இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பரிசுத்த வாரம், குருத்தோலை ஞாயிறு (அ)

முதல் வாசகம்: எசாயா 50,4-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 21
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2,6-11
நற்செய்தி: மத்தேயு 26,14-27,66


குருத்தோலை ஞாயிறு:

இன்றோடு தவக்காலம் முடிவடைகிறது அத்தோடு பரிசுத்த வாரம் ஆரம்பமாகின்றது. இன்றைய நாள், அன்று இயேசு மகிமையுடன் எருசலேம் நகரினுள் நுழைந்ததை நினைவூட்டுகின்றது. இயேசு எருசலேமில் நுழைந்த போது அவரைச் சுற்றியிருந்தவர்களும், அவரோடு வந்தவர்களும் ஆர்பரித்து ஆரவாரம் செய்தார்கள். தங்களுடைய கைகளில் ஒலிவ இலைகளை தாங்கி இருந்தார்கள். ஒலிவ இலைகள், மாட்சியையும் வெற்றியையும் குறிக்கின்ற அடையாளங்கள். சாதாரணமாக போரில் வெற்றி பெற்று வருகின்ற அரசர்கள், படைவீரர்கள் மற்றும் தலைவர்களுக்கு இவ்வாறு ஒலிவ இலைகள் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்கள். இயேசுவை வரவேற்றவர்கள் தங்கள் போர்வைகளை பாதையின் மேல் போட்டு இயேசுவிற்கு செங்கம்பழ வரவேற்பு கொடுக்கிறார்கள். இயேசு கழுதைக் குட்டியின் மீது வருகிறார். இவையனைத்தும் அடையாள மொழிகள். இயேசு, போர்த் தலைவர்களைப் போல் வெண் புரவியில் அல்லாமல், சாதுவான கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து வருவது அவரது அரசின் வித்தியாசமான கொள்கையைக் காட்டுகிறது.

முதல் வாசகம்
எசாயா 50,4-7

4நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். 5ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. 6அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.

எசாயா புத்தகத்தின் 49-50 வது அதிகாரம், மீட்பின் விடியல் என்ற பகுதியாக பெயரிடப்பட்டுள்ளது. கடவுளின் ஊழியர், எருசலேமின் மீட்பு, கடவுளின் ஊழியருடைய பாடல், முடிவுறாத அருள் போன்ற மிக அழகான பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்றைய பகுதி கடவுளின் ஊழியருடைய மூன்றாவது பாடல் என அறியப்படுகிறது. இந்தப் பாடலின் கதாநாயகர் யார் என்பதில் பல கேள்விகளும் பதில்களும் உள்ளன. சிலர் இவரை பாரசீக மன்னரான சைரசாகவும், அல்லது இறைவாக்கினர் எசாயாவாகவும், அல்லது மெசியாவாகிய மீட்பராகவும் காண்கின்றனர். இன்றைய பகுதி இரண்டாவது எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா முழு புத்தகத்தையும், நாம் எசாயா என்கின்ற ஒரு ஆசிரியருக்கு கொடுத்தாலும், இந்த புத்தகத்தை பல ஆசிரியர்கள் எழுதியிருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. இந்த இரண்டாவது எசாயா புத்தகம், பல வழிகளில் தனித்துவமாக உள்ளது. இதனை எசாயாவின் மாணவர் ஒருவர், அடிமைத்தன வாழ்விலிருந்துகொண்டு, அல்லது அதற்கு சற்று காலத்திற்குப் பினனர் எழுதியிருக்க வேண்டும் என்றே தெரிகிறது.

வ.4: ஊழியருடைய முக்கியமான ஒரு தகமை இங்கே பாடப்படுகிறது. கடவுளின் சேவகர், தன் மக்களின் பிரச்சனைகளையும், உணர்வுகளையும் கேட்கக்கூடியவராக இருக்க வேண்டும். கேட்டல் ஒருவகை, அதிலும் கற்போர் கேட்கும் விதம் இன்னொரு விதம், அதனை இந்த ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். அத்தோடு அவர் தன்னுடைய நல்வாக்கால் நலிந்தவர்களை தூக்கிவிட தெரிந்தவராக இருக்க வேண்டும். எபிரேய விவிலியம் 'தன்னுடைய நாவின் வாக்கால்' என்று சொல்கிறது.

வ.5: இந்த வரி ஆண்டவரின் ஊழியரின் கீழ்ப்படிவைக் காட்டுகிறது. ஆண்டவர் தன் காதுகளை திறந்துள்ளதாகச் சொல்கிறார் (אֲדֹנָ֤י יְהוִה֙ פָּתַֽח־לִ֣י אֹ֔זֶן), இதன் வாயிலாக காதுகள் செவிப்புலனோடு இருந்தாலும் அனைவரும் அனைத்தையும் கேட்பதில்லை என்பது புலப்படுகிறது. இங்கே காதுகளை திறப்பவர் கடவுளாக இருப்பதனால் அனைத்தும் கேட்க்கப்படுகிறது. கிளர்ச்சி செய்தலும், திரும்பிச் செல்லுதலும் கீழ்படிதலுக்கு எதிரானவை, அதனைத்தான் ஆசிரியர் மீள வலியுறுத்துகிறார். கேட்டல் என்பது கீழ்படிவோடு சம்மந்தப்பட்டது. ஆக கேட்டல், கிளர்ந்தெழாமை, திரும்பிச் செல்லாமை போன்றவை நல்லதோர் தலைவனின் பண்பாகின்றன.

வ.6: அக்கால வன்முறை சமுதாயத்தின் இகழ்ச்சிகள் இந்த வரியில் காட்டப்படுகின்றன. கிறிஸ்தவ விவிலிய ஆய்வாளர்கள் இந்த தண்டனை விளக்கத்தை, ஆண்டவர் இயேசுவின் பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். ஒரு அரசர் தன் தாடியையோ, தன் உடலையோ, தன்னை சித்திரவதை செய்வோருக்கு கொடுப்பதில்லை, அப்படி செய்தால் அவர் மாண்புள்ள தலைவராக இருக்க முடியாது, ஆனால் இந்த தலைவர் இந்த சித்திரவதைகளை ஆண்டவருக்காக ஏற்றுக்கொள்கின்றார். முகத்தை திறந்து வைத்தல் மற்றும் எச்சில்களை ஏற்றுக்கொள்தலும் போன்றவை அக்கால அரசர்களால் நினைத்தும் பார்க்க முடியாதவை, அதனையும் இந்த ஊழியர் ஏற்றுக்கொள்கிறார் (פָּנַי֙ לֹ֣א הִסְתַּ֔רְתִּי מִכְּלִמּ֖וֹת וָרֹֽק). இங்கே இவர் சந்திக்கின்ற தண்டனைகளும், ஆண்டவர் இயேசுவின் பாடுகளோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கப்படுகின்றன.

வ.7: இந்த ஊழியத் தலைவர் எப்படி இந்த அவமானங்களைத் தாங்க வல்லமை பெறுகிறார் என்பதற்கு விடை இந்த வரியில் காட்டப்படுகிறது. ‘ஆண்டவர் தனக்கு உதவிசெய்கிறார்| என்கிறது எபிரேய விவிலியம் (וַאדֹנָי יְהוִה֙ יַֽעֲזָר־לִ֔י). இந்த வரியில் அவருடைய ஆழமான விசுவாசமும் தெரிகிறது. முகத்தை கற்பாறை ஆக்கிக் கொள்ளல் என்பது, உணர்வுகளை அடக்கிக்கொள்வதற்கு சமனாகும், (פָנַי כַּֽחַלָּמִ֔ישׁ) இதன் மூலம் ஒருவர் தன்னுடைய அசைவுகளை தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை பெறுகிறார் என்று சொல்லலாம்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 22

துயர்மிகு புலம்பல்
(பாடகர் தலைவர்க்கு: 'காலைப் பெண்மான்' என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)
1என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
2என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்; நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்; எனக்கு அமைதி கிடைப்பதில்லை.
3நீரோ தூயவராய் விளங்குகின்றீர்; இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்;
4எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.
5உம்மை அவர்கள் வேண்டினார்கள்; விடுவிக்கப்பட்டார்கள்; உம்மை அவர்கள் நம்பினார்கள்; ஏமாற்றமடையவில்லை.
6நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.
7என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,
8'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர்.
9என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீNர் என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே!
10கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே!
11என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்; ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது; மேலும், உதவி செய்வார் யாருமில்லை.
12காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன் பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.
13அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.
14நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்; என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின் என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று; என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று.
15என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.
16தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.
17என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.
18என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
20வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்;
21இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.
புகழ்ச்சிப் பாடல் 22உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
23ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.
24ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை; அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை; தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார்.
25மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!
27பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.
28ஏனெனில் அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.
29மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்.
30வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.
31அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு 'இதை அவரே செய்தார்' என்பர்.


32 வரிகளைக் கொண்ட (முன்னுரை அடங்கலாக) இந்த திருப்பாடல் ஒரு தனி மனித புலம்பல் பாடலாக பார்க்கப்படுகிறது. எபிரேய விவிலியத்தில் இதனுடைய முதலாவது வரி, இப்பாடலின் முன்னுரை போல காணப்படுகிறது. 'பாடகர் தலைவர்க்கு காலைநேர பெண்மான் போல' (לַמְנַצֵּחַ עַל־אַיֶּ֥לֶת) என்னும் வரி இந்தப்பாடலின் மெட்டைக் குறிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். அத்தோடு இது தாவீதின் பாடல் அல்லது தாவீதுக்கான பாடல் என்றும் முன்னுரைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடலை இரண்டு பிரிவுகளாக பிரித்து, முதலாவது புலம்பல் பாடலாகவும் (வவ2-22), இரண்டாவது புகழ்ச்சிப் பாடலாகவும் (வவ.23-32) நோக்கலாம். இதன் முன்னுரை பிற்கால இணைப்பாகக்கூட இருக்கலாம். பல கிறிஸ்தவ ஆசிரியர்கள் இந்தப் பாடலை இயேசுவின் பாடுகளின் அழுகையோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

வ.1: ஆசிரியர் கடவுள் தன்னை கைவிட்டுவிட்டதாக பாடலை தொடங்குகின்றார். இது புலம்பல் பாடலுக்கான ஒரு அடையாளம். இதன் எபிரேய வரிகள் (אֵלִ֣י אֵלִי לָמָה עֲזַבְתָּנִי) எலி எலி லமாஹ் அட்வெதானி, இயேசு சிலுவையின் கூறிய வார்த்தைகளை நினைவூட்டுகின்றன (ஏலி ஏலி லமாஹ் சபத்தானி) - என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைவிட்டீர். இயேசு ஒருவேளை இந்த திருப்பாடலை இறுதியாக நினைத்திருப்பார் என எண்ணத்தோன்றுகிறது.

வ.2: ஆசிரியரின் ஏமாற்றத்தை இந்த வரி காட்டுகின்றது. பகலிலும் இரவிலும் தன்னுடைய செபம் கேட்கப்படுவதில்லை, அதாவது தன்னுடைய செபம் என்றுமே கேட்கப்படுவதில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர்.

வ.3: புலம்பலும், ஏமாற்றமும் முதல் வரிகளில் சொல்லப்பட்டாலும், கடவுள் ஏமாற்றாதவர், நம்பிக்கைக்குரியவர் என்ற வாதத்தை இந்த வரி முன்வைக்கிறது.

