இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 8,5-8.14-17
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 66
இரண்டாம் வாசகம்: 1பேதுரு 3,15-18
நற்செய்தி: யோவான் 14,15-21


முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் 8,5-8.14-17

5பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். 6பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். 7ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். 8இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. 14சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். 15அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள். 16ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். 17பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக யூதர்களுடைய கலாபனை தொடங்கியபோது கிறிஸ்தவம் மெதுமெதுவாக எருசலேமையும் யூதேயாவையும் விட்டு வெளியே பரவத்தொடங்கியது. கிறிஸ்தவ அறிஞர்கள் இதனையும் கடவுளுடைய திட்டங்களில் ஒன்றாகக் காண்கின்றனர். இன்றைய பகுதி, சமாரியாவில் எப்படி வேதம் போதிக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. கடந்தவாரம், ஏன், எதற்காக மற்றும் எப்படி திருத்தொண்டர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் என்பதை பார்த்தோம்.

பிலிப்பு (Φιλίππος): இவர் தியாக்கோனாக தெரிவு செய்யப்பட்டாலும் நற்செய்தி அறிவிப்பு பணிக்கு மிக முக்கியத்தும் கொடுக்கிறார். எத்தியோப்பிய அரச அதிகாரிக்கு நற்செய்தியை அறிவித்து அவருக்கு திருமுழுக்கும் கொடுத்தார் (காண்க தி.பணி 8). நற்செய்தியை எருசலேமிற்கு வெளியில் முக்கியமாக சமாரியாவிற்கு கொண்டு போனவர்களில் மிக முக்கியமானவர். இவருக்கு நான்கு மகள்கள் இறைவாக்கினள்களாக இருந்திருக்கிறார்கள் (காண்க தி.பணி 21,8-9). பிற்கால விவிலிய ஆய்வாளர்கள் இந்த திருத்தொண்டர் பிலிப்புவை, திருத்தூதர் பிலிப்போடு ஒன்றாக்கி காண முயன்றிருக்கிறார்கள். ஆனால் லூக்காவின் அறிவிப்புப் படி இவர் திருத்தூதர் பிலிப்பாக இருக்க முடியாது. இவருடைய பெயர் முழுக்க முழுக்க கிரேக்க பெயர். பிலிப்பு பேரரசர் அலெக்சான்டருடைய தந்தையின் பெயர், அவரைத்தான் மசிதோனிய பெரிய பிலிப்பு என்று வரலாறு அழைக்கிறது. இதிலிருந்து இவர் கிரேக்க யூதர் என்பதை அறிந்து கொள்ளலாம். இது மட்டுமே போதுமான சான்று கிடையாது, ஏனெனில் பிலிப்பு என்ற பெயரில் எபிரேய யூதர்களும் இருந்திருக்கிறார்கள்.

சமாரியா, பாலஸ்தீனாவில் முக்கியமான நகர்களில் ஒன்று. ஒரு காலத்தில் இது வடஅரசின் (இஸ்ராயேலின்) தலைநகராக இருந்திருக்கிறது. எரோபோவாம் சாலமோனின் மகனிடம் இருந்து பிரிந்து வட அரசை நிறுவினார். இப்படியாக பத்து கோத்திரங்கள் இவரோடு இணைந்துகொண்டன. இவர் வழி மரபில் வந்த, ஒம்ரி என்ற இன்னோர் வடநாட்டு அரசர் தன் தலை நகராக சமாரியாவை தேர்ந்து கொண்டார். ஆனால் இவருடைய தேர்விற்கு முன்பே சமாரியா இருந்திருக்கிறது (காண்க 1அரசர் 16,24). ஒம்ரி சேமேரிடமிருந்து இந்த மலையை வாங்கி அதனை நகராக்கினார் என்று விவிலியம் சொல்கிறது. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நான்காம் சல்மனேசர் என்ற அசிரிய மன்னர் இந்த தலைநகர் மீது போர் தொடுத்து அதனை முற்றுகையிட்டார், அவர் வாரிசு சார்கோன் அதனை கைப்பற்றி தரைமட்டமாக்கி அங்கிருந்து வடநாட்டு இஸ்ராயேல் மக்களை நாடு கடத்தினார், அதன் பின்னர் இவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. பின்னர் சார்கோன் வேற்று நாட்டு மக்களை கொண்டுவந்து இங்கே குடியேற்றினார், அவர்கள் அங்கே இருந்த ஒரு சில வடநாட்டு இஸ்ராயேலரோடு கலந்து கொண்டனர். ஒரு புதிய மக்களினம் இங்கே உருவானது, அவர்களை வரலாறு சமாரியர் என்று அழைக்கிறது. இவர்கள் உண்மையான இஸ்ராயேலர் இல்லை என்று கருதி யூதர்கள் இவர்களோடு பழகுவதில்லை. சமாரியரும் யூதர்களின் சில நடவடிக்கை காரணமாக அவர்களோடு அந்நியோன்யம் காட்டுவதில்லை. இயேசுவின் காலத்தில் கூட இந்த பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் ஆரம்ப கால திருச்சபையை தன்னுடைய கிளையை இங்கே விரிப்பதை காண்கின்றோம். இயேசுவின் காலத்தில் இந்த சமாரியா, உரோமைய சீசர் அகஸ்து செபஸ்தேவின் பெயரில், செபஸ்தே என்று அழைக்கப்பட்டது.

வ.5: பிலிப்பு இங்கே சென்று சமாரியா வாழ் மக்களுக்கு இயேசுவை அறிவிக்கிறார். பிலிப்புவின் காலத்தில் இங்கே பல்லின் மக்கள் நிச்சயமாக வாழ்ந்திருப்பார்கள். ஆனால் பிலிப்புவின் போதனை கேட்டவர்கள் அநேகமாக கிரேக்கம், இலத்தின் அல்லது சமாரிய மொழி பேசுகிறவர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் எபிரேய அல்லது அரமேயிக்க யூதர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

வ.6: இந்த மக்கள் இரண்டு விடயங்களுக்காக பிலிப்புவிற்கு செவிசாய்க்கின்றனர். அவருடைய வாhத்தைகளின் பொருட்டும், அவருடைய அரும் அடையாளங்களைப் பொறுத்தும் மக்கள் ஒரு மனத்தோடு செவிசாய்கின்றனர். இதிலிருந்து, பிலிப்பு ஒரு பிரசங்கியாகவும், அத்தோடு அவர் ஒரு அரும் அடையாளங்கள் செய்பவராகவும் இருந்திருக்கிறார் என்பதும் புலப்படுகிறது.

