இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பாஸ்காக் காலம் நான்காம் ஞாயிறு (அ)

முதல் வாசகம்: திருத்தூதர் 2,14.36-41
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 23
இரண்டாம் வாசகம்: 1பேதுரு 2,20-25
நற்செய்தி: லூக்கா: யோவான் 10,1-10


முதல் வாசகம்
திருத்தூதர் 2,14.36-41

14அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: 'யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். 36ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்.' 37அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, 'சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார்கள். 38அதற்குப் பேதுரு, அவர்களிடம், 'நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். 39ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது' என்றார். 40மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, 'நெறிக்கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்தினார். 41அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

கடந்த வாரம் எடுக்கப்பட்ட அதே பேதுருவின் உரையிலிருந்தே இன்றைய முதலாம் வாசகப் பகுதியும் எடுக்கப்படுகிறது. ஏற்கனவே இயேசுவினுடைய உண்மையான முகத்தையும், தங்களுடைய சாட்சியத்தையும் அழகாக எடுத்துக்கூறியவர், இப்போது தன்னுடைய உரையின் முக்கியமான நோக்கமான மனமாற்றத்தை வலியுறுத்துகிறார். அனைத்து உரைகளின் முடிவுப் பகுதியாக மனமாற்றம் வருகிறது அதனையும் இந்த உரையில் காணலாம்.

வ.14: இந்த வரி பேதுருவின் உரையின் தொடக்க வசனம், இந்த பகுதியை உரையின் ஒரு பகுதியகாகக் காட்ட இங்கே இந்த வசனமும் உள்ளவாங்கப்படுகிறது. பேதுரு பதினொருவருடன் எழுந்து நின்று உரையாடுவதன் வாயிலாக அவர் பன்னிருவர் குழுவின் தலைவராகவும், அத்தோடு அவருடைய வரிகளை மற்றைய பதினொருவரும் ஆமோதிக்கின்றனர் எனவும் லூக்கா காட்டுகிறார். உரத்த குரலில் பேதுரு பேசுவது அவரின் உற்சாகம், அதிகாரம், கோபம் மற்றும் தைரியம் போன்றவற்றைக் காட்டுகின்றது. (τὴν φωνὴν αὐτοῦ). அனைவரையும் உள்வாங்கி பேசுகிறார். உங்களுக்கு தெரிந்திருக்கட்டும், மற்றும் கவனமாக கேளுங்கள் போன்றவை அவருடைய தெளிவைக் காட்டுகிறது.

வ.36: இந்த வசனம் இயேசுவின் தற்போதைய நிலையை யூத மக்களுக்கும் கேட்போருக்கும் காட்டுகிறது. இயேசுவை நீங்கள்தான் சிலுவையில் அறைந்தீர்கள் என்கிறார். உரோமையர் அல்ல மாறாக அவருடைய சொந்த மக்கள்தான் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள் என்பதை திருத்தூதர் பணிகள் நூல்களில் லூக்கா மீண்டும் மீண்டும் வலியுறுத்துவார் (τοῦτον τὸν Ἰησοῦν ὃν ὑμεῖς ἐσταυρώσατε.). மக்கள் இப்படிச் செய்ய கடவுள் அவரை என்ன செய்தார் என்பதையும் இந்த வரி காட்டுகிறது. அதாவது இவரை கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் (καὶ κύριον αὐτὸν καὶ χριστὸν) என்று சொல்லி கடவுளின் திட்டத்தை மனிதர்களின் செயற்பாடுகள் மாற்ற முடியாது என்கிறார்.

வ.37: பேதுருவின் உரை கேட்போருக்கு மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அவர்கள் உள்ளம் குத்தப்பட்டவர்களாக காட்டப்படுகிறார்கள் (κατενύγησαν τὴν καρδίαν). இவர்கள் பேதுருவையும் அவர் சகாக்களையும் முன்னர் கலிலேயர்கள் என்று கேலி செய்தவர்கள் இப்போது அவர்களை தங்கள் சொந்த சகோதரர்களாக ஏற்றுக்கொள்வதுமட்டுமல்லாமல், அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார்கள். இவர்களின் இந்த கேள்வி, இவர்களின் உள்ளார்ந்த மனமாற்றத்தைக் காட்டுகிறது (τί ποιήσωμεν).

வ.38: இந்த வரி ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள், திருச்சபையில் இணைய என்ன செய்ய எதிர்பார்க்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. முதலாவதாக இவர்கள் மனமாறக் கேட்கப்படுகிறார்கள் (μετανοήσατε மெடாநொயெசாடே). எதிலிருந்து மனமாற்றத்தை பேதுரு எதிர்பார்க்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அதாவது இயேசு என்கிறவர்தான் எதிர்பார்க்கப்பட்ட மெசியாவும் இறைமகனுமாவார் என்பதுதான் அந்த மனமாற்றம். இரண்டாவதாக இவர்கள் மன்னிப்புப்பெற இயேசுவின் பெயரால் திருமுழுக்கு பெறும்படி அறவிறுத்தப்படுகின்றனர். இந்த திருமுழுக்குத்தான் தூய ஆவியைத் தரும் என்பது பேதுருவின் நற்செய்தி. இந்த படிப்பினைகள் ஆரம்ப கால திருச்சபையின் மிக முக்கியமானதாக அமைந்தன.