வவ.4-5: இந்த வரிகளில், ஆசிரியர் தன் மூதாதையர்களின் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கின்றார். முதாதையர்களின் நம்பிக்கை, வேண்டுதல் மற்றும் மன்றாட்டுக்கள் அவர்களின் நம்பிக்கை வாயிலாக நல்ல பலனைத் தந்தது. இந்த ஆசிரியர் தன்னுடைய மன்றாட்டு கேட்கப்படவில்லை என்றாலும், தன் மூதாதையரின் மன்றாட்டு கேட்க்கப்பட்டது என்று சொல்லி, பிழை தன்னுடைய பக்கமே இருக்கிறது என்கிறார். எபிரேய திருப்பாடல் இலக்கியத்தில் புலம்பல் இருந்தாலும், அங்கும் நம்பிக்கை இருக்கிறது என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன.

வவ. 6-8: இந்த வரிகள் ஆசிரியரின் துன்பங்களை காட்டுகின்றன. இவர் தன்னை ஒரு புழுவிற்கு ஒப்பிடுகிறார் (אָנֹכִי תוֹלַעַת). புழு உயிரினங்களுள் மிக அர்ப்பமான பிராணி, அவ்வாறு தன்னிலையும் மற்றவர்களால் மாற்றப்பட்டுள்ளது என்கின்றார் போல. பார்க்கிறவர்கள் ஏளனம் செய்கிறார்கள் என்கின்றார் (כָּל־רֹ֭אַי יַלְעִ֣גוּ לִ֑י). மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணுவதும், மற்றவர்கள் துன்பத்தில் வெற்றி காண்பதும் ஒருவகையான மனநோய் என்பதை நவீன அறிவியல் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இந்த நோய் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மக்களை தாக்கியிருக்கிறது என்பது இந்த வரியில் நன்கு தெரிகிறது. உதட்டை பிதுக்குதல் மற்றும் தலையை அசைத்தல் போன்றவை இப்படியான ஏளனக் குறிகள். அத்தோடு இவர்கள் ஆண்டவரையும் விட்டுவிடவில்லை அவரையும் கிண்டல் செய்கிறார்கள் என்கின்றார். ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்தால் அவர் விடுவிப்பார் என்ற விசுவாசமும் இங்கு தெரிகிறது.

வவ.9-11: இந்த வரிகள் ஆசிரியரின் தனிப்பட்ட விசுவாச அறிக்கை போல வருகிறது. கருப்பையிலிருந்து ஒருவரின் அழைப்பு தொடங்குகிறது என்பது விவிலியம் காட்டும் உண்மைகளில் ஒன்று, அதனை இந்த ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகின்றார் (כִּי־אַתָּה גֹחִי מִבָּטֶן). இதற்கு இணையாக தாயின் மடியிலிருந்தே தான் காக்கப்பட்டதாக ஒத்த வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன (מַבְטִיחִי עַל־שְׁדֵי אִמִּי). 10வது வரி இதே அர்த்தத்தை வேறு சொற்களில் மீள பாடுகின்றது. 11வது வரி ஒரு வேண்டுதலாக அமைந்து, அதன் மூலம் தன்னுடைய பயத்தை வெளிகாட்டுகிறார் ஆசிரியர்.

வவ.12-13: இந்த வரிகளில் ஆசிரியர் தன் எதிரிகளை விலங்குகளுடன் ஒப்பிடுகிறார். எருதுகள் சாதுவானதானாலும், பலமானவை அத்தோடு அவை சிங்கங்களையும் தாக்கக்கூடியவை. இந்த எருதுகளுக்கு தன் எதிரிகளை ஒப்பிடுகிறார் (פָּרִים பாரிம்). இந்த எருதுகளை திருப்பி பாசானின் காளைகள் என அர்த்தப்படுத்துகிறார் (אַבִּירֵ֖י בָשָׁן). யோர்தான் நதிக்கு கிழக்கிலே யார்முக் நதியின் வழியிலே காணப்படும் இந்த பாசான் பகுதி கானான் தேசத்தின் மிக வளமான பகுதி, இங்கே மேய்சலில் ஈடுபடும் மாடுகளும் பசுக்களும் கொழுத்து பருத்திருந்தன. இந்த உருவகத்தை முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் புறவினத்தவர்களுக்கும் பாவித்தனர். இந்த திருப்பாடல் ஆசிரியரும் அதனையே இங்கே செய்கிறார். சிங்கங்கள் இஸ்ராயேல் நாட்டில் பிற்காலத்தில் இல்லாமல் போயினும், அவை முற்காலத்தில் அங்கு வாழ்ந்திருக்கின்றன அத்தோடு அவற்றைப் பற்றிய நல்ல அறிவும் அங்கே இருந்திருக்கிறது. சிங்கத்தின் பலம் அதன் கால்களிலும், அதன் தாடைகளிலும் இருக்கின்றன அதனைத்தான் ஆசிரியர் எதிரிகளுக்கு ஒப்பிடுகிறார்.

வவ.14-15: எதிரிகளின் பலத்தை வர்ணித்த ஆசிரியர் தன்னுடைய பலவீனத்தை பலமான உருவங்கள் வாயிலாக ஒப்பிடுகிறார்.
அ. கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன் (כַּמַּיִם נִשְׁפַּכְתִּי֮): கொட்டப்பட்ட நீரை மீளவும் பெறமுடியாது அதனைப் போல் தன்னிலை என்கிறார்.
ஆ. எலும்புகள் கழன்றுபோயின (הִתְפָּֽרְדוּ כָּֽל־עַצְמ֫וֹתָי): எலும்புகள் கழன்றால் உடல் இயங்காது அத்தோடு அது தாங்க முடியா துன்பத்தைக் கொடுக்கும்.
இ. இதயம் மெழுகுபோல் உருகிற்று (לִבִּי כַּדּוֹנָג): உருகிய மெழுகு தன் உருவத்தையும் வடிவத்தையும் இழக்கும், அதனால் ஒளிகொடுக்க முடியாது.
ஈ. ஓடுபோல் காய்ந்த வலிமை (יָ֘בֵ֤שׁ כַּחֶ֨רֶשׂ כֹּחִ֗י): சில மூல பிரதிகள் இந்த 'வலிமையை' மேல் நாக்கு என்று வாசிக்கின்றன. காய்ந்த வலிமையினாலும், காய்ந்த மேல் நாக்கு ஓட்டினாலும் எந்த பயனுமில்லை என்பதுதான் ஆசிரியரின் புலம்பல்.
உ. நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது (לְשׁוֹנִי מֻדְבָּ֣ק מַלְקוֹחָ֑י): அசையாத நாக்கினால் உச்சரிக்க முடியாது.
ஊ. சாவின் புழுதியிலே போடப்பட்டார் (לַעֲפַר־מָ֥וֶת תִּשְׁפְּתֵֽנִי): புழுதி, சாவு மற்றும் அசுத்தத்தைக் குறிக்கும் சாதாரண அடையாளம்.
வவ.16-18: இந்த இரண்டு வரிகளும் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை அப்படியே வர்ணிப்பது போல உள்ளன. ஆசிரியர் தன்னுடைய துன்பமான நிலையை மீளவும் காட்ட முயற்;ச்சிக்கின்றார். தீமை செய்பவர்களை நாய்கள் கூட்டத்திற்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர் (כִּ֥י סְבָבוּנִי כְּלָ֫בִים). விவிலியம் நாய்களை அசுத்தமான மற்றும் தீமையான விலங்காக வர்ணித்தாலும், புதைபொருள் ஆய்வுகள், நாய்கள் வீட்டுப்பிராணிகளாக பாலஸ்தீனாவிலே வளர்கப்பட்டிருந்ததைக் காட்டுகின்றன. இருப்பினும் நகர்ப்புறங்கள் மற்றும் வீதியோரங்களில் கூட்டமாக திரிந்த கட்டாக்காலி நாய்கள் சில வேளைகளில் மனித உடல்களையும் தின்றன. இது மிகவும் பயங்கரமான காட்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் நாய் இவருக்கு மிகவும் அருவருப்பான மற்றும் அசிங்கமான விலங்காக பார்க்கப்படுகிறது. தன் கைகளும் கால்களும் துளைக்கப்படுகின்றன என்கிறார், நற்செய்தியாளர்கள் இதனை இயேசுவின் சிலுவை அறைதலுக்கு ஒப்பிடுகின்றனர். தன்னுடைய எலும்புகளை எண்ணிவிடலாம் என்று தன்னுடைய உடலின் மெலிவை வறுமையாக காட்டுகிறார். 18வது வரி நற்செய்தியில் உரோமைய பாடைவீரர்கள் இயேசுவின் உடைகளை பங்கிட்டதை நினைவூட்டுகின்றது (மத் 27,35: மாற் 15,24: லூக் 23,34: யோவா 19,24).

வவ.19-21: இந்த திருப்பாடலின் முதலாவது பிரிவில், இந்த வரிகள் இறுதி வேண்டுதல்களாக அமைகின்றன. ஆண்டவரை தன்னருகில் இருக்கும்படிக் கேட்கிறார், அதாவது ஆண்டவர் தொலைவில் போவது, அடியானுக்கு ஆபத்தானது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். ஆண்டவருக்கு 'தன்னுடைய பலம்' (אֱיָלוּתִ֗י) என்று அழகான பெயரை சூட்டுகிறார். வாளுக்கு இரையாகாத படி தன்னைக் காப்பற்றக் கேட்பது, இந்த பாடலுக்கு இராணுவ சாயம் பூசுவது போல இருக்கிறது. ஏற்கனவே தன் எதிரிகளுக்கு நாய் (כֶּ֗לֶב), சிங்கம் (אַרְיֵה), எருமை (רְאֵם) என்று பெயர் வைத்தவர் அதனை மீண்டும் நினைவூட்டுகிறார்.

மேலுள்ள 21(22) வரிகளில் தன்னுடைய புலம்பலை பாடிய ஆசிரியர் இனிவருகின்ற பத்து வரிகளில் கடவுளை புகழந்து பாடுவதற்கு முயற்சி செய்கிறார்.

வ.22: ஆசிரியர், தன் கடவுளின் பெயரை தன்னுடைய சகோதரர்களுக்கு அறிவிப்பதாகச் சொல்கிறார். கடவுளின் பெயர் எனப்படுவது, கடவுளின் மாட்சியையே குறிக்கிறது (אֲסַפְּרָה שִׁמְךָ לְאֶחָי), கடவுளின் பெயரை அறிவிப்பது கடவுளை அறிவிப்பதற்கு சமனாகும். இங்கே சகோதரர்கள் என்போர் இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தினரையே குறிக்கின்றனர். இந்த சிந்தனையை, இந்த வரியின் இரண்டாம் பாகம், 'சபை' קָהָל என்று வரைவிலக்கணப்படுத்துகின்றது. இந்த சபையும் (கஹால்) இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தையே குறிக்கிறது. திருச்சபையை ஒரு சபையாக இறையியல் படுத்துவதற்கு இந்த சொல்தான் பின்புலம்.

வ.23: இந்த சபையினர் யாவர் என்று பெயரிடுகின்றார். இஸ்ராயேல் சமூகத்தின் அழகான பெயர்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:

அ. ஆண்டவருக்கு அஞ்சுவோர் (יִרְאֵ֤י יְהוָ֨ה).

ஆ. யாக்கோபிக் மரபினர் (כָּל־זֶ֣רַע יַעֲקֹ֣ב).

