இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பாஸ்காக் காலம் மூன்றாம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2,14.22-33
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 16
இரண்டாம் வாசகம்: 1பேதுரு 1,17-21
நற்செய்தி: லூக்கா 24,13-35


முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் 2,14.22-33

14அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: 'யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். 22 இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. 23கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக்கொன்றீர்கள். 24ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. 25தாவீது அவரைக்குறித்துக் கூறியது: 'நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். 26இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். 27ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர். 28வாழ்வின்வழியை நான் அறியச்செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.' 29'சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. 30அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். 31அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, 'அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார்.32கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். 33அவர் கடவுளின் வலதுப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.

திருத்தூதர் பணிகள் நூலையும் நற்செய்தியாளர் லூக்காதான் எழுதினார் என்ற பல அக புற சான்றுகள் உள்ளன. இந்த நூலை ஆரம்ப காலத்தில் தூய ஆவியாரின் நூல் என்றும் அழைத்தனர். திருத்தர்களின் பணிவாழ்வையும், ஆரம்ப கால திருச்சபையின் வரலாற்றையும் பற்றி விவரிக்கும் இந்த நூல் லூக்காவின் அழகிய கைவண்ணம் என்று சொல்லலாம். இந்த நூலில் இருபதிற்கும் மேற்பட்ட மறையுரைகள் காணப்படுகின்றன. இந்த மறையுரைகளைப் பற்றி பல ஆய்வுக்கட்டுரைகளும், ஆய்வு நூல்களும் வெளிவந்திருக்கின்றன. சில ஆய்வாளர்கள் இந்த உரைகள் முழுக்க முழுக்க லூக்காவின் இடைச்சொருகலே என்கின்றனர், ஆனால் இந்த உரைகளின் பின்புலத்தையும், இறையியலையும் வைத்துப் பார்க்கின்றபோது, இது இயேசுவின் சீடர்களான ஸ்தேவான், பேதுரு, பவுல், யாக்கோபு போன்றவர்களின் உண்மையான வார்த்தைகள் என்பதை பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை இந்த உரைகள் லூக்காவின் ஆதிக்கத்தை பெற்றுள்ளன என்பதை மறுக்கவில்லை. இன்றைய வாசகம் திருத்தூதர் பணிகள் நூலில் வருகின்ற முக்கியமான உரைகளில், முதலாவது உரையாகும். இங்கே பேசுகிறவர் பேதுரு, கேட்கிறவர்கள் அங்கே கூடியிருந்த மக்கள். அக்கால கிரேக்க-உரோமைய அரசவை அல்லது மெய்யியல் உரைகளைப்போல இதுவும் ஒரு பிரதிவாத உரையாக அமைந்திருக்கிறது. இயேசுவின் உயிர்ப்பின் பின்னர், தூய ஆவியாரின் வருகை, திருத்தூதர்களின் வாழ்விலே பல மாற்றங்களை காட்டியது. இதனை மக்கள் நன்கு அவதானித்தனர். பாஸ்கா விழாவிற்கு ஐம்பது நாட்களின் பின்னர் யூத மக்கள் அறுவடை திருவிழாவைக் கொண்டாடினார்கள், இதனை அவர்கள் பெந்தகோஸ்து விழா (πεντηκοστή) என அழைத்தார்கள். யூதர்கள் எருசலேமிலே கொண்டாடிய முக்கியமான மூன்று விழாக்களில் இதுவும் ஒன்று. இதன் கிரேக்க அர்த்தமாக ஐம்பது என்று பொருள்படும், இதனை யூதர்கள் வாரங்களின் திருவிழா என்றும் அழைத்தனர். பிற்காலத்தில், சீனாய் மலையடிவாதத்தில் உடன்படிக்கை செய்துகொண்டதையும், சட்டங்களை பெற்றுக்கொண்டதையும் இந்த விழா நினைவூட்டியது. ஆக இப்படியான ஒரு யூத மதத்தின் முக்கியமான விழாவில் பல யூதர்கள் கூடியிருந்த வேளையில்தான் தூய ஆவியார் திருத்தூதர்களை ஆட்கொள்ள, அவர்களின் முதன்மை திருத்தூதர் பேதுரு அனைத்து கூடிநின்றவர்களுக்கும் (யூதருக்கும், யூதரல்லாதவர்க்கும்) உரையாற்றுகிறார். இந்த இடம் ஆலயத்தின் வெளிமுற்றமாக இருந்திருக்கலாம்.

வ.14: பயத்தினால் ஆண்டவரை பணிப்பெண்களிடம் மற்றும் பணியாளர்களிடம் மூன்றுமுறை மறுதலித்த பேதுரு, இப்போது வல்லமையுடையவராய், தன் சகதிருத்தூதர்கள் பதினொருபேருடனும் எழுந்து நின்று அனைவருக்கும் உரையாற்றுவது நோக்கப்படவேண்டும். பேதுரு உரத்த குரலில் பேசுவது அவரது திடத்தைக் காட்டுகிறது (τὴν φωνὴν αὐτοῦ). யூத மனிதர்களே மற்றும் எருசலேமில் வாழ்பவர்களே என்று பேதுரு விழித்து அனைத்து மக்களையும் உள்வாங்குகின்றார். அத்தோடு, இந்த சொற்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததாக இருக்கட்டும் (τοῦτο ὑμῖν γνωστὸν ἔστω), கவனமாக கேளுங்கள் (ἐνωτίσασθε τὰ ῥήματά μου.) என்ற அதிகாரத் தோரணையில் தன் உரையைத் தொடங்குகிறார்.

வ.15-21: பேதுரு தாங்கள் குடிவெறியில் இருக்கும் கலிலேய கூலிகள் கிடையாது என்பதை தெளிபடுத்துகிறார். பேதுரு யோவேல் இறைவாக்கினரின் இறைவாக்கை மேற்கோள் காட்டுகிறார் (ஒப்பிடுக 2,28-32). இது யோவேல் இறைவாக்கினர் உரைத்த இறுதிநாள் நிகழ்வுகளின் அடையாளங்கள். பேதுரு இந்த அடையாளங்களை கொண்டு ஆண்டவருடைய உயிர்ப்புடன் இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பதைக் காண்கிறார். அதன் அடையாளங்களாக தூய ஆவியாருடைய வருகையையும், இவர்கள்இறைவாக்குரைக்கிறதையும் காண்கிறார்.

