இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தவக்காலம் மூன்றாம் வாரம் (இ)

வி.ப 3,1-8.13-15;தி.பா: 103;1கொரிந் 10,1-6.10-12;லூக் 13,1-9


முதல் வாசகம்
வி.ப 3,1-8.13-15

1மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். 2அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. 3'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்' என்று மோசே கூறிக்கொண்டார். 4அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். 'மோசே, மோசே' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் 'இதோ நான்' என்றார். 5அவர், 'இங்கே அணுகி வராதே உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்' என்றார். 6மேலும் அவர், 'உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே' என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். 7அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். 8எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு — அதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு — அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன். 13மோசே கடவுளிடம், 'இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?' என்று கேட்டார். 14கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார். மேலும் அவர், 'நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்' என்றார். 15கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: 'நீ இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் — ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் — என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!

முதல் ஐந்து நூல்களில் (தோரா תּוֹרָה) இரண்டாவதும் முக்கியமானதுமான இந்த நூல், விடுதலைப்பயண நூல் என்று செப்துவாயின்துவை ஒட்டி அழைக்கப்படுகிறது. செப்துவாயின்ந்தின் ἔξοδος-எக்ஸோதோஸ், என்றால் புறப்பட்டு போதல் என்று பொருள். மூல எபிரேய மொழியில் இது שְׁמוֹת ஷெமோத்- பெயர்கள் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியரோ அல்லது காலமோ இலகுவில் கண்டு பிடிக்கப்பட முடியாதவை. பாரம்பரியமாக இதனை மோசே எழுதினார் எனவும், இது ஒரு முழுப்புத்தகம் எனவும் நம்பப்பட்டது. இதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவாகவே உள்ளன. இஸ்ராயேல் மக்களுடைய விடுதலைப்பயணத்தை முன்னிட்டு இதன்காலத்தை கணிக்க சிலர் எண்னுகின்றனர். ஆனால் இஸ்ராயேல் மக்கள் எப்போது எகிப்திலிருந்து வெளியேறினர் என்பதை கணிப்பதும் மிகவும் கடினம். வி.ப நூல் எகிப்திய மன்னர்களின் பெயர்களைத் தரவில்லை. மாறாக, அவர்களை 'பாரவோன்' என்றே அழைக்கிறது. இது ஒரு பொதுப்பெயர், தமிழில் அரசன் அல்லது அரச அதிகாரம் எனக் கொள்ளலாம். கிட்டத்தட்ட கி.மு 1300களில் இஸ்ராயேலர் வெளியேறி இருக்கலாம். வி.ப நூல் இரண்டு இறையியல் வாதங்களை முன்வைக்கிறது, அ). கடவுளுடனான உறவின் தொடக்கம் ஆ). கடவுள் இஸ்ராயேலருடன் செய்து கொண்ட உடன்படிக்கை. வி.ப நூல் பல வரலாற்று பதிவுகளைக் கொண்டிருந்தாலும், இது உண்மையில் ஒரு இறையியல் புத்தகம் ஒரு விசேட தேவைக்காக எழுதப்பட்டது என்பதை விசுவாச வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வ.1: ஆபிரகாமிற்கு கெத்தூராவினால் பிறந்த ஒருவரே மிதியானியரின் குலமுதுவர் என இஸ்ராயேலர் கருதுகின்றனர். பாரசீக வளைகுடாவின் வடமேற்கு திசையில் உள்ளதே இந்த நிலப்பகுதி. மோசே பாரவோனிடம் தப்பி இங்கேயே வருகிறார், இங்குதான் திருமணமும் செய்து கொள்கிறார். இத்திரோ எந்த கடவுளின் குரு என்பது தெளிவாக இல்லை, எண்ணிக்கை நூல் (10,29) இவரை இரகுவேல் என்கிறது. இவர்கள் இருவரா அல்லது ஒருவரா என்பதும் தெளிவில்லை. சிலர் கடவுளைத்தான் மோயிசனுக்கு முன்னர் மிதியானியர் வழிபட்டனர் என்கின்றனர். பெயர்கள் பலவாயினும் கடவுள் ஒருவராயிருப்பதற்கு பல வாய்புக்களை இங்கு காணலாம். ஒரேபு கடவுளின் மலை என அழைக்கப்படுகிறது, சீனாய் இதற்கு இன்னொரு பெயர். மந்தைகளை ஒட்டிக்கொண்டு மலைக்கு வருவது பின்னர் மக்களை கடவுளிடம் கொண்டுவருவதை குறிக்கலாம்.

