இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தவக்காலம் ஐந்தாம் வாரம்

முதல் வாசகம்: எசேக்கியேல் 37,12-14
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 130
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8,8-11
நற்செய்தி: யோவான் 11,1-45


முதல் வாசகம்
எசேக்கியேல் 37,12-14

12எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். 13அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். 14என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். 'ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்' என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

எசேக்கியேல் 37 உலர்ந்த எலும்புகளின் கதையை கொண்டுவருகின்றது. எசேக்கியேல், குரு பூசியின் மகன் என அறிமுகப்படுத்தப்படுகிறார். யுதேயாவின் இறுதி மன்னனான யோயாக்கினுடன் எசேக்கியேல் 597 (கி.மு) ஆண்டில் பபிலோனியாவிற்கு அடிமையாக கொண்டு செல்லப்பட்டார். எசேக்கியேல் ஏறக்குறைய 25வருடம் இறைவாக்கு பணியை செய்திருக்கிறார். இவருடைய தனிப்பட்ட தரவுகள் அதிகமாக இவருடைய புத்தகத்தில் காணப்படவில்லை. எருசலேமில் இருந்து வந்தவர்களும், இவருடைய முன்னைய அனுபவமும், இவருக்கு எருசலேமைப் பற்றி இறைவாக்குரைக்க உதவியாக இருந்திருக்கும். எரேமியாவின் பிற்காலமும், இரண்டாம் எசாயாவும், இவருடைய சம கால இறைவாக்குகளாக இருந்திருக்க வேண்டும். எசேக்கியேலின் புத்தகத்தை முக்கியமான மூன்று பிரிவுகளாக பிரித்து நோக்கலாம்.

அ. அதிகாரங்கள் 1-24: யூதேயாவிற்கும் எருசலேமிற்கும் எதிரான இறைவாக்கு
ஆ. அதிகாரங்கள் 25-32: வேற்று நாடுகளுக்கு எதிரான இறைவாக்கு
இ. அதிகாரங்கள் 33-48: நம்பிக்கையின் இறைவாக்கு.

இன்றைய பகுதி, நம்பிக்கையிழந்து எதிர்காலம் பூச்சியமாக்கப்பட்டிருந்த யூதேயாவிற்கு நம்பிக்கை கொடுப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சில கிறிஸ்தவ விவிலிய விரிவுரையாளர்கள் இந்த அதிகாரத்தை உயிர்ப்புடன் ஒப்பிட விழைகிறார்கள். ஆனால் இந்த அதிகாரத்தில் உடலின் உயிர்ப்பு பற்றி பேசப்படவில்லை, மாறாக ஒரு இனத்தின் அரசியல் மற்றும் சமுக உயிர்ப்பை பற்றியே பேசப்பட்டுள்ளது என்பது பல விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இந்த பகுதியில் முதல் 11 வரிகள், எலும்புகளின் பள்ளத்தாக்கையும், அதன் அழிவுற்ற நிலையையும் பின்னர் இறைவாக்கு உரைக்கப்பட்ட போது அவற்றின் துளிர்பையும் காட்டுகின்றன. பள்ளத்தாக்கும், உலர்ந்த நிலையில் இருந்த பழைய எலும்புகளும், யூதேயாவின் இழிநிலையைக் காட்டுகின்றன. இந்த இடத்திற்கு கடவுள் எசேக்கியேலை அழைத்து செல்வது, அவர் யூதேயாவை இன்னும் மறந்துவிடவில்லை என்பதைக் குறிக்கிறது. உலர்ந்த எலும்புகளுக்கு இறைவாக்குரைப்பதும், அவற்றை சதை மற்றும் தோலினால் மூடுவதும், கடவுள் யூதேயாவிற்கு புதிய ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. கடவுள் இவற்றிக்கு தன்னுடைய உயிர் மூச்சை ஊதுவது, தொடக்க நூலின் அவர் முதல் மனிதருக்கு உயிர் மூச்சை ஊதியதை நினைவூட்டுகிறது. அதாவது யூதேயர்கள் தங்கள் பாவத்தால் தம் நாட்டை இழந்தாலும், அவர்கள் கடவுளின் அன்பால் மீண்டும் தமது அடையாளங்களை பெறுவர் என எடுக்கலாம்.

ஆண்டவர் சொன்ன வாக்கு கனவு வாக்கல்ல, அது நிஜத்திலே நடந்தேறியது. அதனை தன்னுடைய காட்சியிலே கண்டதாக வெளிப்படுத்துகிறார் எசேக்கியேல். இந்த வரிகள் எதிர் கால வரிகள் போலல்லாமல் நிகழ்கால வரிகள் போல அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு அவர்கள் இறந்த போது மனிதர் கூட்டமாக இருந்தார்கள் ஆனால் உயிர் பெற்று எழுந்தபோது அவர்கள் படைபலம் பெற்ற பொருந்திரளான போர் வீரர்கள் போல் மாறிவிட்டார்கள் (חַיִל גָּדוֹל מְאֹד־מְאֹֽד). அத்தோடு இந்த கூட்டம் இஸ்ராயேல் மக்களினத்தை குறிக்கிறது என்று ஆண்டவரே சொல்லும் படியாக, தன்னுடைய காட்சியை, காட்சியிலிருந்து இறைவாக்காக மாற்றுகிறார் எசேக்கியேல்.

வ.12: இந்த வரி, பதினோராவது வரியில் வரும் இஸ்ராயேல் மக்களின் முறைப்பாடுகளுக்கு பதில் தரும் முகமாக வருகிறது. அவர்கள் தாங்கள் உலர்ந்த எலும்புகள் எனவும், நம்பிக்கை இழந்தவர்கள் எனவும், துண்டிக்கப்பட்டவர்கள் எனவும் முறையிடுகிறார்கள். இதற்க்கு மாற்றீடாக கடவுள், இவர்களின் கல்லறைகளை திறக்கப் போவதாக கூறுகிறார். கல்லறையிலிருந்து இவர்களை மேலே கொண்டுவந்து, அவர்களின் நாட்டை திருப்பி தரப்பபோவதாகச் சொல்கிறார்.

