இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் வாரம் (அ)

முதல் வாசகம்: எசாயா 58,7-10
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 112
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 2,1-5
நற்செய்தி: மத்தேயு 5,13-16


முதல் வாசகம்
எசாயா 58,7-10

7பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! 8அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். 9அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் 'இதோ! நான்' என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, 10பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

உண்ணா நோன்பு (צוֹם ட்சோம்- உணவுத் தவிர்ப்பு) என்பது இஸ்ராயேல் மக்கள், காலம் காலமாக பின்பற்றிய ஓர் ஆன்மீக புதுப்பித்தல் நிகழ்வு. இதற்க்கு பல பின்னனிகள் இருந்தன. மத்திய கிழக்கு நாடுகளில் இது முதலில் மருத்துவ பின்புலத்தைக் கொண்டு, பின்னர் சமய அர்த்தங்களை கொடுக்கிற ஒரு நிகழ்வாக மாறியது. இஸ்ராயேலின் உண்ணாநோன்பு புலம்பலுடனும், அழுகையுடனும் செய்யப்பட்டது (காண்க 2சாமு 1,12). சாதாரண செபத்திற்கு வலுச்சேர்க்கும் முயற்சியாகவே இஸ்ராயேலர் இதனைக் கண்டனர். அனேகமாக உண்ணா நோன்பிருக்கிறவர்கள் சாக்குடை உடுத்தி, சாம்பலைத் தடவி, வெறும் தரையில் அமர்ந்தனர். உண்ணா நோன்பு என்னும் இந்த செயல், மனிதர்கள் தங்களது இயலாமையை கடவுளுக்கு வெளிப்படுத்தும் ஒரு அடையாள செபம் என்றும் மானிடவியலாளர்கள் சிலர் வாதிடுகின்றனர். உண்ணாநோன்பு மூலமாக கடவுளின் வெளிப்படுத்தல்களை கண்டுகொள்ளலாம் என்ற நம்பிக்கை கிரேக்கர்களின் காலத்தில் வளர்ந்தது. போரில் வெற்றி பெறுவதறக்காகவும் உண்ணா நோன்பு ஒரு பரித்தியாகமாக செய்யப்பட்டது (ஒப்பிடுக 1சாமு 14,24). பபிலோனிய இடப்பெயர்விற்கு பின்னர், இந்த உண்ணாநோன்பு முறை கடவுளுடைய நேரடி தலையீட்டை பெற விளையும் ஒரு நிகழ்வாக மாறியது. இந்த முறையை இயேசு நன்கு அறிந்திருந்தார், என்பதை நற்செய்திகளில் காணக்கூடியதாக இருக்கிறது (காண்க மாற் 9,29: மத் 17,21). இயேசுவும் நாற்பது நாட்கள் பாலை நிலத்தில் உண்ணா நோன்பிருந்ததை இங்கே நினைவுகூரல் நல்லது. உண்ணா நோன்பு தேவயற்றது என்று எசாயாவோ அல்லது நற்செய்தியாளர்களே சொல்லவில்லை, அத்தோடு உண்ணா நேன்பு என்னும் ஒரு அழகான பாரம்பரியம் மெதுமெதுவாக பல நவீன காரணங்களைப் பொருட்டு திருச்சபையில் மெதுவாக மறைந்து வருவது அபாயமானது.

இந்த அதிகாரத்தில் (58) எசாயா உண்மையான நோன்பின் மகத்துவத்தை தன்னுடைய சாயலில் கொடுக்க விளைகிறார். இந்த வரிகளையும், எசாயா புத்தகத்தின் இந்த அதிகாரத்தின் இட அமைவையும் கொண்டு இது பபிலோனிய அடிமைத்தனத்தின் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. வரிகள் 1-6, போலியான நோன்பை காட்டுகின்றன. அந்த நோன்பின் பின்னால் சுயநலமும், ஆன்மீக வெறுமையும் தான் இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. இதற்கு மாறாக உண்மையான நோன்பினை வரிகள் 7-12 விளக்குகின்றன.

வ.7 கடவுள் விரும்பும் உண்ணா நோன்பின் அமைவுகள் என்ன, என்பதை இலக்கிய வடிவில் கொடுக்கிறார் எசாயாவின் ஆசிரியர். இந்த வரியில் வரும் நல்ல செயற்பாடுகள் நமக்கு மத்தேயு 25ம் அதிகாரத்தை நினைவூட்டும் (✽ஒப்பிடுக மத். 25, 35-36).