வ.7: பிலிப்பு எப்படியான செயல்களை செய்தார் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. தீய ஆவிகள் கூச்சலிட்டுக் கொண்டே தாம் பிடித்தவர்களிலிருந்து வெளியேறுகின்றன (πνεύματα ἀκάθαρτα βοῶντα φωνῇ μεγάλῃ ἐξήρχοντο). இதிலிருந்து பிலிப்பு பேயோட்டும் வரம் பெற்றிருக்கிறார் என்பது புலப்படுகிறது. அத்தோடு உடலியல் குணமாக்கலையும் பிலிப்பு நிகழ்த்துகிறார், அவரால் பல முடக்குவாதம்முற்றவர்களும், கால் ஊனமுற்றவர்களும், குணமடைகின்றனர் (πολλοὶ δὲ παραλελυμένοι καὶ χωλοὶ ἐθεραπεύθησαν·). இந்த குணமாக்கல்; அக்கால பார்வையில் நோக்கப்படவேண்டும். அந்த நாட்களில் நோய்கள், மற்றும் மனநோய்கள் போன்றவை தீய சக்தியின் ஆதிக்கமாக பார்க்கப்பட்டன. இவற்றை குணமாக்குகிறவர்கள் இறைவனின் வல்லமையை பெற்றவர்களாகவும் கணிக்கப்பட்டனர். இப்படியான அதிசயங்களை ஆரம்ப கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல சில மந்திர வித்தைக் காரர்கள் கூட செய்திருப்பாதாக விவிலியமும், விவிலியமல்லாத நூல்களும் காட்டுகின்றன.

வ.8: பிலிப்புவின் இந்த செயற்பாடுகள் அந்த நகரில் பெரும் மகிழ்சியைக் கொணர்வதாக லூக்கா எழுதுகிறார் (πολλὴ χαρὰ). இந்த மகிழ்ச்சி லூக்கா சொல்லும் இறுதிக்கால மகிழ்ச்சியை நினைவுபடுத்தலாம் (காண்க லூக்கா 7,22-23). இந்த அடையாளங்கள் ஆண்டவரின் ஆட்சி ஏற்கனவே வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. ஆக சமாரியாவில் கடவுளின் ஆட்சி வந்துவிட்டது என்பதை சமாரியர்கள் கண்டுகொள்கின்றனர். இதனால் மகிழ்வடைகின்றனர்.

வவ.9-13: லூக்கா நமக்கு ஒரு மந்திரவாதியை அறிமுகம் செய்கிறார். இந்த மந்திரவாதியும் வல்ல செயல்களை செய்திருக்கிறார் (Σίμων). அத்தோடு பெரிய மற்றும் சிறிய நகரவாசிகள் அனைவரும் இந்த மந்திரவாதிக்கு தங்கள் மரியாதையை செலுத்தியிருக்கிறார்கள். பிலிப்புவிற்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை இவரும் பெற்றிருக்கிறார். அற்கான காரணம் அவருடைய மாயவித்தைகள் என காட்டப்படுகிறது. ஆனால் இவரைப் போல பிலிப்பு மாயவித்தைகள் செய்யவில்லை என்பதை லூக்கா காட்டுகிறார். லூக்கா இவரிலிருந்து மாறுபடுகிறார். அவர் இறையாட்சியையும், இயேசுவையும் அறிவிக்கிறார். அத்தோடு மந்திரவாதிக்கு, இவர்கள் மரியாதையையும் மலைப்பையுமே கொடுத்தனர், ஆனால் பிலிப்பிற்கு அவர்கள் செவிசாய்த்து திருமுழுக்கை பெற்றனர். இது பிலிப்புவின் வித்தியாசத்தைக் காட்டுகிறது. அத்தோடு சீமோன்கூட மலைத்துப் போய் பிலிப்போடு இருக்கிறார், இது அவரையும் சாதாரண மனிதராக பிலிப்புவின் முன்னால் காட்டுகிறது.

வ.14: திருச்சபை ஒன்றாக இருக்கிறது அத்தோடு அதன் தலைமைத்துவம் எருசலேமில்தான் இருக்கிறது என்பதை லூக்கா இந்த வரியில் காட்டுகிறார். சமாரியருடைய மனமாற்ற செய்தி எருசலேமையும் அங்கிருந்த திருத்தூதர்களையும் அடைகிறது. அவர்கள் பேதுருவையும் யோவானையும் சமாரியாவிற்கு அனுப்புகிறார்கள் (Πέτρον καὶ Ἰωάννην). பேதுரு தலைவராக இருந்தாலும், திருத்தூதர்கள் ஒரே குழுவாக முடிவெடுப்பதிலிருந்து, ஆரம்ப கால திருச்சபை ஒரு குழுவாக இயங்கியிருக்கிறது என்பது புலப்படுகிறது. யோவான் இயேசுவின் முக்கியமான மூன்று சீடர்களில் ஒருவராக இருந்த படியால் அனுப்பப்பட்டிருக்கலாம். வேறு இன்னொரு சந்தர்ப்பத்தில் பர்னபாவும் இப்படியான ஒரு தேவைக்காக அனுப்பப்பட்டார் (காண்க தி.ப 11,22).

வ.15: இவர்கள் சமாரியாவிற்கு வந்து, இந்த கிறிஸ்தவ புது அங்கத்தவர்கள் தூய ஆவியை பெறுமாறு வேண்டுகிறார்கள். இதிலிருந்து திருமுழுக்கு பெற்றாலும் தூய ஆவியை பெறவேண்டும் என்பது நியதியாக இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது, அத்தோடு அனைத்து ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் தூய ஆவியை பெற்றிருந்தார்கள் என்பதும் புலப்படுகிறது. அப்படியே தூய ஆவியை பெற இவர்கள் கடவுளிடமே வேண்டுகிறார்கள். தாங்கள் தூய ஆவியை நினைப்பவர்களுக்கு கொடுக்கிறவர்களாக காட்டப்படவில்லை.