வ.22: இறைவாக்கை கோடிட்ட பேதுரு, இப்போது யூதர்களின் சொந்த அனுபவத்தை தட்டிவிடுகிறார். கடவுள் நாசரேத்து இயேசு வழியாக செய்த அரும் அடையாளங்களுக்கு இவர்கள் சாட்சிகள் என்று இவர்களுடைய மனட்சாட்சியை தட்டிவிடுகிறார். இயேசுவிற்கு இரண்டு அடையாளங்களைக் கொடுக்கிறார்.

அ. இயேசு கடவுளால் தெளிவுபடுத்தப்பட்டவர்
ஆ. இவர் கடவுளுடைய வல்லமையான செயல்களையும், அதிசயங்களையும், அடையாளங்களையும் செய்தார்.
அத்தோடு இவற்றை அவர் இவர்களின் நடுவிலே செய்திருக்கிறார். ஆண்டவர் செய்தது உறுதியாக செய்யப்பட்டது (οἷς ἐποίησεν), இதனை யூதர்களும் அனைவரும் கண்டனர் (οἴδατε) என்று அனைவரையும் பொறுப்பாளர் ஆக்குகின்றார்.

வ.23: கடவுள் செய்ததையும் மக்கள் செய்ததையும் விளக்குகிறார். கடவுள் தன்னுடைய திட்டத்திற்கும், முன்னறிவிற்கும் பிரமாணிக்கமாக இயேசுவை மக்களிடம் கையளித்துள்ளார். இதிலிருந்து இயேசுவிற்கு நடந்தது அனைத்தும் கடவுளுக்கு நன்கு தெரிந்தே நடந்தது என்பதும் அது ஒரு விபத்து அல்ல என்பதும் புலப்படுகிறது. இங்கே கையளிப்பவர்தான் கடவுள், அவர் இயேசுவை சிலுவையில் அறையவில்லை, அதனை செய்தது நீங்கள், அத்தோடு அந்த பாதகச் செயலை, சட்டத்தை அறியாதவர்களைக் கொண்டு செய்தீர்கள் என்று இவர்களின் மனட்சாட்சியை தட்டிவிடுகிறார். இங்கே சட்டத்தை அறியாதவர்கள் (ἀνόμων) என்போர் உரோமையரைக் குறிக்கிறது. உரோமையர்கள் தோறா (תּוֹרָה) எனப்படும் திருச்சட்டத்தை கடைப்பிடியாதோர், அவர்களைக் கொண்டு ஒரு யூத சதோதரனுக்கு தண்டனை கொடுப்பது இஸ்ராயேல் கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. அதனைத்தான் இவர்கள் செய்தார்கள் என்கிறார் பேதுரு. இப்படியாக கடவுள் அல்ல, மக்கள்தான் குற்றவாளிகள் என்கிறார்.

வ.24: மக்கள் ஒன்றைச்செய்ய, கடவுள் இன்னொன்றைச் செய்தார் என்கிறார் பேதுரு. மக்கள் அவரை கையளிக்க அதாவது காட்டிக்கொடுக்க, கடவுள் அவரை மரணவேதனையிலிருந்து விடுவித்து உயிர்த்தெழச் செய்கிறார். இப்படியாக இயேசுவினுடைய உயிர்ப்பிற்கு தந்தையாம் கடவுளின் ஆசீர் நிறைவாகவே இருக்கிறது. இவ்வாறு அவருடைய உயிர்ப்பும் கடவுள் திட்டமே அன்றி அது தற்செயல் அல்ல என்பது புலப்படுகிறது (ὁ θεὸς ἀνέστησεν λύσας ⸆ τὰς ὠδῖνας τοῦ ⸀θανάτου). இரண்டாவதாக இயேசு என்பவர் யார், அவரை மரணம் எதுவும் செய்ய முடியுமா? என்பதை காட்டுகிறார் பேதுரு. மரணம் அவரை தன் பிடியில் வைத்திருக்க முடியாது, ஏனெனில் அவர் சாதாரண மனிதன் அல்ல, அவர் இறைமகன்.

வவ.25-28: தாவீதின் திருப் பாடலை இறைவாக்காக கோடிடுகிறார் பேதுரு. திருப்பாடல்களை தாவீதுதான் எழுதினார் (Δαυὶδ γὰρ λέγει) என்ற நம்பிக்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. அத்தோடு திருப்பாடல்களும் இறைவாக்குகள் என்ற அந்தஸ்தை அக்காலத்திலேயே பெற்றிருக்கின்றன. மேலும் பேதுருவுக்கும், லூக்காவிற்கும் திருப்பாடல்களில் நல்ல புலமைத்துவம் இருந்திருக்கிறது. இங்கே பேதுரு கோடிடும் திருப்பாடல், திருப்பாடல் 16,8-11. இந்த திருப்பாடல் எபிரேய விவிலியத்திலும், செப்துவாஜின்து கிரேக்க விவிலியத்திலும் ஒன்றாக இருந்தாலும் வாhத்தைகளில் வித்தியாசத்தைக் கொண்டுள்ளது. பேதுரு அநேகமாக செப்துவாஜிந்து விவிலியத்தை கோடிடுவததைப் போலவே தெரிகிறது. இங்கே தாவீது சில முன்மொழிவுகளை முன்வைக்கிறார்.

அ. ஆண்டவரை கண்முன் வைத்துள்ளார் (προορώμην τὸν κύριον).

ஆ. ஆண்டவர் அவர் வலப் பக்கம் உள்ளார் (δεξιῶν μού), இதனால் அவர் அசைவுறார் (μὴ σαλευθῶ).

