின் ஆட்சியையும் அவருடைய அதிகாரத்தையும் காட்டுகிறது. ஆசிரியர் தன் கடவுளை இங்கே பரலோக அரசராகவும், அவருடைய இருக்கையை அரியணையாகவும் காட்டுகிறார். இஸ்ராயேலர்கள் கடவுளை மனித அடையாளத்தில் வர்ணிப்பதை சாதாரணமாக தவிர்ப்பார்கள். ஆனால் பாடல் மற்றம் கவியில் கடவுளக்கு பல மனித அடையாளங்கள் சில தேவைகளுக்காக கொடுக்கப்படுகிறது. இதனை இங்கே காணலாம். அரசர்கள்காலம் தொட்டே இஸ்ராயேலர்கள் தங்கள் அரசர், கடவுள் ஒருவரே என்பதை வலியுறுத்தினர். அரசர்கள் என்ற அடையாளமே இஸ்ராயேலர்களுக்கு அந்நியமாக தோன்றியது. அரசர்கள் கூட தாங்கள் இஸ்ராயேல் கடவுளின் சேவகர்கள் என்பதை வலியுறுத்துவதாக மக்களுக்கு தங்களை காட்ட முயன்றார்கள். மொசப்தேமிய அரசர்கள் தங்களை தெய்வங்களின் மகன்கள் எனவும், அவர்களின் மனித பிறவிகள் எனவும் காட்ட முயன்றார்கள், இது இஸ்ராயேலின் நம்பிக்கையாக இருக்கவில்லை. இது இப்படியிருக்க கிரேக்க மன்னன் தன்னை இஸ்ராயேலின் அரசன் என்றால் எப்படியிருக்கும்? இந்த வரியில், பாடல் ஆசிரியர் மீண்டுமாக கடவுள்தான் இஸ்ராயேலின் (யூதரின்) அரசன் என வலியுறுத்துகிறார்.

வ.33: உயர் வானகத்தில் கடவுள் வாழ்த்துப்பெற தகுதியுள்ளவர் என்கிறார் ஆசிரியர். உயர் வானகம் என்பது இங்கே (στερέωμα) என்ற செப்துவாஜிந்த் கிரேக்க சொல்லிலே குறிக்கப்படுகிறது. இதனை வான்தொடு திரை என முதல் ஏற்பாடு அழைக்கிறது. இந்த திரைதான் வானத்தையும், கடவுளுடைய பரலோக இருப்பிடத்தையும் பிரிப்பதாக அக்கால மக்கள் நம்பினார்கள். இந்த இடத்தில் கடவுள் இருக்கிறார் அவர்தான் இங்கிருந்து உலகின் காலங்களை நிர்ணயிக்கிறார் என்பதும் இவர்களின் நம்பிக்கை.



இரண்டாம் வாசகம்
2கொரிந்தியர் 13,11-13

11சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார். 12தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். 13ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

பவுல் எத்தனை கடிதங்களை கொரிந்தியருக்கு எழுதினார் என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன. சிலர் பவுல் கொரிந்தியருக்கு நான்கு அல்லது நான்குக்கு மேற்பட்ட கடடிதங்களை எழுதினார் என வாதிடுகின்றனர். இவற்றில் இரண்டு மட்டுமே திருச்சபையின் விவிலியத்திற்கு கிடைத்திருக்கிறது எனவும் வாதிடுகின்றனர். விவிலியத்தின கொரிந்தியரின் முதலாவது திருமுகத்திற்கு முன்னதாகவே பவுல் இன்னொரு திருமுகத்தை எழுதியிருக்கிறார் என நம்பப்படுகிறது. இது இப்படியென்றால் விவிலியத்தின் இரண்டாம் கொரிந்தியர் திருமுகம் உண்மையில் நான்காவது திருமுகமாக இருக்கவேண்டும். இந்த பல எண்ணிக்கையிலான திருமுகங்கள், பவுலுக்கும் கொரிந்திய திருச்சபைக்கும் இடையில் நடந்த நெருக்கமான கடித உறவைக் காட்டுகிறது. கொரிந்தியருக்கான இந்த இரண்டாவது திருமுகம்தான் பவுலுடைய திருமுகங்களிலெல்லாம் மிகவும் தனித்துவமானதும், அவருக்கு நெருக்கமானதும் அதேவேளையில் விளக்க, மிகவும் கடினமான திருமுகமாகும். இந்த கடிதம் பல விதமான மொழி அமைப்புக்கள், உருவக அமைப்புக்கள், சுயநியாயப்படுத்தல்கள், சுய கௌரவம், சுய புகழ்ச்சி, கண்டிப்புக்கள், எச்சரிக்கைகள், சொற் தாக்குதல்கள், மற்றும் புத்திமதிகள் என பலவற்றைக் கொண்டுள்ளது. அதே வேளை இந்த கடிதம் ஒரு தொகுப்பு போலவும் காண்படுகிறது என்றும் சிலர் வாதிடுகின்றனர். இந்த கடிதத்தின் முடிவுரையிலிருந்து இன்றைய வாசகப்பகுதி எடுக்கப்படுகிறது. இந்த பகுதியிலிருக்கும் திரித்துவ ஆசீர்தான் இன்றைய மையப்பொருள்.