வ.16: தூய ஆவியை பெறவேண்டிய தேவையை இந்த வரி காட்டுகிறது. இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெற்றிருந்தும் (οὐδέπω γὰρ ἦν ⸂ἐπ᾿ οὐδενὶ⸃ αὐτῶν ἐπιπεπτωκός), அவர்கள் தூய ஆவியை பெறாமலிருப்பது, திருமுழுக்கின் குறைபாட்டை காட்டுகிறது. இதிலிருந்து தூய ஆவியில்லாத திருமுழுக்கு அல்லது நம்பிக்கை இல்லாத திருமுழுக்கினால் பயன் இல்லை என்பது போல தெரிகிறது. திருமுழுக்கு ஒரு திருவருட் சாதனம், அது மந்திரவித்தை அல்ல, யாரும் அதனை சடங்காக மட்டும் பெற்றால் போதாது என்பதை ஆரம்ப கால திருச்சபை நன்கு அறிந்திருக்கிறது.

வ.17: எப்படி தூய ஆவியை பெற்றார்கள் என்பது காட்டப்படுகிறது (ἐπετίθεσαν τὰς χεῖρας ἐπ᾿ αὐτοὺς καὶ ἐλάμβανον πνεῦμα ἅγιον). கைகளை தலைமீது வைத்து செபித்தல் அக்காலத்தில் மிக முக்கியமான அடையாளமாக இருந்திருக்கிறது. இன்றைய திருச்சபையின் தலையில் கைவத்து செபித்தல் என்ற வழிபாட்டு முறை இந்த பாரம்பரியத்திலிருந்தே தோன்றியிருக்க வேண்டும். திருத்தூதர்கள் கைகளை இவர்களின் தலைமேல் வைத்து செபித்து தூய ஆவியை கொடுக்கிறார்கள். ஏன் இந்த செயற்பாட்டை பிலிப்பு செய்யவில்லை என்ற கேள்வி எழலாம். இதற்கான விடை அவ்வளவு இலகுவாக இருக்காது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 66

1அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
2அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3கடவுளை நோக்கி 'உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்;
4அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். (சேலா)
5வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.
6கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.
7அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன் கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக! (சேலா)
8மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்.
9நம்மை உயிர்வாழச் செய்தவர் அவர் அவர் நம் கால்களை இடற விடவில்லை.
10கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;
11கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்; பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.
12மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்; நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்; ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர்.
13எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்; என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
14அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது என் வாய் உறுதி செய்தது.
15கொழுத்த கன்றுகளை, செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு, உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்; காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
16கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
17அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.
18என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார்.
19ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்; என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.
20என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!


அமைப்பில் இந்த திருப்பாடல் ஒரு வழிபாட்டு பாடல் போல இருக்கிறது. 1-12 ஆன வரிகள் குழு வழிபாட்டு பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. 13-20 ஆன வரிகள் தனிநபர் நன்றிப் பாடலாக அமைந்துள்ளது. வவ.1-2: அனைத்து உலக மக்களுக்கு ஆண்டவரின் மேன்மையை உணரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வியங்கோல் வாக்கியங்களும், சாதாரண வாக்கியங்களும் மாறி மாறி வருவதனால், இந்த பாடல் தனித்துவமான பாடல் போல அமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் காண்கின்றனர். நிச்சயமாக இந்தப் பாடல் எதோ ஒரு இடப்பெயர்விற்கு பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது எந்த இடப்பெயர்வு என்று தெரியவில்லை. ஆனால் இந்த பாடல் எழுதியபோது எருசலேம் தேவாலயம் இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது ஆக இங்கே பாடப்பாடுகின்ற அனுபவங்கள் எகிப்திய அனுபவமாக இருக்கலாம். பிற்காலத்திலும் இந்த அனுபவங்கள் தொடர்ச்சியாக நினைவுகூறப்பட்டது என்பதையும் நினைவில் கொள்வோம்.

வவ.1-2: சில திருப்பாடல்கள் வாழ்த்துரைகளை அனைத்து உலகத்தாருக்கும் கொடுக்கின்றன, இந்த வகை குழுவில் இந்த திருப்பாடலும் ஒன்று. பாடலுக்கான பாடல் என்று இந்த திருப்பாடல் தொடங்குகின்றது, இதன் எபிரேய வார்த்தைகளை மொழிபெயர்ப்பது அவ்வளவு இலவாக இருக்காது (לַמְנַצֵּחַ שִׁיר מִזְמוֹר). அனைத்துலகோர் என்ற அழகிய தமிழ் வார்த்தைக்கு எபிரேய மூல மொழி 'அனைத்து நிலமே' என்று பாடுகிறது (כָּל־הָאָֽרֶץ). இந்த அனைத்து உலகோரை, கடவுளின் பெயரின் மாட்சியையும், புகழையும் பாடுமாறு கேட்கிறார் ஆசிரியர். ஆண்டவர் அல்லது அவருடைய பெயர் என்பது ஒன்றுதான். ஆண்டவரை புகழ மனிதர்களால் முடியாது எனவே அவர் பெயரையாவது புகழுவோம் என்பது எபிரேய சிந்தனை.

வவ.3-4: இவர்கள் கடவுளை நோக்கி இரண்டு புகழ்ச்சிகளை சொல்லச் சொல்லி கேட்க்கப்படுகிறார்கள். முதலாவதாக, கடவுளின் செயல்கள் எவ்வளவு அச்சத்திற்குரியவை என்பது பயத்தை அல்ல மாறாக கடவுளின் நம்பிக்கை கலந்த வியப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆசிரியரின் நோக்கம். கடவுளின் எதிரிகள் என்போர் பலரைக் குறிக்கலாம். அது பொய்த் தெய்வங்கள், எகிப்திய பாரவோன், இஸ்ராயேலரின் அரசியல் எதிரிகள் என பலர் இந்த குழுவிற்குள் வரலாம். இரண்டாவதாக, அனைவரும் கடவுளை பணிந்து அவர் புகழைப் பாடுவர் என்பதை இந்த அனைத்துலகோர் சொல்கின்றனர்.

இந்த வரிகளுக்கு பின்னர் சேலா என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது (סֶלָה). இதற்கு பல அர்த்தங்களை பலர் முன்வைக்கின்றனர். அதிகமானவர்கள் இதனை பாடல் அடி முடிவு அல்லது தொடக்கத்திற்கான அடையாளம் என காண்கின்றனர், இருப்பினும் இந்த விளக்கம் திருப்தியானதாக இருக்காது.