இ. இஸ்ராயேல் மரபினர் (כָּל־זֶ֥רַע יִשְׂרָאֵֽל).

வவ.24-25: ஏன் இஸ்ராயேல் சமூகம் கடவுளை புகழ்ந்து பாடவேண்டும் என்பது இந்த வரியில் விளக்கப்படுகிறது. கடவுள் எளியோரை அற்பமானவர்களாக எண்ணாதவர், அவர்களை கவனிப்பவர், அவர்களுக்கு தன் முகத்தை மறைக்காதவர், அத்தோடு அவர்களுக்கு செவிசாய்க்கிறவர். இந்த புகழ்ச்சிகளை எல்லாம் ஆசிரியர் தான் தன்னுடைய மாபெரும் சபையாகிய அதாவது இஸ்ராயேல் இனத்திடமிருந்தே செய்வதாக சொல்கிறர்.

வவ.26-27: இந்த வரிகளில் வருகின்ற எளியோர் மற்றும் ஆண்டவரை நாடுவோர்கள், என்றும் வாழ்வார்கள் என சொல்லப்படுகிறார்கள். யார் இவர்கள், இஸ்ராயேல் மக்களா அல்லது இஸ்ராயேல் மக்கள் அல்லாதவர்களாக என்ற கேள்வி எழுகின்றனது. ஆனால் 27வது வரி, ஆசிரியர் உலகின் அனைத்து மக்களையும் உள்வாங்கி பாடுகிறார் என்பதை தெளிவாக காட்டுவது போல உள்ளது.

வவ.28-29: இந்த வரிகள் இந்த கருதுகோளை இன்னும் தெளிவாக்குகின்றது. அரசு ஆண்டவருக்குரியது என்று ஆசிரியர் சொல்வதிலிருந்து (לַיהוָה הַמְּלוּכָה), ஆண்டவருக்கு பிரிவினைவாதம் கிடையாது அத்தோடு அனைவரும் அவர் மக்கள் என்பது புலானகிறது. செல்வர்களாக இருந்தாலும் சரி எதுவும் இல்லாத வறியவர்களாக இருந்தாலும் சரி அவர்களும் ஆண்டவரின் புகழ்ச்சிக்குள்ளும் வழிபாடுகளுக்குள்ளும் உள்வாங்கப்படுகிறார்கள். மண்ணின் செல்வர்களைக் குறிக்க (דִּשְׁנֵי־אֶ֗רֶץ) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது உணவுண்டு கொழுத்தவர்களைக் குறிக்கும். இவர்களுக்கு எதிர்பதமாக கல்லறைகளில் வாழ்பவர்கள் காட்டப்படுகிறார்கள். இவர்களைக் குறிக்க கோல் யோர்தே அபார் (כָּל־יוֹרְדֵי עָפָר) என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது, இது புழுதிக்குள் இறங்குபவர்களைக் குறிக்கும்.

வவ.30-31: இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்களைப் பற்றி பாடிய ஆசிரியர் இந்த வரிகளில் இனி இருக்கப்போகும் எதிர்கால சந்ததியினரைப் பற்றி வசனிக்கிறார். எதிர்கால தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி சொல்லப்படும் என்கிறார் ஆசிரியர் (זֶ֥רַע יַֽעַבְדֶ֑נּוּ יְסֻפַּ֖ר לַֽאדֹנָ֣י לַדּֽוֹר׃). இனி பிறக்கப் போகும் தலைமுறையும் (לְעַ֥ם נ֝וֹלָ֗ד), ஆண்டவரின் செயல்களை அறிந்துகொள்ளும் என்கிறார்.



இரண்டாம் வாசகம்
பிலிப்பியர் 2,6-11

6கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 7ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 9எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். 10ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; 11தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

பவுலுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த இந்த பிலிப்பிய திருச்சபை சில ஆபத்துக்களை சந்தித்தது, அவற்றில் வளர்ந்து வரும் பிரிவினை வாதம், யூத ஆணவம், தலைவர்களின் மமதை, தாழ்ச்சியைப் பற்றிய தவறான கருத்துக்கள் மற்றும் இயேசுவை பற்றிய சில பிழையான போதனைகள் போன்றவை மிக முக்கியமானதாக அமைந்தது. இதனை சரிப்படுத்த பவுல் இந்த திருமுகத்தை பயன்படுத்துகிறார் எனலாம். பிலிப்பிய சமுதாயம் மகிழ்ச்சியில் வாழவேண்டும் என்றால் அது தாழ்ச்சியில் வாழவேண்டும் என்பதில் பவுல் கவனமாக இருந்தார். யாருடைய தாழ்ச்சியை இவர்களுக்கு முன்னுதாரணமாக காட்டுவது என்ற தேடலில், அவர் இறுதியாக ஆண்டவர் இயேசுவின் தாழ்ச்சியையே இங்கே உதாரணமாக எடுக்கிறார். இந்த பகுதியை, ஆய்வாளர்கள், ஆரம்ப கால திருச்சசபையின் ஒரு வழிபாட்டு பாடலாக இருந்திருக்க வேண்டும் என்று வாதாடுகின்றனர். இதன் வார்த்தைகளை கவனமாக ஆய்வு செய்வதன் வாயிலாக ஆரம்பகால திருச்சபை கிறிஸ்துவைப் பற்றி கொண்டிருந்த நம்பிக்கைகளை காணலாம்.

வ.6: கிறிஸ்து கடவுள் வடிவில் விளங்கினார் (ὃς ἐν μορφῇ θεοῦ ὑπάρχων). கிறிஸ்து கடவுளின் உருவம் மட்டுமல்ல, அவர் உன்னதமான மனிதர் மட்டுமல்ல, கடவுளின் மகன் மட்டுமல்ல அவற்றிக்கும் மேலாக அவர் உண்மையாக கடவுளாக இருந்தார். அத்தோடு கடவுளாக இருக்கும் நிலையை அவர் வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டிய தேவையிலும் இருக்கவில்லை. தன் மக்களுக்காக இந்த கடவுள் எதையோ செய்ய முன்வருகிறார். கிரேக்க சிந்தனைக்கு இது மிக வித்தியாசமாக அமையும். கிரேக்க தெய்வங்கள் தங்களுடைய நிலையை தக்கவைக்க போர்களை செய்ததாகவும், புரட்சிகளை செய்ததாகவும் கிரேக்க புராணக் கதைகள் சொல்கின்றன. ஆனால் உண்மைக் கடவுளாக இயேசு தன் மக்களுக்காக தனது கடவுள் தன்மையையும் வேறு விதத்தில் பாவிக்கின்றார் என்று பவுல் சொல்வது அழகாக இருக்கிறது.

வ.7: தம்மையே வெறுமையாக்கினார் அடிமையின் வடிவை ஏற்றார் (ἑαυτὸν ἐκένωσεν μορφὴν δούλου λαβών). தங்களுடைய யூத பிறப்பையும், அல்லது கிறிஸ்தவ அழைப்பையும் பெருமையாக கருதிய பிலிப்பிய சில கிறிஸ்தவர்களுக்கு பவுல் சவுக்கடி கொடுக்கிறார். அடிமையின் வடிவை யாரும் ஏற்க் மாட்டார்கள் ஆனால் இயேசு அதனைத்தான் செய்தார் ஆக கிறிஸ்தவர்களும் தங்கள் ஆண்டவரை பின்பற்ற வேண்டும் என்பதுதான் இங்கே பவுலின் செய்தி. கிறிஸ்து மனித உருவில் தோன்றி மனிதருக்கு ஒப்பானார் என்று பவுல் சொல்வது பல செய்திகளை பின்புலமாகக் கொண்டுள்ளது. கிறிஸ்து ஒரு சாதாரண மனிதர் அல்ல அவர் இந்த சாயலையும், தோற்றத்தையும் விரும்பியே பெறுகிறார் என்ற செய்தியும் இதன் பின்னால் மறைந்துள்ளன.

வ.8: கிறிஸ்துவின் தாழ்ச்சியின் பலம் இங்கே காட்டப்படுகிறது. கடவுளால் மரணிக்க முடியா? இது ஒரு முக்கியமான கேள்வி. மரணம் அக்காலத்தில் தோல்வியின் அடையாளமாக கருதப்பட்ட வேளையில் கடவுள் மரணத்தை தழுவ முன்வருகிறார் அதுவும் சிலுவை சாவை (θανάτου δὲ σταυροῦ) ஏற்கும் அளவிற்கு முன்வருகிறார். சிலுவை சாவு உரோயைருக்கு மடமை, யூதருக்கு சாபம். உரோமையர்கள் இந்த தண்டனையை சட்டமில்லாதவர்கள், உரோமையர் அல்லாதவர்கள், புரட்ச்சிக்காரர்கள், ஆபத்தான குற்றவாளிகள் என்று தாங்கள் கருதியவர்களுக்கு கொடுத்தனர், அதே வேளை இந்த தண்டனையை பெறுகிறவாகள் கடவுளால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சபிக்கப்பட்டவர்கள் என யூதர்கள் கருதினார்கள். இந்த சிந்தனைகள் பலமாக இருக்கின்ற வேளையில்தான், இங்கே கடவுளே முன்வந்து சிலுவை சாவை ஏற்று, இப்படியான சிந்தனைகள் உண்மையல்ல என்பதையும், தாழ்ச்சிதான் உண்மையான பலம் என்பதையும் காட்டுகிறார் (இ.ச 21,23: 1கொரிந் 1,8).

வ.9: கடவுள் இயேசுவிற்கு செய்த கைமாறை விளக்குகிறார். எனவே கடவுளும் அவரை உயர்த்தினார் என்பது (διὸ καὶ ὁ θεὸς αὐτὸν ὑπερύψωσεν), ஆண்டவர் இயேசுவின் மெசியாத்துவத்தினுள் அவரை கடவுள் உயர்த்தியது ஓர் அங்கம் என புலப்படுகிறது. அத்தோடு இயேசுவினுடைய வருகை, பாடுகள் மற்றும் உயிர்ப்பினுடன் கடவள் இணைந்திருக்கிறார் என பவுல் காட்டுகிறார். இதனால் இயேசுவை மறுதலிப்பவர்கள் கடவுளை மறுதலிப்பவர்கள் ஆகின்றனர்.

வ.10: இந்த வரி மானிட குலம் மற்றும் இறையரசின் மக்கள் கூட்டத்தை நினைவுபடுத்துகின்றது. மூன்று விதமான மக்கள் கூட்டத்தை பற்றி பேசுகிறார் பவுல்.

அ. மேலுலகோர்- விண்ணவர் (ἐπουράνιος எபுரானியோஸ்): இது பரலோக வாசிகளைக் குறிக்கிறது. இவர்கள் யார் என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. கிரேக்க சிந்தனையில் இதற்க்குள் கடவுள், வானதூதர்கள், தூயவர்கள் அத்தோடு கதிரவன், சந்திரன் நட்சத்திரங்கள் போன்றவை உள்ளடங்குகின்றன. எபிரேய சிந்தனையில் இதற்க்குள், கடவுள், செரூபீன்கள், செராபீன்கள் போன்றவை உள்ளடங்குகின்றன. பவுல் இந்த இரண்டு சிந்தனைகளையும் உள்ளடக்குகிறார் என எண்ணத்தோன்றுகின்றது. காலத்திற்கு காலம் இந்த வானவர்கள் பற்றிய சிந்தனை மாற்றம் பெற்றுக்கொண்டு வந்துள்ளது.