(✽35ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; 36நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.)

அ. பசித்தோருக்கு உணவை பகிர்ந்து கொடுத்தல்: உண்ணா நோன்பு செய்து உணவை சேமித்து வைக்க முடியும், அத்தோடு உண்ணா நோன்பிருந்து பின்னர் மாலையில் அதிகமான உண்ணவும் முடியும். ஆனால் உண்மையான உண்ணா நோன்பு என்பது, தவிர்க்கப்படும் உணவை பசிப்போருக்கு கொடுப்பதில் பெறுமை அடைகிறது என்று அழகான உண்மையை ஆசிரியர் காட்டுகிறார். உண்ணா நோன்பு என்பது ஒரு அடையாளம் மட்டுமே, இது கடவுளின் பார்வையை ஈர்க்காது ஆனால் நல்ல எண்ணமான உணவுப் பகிர்வு கடவுளின் பார்வையை நிச்சயமாக ஈர்க்கும் என்பது ஆசிரியரின் செய்தி. அத்தோடு இங்கே தங்களின் உணவை ஆசிரியர் பகிரக் கேட்கிறார் (לַחְמֶ֔ךָ உனது உணவு), அதாவது உணவை தவிர்ப்பவர், அந்த உணவை கொடுக்கவேண்டும் அப்போது அவருக்கு பசியின் கொடூரம் தெரியும். இதுதான் உண்மையான உண்ணா நோன்பு.

ஆ. தங்க இடமில்லா வறியோருக்கு இல்லத்தில் இடம் தருதல்: பபிலோனிய இடப்பெயர்விற்கு பின்னர், வறியவர்கள் மேலும் வறியவர்கள் ஆயினர். பணக்காரர்கள் தங்கள் நிலங்களை பெரிதாக்கிய அதே வேளை ஏழைகள் வீடு நிலமற்றவர்களாயினர். இஸ்ராயேல் இனம், சகோதரத்துவத்தை பாராட்டுகின்ற முக்கியமான இனங்களில் ஒன்று. மோசே காலம் தொடங்கி பபிலோனிய இடப்பெயர்வு காலம் வரைக்கும், வீடற்றவர்களுக்கு வீட்டில் இடம் கொடுத்தல் ஒரு புண்ணியமாக பார்க்கப்பட்டது. கடவுள் அனைவரின் தந்தையாக இருப்பதனாலும், அனைத்து உலகு கடவுளுக்கு சொந்தம் என்பதாலும், வீடற்றவர்கு இடம்தருவதன் வாயிலாக இஸ்ராயேலர் அந்த கடவுளின் உண்மையான மக்களாகின்றனர். (இந்த புண்ணியம் இந்த காலத்திலும் மனிதத்தை மதிக்கிற அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்டும், டரம்ப் போன்ற சில தலைவர்கள் மட்டும்தான் இதற்கு வேறு வரைவிலக்கணம் கொடுக்க முயல்வர்).

இ. உடையற்றோருக்கு உடையளித்தல்: உடை அக்காலத்தில் வெறும் ஆடையை மட்டுமல்ல அது ஆளையும் காட்டியது. நம்முடைய தமிழ் பழமொழி 'ஆள் பாதி ஆடை பாதி' என செல்வது போல. ஒருவருடைய உடையை வைத்து அவரின் தராதரம், செல்வம், படிப்பு, சமூக நிலை போன்றவை கணிக்கப்பட்டன. இங்கனம், உடையற்று இருப்பவர், அனைத்தையும் இழந்தவராகிறார். அவர் அடிமை என்றே கருதப்படுவார். உடையற்றவருக்கு உடையளிப்பது, அவருக்கு மனிதத்தை கொடுப்பதற்கு சமன். (அன்று உடை ஒருவரின் கலாச்சாரத்தையும், உரிமைகளையும் காட்டிய அதே வேளை இன்று ஆடைகுறைத்தல் அல்லது வெற்றுடம்பு ஒருவரின் உரிமை அல்லது கலாச்சாரமாகிறது, இதனை என்னவென்று சொல்வது).