வ.39: இந்த படிப்பினைகள் யார் யாருக்கு உரியது, என்பதை இந்த வரியில் விளக்குகிறார் பேதுரு. இந்த வாக்குறுதி, பேதுருவின் உரையை கேட்போரையும், அவர்கள் பிள்ளைகளையும், அத்தோடு தொலைவிலுள்ள யாவரையும் மற்றும் ஆண்டவர் அழைக்கும் அனைவரையும் உள்வாங்குகின்றது. இந்த வரைவிலக்கணங்கள் ஊடாக ஆரம்ப கால நற்செய்தி அனைவரையும் சென்றடையவேண்டும் என்ற ஆசிரியரின் நோக்கம் புலப்படுகிறது.

வ.40: இந்த வசனம் கொஞ்சம் காட்டமாக உள்ளது. பேதுரு வேறு பல சான்றுகளை கூறியதாக சொல்லப்படுகிறது. என்ன சான்றுகளை அவர் சொன்னார் என்பது புலப்படவில்லை. ஒருவேளை இயேசு செய்த மற்றைய புதுமைகளை பேதுரு விளக்கியிருக்கலாம். அல்லது இயேசுவைப் பற்றிய இறைவாக்கினர்களுடைய சான்றுகளை அவர் எடுத்துக்கூறியிருக்கலாம். இறுதியாக பேதுரு மிக முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றை இவர்களுக்கு முன்வைக்கிறார். அதாவது இந்த நம்பிக்கையில்லா சமூதாயத்தை அவர் 'நெறிகெட்ட தலைமுறை' என்கிறார் (τῆς γενεᾶς τῆς σκολιᾶς ταύτης.). இதற்கான காரணம் இவர்கள் இயேசுவை நம்பாமல் இருந்திருக்கலாம், அல்லது இவர்கள்தான் இயேசுவின் மரணத்திற்கு காரணமாக இருந்தனர் என்பதாலும், இவர்களின் தலைமுறையை கடுமையாக சாடுகிறார் பேதுரு. அத்தோடு இந்த தலைமுறையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர் காட்டுகிறார்.

வ.41: பேதுருவுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்ட ஏறக்குறைய மூவாயிரம் பேர் திருமுழுக்கு பெறுகின்றனர். தூய ஆவியாருடைய வருகையின் போது திருச்சபையில் நூற்றிருபது பேர் இருந்தனர், இப்போது அந்த எண்ணிக்கை 3000 மாக மாற்றம் பெறுகிறது. இது திருச்சபையின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மூவாயிரம் மிக அதிகமான எண்ணிக்கையின் அடையாளம்.



பதிலுரைப் பாடல்
ஆண்டவரே நம் ஆயர்

1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.


திருப்பாடல் புத்தகத்திலுள்ள 151 பாடல்களில், முதன்மையான பாடலாக இந்தப் பாடலைக் கொள்ளலாம். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல இசைவடிவங்களைக் கொண்டுள்ள இந்த பாடல் பல ஆண்டுகள் சென்றாலும் அழியாத கடவுள்-மனித பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த பாடலின் முன்னுரை இதனை தாவீதின் பாடலாக முன்மொழிகிறது (מִזְמ֥וֹר לְדָוִ֑ד). அழகான இந்த பாடலை மூன்று பிரிவாக பிரித்து கடவுளின் பாதுகாக்கும் தன்மையை உற்று நோக்கலாம். இங்கே பாவிக்கப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள், சாதாரண சொற்களாக இருந்தாலும் அவை மிக ஆழமான உணர்வுகளை தாங்கியுள்ளன. தேவை ஒன்றும் இராது, பயம் இராது, ஆண்டவரில் வாழ்தல் போன்றவை மிக ஆழமான வரிகள். எப்படியான பின்புலத்தில் தாவீது இந்த திருப்பாடலை பாடினார் என்பது புலப்படவில்லை ஆனால் இதன் வரிகளைக் கொண்டு நோக்குகின்ற போது, கடுமையான சிக்கலிலிருந்து அவர் மீண்ட போது, ஆண்டவரின் நன்மைத் தனத்தை நினைத்து அவர் பாடியிருக்கலாம் என்பது புலப்படுகிறது. தாவீதுதான் இந்தப் பாடலை பாடினார் அல்லது இயற்றினார் என்பதற்கும் போதிய சான்றுகள் இல்லை, இதனை சிலர் திருப்பயண பாடல் என்றும் காண்கின்றனர்.