வ.5: ஆசிரியர் இப்போது முதலாவது அழைப்பை முன்வைக்கிறார். வந்து பார்க்கச் சொல்கிறார். போய்ப் பாருங்கள் என்றே (לְכוּ וּרְאוּ) எபிரேய மூல மொழியில் உள்ளது. ஆண்டவரின் செயல்கள் அச்சத்திற்குரியவை என்பதை அவர் காட்ட முயல்கிறார்.

வ.6: இந்த வரி நிச்சயமாக செங்கடல் மற்றும் யோர்தான் அனுபவத்தையும் நினைவூட்டும். ஆசிரியர் நிச்சயமாக செங்கடலையும், யோர்தானையும் கடந்தவராக இருந்திருக்க முடியாது ஆனால் அதனை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். இஸ்ராயேல் மக்கள் செங்கடலை கால் நனையாமல் மோசேயின் தலைமையில் கடந்து வந்தனர் (காண்க வி.ப 14,21). அதனையே யோசுவாவும் யோர்தான் நதிக்கு செய்தார் (யோசுவா 5,1). இதனைத்தான் ஆசிரியர் தன் பாடலில் வைக்கிறார். சில ஆய்வாளர்கள் இந்த நதி (נָהָר) என்பது, செங்கடலுக்கு ஒத்த கருத்துச் சொல்லாகவே பார்க்கப்படவேண்டும், ஆக இங்கே ஆசிரியர் செங்கடலை மட்டும்தான் குறிப்பிடுகிறார் என்றும் வாதிடுகின்றனர். இந்த எடுகோளுக்கு வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை. இந்த வரியின் இறுதி பகுதி நோக்கப்பட வேண்டும். 'அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்' என்கிறார் ஆசிரியர் (שָׁ֗ם נִשְׂמְחָה־בּֽוֹ), ஆக மகிழ்ச்சி ஆண்டவரின் அதிசயங்களில் இல்லை, மாறாக அது அவரில் இருக்கிறது என்பது அழகாகப் புலப்படுகிறது.

வ.7: யார் அரசாள்கிறார் என்பது இஸ்ராயேலருடைய பழம்பொரும் கேள்வி. இஸ்ராயேலர்கள் மனிதர்களை தங்களது அரசர்களாக ஏற்க சற்று தயங்கினர். இந்த தயக்கம் காலத்தால் பிந்தியது அல்லது இது ஒரு எடுகோள்தான் என்ற வாதமும் இருக்கிறது. இருப்பினும் இஸ்ராயேலருடைய உண்மையான அரசர் கடவுள்தான் என்பதை பல வேளைகளில் விவிலியம் காட்டுகிறது. இந்த ஆசிரியரின் கருத்துப்படி, கடவுள்தான் உண்மையில் என்றென்றும் அரசாள்கிறார், அவர்தான் வேற்றினத்தாரை கண்காணிக்கிறார். இதனை மனித அரசர்களால் செய்ய முடியாது. கலகம் செய்கிறவர்கள் இந்த கடவுள் அரசருக்கு எதிராக தலை தூக்கார். சேலா என்ற சொல் மீண்டும் இங்கே பாவிக்கப்படுகிறது.

வவ.8-9: மீண்டுமாக மக்களினங்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. கடவுளை புகழுமாறு மக்களினங்களுக்கு கேட்கப்படுகிறது (בָּרְכ֖וּ עַמִּ֥ים). கடவுள் அனைவருடையவர், அத்தோடு அனைவருக்குமானவர் என்பது இங்கே புலப்படுகிறது. அதற்கான காரணத்தை ஒன்பதாவது வரி காட்டுகிறது, அவர்தான் மக்களினங்களை வாழச் செய்தவர். இதனை அவர்தான் நமது இருப்பை உறுதி செய்தவர் என எபிரேய மொழி காட்டுகிறது (הַשָּׂם נַ֭פְשֵׁנוּ בַּֽחַיִּ֑ים).

வவ.10-12: கடவுள் தந்ததாக நம்பப்படும் தண்டனையை நினைத்துப் பார்க்கிறார், ஆனால் அதனை திருந்துவதற்கான வாய்ப்பாக பார்க்கிறார். வெள்ளி (כֶּסֶף) அக்காலத்தில் பொன்னைப்போல் சிலவேளைகளில் பொன்னைவிட பொக்கிசமானது. அதுவும் புடமிடப்பட்டது. புடமிடப்படுவதன் வாயிலாக இந்த வெள்ளி காசாகவும், பாத்திரங்களாகவும், அல்லது முலாமாகவும் மாற்றம் பெற்றது. விவிலிய காலத்தில், வெள்ளிதான் பணத்திற்கான முக்கியமான மூலப்பொருளாக இருந்தது. கடவுள் தங்களை கண்ணியில் விழச்செய்ததாகவும், பளுவான சுமைகளை தோளில் சுமத்தியதாகவும் சொல்கிறார், ஆனால் குற்றம் சாட்டவில்லை. முதல் ஏற்பாட்டில் தண்டனை, கஸ்டம், துன்பம் போன்றவை கடவுளின் கண்டிப்பாக பார்க்கப்பட்டன. இதனை இந்த வரிகளில் காணலாம். பன்னிரண்டாவது வரியில், மனிதர்கள் இஸ்ராயேலரின் தலைமீது நடந்து சென்றனர் என்கிறார் ஆசிரியர். இது உருவகமா அல்லது உண்மையாக நடந்ததா என்பது புலப்படவில்லை. எபிரேய விவிலியம், மனிதர் எம் தலை மீது தேரோட்ட அனுமதித்தீர் என்றே உள்ளது (הִרְכַּבְתָּ אֱנוֹשׁ לְרֹ֫אשֵׁנוּ).இதனை அடையாளமாக பார்க்கலாம், இது இஸ்ராயேலரின் தோல்வியை அல்லது அவமானத்தை காட்டலாம். இருப்பினும் அக்கால போர்களில் இதனை அவர்கள் உண்மையாக்கூட செய்திருக்கலாம்.