ஈ. இனத்தாருக்கு உதவிசெய்தல்: உன் இனத்தாரை, என்ற தமிழ் விவிலிய சொல்லை எபிரேய மூல பாடம் 'உன் சதைக்கு' என்றே (מִבְּשָׂרְךָ) குறிப்பிடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு இஸ்ராயேலரும், ஒரே உடல் அல்லது சதை என்பது புலப்படுகிறது. தேவையிலிருக்கும் இனத்தாருக்கு ஒருவர் தன் இன அடையாளத்தை மறைத்தல் என்பது, அவருக்கு உதவிசெய்ய முடியாது, என்ற இனவெறுப்பையே காட்டுகிறது. இது ஒரு பாவம் என்கிறார் எசாயாவின் ஆசிரியர். இப்படி செய்கிறவரின் உண்ணா நோன்பு, உதவாதது என்பது சாலப்பொருந்துகிறது.

வ.8: மேற்குறிப்பிட்ட புண்ணியங்களை ஒருவர் செய்வதன் வாயிலாக அவருக்கு கிடைக்கும் மாற்றங்களை இந்த வரி விளக்குகின்றது.

அ. ஒளி விடியல் போல் இருக்கும்: ஒளி (אוֹר ஓர்), முதல் ஏற்பாட்டில் கடவுளின் பிரசன்னத்தைக் காட்டும் மிக முக்கியமான அடையாளம். இந்த ஒளியை நோக்கியே அன்று பலமதங்கள் மற்றும் மொழியியல்கள், பல மெய்யறிவு வியாக்கியானங்களை தந்தன. விவிலியம் இதற்கு ஒரு படி மேலே சென்று, நல்ல இஸ்ராயேலரின் ஒளி சாதாரண ஒளியல்ல அது, விடியல் போல் இருக்கும் என்கிறார். விடியல் (שַׁחַר ஷஹர்), இது விவிலியத்திலுள்ள இன்னொரு முக்கியமான அடையாளம். இதற்கு, நீதி, நிம்மதி, உரிமை, விடியல், சுதந்திரம் என்ற பல அர்த்தங்கள் உள்ளன. இந்த இடத்தில் இது வெளிச்சத்தையே குறிக்கின்றது.

ஆ. விரைவில் நலமான வாழ்வு துளிர்க்கும்: அடிமைத்தனத்தில் இருப்பவர்கள் நலமான வாழ்வை எதிர்பார்ப்பார்கள். உண்ணா நோன்பின் நோக்கமும் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். நலமான வாழ்வு என்பது (אֲרוּכָה), சுகநல ஆரோக்கியத்தை குறிக்கிறது. இருப்பினும் இது உடல், உள, பொருள,; மற்றும் நல்வாழ்வையும் குறிக்கலாம்.

இ. முன்செல்லும் நேர்மை: இது அழகான ஒரு உவமானம். ஆசிரியர் நேர்மையை ஒரு வானதூதர் போல், நல்லவர்களின் முன்னால் சென்று காக்கும் என்கிறார் (הָלַ֤ךְ לְפָנֶ֙יךָ֙ צִדְקֶ֔ךָ). உன் நேர்மை உன் முகத்திற்கு முன் செல்லும் என்றும் இதனை மொழிபெயர்க்கலாம். ஒருவருக்கு முன் நேர்மை செல்லும் போது அவர் தீமை, மற்றும் ஆபத்துக்களை தவிர்ப்பார். நேர்மை விவிலியத்தில் மிகவும் விரும்பப்பட்ட மிக முக்கியமான ஒரு இறையியல் விழுமியம். நேர்மையற்ற உலகிலும், நேர்மையான உலகிலும் இந்த பண்பு என்றும் இன்றும் விரும்பப்படுகிறது.

ஈ. பின் காக்கும் ஆண்டவரின் மாட்சி: மாட்சி என்பது (כָבוֹד கவோட்), ஆண்டவரின் வல்லமையைக் குறிக்கிறது. ஆண்டவர் உருவம் அற்றவர் என்ற படியால், அவரின் மாட்சி ஒரு உருவகமாக வர்ணிக்கப்படுகிறது. இந்த மாட்சி என்பது கடவுளுடைய அதிகாரத்தையும், நிறைவையும், வளத்தையும், மகத்துவத்தையும், பயபக்தியையும் குறிக்கிறது. இவைதான், இந்த நல்ல நபருக்கு பின்னால் காவல் தூதர் போல் செல்லும் என்கிறார் ஆசிரியர்.