ஆ. மண்ணுலகோர்- மண்ணவர் (ἐπίγειος எபிகெய்யோஸ்): விவிலிய மற்றும் கிரேக்க மெய்யிலின் படி இந்த சொல் பூமியில் வாழ்கிறவர்களைக் குறிக்கின்றது. இவர்கள் காணக்கூடிய உடலைக் (σῶμα சோமா-உடல்) கொண்டவர்கள். இவர்கள் பரலோக வாசிகள் அல்லர். இவர்கள் உடலின் உணர்வுகள், ஆசைகள் மற்றும் துன்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்களுடைய ஞானம் மட்டுப்படுத்தப்பட்டது அது தவறிழைக்கக்கூடியது. கிறிஸ்தவ சிந்தனையை விட, கிரேக்க சிந்தனையின் படி, முக்கியமாக பிளேடோட்வின் சிந்தனைப்படி இவர்கள் எப்போதும் குறைவானவர்கள் என கருதப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்தவ மெய்யியல் அப்படியான வாதத்தை முன்வைக்கவில்லை.

இ. கீழுலகோர் (καταχθόνιος கடாக்தோனியோஸ்): கிறிஸ்தவ கால கிரேக்க சிந்தனை, இவர்களை இறந்து கீழுலகில் அதாவது நரகத்தில் வாழ்கிறவர்கள் என சொல்கிறது. கிறிஸ்தவம் இவர்களை நரகத்தில் வாடுகிறவர்களைக் குறிக்கிறது. இவர்களைப் பற்றி எபிரேய மற்றும் யூத சிந்தனைகள் வித்தியாசமானவை. யூதர்கள் நரகம் என்னும் எண்ணக்கருவை ஆரம்ப காலத்தில் கொண்டிருக்கவில்லை, ஆனால் இறப்பிற்கு பின் மனிதர்கள் சீயோல் என்ற ஆதாளபாதாளத்திற்கு செல்கிறார்கள் என்ற எண்ணம் இவர்களிடம் இருந்திருக்கிறது. கிரேக்கருடைய காலத்தில், இந்த யூதர்களின் சிந்தனையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதை இணைத்திருமுறை நூல்களில் காணலாம்.

இப்படியான மூவுலக வாசிகளும் இயேசுவின் பெயருக்கு மண்டியிடுவர் என்று சொல்லி, ஆண்டவரை அனைவருக்கும் அதிபதியாக்குகிறார் பவுல்.

வ.11: இந்த வரி மிகவும் இறையியல் ஆழம் கொண்டது. இயேசுவே ஆண்டவர் அத்தோடு அவரை இப்படி சொல்வது தந்தையாகிய கடவுளின் மாட்ச்சிக்காகவே. (πᾶσα γλῶσσα ⸀ἐξομολογήσηται ὅτι ⸂κύριος Ἰησοῦς Χριστὸς⸃ εἰς δόξαν θεοῦ πατρός.) எல்லா நாவுகளும், அதாவது பேசக்கூடியவர்கள் எல்லோரும் இதனை செய்கிறார்கள். இயேசுவை ஆண்டவர் என்று ஏற்பதும் ஆண்டவரை மாட்சிப்படுத்துவதும் ஒன்றோடோன்று தொடர்புபட்டது. இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிடாதவர்கள், தந்தையாம் கடவுளை மகிமைபடுத்தாதவர்கள் அதாவது அவவிசுவாசிகள் என்பது பவுல் ஆழமான கருத்து.


நற்செய்தி வாசகம்
மத்தேயு 26,14-27,66

காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்

(மாற் 14:10 - 11; லூக் 22:3 - 6)

14பின்னர் பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 15'இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?' என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். 16அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்

(மாற் 14:12 - 16; லூக் 22:7 - 14)

17புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, 'நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' என்று கேட்டார்கள். 18இயேசு அவர்களிடம், 'நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், 'எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்' எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்' என்றார். 19இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல்

(மாற் 14:17 - 21; லூக் 22:21 - 23; யோவா 13:21 - 30)

20மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். 21அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார். 22அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், 'ஆண்டவரே, அது நானோ?' என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். 23அதற்கு அவர், 'என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். 24மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்' என்றார். 25அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் 'ரபி, நானோ?' என அவரிடம் கேட்க இயேசு, 'நீயே சொல்லிவிட்டாய்' என்றார்.

ஆண்டவரின் திருவிருந்து

(மாற் 14:22 - 26; லூக் 22:15 - 20; 1கொரி 11:23 - 25)

26அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, 'இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்' என்றார். 27பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, 'இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; 28ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். 29இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார். 30அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்

(மாற் 14:27 - 31; லூக் 22:31 - 34; யோவா 13:36 - 38)

31அதன்பின்பு இயேசு அவர்களிடம், 'இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் 'ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. 32நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்' என்றார். 33அதற்குப் பேதுரு அவரிடம், 'எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்' என்றார். 34இயேசு அவரிடம், 'இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்' என்றார். 35பேதுரு அவரிடம், 'நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்' என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு

(மாற் 14:32 - 42; லூக் 22:39 - 46)

36பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், 'நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்' என்று அவர்களிடம் கூறி, 37பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். 38அவர், 'எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்' என்று அவர்களிடம் கூறினார். 39பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, 'என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்' என்று கூறி இறைவனிடம் வேண்டினார். 40அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், 'ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? 41உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்' என்றார். 42மீண்டும் சென்று, 'என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்' என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 43அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. 44அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 45பிறகு சீடர்களிடம் வந்து, 'இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். 46எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்' என்று கூறினார்.

இயேசுவைக் காட்டிக்கொடுத்தலும் கைது செய்தலும்

(மாற் 14:43 - 50; லூக் 22:47 - 53; யோவா 18:3 - 12)

47இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது. 48அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், 'நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்; என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 49அவன் நேராக இயேசுவிடம் சென்று, 'ரபி வாழ்க' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். 50இயேசு அவனிடம், 'தோழா, எதற்காக வந்தாய்?' என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். 51உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். 52அப்பொழுது இயேசு அவரிடம், 'உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். 53நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. 54அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?' என்றார். 55அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, 'கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; 56இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன' என்றார். அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.

தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு

(மாற் 14:53 - 65; லூக் 22:54 - 55; 63 - 71; யோவா 18:13 - 14, 19 - 24)

57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். 58பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார். 59தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். 60பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். 61அவர்கள், 'இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்' என்று கூறினார்கள். 62அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், 'இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?' என்று கேட்டார். 63ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், 'நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்' என்றார். 64அதற்கு இயேசு, 'நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார். 65உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, 'இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. 66நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'இவன் சாக வேண்டியவன்' எனப் பதிலளித்தார்கள். 67பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 68'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்' என்று கேட்டனர்.

பேதுரு மறுதலித்தல்

(மாற் 14:66 - 72; லூக் 22:56 - 62; யோவா 18:15 - 18, 25 - 27)

69பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, 'நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே' என்றார். 70அவரோ, 'நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை' என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். 71அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, 'இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்' என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். 72ஆனால் பேதுரு, 'இம்மனிதனை எனக்குத் தெரியாது' என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். 73சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, 'உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது' என்று கூறினார்கள். 74அப்பொழுது அவர், 'இந்த மனிதனை எனக்குத் தெரியாது' என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. 75அப்பொழுது, 'சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்

(மாற் 15:1; லூக் 23:1 - 2; யோவா 18:28 - 32)

1பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். 2அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். யூதாசின் தற்கொலை (திப 1:18 - 19) 3அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, 4'பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்' என்றான். அதற்கு அவர்கள், 'அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்' என்றார்கள். 5அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான். 6தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, 'இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல' என்று சொல்லி, 7கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். 8இதனால்தான் அந்நிலம் 'இரத்த நிலம்' என இன்றுவரை அழைக்கப்படுகிறது. 9-10'இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.

இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்

(மாற் 15:2 - 5; லூக் 23:3 - 5; யோவா 18:33 - 38)

11இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, 'நீ யூதரின் அரசனா?' என்று கேட்டான். அதற்கு இயேசு, 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' என்று கூறினார். 12மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. 13பின்பு பிலாத்து அவரிடம், 'உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?' என்றான். 14அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.

இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்

(மாற் 15:6 - 15; லூக் 23:13 - 25; யோவா 18:39 - 19:16)

15மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். 16அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். 17மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், 'நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?' என்று கேட்டான். 18ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும். 19பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, 'அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்' என்று கூறினார். 20ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். 21ஆளுநன் அவர்களைப் பார்த்து, 'இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன?' எனக் கேட்டான். அதற்கு அவர்கள் 'பரபாவை' என்றார்கள். 22பிலாத்து அவர்களிடம், 'அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டான். அனைவரும், 'சிலுவையில் அறையும்' என்று பதிலளித்தனர். 23அதற்கு அவன், 'இவன் செய்த குற்றம் என்ன?' என்று கேட்டான். அவர்களோ, 'சிலுவையில் அறையும்' என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். 24பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, 'இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். 25அதற்கு மக்கள் அனைவரும், 'இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்' என்று பதில் கூறினர். 26அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்

(மாற் 15:16 - 20; யோவா 19:2 - 3)

27ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; 28அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். 29அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, 'யூதரின் அரசரே, வாழ்க!' என்று சொல்லி ஏளனம் செய்தனர்; 30அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; 31அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.

இயேசுவைச் சிலுவையில் அறைதல்

(மாற் 15:21 - 32; லூக் 23:26 - 43; யோவா 19:17 - 27)

32அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். 33'மண்டையோட்டு இடம்' என்று பொருள்படும் 'கொல்கொதா'வுக்கு வந்தார்கள்; 34இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை. 35அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்; 36பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; 37அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் 'இவன் யூதரின் அரசனாகிய இயேசு' என்று எழுதப்பட்டிருந்தது. 38அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். 39அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, 'கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். 40நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா' என்று அவரைப் பழித்துரைத்தார்கள். 41அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். 42அவர்கள், 'பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். 43கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். 'நான் இறைமகன்' என்றானே!' என்று கூறினார்கள். 44அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.

இயேசு உயிர்விடுதல்

(மாற் 15:33 - 41; லூக் 23:44 - 49; யோவா 19:28 - 30)

45நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. 46மூன்று மணியளவில் இயேசு, 'ஏலி, ஏலி லெமா சபக்தானி?' அதாவது, 'என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?' என்று உரத்த குரலில் கத்தினார். 47அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, 'இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்' என்றனர். 48உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். 49மற்றவர்களோ, 'பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்'⁕ என்றார்கள். 50இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார். 51அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. 52கல்லறைகள் திறந்தன் இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. 53இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். 54நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, 'இவர் உண்மையாகவே இறைமகன்' என்றார்கள். 55கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். 56அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.

இயேசுவின் அடக்கம்

(மாற் 15:42 - 47; லூக் 23:50 - 56; யோவா 19:38 - 42)

57மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். 58அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். 59யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, 60தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். 61அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.

கல்லறைக்குக் காவல்

62மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். 63அவர்கள், 'ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது 'மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. 64ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, 'இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்' என்றனர். 65அதற்குப் பிலாத்து அவர்களிடம், 'உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்' என்றார். 66அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.