பன்னிரண்டாவது வரியின் இறுதியிலும் அடையாளங்களை பாவித்து கடவுளின் மீட்பை உருவகிக்கிறார் ஆசிரியர். தாங்கள் தண்ணீரிலும், நெருப்பிலும் நடந்து வந்ததாக சொல்கிறார். இங்கே தண்ணீரும் நெருப்பும் இரண்டு வகையான வாழ்வின் துன்பங்களை காட்டலாம். வாழ்வியலின் வெப்பத்தையும், குளிரையும் உருவகிக்கிறார் என நினைக்கிறேன்.

வ.13: இந்த வரியுடன் ஆசிரியர் தன்னை மட்டும் எடுத்து ஒருமையில் தனி மனித அனுபவமாக பாடுகிறார். எரிபலியுடன் கடவுளின் இல்லத்திற்கு செல்வதாக சொல்கிறார். அநேகமாக இது எருசலேம் தேவாலயத்தை குறிக்க வேண்டும். ஆலயத்தில் பொருத்தனைகள் (நேத்திகள்) செலுத்துவதும் அக்கால வழக்கமாயிருந்தது.

வ.14: இதனை அவர் மகிழ்ச்சியான வேளையில் எடுக்கவில்லை மாறாக துன்பமான வேளையில் எடுத்திருக்கிறார். துன்பமான வேளைகளில் வாக்கு கொடுப்பதும், பொருத்தனைகள் செய்வதும் அக்காலத்திலும் நடைமுறையில் இருந்திருக்கிறதை இங்கே காணலாம். நா உரைப்பதும், வாய் உறுதி செய்வதும் ஒத்த கருத்துக்கள். இதனை திருப்பிக் கூறுதல் என்று எபிரேய இலக்கியம் அழைக்கிறது.

வ.15: எரிபலிகள் செலுத்துதல் எருசலேம் ஆலயத்தின் மிக முக்கியமான சடங்காக இருந்திருக்கிறதாக ஆய்வாளர்கள் ஏற்று;ககொள்கின்றனர். எப்படியான எரி பலிகளை எருசலேம் தேவாலயம் சந்தித்திருக்கிறது என்பதையும் இந்த வரியில் காணலாம். கொழுத்த மிருகங்கள் (מֵחִים), செம்மறிகிடாய்களோடு நறும்புகை (עִם־קְטֹרֶת אֵילִים), காளையும் வெள்ளாடுக் கிடாயும் (בָקָר עִם־עַתּוּדִ֣ים). இந்த வரியின் பின்னரும் சேலா என்கிற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிமாறுகிறது எனலாம்.

வ.16: அனைத்து மக்களினங்களை ஆரம்பத்தில் அழைத்தவர், பின்னர் தன்னைத் தானே அழைத்தவர் இப்போது கடவுளுக்கு அஞ்சி நடப்போரை அழைக்கிறார். வரச் சொல்கிறார் (לְכֽוּ), கேட்கச் சொல்கிறார் (שִׁמְעוּ), அத்தோடு தான் எடுத்துரைப்பதாகச் சொல்கிறார் (אֲסַפְּרָה).

வ.17: மன்றாடுதலும், ஏத்திப்புகழ்வதும் ஒத்தகருத்துச் சொற்களாக பாவிக்கப்பட்டுள்ளன. இதற்க்கு எபிரேய விவிலியம் சத்தமிடுதல் மற்றும் பாடுதல் என்ற சொற்களை பயன்படுத்துகிறது.

வ.18: உள்ளத்தில் தீய எண்ணம் உள்ளவர்களுக்கு கடவுள் செவிசாய்க்க மாட்டார் என்ற அழகான சிந்தனையை முன்வைக்கிறார் ஆசிரியர். கடவுளை தன் தலைவர் என்கிறார், இது முதல் ஏற்பாட்டிலுள்ள கடவுளுக்கான இன்னொரு அழகான பெயர் (אֲדֹנָי அதோனாய், என் தலைவர்).

வ.19: இந்த வரியின் மூலம் தான் உள்ளத்தில் தூய்மையானவன் என்பதைக் காட்டுகிறார். இந்த உள்ளத்து தூய்மைதான் கடவுளை இவருடைய குரலுக்கு செவிசாய்க்க வைக்கிறது என்கிறார். ஆண்டவர் செவிசாய்கிறார் என்றால், அவர் விண்ணப்பக் குரலை உற்று நோக்குகிறார் என்று பொருள். இதனை அழகான தமிழ்ச் சொற்களில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

வ.20: இறுதியாக புகழுரையுடன் இந்த பாடலை முடிக்கிறார் ஆசிரியர். இது சாதாரணமாக திருப்பாடல்களில் இருக்கின்ற வடிவம். בָּרוּךְ אֱלֹהִים பாருக் எலோகிம் என்ற சொற்பதங்கள் எபிரேயர்கள் நாளாந்தம் உச்சரிக்கின்றவை, நாம் கிறிஸ்துவிற்கு புகழ் என்று சொல்வதைப் போல.



இரண்டாம் வாசகம்
1பேதுரு 3,15-18

15உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். 16ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். 17ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல். 18கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

தொடர்ச்சியாக பேதுருவின் கடிதத்திலிருந்த வாசிக்கின்றோம். முதலாவது பேதுருவின் மூன்றாவது அதிகாரம் 22 வரிகளைக் கொண்டுள்ளது. இது இரண்டு பிரிவுகளாக தமிழ் விவிலியத்தில் பரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக வவ. 1-7, 'மனைவியும், கணவரும்' எனவும் இரண்டாவதாக வவ. 8-22 'நீதியின் பொருட்டு துன்புறல்' எனவும் காணப்படுகிறது. இப்படியான பிரிவுகளை மூல கிரேக்க விவிலியத்தில் காணமுடியாது.

வ.15: இந்த வசனம் விசுவாசத்திற்கும் கல்வியறிவிற்கும் மிக முக்கியமான வரி. கிறிஸ்தவர்கள் மெய்யியலை கற்க வேண்டும் என்ற தேவையை இந்த வரி உருவாக்குகின்றது. விசுவாசம் என்பது கண்ணுக்கும் புலங்களுக்கும் முழுக்க முழுக்க அப்பாற்பட்டது அல்லது, அதனை விளக்கக்கூடிய தகுதியை விசுவாசிகள் கொண்டிருக்க வேண்டும் என பேதுரு உரைக்கிறார். உள்ளத்தில் கிறிஸ்துவை தூயவராகக் கொண்டு முதலில் போற்ற வேண்டும் (κύριον δὲ τὸν Χριστὸν ἁγιάσατε ἐν ταῖς καρδίαις ὑμῶν). இதனை விசுவாசத்தின் முதல் படியாக பார்க்கிறார் பேதுரு. இரண்டாவதாக யாராவது, இந்த விசுவாசத்தை கேள்விகேட்டால் அதனை விளக்கவேண்டும் என்கிறார், அதாவது அதனை பற்றி விசுவாசிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்கிறார் (αἰτοῦντι ὑμᾶς λόγον περὶ τῆς ἐν ὑμῖν ἐλπίδος). புரியாத மற்றும் குருட்டு விசுவாசத்தினால் பயன் ஒன்றும் இல்லை என்பதை ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கே திட்டவட்டமாக்குகிறார்.