வவ. 2-3: முதலில் தோன்றியது கடவுளின் தூதரே, இவர் நெருப்புச் சுடரில் தோன்றினாரா அல்லது நெருப்புச் சுடராகத் தோன்றினாரா என்பதில் மயக்கம் உள்ளது. இந்த முற்புதர் (סְּנֶה செனே) இஸ்ராயேலரைக் குறிக்கலாம். நெருப்பு வி.ப நூலில் கடவுளின் முக்கிய உருவகம். முட்புதர் எரிவது இஸ்ராயேலரின் துன்பத்தைக் குறிக்கலாம். தீய்ந்துபோக வில்லை என்பது மக்கள் துன்பத்தால் அழியார் என்பதைக் குறிக்கலாம். இங்கே மோசே மட்டும் இருப்பதனால் அவர் தனக்கு தானே பேசுகிறார் என எடுக்கலாம்.

வவ. 4-5: இப்போது மோசேயைக் காண்பது கடவுள், தூதர் அல்ல. முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் கடவுளும் தூதர்களும் மாறி மாறி வருவதனைக் காணலாம். கடவுள் மோசேயை அழைப்பதும், மோசே இதோ என சொல்வதும் ஓர் இறைவாக்கினரின் அழைப்புப்போல தெரியலாம். கடவுளின் தூய்மை என்பதும் விப. நூலின் இன்னொரு முக்கிய செய்தி. பாதணிகளைக் கழற்றச் சொல்வது இதனையே குறிக்கிறது. பாதணிகள் அக்கால மக்கள் பாவித்த மிக விலைகுறைந்த சாதாரண அணிகலன். விவிலியத்தில் பாதணிகளைக் கழற்றுவது பல அர்த்தங்களைக் கொடுக்கும். இங்கே மரியாதையைக் காட்ட இவை கழற்றப்படுகின்றன. யோசுவாவும் இதனைச் செய்தார் (யோசுவா 5,15). காண் (ரூத் 4,6-10).

வவ. 6-8: கடவுள், தன்னை மூதாதையரின் கடவுள் எனச்சொல்லி, தனக்கு வரலாறு கட்டுப்பட்டது என்கிறார். ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் கடவுள் என்பது, கடவுளுக்கான முக்கியமான சொல்லணி. முகத்தை மறைத்தல் பலவேளைகளில் மக்கள் காட்டும் மரியாதையின் உருவகம். கடவுள் மூன்று வினைச்சொற்களை மக்களின் துன்பங்களின் பொருட்டு பாவிக்கிறார். அவை: துன்பங்களைப் பார்த்தேன், அழுகையைக் கேட்டேன், வேதனையை அறிவேன். கடவுளின் இறங்கிவருதல் இரண்டு காரணங்களைக் கொண்டுள்ளது: எகிப்தியரிடமிருந்து மீட்கவும், பாலும் தேனுமுள்ள நாட்டுக்கு அழைத்துச்செல்வதும் ஆகும். கானானை பாலும் தேனும் உள்ள நாடாக காட்டுவது, பல அர்த்தங்களைக் கொடுக்கிறன. இவை ஒரு வளமான நாட்டையோ அல்லது கடவுளுடைய தாய்மையின் குணத்தையோ காட்டலாம். இந்த மக்கட் கூட்டம் இந்நிலப்பரப்பில் இருந்தவர்களைக் குறிக்கிறது. இஸ்ராயேல் மக்களும் வந்து குடியேறியவர்கள் என்பதனையும் குறிக்கிறது.