எசேக்கியேல், இந்த வரியை தன்னுடைய சொந்த இறைவாக்காக சொல்லவில்லை மாறாக அதனை ஆண்டவரின் கட்டளையாகச் சொல்கிறார். 'இப்படிச் சொல்கிறார் ஆண்டவராகிய கடவுள்' என்பது இவரின் இந்த சிந்தனைக்கு வலுச்சேர்க்கிறது (כֹּֽה־אָמַר֮ אֲדֹנָי יְהוִה֒). கல்லறைகள் קֶבֶר கெவெர் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களின் சிந்தனையைப்போல, சேமக்காலைகளோ, அல்லது துயிலும் இல்லங்களோ, அல்லது வணக்க இடங்களோ கிடையாது. இவை தூய்மை அற்ற இடங்கள், வெறும் காலால் மிதிக்கப்படக்கூடாத இடங்கள், அத்தோடு இவை தீட்டான இடங்கள். இதனை இவர்கள்கடவுளின் பார்வையற்ற கீழுலகமாக (சீயோல், அதாளபாதாளம்) கருதினர். இப்படியானகல்லறைகளில் வாழ்பவர்களைத்தான், தன் மக்கள் எனக் கூறி (עַמִּי), மேலே கொண்டுவர முயல்கிறார் ஆண்டவர். அத்தோடு அவர்கள் தங்கள் சொந்த நிலமாகிய இஸ்ராயேல் மண்ணிற்கு கொண்டுவரப்படுவர். இங்கே கல்லறைகள் பபிலோனியாவையும், அல்லது அவர்கள் சிதறுண்டிருந்த இடத்தையும் குறிக்கலாம். கல்லறைக்கு மேலே வருதல், இஸ்ராயேலுக்கு திரும்பி வருதலைக்குறிக்கும்.

வ.13: கடவுளின் இந்த செயற்பாட்டிற்கான காரணத்தை இன்னும் ஆழப்படுத்துகிறது இந்த வரி. இஸ்ராயேலின் கடவுள்தான் உண்மையான ஆண்டவர் என நம்ப மறுத்ததே இஸ்ராயேலின்இழிநிலைக்கு காரணம் என பல இறைவாக்கினர்கள் சுட்டிக்காட்டினர். இப்போது கடவுள் இவர்களை கல்லறைகளிலிருந்து மேலே கொண்டுவருவதன் மூலமாக, அவர்கள் தங்கள் கடவுள்தான் ஆண்டவர் என்பதை உணர்ந்துகொள்கிறார்கள் (וִֽידַעְתֶּם כִּֽי־אֲנִ֣י יְהוָה), இதனை இஸ்ராயேலர்களின் விசுவாசப்பிரமாணம் என எடுக்கலாம். மேலுமாக ஆண்டவர் ஏற்கனவே எசேக்கியேலுக்கு சொன்னதை மீண்டும் நேரடியாக மக்களுக்கு சொல்வது போல வசனம் அமைக்கப்பட்டுள்ளது.

வ.14: இந்த வசனம் ஏற்கனவே முதல் 11வசனங்களில் கடவுள் எசேக்கியேலுக்கு சொன்னதை அப்படியே சுருக்கமாக மீள இறைவாக்குரைக்கிறது. இங்கே கடவுள் மிக முக்கியமான நான்கு வரபிரசாதங்களை முன்வைக்கிறார்.

அ. ஆண்டவர் தன் ஆவியை அவர்களுக்கு கொடுப்பார் (וְנָתַתִּי רוּחִי בָכֶם֙).
ஆ. அவர்கள் உயிர் பெறுவார்கள் (וִחְיִיתֶ֔ם).
இ. அவர்களை ஆண்டவர் சொந்த நாட்டில் குடியமர்த்துவார் (וְהִנַּחְתִּי אֶתְכֶם עַל־אַדְמַתְכֶם).
ஈ. ஆண்டவரின் உரைகளையும் செயல்களையும் அவர்கள் அறிவர் (וִידַעְתֶּם כִּי־אֲנִ֧י יְהוָה דִּבַּרְתִּי וְעָשִׂיתִי).



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 130

1ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;
2ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.
3ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? 4நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
5ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6விடியலுக்காய்; காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.
7இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.
8எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!


திருப்பாடல்கள் 129-131 நான்காவது முக்குழு பாடல்கள் என அறியப்படுகிறன. பாவங்கள் சுமையாகி மனிதரை வாட்டும்போது, கடவுள் என்ன செய்வார், என்பதைப் பற்றி இந்த பாடல்கள் பாடுகின்றன. இந்த 130வது திருப்பாடலை தனிமனித புலம்பல் பாடல் என்றும் வகைப்படுத்தலாம். இந்த பாடலின் முன்னுரை, மலையேறும் போது பாடப்படும் பாடல் என அறிமுகம் செய்கிறது (שִׁיר הַֽמַּעֲלוֹת). இந்த மலையை சீயோன் மலை என்று எடுக்கலாம், ஏனெனில் சீயோன் மலையிலேதான் எருசலேம் தேவாலயம் இருந்தது, அந்த மலையை நோக்கி ஆண்டுதோறும் பல வெளிநாடுகளில் வாழ்ந்த யூதர்கள் திருப்பயணம் மேற்கொண்டார்கள், அப்படி அவர்கள் பயணம் மேற்கொண்ட போது பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக இது இருக்கலாம். இந்த பாடல் ஒரு புலம்பலுடன் ஆரம்பிக்கின்றது, பின்னர் அது இரக்கத்தை கேட்கிறது, இறுதியாக கடவுளோடுதான் உண்மையான மன்னிப்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது.

வ.1: ஆழ்ந்த துயரம் என்று தமிழில் அழகாக மொழிபெயர்கப்பட்டுள்ளது, 'ஆழத்திலிருந்து' என்று எபிரேய மொழியில் உள்ளது (מִמַּעֲמַקִּים). ஆழத்திலிருந்த ஆசிரியர், தான் கடவுளை கூச்சலிட்டு அழைத்ததாக இந்த புல்பல் பாடல் தொடங்குகின்றது. என்ன அவர் ஆழ் துயரம், என்பது புலப்டவில்லை. இதன் ஆசிரியர் யார் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை அதனை கண்டுபிடித்திருக்கலாம்.

வ.2: திருப்பிக்கூறல் என்ற எபிரேய கவி நடையில் இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. மன்றாட்டு மற்றும் விண்ணப்பக் குரல் என்பன ஒத்த கருத்துச்சொற்கள். இதற்கு எபிரேய விவிலியம் 'குரல்' என்ற வார்த்தையையே பாவித்திருக்கின்றது (קוֹלִ֥ கோல்- குரல், சத்தம்). இதனை ஆசிரியர் ஒரு கட்டளையாக கடவுளுக்கு வைக்கவில்லை மாறாக ஒரு வேண்டுதலாக கடவுளை இரஞ்சுகிறார். இதனை தமிழில் விருப்பு அல்லது வேண்டுதல் வாக்கியங்கள் என எடுக்கலாம்.