வ.16: இந்த விசுவாசம் பற்றி விளக்கத்தை பணிவான முறையில் கொடுக்க கேட்கிறார். ஆரம்ப கால திருச்சபை உடலியல் மற்றும் கல்வியல் ரீதியான துன்பத்தையும், துன்புறுத்தலையும் சந்தித்தது. படித்த கிரேக்க சமுதாயம் கிறிஸ்தவத்தை பற்றி பல விதமான கேள்விகளையும், சிலவேளைகளில் ஏளனங்களையும் முன்வைத்தது. கேள்வி கேட்கிறவர் ஏளனமான கேள்வி கேட்டாலும், பதில் சொல்லும் கிறிஸ்தவர் பண்பாக பதில் சொல்லவேண்டும் எனவும், இந்த பணிவை இன்னொரு நற்செய்தி அறிவிப்பு ஊடகமாகவும் பயன்படுத்தலாம் என்கிறார்.

இழிவாக கருதுகிறவர்கள், கிறிஸ்தவர்களின் தாழ்ச்சியைக் கண்டு, அதனால் அவர்களே வெட்கப்படுவார்கள் என்கிறார் பேதுரு. பணிவு ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு தேவையான பண்பாக இருந்திருக்கிறது என்பதையும் இங்கே காணலாம்.

வ.17: தீமையால் வருகிற துன்பம் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப் பட முடியாதது. தீமையால் துன்புறுவதை விட நன்மைசெய்து துன்புறுவதுதான் மேன்மையானது (κρεῖττον γὰρ ἀγαθοποιοῦνταςஇ πάσχειν ἢ κακοποιοῦντας) என்ற சிந்தனை பேதுருவின் திருமுகத்தில் மீண்டும் மீண்டும் வருகிறது. தீமைசெய்து துன்புற்றதை ஒரு சாட்சியமாக காட்ட பேதுருவின் திருச்சபையில் சிலர் விளைந்திருக்கலாம், இவர்களுக்கு இந்த வாக்கு வித்தியாசமாக இருந்திருக்கும்.

வ.18: இந்த நீதியான துன்புறுதலுக்கு இயேசுவை உதாரணமாக எடுக்கிறார் பேதுரு. கிறிஸ்துவின் மரணத்திற்கு மனிதர்களின் பாவங்களே காரணம் என காட்டி, அதனால் அவர் ஒருமுறை இறந்தார் என சொல்கிறார். இதற்க்கான நோக்கம், மக்களை கடவுளிடம் கொண்டுபோதல் என்கிறார். ஆனால் இங்கே வித்தியாசம் என்னவென்றால், கிறிஸ்து நீதியுள்ளவர் (δίκαιος), அவர் நீதியற்றவர்களுக்காக (ἀδίκων) இறக்கிறார். இங்கே இன்னொரு வேற்றுமையையும் அவர் காட்டுகிறார், அதாவது அவர் இறந்தபோது மனித இயல்போடு இருந்தார் (σαρκί), ஆனால் அவர் உயிர்த்தபோது ஆவிக்குரிய இயல்போடு (πνεύματι) உயிர்க்கிறார் என்பதாகும்.


நற்செய்தி வாசகம்
யோவான் 14,15-21

15நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். 16'உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். 17அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். 18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். 19இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். 20நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 21என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.'

கடந்த வாரம் வாசித்த அதே பகுதியிலிருந்து இன்றைய வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிகளை விளங்கிக் கொள்ள மீண்டும் ஒருமுறை யோவானுடைய அடையாள பாவனைகளையும், உருவக பாவனைகளையும் மீள நினைவூட்டிக் கொள்வோம். யோவான் நற்செய்தியின் அடையாள பாவனைக்கு யோவான் நற்செய்தி மட்டுமே நிகர். பல அடையாளங்களை கையாண்டு இயேசுவை உன்னதமான கடவுளாக காட்டுகிறார் யோவான். இந்த பதினாங்காம் அதிகாரம், பயம் கொண்ட சீடர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதைப்போல அமைக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் அதிகாரத்தில் சீடர்களின் கால்களை கழுவிய இயேசு, பின்னர் தனக்கு நடக்கவிருப்பதை விளக்கிக் கூறுகிறார். பின்னர் அவர்களுக்கு புதிய கட்டளையைக் கொடுத்து, பேதுரு கூட தன்னை மறுதலிப்பார் என்பதை விளக்குகிறார். இது இவர்களுக்கு பல கேள்விகளையும் அச்சங்களையும் இயற்கையாவே உருவாக்கியிருக்கும். இப்படியாக மனவுளைச்சலுக்கு உள்ளான தன் சீடர்களை இந்த அதிகாரத்தில் திடப்படுத்தி நம்பிக்கை அளிக்கிறார்.