வவ. 13-15: மோசேயின் நியாயமான கேள்வியால், மக்களின் நம்பாத் தன்மையை, அழகாக கேள்வியாக்குகிறார் ஆசிரியர். 14வது வசனம் விவிலியத்தில் மிக மிக முக்கியமான வசனம். இங்கு கடவுள் தன்னுடைய பெயரை முதல் முதல் வெளிப்படுத்துகிறார். 'இருக்கிறவராக இருக்கிறவர் நாமே', என்பதை பலவாறு மொழிபெயர்கலாம் (אֶהְיֶה אֲשֶׁר אֶהְיֶה எஹ்யே அஷெர் எஹ்யே). வினையெச்ச சொல்லே இங்கே பாவிக்கப்படுகிறது, ஆனால் எபிரேயத்தில் வினைமுற்று, இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் குறிக்கும். ஆக இங்கே கடவுள் காலத்தை கடந்தவர் என்பதை குறிக்கிறார். யோவான் நற்செய்தியிலும் பல வேளைகளில் இயேசு 'நானே' என்பதை கூறுவதை நினைவில் கொள்வோம். காலங்களும் நேரங்களும் மனிதனுடையவை. ஆசிரியர் காரணத்தோடே பெயர்தெரியாத பாரவோனையும் பெயர்சொன்ன கடவுளையும் விவரிக்கின்றார் என நினைக்கிறேன். கடவுளாகிய ஆண்டவர் என்பது எபிரேயத்தில் (יְהוָה אֱלֹהִים யாவே எலோகிம்) இதில் முதலாவது இறை பெயர், மரியாதையின் நிமித்தம் உச்சரிக்கப்படுவதில்லை.

ஒரேபு மலையைப் பற்றி மேலும் அறிய:(http://www.biblearchaeology.org/post/2008/11/17/What-Do-Mt-Horeb2c-The-Mountain-of-God2c-Mt-Paran-and-Mt-Seir-Have-to-Do-with-Mt-Sinai.aspx)



பதிலுரைப் பாடல்
தி.பா: 103

1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! 3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். 5அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும். 6ஆண்டவரின் செயல்கள் நீதியானவை; ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார். 7அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். 8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 9அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். 10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. 11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. 12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதேர் அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். 13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார். 14அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது. 15மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். 16அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது. 17ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும். 18அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். 19ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது. 20அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள். 21ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள். 22ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

கடவுளை அன்பான தந்தையாக காட்டும் இந்த திருப்பாடல் ஒரு வகை புகழ்ச்சிப்பாடல். பாடல் ஆசிரியர் பல வழிகளில் கடவுளின் குறையாத அன்பை சுவைத்தவராக தனது ஆன்மாவிற்கு கருத்துச் சொல்வது போல பாடுகிறார். தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. 22 வரிகளைக்கொண்ட இப்பாடலின் 1வது வசனமும் 22வது வசனமும், ஒருவர் தன்னுயிரை கடவுளைப் போற்ற கேட்பது போல எழுதப்பட்டுள்ளது.

வவ. 1-5: ஆண்டவரின் செயல்கள் விவரிக்கப்பட்டுள்ளன: குற்றங்களை மன்னிக்கிறார், நோய்களை குணமாக்குகிறார் (சாவுக்குரிய நோய்களை என்பது எபிரேய பாடம்), படுகுழியினின்று மீட்கிறார், பேரன்பாலும், இரக்கத்தாலும் முடிசூட்டுகிறார், நலன்களால் நிரப்புகிறார், இளமையால் பொழிவாக்குகிறார். (இங்கே ஆசிரியர் கழுகை இளமைக்கு உதாரணபடுத்துகிறார், கழுகு தனது இறக்கைகளை மாற்றுவது போல)

வவ. 6-13: ஆண்டவரின் தன்மைகள் விவரிக்கப்பட்டுள்ளன: அவர் செயல்கள் நேர்மையானவை, ஒடுக்கப்பட்டோருக்கு நீதியானவை, மோசேயும் மக்களும் அவர் வழியை கண்டனர், பரிவும் அருளும் கொண்டவர், மெதுமையான கோபமும் நிறைவான அன்பும் கொண்டவர், எப்பொழுதும் குற்றம் சுமத்தி கோபம் கொள்பவர் அல்லர், எம் குற்றப்படியும் பாவங்களின்படியும் நடத்தாதவர், வானம்போல் உயர்ந்தது அவர் அன்பு, உலகத்தின் மேற்கு கிழக்கு எல்லையைப்போல நமது மீறுதல்களை குணப்படுத்துகிறார், ஒரு தந்தையைப் போல அன்பு காட்டுகிறார்.