வ.3: இந்த வரி எபிரேய மெய்யறிவு வாதத்தை முன்வைக்கிறது. இது 'ஆல்' வகை வாக்கியத்தை சார்ந்தது. கடவுள் நம்முடைய குற்றங்களை நினைவில் வைத்தால், யார்தான் நிலைநிற்க முடியும், அதாவது யாரும் புனிதர்கள் இல்லை, அத்தோடு கடவுள் மனிதரின் குற்றங்களை மறந்து அவர்களை மன்னிக்க எப்போதுமே பின்நிற்பதில்லை என்ற வாதம் இதன் மூலம் முன்வைக்கப்படுகிறது.

வ.4: இந்த வசனம் செயற்பாட்டு வினையில், எபிரேய விவிலியத்தில் அமைந்துள்ளது. இதன் நேரடி மொழி பெயர்ப்பாக இதனைக் கொள்ளலாம். כִּֽי־עִמְּךָ הַסְּלִיחָה ஏனெனில் உம்மோடு மன்னிப்பு: לְמַ֗עַן תִּוָּרֵֽא இதனால் நீர் வணங்கப்படுகிறீர். கடவுளுக்கு அச்சம் கொள்ளுதல், வழிபாடு மற்றும் வணக்கம் போன்றவற்றின் மிக முக்கியமான படிப்பினை. இதனைத்தான் இந்த அசிரியர் அழகாகக் காட்டுகிறார்.

வ.5: ஆண்டவருக்காக ஆவலுடன் காத்திருத்தல் என்பதை ஆண்டவரில் நம்பிக்கை வைத்தல் என்றும் மொழிபெயர்க்கலாம். இதனை ஆசிரியர் தன்னுடைய முழு ஆள் தன்மையே செய்கிறது என்கிறார்.

வ.6: காவலர்கள் விடியலுக்காக காத்திருத்தல் என்பது ஒரு அழகான உருவகம். போர், தாக்குதல்கள், நோய்கள், இரவு ஆபத்துக்கள் என்பன நிறைந்திருந்த அந்த காலத்தில், பல ஆபத்துக்கள் இரவிலேயே நடந்தன. இதனால்தான் இரவை தீயவனின் நேரம் என சில விவிலிய ஆசிரியர்கள் காட்டுகின்றனர். இந்த இரவிலே காவலர்கள் முழித்திருந்து காவல் செய்தனர். அவர்களுடைய முகத்திலே விடியல் ஒன்றுதான் புன்முறுவலைக் கொண்டுவர முடிந்தது. விடியல் בֹּ֗קֶר என்பது வெளிச்த்தையும், குறைவான ஆபத்தையும் குறிக்கிறது. இந்த விடியலுக்கான காத்திருத்லை விட, ஆண்டவருக்காக காத்திருத்தல் என்பது மேன்மையானது என்கிறார் ஆசிரியர். விடியல் போகும், மீண்டும் இரவு வரும் என நினைக்கிறார் போல.

வ.7: இந்த வரியில் ஆசிரியர் வித்தியாசம் காட்டுகிறார். இவ்வளவு நேரமும் தனக்கு தானே வியாகுலம் செய்த இவர், இந்த வரியில் முழு இஸ்ராயேலுக்கும் கட்டளை கொடுக்கிறார். இஸ்ராயேலை காத்திருக்கச் சொல்கிறார். எனெனில் கடவுளிடம்தான் அன்பிரக்கமும் (חֶ֑סֶד), மீட்பும் உள்ளது (פְדֽוּת), என்பது இவர் நம்பிக்கை.

வ.8: எல்லா தீவினையினின்றும் இஸ்ராயேலைக் காக்கிறவர் யார், அவர் கடவுள். இதனால்தான் அவரிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பது ஆசிரியரின் படிப்பினை. செல்வம், அரசர்கள், போர்த் தளபாடங்கள் போன்றவை எல்லா தீவினையினின்றும் இஸ்ராயேலைக் காக்காது, இதனால் இவற்றை நம்பியிருப்பது வீணானது என்பதும் இங்கே புலப்படுகிறது.



இரண்டாம் வாசகம்
உரோமையர் 8,8-11

8ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. 9ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. 10பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். 11மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.

உரோமையர் திருமுகத்தில் எட்டாம் அதிகாரத்தின் முதல் பகுதி (வவ1-17) ஆவிக்குரிய வாழ்வை விளக்கம் செய்கிறது. ஊனியல்பிற்கேற்ப வாழுதல் என்பது அக்காலத்திலே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவகையான இன்பமயமான வாழ்வு, இதனை எபிக்கூரியனிசம் என்று சொல்லலாம். உரோமைய திருச்சபை புறவினத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட திருச்சபை, அதனை நிறுவியவர்கள் பல கேள்விகளையும் அதனோடு விட்டுச் சென்றிருந்தார்கள். பவுல் இந்த திருச்சபையின் நிறுவுனர் இல்லை என்பது பலருடைய நம்பிக்கை. ஆனால் இவர்கள் மத்தியில் எழுந்த கேள்விகளுக்கு பவுல் விளக்கம் கொடுக்கவேண்டிய தேவையிலிருந்தார். ஆவிக்குரிய வாழ்வு மற்றும் ஊனியல்பிற்குரிய வாழ்வு இந்த இரண்டும் உரோமையர் திருமுகத்திலே மிக முக்கியமான கருப்பொருட்கள்.

வ.8: ஊனியல்பிற்கேற்ப வாழ்கிறவர்கள் (οἱ δὲ ἐν σαρκὶ ὄντες), கடவுளை திருப்திப்படுத்த முடியாது என்பது பவுலுடைய வாதம். இது நற்செய்தி நூல்களிலும் ஆழமாக பார்க்கப்பட்டுள்ளது (காண்க மத் 6,24). இந்த இரண்டும் இரண்டு வகையான வாழ்க்கை முறைகள் அத்தோடு ஒன்று மற்றொன்றை விலத்துகின்றது, எனவே ஊனியல்பு கடவுளை திருப்திப்படுத்தாது என்பது பவுலுடைய மெய்யறிவு.