வ.9: இந்த வரி ஆண்டவரின் பதிலளிப்பை பற்றிக் கூறுகிறது. ஆண்டவர் நீதிமான்களுக்கே செவிசாய்கிறார் என விவிலியம் காட்டுகிறது (காண்க: தி.பா 4,3: 5,3). நோன்பிருப்பதன் வாயிலாக ஒருவர் கடவுளின் செவிசாய்த்தலை பெறமுடியாது மாறாக நேர்மையான வாழ்வும், இரக்கச் செயல்களுமே ஒருவரை கடவுளின் செவிசாய்ப்பிற்கு தகுதியாக்கிறது என்பது இவர் வாதம். ஆண்டவருடைய செவிசாய்த்தல் இரண்டு ஒரே கருத்துச் சொற்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. 'இதோ நான்' என் ஆண்டவர் மறுமொழி தருவது (הִנֵּנִי), ஆண்டவருடான நெருக்கமான உறவைக் காட்டுகிறது.

இதே வரியில், மேலதிகமான எதிர்பார்ப்புக்களும் முன்வைக்கப்படுகிறது. தங்களிடம் உள்ள நுகத்தை அகற்றக் கேட்கிறார், இது இவர்களின் தேவையற்ற பாரங்களைக் குறிக்கலாம். அல்லது இவர்களின் வேற்று தெய்வ வழிபாட்டையும் குறிக்கலாம். குற்றம் சாட்டுதலும் மற்றும் பொல்லாதன பேசுதலையும், நுகங்கள் என்பது போல் ஆசிரியர் வரிசைப்படுத்துகிறார்.

வ.10: மேலதிகமான புண்ணியங்கள் சொல்லப்படுகின்றன. பசித்திருப்போருக்கு உன்னையே கையளித்தல் என்னும் சொற்றொடர் வித்தியாசமாக இருக்கிறது. எபிரேய மூல பாடம் இங்கே, வித்தியாசமாக முழு ஆளையையும் குறிப்பதாக அமைகிறது. பசித்தோருக்கு உணவளித்தலும், வறியோறின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுதலும் ஒத்த கருத்தாக பார்க்கப்படுகிறது. இதனால் இருண்ட வாழ்வு, பகல் வெளிச்சம் போல பிரகாசமாக இருக்கும் என்கிறார் ஆசிரியர். பகல் வெளிச்சம் என்பது சூரிய வெளிச்சத்தைக் குறிக்கும், அதாவது சூரிய வெளிச்சம் எதனாலும் மறைக்கப்படாது என்னும் அடையாளம் இங்கே காட்டப்படுகிறது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 112

1அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்.
3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.
5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.
6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
7தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.
8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.
9அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.
10தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்; பல்லை நெரிப்பர்; சோர்ந்து போவர்; தீயோரின் விருப்பமெல்லாம் வீணாய்ப்போம்.


கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் பேறுகளை இந்தப் பாடல் காட்டுகின்றது. திருப்பாடல் 111 மற்றும் 112 போன்றவை எபிரேய அரிச்சுவடி அமைப்பில் எழுதப்பட்ட, ஒரே கருத்துக்களை கொண்டுள்ள பாடல்கள் என அறியப்படுகின்றன. எபிரேய அரிச்சுவடி அமைப்பில் திருப்பாடல்கள் எழுதப்படுவது, எபிரேய கவிக்கே உரிய மிக தனித்துவமான பண்பு. இந்த வகையில் சிறுவர்கள், வளர்ந்தவர்கள் இந்த பாடல்களை மனனம் செய்ய இது உதவியாக அமைந்தது. ஒளவையாரின் பல தத்துவ பாடல்களும் இப்படியான தமிழ் அரிச்சுவடி அமைப்பிலே அமைந்துள்ளன. (உ-ம்: அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல்...). இந்த பாடலின் அதிகமான அடிகள், திருப்பிக் கூறல் என்ற எபிரேய கவிநடையையும் பிரதி பலிக்கினறன.

வ.1: ஆண்டவருக்கு அஞ்சு நடப்போர் பேறுபெற்றோராகின்றனர். ஆண்டவருக்கு அஞ்சி நடத்தல் என்பது முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான ஒரு விழுமியம். அஞ்சி நடத்தல் என்பது பயத்தை அல்ல மாறாக, தனிமனித மரியாதையையே முக்கியமாக காட்டுகிறது. ஆண்டவரின் கட்டளைகளில் இவர்கள் பெருமகிழ்சி அடைவர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த திருப்பாடல் அப்படியே திருப்பாடல் ஒன்றை நமக்கு நினைவூட்டுகின்றன.