வ.15: கட்டளைகள் (ἐντολή), முதல் ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் முக முக்கியமான இறையியல் பதம். முதல் ஏற்பாடு இதனை தோறா என அழைக்கிறது (תּוֹרָה). முதல் ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களும் இந்த சட்டத்தையே மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. கடவுள் தந்தது பத்துக் கட்டளைகள், மோசே அதனை விளக்க பல நூறு சட்டங்களை தந்ததாக பாரம்பரியம் சொல்கிறது. இந்த சட்டங்கள் இஸ்ராயேலருக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தையும், அவர்களுக்கு கடவுளின் மக்கள் என்ற அந்தஸ்தையும் கொடுத்தது. சட்டங்களை முதலின் அறிமுகப்படுத்தியவர்கள் இஸ்ராயேலர் இல்லை என்பதை இன்றைய வரலாற்றின் ஆய்வுகள் காட்டுகின்றன. ஹம்முராபி என்ற பபிலோனிய ஆட்சியாளர் ஒருவர் கி.மு 1754 இல் பல சட்டங்களை தன் மக்களுக்கு வழங்கியுள்ளார். இவர் பபிலோனியாவின் ஆறாவது அரசராக கணிக்கப்படுகிறார். இவரை வரலாறு அமோரிய இனத்தை சார்ந்தவர் என்று இவருடைய பெயரைக் கொண்டு அறிகிறது. இவர் பலவற்றை இவருடைய காலத்தில் செய்தாலும், ஹம்முராபியின் சட்ட கோட்பாடு என்ற கல்வெட்டுக்காவே அறியப்படுகிறார். இந்த சட்டம், முதலில் முன்னுரையையும், பின்னர் சட்டத்தை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளையும், இறுதியாக சட்டத்தை மீறினால் கிடைக்கும் சாபத்தையும் விளக்குகிறது. இது பல வழிகளில் தோறாவையும், முதல் ஏற்பாட்டு சட்டங்களையும், ஒத்திருக்கிறது. ஆனால் காலத்தால் பழையது ஹம்முராபியுடையது. யோவானுடைய சட்டங்கள் பற்றிய அறிவும் இந்த சாயலை காட்டுகிறது.

முதல் ஏற்பாடு சட்டத்தை கடவுள் மேல் காட்டும் அன்பின் வெளிப்பாடாக காட்டியது, காண்க திருப்பாடல் 1,2 (அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;). இதனைத்தான் யோவானும் சொல்கிறார், ஆனால் இங்கே சட்டம் என்பது இயேசுவின் சட்டமாக அதாவது அவரது வார்த்தையாக மாறுகிறது. யோவான் மோசேயின் சட்டத்தை இயேசுவின் வார்த்தைக்கு ஈடு செய்து மாற்றுகிறார். அத்தோடு இங்கே சட்டத்தை கடைப்பிடிப்பவர்கள் இயேசுவின் மீது அன்பைக் காட்டுகிறார்கள் என்ற புதிய அர்த்தத்தையும் கொண்டுவருகிறார் (Ἐὰν ἀγαπᾶτέ μεஇ τὰς ἐντολὰς τὰς ἐμὰς ⸀τηρήσετε·).

வ.16: இந்த வரியில் யோவான் துணையாளரை (παράκλητος பராகிலேடொஸ்) நமக்கு அறிமுகம் செய்கிறார். யார் இந்த துணையாளர்? இ;ந்த துணையாளர் சீடர்களோடு இருப்பதற்காகவே கொடுக்கப்படுகிறார். இயேசுவின் இந்த வேண்டுதல் தந்தையிடம் வைக்கப்படுகிறது, ஆக இந்த துணையாளரை அனுப்புகிறவர் கடவுளாகிய தந்தை என்கிறார் இயேசு.

பராகிலேடொஸ் என்ற கிரேக்க பதம், நீதிபதிக்கு முன் நமக்காக வாதாடுகின்ற நம்முடைய வக்கீலை (சட்ட வல்லுநரை) குறிக்கிறது. இந்த சொல்லிற்கு உதவியாளர், ஆறுதல் படுத்துகிறவர், துணையாளர், உதவியாளர் என்ற பல அர்த்தங்கள் உள்ளன. யோவான் இந்த கிரேக்க சட்டச் சொல்லை தூய ஆவியாருக்கு பாவிக்கிறார். இது யோவானின் கிரேக்க மொழி புலமைத்துவத்தைக் காட்டுகிறது. சில இடங்களில் இயேசுவின் கடவுளுக்கு முன்னால் நமக்காக பரிந்து பேசுகிறவராக காட்டப்படுகிறார் (காண்க 1யோவான் 2,1). இதனால்தான் என்னவோ 'இன்னொரு துணையாளர்' என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது எனலாம் (ἄλλον παράκλητον). இங்கே இயேசுவே பேசுகிறவர் ஆதலால், அவர் இன்னொருவராகத்தான் இருக்க வேண்டும். சில பிற்கால யூத இலக்கியங்கள் இந்த துணையாளரை மிக்கேல் வானதூதர் எனவும், உண்மையின் ஆவி எனவும், காட்டுகின்றன.

இந்த இடத்தில் இயேசு சொல்கின்ற பராகிலேடொஸ் என்பவர் அவருடைய துணையாளராகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில் இங்கே கேட்கிறவராக அவரே இருக்கிறார்.

வ.17: இந்த வரியில் இயேசு இத் துணையாளரை விளக்குகிறார். இயேசு இவரை உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்கிறார் (τὸ πνεῦμα τῆς ἀληθείας). இதனை தூய ஆவியாருடைய இன்னொரு பெயர் என்று எடுக்க முடியாது மாறாக அவருடைய வேலை என்னவென்று எடுக்கலாம். அவர் உண்மையின் வெளிப்படுத்துனர் என்பதன் மூலம், உண்மையைவிட முக்கியமானவர் என்பது தெரிகிறது. அத்தோடு இவர் இயேசுவின் இயல்பை பகிர்கிறார் என்பதும் புலப்படுகிறது, ஏனெனில் இயேசு தன்னை 'உண்மை' என்று சொல்லியிருக்கிறார் (காண்க யோவான் 14,6). அத்தோடு இந்த தூய ஆவியார், கடவுள் மற்றும் இயேசுவுடன் சேர்ந்தே வேலைசெய்கிறார் என்பது இவர்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது.