இ. இதனால் அவர் இதயம் பேருவகை கொள்கிறது (ηὐφράνθη ἡ καρδία).

ஈ. அவர் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது (ἠγαλλιάσατο ἡ γλῶσσά).

உ. உடலும் எதிர்பார்ப்பால் நிறைந்துள்ளது (σάρξ μου κατασκηνώσει ἐπ᾿ ἐλπίδι).

ஊ. அவரை ஆண்டவர் பாதாளத்தில் ஒப்புவிக்க மாட்டார் (οὐκ ἐγκαταλείψεις εἰς ᾅδην ).

எ. ஆண்டவர் தூயவனை படுகுழியை காணவிடமாட்டார் (τὸν ὅσιόν σου ἰδεῖν διαφθοράν).

ஏ. வாழ்வின் வழியை அவர் அறியச் செய்வார் (ὁδοὺς ζωῆς).

ஐ. ஆண்டவர் முன்னிலையில் அவருக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு (πληρώσεις με εὐφροσύνης).

வ.29: இந்த வரியில் தாவீதை ஒரு குலமுதுவராகவும் (πατριάρχου Δαυὶδ), அவர் வார்த்தைகள் உண்மையானவைகளாகவும் இருக்கிறது என ஏற்றுக்கொள்கிறார். அத்தோடு தாவீது என்கின்ற மனிதர் இறந்தார் என்பதையும் நினைவூட்டுகிறார். அவருடைய கல்லறை தங்களுக்கு தெரியும் என்கிறார். இதிலிருந்து தாவீதின் கல்லறை (τὸ μνῆμα) பேதுருவின் காலத்தில் முக்கிய இடங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது என்பதும் புலப்படுகிறது. இந்த தாவீதின் கல்லறை, தாவீதின் நகர் அல்லது சீயோன் மலை என்றழைக்கப்படும், குன்றிலே இன்று அடையாளம் காட்டப்படகிறது.

வவ.30-31: தாவீதை பேதுரு ஒரு இறைவாக்கினர் (προφήτης) என்கிறார், ஆக தாவீது அக்காலத்தில் இறைவாக்கினர் ஒருவராக கருதப்பட்டார் என்பது புலப்படுகிறது. அத்தோடு அவர் பேசிய வரிகள், தன்னைக் குறித்தல்ல மாறாக அவருடைய ஒரு வழித்தோன்றலைக் குறித்தே என்பதை தாவீது அறிந்திருக்கிறார் என்று சொல்லி, அந்த வழித்தோன்றல் இயேசு கிறிஸ்துவே என்று விளக்கம் தருகிறார். தாவீதினுடைய பாடலுக்கும் இயேசுவினுடைய உயரித்தெழுதலுக்கும் இறைவாக்கு முடிச்சுப்போடுகிறார்.

வ.32: நிச்சயமாக தாவீது இறந்தார், ஆகவே அவர் சொன்னது இன்னொருவைரைப் பற்றித்தான், அந்த இன்னொருவர் இயேசு, அவர் உயிர்த்தார் அந்த உயிர்ப்பிற்கு தாங்கள் சாட்சிகள் என்கிறார் பேதுரு. இந்த வரி மிகவும் முக்கியமான வரி.

வ.33: மேலும் இந்த உயிர்த்த இயேசு, கடவுளின் வலப்பக்கம் எழுந்தார், தூய ஆவியை தந்தையிடம் பெற்று அவரை பொழிந்தார், அதனைத்தான் இந்த கேட்போர், கேட்கின்றனர் மற்றும் பார்க்கின்றனர் என்று தொடர்கிறார்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 16

1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

2நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்.

3பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.

4வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்; அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்து கொள்ளேன்; அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்.

5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே

6இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன் உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.

7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.

8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.

9என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

10ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.



தாவீதின் பாடல் என அறியப்படும் இந்த 16வது சங்கீதம், ஒரு வேண்டுதல் பாடல் போல காணப்படுகிறது. இதனை தாவீதுதான் எழுதினார் என பாரம்பரியமாக நம்பப்படுகிறது. எந்த சூழ்நிலையில் தாவீது இதனை எழுதினார் என்பது புலப்படவில்லை, ஆனால் சாவின் பயம் ஒன்று இந்த திருப்பாடலின் பின் இருப்பதை காணமுடிகிறது. தூய பேதுருவும், நற்செய்தியாளர் லூக்காவும், இநத பாடலை இயேசுவினுடைய உயிர்ப்போடு ஒப்பிட்டு பார்க்கின்றனர், அவர்களுக்கு தாவீது ஒரு இறைவாக்கினர் மற்றும் இந்த வரிகள் இயேசுவை பற்றிய வரிகள் (ஒப்பிடுக தி.ப 2,25-28). எபிரேய கவிநடையாக திருப்பிக்கூறல் அமைப்பை இந்தப் பாடல் சார்ந்துள்ளது.

வ.1: முதலாவது வரியில் உள்ள முன்னுரையின் ஒரு சொல்லின் அர்த்தம் என்னவென்று புலப்படவில்லை (מִכְתָּם לְדָוִד மிக்தாம் லெதாவித்). இந்த முதலாவது வரியில் இருந்து, தாவீது எதோ ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இந்த பாடலை பாடியிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.

வ.2: இந்த வரி தாவீதின் விசுவாச பிரகடனம் போல வருகின்றது. தாவீது கடவுளை தன்னுடைய தலைவராகக் காண்கிறார். இந்த தலைவரை தன்னுடைய ஒரே நன்மைத்தனமாகவும் காண்கிறார் (טוֹבָתִ֗י தோவாதி). இந்த நன்மைத்தனத்தை தமிழ் மற்றும் வேறு விவிலியங்கள், செல்வம் என மொழிபெயர்க்கின்றன. அது தவறில்லை.