வ.1: ஆண்டவரை ஆயராக வர்ணிப்பது, முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான உருவகம். இதனைத்iதான் புதிய ஏற்பாட்டில் இயேசுவும் அடிக்கடி செய்வார் (காண்க எசே 34,10: செக் 11,16: யோவா 10,11.14). ஆயத்துவம் அக்கால இஸ்ராயேல் மக்களுக்கு மிக தெரிந்திருந்தது. ஆயர்கள் அதிகமாக நல்லவர்களாக இருந்து தங்கள் மந்தைகளை காத்தார்கள். மந்தைகளை தங்கள் சொந்த பிள்ளைகள் போல வளர்த்தார்கள், சில வேளைகளில் ஆபத்துக்களையும் பாராது தங்கள் மந்தைகளை மேய்த்தார்கள். தாவீது கூட நல்ல ஆயனாக தன் மந்தைக்காக கொடிய விலங்குகளுடன் போரிட்டதாக விவிலியம் சொல்கிறது (காண்க 1சாமு 17,34.37). இதனால் தாவீது உண்மையான ஆயனாக கடவுளைக் காண்பது அவருடைய சொந்த அனுபவம் என்றுகூட சொல்லலாம் (יְהוָ֥ה רֹ֝עִ֗י לֹ֣א אֶחְסָֽר), அத்தோடு கடவுள் தன் ஆயனாக இருப்பதனால் தனக்கு எதுவும் தேவையில்லை என்கிறார்.

வ.2: இங்கே தாவீது தன்னை ஓர் ஆடாக வர்ணிக்கிறார். பசும் புல் வெளிமீது இளைப்பாற செய்வது அழகான உருவகம். நவீன உளவியலாளர்கள் சிலர், கிறிஸ்தவம் மக்களை மந்தைகளாக காட்டுகின்றது என்று குற்றம் சாட்டுகின்றனர், ஆனால் மந்தைகளுக்குள் இருக்கும் இந்த அதிசயமான பண்புகள், நல்ல அடையாளங்கள் என்பதை சாதாரண உணர்வுகள் ஏற்றுக்கொள்கின்றன. பசும்வெளி மற்றும் குறையாத நீரோடைகள் என்பன பாலஸ்தீன ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் என்றுமே ஒரு கனவுதான். இப்படியானவை அங்கே குறைவு அவை கிடைத்தாலும், அங்கே அதிகமான போட்டிகளிருக்கும். ஆனால் ஆண்டவர் ஆயனாக இருக்கின்ற படியால் இந்த கனவு, தாவீதுக்கு நனவாகிறது.

வ.3: கடவுள் தனக்கு புத்துயிர் அளிப்பதாக தாவீது பாடுகின்றார். இதனை எபிரேய விவிலியம், 'என் ஆன்மாவை புதுப்பிக்கிறார்' என்று அழகாக காட்டுகிறது (נַפְשִׁ֥י יְשׁוֹבֵב). கழைத்துப்போய் சேர்ந்துபோய் இருக்கின்ற தலைவர்களுக்கு, தங்கள் பதவி, பலம், குலம், சொத்துக்கள், இன்பங்கள் போன்றவை புத்துயிர் அளிக்கா, மாறாக அதனை தருபவர் கடவுள் ஒருவரே என்பது தாவீதுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அத்தோடு கடவுளுடைய நன்மைத்தனங்களுக்கும் அவருடைய நீதியான பெயருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய பெயரைப்போலவே அவருடைய உறவும் இருக்கிறது என்பது ஆசிரியரின் அனுபவம்.

வ.4: இந்த வரி இன்னும் ஆழமான உணர்வுகளைத் தாங்கிச் செல்கிறது. முதல் மூன்று வரிகளும் கடவுளை மூன்றாம் ஆளாகவும், ஆயனாவும் வர்ணித்தது. இந்த நான்காம் வரி கடவுளை இரண்டாம் ஆளாக காட்டுகிறது அத்தோடு அவரை வழியில் பாதுகாப்பவராக காட்டுகிறது. இந்த வரியில் இருந்துதான் சிலர் இந்த பாடலை வழித்துணை திருப்பயணப் பாடல் என்று சிலர் காண்கின்றனர். பாலைவனங்கள், பயங்கரங்கள், தனிமையான பாதைகள், வழிப்பறிக் கொள்ளைகள் என்று பாலஸ்தீனத்தின் பாதைகள் இருந்திருக்கின்றன. இந்த பாதைகளில் கடவுளின் காத்தல் மிகவும் அனுபவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் ஆசிரியர் சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் தான் நடக்க நேர்ந்தாலும் என்று பாடுகிறார் (גַּ֤ם כִּֽי־אֵלֵ֨ךְ בְּגֵ֪יא צַלְמָ֡וֶת לֹא־אִ֘ירָ֤א). அதற்கான காரணமாக கடவுளுடைய கோலையும் (שֵׁבֶט ஷெவெட்), நெடுங்கழியையும் (מִשְׁעֶנֶת மிஷ்எனெத்), காட்டுகிறார். இவை ஆயர்களுடைய பாதுகாப்பு ஆயுதங்கள், இதனைக் கொண்டே அவர்கள் தங்கள் மந்தைகளை பாதுகாத்தார்கள். பிற்காலத்தில் இவை பாதுகாப்பின் அடையாளங்களாக மாறின. அரசர்களுடைய கையிலிருக்கும் கோலுக்கும், ஆயனுடைய கோலுக்கும் அதிகமான தொடர்பிருக்கிறது.