வ.9: கடவுளுடைய ஆவியை குடிகொண்டிருத்தல்: கடவுளுடைய ஆவி (πνεῦμα θεοῦ புனுமா தியூ), என்பது, துணையாளரை இங்கே குறிக்கிறது. இந்த வரியில் பவுல், கடவுளுடைய ஆவி (πνεῦμα θεοῦ) மற்றும் கிறிஸ்துவுடைய ஆவி (πνεῦμα Χριστοῦ புனுமா கிறிஸ்தூ) என்று இரண்டு வகையாக பேசுகிறார். இந்த இரண்டும் வௌ;வாறா, அல்லது ஒன்றா என கேள்வி எழுகிறது. இவை ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. இங்கே பவுல் தன்னுடைய வாதத்தை விளக்க கிரேக்க மெய்யறிவு வாத தத்துவங்களை பாவிக்கிறார், அதாவது ஒருவர் எதை கொண்டிருக்கிறாரே அதாகவே மாறுகிறார் என்று சொல்ல வருகிறார். 'உள்ளத்து நிறைவையே வாய் பேசும்' என்று நம்முடைய தமிழ் வட்டார பழமொழியை நினைவூட்டுகிறார். கடவுளின் ஆவியை கொண்டிராதவர் கடவுளின் மக்களல்லர், கிறிஸ்துவின் ஆவியை கொண்டிராதவர் கிறிஸ்தவர் அல்லர் என்பது அவர் வாதம். கடவுள் தன் ஆவியை மனிதரில் ஊதி உயிர் கொடுத்து தம்மவராக்கினார் என்ற தொடக்கநூல் மற்றும் எசேக்கியேலின் இறைவாக்குகளை பவுல் நிச்சயமாக அறிந்திருப்பார்.

வ.10: பாவத்தின் சம்பளம் மரணம் என்பது, உரோமையர் திருமுகத்தின் மிக முக்கியமான படிப்பினை (❉காண்க உரோ 6,23). அனைவரும் பாவிகள், இதனால் அனைவரும் மரணிக்க வேண்டியவர்கள், இருப்பினும், ஒருவர் கிறிஸ்துவிற்குள் இருப்பதன் வாயிலாக (εἰ δὲ Χριστὸς ἐν ὑμῖν), ஏற்புடைமையை (δικαιοσύνη) பெற்றுக்கொள்கிறார். இதனால் தூய ஆவியார் ஒருவருள் இருக்கும். ஏனெனில் பாவிகளுக்குள் எப்படி தூய ஆவியார் இருக்க முடியும் என்பது சிலருடைய வாதமாக இருந்தது. இதனை விளக்குகிறார் பவுல்.

(❉பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.)

வ.11: இந்த வரியை அவதானமாக ஆய்வு செய்ய வேண்டும். இந்த வரியின் எழுவாய்ப்பொருள் ஆவியார். இந்த ஆவியாரை பவுல், கடவுளின் ஆவி, மற்றும் கிறிஸ்துவின் ஆவி என்று மாறி மாறி சொல்கிறார். இந்த ஆவியார்தான் கிறிஸ்துவை உயிர்ப்பித்தார் என்று கூட இந்த வரி விளக்கலாம். அப்படியாயின் கிறிஸ்து இன்னொரு சக்தியினால்தான் உயிர் பெற்றார், ஆக அவர் தங்கியிருப்பவர் என்ற வாதம் முன்வைக்கப்பட்டுவிடும். ஆனால், பவுல் இங்கு ஆவியை பற்றி பேசுகிறார் அத்தோடு அவர் ஆவியில் வாழ்வு பற்றி ஒப்பிடுகிறார். அவர் பாவிக்கும் சொற்களான கடவுள், கிறிஸ்து மற்றும் ஆவி என்பன ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன. எனவே இந்த வசனத்தை இந்த பின்புலத்திலிருந்து வெளியே எடுத்தால் சில வேளைகளில் அது பிழையான அர்த்தத்தைக் கொடுக்கலாம். கடவுளின் ஆவியைக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்துவைப் போல உயிர் பெறுவர் என்பதே பவுலுடைய வாதம்.


நற்செய்தி வாசகம்
யோவான் 11,1-45

இலாசர் இறத்தல்

1பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். 2இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். 3இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, 'ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்' என்று தெரிவித்தார்கள். 4அவர் இதைக் கேட்டு, 'இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்' என்றார். 5மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார். 6இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார். 7பின்னர் தம் சீடரிடம், 'மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்' என்று கூறினார்.8அவருடைய சீடர்கள் அவரிடம், 'ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?' என்று கேட்டார்கள். 9இயேசு மறுமொழியாக, 'பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில் பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. 10ஆனால் இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் அப்போது ஒளி இல்லை' என்றார். 11இவ்வாறு கூறியபின், 'நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்' என்றார். 12அவருடைய சீடர் அவரிடம், 'ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்' என்றனர். 13இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். 14அப்போது இயேசு அவர்களிடம், 'இலாசர் இறந்து விட்டான்' என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு, 15'நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில் நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்' என்றார். 16திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், 'நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்' என்றார்.

நம்புவோர் வாழ்வர்

17இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது. 18பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது. 19சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். 20இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார். 21மார்த்தா இயேசவை நோக்கி, 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்' என்றார். 23இயேசு அவரிடம், 'உன் சகோதரன் உயிர்த்தெழுவான்' என்றார். 24மார்த்தா அவரிடம் , 'இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்' என்றார். 25இயேசு அவரிடம், 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். 26உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?' என்று கேட்டார். 27மார்த்தா அவரிடம், 'ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்' என்றார். இயேசு கண்ணீர் விடுதல் 28இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், 'போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்' என்று காதோடு காதாய்ச் சொன்னார். 29இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார். 30இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார். 31வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள். 32இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்' என்றார். 33மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 34'அவனை எங்கே வைத்தீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், 'ஆண்டவரே, வந்து பாரும்' என்றார்கள். 35அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். 36அதைக் கண்ட யூதர்கள், 'பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!' என்று பேசிக் கொண்டார்கள். 37ஆனால் அவர்களுள் சிலர், 'பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?' என்று கேட்டனர்.

இலாசர் உயிர்பெறுதல்

38இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது. 39'கல்லை அகற்றி விடுங்கள்' என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், 'ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!' என்றார்.40இயேசு அவரிடம், 'நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?' என்று கேட்டார். 41அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, 'தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். 42நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்' என்று கூறினார். 43இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், 'இலாசரே, வெளியே வா' என்று கூப்பிட்டார். 44இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. 'கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்' என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

இயேசுவைக் கொலை செய்யத் திட்டம்

(மத் 26:1 - 5; மாற் 14:1 - 2; லூக் 22:1 - 2)

45மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.