வ.11: பலவற்றைச் சொல்லியும் தன்னுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்தியதன் பின்னர், பவுல் இறுதியாக அனைத்தையும் சாரம்சப்படுத்துகிறார். தன்னுடைய கடிதத்தின் பெறுநர்களை சகோதர சகோதரிகள் என்கிறார். இதற்கு அதெல்போய் (ἀδελφοί) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதனை சகோதரர்கள் என நேரடியாக மொழிபெயர்த்தாலும், இது சகோதர சகோதரிகள் என்ற பொருளையும் கொடுக்கிறது. இது ஆண்களை மட்டும் மையப்படுத்துகிறது என்று கிரேக்க மொழியில் எடுக்க முடியாது. இந்த சொல்லிற்கு கிறிஸ்துவில் உடன் சகோதர சகோதரிகள் என்ற பொருளும் உண்டு.

பவுல் இவர்களை மகிழ்ச்சியாக இருக்கச் சொல்கிறார். பலவிதமான துன்பங்கள், சந்N;தகங்கள், பிரிவினைகள், உட்கட்சி பூசல்கள் இருந்த கொரிந்திய திருச்சபைக்கு இந்த வாழ்த்தொலி நிச்சயமாக ஆறுதல் கொடுத்திருக்கும். மகிழ்சியாயிருங்கள் என்பதற்கு (χαίρετε - χαίρω) கய்ரேத்தே என்ற சொல் பாவிக்கப்பட்டள்ளது. இது இறுதியான வாழ்த்து என்ற அர்த்தத்தையும் கொடுக்கும். அவர்களுடைய நடத்தையை சீர்ப்படுத்தச் சொல்கிறார் (καταρτίζεσθε - καταρτίζω), இதன் அர்த்தமாக வலுப்படுத்தல், சீர்ப்படுத்தல், உறவாக்குதல், மற்றும் உருவாக்குதல் போன்ற அர்த்தங்கள் வருகின்றன. பவுல் இதனைத்தான் இந்த திருமுகத்தில் பல இடங்களில் கூறியிருக்கிறார், அதனை இங்கு ஒரே வார்த்தையில் முடிவுரைசெய்கிறார். தன்னுடைய அறிவுரைக்கு செவிசாய்க்க சொல்கிறார் (παρακαλεῖσθε). பலருடைய அறிவுரைக்கு செவிசாய்கின்றதே பிரிவினைகளுக்கு காரணம். உண்மையான தலைவரின் அறிவுரைதான் குழுமத்தில் நன்மைத்தனத்தை உருவாக்கும் என்பதில் கவனமான இருக்கிறார் இந்த புறவினத்தின் திருத்தூதர். மன ஒற்றுமையோடுடிருங்கள் என்ற தமிழ் வார்த்தைகளுக்கு புரோனேயோ (τὸ αὐτὸ φρονεῖτε - φρονέω) என்ற கிரேக்க சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கு புத்தியுள்ளவர்களாய் இருங்கள் என்ற அர்த்தமும் உள்ளது. ஆக மற்றவர்களோடு ஒற்றுமையாக இருக்க முதலில் நல்ல புரிந்துணர்வு வேண்டும் அதற்கு குறைந்த பட்சம் சாதாரண அறிவு வேண்டும் என்பது புலப்படுகிறது.