வ.3: பூவுலகில் உள்ளோரை 'எவ்வளவு தூயவர்கள்' (לִקְדוֹשִׁים אֲשֶׁר־בָּאָ֣רֶץ) என்று தாவீது பாடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. தன்னுடைய துன்பமான வேளையிலும், பூவுலகத்தோரை தூயவர்கள் என்கிறார். அத்தோடு அவர்களோடு இருப்பது தனக்கு பேரின்பம் என்கிறார். யார் இந்த பூவுலகத்தோர் மற்றும் ஏன் இப்படிச் சொல்கிறார் என்பதும் கேள்வியாகவே இருக்கிறது. இது சக இஸ்ராயேல் மக்களைக் குறிக்கலாம்.

வ.4: வேற்று தெய்வ வழிபாட்டைப் பற்றிச் சொல்லப்படுகிறது. இந்த வரி மிகவும் சிக்கலான வரியாக காணப்படுகிறது. எபிரேய விவிலியத்தில், வேற்று தெய்வம் என்று இந்த வரியில் காணப்படவில்லை, வேறு (אַחֵ֪ר) என்றுதான் காணப்படுகிறது. ஆனால் துன்பங்கள் என்ற சொல்லிற்கும், வேறு தெய்வங்கள் என்ற சொல்லிற்கும் தொடர்பு உள்ளததை ஆய்வாளர்கள் அவதானிக்கின்றனர் (עַצְּבוֹתָם֮). வேறு தெய்வங்களை தேடிப்போகிறர்வர்கள் தங்கள் துன்பங்களை பெருக்கிக்கொள்கின்றனர் என்ற நம்பிக்கை இங்கே தெரிகிறது. இந்த சொல் வேறு தெய்வங்கள் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததொனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (עַצְּבִים சிலைகள்). தாவீதினுடைய காலத்தில் சில இஸ்ராயேலர் வேற்று தெய்வ வழிபாடான இரத்த பலியில் கலந்திருக்கிறார்கள் என்பதும் இங்கே புலப்படுகிறது. அத்தோடு இந்த பொய் தெய்வங்களின் பெயர்களும் இவர்களின் நாளாந்த உச்சரிப்பில் இருந்திருக்கிறது என்பதும் புலப்படுகிறது. தாவீது இந்த இரண்டையும் துன்பத்தின் காரணமாக காண்கிற படியால் அவற்றை தான் செய்யேனென்கிறார்.

வ.5: இந்த திருப்பாடலிலே மிகவும் அழகான வரி இதுவாகும். கடவுளை தன் உரிமைச் சொத்தாகவும் (מְנָת־חֶלְקִ֥י), தன் கிண்ணமாகவும் (כוֹסִי) காண்கிறார் தாவீது. உரிமைச் சொத்து என்பது உரிமை நிலத்தைக் குறிக்கும், ஆரம்ப கால இஸ்ராயேலருக்கு நிலம் எதிர்கால அடையாளத்தைக் கொடுத்தது. ஆண்டவரே நிலமாக இருப்பது மிகவும் ஆழமான விசுவாச வார்த்தை. இரச கிண்ணம் அக்காலத்தில் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்பட்டது, ஆக ஆண்டவரே இவருடைய வெற்றியாகவும் வருகிறார். இந்த ஆண்டவர் இவரின் பங்கைக் காக்கிறார் (אַתָּ֗ה תּוֹמִ֥יךְ גּוֹרָלִֽי).

வ.6: இந்த வரியை பலவிதமாக பலர் மொழிபெயர்க்கின்றனர். ஆண்டவரை உரிமைச் சொத்தாகவும், கிண்ணமாகவும் கொண்டிருப்பதால், அவருக்கு கிடைத்துள்ள நிலம் இனிமையானதாகவும், வளமானதாகவும் அமைகிறது (בַּנְּעִמִ֑ים ,שָֽׁפְרָ֥ה) என்றும் சிலர் மொழிபெயர்ப்பு செய்கின்றனர்.

வ.7: இந்த வரியில் தாவீது, தான் ஆண்டவரை போற்றுவதற்கான (אֲבָרֵךְ) காரணத்தை விளக்குகிறார். நம்முடைய ஆண்டவர் அந்தரத்தில் இருந்துகொண்டு பேசுகிறவர் இல்லை, அவர் உள்ளுணர்வுகளுடாக பேசுகிறவர், அவர் மனட்சாட்சி மூலமாக பேசுகிறார் என தமிழ் விவிலியம் மொழிபெயர்க்கின்றது. எபிரேய விவிலியம், அவர் சிறுநீரகம் மூலமாக பேசுகிறார் என சொல்லிடுகிறது (כִלְיוֹתָֽי ,כִּלְיָה சிறுநீரகம்). சிறுநீரகம்தான் உணர்வுகளின் உறைவிடம் என அக்காலத்தில் நம்பினர், இதனால்தான் ஆண்டவர் இரவில் இந்த உணர்வு உறுப்புக்கள் மூலமாக பேசுகிறார் என நம்புகிறார் ஆசிரியர்.

வவ.8-11: பின்வருகின்ற வசனங்கள் ஆண்டவரின் பெருமைகளை ஒத்த கருத்துச் சொற்களில் அழகாக வர்ணிக்க முயல்கின்றன.

வ.8: கண் முன்னால் இருப்பதையும், வலப்புறத்தையும், ஆசிரியர் ஒத்த கருத்துச் சொற்களாக பாhக்கிறார், ஏனெனில் இரண்டும் மிக முக்கியமான இடங்கள்.