இலாசர் Λάζαρος:

விவிலியத்தில் பல லாசர்களைச் சந்திக்கின்றோம். இலாசர் என்னும் சொல்லை எபிரேய எலியாசர் (אֶלְעָזָר கடவுள் அவருக்கு உதவினார்) என்ற சொல்லுடன் பல ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர். நற்செய்திகளில் இரண்டு இலாசர்களை லூக்காவும், யோவானும் அறிமுகம் செய்கிறார்கள். லூக்காவின் இலாசர், வறியவராக ஒரு பணக்காரரின் கதவிலிருந்து பிச்சையெடுத்து பின்னர் ஆபிரகாமின் மடிக்கு செல்கிறார் (வாசிக்க லூக் 16,20-25). யோவானின் இலாசர் இவராக இருக்க முடியாது, இவர் பெத்தானியாவில் வாழ்ந்த ஒரு யூதர், இயேசுவின் ஆரூயிர் நண்பர், அத்தோடு இவர்தான் மார்த்தா மரியாவின் சகோதரர். யோவான் காட்டுகின்ற இலாசரின் உயிர்ப்பு இயேசுவின் உயிர்ப்பை அறிமுகம் செய்கிறது. அத்தோடு இலாசரின் உயிர்ப்பு, இயேசுவை யூத தலைவர்கள் கொலை செய்ய வேண்டிய தேவையை வேகப்படுத்துகிறது. அதாவது அவர்கள் இயேசுவில் அதிகமான பயம் கொள்கிறார்கள். இயேசுவிற்கும் இலாசருக்கும் இடையே இருந்த அன்புறவு மிக அழகானதும் ஆழமானதுமாகும். இதனால்தான் சில ஆய்வாளர்கள், யோவான் நற்செய்தியில் வரும் 'இயேசுவின் அன்பு சீடர்' என்ற பதம் இந்த இலாசரைக் குறிப்பதாகவும், இவர்தான் நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் எனவும் வாதிட்டனர். இதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

இன்றைய நீண்ட நற்செய்தி வாசகம், 45 வரிகளைக் கொண்டமைந்திருக்கிறது. இதிலே ஐந்து முக்கியமான கருப்பொருட்களை நாம் ஆய்வு செய்யலாம்.

அ. இலாசரின் அறிமுகமும், அவர் மரணமும்: வவ.1-16
ஆ. மார்த்தாவின் விசுவாசப் பிரமாணம்: வவ.17-27
இ. இயேசுவின் கண்ணீர்: வவ.28-37
ஈ. இலாசரின் உயிர்ப்பு: வவ.38-44
உ. யூதர்களின் நம்பிக்கை: வ.45
யோவான் நற்செய்தியின் மூல கிரேக்க பாடத்திலே இப்படியான தலைப்புக்களையோ, அல்லது இலங்கங்களையோ நாம் காணமுடியாது (எந்த விவிலிய புத்தகத்திலும் காணமுடியாது). ஆனால் மொழிபெயர்ப்புக்களும், மீள் பிரதிகளும் இந்த தலைப்புக்களையும், இலக்கங்களையும் ஆய்வு மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக உட்புகுத்தியிருக்கின்றன.

அ. இலாசரின் அறிமுகமும், அவர் மரணமும்: வவ.1-16

வ.1: இந்த வசனம்தான் யோவான் நற்செய்தியில் இலாசரை அறிமுகம் செய்கிறது. இவர் பெத்தானியவை சார்ந்தவராகவும், மரியா மார்த்தாவின் சகோதரராகவும் அத்தோடு நோய்வாய்ப்பட்டவராகவும் அறிமுகமாகிறார். பெத்தானியா (Βηθανία), ஒலிவ மலைக்கு அப்பாலிருந்து ஒரு கிராமம். இங்கேதான் இயேசுவின் நண்பியர் அல்லது சீடர்களான மார்தாவும் மரியாவும் வாழ்ந்தனர். இந்த இலாசருக்கு அரேபிய தொடர்பு இருக்கலாம் என சிலர் இவருடைய பெயரை வைத்து வாதாட முன்வருகின்றனர்.

வ.2: இந்த வரி மரியாவை அறிமுகப்படுத்தி அத்தோடு அவருக்கும் இலாசருக்கும் என்ன உறவு என்பதையும் விளக்குகின்றது. மரியாவை ஆசிரியர் இப்படி அறிமுகப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் 12வது அதிகாரத்தில்தான் (❉காண்க 12,3) மரியா, இயேசுவின் பாதங்களுக்கு நறுமண தைலம் பூசுகிறார். எனவே, ஆசிரியரின் கருத்துப்படி, இந்த மரியாவை வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும் (மற்றைய நற்செய்திகளின் வாயிலாக). மகதேலா மரியாவும், இலாசரின் சகோதரி மரியாவும் இரண்டு வேறு நபர்களாக இருக்க வேண்டும்.

(❉2அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். 3மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது.)

வ.3: இலாசரின் சகோதரிகள், தங்கள் சகோதரனை 'உம் நண்பர்' என்று சொல்லி இயேசுவிற்கு செய்தி அனுப்புகிறார்கள் (κύριε ἴδε ὃν φιλεῖς ἀσθενεῖ.). இங்கே நண்பருக்கு பயன்பட்டுள்ள சொல்லை 'இனியவர், நெருக்கமானவர், அன்பிற்கு பாத்திரமானவர்' என்றும் மொழி பெயர்க்கலாம். இந்த வரி இயேசு மற்றும் இலாசருக்கிடையிலான அன்பு உறவையும், நட்பையும் காட்டுகிறது. ஒருவேளை இப்படி சொல்வதன் மூலமாக இவர்கள் இயேவிற்கு இந்த நட்பின் கடமையை உணர்த்தியிருக்கலாம்.

வ.4: இந்த வரி யோவான் நற்செய்தியின் நோக்கத்தை காட்டுகிறது. கடவுளின் மாட்சி (τῆς δόξης τοῦ θεοῦ) மற்றும் மானிட மகனின் மாட்சி (τῇ δόξῃ τοῦ υἱὸυ τοῦ ἀνθρώπου) போன்றவை யோவான் நற்செய்தியின் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற இலாசரின் நோய்வாய்ப்பாடு ஒரு உதவி என்கிறார் இயேசு.