இந்த ஆண்டின் குருத்தோலை ஞாயிறு, ஆண்டவரின் பாடுகளின் வரலாறு மத்தேயுவின் நற்செய்திப்படி எடுக்கப்பட்டுள்ளது. மத்தேயு நற்செய்தியின் சிறப்பம்சங்கள் மற்றும் விசேட நோக்கங்கள் இந்த பாடுகளின் வரலாற்றை அழகுபடுத்துகின்றன. மத்தேயுவின் நோக்கத்தின் படி, இயேசு புதிய மோசே, அவர்தான் மெசியா அத்தோடு அவர்தான் தாவிதின் உண்மையான வாரிசு. அத்தோடு கடவுள், ஆபிராகமிற்கு வாக்களித்தவை இயேசுவில்தான் நிறைவு பெறுகிறது. மத்தேயு நற்செய்தியில் காணப்படும் சில முக்கியமான காட்சிகள்.

௧. யூத தலைமைகள் இயேசுவை கொலை செய்ய திட்டமிடுகிறது (26,1-5). இதற்கு தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும் காரணமாகிறார்கள்.

௨. பெத்தானியாவில் இயேசுவை பெண்னொருவர் எண்ணெய்யால் கழுவுகிறார், இந்த பெண் பாவியான பெண்ணல்ல (26,6-13).

௩. யூதாசு இஸ்கரியோத்து இயேசுவை காட்டிக்கொடுக்கத் திட்டமிடுகிறார் (26,14-16).

௪. சீடர்கள் பாஸ்கா விழாவிற்கு ஆயத்தம் செய்கிறார்கள் (26,17-20).

௫. இயேசு பேதுருவின் மறுதலிப்பை முன்னுரைக்கிறார் (26,30-35).

௬. இயேசு கெத்சமெனியில் செபிக்கிறார் (26,36-46).

௭. யூதாசின் வருகையும் இயேசுவின் கைதும் (26,47-56).

௮. இயேசு கைபாசினால் விசாரணைக்கு உட்படுகிறார் (26,57-68).

௯. பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார் (26,69-75).

௰. இயேசு தீர்ப்பிடப்பட்டு பிலாத்துவிடம் கொண்டுசெல்லப்படுகிறார் (27,1-2).

௰௧. யூதாசின் மரணம் (27,3-10).

௰௨. இயேசு பிலாத்துவினால் விசாரிக்கப்படுகிறார் (27,11-23).

௰௩. இயேசு தண்டனை கொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார் (27,24-31).

௰௪. இயேசு சிலுவையில் அறையப்படுகிறார் (27,32-37)

௰௫. இயேசுவின் மரணத்தின் தாக்கம் (27,51-56).

௰௬. இயேசுவின் அடக்கமும் யூதர்களின் கவலையும் (27,57-66).

மத்தேயு நற்செய்திப்படி இயேசுவின் பாடுகளின் சுருக்கம்:

௧. இயேசுவின் நிலை:

இயேசு பலமாக துன்புறுத்தப்படுகிறார், இயேசு தாவீதின் மகன் என காட்டப்படுகிறார், மோசேயைப்போல இயேசு நேரிய ஆசிரியராக தன் மக்களுக்கும் சீடர்களுக்கும் பிரமாணிக்கமாயிருக்கிறார், இயேசுவை தன் மகனென கடவுள் அடையாளங்கள் வழியாக காட்டுகிறார்.

௨. பாடுகளின் வரலாற்றில் வரும் பாத்திரங்கள்:

கயபாவும் பிலாத்துவும் - அதிகாரத்தை பற்றியே எண்ணுபவர்கள் யூதாசும் பேதுருவும் - காட்டிக்கொடுப்பவரும் மறுதலிப்பவரும், இரண்டு பேரும் வேதனையடைகின்றனர் மற்றைய ஆண் சீடர்கள் - பெரிதாக காட்டப்படவில்லை, தப்பி ஓடுகின்றனர் மகதலா மரியாவும், மற்றைய பெண் சீடர்களும் - பிரமாணிக்மாயிருக்கின்றனர், ஓடாதவர்கள் அரிமத்தியா யோசேப்பு - திடமுள்ள சீடர், நற்செயல் செய்கிறார்

௩. மத்தேயு மாற்கு நற்செய்தியில் இல்லாமல் மற்றைய நற்செய்திகளில் இருப்பவை:

௩.௧. லூக்காவில்:

இறுதி இராவுணவில் இயேசு நீண்ட உரையாற்றுகிறார், இயேசு யூத தலைமைச் சங்கத்தினால் விசாரிக்கப்படுகிறார், இயேசு ஏரோதுவினால் விசாரிக்கப்படுகிறார், பிலாத்து இயேசு குற்றமற்றவர் என வாதாடுகிறான், இயேசு தன் கல்வாரிப் பயணத்தில் பெண்களோடு பேசுகிறார், இயேசு தன்னை சிலுவையில் அறைகிறவர்களை மன்னிக்கிறார், மனந்திருப்பிய கள்வனோடு இயேசு பேசுகிறார்.

௩.௨. யோவானில் மட்டும்:

இறுதி இராவுணவில் இயேசு நீண்ட உரையாற்றுகிறார், இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவுகிறார், இயேசு தந்தையை நோக்கி நீண்ட செபம் செய்கிறார், பிலாத்து இயேசு குற்றமற்றவர் என வாதாடுகிறான் அத்தோடு இயேசு பிலாத்துவினால் நீண்ட நேரம் விசாரிக்கப்படுகிறார், இயேசு சிலுவையிலே முக்கியமான வார்த்தைகளை உதிர்க்கிறார், இறப்பின் பின்னர் அவரது விலா குத்தப்படுகிறது ஆனால் எலும்புகள் தாக்கப்படவில்லை.

விளக்கவுரை:

கடவுள்கெதிராக மனிதரின் சதி: (வவ 1-5)

மத்தேயு நற்செய்தியின் 25ம் அதிகாரத்தின் இறுதி பகுதியில் இயேசு இறுதித் தீர்ப்பைப் பற்றி பேசுகிறார் அதன் பின்னரே தன்னுடைய முடிவு நாட்களைப் பற்றி பேசுகிறார். இயேசு தான் ஒரு உண்மையான யூதன் என்பதை பல வேளைகளில் காட்டியுள்ளார். மத்தேயு நற்செய்தியில் இது மிகவும் முக்கியமான ஒரு நோக்கம். இந்த வரிகளில் அவர் பாஸ்கா விழாவைப்பற்றி நன்கு அறிந்திருக்கிறார் அத்தோடு அதனை கொண்டாட விருப்பமாக இருந்தார் என்பதை மத்தேயு காட்டுகிறார். பாஸ்கா (πάσχα), இஸ்ராயேல் மக்களுக்கு தங்களது விடுதலைப் பயண அனுபவத்ததை அத்தோடு கடவுளின் ஆசீரை நினைவுபதும் ஒரு முக்கியமான விழா. இதனை அவர்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடினார்கள். இது நிசான் மாதத்தின் (சித்திரை-எப்ரல்) 14ம் நாள் தொடக்கம் 20ம் நாள்வரை நீண்டு செல்லும். மத்தேயு இந்த பாஸ்காவிற்கும் இயேசுவின் பாடுகளுக்கும் தொடர்பை உண்டாக்க நினைக்கிறார் என்பது புலப்படுகிறது.

தொடக்கத்திலிருந்தே இயேசுவை தொலைக்க சூழ்ச்சியாக முயன்றவர்களில் தலைமைக் குருக்கள், மூப்பர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் முக்கியமானவர்கள் என மத்தேயு காட்டுகிறார். இப்போது இந்த குழுவுடன் கயபா இணைகிறார், இவர் இந்த காலத்தில் தலைமைக் குருவாக இருந்தவர். இவர்கள் இயேசுவை தொலைக்க நினைத்தாலும், மக்களின் கலகத்திற்கு அஞ்சுகிறார்கள். உரோமையர்கள், மக்கள் கலகம் செய்தால் கடுமையான இராணுவ நடவடிக்கையை எடுத்தார்கள். இதனை இவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

தூய தலையில் எண்ணெய் அபிசேகம்: (வவ.6-12)

மாற்குவும் யோவானும் இந்த நிகழ்வை வித்தியாசமாகக் காட்டுகின்றனர். இந்த நிகழ்வு பெத்தானியாவில் நடைபெறுகிறது. இந்த பெத்தானியாவில்தான் மரியா, மார்த்தா மற்றும் இலாசர் வாழ்ந்து வந்தனர் (யோவான் 12,3). பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் வீட்டில் ஆண்டவர் இருக்கிறார், ஆக மத்தேயுவின் ஆண்டவர் நோயாளிகளின் ஆண்டவர். இங்கே பெண்ணொருவர் இயேசுவின் பாதங்களுக்கு விலையுயர்ந்த நறுமண தைலம் பூசுகிறார் (ἀλάβαστρον μύρου). இந்த நறுமண தைலம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிக விலையுயாந்த பொருள். இங்கே இயேசுவின் தலையில் எண்ணெய் தடவுகிறார், இதற்கு கிரேக்க விவிலியம் திருமுழுக்கு என்ற சொல்லை பாவிக்கின்றது (βαρυτίμου καὶ κατέχεεν ἐπὶ ⸂τῆς κεφαλῆς). மத்தேயு இதனை அடையாளமாக பார்க்கிறார். இந்த பெண் யார் என்று தெரியவில்லை. இலாசரின் சகோதரி மரியாவாக இருக்கலாம். சீடர்கள் பணத்தின் பொறுமையை உணர்ந்து கோபமடைகின்றனர். ஏழைகளை முன்நிறுத்துவதாக நடிக்கின்றனர். இந்த சீடர்கள் யார் என்று தெரியவில்லை. வேறு நற்செய்தியில் இதனை சொல்பவர் யூதாசு இஸ்கரியோத்து. ஆனால் இயேசு இந்த பெண்ணின் செயலை அன்பின் செயல் அடையாளமாக மெச்சுகிறார் (அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்). ஆண்டவர், ஏழ்மை தவிர்க்க முடியாத ஒரு கொடுமை அது தொடர்ந்து இருக்கப்போகிறது அதாவது மனிதர் ஏழ்மைக்கு எதிராக உண்மையாக முயற்ச்சி செய்ய மாட்டார்கள், ஏழ்மையும் வறுமையும் உலகம் முடியும் வரை இருக்கும். (ஈழ நாட்டிலும் வறுமையையும் ஏழ்மையையும் யுத்தத்தின் விளைவு என்றவர்கள் இன்று புது வியாக்கியானம் செய்கிறார்கள், இவை சுயநலவாதிகளின் மூலதனம்). ஆண்டவர், தான் உடலோடு மனிதர் சாயலில் தொடர்ந்து இருக்கப்போதில்லை என்கிறார். இயேசு ஏழைகளை மட்டம்தட்டுகிறார் என எடுக்கமுடியாது, அத்தோடு இந்த பெண்ணின் செயலை தன் அடக்கத்தோடு ஒப்பிடுகிறார். அதேவேளை இந்த பெண்ணின் செயல் ஒரு நற்செய்தியாக நினைவுகூறப்படும் எண்கிறார், நாமும் இந்த பெண்ணை இன்று 2017இல் நினைவுகூறுகின்றோம் (ἐν ὅλῳ τῷ κόσμῳஇ λαληθήσεται καὶ ὃ ἐποίησεν αὕτη εἰς μνημόσυνον αὐτῆς.).