வவ. 14-18: கடவுளும் மனிதரும் ஒப்பிடப்பட்டுள்ளனர்: மனிதர் புல்லையும் பூவையும் போன்ற தூசியாவர், காற்றடித்தால் இருந்த இடம் தெரியாமல் போவர், ஆனால் ஆண்டவருடைய இரக்கமே என்றென்றைக்கும், அவருடைய நேர்மையோ பல தலைமுறைகளுக்கு. இவை ஆண்டவரின் கட்டளைகளை நினைந்து கடைப்படிப்போருக்கு கிடைக்கும் என்கிறார் ஆசிரியர்.

வவ. 19-22: கடவுள் வானகத்தில் தனது அரியணையை நிறுவியுள்ளதால், வானதூதர்களையும், வீரர்களையும், பணியாளர்களையும், படைகளையும், உதவியாளர்களையும், ஆண்டவரை அவருடைய எல்லா கருமங்களிலும், இடங்களிலும் புகழக்கேட்கிறார். ஆண்டவர் கோவில்களுக்கு மேற்பட்டவர் என்பது இப்பாடலில் உள்ள ஒரு கருத்து.



இரண்டாம் வாசகம்
1கொரிந் 10,1-6.10-12

1சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். 2அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். 3அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர். 4அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. 5அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். 6அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.10அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. 11அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. 12எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.

பவுல் கொரிந்தியருக்கு, நற்செய்தி அனைவருக்கும் உரியது என்பதை விளங்கப்படுத்துகிறார். இவர், ஒப்புவமை வாயிலாக விசுவாச படிப்பினைகளை தருவதில் எவ்வளவு வல்லவர் என்பதை இங்கே காணலாம். கிறிஸ்து யாரும் அறிந்திராத புதியவர் அல்ல மாறாக ஏற்கனவே நமது முன்னோர்கள் அவரை அறிந்திருந்தனர் என்பது பவுலுடைய வாதம்.

வ. 1: கிரேக்க மூலத்தில், 'நீங்கள் அறிவிலிகளாக இருக்க்கூடாது என விரும்புகிறேன்', என்கிறார் பவுல். மேகத்தையும் கடலையும் உருவகித்து, தனது வாசகர்களை விடுதலைப்பயண அனுபவத்திற்கு அழைக்கிறார்.

வவ. 2-4: 'மோசேக்குள் இருக்கும்படி திருமுழுக்கு' என்பது பவுலுடைய வித்தியாசமான கருத்து. ஒரே ஆன்மீக உணவு-பானம் என்று மன்னாவையும் தண்ணீரையும் சொல்கிறார் போல. பாலைவனத்தில் தண்ணீர் வந்த அந்த பாறை இயேசு என்கிறார். இயேசுவை உணவாகவும், பானமாகவும் மற்றும் பாறையாகவும் கண்டு பாவிக்கிறார் பவுல்.

வவ. 5-6: முன்னைய உருவகத்தை முன்வைத்ததற்கான காரணத்தை சொல்கிறார். ஆன்மீக பானத்தை பருகியபோதும் முன்னோர்கள், கடவுளுக்கு உகந்தவர்களாக இல்லாத காரணத்தினால் இறந்தார்கள். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்களுக்கு முன்னடையாளம் என்று மக்களை எச்சரிக்கிறார்.

இன்றைய வாசகத்தில் 7-9 வசனங்கள் விடப்பட்டுள்ளன. அவற்றில், சிலை வழிபாட்டுக்காரர்களாகவும், நெறிகெட்டவர்களாகவும், கிறிஸ்துவை சோதிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டாம் என்றும், இதுவேதான் முன்னோர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது என்றும் சொல்கிறார்.