பவுல் தன் அன்பர்களை அமைதியாக வாழச் சொல்கிறார் (εἰρηνεύετε - εἰρηνεύω). இதனை அழகாக 'அமைதி செய்யுங்கள்;' என்று கிரேக்க மூல மொழி வார்த்தைப்படுத்துகிறது. கொரிந்து மிகவும் அவரசமான மற்றும் பரபரப்பான நகராக இருந்தது. இவர்களுக்கு உண்மையான மன அமைதி என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. அரசியல் அமைதியல்ல, மாறாக மன அமைதி, அதனை இயேசுதான் தருவார், அத்தோடு கிறிஸ்தவர்கள் சந்தித்த துன்புறுத்தல்கள் அவர்களின் மன அமைதியை பாதிக்கக்கூடாது என்பதையும் பலவேளைகளில் பவுல் சுட்டிக்காட்டுவார். இப்படியான கட்டளைகளைக் கொடுத்ததன் பின்னர், இந்த கட்டளைகள் நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும் என்பதை பவுல் விளக்குகிறார் அதாவது, அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் இவர்களோடு இருப்பார் என்கிறார் (καὶ ὁ θεὸς τῆς ἀγάπης καὶ εἰρήνης ἔσται μεθ᾿ ὑμῶν.). கடவுள்தான் அன்பையும் அமைதியையும் தருகிறவர், அவருடைய இருப்புத்தான் முக்கியமானது என்பது பவுலுடைய வாதம்.

வ.12: இந்த வரி, தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்தச் சொல்லி சொல்கிறது. தமிழிலே தூய முத்தம் என்பதற்கு கிரேக்க மொழி (ἁγίῳ φιλήματι) என்ற சொல்லை பாவிக்கின்றது. இது ஒரு ஊடக, நான்காம் வேற்றுமையுருபு பாவனை (dative of instrument). பல முத்தங்கள் வழக்கில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் வாழ்த்த தூய்மையான முத்தத்தை ஊடகமாக்கச் சொல்கிறார் பவுல். அத்தோடு தன்னோடு இருப்பவர்களும் இந்த கடிதத்தின் பெறுநர்களை வாழ்த்துவதாகவும் சொல்கிறார். இங்கே தன்னோடு இருப்பவர்களைக் குறிக்க 'புனிதர்கள்' (οἱ ἅγιοι ஹகியோய்) என்ற சொல் பாவிக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்களை குறிக்க புனிதர்கள் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது அவர்கள் புனிதர்களாக வாழ அழைக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. தமிழ் விவிலியம் இந்தச் சொல்லிற்கு 'இறைமக்கள்;' என்ற சொல்லை பாவிக்கின்றது. அர்த்தத்தில் இந்த இரண்டும் ஒன்றுதான்.

வ.13: 2ம் கொரிந்தியர் திருமுகத்தின் இறுதி வரி இதுவாகும். இது இந்த திருமுகத்தின் முன்னுரையை நமக்கு நினைவூட்டுகிறது (காண்க 2கொரி 1,1). தந்தையாம் கடவுளையும், ஆண்டவராம் இயேசுவையும் நினைவூட்டிய பவுல் இங்கே திரித்துவத்தின் மூவரையும் உள்ளிணைக்கிறார். இந்த இறுதி வரி, ஆண்டவர் இயேசுவை அருளின் முதலாளியாகக் காட்டுகிறது (Ἡ χάρις τοῦ κυρίου Ἰησοῦ Χριστοῦ). தந்தையாம் கடவுளை அன்பின் உறைவிடமாகக் காட்டுகிறது (ἡ ἀγάπη τοῦ θεοῦ). இங்கணம் பவுல் வாழ்த்துகின்ற அன்பு சாதாரண அன்பு கிடையாது, அது கடவுளின் அன்பாக இருக்க வேண்டும் என காட்டுகிறது. இறுதியாக தூய ஆவியின் நட்புறவும் (ἡ κοινωνία τοῦ ἁγίου πνεύματος) இவர்களுக்காக விரும்பப்படுகிறது. இப்படியாக நட்புறவின் இயக்குனர் தூய ஆவியார் என்பது அக்கால இறையியலில் அழகாக அமைந்திருக்கிறதை காணமுடிகிறது.

இந்த திரித்துவ வாழ்த்து மிகவும் பிரசித்தி பெற்றது. ஏனெனில் புதிய ஏற்பாட்டில் இந்த இடத்தில்தான், இந்த திரித்துவ வாழ்த்து தனித்துவமாக இருக்கிறது என பல ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இந்த வரிகளைக் கொண்டு, ஆரம்ப கால திருச்சபை, திரித்துவ நம்பிக்கையை பெற்றிருந்தது என பலர் வாதிடுகின்றனர். இதற்கு மாறான வாதங்களும் இல்லாமல் இல்லை. பல முக்கியமான பிரதிகளில் இந்த வாழ்த்திற்குப் பின்னர், ஆமென் (ἀμήν) என்ற சொல் இணைக்கப்பட்டுள்ளது.