வ.5: இவ்வளவு நேரமும் தன்னை ஆடாக வர்ணித்த ஆசிரியர் இந்த வரியிலிருந்த தன் உருவத்தை விருந்தாளியாக மாற்றுகிறார். ஆட்டின் தலையில் நறுமண தைலம் பூச மாட்டார்கள். எதிரிகளின் கண்முன்னே விருந்தை ஏற்பாடு செய்தல், தலையில் நறுமண தைலம் பூசுதல், பாத்திரத்தை இரசத்தால் நிறைத்தல் போன்றவை சிற்றரசர்களுக்கு பேரரசர்கள் கொடுக்கும் அன்பு விருந்தைக் காட்டுகிறது. இப்படியான விருந்துகள் மத்திய கிழக்கு நாடுகளின் முன்னைய பேரரசுகளில் பலமுறை நடந்திருக்கிறது. இந்த வரியை வைத்து பார்க்கும் போது, பாடலாசிரியர் ஒரு அரசர் போல தோன்றுகிறது, அல்லது அவர் அரச உதாரணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தன்னுடைய எதிரிகள் அவமானப்பட கடவுள் தன்னுடைய நன்மைத் தனத்தைக் காட்டுகிறார் அதாவது தன்னை உயர்த்துகிறார் என்பது இந்த ஆசிரியரின் அனுபவம்.

வ.6: கடவுளின் அருளும், பேரன்பும் (ט֤וֹב וָחֶ֣סֶד) வாழ்நாள் முழுவதும் புடைசூழ்ந்து வரும் என்பதிலிருந்து ஆசிரியரின் அசைக்க முடியாத நம்பிக்கை புலப்படுகிறது. அத்தோடு ஆசிரியரின் கடவுள் அனுபவம் ஒரு முடிவுறாத அனுபவம் என்பதும் புலப்படுகிறது. ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் என்கிறார் ஆசிரியர். இந்த ஆண்டவரின் இல்லத்தை எபிரேய விவிலியம், கடவுளின் வீடு (בֵית־יְ֝הוָ֗ה) என்கிறது. இதனால் இதனை எருசலேம் ஆலயம் என்று எடுக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. இது எருசலேம் ஆலயமாக இருந்தால், இந்த பாடலின் ஆசிரியராக தாவீது இருக்க முடியாது.



இரண்டாம் வாசகம்
1பேதுரு 2,20-25

20குற்றம் செய்ததற்காக நீங்கள் அடிக்கப்படும்போது பொறுமையோடு இருப்பதில் என்ன சிறப்பு? மாறாக, நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். 21கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள். 22'வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை.' 23பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். 24சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். 25நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

உரோமையருடைய காலத்தில் தவறிழைத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வதும் சாதாரண வழக்கமாக இருந்தது. தவறிழைத்தவர்கள் சமுதாயத்தில் கதாநாயகர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இன்றைய சூழ்நிலையில் தவறாக புரிந்துகொள்ளுதல் மற்றும் மூளைச் சலவை மற்றும் குழுவாதம் போன்ற காரணத்தினால் சில வேளைகளில் தவறுசெய்கிறவர்கள் தங்களை கதாநாயகர்களாக மாற்றிவிடுகின்றனர். ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் துன்பங்கள், சாதாரண குற்றவாளிகள் பெறும் துன்பங்கள் அல்ல மாறாக, அவை கிறிஸ்துவிற்கான சாட்சிய வாழ்வின் அடையாளங்கள் என்பதில் பேதுரு கவனமாக இருக்கிறார். இந்த பகுதியில் பேதுரு, துன்பம் கிறிஸ்துவின் அடையாளம் என்ற தோரனையில் விளங்கப்படுத்துகிறார். யூதரல்லாத கிறிஸ்தவர்கள் பலர், சாதாரண வீட்டு வேலைகளை செய்கின்றவர்களாக இருந்திருக்கிறார்கள், அவர்களின் நாளாந்த வாழ்வியலின் சிக்கல்களை பேதுரு இங்கே விளக்க முயல்கிறார். கிறிஸ்தவர்கள் அல்லாத தலைவர்களுக்கு, கிறிஸ்தவர்கள் பணிய வேண்டிய தேவையில்லை என்ற ஒருவகையான வாதம் பல நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தியது, இந்த வேளையில்தான் துன்பங்களை நல்ல மனத்தோடு ஏற்றுக்கொள்வதுதான் கிறிஸ்தவம் என்கிறார் பேதுரு.