வவ. 10-11: முணுமுணுத்தல் கொரிந்திய திருச்சபையின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். அழிவு விளைவிக்கும் தூதர் என்ற சொல் இங்கு மட்டும்தான் பு.ஏ பாவிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மூலம் இதனை ὀλοθρευτής ஒலோத்ரெயுடெஸ், அழிப்பவன் என்று சொல்கிறது. பவுல் இதனை யாருக்கு ஒப்பிடுகிறார் என்று அறிய முடியவில்லை. சாத்தானாகவோ அல்லது கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் தூதனாகவோ இருக்கலாம். முன்பு நடந்தவற்றைக் கொண்டு முன்னையவர்களை தீர்ப்பிடாமல், தனது மக்கள் தாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்பதே பவுலின் போதனை. இதனை யூதர்களுக்கு எதிரான வாதமாக எடுக்க முடியாது.

வ. 12: தற்பெருமை கொரிந்தியருக்கிருந்த இன்னொரு, தீர்க்கப்பட வேண்டியிருந்த சிக்கல். இங்கே மறைமுகமாக தற்பெருமையுடையவர்களை சாடுகிறார்.


நற்செய்தி வாசகம்
லூக் 13,1-9

1அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். 2அவர் அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? 3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். 4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? 5அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்' என்றார். காய்க்காத அத்திமரம். 6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: 'ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. 7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். 8தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். 9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.'

பொந்தியுஸ் பிலாத்து, யூதேயாவில் எப்போதும் மக்களால் வெறுக்கப்பட்ட உரோமைய அதிகாரியாகவே இருந்தான். ஃபீலோ இவனை இரண்டாம் தர படைகளின் கட்டளை அதிகாரி என்று எழுதினார். கி.பி 26-36 களில் இவன் யூதேயாவில் அதிகாரம் செலுத்தினான். லூக்கா இவனை அவ்வளவு கெட்டவனாக காட்டவில்லை, இரண்டு தடவை இவன் ஆண்டவரை விடுதலை செய்ய முயற்சித்ததை பதிவுசெய்கிறார் (23,4.7.16). லூக்காவிற்கு, கிறிஸ்துவின் உடன்-யூதர்களே அவரின் மரணத்திற்கு காரணமானவர்களாக இருந்ததனை காட்ட வேண்டிய தேவையிருந்தது. ஆண்டவரைப் பற்றிய கனவு, பிலாத்துவின் மனைவி கண்டதும் லூக்கா நற்செய்தியிலேதான். யோசேப்புஸ் பிலாத்துவை அரக்க குணம் கொண்டவனாக ஊழல் நிறைந்தவனாகவும் சித்தரிக்கிறார். பல மோதல்களையும் இரத்தங்களையும் சிந்த காரணமாக இருந்த இவன், உரோமைக்கு அழைக்கப்பட்டு பின்னர் பதிவியிழந்தான் என்று ஒரு வரலாறு சொல்கிறது. லூக்காவிற்கு இவனைவிட பல பாவிகள் எருசலேமில் இருந்தனர் என்பது ஒரு வாதம்.

வவ. 1-2: பிலாத்து கலிலேயரைக் கொலைசெய்த நிகழ்வு நற்செய்தியைவிட வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இங்கே இந்த 'சிலர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளவர், இரண்டு நபர்களை குற்றம் சுமத்துகின்றனர், ஒன்று கலிலேயர் மற்றது பிலாத்து. இந்த சந்தர்பத்தை பாவித்து இயேசு அவர்களிடம் முக்கியமான கேள்வியொன்றை கேட்கிறார்.