உலகம் இந்த தூய ஆவியாருக்கு செய்ய இருக்கிறதையும் இயேசு காட்டுகிறார். உலகம் தனக்கு என்ன செய்தாரோ அதனைத்தான் தூய ஆவியாருக்கும் செய்ய இருக்கிறது. அதாவது அது தூய ஆவியாரை ஏற்றுக்கொள்ளாது. உலகம் இவரை காணாது (οὐ θεωρεῖ), ஏற்றும் கொள்ளாது (οὐδὲ γινώσκει). பதினேழாவது வசனத்தின் இரண்டாம் பகுதி, நம்பிக்கை கொண்டோரின் வாழ்கை முறையைக் காட்டுகிறது. அதாவது இவர்கள் தூய ஆவியை அறிந்திருக்கிறார்கள் (ὑμεῖς γινώσκετε), அவரும் இவர்களோடு இருக்கிறார் (ὅτι παρ᾿ ὑμῖν), அத்தோடு அவர் இவர்களுக்குள்ளும் இருக்கிறார் (ἐν ὑμῖν ἔσται.). கிரேக்க விவிலியம், இறுதியான பகுதியை 'அவர் உங்களுக்குள் இருப்பாh' என்கிறது, ஆனால் தமிழ் விவிலியம் 'உங்களுக்குள் இருக்கிறார்' என மொழிபெயர்த்துள்ளது. இப்படியாக காலத்திற்கிடையிலான வித்தியாசம், கிரேக விவிலியத்திலும் ஆரயப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்காலத்தையே அதிகமான ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எது எப்படியெனினும், தூய ஆவியார் இயேசுவின் தொடர்ச்சியாகவே வருகிறார். இவர் உலகில் உள்ள கிறிஸ்துவின் சீடர்களையும், சீடர் அல்லாதவர்களையும் பிரித்துக் காட்டுகிறார். இதனால்தான் இவர் உண்மையின் ஆவி எனப்படுகிறார் போல.

வ.18: இந்த வரியில் ஆண்டவர் திடப்படுத்துகிறார். இயேசு இவர்களிடம் திரும்பி வருவதாகச் சொல்கிறார். எந்த வருகையைப்பற்றி சொல்கிறார் என்பது புலப்படவில்லை. 'திக்கற்றவர்களாய் விடமாட்டேன்' என்கிறார், இதற்க்கு ஒர்பானொஸ் (ὀρφανός) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இந்த உருவகம், ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் துன்பத்தையும், இயேசுவிற்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இருந்த நெருங்கிய உறவையும் குறிக்கிறது. சிலர், இயேசு தான் திரும்பி வருவேன் என்று சொன்னதை, அவருடைய உயிர்ப்பின் பின்னரான தோற்றங்களை குறிப்பதாகச் சொல்கின்றனர்.

வ.19: உலகம் தன்னை சிறிது காலத்தில் காணாது என்பது, இயேசுவின் மரணத்தைக் குறிக்கலாம். ஆனால் சீடர்கள் தமது நம்பிக்கை காரணமாக இயேசுவை அவருடைய மரணத்தையும் தாண்டி காண்பார்கள், அதற்கான காரணம் இயேசுவிற்கு மரணம் இல்லை என்கிறார் (ὅτι ἐγὼ ζῶ). ஏனெனில் நான் வாழ்கிறேன் என்ற இயேசுவின் இந்த வரியின் பகுதி, யோவான் நற்செய்தியில், இயேசுவை முதல் ஏற்பாட்டு கடவுளோடு ஒப்பிடுகிறது. இயேசு வாழுகின்ற கடவுள். அந்த கடவுளில் அவர் சீடர்களும் வாழ்கிறவர்கள் ஆகிறார்கள் (καὶ ὑμεῖς ζήσετε). இந்த கிரேக்க வரியில் சிறிய ஆனால் மிக முக்கியமான வித்தியாசம் உள்ளது அதாவது இயேசு வாழக்கிறார் (நிகழ்காலம்), கடவுளுக்கு காலம் இல்லை. சீடர்கள் வாழ்வார்கள், அதாவது நம்பினால் வாழ்வார்கள் (எதிர்காலம்). எல்லாம் அவர்கள் நம்பிக்கையில் தங்கியுள்ளது.

வ.20: இந்த சொல்லப்பட்ட எதிர்காலத்தில் சீடர்கள் மிக முக்கியமான உண்மையொன்றை அறிந்து கொள்கிறார்கள். அதாவது தந்தைக்கும் இயேசுவிற்கும் இடையிலான உறவை அவர்கள் கண்டு கொள்வார்கள். இயேசு தந்தையுள்ளும், தந்தை இயேசுவுள்ளும் இருக்கின்ற ஒற்றுமை என்பது யோவான் நற்செய்தியில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இப்படியாக கடவுளை நம்புகிறவர்கள் என சொல்கிறவர்கள் இயேசுவை நம்பாமல் இருக்க முடியாது, அப்படி செய்தால் அவர்கள் பொய்யர்கள் என்கிறார் யோவான்.

வ.21: பதினைந்தாவது வரியில் சொல்லப்பட்ட கட்டளைக்கும் அன்பிற்குமான பிணைப்பு மீண்டும் காட்டப்படுகிறது. அதாவது இயேசுவை அன்பு செய்கிறவர்களுக்கு இன்னொரு பெயரை யோவான் மறைமுகமாக கொடுக்கிறார், அவர்கள் இயேசுவின் கட்டளைகளை கடைப்பிடிக்கிறவர்கள். இவர்கள் மீது கடவுளும் அன்பு கொள்கிறார், கடவுளின் இந்த அன்பு, இவர்கள் சரியான பாதையில் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது. இறுதியாக சீடர்களும், இயேசுவில் அன்பு கொண்டால் இயற்கையாக அவர்கள் தந்தையை அன்பு செய்கிறவர்களாக மாறுகிறார்கள். இறுதி நாளில் இவர்கள் இயேசுவின் வெளிப்பாட்டை காண தகுதி பெறுகிறார்கள்.

தந்தையும், இயேசுவும், தூய ஆவியும் ஒன்றானவர்கள்.

இவர்கள் ஒற்றுமையின் அடையாளங்கள்.

இயேசுவின் பெயரில் பிரிவினையை யாரும் உண்டாக்க முடியாது.

தூய ஆவியார் தர இருக்கிற மிக முக்கியான கொடை, உண்மை.

அன்பு ஆண்டவரே உமது ஆவியாரை ஏற்றுக்கொள்ள வரம் தாரும். ஆமென்.

இன்று மே மாதம் 18ம் நாள். தமிழ் மண் அதிகமான தன் பிள்ளைகளை இழந்த நாள்.

பிள்ளைகளின் இரத்தம் தமிழ்த்தாயை குருதியால் கழுவிய நாள்.

இது வடுவல்ல மாறாக நினைவு,

பிள்ளைகள் சாகலாம், உணர்வுகள் சாகாது.

இந்த உணர்வுகளோடு நம் எதிர் கால சந்ததியை சிந்திக்க வைக்க முயல்வோம்.

முள்ளிவாய்க்காலில் பலியானவர்களுக்கு சமர்ப்பணம்.