வ.20: குற்றம் செய்கிறவர்கள் அதன் விளைவை சந்திக்க வேண்டும் அதில் எந்த விதமான அறமும் கிடையாது, அந்த துன்பத்தை மறைசாட்சியமாக காட்ட முடியாது. ஆனால் நன்மை செய்து அதனால் துன்பம் விளைந்தால், அதனை முன்மாதிரியாக காட்டுவது கடவுளுக்கு உகந்தது என்கிறார் பேதுரு. இங்கே ஆரம்ப கால திருச்சபையின் நிகழ்வியல் துன்பங்கள் நோக்கப்படவேண்டும். கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக துன்புற்றதை கடவுளுக்கு பலியாக ஒப்புக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஆசிரியர் தருகிறார்.

வ.21: இப்படியான துன்பத்திற்கு கிறிஸ்துதான் முன்னுதாரணம் என்கிறார் பேதுரு, ஆக அவருடைய அடிச்சுவட்டை பின்பற்றக் கேட்கிறார் (ἴχνος). அத்தோடு இந்த பாதச் சுவட்டை பின்பற்றுவது கிறிஸ்தவர்களின் அழைப்பு என்றும் சாற்றுகிறார் (ἐκλήθητε). கிறிஸ்து பட்ட துன்பங்கள், நீதிக்கு புறம்பானது, இருப்பினும் கிறிஸ்து அதனை தாங்கிக் கொண்டு அந்த துன்பங்கள் வாயிலாக மீட்பு கொடுத்தார், இதனால் கிறிஸ்தவர்களும் அதே மனநிலையைக் கொண்டு தங்கள் நிகழ்கால துன்பங்களை தாண்டி வரவேண்டும் என்பது பேதுருவின் விண்ணப்பம்.

வவ.22-23: இனிவருகின்ற வரிகள் எசாயா புத்தகத்திலிருந்து கோடிடப்படுகின்றன. பேதுரு எசாயாவின் 53,9 ஐ கோடிட்டு அங்கே வருகின்ற துன்புறும் ஊழியர் இந்த கிறிஸ்துதான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார். அக்காலத்தில் எசாயாவின் இறைவாக்கு இயேசுவைத்தான் கோடிடுகின்றன என்ற வாதம் மிக முக்கியமாக இருந்துள்ளதை இங்கனம் ஊகிக்கலாம். இந்த ஊழியரை எசாயா வஞ்சனை எதுவும் செய்யாதவராகவும் (ὃς ἁμαρτίαν οὐκ ἐποίησεν), வன்சொல் எதுவும் சொல்லாதவராகவும் காட்டுகிறார் (οὐδὲ εὑρέθη δόλος). கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இந்த இறைவாக்கு இயேசுவிற்கு அப்படியே பொருந்துகின்றது.

இருபத்திமூன்றாவது வசனம், இந்த துன்புறும் ஊழியரின் குணாதிசியங்களையே காட்டுகிறது. இந்த வரியை பேதுரு எங்கிருந்து எடுத்துள்ளார் என்பது புலப்படவில்லை. அவருடைய காலத்தில் இந்த வரி இறைவாக்கு ஒன்றிலிருந்து புழக்கத்திலிருந்திருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. ஆண்டவர் தான் துன்புற்றபோது வன்முறையை கையாளவில்லை மாறாக அவர் அமைதியாக தனது துன்பத்தை தாங்கிக்கொண்டார் என்ற நம்பிக்கை இங்கே காட்டப்படுகிறது.

வ.24: இந்த வரி மிகவும் அழகானதும், இறையியல் ஆழம் நிறைந்ததுமான வரி. பேதுரு இங்கே எசாயாவின் (53,3) வரியை கோடடுகிறார் (אָכֵ֤ן חֳלָיֵ֙נוּ֙ ה֣וּא נָשָׂ֔א). ஆனால் சிலுவையை இங்கே அவர் சேர்த்திருக்கிறார். நம் பாவங்களுக்காக அவர் இறந்தார் என்பதும் எசாயாவில் இல்லை, இதனையும் பேதுரு சேர்த்திருக்கிறார். ஆண்டவருடைய காயங்களால் நாம் குணமடைகிறோம் என்ற பேதுருவின் வரி மிகவும் அழகானது. இந்த வரியை எசாயா 53,5 கொண்டுள்ளது (וּבַחֲבֻרָת֖וֹ נִרְפָּא־לָֽנוּ׃). இங்கே குணமடைதல் ஆன்மீக பாவமன்னிப்பை குறிப்பது போலவும் காட்டப்படுகிறது.

வ.25: பேதுரு தன்னுடைய கிறிஸ்தவர்களை வழிதவறிய ஆடுகளைப் போல் இருந்தவர்கள் என்கிறார் (ἦτε γὰρ ὡς πρόβατα πλανώμενοι). இது ஒரு உருவகம், ஆடுகள் ஆயனின் தலைமைத்துவம் இன்மையால் தொலைவதும், பின்னர் அவை மீட்கப்படுவதும் நன்கு தெரிந்த உருவகங்கள். இந்த உருவகத்தை பேதுரு, முதல் கிறிஸ்தவர்களுக்கு பயன்படுத்துகிறார். இயேசுவிற்கு இன்னொரு அடைமொழியை பயன்படுத்துகிறார், அவரை ஆன்மாக்களின் ஆயரும் கண்காளி;ப்பாளருமாக்குகிறார் (ποιμένα καὶ ἐπίσκοπον τῶν ψυχῶν ὑμῶν.).