வவ.5-7: மார்த்தா, மரியா மற்றும் இலாசர் போன்றவர்கள் இயேசுவின் அன்பிற்கு பாத்திரமாக இருந்தார்கள் என இவர்களின் முக்கியத்துவத்தை காட்டுகிறார் யோவான். இருப்பினும் இலாசரின் நிலையைக் கேள்விப்பட்ட பின்னரும், ஏன் அவர் இரண்டு நாட்கள் தான் இருந்த இடத்தில் தங்கினார் என்பது புலப்படவில்லை. இதனைக் கொண்டு அவர் இலாசர் குடும்பத்தின் மீது கொண்டிருந்த அன்பை இழக்க தொடங்கினார் என எடுக்க முடியாது, மாறாக ஏற்கனவே சொல்லப்பட்டது போல, இலாசர் இறந்து போய்விடமாட்டார் அத்தோடு அவரை உயிர்ப்பிக்கச் செய்து கடவுளை மாட்சிப்படுத்த இயேசு முயன்றிருக்கலாம். இரண்டு நாட்களின் பின்னர் யூதேயாவிற்கு செல்ல இயேசுவே முயற்சியை முன்னெடுக்கிறார். இதன் வாயிலாக இயேசு தன்னுடைய ஒவ்வொரு அசைவையும் தானே தீர்மானித்தார் என்பது புலப்படுகிறது.

வவ.8-10: சீடர்களின் கேள்வியும், இயேசுவின் பழமொழியான பதிலுரையும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்தாவது அதிகாரத்தில் (காண்க 10,39), அர்ப்பண விழாவில் யூதர்களில் சிலர் இயேசுவை கைது செய்ய முயன்றார்கள் என்பது புலப்படுகிறது. இதனை அறிந்திருந்த சீடர்கள் மீண்டும் யூதேயா செல்ல அஞ்சுகின்றனர். இப்போது இவர்கள் இயேசுவோடு இருக்கும் மாநிலம் சற்று ஆபத்து குறைந்த மாநிலமாக இருந்திருக்கலாம். இயேசு, பகலை பன்னிரண்டு மணிநேரங்களாக பிரிக்கிறார். உரோமையர்களும் யூதர்களும் பகலை பன்னிரண்டு மணிகளாக பிரித்தனர். ஒவ்வொரு மணியும் அறுபது நிமிடங்களை கொண்டிருக்கவில்லை. இயேசு இங்கே பகல் (φῶς) இரவு (νύξ) என்ற அடையாளங்கள் வாயிலாக பேசுகிறார். தான் பகல்காரன் எனவும், தன்னை கைது செய்பவர் இரவுக்காரர்கள் எனவும் சொல்கிறார். இங்கே பகல் கடவுளையும், இரவு சாத்தானையும் குறிக்கலாம். இருளில் நடப்பவர்கள் இடறிவிழுவார்கள் என்பது சாதாரண விழுதல் என்பதை விட அவர்கள் கடவுள் இன்மையால் தங்கள் வாழ்வில் விழுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

வவ.11-13: இயேசு இலாசரின் தூக்கத்தையும், அவரின் யூதேயா பயணத்தை பற்றிய நோக்கத்தையும் விளக்குகிறார். இயேசுவின் அடையாள வார்த்தைகளை சீடர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றார்கள். இந்த சீடர்கள், இங்கே வாசகர்களையும் குறிக்கலாம். தூக்கம் (κοιμάω) விவிலியத்தில் பல இடங்களில் மரணத்தை குறிக்கிறது. மரணத்தை தூக்கமாக வர்ணிப்பது கிரேக்க இலக்கியத்திலும், எபிரேய சிந்தனைகளிலும் ஏற்கனவே இருந்திருக்கிறது. இதனை சீடர்கள் புரியாமல் இருப்பது, வாசகர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கலாம். பதிமூன்றாவது வசனம் இயேசு இலாசரின் மரணத்தையே விளக்கினார் என யோவான் நமக்கு தெளிவு படுத்துகிறார். இதன் மூலம் இயேசுவின் வார்த்தைகளை அவதானமாக கவனிக்க வேண்டும் என யோவான் சொல்கிறார் போல.

வவ.14-15: இயேசு இலாசரின மரணத்தைப் பற்றியும் அந்த மரணம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு வாய்ப்பினைப் பற்றியும் சொல்கிறார். இந்த மரணம் இயேசுவின் உண்மையான அடையாளத்தை சீடர்களுக்கு காட்ட நல்ல வாய்ப்பாக அமைகிறது. இந்த வரி, முன்னைய வரியில் இயேசு ஏன் இரண்டு நாட்கள் தன் பயணத்தை பிற்போட்டார் என்பதை விளக்குகின்றது. இயேசு தன் சீடர்கள் தன்னில் உண்மையான விசுவாசம் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் என்பதை இங்கே காணலாம்.

வ.16: யோவான், தோமாவை அறிமுகம் செய்கிறார். இந்த திதிம் என்படும் தோமையார், நமக்கு நன்கு பரீட்சயமானவர். இவரை சந்தேகக்காரர் என்றே பலர் நினைக்கின்றனர், ஆனால் அவருடைய உண்மையான விசுவாசத்தை காட்டுகிறார் யோவான். யோவான், திதிம் (Δίδυμος) என்றால் இரணை என்று நமக்கு விளக்குகிறார். இருப்பினும் இருபதாவது அதிகாரத்தில் வரும் தோமாவிற்கும், இந்த தோமாவிற்கும் (விசுவாசத்திற்கு) நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

ஆ. மார்த்தாவின் விசுவாசப் பிரமாணம்: வவ.17-27

வவ.17-19: இந்த வரிகளின் மூலமாக யூதேயாவை அடைய இவர்களுக்கு இரண்டு நாட்கள் எடுத்திருக்கிறது எனலாம். இலாசர் ஏற்கனவே கல்லறைக்குள் அடக்கப்பட்டிருந்தார். பெத்தானியா எருசலேமிற்கு மிக அருகில் இருந்தது. தமிழ் விவிலியம் இதனை மூன்று கிலோ மீற்றர் என்கிறது. கிரேக்க மூல பாடம் இதனை பதினைந்து இஸ்திராதியோன் (σταδίων δεκαπέντε.) என்கிறது. இது ஒரு கிரேக்க-உரோமைய பயண அலகு. ஒரு இஸ்திராஸ் 187 மீற்றர்களைக் குறிக்கும். இந்த இடம் எருசலேமிற்கு மிக அருகில் இருந்ததால் பல யூதர்கள் இலாசரின் வீட்டிற்கு வந்திருப்பார்கள். இது இயேசுவின் சுயஉருவத்தை காட்ட நல்லதொரு வாய்ப்பு.

வவ.20-22: மார்த்தா மரியாவின் செயற்பாடுகள் காட்டப்படுகின்றன. மரியா வழமை போல வீட்டிலே இருந்துவிட, மார்த்தா இயேசுவை நோக்கி செல்கிறார். இதிலிருந்து இந்த இரண்டு சகோதரிகளும் வித்தியாசமான ஆளுமையுடையவர்கள் என்பது தெரிகின்றது (ஒப்பிடுக லூக் 10,38-42). மார்த்தாவின் விசுவாச பிரமாணம் மற்றும், கடவுளுக்கும் இயேசுவிற்கும் இடையிலான உறவைப் பற்றிய அவருடைய அறிவு, வாசகர்களுக்கு முக்கியமான செய்திகளை சொல்கின்றன. மரியா வீட்டில் இருப்பதும், இன்னொரு விசுவாச அடையாளம், அதாவது இயேசு வந்துவிட்டார் இனி அனைத்தும் நல்லதுதான் நடக்கும், தேவையில்லாத கவலைகள் வேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம்.