வ.9: இதயம் அக்களிப்பதையும், உள்ளம் மகிழ்ந்து துள்ளுதலையும், அவர் உடல் பாதுகாப்பில் இருப்பதற்கு காரணமாக காண்கிறார். இந்த வரியின் இரண்டாவது பிரிவை, என் மகிமை துள்ளுகிறது (וַיָּגֶל כְּבוֹדִי) என்றே எபிரேய விவிலியம் கொண்டுள்ளது. இது பெரிய வித்தியாசத்தை தரவில்லை, இருப்பினும் சிலர், இங்கே சிறிய எழுத்துப்பிழை அல்லது மாறுதல் இருப்பதாக காண்கின்றனர். இங்கே இருப்பது என் மகிமை அல்ல (כְּבוֹדִי), மாறாக என் ஈரல் (כְּבֵדִי) என்கின்றனர். இதயத்தைப் போல, ஈரல் உள் மனதிற்கு ஒத்த கருத்துச் சொல்லாக பாவிக்கப்பட்டடிருக்கலாம். பிற்காலத்தில் இது மருவியிருக்கலாம். மசரோட்டியர் காலத்திற்கு முன்னர், எபிரேய விவிலியம் மெய்யெழுத்துக்களால் மட்டுமே வாசிக்கப்பட்டது. உயிர் எழுத்துக்களை (புள்ளிகள்) அவர்கள் மனப்பாடத்திலே வாசித்தார்கள். இதுவும் இந்த மருவலுக்கு காரணமாக அமைந்திருக்கலாம். (ஆரம்ப காலத்தில் தமிழ் இலக்கியங்களை ஓலைச் சுவடுகளில் எழுதியபோது, நம் முன்னோர்கள் குத்துக்களையும், தரிப்புக் குறிகளையும் பாவியாது எழுதினதைப் போல).

வ.10: பாதாளம் (שְׁאוֹל ஷெயோல்), மற்றும் படுகுழி (שָׁחַת ஷஹாத்) விவிலியத்தில் மிகவும் முக்கியமான சொற்கள். இஸ்ராயேல் மக்கள் ஆரம்ப காலத்தில் நரகம், மறுவாழ்வு, உத்தரிப்புஸ்தலம் போன்றவற்றை நம்பவில்லை. இந்த ஆழம் காணாத குழிகளுக்குள் இறப்பின் பின்னர் ஆன்மா செல்வதாகவும் (இவர்களுடைய ஆன்மா பற்றிய அறிவும் வித்தியாசமானது), இது கடவுள் இல்லா நிலையெனவும் நம்பினர். இதனைப்பற்றிய சரியான புரிதல்கள் காணக்கிடையாது. ஆசிரியர் தன்னையோ அல்லது இந்த பாடலின் கதாநாயகனையோ உம் அன்பர் (חֲסִידְךָ֗) எனச் சொல்லி, அவர் இந்த படுகுழியைக் காணமாட்டார் என்கிறார்.

வ.11: இதுவும் அழகான ஒரு வரி. வாழ்வின் வழியை தான் அறியப்போவதாகச் சொல்கிறார் (תּֽוֹדִיעֵנִי אֹ֤רַח חַ֫יִּ֥ים). இந்த வாழ்வின் வழி ஷெயோல் மற்றும் ஷஹாத் போன்ற அழிவின் குழிகளுக்கு எதிர்பதமாக அமைகிறது. அத்தோடு ஆண்டவரின் முகத்தின் முன் தான் நிறைவான மகிழ்ச்சிகளைக் (שֹׂבַע שְׂמָחוֹת) காண்பதாக சொல்கிறார். இந்த நிறைவான மகிழ்ச்சிகள் என்ற பன்மைச் சொல் விவிலியத்தில் இந்த இடத்தில் மட்டுமே காணக்கிடக்கின்றது. ஆண்டவரின் வலப்பக்கம் என்பது, ஆண்டவரின் விசேட இடத்ததைக் குறிக்கும். வலம், விவிலிய பார்வையில் மங்கள வார்த்தை. இந்த இடத்தில் நிறைவான மகிழ்வு கிடைக்கும் என்கிறார். புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இந்த வலப்பக்கத்தை அதிகமாக அடையாளப்படுத்துவர். இயேசுவும் கடவுளின் வலப்பக்கத்திற்கு போனதாக பல புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆண்டவரின் வலப்பக்கம் நல்லது என்றால் அவரின் இடப்பக்கம் கூடாததா? என்ற கேள்வி எழுகிறது. அப்படியல்ல. எபிரேயம் நன்மை தீமை என்று ஒப்பிட்டு பார்க்காத ஒரு அரிதான மெய்யியல். இந்த ஒப்பிட்டு பார்க்கும் தன்மை கிரேக்கருடைய காலத்திலே வளர்ந்தது.



இரண்டாம் வாசகம்
1பேதுரு 1,17-21

17நீங்கள் 'தந்தையே' என அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால் இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள். 18உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல 19மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும். 20உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார். 21அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.

பேதுரு யாருக்கு தன்னுடைய இந்த திருமுகத்தை எழுதினார் என்பதற்கு பல விடைகளும், கேள்விகளும் உள்ளன. இந்த வரிகளை வைத்துப்பார்க்கின்றபோது அவர் யூதரல்லாத, கிரேக்க-உரோமையர் மற்றம் பலருக்காக இந்த மடல் எழுதியிருக்கலாம் என்றும் என்னத் தோன்றுகிறது. ஏன் பேதுரு இந்த கடிதத்தை எழுதினார் என்பதற்க்கும் பல காரணங்கள்முன்வைக்கப்படுகின்றன. துன்பங்களையும், துன்புறுத்தல்களையும் சந்தித்த கிறிஸ்தவர்களுக்கு இது ஆறுதல் கொடுப்பதற்காக எழுதப்பட்டிருக்கலாம். நாம் ஏன் துன்பங்களை தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வரியில் நம்முடைய கிறிஸ்தவ பிறப்பு விலைமதிப்பற்றது என்ற காரணம் முன்வைக்கப்படுகிறது.

வ.17: கடவுளை தந்தையே! (πατέρα) என அழைத்து மன்றாடும் வழக்கம் இந்த கடிதத்தின் காலத்தில் தொடங்கிவிட்டது எனலாம். இது யூத மத வழிபாடுகளுக்கு வித்தியாசமானது அத்தோடு இது இவர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தைக் கொடுத்தது எனலாம். இந்த தந்தை ஆளைப் பார்த்தல்ல, அதாவது யூதரா, யூதரல்லாதவரா என்று பார்ப்பதில்லை என்கிறார். மாறாக அவர் செயல்களை பார்க்கிறார். இவ்வுலகில் அன்னியராய் வாழ்த்தல் (τῆς παροικίας ) என்பதற்கு பின்னால், கிறிஸ்தவர்களின் உண்மையான நாடு பரலோகம், இந்த உலகம் அவர்களுக்கு தற்காலிக வீடு என்னும் கொள்கை மறைந்திருக்கிறது.