நற்செய்தி வாசகம்
யோவான் 10,1-10

1'நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். 2வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். 3அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். 4தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். 5அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது.' 6இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இயேசுவே நல்ல ஆயர் 7மீண்டும் இயேசு கூறியது: 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. 8எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. 9நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். 10திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.

யோவான் நற்செய்தி உருவங்களுக்கு பஞ்சமில்லாத நற்செய்தி. இந்த நற்செய்தியில் யோவான் இயேசுவை வல்லமையுள்ள கடவுளாக காட்டுவார். இன்னும் முக்கியமாக இயேசுவை யோவான், முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்பட்ட உருவங்களுடன் தொடர்புபடுத்திக் காட்டுவார். இந்த முயற்சியில் யோவான் இயேசுவை ஆயனாக (ποιμήν) உருவகிக்கிறார். ஆடுகளும் ஆயனும் விவிலியத்தில் மிக முக்கியமான உருவகங்கள். ஆபேல்தான் முதல் முதலாக ஆடுகளை வளர்ப்பவர் என காட்டப்டுகிறார் (தொ.நூல் 4,2). அதிகாமான இஸ்ராயேல் தலைவர்கள் ஆடு வளர்ப்பவர்களாகவும், அல்லது மந்தை முதலாளிகளாகவும் இருந்திருக்கிறார்கள் (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது). தாவீது மந்தை மேய்பவராக இருந்து பின்னர் இஸ்ராயேலின் ஆயராக மாறினார் (காண்க 2சாமு 7,8). மந்தைகள் பலவீனமாக மிருகங்களாக இருந்தபடியால் தங்கள் ஆயனின் பாதுகாப்பிலே அவைகள் வாழ்ந்தன. மேய்ப்பர்களும் அதிகமான நேரங்களையும், தங்கள் வாழ்நாள்களையும் இவைகளுக்காகவே பாலைநிலங்களிலும், மேய்சல்நிலங்களிலும் செலவளித்தனர். இந்த மேய்பப்பர்கள் பலவிதமான ஆபத்துக்களிலிருந்து தங்கள் மந்தைகளை பாதுகாத்தனர். திருடர்கள், கொள்ளைக்காரர்கள், மற்றும் ஆபத்தான காட்டுவிலங்குகளிடமிருந்தும் தங்கள் மந்தைகளை பாதுகாப்பது இவர்களின் வீரமாக இருந்தது (1சாமு 17,34-35).

மந்தைகளில் செம்மறி ஆடுகள், இன்னும் பலவீனமான மிருகங்களாக இருந்தன. இதன் சினையாடுகள், குட்டிகள் போன்றவை விசேடமாக கவனிக்கப்படவேண்டியவையாக இருந்தன. சாதராண மேய்ப்பர்கள் சாக்குடைகளையும், கைத்தடிகளையும், கூழாக்கற்களையும், உணவுப்பைகளையும் கொண்டே தங்களையும் தங்கள் மந்தைகளையும் பாதுகாத்தனர். விவிலியம் மக்களின் தலைவர்களை மேய்ப்பர்கள் என்று அடையாளம் காட்டுவதை வழமையாக கொண்டுள்ளது. இதற்கு இவர்களின் கடினமாக உழைப்பும், இவர்கள் மந்தைகள் மீது கொண்டுள்ள உண்மையான அன்பையும் உதாரணமாக எடுக்கலாம் (காண்க எண் 27,16-17). இஸ்ராயேலரை விட மற்றைய கானானிய மக்களும் தங்கள் தெய்வங்களை தமது ஆயர்களாக பார்க்க முயற்ச்சி செய்திருக்கின்றனர். ஆனால் இஸ்ராயேல் தங்கள் கடவுளை தமது ஆயராக பார்க்க முயற்ச்சிப்பது மிக அழகான உருவகம் (காண்க தி.பா 23, எசே 34). ஆண்டவரே நல்ல ஆயனாக இருக்கின்ற படியால், பல வேளைகளில் விவிலியம் மனித தலைவர்களை கருப்பு ஆயர்களாகவும், கூடாத ஆயர்களாகவும் வர்ணிக்க தவறுவதில்லை (காண்க எரேமி 10,21: 22,22: 23,1-4). தாவீது மற்றும் சைரஸ் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்காக நல்ல ஆயர்களாக காட்டப்படுகிறார்கள் (காண்க தி.பா 78: எசாயா 44,28). பிற்காலத்திலே இந்த அடையாளம் வரவிருந்த மெசியாவின் அடையாளமாக மாறியது (காண்க எசேக் 34,23: 37,22). அத்தோடு இந்த மெசியா ஆயர், தாவீதின் வழிமரபிலேதான் வருவார் என்ற சிந்தனையும் மெதுமெதுவாக வளர்ந்தது.