வ.23: இயேசுவின் இந்த வரி எதிர்காலத்தில் உள்ளது. ἀναστήσεται ὁ ἀδελφός σου இது உன் சகோதரன் உயிர்த்தெழுவான், என்பதை எதிர்காலத்தில் குறிக்கிறது. இந்த எதிர்காலம் எப்போது என்பதுதான் மார்த்தாவின் தேடல். அத்தோடு உயிர்ப்பின் மீது இயேசுவிற்குள்ள அதிகாரத்தையும் இது காட்டுகிறது.

வ.24: இந்த வரியில் மார்த்தா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். உயிர்ப்பு நாளைப்பற்றி அவர் பேசுகிறார். யோவான் காலத்து திருச்சபை உயிர்ப்புநாளைப் பற்றி நல்ல புரிதல்கள் கொண்டிருந்தார்கள் என்பது இங்கனம் புலப்படுகிறது.

வவ.25-27: இந்த வரிகள்தான் இந்த பகுதியில் மிக முக்கியமான வரிகள். வ.25 இயேசுவை முதல் ஏற்பாட்டு கடவுள் போல காட்டுகிறது. 'நானே' என்னும் சொற்றொடர், நமக்கு விடுதலைப் பயண கடவுள் அனுபவத்தை நினைவூட்டுகிறது. ἐγώ εἰμι ἡ ἀνάστασις καὶ ἡ ζωή இயேசு தன்னை உயிர்தெழுதலும் உயிரும் என்று கடவுளாகக் காட்டுகிறார். இது யோவான் நற்செய்திக்கே உரிய தனித்துவம். அத்தோடு ஒருவருடைய வாழ்வும் அவரது மரணமும், அவர் இயேசு மேல் கொண்டுள்ள நம்பிக்கையிலே தங்கியுள்ளன என்பதையும் காட்டுகிறது. நம்பிக்கை, சாகா வரத்தை கொடுக்கிறது, இந்த சாகாவரம் என்பது உடலியல் சம்பந்தமானது அல்ல, மாறாக அதையும் தாண்டியது என்பதை யோவான் தன் வாசகர்களுக்கு காட்டுகிறார். அத்தோடு 'இதை நீ நம்புகிறாயா' (πιστεύεις τοῦτο;) என்ற இயேசுவின் கேள்வி உண்மையில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்குமான கேள்வி. வ.27, ஆதித் திருச்சபை மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கொண்டிருக்க வேண்டிய விசுவாச சத்தியத்தை சுருக்கமாக காட்டிவிடுகிறது. அதாவது, ஆம் (ναὶ), இயேசு ஆண்டவர்தான் மெசியா (ὁ χριστὸς), அவர்தான் இறைமகன் (ὁ υἱὸς τοῦ θεοῦ), அத்தோடு அவர்தான் உலகிற்கு வரவிருந்தவர் (κόσμον ἐρχόμενος).

இ. இயேசுவின் கண்ணீர்: வவ.28-37

வவ.28-31: மார்த்தா, மரியாவை இரகசியமாக கூப்பிடுகிறார். இந்த செய்தி மரியாவை உடனடியாக எழுந்து இயேசுவின் காலடிக்கு செல்ல வைக்கிறது. இயேசு ஏன் இன்னும் ஊருக்குள் வரவில்லை என்பதும் ஒரு ஆச்சரியமாக வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் யூதர்களை வெளியே வரவைக்க நினைத்திருக்கலாம். மரியாவின் உடனடி மாற்றம், அவர் இயேசுவில் வைத்திருந்த அன்பையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. வ31 பல யூதர்களை மிக இரக்கமுள்ளவர்களாக காட்டுகிறது. யூத மக்கள் சகோதர பாசமுள்ளவர்கள், தங்கள் இனத்தோடு எப்போதுமே தங்களை அடையாளப்படுத்தினார்கள். அயலவர்களின் துன்பங்களை தங்கள் துன்பங்களாக கருதினார்கள் (ஒரு காலத்தில் நம் முன்னோர்களும் இப்படித்தான் வாழ்ந்தார்கள்). வீட்டிலே ஆறுதல் சொன்னவர்கள், மரியாவோடு சேர்ந்து கல்லறைக்கு ஓடுகிறார்கள். இதன் மூலம் இயேசுவின் அரும் அடையாளத்தை பார்க்க வாய்ப்பொன்று தேடிக்கொள்கிறார்கள்.

வ.32: இந்த வரி மரியாவின் விசுவாசப்பிரமாணமாக இருக்கிறது. ஆண்டவர் இருந்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார், என்பது மிக முக்கியமான யோவானின் படிப்பினை.

வ.33: மரியா மற்றும் யூதர்களின் அழுகை இயேசுவை உள்ளத்தில் குமுற வைக்கிறது. இதனை கிரேக்க மூல பாடம், 'இயேசு தன் ஆவியிலே உந்தப்பட்டு கலக்கமுற்றார்' (ἐνεβριμήσατο τῷ πνεύματι καὶ ἐτάραξεν ἑαυτὸν) என உணர்வு பூர்வமாகக் காட்டுகிறது. இயேசு கடவுளாக இருக்கும் அதே வேளை அவர் உண்மையான மனிதராகவும் இருந்தார் என்பதற்கு இது நல்லதோர் உதாரணம்.

வவ.34-35: இயேசுவின் கேள்வியும், அவர் கண்ணீரும் வாசிப்பவர்களையும் அழ வைக்கும். யோவான், இயேசு கடவுள், அத்தோடு இந்த கடவுள் இயேசு அழக்கூடிய கடவுள். இயேசுவின் அன்பின் அடையாளம் இந்த கண்ணீர். இயேசுவின் அழுகையை கிரேக்கம் ἐδάκρυσεν என்ற சொல்லில் காட்டுகிறது. இது மௌனமாக ஓர் அழுகை. மார்த்தா மரியா ஒப்பாரி வைத்து அழுதார்கள், இயேசு அமைதியாக அழுகிறார். இலாசரை இயேசு உயிர்ப்பிக்க போகிறார், பின் ஏன் அவர் அழுகிறார்?. சில ஆய்வாளர்கள், இயேசு இங்கே இலாசரை நினைத்தல்ல, இந்த மக்களின் எதிர்காலத்தை நினைத்தும், பாவம் மற்றும் மரணம் இவற்றை நினைத்தும் இயேசு அழுதார் என்கிறார்கள். எது எப்படியெனினும் இயேசு அழுதார். அவர் அழுகை அவரின் பலவீனத்தை அல்ல மாறாக அவர் பலத்தைத் காட்டுகிறது. ஆண்கள் அழக்கூடாது என்ற ஒரு தமிழ் பாரம்பரியத்தை இது கேள்வி கேட்கிறது.