வவ. 3-5: அப்பாவிகளின் மரணம் அவர்களை பாவிகளாக்காது. இதனை நாம் சுனாமியிலும், பல ஈழப் போர்களிலும் அனுபவித்திருக்கிறோம். இதை எழுதும் போதும்கூட பல அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாவம் மரணத்திற்கு காரணம் என்று விவிலியத்தில் சில இடங்களில் காணலாம். (காண் யோபு 4,7: யோவான் 9,2). கடவுளே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார் என்றால், இந்த மரணத்தையும் அவரே தீர்மானிக்கிறார் என்பது இவர்களின் வாதம். இயேசு இங்கே அப்பாவிகள் பாவிகள் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறார், ஆனால் அவர்களின் மரணத்தின் மர்மத்தையல்ல. சீலோவாம் கோபுரம் விழுந்து பதினெட்டு போரைக் கொன்ற நிகழ்வு சீலோவாம் குளத்தின் தெற்கு பகுதியில் நடந்திருக்கலாம். இக்குளம் எருசலேமின் தெற்கு பகுதியில் இருக்கிறது. மனமாறாவிட்டால் அனைவரும் அழிவர் என்பதே இங்கே நோக்கப்பட வேண்டிய செய்தி. தீயவர்களின் வாழ்வதற்கான வாய்ப்பு அவர்களை நீதிபதிகளாக்காது. அப்பாவிகளின் துன்பத்திற்கு இன்றுவரை சரியான விடையை இயேசுவாலன்றி, எவராலும் தர முடியவில்லை.

வ. 6: இந்த பழம்கொடாத மலட்டு மரங்களைப் பற்றிய கதைகள் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்தன. இயேசு இதனை சொல்கின்ற போது மக்களுக்கு இவற்றைப் பற்றிய தெளிவு எற்கனவே இருந்திருக்க வேண்டும். அக்கால கதைகளில் அந்த மரங்களின் தலைவர்கள் மரத்தை வெட்ட வரும்போது மரம் இன்னொரு முறை தவனை கேட்கும், ஆனால் தவணை கொடுக்கப்படாது.

வ. 7: இங்கேயும் அதே பிரச்சனையைத்தான் லூக்கா பதிவு செய்கிறார். ஆனால் இங்கே தலைவர் பேசுவது மரத்தோடு அல்ல, தோட்ட தொழிலாளியோடு.

வ. 8-9: தொழிலாளி மரத்திற்காக இரைஞ்சுவது, லூக்கா நற்செய்தியின் இரக்க பண்பினை தெளிவு படுத்துகிறது. ஆனால் ஒரு வருடமே இங்கே தவணையாக கொடுக்கப்படுகிறது. இது விவிலிய எண்கணக்கில் மிகவும் குறுகிய காலம். இதன் மூலமாக லூக்கா அழிவினை, மனமாறாவிட்டால் தடுக்க முடியாது என்கிறார்.

கிறிஸ்தவ விளக்கவுரையாளர்கள் இந்த அத்தி மரத்தை, இஸ்ராயேல் அல்லது யூத மக்களாகவும், தலைவராக கடவுளையும், தோட்டக்காரராக இயேசுவையும் கண்டனர். இது இப்படியிருக்கவேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன். முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் அத்தி மரமும் திராட்சை தோட்டமும் இஸ்ராயேல் மக்களை குறித்தது உண்மைதான். இந்த மரம் கிறிஸ்தவர்களையோ அல்லது வாய்ப்பு கிடைத்தும் அதனை பாவிக்காத அறிவுள்ள எந்த மனிதரையும் குறிக்கலாம். இந்த கதை உருவகக் கதையாக பார்க்கப்படாமல் (யடடநபழசநை), உவமையாக பார்க்ப்பட்டால், லூக்கா சொல்லிய மரம் நம்மையும் குறிப்பதை தியானிக்கலாம். கனி என்று லூக்கா குறிப்பிடுவது (καρπός கார்போஸ்), பல அர்தங்களைத் தரவல்லது: மரத்தின் கனி, ஒரு செயலில் விளைவு, கிறிஸ்தவ அன்பு, இறையரசை அடைய தேவையான வேலை, நீதியான வாழ்வு, என்றும் பொருள் படும்.

யார் அந்த மரம்? என்று என்று அயலவரை பார்க்காமல், நம்மை அந்த மரமாக பார்த்து தியானிக்க, இன்னொரு வருடம் இரக்கம் கேட்டு வளருவோம்!

ஆண்டவரே தூய்மையான காலணிகளை, அசுத்தமென களைந்துவிட்டு, அசுத்தமான இதயங்களோடு உம்மை தரிசிக்க பழகியிருக்கும் எமக்கு, நல்ல அறிவைத்தாரும் இன்னொரு வருடம் தவணை தந்து உமது உரத்தை உள்வாங்க பக்குவத்ததையும் தாரும். ஆமென்