புதிய ஏற்பாட்டில் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இந்த ஆயன் உருவகத்தை பாவிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் (காண்க மத் 25,32-33: லூக்கா 15,3-7). யோவான் இந்த அடையாளத்தை நன்றாகவே பாவித்திருக்கிறார். நற்செய்தி நூல்களை விட வேறு புதிய ஏற்பாட்டு நூல்களும் இயேசுவை நல்ல ஆயராக காட்டுகின்றன (காண்க எபிரே 13,20). பவுலும் தன்னுடைய சீடர்களையும் ஆரம்ப கால திருச்சபை தலைவர்களையும் ஆயர்களாக ஒப்பிடுகிறார். இப்படியாக விவிலியத்தில் ஆயத்துவம் என்பது ஒரு நல்ல அடையாளமாக காட்டப்படுகிறது எனலாம்.

வ.1: ஆட்டுக்கொட்டில்களுக்கு வாயில் என்பது மிக முக்கியமானது. இந்த வாயில் வழியாகத்தான் ஆடுகள் உள்ளேயும் வெளியேயும் வந்தன. அதனைப்போலவே ஆயர்களும் இந்த வாயில் வழியாகத்தான் வந்தார்கள். தங்கள் கொட்டிலின் வாயிலை அறியாதவர் ஆயராக இருக்க முடியாது. யோவானின் கருத்துப்படி இவர்கள் கொள்ளைக்காரர்கள் (κλέπτης ἐστὶν καὶ λῃστής). அதிகமான வேளைகளில் ஆடுகளை கைப்பற்றுகிறவர்கள் அல்லது கொள்ளையடிக்கிறவர்கள் இந்த வாயிலை விடுத்து வேறுவழிகளையே தேர்ந்துகொண்டார்கள். இதன் காரணமாகவும் யோவான் இந்த வாயிலை உதாரணமாக எடுத்திருக்கலாம்.

வ.2: ஆயர் வாயில் வழியாகவே வருகிறார் என்கிறார் ஆண்டவர். இந்த உருவகம் மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கிற படியால் அதனை நன்கு பாவிக்கிறார் (εἰσερχόμενος διὰ τῆς θύρας ⸂ποιμήν ἐστιν). யோவான் நற்செய்தியாளர் உருவகங்களை நன்கு பாவிக்கின்ற படியால் இங்கே அவர் குறிப்பிடுவது சாதாரண ஆடுகளையும், அதன் கொட்டில்களையும், அதன் வாயில்களையும் அல்ல என்பதை மனதிற்; கொள்ள வேண்டும்.

வ.3: பெரிய ஆட்டுக்கொட்டில்களுக்கு வாயிற் காப்போர் இருப்பது வழக்கம். இவர்களுக்கு தங்கள் முதலாளியின் ஆயர்களை நன்கு தெரிந்திருக்கும். இவர்களுக்கு இடையில் நல்ல உறவு இருக்கின்ற படியால் இவர்கள் ஆயர்களுக்கு எந்த விதமான இடைஞ்சல்களையும் கொடுப்பதில்லை. மந்தைகள் ஒலிகளை கேட்டு அதன்படி நடக்கின்ற மிருகங்களாக இருக்கின்றன. ஆயர்கள் தங்கள் மந்தைகளுக்கு விசேடமான ஒலிகளை எழுப்பி அதன் வாயிலாக தங்கள் மந்தைகனை மற்றவர்களுடையதிலிருந்து பிரித்தார்கள். சிலவேளைகளில் பாதுகாப்பிற்காக பல ஆயர்கள் தங்கள் மந்தைகளை ஒன்றாக அடைந்து வைத்தார்கள், பின்னர் ஒலிகளை எழுப்பி தங்கள் மந்தைகளை பிரித்து எடுத்தார்கள். இப்படியாக ஆயர்களுடைய குரலும் மந்தைகளுக்கு முக்கியமானவையாக அமைகின்றன.

வ.4: முதலில் மந்தைகளை வெளியே அழைக்கின்ற மேய்ப்பர்கள், பின்னர் அவற்றை பின்னால் விட்டு தாங்கள் அவற்றிக்கு முன்னால் செல்வார்கள். இது ஆபத்துக்களிலிருந்து தம் மந்தைகளை காப்பாற்றுவதற்கான மிக முக்கியமான ஒரு வழி. மந்தைகளும் தங்கள் ஆயர்களின் பின்னால் அமைதியாக அவர்கள் சொல்லும் இடத்திற்கெல்லாம் செல்லும். இங்கே ஆயர்களின் குரல் மிக முக்கியமானதாக மாறுகின்றது. இதனைத்தான் இவர்களின் குரலை ஆடுகள் அறியும் என யோவான் அழகாகக் காட்டுகிறார் (ὅτι οἴδασιν ⸉τὴν φωνὴν αὐτοῦ).