காட்டிக்கொடுக்கும் அசுத்தமான நட்பு (வவ.14-16).

யூதாசு பன்னிருவருள் ஒருவர் என்பதை மத்தேயுவும் காட்டுகிறார் (εἷς τῶν δώδεκα ὁ λεγόμενος Ἰούδας ⸀Ἰσκαριώτης). இவர்தான் மத்தேயுவில் தலைமைக்குருவிடம் வந்து காட்டிக்கொடுத்தலை முன்னெடுக்கிறார். அதற்கான விலையையும் பேசுகிறார். யூதாசு ஏன் இதனை செய்தார் என்பதற்கு பல விரிவுரைகளை இரண்டாயிரம் ஆண்டுகளாக இறையியலாளர்கள் தருகின்றனர். ஆண்டவருக்கும், நண்பருக்கும், முப்பது வெள்ளிக்காசுகள் என பேரம் பேசப்படுகிறது (τριάκοντα ἀργύρια). இந்த பணம் அக்காலத்தில் தொலைந்த அடிமைக்காக அவர் முதாளிக்கு வழங்கப்பட்ட தொகை (காண்க வி.ப 21,32, ஒப்பிடுக செக் 30,11). யூதாசின் செயல் ஒருநேர செயல் அல்ல, அவர் அதற்காக பல வாய்ப்புக்களை தேடினார் என மத்தேயு காட்டுகிறார். முன்வரியில் வந்த பெண்ணின் அன்புடன் ஒப்பிடுகையில் யூதாசின் அசுத்தமான நட்பு புலப்படுகிறது.

உண்மையான பாஸ்கா ஆயத்தம் (வவ.17-18)

பாஸ்காவையும் யூதர்களையும் பிரிக்க முடியாது, நமக்கு தைப்பொங்கல்; போல. பாஸ்கா விழாவை πάσχα எங்கே கொண்டாட வேண்டும் என்று சீடர்கள் இயேசுவின் மனநிலையை அறிந்து கேட்கிறார்கள். ஏனெனில் இந்த விழாக்காலத்தில் எருசலேம் மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும். இதனால் அவர்கள் முன்கூட்டியே ஆயத்தம் செய்ய விழைகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்ட இந்த பாஸ்கா யூதர்களுக்கு அவர்களின் எகிப்திய விடுதலையை நினைவூட்டியது. அவர்கள் குடும்பமாக மாலைவேளையில் செம்மறி ஆட்டுக்குட்டியை அடித்து இறைச்சியை வாட்டி உண்டார்கள் (காண்க வி.ப 12). குடும்பமாக இதனை செய்தார்கள். இப்போது இந்த புதிய குடுபம், இயேசுவும் அவர் சீடர்களும் அந்த பாரம்பரியத்தை செய்ய முன்வருகிறார்கள். அத்தோடு அவர்கள் புளியாத அப்பத்தையும், கசப்புக் கீரையையும் உண்டார்கள். புளியாத அப்பம் அவசரத்தையும், கசப்புக் கீரை எகிப்பதிய துன்பத்தையும் நினைவூட்டின. (1995 யாழ், 2007 மட்டக்களப்பு, 2009 வன்னி போன்ற ஈழ நாட்டின் அவல இடப்பெயர்வுகள் பத்து வருடங்களுக்குள்ளேயே மறந்து விடுமே என்ற அச்சம் உண்டாகின்றது). யூதர்கள் தங்கள் நினைவுகளில் கவனமாக இருந்தார்கள். இயேசுவும் அதே மனநிலையை கொண்டிருந்தார், பெயர் தெரியாத நண்பரிடம் சீடர்களை அனுப்புகிறார். ஏன் மத்தேயு இந்த நண்பரை 'இன்னார்' (τὸν δεῖνα) என சொல்கிறார் என்பது புலப்படவில்லை.

வெளிப்படும் சூழ்ச்சி (வவ.20-25)

அனதை;தும் ஒருநாள் வெளிப்படும் என்பது இங்கே புலப்படுகிறது. சீடர்களுடன் விருந்துண்ண ஆயத்தமான இயேசு இங்கே பன்னிருவருடன் காட்டப்படுகிறார். பன்னிருவர்தான் சீடர்களா அல்லது சீடர்கள் வெளியில் இருந்தார்களா என்பது தெளிவில்லை. ஆண்டவர் பன்னிருவருள் ஒருவன்தான் காட்டிக்கொடுப்பவன் என்கிறார். எதிரி வெளியில் இல்லை வீட்டில். 'அது நானோ' (μήτι ἐγώ εἰμι) என்ற சீடர்களின் கேள்வி நம் உள்ளத்தையும் தைக்கிறது. அவன் பாத்திரத்தில் உண்பவன் தான் என்ற பதில் மீண்டும் நம்மையும் சுடுகிறது (ὁ ἐμβάψας ⸉μετ᾿ ἐμοῦ). மறைநூல் நிறைவேறுகிறது என்பது மத்தேயுவின் மிக முக்கியமான சிந்தனை இருப்பினும் காட்டிக்கொடுக்கிறவருக்கு என்றுமே கேடு. காட்டிக்கொடுத்தல் மானிட கலாச்சாரத்தில் சாபம். யூதாசின் கேள்விக்கு நேர்முகமாக பதில் கிடைக்கிறது. நீயே சொல்லிவிட்டாய்;' (σὺ εἶπας) என்கிறார் ஆண்டவர்.

பாஸ்காவிற்கே பாஸ்கா (வவ.26-30)

இதுதான் யூதரான இயேசு கொண்டாடிய இறுதியான பாஸ்கா, கிறிஸ்தவர்களுக்கு முதலான பாஸ்கா. நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் செய்யும் செயல்கள் மற்றும் வசீகர செபங்கள் இந்த வரிகளின் நினைவுகளாகும். 'இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்' (λάβετε φάγετεஇ τοῦτό ἐστιν τὸ σῶμά μου.) மற்றும் 'இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம் பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்' (πίετε ἐξ αὐτοῦ πάντες τοῦτο γάρ ἐστιν τὸ αἷμά μου ⸆ τῆς ⸇ διαθήκης τὸ περὶ πολλῶν ἐκχυννόμενον εἰς ἄφεσιν ἁμαρτιῶν.) போன்ற வரிகள் இயேசுவுடைய சொந்த வரிகள். யூதர்கள் ஒவ்வொரு உணவிற்கும் முன் நன்றிசெபத்தை சொல்வார்கள் அதனை பர்கோத் ברכת (ஆசிமொழிகள்) என அழைக்கின்றோம். அதனைத்தான் இயேசுவும் செய்கிறார். இந்த பாஸ்கா புதிய பாஸ்கா இனி இது மீள செய்யப்படாது ஏனெனில் இந்த பாஸ்கா நினைவு மட்டுமல்ல முடியாத பலி. புகழ்பாடல்கள் அநேகமாக திருப்பாடல்களாக இருக்கலாம் பின்னர் இவர்கள் ஒலிவ மலைக்கு செல்கிறார்கள். இது எருசலேமிற்கு மிக அருகில் உள்ளது.

தளபதி பின் முதுகு காட்டுவார் (வவ.31-35).

பேதுரு இயேசுவின் தலைமை திருத்தூதர், தலைமைச் சீடர் என்ற உணர்வு நற்செய்திகளை உன்னிப்பாக வாசித்தால் புலப்படும். கடவுளுக்கு மோசேயைப்போல, மோசேக்கு யோசுவாவைப்போல இயேசுவிற்கு பேதுரு. மத்தேயு நற்செய்தியில் பேதுரு ஒரு முக்கியமான பாத்திரம். இயேசு பேதுருவின் மறுதலிப்பை உணர்த்துகிறார். வழமைபோல மத்தேயு, செக்கரியா 13,7 என்ற இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறதை காட்டுகிறார். மறுதலிப்பும் விட்டுவிட்டு ஓடலும் முடிவல்ல பணிதொடங்கிய கலிலேயாவிலே உயிர்ப்பின் பின் புதுப் பணி தொடங்கும் என்கிறார் ஆண்டவர். பேதுருவின் சுய தைரியம் இங்கேயும் புலப்படுகிறது. தான் மற்றவர்கள் போல் அல்ல என்கிறார். ஆனால் அவர் மூன்றுமுறை தன்னை மறுதலிப்பார் என்கிறார் ஆண்டவர். அதன்பின்தான் சேவல் கூவ விடியல் வரும் என்றும் சொல்கிறார் இயேசு. இருப்பினும் பேதுரு வழமைபோல இயேசுவிற்கே அறிவுரை சொல்கிறார், அவரைப்போல மற்றவர்களும் பதில் சொல்கின்றனர். இந்த வரிகளின் மூலம், சீடர்கள் இயேசுவின் ஆபத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பது புலப்படுத்தப்படுகிறது. இருப்பினும் மத்தேயு பேதுருவையோ மற்றைய சீடர்களையோ, யூதாசு இஸ்கரியோத்தைப் போல எதிர்மறையாக வர்ணிக்கவில்லை மாறாக அவர்களின் மனித பலவீனத்தைக் காட்டுகிறார்.

இறைவனுக்கே தனிமையும் கலக்கமும் (வவ.36-46).

கெத்சமனி Γεθσημανί என்னும் தோட்டம், ஒலிவ மலையில் அடையாளப்படுத்தப்படுகிறது ஆனால் இதன் சரியான இடத்தை நற்செய்தியாளர்கள் காட்டவில்லை. இதன் அரேமேயிக்க அர்த்தமாக எண்ணெய் ஆலை என்பதைக் காணலாம். எண்ணெய் ஆலைகளும், ஒலிவ தோட்டங்களும் இந்த இடத்தில் பிரசித்தமாக இருந்தன. யோவானும் லூக்காவும் இந்த இடத்திற்கு வேறு அடையாள பெயர்களைக் கொடு;கின்றனர். இயேசு கெத்சமெனியில் இருந்தது, ஆதாம் ஏதேனில் இருந்ததை நினைவூட்டுகிறது. அங்கே ஆதாம் கீழ்படியாமல் பாவம் செய்ய இங்கே ஆண்டவர் கீழ்படிவில் இறைசித்தம் ஏற்கிறார். இயேசு இங்கே செய்த செபம் இறையியில் சிந்தனைகளில் மிக முக்கியமானது.

இயேசு இந்த இடத்திற்கு வந்தது தன்னை தேடுபவர்களிடமிருந்து தப்பிக்க அல்ல மாறாக செபிக்க என்பதை முதல் வரி காட்டுகிறது. மற்றவர்களை வெளியில் விட்டு தன் மும்மூர்த்திகளை உடன் அழைக்கிறார் அவர்கள் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான். இவர்கள் அதிகமான முக்கிய வேளைகளில் இயேசுவோடு இருக்கிறார்கள். இது இவர்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆண்டவர் துயரமும் மனக்கலக்கமும் அடைந்தார் என்பது (λυπεῖσθαι καὶ ἀδημονεῖν), அவரின் மனித இயல்பைக் காட்டுகின்றன. அந்த துன்பத்தை தன் சீடர்களோடு பகிர்ந்துகொள்ள முயன்றாலும் அவர்களை விட்டு தூர சென்று முகம்குப்புற விழுகிறார். இதன் மூலம், இயேசு தன்னுடைய துன்பங்களை சீடர்கள்மேல் திணிக்க விரும்பாமல் இருந்தார் என்பதும் புலப்படுகிறது. இயேசு தன் தந்தையிடம் சொல்லும் வார்த்தைகள் 'என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்' (πάτερ °μου εἰ δυνατόν ἐστιν παρελθάτω ἀπ᾿ ἐμοῦ τὸ ποτήριον τοῦτο· πλὴν οὐχ ὡς ἐγὼ θέλω ἀλλ᾿ ὡς σύ. ), அவருடைய வேதனையின் உச்சத்தைக் காட்டுகின்றன. சீடர்கள் இயேசுவின் துயரின் ஆழத்தை புரியாமல் உண்ட களைப்பில் உறங்குகின்றார்கள். இவர்களின் மனத்திற்கும் உடலிற்கும் வேறுபாடு உள்ளதையும் இயேசு அறிந்திருக்கிறார். இவர்களால் ஒருமணி நேரம் கூட (μίαν ὥραν) விழித்திருக்க முடியாமல் இருப்பது இயேசுவிற்கு சலனத்தை ஏற்படுத்துகிறது. சோதனைக்கு உட்படாதிருக்க ஒரே வழி செபிப்பது என்பதையும் இயேசு கற்றுத்தருகிறார்.