வ.18: இவர்களுடைய மூதாதையர் இவர்களுக்கு சொத்தாக வீணான நடத்தையையே விட்டுச்சென்றுள்ளனர். ஆனால் அதனை நிவர்த்தி செய்ய கடவுள், பாவித்தது பொன்னும் வெள்ளியும் அல்ல (ἀργυρίῳ ἢ χρυσίῳ,), இவைகள் அழந்துபோகும். யூதர்கள் அல்லாதவர்களுக்கு அதிகமான வேளைகளில் தங்கள் தெய்வங்களைவிட பென்னும் வெள்ளியும் முக்கியமாக தோன்றியிருக்கலாம், அல்லது அவர்கள் அவற்றை பெருக்க இந்த தெய்வங்களை நாடியிருக்கலாம்.

வ.19: இந்த வரியில் எதனால் கடவுள் புறவினத்தவரை தமக்கு ஏற்புடையவர் ஆக்கினார் என்ற மிக முக்கியமான இறையியலை முன்வைக்கிறார். அது இயேசுவின் உயர்மதிப்புள்ள இரத்தம் (τιμίῳ αἵματι Χριστοῦ). இந்த இரத்தத்தை விவரிக்க மாசு மறுவற்ற செம்மறியை எடுக்கிறார். வெள்ளாடுகளையோ அல்லது ஆடுகளையோ போலல்லாது செம்மறி அப்பாவியான மிருகமாக அக்காலத்தில் கருதப்பட்டது. முதல் ஏற்பாட்டில் மக்களுடைய பாவங்களுக்காக ஆடுகளை பலியிடுகின்ற வழக்கம் இருந்தது, இந்த வழக்கம் மற்றய கானானிய மற்றும் எகிப்திய சமயங்களிலும் இருந்திருக்கிறது. இப்படியாக இயேசுவின் மாண்புமிக்க இரத்தம், பாவங்களைப் போக்க சிந்தப்பட்டது என்கிறார்.

வ.20: பேதுரு தாங்கள் வாழ்ந்த காலத்தை அதாவது இயேசுவின் காலத்தை கடைசிக் காலமாக காண்கிறார் (ἐσχάτου τῶν χρόνων). இந்த இயேசு கடைசிக் காலத்தில் வெளிப்பட்டாலும், அவர் உலகம் தோன்றுவதற்கு முன்னமே இருந்தார் என்கிறார்.

வ.21: மேலும் இந்த கிறிஸ்துவிற்கும் புறவினத்தவருக்கும் இடையிலான தொடர்பு விளக்கப்படுகிறது. புறவினத்தவர்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டதற்கு காரணம் இந்த இயேசு. இந்த இயேசு இறந்தாலும் கடவுளால் உயிர்ப்பிக்கப்பெற்றார். இதனை ஒரு பெருமைப்படுத்தல் என்கிறார் (δόξαν αὐτῷ). இந்த செயற்பாட்டின் மூலம், புறவினத்தவர்கள் கடவுளில் நம்பிக்கை கொள்ளவும், அவரை எதிர்பார்கவும் வேண்டும் என்கிறார். இந்த வரியில் வருகின்ற 'நம்பிக்கை' (πιστοὺς) என்பது ஒரு பெயர்உரிச் சொல், ஆனால் அதிகமான படிவங்களில் இது பெயரெச்சவினையாக (πιστεύοντας) காட்டப்படுகிறது. இதன் மூலம் விசுவாசம் என்பது ஒரு செயற்பாடாக மாறுகிறது.


நற்செய்தி வாசகம்
லூக்கா 24,13-35

13அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. 14அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். 15இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். 16ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன. 17அவர் அவர்களை நோக்கி, 'வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள். 18அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, 'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!' என்றார். 19அதற்கு அவர் அவர்களிடம், 'என்ன நிகழ்ந்தது?' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், 'நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். 20-21அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. 22ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; 23அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். 24எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை' என்றார்கள். 25இயேசு அவர்களை நோக்கி, 'அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! 26மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா!' என்றார். 27மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். 28அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார். 29அவர்கள் அவரிடம், 'எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார். 30அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். 31அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார். 32அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, 'வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?' என்று பேசிக் கொண்டார்கள். 33அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள். 34அங்கிருந்தவர்கள், 'ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்' என்று சொன்னார்கள். 35அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

லூக்கா நற்செய்தியின் அழகான காட்சிகளில் இந்த எம்மாவு நிகழ்வுக் காட்சி மிக முக்கியமானது. இந்த பகுதிக்கு சற்று முன்னர்தான் பெண்கள் வெற்றுக் கல்லறையை கண்டிருந்தார்கள். அந்த வெற்றுக் கல்லறைக்குள் இரண்டு வெண்ணாடை அணிந்தவர் தோன்றி இயேசு உயிர்த்துவிட்டதாக சாட்சியம் சொல்கின்றனர். இந்த சாட்சியம் மகதலா மரியாவிற்கு சொல்லப்படுகிறது. இதனைக் கண்டவர்களும் கேட்டவர்களும் மூன்று பெண்கள். இதனை அவர்கள் வந்து திருத்தூதர்களுக்குச் சொல்ல அதனை அவர்கள் மடமை என கருதுவதாக லூக்கா பதிகிறார் (ὡσεὶ λῆρος). இந்த இடத்தில் வைத்தியர் லூக்கா, திருத்தூதர்களில் சற்று கோபமாகவே உள்ளார் (வ.11). ஆக அவர்கள் ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை. பெண்களின் வார்த்தைகளைகேட்ட பேதுரு, மற்றைய நற்செய்திகளைப் போலல்லாது தனியே கல்லறைக்கு ஓடுகிறார், உள்ளேயும் போகிறார், வெற்றுக் கல்லறையைத்தான் காண்கிறார். இருப்பினும் அவரும் நம்பிய போல தெரியவில்லை.