நற்செய்தி வாசகம்
யோவான் 3,16-18

16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். 17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். 18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

யோவான் நற்செய்தியாளர் இறையியலிலும் சிந்தனையிலும் தனித்துவமான பார்வைகளை கொண்டுள்ளார் என்பதை பல வேளைகளில் பார்த்திருக்கிறோம். யோவான் நற்செய்தியில் வருகின்ற பாத்திரங்கள் மிக முக்கியமானவை அதே வேளையில் அவர்கள் கேட்கின்ற கேள்விகளும் அத்தோடு அதற்கான ஆண்டவரின் பதில்களும் மிக மிக முக்கியமானவை. இவை ஆரம்ப கால திருச்சபையின் கேள்விகளையும் பதில்களையும் நமக்கு காட்டுகின்றன. யோவான் நற்செய்தியின் மூன்றாவது அதிகாரம் நிக்கதேம் என்ற ஒரு உன்னத மனிதரை நமக்கு காட்டுகிறது.

பிலிப்பு மற்றும் நத்தானியேல் (காண்க யோவான் 1,43-51) போன்றோர் பகல் வேளையில் ஆண்டவரிடம் வர, இந்த இஸ்ராயேலின் ஆசிரியர் ஒருவர் இரவு வேளையில் ஆண்டவரிடம் வருகிறார் (காண்க யோவான் 3,2). யோவான் இங்கு அறிவுள்ள, இருந்தும் புரியாத யூத ஆசிரியர்களைக் குறிக்க இந்த மனிதரை பாவிக்கிறார் என எடுக்கலாம். இப்படியாக யூத மத தலைவர்கள் இருட்டில் இருக்கிறார்கள் அதாவது அறியாமையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த நிக்கதேமுடன் ஆண்டவர் நடாத்துகின்ற உரையாடலில் ஒரு பகுதியிலிருந்தே இன்றைய வாசகம் எடுக்கப்படுகிறது. அனைவரும், அதாவாது யூதர்களாயினும் மற்றும் யூதர்கள் அல்லாராயினும், அவர்கள் மீள பிறக்க வேண்டும் என்பதே இந்த அதிகாரத்தின் மையப்பொருள். மீள பிறத்தல் என்பது திருமுழுக்கு என்பதை விட, அது இயேசுவில் கொண்டுள்ள நம்பிக்கையையே குறிக்கிறது என எடுக்கலாம்.

வ.16: யோவானுடைய பதினாறாவது வரி மிகவும் அழகான வரி. விவிலிய ஆய்வியல் வரலாற்றில் அதிகம் படிக்கப்பட்டதும், ஆராயப்பட்டதுமான வரி. கடவுளுடைய அன்பின் ஆழத்தையும் இனிமையையும் இந்த வரி நச்செனக் காட்டுகிறது. இந்த வரி இறைவனுடைய அன்பின் தன்மையையும், அதன் பலிகொடுக்கும் சாயலையும், அத்தோடு அதன் முடிவற்ற இலக்கையும் கொண்ட மூன்று உண்மைகளை காட்டுவதாக யோவான் நற்செய்தியின் ஆய்வாளர்கள் காட்டுகின்றனர். யோவான் இந்த வரியில் கடவுளின் அன்பைக் குறிக்க நிகழ்கால (ἔχῃ-ἔχω) வினையை பாவிக்கின்றார். இது ஆண்டவருடைய அன்பு, காலத்தை கடந்தது அல்லது அது எக்காலத்திலும் நிகழ்காலத்தையே குறிக்கிறது எனவும் எடுக்கலாம். கடவுளுடைய தனித்துவமான அன்பு இஸ்ராயேல் மக்களுக்கு மட்டுமே உரியது என நினைத்த யூத வாசகர்களுக்கு இந்த வரி வித்தியாசமான சிந்தனையைக் கொடுத்திருக்கும். இந்த வரியில் கடவுளின் அன்பு அனைவருக்கும் உரியது என்பதை யோவான் அழகாகக் காட்டுகிறார். இங்கே பாவிக்கப்படுகின்ற உலகம் என்ற (κόσμον - κόσμος) சொல்லும் நோக்கப்படவேண்டும். இது கடவுளில் நம்பிக்கை வைக்கும் அனைவரையும் குறிக்கிறது.