துன்பக்கிண்ணத்தை குடித்தல் என்பது ஒரு அடையாள மொழி. இந்த துன்பக் கிண்ணத்தை குடித்துத்தான் வெற்றி கொள்ள முடியும் என்று இயேசு செபிப்பது, மத்தேயுவின் வாசகர்களுக்கு ஒரு செய்தியை முன்வைக்கிறது. அதாவது இயேசுவை பின்பற்றுவதால் வருகின்ற துன்பங்கள் அதனை சந்தித்தபின்தான் இல்லாமல் போகும் என்பது அந்த செய்தி. அத்தோடு இயேசு ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதில்தான் கருத்தாய் இருக்கிறார். இயேசு இரண்டாம் முறையாகவும், சீடர்கள் தூக்க மயக்கத்தில் இருப்பதைக் காண்கிறார். தூக்க மயக்கத்தில் இருப்பவர் ஒருவரினால் மற்றவரின் உணர்வுகளையோ அல்லது பேச்சுகளையோ புரிந்துகொள்ள முடியாது. (நம்முடைய ஏ9 வீதியில் அதிகமான விபத்துக்கள் இந்த தூக்க மயக்கத்தால் நிகழ்வதைப்போல). ஆனால் இயேசு இவர்களின் நிலையை புரிந்துகௌ;கிறார் மீண்டும் செபிக்கிறார். கடவுளாக இயேசுவிற்கு இந்த கிண்ணம் அகலாது என்று தெரிந்திருக்கும் ஆனால் மனிதராக இந்த துன்பக் கிண்ணத்தை நினைத்து பயப்படுகிறார். இயேசு மூன்று முறை இறைவனிடம் வேண்டினார் (ἐκ τρίτου) என்று மத்தேயு காட்டி, உண்மையாகவே அவர் மனிதராக வேதனையுற்றார் என இயேசுவின் மானிட இயல்பை காட்டுகிறார் மத்தேயு.

இறுதியாக தன்னுடைய நேரம் வந்துவிட்டது என்று இயேசு உணர்ந்து தன் சீடர்களை எழுப்பிவிடுகிறார். இயேசுவினுடைய வார்த்தைகளும் அவரின் செயற்பாடுகளும், அவர் மனித நட்புக்காக ஏங்கினார் என்பதைக் காட்டுகின்றன. மானிட மகன் பாவிகளின் கைகளில் ஒப்புவிக்கப்படபோகிறார் என்று சொல்லி தன்னை கைது செய்கிறவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறார். அதேவேளை தன்னை காட்டிக்கொடுக்கிறவன் தனது சீடத்துவத்தை இழந்துவிட்டான் என்பதையும் காட்டுகிறார். யூதாசின் பெயரை சொல்லாமல் அவரை 'காட்டிக்கொடுக்கிறவன்' (ὁ παραδιδούς) என சொல்வதன் மூலம், இது தெரிகிறது.

நட்பின் துரோகம் (வவ. 47-56).

மத்தேயு நற்செய்தியில் இயேசுவிற்கு எதிரான கூட்டமான குருக்கள் மூப்பர்களோடு யூதாசும் இணைந்து கொள்கிறார். இவர்களோடு மாக்கள் கூட்டம் தடிகளோடும் வாள்களோடும் வருகின்றது. இயேசுவை வரவேற்ற மக்கள் கூட்டம் இப்போது மாக்களாக மாறியிருக்கிறது. அன்பு, உணர்வற்ற மக்கள் கலகக் கூட்டமாக மாறுகிறது. (நம் சந்திகளில் வாள்களோடு இன்று அலைந்து திரியம் கூட்டத்தைப் போல). இவர்கள் சாதாரண மக்களா அல்லது யூத தலைமையினால் ஏவப்பட்டவர்களா என்பதிலும் சந்தேகம் உள்ளது. இவர்கள் சாதாரண மக்களல்ல மாறாக தலைமைச் சங்கத்தால் ஏவப்பட்ட அல்லது அவர்களுக்கு பணி செய்யும் நாட்கூலி காவல்வீரர்கள் என சிலர் வாதிடுகின்றனர். யூதர்கள் அன்பையும் சகோதரத்துவத்தையும் காட்ட முத்தமிட்டார்கள். இங்கே யூதாசு தன் ஆண்டவரை வாழ்க என்று சொல்லி அன்பின் அடையாளத்தில் துரோக முத்தமிடுகிறார் (χαῖρε ῥαββί καὶ κατεφίλησεν αὐτόν). ஆண்டவரை வாழ்க என்று சொல்லி அவரை வீழ்த்த முயல்கிறார், அன்பு முத்தம் என்று சொல்லி காட்டிக்கொடுக்கிறார். இங்கே அடையாளங்களின் முரண்பாடுகளை அழகாகக் காட்டுகிறார் மத்தேயு. (காதல், அன்பு, சகோதரத்துவம், தாய்-தந்தைத்துவத்தின் அடையாளமான முத்தம் இன்று விபச்சாரம், காமம் மற்றும் சினிமாவின் அடையாளமாக போனதைப்போல). யூதாசு தன்னுடைய நிலையை இழந்தாலும், இன்னமும் இயேசு அவருக்கு தோழமையின் இடத்தையே கொடுக்கிறார். கிரேக்க விவிலியம் யூதாசை 'தோழா' என்றழைக்கிறது, இதற்கான சொல் ἑταῖρος எடாய்ரொஸ் (நண்பன், தோழன், சகபாடி) என்பதாகும். இயேசுவை கூட்டம் கைதுசெய்த வேளை இயேசுவோடு இருந்த ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரின் காதைத் தாக்குகிறார். யோவான் நற்செய்தியில் இந்த தாக்குகின்ற நபர் பேதுரு. இதனை சகிக்காத இயேசு வன்முறையை நிராகரிக்கிறார். யூத போராளிகள் உரோமையர்களை தாக்கினர், ஆனால் இயேசு தன்னை யூத போராளிகளின் வழிமுறையிலிருந்து வேறுபடுத்துகிறார். வன்முறை வெற்றிதராது மாறாக இன்னொரு வன்முறையை பெற்றெடுக்கும் என்கிறார். அத்தோடு தான் விரும்பினால் 12 படைப்பிரிவை தந்தையிடம்இருந்து பெறமுடியும் என்கிறார். ஒரு படைப்பிரிவு (λεγιών லெகியோன்) 6100 காலாட் படையினரையும் 726 குதிரைப் படைவீரரையும் கொண்டிருக்கும். இப்படியாக 12 படையை தன்னால் பெறமுடியும் என்பதன் மூலம், தான் சாதாரண தலைவர் இல்லை என்பதையும், அத்தோடு அனைத்தும் தனது கட்டுப்பாட்டிலே உள்ளதாகவும், அதேவேளை தன்னுடைய கைது, தனக்கு தெரிந்தே நடைபெறுகிறது என்பதையும் கூறுகிறார். மீண்டுமாக மறைநூல் நிறைவேண்டியதன் தேவையை மத்தேயு நினைவுபடுத்துகின்றார். இயேசுவை பிடிக்க வந்த கூட்டத்தினரின் மனச்சாட்சியை வினவுகிறார். ஆண்டவரை கள்வருக்கு ஒப்பிட்டு பார்க்கும் இந்த கூட்டத்தினரை இயேசு அவர்களின் இதயத்தில் கேள்விகேட்கிறார். இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் அவர் சீடர்கள் அனைவரும் தப்பி ஓடிவிடுகின்றனர். இறைவாக்கு நிறைவேறுகிறது.

கடவுளை தீர்ப்பிடும் கடவுளுக்கான சபை (வவ.57-68).

மத்தேயு கயபாவை தலைமைக்குரு என்கிறார் (Καϊάφαν τὸν ἀρχιερέα), மற்றைய நற்செய்திகளில் அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாக காட்டப்படுகின்றனர். தலைமைக்குருக்கள் மக்கபேயர்கள் அல்லது ஹஸ்மோனியர்களின் வழிவந்த சதுசேயர்கள். இவர்கள் யூத தலைமைச் சங்கமான சென்ஹெட்ரினை (συνέδριον தலைமை சங்கம்) ஆட்சி செய்தார்கள். யோசேபுசின் கருத்துப்படி இயேசுவினுடைய காலத்தில் கயபாவே தலைமைக் குருவாக இருந்திருக்கவேண்டும். அனைவரும் ஓடினார்கள் என்று சொன்ன மத்தேயு, பேதுரு இயேசுவை பின்தொடர்ந்தார் என்றும் சொல்கிறார். மத்தேயு ஒரு திருத்தூதர் என்றால் இவரும் இயேசுவை பின்தொடர்ந்திருப்பார். பேதுரு தலைமைக் குருவின் வீட்டினுள் சென்று அவர் காவலரோடு அமர்கிறார். இதிலிருந்து அங்கு பெரும் கலகக் கூட்டம் கூடியிருந்தது தெரிகிறது, இதனால்தான் இவர்கள் பேதுருவை அடையாளம் காண தவறுகின்றனர். இயேசுவிற்கு மரண தண்டனை (θανατώσωσιν) கொடுக்க வழிதேடுகின்றனர். தலைமைச் சங்கத்தினால் ஒருவருக்கு மரணதண்டனை கொடுக்க முடியாது அதனை உரோமைய ஆளுனரே கொடுக்க வேண்டும். லூக்கா இந்த விசாரணையை நீளமாகக் காட்டுவார். மத்தேயு சுருக்கமாக காட்டுகிறார். பலர் இயேசுவிற்கு எதிராக சாட்சி சொல்ல முன்வந்தும் அவை பிழைத்துவிட இறுதியாக இருவர் முன்வருகின்றனர். யூத சட்டப்படி கடைசி இரண்டு பேரின் சாட்சியாவது தவறில்லாமல் இருக்க வேண்டும். இவர்கள் கோவிலை இடிப்பதைப் பற்றி இயேசு பேசியதாக பொய்சாட்சி சொல்கின்றனர். மெசியா வந்து கோவிலை கட்டுவார் என்ற நம்பிக்கை யூதர்களிடையே இருந்தது. ஆக இவர் கோவிலை இடிப்பார் என்று சொல்லி அவரை மெசியாவாக இருக்க முடியாது என்கின்றனர் போல. தலைமைக் குரு பலவிதமான உள்நோக்கங்களைக் கொண்டு இயேசுவை விசாரிக்கிறார். இயேசு கடவுளின் மகனாகிய மெசியாவா என்று வினவுகிறார், இதுதான் மத்தேயு நற்செய்தியின் நோக்கமும் சுருக்கமும் கூட. இறுதியாக இயேசு அதனை தன் வாயினால் கூறுகிறார். அதாவது இயேசுதான் மெசியா, அவர் தந்தையின் வலப்புறம் உள்ளார் அத்தோடு அவர் மேகங்கள் மீது சீக்கிரம் வருவார் என்கிறார்.