வ.5: ஆனால் அறியாத ஒருவருக்கு மந்தைகள் செவிகொடா, மாறாக அவை அவர்களை விட்டு ஓடிச்சென்றுவிடும். இந்த யதார்த்தத்தை இயேசுவின் கால மக்கள் உடனடியாக விளங்கிக் கொண்டார்கள். இங்கே குரல் என்பது ஒலியைக் குறிக்கின்றது.

வ.6: யோவான் இங்கே ஒரு ஆசிரியர் குறிப்பை உட்புகுத்துகின்றார். அதாவது, இங்கே இயேசு ஆடுகள் மற்றும் ஆயர்களைப் பற்றி பேசவில்லை மாறாக அவர் தன்னைப்பற்றியும் தன் மக்களைப் பற்றியும் பேசுகின்ற போது, அவர்கள் அதனை புரிந்து கொள்ளவில்லை என்கிறார். இதனால் இனிவரும் வரிகளில் அவர் நேரடியாகவே பேசப்போகிறார் என்பது புலப்படுகிறது.

வ.7: இயேசு தன்னை ஆடுகளுக்கு வாயில் என்கிறார் (ἀμὴν ἀμὴν λέγω ὑμῖν ὅτι ἐγώ εἰμι ⸄ἡ θύρα⸅ τῶν προβάτων.). இதனை அவர் அழுத்தமாகச் சொல்கிறார். இங்கே யோவான் பாவிக்கின்ற வார்த்தைகள் மிக முக்கியமானவை, அவை முதல் ஏற்பாட்டில் கடவுள் பாவிக்கின்ற வார்த்தைகளை ஒத்திருக்கின்றன, அத்தோடு அவை அதிகார தோரனையில் இருக்கின்றன. முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை ஆயராக சொன்னாலும், யோவான் நற்செய்தியில் மட்டுமே, கடவுள் தன்னை ஆடுகளுக்கு வாயில் என்கிறார். இதன் மூலமாக வாயிலுக்கும் ஆயனுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது புலப்படுகிறது.

வ.8: இயேசு இங்கே தனக்கு முன்வந்தவர்கள் அனைவரையும் திருடர்களும் கொள்ளையர்களும் என முத்திரை குத்துகிறார் (κλέπται εἰσὶν καὶ λῃσταί). இந்த வரியை யோவான் திருச்சபையின் சூழலியலிருந்து நோக்க வேண்டும். இங்கே இயேசுவோ அல்லது யோவானோ இறைவாக்கினர்களை சாடுகிறார்கள் என்று எடுக்க முடியாது. ஆனால் யோவான் திருச்சபையில் ஆரம்ப காலத்தில் பல தலைவர்கள் பிரிவினைகளை உருவாக்கினார்கள், அவர்களைத்தான் ஆசிரியர் சாடுகிறார் என எடுக்க வேண்டும்.

வ.9: மீண்டுமாக இயேசு தன்னை வாயில் என்கிறார். இந்த வாயில் வழியாக போகிறவர்கள் மீட்படைகிறார்கள், நல்ல மேய்ச்சல் நிலங்களை கண்டடைகிறார்கள். இங்கேயும் யேவான் உருவகத்தையே பாவிக்கிறார். இங்கே மேய்ச்சல் நிலம் (ἐξελεύσεται καὶ νομὴν εὑρήσει.), மறுவாழ்வை அல்லது இயேசுவில் கொள்ளும் நம்பிக்கையை குறிக்கிறது.

வ.10: இயேசுவிற்கும் மற்றவர்களுக்கு இடையிலான வித்தியாசம் காட்டப்டுகிறது. திருடர்கள் திருடவும், கொல்வதற்கும், அழிப்பதற்கும் மட்டுமே வருகிறார்கள் (κλέψῃ καὶ θύσῃ καὶ ἀπολέσῃ·). இவர்கள் ஆரம்ப கால யோவான் திருச்சபையில் கலகம் உருவாக்கியவர்கள், தங்களை தலைவர்கள் என்று சொல்லி மக்களை திசைதிருப்பியவர்கள். இயேசுவே உண்மையான ஆயர், இந்த ஆயர் தன் ஆடுகள் நிலைவாழ்வை பெறவும், அதுவும் நிறைவாக பெறவுமே வந்திருக்கிறார் என்கிறார் (ἐγὼ ἦλθον ἵνα ζωὴν ἔχωσιν ⸋καὶ ⸀περισσὸν ἔχωσιν⸌.) யோவான்.

இந்த உலகம் பல ஆயர்களை சந்தித்திருக்கிறது,
அதில் பல ஆயர்கள் தங்கள் சொந்த மந்தைகளை அழிப்பதையே கருத்தாய் கொண்டவர்கள்.
இயேசு உலகம், தந்த ஆயர் அல்ல,
மாறாக அவர் உலகிற்கு வந்த ஆயர்,
அவர் ஒருவரே நல்ல ஆயர்.
அன்பு ஆயரே,
உம் குரலை கேட்க்க எம் செவிகளை பக்குவப்படுத்தும். ஆமென்.