வ.13: இந்த வரி 'இவர்களில் இருவர்' (δύο ἐξ αὐτῶν) என இந்த சீடர்களை அறிமுகம் செய்கிறது. யார் இவர்கள் திருத்தூதர்களா அல்லது சீடர்களா? திருத்தூதர்களாக இருக்க முடியாது ஏனெனில் இவர்களின் பெயர்கள் திருத்தூதர்களின் பெயர்கள் அல்ல. இவர்கள் இருவரும் அதேநாள் எம்மாவு (Εμμαοῦς) என்ற கிராமத்திற்கு செல்கிறார்கள். இந்த எம்மாவு எருசலேமிலிருந்து 11 கி.மீ தொலைவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடத்திற்கு இன்று இரண்டு இடங்கள் முன்மொழியப்படுகின்றன.

அ. ஏல் குபெய்பே: இது எருசலேமிற்கு வடமேற்காக 11கி.மீ தொலைவில் (7மைல்கள்) இருக்கிறது.

ஆ. அம்வாஸ் (நவீன நிக்கோபோலிஸ்): இது எருசலேமிற்கு வடமேற்காக 31கி.மீ தொலைவில் (18மைல்கள்) இருக்கிறது.

கிரேக்க விவிலியம் இந்த தூரத்தை ஏழு நடைதூரங்கள் (σταδίους ἑξήκοντα) என்று சொல்கிறது, சில கிரேக்க படிவங்கள் 160 நடைதூரங்கள் என்றும் சொல்கின்றன. இந்த சீடர்கள் ஏன் எம்மாவுக்கு சென்றார்கள்? ஒருவேளை இயேசு இறந்ததோடு அனைத்தும் முடிந்து விட்டது என்ற விரக்தியில் சென்றிருக்கலாம். பின்வருகின்ற வரிகள் அதனைத்தான் உறுதி செய்கின்றன.

வவ.14-15: இவர்கள் அமைதியாக செல்லவில்லை, ஒருவர் மற்றவரோடு உரையாடிக்கொண்டு செல்கிறார். அக்காலத்தில் நடைக் களைப்பை நிவர்த்தி செய்ய இப்படிச் செய்வது வழக்கம். இயேசு இவர்களோடு இணைந்து கொள்கிறார். அவர் உயிர்த்த ஆண்டவர் என்பதால் அவர் தூரத்தை கடந்திருப்பார் என எடுக்கலாம். அல்லது வேகமாக நடந்து இவர்களை அணுகியிருக்கலாம்.

வ.16: இந்த வரி ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது. இவர்களுடைய கண்கள் மறைக்கப்பபட்டது, ஆக இவர்களின் அறியாமைக்கு இவர்கள் பொறுப்பல்ல. இந்த நிகழ்வும் கடவுளுடைய திட்டத்தின் படியே நடைபெறுகிறது.

வ.17: இயேசுவின் கேள்வியும் இவர்களின் முகவாட்டமும் காட்டப்படுகின்றன. இவர்கள் முகவாட்டமாக இருந்தது (ἐστάθησαν⸅ σκυθρωποί). இந்த முகவாட்டம் இவர்களின் தோல்வியையும், அத்தோடு இவர்கள் இயேசுவில் எவ்வளவு அன்புவைத்திருந்தார்கள் என்பதையும் காட்டுகிறது.

வ.18: கிளயோப்பா பேசுகிறார் (Κλεοπᾶς). அவர் விடைசொல்லாமல் இயேசுவிற்கு இன்னொரு கேள்வியையே முன்வைக்கிறார். அவர் இயேசுவை எருசலேம் குடிமகன் இல்லை மாறாக தங்கியிருப்பவர் என்கிறார் (παροικεῖς Ἰερουσαλὴμ). பாஸ்கா காலமாக இருந்த படியால் பலர் இவ்வாறு அங்கு தங்கியிருந்தனர். இந்த கிளயோப்பா யார் என்று தெரியவில்லை, இவர் இந்த பெயரில் இங்கே மட்டும்தான் வருகிறார். சிலர் இவரை சிலுவையடியில் இருந்து மரியாவின் கணவரான கிளோபாஸ் (அன்னை மரியா அல்ல) என்று காண்கின்றனர் (காண்க யோவான் 19,25).

வ.19: இவர்கள் நசரேத்து இயேசுவைப் பற்றி பேசுவதாக எற்றுக்கொள்கின்றனர். அத்தோடு அவர்கள் இயேசுவை வல்ல இறைவாக்கினராகவும், அவரது சொல்லும், செயலும் அவரை கடவுளின் மனிதர் எனக்காட்டியதாவும் சொல்கின்றனர்.

வவ20-21: இவர்களின் எதிர்பார்ப்பை அழகாக காட்டுகிறார் லூக்கா. இயேசுவை பின்பற்றியவர்ளில் சிலர், இயேசு உரோமைய ஆதிக்கத்திலிருந்து இஸ்ராயேலைக் விடுவிப்பார் என நம்பினர். இதற்காகவே அவர்கள் இயேசுவை பின்பற்றினர். கிளயோப்பா இந்த குழுவிற்குள் தன்னையும் இணைத்துக்கொள்கிறார். உரோமையர்களிடமிருந்து விடுதலை தரக்கூடியவர், சாதாரண தலைமைக்குருக்களால் கொலையுண்டது இவருக்கு வெறுப்பைத் தருகிறது. அத்தோடு இவை நிகழ்ந்து மூன்று நாட்கள் ஆகின்றன என்பது, இவர்கள் அந்த ஞாயிறு தினத்தில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.