வவ.36-37: சில யூதர்களின் சிந்தனையை படம் பிடிக்கிறார் யோவான். ஒரு சிலர் இயேசுவின் நட்பினைக் கண்டு ஆச்சரியப்பட, இன்னொரு குழு அங்கேயும் குறைபிடிக்கிறது. சாவு வீட்டிலும் குறைபாடுகிறவர்கள், அங்கும் இருந்திருக்கிறார்கள். இயேசு பார்வையற்றவருக்கு பார்வையளித்தார் என்று சொல்வதன் மூலம் இயேசுவால் எல்லாம் முடியும் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதையும் யோவான் காட்டுகிறார்.

ஈ. இலாசரின் உயிர்ப்பு: வவ.38-44

வவ.38-40: யூதர்கள் இறந்த உடல்களை கல்லறைகளில் அடக்கி, பெரிய கற்களால் வாயிலை மூடினார்கள். உடலின் உயிர்ப்பை அவர்கள் நம்பவில்லை. புதைக்கப்படாததால் இறந்த உடலங்கள் துர்நாற்றம் அடிக்கும். சில மாதங்களின் பின்னர் இவர்கள் உலர்ந்த எலும்புகளை எடுத்து அவற்றை அந்த கல்லறைக்குள்ளே சேர்த்து வைப்பார்கள். இறந்த நான்காவது நாளிலே உடல்கள் அழுக தொடங்கியிருக்கும் அத்தோடு நாற்றம் வீசும். இதனைத்தான் மார்த்தா சொல்கிறார். இயேசு இங்கே கட்டளை கொடுக்கிறவராக காட்டப்படுகிறார். மார்த்தா இயேசுவிற்கு ஆலோசனை சொல்பவர் போல சற்று எதிர்மறை பாத்திரமாக காட்டப்படுகிறார். இதிலிருந்து மரியா மார்த்தாவிலும் உயர்ந்தவர் என்பது புலப்படுகிறது. இயேசுவின் மென்மையான கண்டிப்பு, மார்த்தாவை மட்டுமல்ல நம்மையும் சிந்திக்க வைக்கிறது. நம்புகிறவர்கள், கடவுளின் மாட்சியை காண்பார்கள் என்பது யோவானின் செய்தி.

வவ.41-44: இந்த வரிகளில் இயேசுவின் ஒரு சிறிய செபம் பதிவு செய்யப்பட்டு;ள்ளது. இந்த செபம் கூட யோவானின் ஆழமான இறையியலை காட்டி நிற்கின்றது. இயேசு தனக்கு கடவுள் எப்போதும் செவிசாய்கிறார் என்பதை அங்கிருந்த அனைவருக்கும் காட்டி தான் தான் உண்மையான கடவுளின் மகன் என உதாரணம் காட்டுகிறார். இந்த யூதர்கள் பல வேளைகளில் தங்களை உண்மையான கடவுளின் மக்கள் என காட்டி இயேசுவை எதிர்த்தவர்கள், இங்கே இயேசு கடவுளோடு தந்தை மகன் உறவில் பேசுவதைக் காண்கிறார்கள். முதலில் இயேசு நன்றி சொல்கிறார், இது அவருக்கு அனைத்தும் தெரியும் என்பதைக் காட்டுகிறது. இரண்டாவதாக இந்த அடையாளம் தனக்கு தேவையில்லை மாறாக இவர்களுக்கே தேவை என்பதையும் அவர் காட்டுகிறார். இந்த அடையாளத்தின் மூலமாவது, அவர்கள் தம்மில் (கடவுளில்) நம்புவார்கள் என்பதையும் இயேசு எதிர்பார்க்கிறார். இறுதியாக இயேசு இலாசருக்கு கட்டளையிடுகிறார் (Λάζαρε δεῦρο ἔξω), இறந்தவர்கள் மேலும் இயேசுவிற்கு அதிகாரம் உள்ளது என்பதை இது காட்டுகிறது. இலாசரை இயேசு வெளியே கூப்பிட்டது சாதாரண மரணத்திலிருந்தா அல்லது அவநம்பிக்கை என்கின்ற மரணத்திலிருந்தா, என்ற கேள்வி எழுகிறது. இலாசர் வெளியே வந்தாலும் அவர் இன்னும் கட்டுக்களோடே இருக்கிறார். அந்த கட்டுக்களையும் அவிழ்து அவரை வெளியே விடச் சொல்கிறார் இயேசு. இந்த சொற் பிரயோகங்களும் யோவானின் இறையியல் ஆழத்தைக் காட்டுகிறது. விசுவாசிகளின் கட்டுக்கள் அவிழ்க்கப்படவேண்டும், போக விடப்பட வேண்டும்.

உ. யூதர்களின் நம்பிக்கை: வ.45

மரணத்திலிருந்து ஒருவரை உயிர்ப்பிற்பது சாதாரண விடயமல்ல. இதனை யூத தலைவர்களால் செய்ய முடியாது. இதனால்தான் பலர் இயேசுவில் நம்பிக்கை கொள்கின்றனர். இதனைத்தான் இயேசுவும் எதிர்பார்த்தார் என முன்னைய வரிகள் காட்டுகின்றன. இருப்பினும் இந்த நம்பிக்கை போதாது என்பதை வருகின்ற வரிகள் காட்டும்.

தொடர்ச்சியான ஏமாற்றங்களும், உரிமை மறுப்புக்களும்,
பொருளாதார சரிவுகளும், சுற்றுச் சூழல் மாசுகளும்,
கல்லறைக்குள் நம்மை இலாசரைப் போல அடக்கம் செய்கின்றன.
நம் எலும்புகள் உலர்ந்து விட்டது.
அவசரமாக ஆண்டவரின் மூசு;சுக் காற்றும், மௌமான அழுகையும்
தேவைப்படுகிறது.
அன்பு ஆண்டவரே உம்மை நம்பி,
அதனால் வாழ்வடைய வரம் தாரும். ஆமென்.