இந்த வரியில் இயேசுவை பவுல், கடவுளின் ஒரே மகன் என வார்த்தைப்படுத்துகிறார் (τὸν υἱὸν τὸν μονογενῆ). இந்த மகனை கடவுள் கையளித்தார் என்கிறார், இந்த கையளித்தல் (δίδωμι) என்பது முழுமையாக ஒப்புக்கொடுத்தல் என்பதைக் குறிக்கும். இந்த வார்த்தையின் மூலம் எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி கடவுள் இயேசுவை உலகிற்கு கையளித்தார் என்று பொருள் படும். கடவுளுடைய உலகிற்கான அன்பைக் காட்டவே, பவுல் இந்த இயேசு என்கின்ற 'அளவையை' பாவிக்கிறார். கடவுளுடைய நோக்கமான 'வாழ்வு பெறல்' (ζάω) இங்கே சொல்லப்படுகிறது. அதிகமான இறையியல் கட்டுரைகளும்;, புத்தகங்களும் இந்த வரியை மட்டுமே கொண்டு எழுதப்பட்டிருப்பது இந்த வரியின் முக்கியத்துவத்தை நமக்கு காட்டுகிறது.

வ.17: ஆண்டவர் இயேசுவினுடைய உலக வருகையின் நோக்கத்தைப் பற்றி இந்த வரி அழகாக விளக்கம் கொடுக்கிறது. கடவுள் ஏன் இயேசுவை உலகிற்கு அனுப்பினார் என்ற கேள்விக்கு, ஆரம்ப கால மறையுரைஞர்கள் சில தவறான விளக்கங்களையும் கொடுத்து தண்டனை தீர்ப்பை மையபப்படுத்தினர். ஆனால் பவுல் இதனை இந்த வரியில் சீர் செய்கிறார், அதாவது உலகை மீட்பதுதான் கடவுளின் நோக்கம் அதற்காகத்தான் ஆண்டவர் இயேசுவின் வருகை இருக்கிறது என்பதைக் காட்டுகிறார். 'வாழ்வு பெறவே' (σωθῇ) என்ற வினைதான் இந்த வரியின் மிக முக்கியமான வரி என்றபடியால் அது கிரேக்க வசனத்தில் துணைச் சொற்களின் உதவியுடன் (ἀλλ᾿ ἵνα) முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது.

இருப்பினும், ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளதவர்கள் இயற்கையாகவே ஆண்டவருடைய தண்டனை தீர்ப்பை வருவித்துக்கொள்கிறார்கள் என்ற செய்தியும் இதனுள்ளே மறைமுகமாக இருக்கிறது.

வ.18: இந்த வரி ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளாதோரின் நிலையைக் காட்டுகிறது. யோவான் நற்செய்தியின் படி, இயேசு ஆண்டவரின் வருகைதான் இறுதியான வெளிப்பாடு, இது இந்த நற்செய்தியின் விசேடமான அம்சங்களில் ஒன்று. தண்டனை தீர்ப்பை அளிக்கிறவர் கடவுள் அல்ல மாறாக ஒருவர் இயேசு ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளமால் விடுவதன் வாயிலாக தாமாகவே தனக்கு தண்டனைத் தீர்ப்பை வருவித்துக்கொள்கிறார்.

இந்த தண்டனைத் தீர்ப்பை அவர்கள் ஏற்கனவே பெற்றுவிட்டார்கள் என்கிறார் (ἤδη κέκριται). இந்த வரியில் 'தண்டனைத் தீர்ப்பை' குறிக்க கிறினோ (κρίνω) என்ற சொல் பாவிக்க்பட்டுள்ளது. இது நீதிமன்றங்களில் பாவிக்கப்படுகின்ற ஒரு சொற்பிரயோகம். இந்த வார்த்தை கிரேக்க உலகில் பிரசித்திபெற்ற சொல்லாக இருந்த படியால் இதனை யோவான் பாவித்திருக்கலாம்.

மனித சொற்களாலும், சிந்தனைகளாலும் ஆராய்ந்து கட்டுரை எழுதுவதற்கு,
திரித்துவம் அவ்வளவு இலகுவானதா?
அகுஸ்தினாராலேயே புரிய முடியவில்லையே?
அன்பு ஆண்டவரே, திரித்துவத்தின் மையமான உறவை
நான் என்னோடும், அயலவரோடும் ஏற்படுத்த உதவி செய்யும். ஆமென்.