வவ.22-23: கிளயோப்பா தங்களது பெண்கள் சொன்ன சாட்சியத்தை விவரிக்கின்றார். சாதாரணமாக பெண்களின் சாட்சிம் அவ்வளவு பெரியதாக எடுக்கப்படுவதில்லை. இந்த பெண்கள் சொல்லும் சாட்சியமான வெற்றுக் கல்லறை, மற்றும் வானதூதர்கள் இவர்களுக்கு மலைப்பாக இருக்கிறது, நம்பிக்கையாக இல்லை. வ.24: அதே நிலைமைதான் ஆண்களின் சாட்சியத்திற்கும் கிடைக்கிறது. ஆனால் இந்த இரு சாராரும் கல்லறையில் ஒரே விதமான காட்சிகளைக் கண்டதை ஊகிக்க முடியகிறது. ஆக சாட்சியம் உண்மையாக இருக்கிறது. இது வாசகர்களுக்கு புரிவது போல அமைக்கப்பட்டுள்ளளது.

வவ.25-26: இப்போது இது இயேசுவின் வாய்ப்பு, இயேசு சற்று கடுமையாகவே சாடுகிறார். இவர்களை அறிவிலிகள் மற்றும் மந்த உள்ளத்தினர் என எச்சரிக்கிறார் (ὦ ἀνόητοι καὶ βραδεῖς τῇ καρδίᾳ). மந்த உள்ளத்தினரை கிரேக்க விவிலியம், இதயத்தில் வேகமில்லாதவர்கள் என்று காட்டுகிறது. இது அவர்களின் புரிந்து கொள்ளும் திறனில் உள்ள குறைபாட்டைக் காட்டுகிறது. இயேசு இவர்களுக்கு கொடுக்கும் இந்தப் பேச்சு உண்மையில் அன்று, ஒவ்வொரு தொடக்க கால கிறிஸ்தவருக்கும் உரியது, இன்று அது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொருந்தும்.

வ.27: இயேசு சிறிய நேரத்திற்குள் மோசே முதல் இறைவாக்கினர் வரை அனைத்து நூல்களிலும் தன்னைப் பற்றி உள்ளதை விளக்குகிறார். இதன் மூலம் இறைவாக்கும் சட்டங்களும் தன்னைப்பற்றித்தான் உள்ளது என்பதையும் காட்டுகிறார்.

வவ.28-29: இயேசு இவர்களோடு தங்குவதற்கு முடிவுசெய்கிறார். இது இயேசுவின் திட்டமாக இருக்கிறது. அவர்களும், மாலை வேளையை காரணம் காட்டி இயேசுவை தம்மோடு தங்கும் படி கேட்கிறார்கள். இதனால் இவர்கள் இந்த பெயர்தெரியாத நபரை நம்பினார்கள் என்று எடுக்கலாம்.

வ.30: இயேசு அப்பத்தை பங்கிடும் முறை, ஐம்பதாயிரம் பேருக்கு அப்பத்தை பகிர்ந்தளித்ததை நினைவூட்டுகிறது. அப்பத்தை எடுக்கிறார், கடவுளைப் போற்றுகிறார், அவர்களுக்கு பிட்டுக் கொடுக்கிறார். இது யூதர்களின் அப்பம் பிடும் முறை. சிலர் இதனை திருப்பலியாக காண்கின்றனர். இவ்வளவு சீக்கிரத்தில் திருப்பலி வளர்ந்திருக்குமா என்பது கேள்விக்குறி.

வ.31: அப்பம் பிடும் நிகழ்வு இவர்களின் கண்களைத் திறக்கிறது, அவர்களும் இயேசுவை அடையாளம் காண்கின்றனர், அவரும் மறைகிறார். ஆக இந்த அப்பம் பிடுதல் ஒரு சாதாரண நிகழ்வல்ல என்பது புலப்படுகிறது. இந்த அப்பம் பிடுதல்தான் இவர்களின் கண்களை திறக்கிறது. இயேசு மறைகிறார் என்றால், இங்கே இருப்பது உயிர்த்த ஆண்டவர் என்பது புலப்படுகிறது.

வ.32: இந்த இருவரின் மனச்சாட்சி பேசுகிறது. ஏன் உள்ளம் பற்றி எரியவில்லை? (ἡ καρδία ἡμῶν ⸀καιομένη) என்பது இவர்களின் கேள்வி. இதிலிருந்து, மறைநூலை கவனமாக வாசிக்கிறவர்களுக்கு, இயேசு தோன்றவேண்டிய தேவையில்லை, அந்த மறைநூலே இயேசுவின் பிரசன்னத்தை தரவல்லது என்கிறார் லூக்கா.

வவ.33-34: எம்மாவு பயணம் பாதியிலேயே விடப்படுகிறது. ஆக எம்மாவு அல்ல எருசலேம்தான் முக்கியம் என்பதும் சொல்லப்படுகிறது. அங்கே இவர்கள் இவர்களின் சகாக்களையும், திருத்தூதர்களையும் சந்திக்கிறார்கள். இவர்கள் சொல்வதற்கு முன்பே அங்கே பேதுருவின் சாட்சியம் தரப்படுகிறது. 'ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார்' (ὄντως ἠγέρθη ὁ κύριο). இதுதான் இந்த பகுதியின் மையக் கருத்து. அவர் சீமோனுக்கு தோன்றினார் என்பதும் மிக முக்கியமான ஒரு சாட்சியம்.

வ.35: இறுதியாக எம்மாவு சீடர்கள் தங்களுக்கு நிகழ்ந்ததை விவரிக்கிறார்கள். அப்பத்தை பிடும் போதுதான் இவர்கள் இயேசுவைக் கண்டார்கள் என்பதை இன்னொரு முறை லூக்கா விவரிக்கிறார். இந்த அப்பம் பிடுதல் முக்கியமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும் (ἐν τῇ κλάσει τοῦ ἄρτου).

இயேசு என்பவர் நம் உணர்வுகளோடு பயணிக்கும் இறைவன்,
அந்தரத்தில் வசிக்கின்ற தெரியாத கடவுள் அவர் அல்ல.
அவர் நம்மோடுதான் இருக்கிறார்,
நாம் அவரோடா என்று பார்க்கவேண்டும்.
எங்களோடு தங்கும் ஆண்டவரே,
உம்மோடு தங்க ஆவல் தாரும். ஆமென்