இயேசு உண்மையைக்கூற அதனை தேவநித்தனை எனக் கூறி தன் ஆடைகளை கிழிக்கிறார் தலைமைக்குரு. இது அவர் உண்மையான அறிவை பெற்றிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆடைகளை கிழித்து இஸ்ராயேல் குருக்கள் தங்கள் வேதனையை காட்டுவதை விவிலியம் காட்டுகிறது. ஆனால் இங்கே உண்மைக்கு குருத்துவத்தின் ஆடைகள் கிழிக்கப்படுகின்றன இதனால் இந்த குருத்துவம் உண்மையில்லாமல் ஆகிறது. சாட்சியம் தேடியவர்களுக்கு இயேசுவே சாட்சியமாக அவர்கள் அனைவரும் அவரை கொலை செய்ய ஒன்றாக சேருகின்றார்கள் அத்தோடு சாட்சியம் இல்லாமலே அவரை தண்டிக்க முன்வருகிறார்கள். இயேசுவின் உடலிற்கு பெருத்த துன்பத்தை விளைவிக்கிறார்கள். முகத்தில் துப்புதல், முகத்தில் அடித்தல் மற்றும் ஏளனப்டுத்தல் போன்றவற்றை, போரில் பிடிபட்ட அந்நிய அரசர்களுக்கு செய்தார்கள், இதனை இங்கே இயேசுவிற்கு செய்வதன் வாயிலாக அவரின் முக்கியத்துவத்தை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இறுதியாக இயேசுவை இறைவாக்கினராகிய மெசியாவே! என்று சொல்லி அவமானப்படுத்துவதன் வாயிலாக, இவர்களுக்கு இவர்தான் இறைவாக்கினர் அத்தோடு மெசியா என்பதும் தெரிந்திருக்கிறது. கிரேக்க விவிலியம் இந்த வரியை, 'எமக்கு இறைவாக்குரை மெசியாவே!' என்று கொண்டுள்ளது (προφήτευσον ἡμῖν χριστέ).

தளபதியின் மறுதலிப்பு (வவ.69-75)

பேதுரு தன்னை மறுதலிப்பார் என்பதை ஏற்கனவே பேதுருவிற்கே வெளிப்படுத்தியிருந்தார் இயேசு. அந்த இறைவாக்கு இப்போது நிறைவாகிறது. பணிப்பெண் பேதுருவை வினவுகிறார். அக்காலத்தில் வழமையாக ஆண்களை பெண்கள் வினவுவதில்லை. இந்த பெண் வினவுவதன் வாயிலாக இங்கே ஏதோ வித்தியாசமாக நடக்கிறது என்பது புலப்படுகிறது. இயேசு கலிலேயராக அறியப்பட்டிருந்தார் அத்தோடு எருசலேம் வாசிகளுக்கு கலிலேயர் மீது ஒரு நக்கல் இருந்தது என்பதும் புலப்படுகிறது. பேதுரு அனைவர் முன்னிலையிலும் முதலாவது முறை மறுதலிக்கிறார். பின்னர் இரண்டாவது பெண் நாசரேத்து இயேசுவோடு பேதுருவை இணைக்கப் பார்க்கிறார். இங்கேயும் ஒரு பெண்ணே விசாரிக்கிறார். இயேசு நாசரேத்தை சேர்ந்தவர் என்பதும் இந்த பெண்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இந்த முறை பேதுரு இயேசுவை 'இந்த மனிதன்' (ὅτι οὐκ οἶδα τὸν ἄνθρωπον) என்று ஆண்டவரை மனிதராக்கி மீண்டும் மறுதலிக்கிறார். இது இரண்டாவது மறுதலிப்பு. இறுதியாக அங்கு நின்றவர்கள் பேதுருவை அவரது உச்சரிப்பைக் கொண்டு இவர் கலிலேயராகத்தான் இருக்க வேண்டும் என்கின்றனர். இந்த முறை பேதுரு இயேசுவை மனிதராக்கி பின்னர் அவரை மறுதலிக்கவும் சபிக்கவும் தொடங்கினார் என மத்தேயு காட்டுகிறார். இந்த மறுதலிப்பும் சபித்தலும் அக்காலத்தில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் யூத-உரோமைய கலாபனையின் போது இயேசுவை மறுதலித்ததையும் சபித்ததையும் நினைவூட்டுகிறது. பேதுரு மூன்றாம் முறை மறுதலிக்கிறார். அதாவது முழுமையாக மறுதலிக்கிறார், எனவே சேவல் கூவிற்று, அதாவது அடுத்த நாள் விடிந்தது. சேவலின் சத்தம் ஏற்கனவே இயேசு பேதுருவிற்கு சொன்னதை நினைவூட்டுகிறது, இதனால் மனம் நொந்து அழுகிறார். மத்தேயு, பேதுரு வெளியே சென்றார் அதாவது இனி அவர் யூதர்கள் மற்றும் தலைமைக் குருக்களின் கூட்டத்தோடு இல்லை என்பதைக் காட்டுகிறார். கிரேக்க விவிலியம், பேதுரு மனம் நொந்து குமுறி அழுதார் என்று காட்டுகிறது (ἐξελθὼν ἔξω ἔκλαυσεν πικρῶς). தன் பாவத்தையும் பலவீனத்தையும் ஏற்றுக்கொள்வதும், பாவ சூழ்நிலையிலிருந்து வெளியே வருவதும் ஒரு தலைவனின் அழகிய பண்புகள்.

அரசர் அந்நியரால் விசாரிக்கப்படுகிறார் (27,1-2)

மறுநாள் காலை இயேசு உரோமைய யூதேயாவின் ஆளுனரான பிலாத்திடம் கையளிக்கப்படுகிறார். தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் இயேசுவை விசாரிப்பதிலும் பார்க்க அவரை கொலை செய்வதில் கருத்தாய் இருப்பதை மத்தேயு மீண்டும் மீண்டும் காட்டுகிறார். போந்தியு பிலாத்து (Πωντιος Πιλᾶτος பொன்டியோஸ் பிலாடோஸ்) அன்றைய நாளில் இருந்து உரோமைய பேரரசின் மாகாண பதிலாளி. ஐந்து வருடங்களாக இந்த வேலையை செய்து வந்தான், தன்னுடைய அலுவலகம் செசாரியாவில் இருந்தாலும், பாஸ்கா விழாவில் கலவரம் நடப்பதை எதிர்பார்த்து எருசலேமில் இருந்தான். இவனுடைய பொறுப்பில் 500-1000 படைவீரர்கள் இருந்தனர். வரலாறு இவனை பலவீனமான அதிகாரியாகவே காட்டுகிறது. உரோமையருக்கும் யூதருக்கும் சிக்கல் வராமல் இருக்க பல முயற்சிகளை செய்தான், அத்தோடு கிறிஸ்தவர்களை பிலாத்து துன்புறுத்தினான் என்று சொல்வதற்கில்லை. பிலாத்து உரோமைய சீசரை நினைத்து மிகவும் பயமுடையவனாக இருந்த படியால் அவருக்கு எதிராக பாலஸ்தீனாவிலே நடக்கும் கலகங்களை அடக்குவதில் இரக்கமற்றவனாய் இருந்தான். சொந்த வாழ்க்கையிலும் பிலாத்து நேர்மையற்ற அத்தோடு இலஞ்சம் வாங்கும் ஆசைபிடித்தவனாய் இன்னொரு வரலாறு சொல்கிறது. பிலாத்துவின் சேவையில் திருப்திகாணாத உரோமை, பின்நாட்களில் அவனை மீள அழைத்துக் கொண்டதாகவும், அவன் அங்கே இறந்ததாகவும் பாரம்பரியம் கூறுகின்றது. மத்தேயுவை போலல்லாது லூக்கா பிலாத்துவை சற்று நேர்முகமாக காட்ட முயற்சிப்பார். மத்தேயு, இயேசுவிற்கு பிலாத்து என்ன தண்டனை கொடுத்தான் என தெளிவாகக் காட்டவில்லை, ஆனால் மற்றைய நற்செய்திகளின் படி, யூதர்கள் இயேசுவின் மேல் சீசருக்கு எதிரான கலகத்தை முன்வைத்து மரண தண்டனையை பெற்றுக்கொடுத்தார்கள் என்கின்றனர். பிலாத்து ஒரு அந்நிய உரோமையன், வழமையாக யூத சகோதர்கள் வேற்றினத்தவரால் விசாரிக்கப்படக்கூடாது என்கிறது இஸ்ரேலிய பாரம்பரியம், ஆனால் தங்கள் தேவைகளுக்காக எதையும் விற்க தயாராக இருக்கிறார்கள் இந்த மக்களின் தலைவர்கள். இறுதியாக தங்கள் மெசியாவாகிய கடவுளையே நம்பிக்கை இல்லாதவர்களிடம் விற்றுவிட்டார்கள். (திருச்சைபயில் எழும் உள்வட்ட பிரச்சனைகளை தீர்க்க திருச்சபையை பற்றி தலைகால் புரியாத சிவில் மற்றும் வேற்று மதத்தினரிடம் சுயநலத்திற்காக நீதி கேட்டு இயேசுவை அசிங்கப்படுத்துவது போல).

நட்பின் தண்டனை (வவ.3-10)

பிலாத்துவின் விசாரனையில் இருந்து காட்சியை மாற்றுகிறார் மத்தேயு. இயேசுவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனைகளும், அவருடைய முக பாவனையும் அத்தோடு தன்னுடைய மனசாட்சியும் யூதாசை உறுத்தவே அவர் மனமாறுகிறார். தன் காசுகளை திருப்பிக் கொடுக்க முன்வருகிறார் ஆனால் உண்மையான கொலையாளிகள் அதனை ஏற்காது விடுகின்றனர். ஏன் யூதாசு மனம் வருந்தினார், இயேசுவை இவர்கள் கொலை செய்வார்கள் என்று இவர் எண்ணவில்லையா? போன்ற கேள்விகள் எழுகின்றன. யூதாசு வெள்ளிக் காசுகளை எறிய அதனை ஏற்க மறுக்கின்றனர் தலைவர்கள். அத்தோடு அதனை அவர்கள் தூய்மையற்ற இரத்தத்திற்கான விலையென ஏற்றுக்கொள்கின்றனர் (ἐπεὶ τιμὴ αἵματός ἐστιν), இதனால் அதனை கோவில் காணிக்கையாக்கவில்லை. காணிக்கையில் கவனமாக இருக்கும் இவர்கள் கடவுளை மறந்துவிட்டார்கள். இந்த காசைக் கொண்டு இவர்கள் வெளியூர்க்காரர்களை புதைக்க நிலம் வாங்குகின்றனர் (ἀγρὸν τοῦ κεραμέως εἰς ταφὴν τοῖς ξένοις.), கிரேக்க விவிலியம் இதனை 'குயவனின் நிலம்' என்கிறது. ஆக இந்த காசு பெறுமதியாக இருந்திருக்க வேண்டும், இவர்கள் வெளியாட்களையும் மனதில் கொள்கின்றனர