வ.2: இஸ்ராயேல் மக்கள் தங்களுடைய தோல்விகளை பல முறை பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள். இது இ;ப்படியிருக்க, மனித தோல்விகளுக்கு காரணம் மனித பலவீனமான குறைவான படைப்பலம் அல்ல, மாறாக மனிதர் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்காததே காரணம் என்பது போல சொல்கிறார். கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிப்பதால் அவர்களின் வழிமரவு வலிமையானதாக அல்லது அது ஆசிபெற்ற நேர்மையான வழிமரபாக இருக்கும் என்பது இவர் நம்பிக்கை.

வ.3: சொத்தும் செல்வமும் கடவுள் மனிதர்க்கு தருகின்ற கண்ணுக்கு தெரிகின்ற ஆசீர்கள். விவிலியத்தில் கடவுளின் நண்பர்கள் அல்லது கடவுள் பார்வையில் நல்லவர்கள் எனப்பட்டவர்கள் அதிகமானவர்கள் நிறை செல்வத்துடன் வாழ்ந்தவர்களே. விவிலியம் எளிமையை போற்றுகின்றதே தவிர வறுமையை போற்றாது. சொத்தும் செல்வமும் (הוֹן־וָעֹ֥שֶׁר) வீட்டில் தங்கியிருப்பது, அந்த வீட்டில் நீதி நிலைத்திருப்பதற்கு சமனாகும்.

வ.4: இருளில் ஒளி அதிசயமான ஆச்சரியம் (בַּחֹ֣שֶׁךְ א֭וֹר). மின்சாரம் அல்லது சூரிய மின்சக்தி இல்லாத அக்காலத்தில் இருள் நிச்சயமாக மறைபொருளாகவே கருதப்பட்டது. ஒளி எப்போதுமே கடவுளின் அடையாளமாக பார்க்கப்பட்டது. ஆசிரியர் இந்த பொளதீக உண்மைகளையும் தாண்டி ஒரு படி மேலே சென்று உண்மையான ஒளி, நேர்மை, அருள் மற்றும் இரக்கம் கொண்ட வாழ்வு என்கிறார். பகலும் இரவும் மாறி மாறி வரும் அதாவது ஒளி மறையும் இருள் ஆட்சி செய்யும், ஆனால் நேர்மை, அருள் மற்றும் இரக்கம் உடையோர் என்றும் ஒளிபோல திகழ்வர் என்பது இவர் நம்பிக்கை.

வ.5: கடன் கொடுத்தல் (לָוָה) இஸ்ராயேல் சமூக அக்கறையில் நோக்கப்படவேண்டியது. சக இஸ்ராயேலருக்கு வட்டிக்கு கடன் கொடுத்தல் பாவமாக கருதப்பட்டது (✽காண்க இ.ச 23,19). இருப்பினும் வெளிநாட்டவருக்கு வட்டிக்கு கடன் கொடுப்பது சகிக்கப்பட்டது (காண்க இ.ச. 23,20). கடன் கொடுத்தல் வழியாக வறுமையில் வாடிய ஓர் இஸ்ராயேலருக்கு நம்பிக்கை பிறக்க வழி பிறந்தது. இதனால் வட்டியில்லாத கடன் ஒரு உதவியாகவே பார்க்கப்பட்டு போற்றப்பட்டது. அத்தோடு அவர்கள் நீதியானவர்கள் என்றே கருதப்பட்டார்கள்.

(✽19உன் இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே.)

வ.6: நேர்மையாளர்களின் குணங்கள் மேலுள்ள வரிகளில் விளக்கப்பட்டுள்ளன. நேர்மையாளர்கள் இறந்தும் வாழ்வர் என்கிறார் ஆசிரியர். அதாவது, முதல் ஏற்பாடு மறுவாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லை ஆனால் நேர்மையாளர் என்றும் மக்கள் மனதில் வாழ்வர் என்கிறது (לְזֵכֶר עוֹלָ֗ם יִהְיֶה צַדִּיק). என்றுமே வாழ்தல் என்பது, ஆசீர் பெற்றவர்களின் கொடையாக இருப்பதால், அதனை பெற நீதியான வாழ்வு தேவையானதாகிறது.

வ.7: மேலதிகமாக, நேர்மையானவர்களுக்கான நன்மைத்தனங்கள் காட்டப்படுகின்றன. தீமையான செய்தியின் அச்சுறுத்தலின்றி இதயம் அமைதியில் இருத்தல் என்பது மிக முக்கியமான நற்செய்தி. பல விதமான தீமை செய்திகளான, போர், வன்முறை, வெளிநாட்டவர் படையெடுப்பு, காட்டு மிருகங்களின் தாக்குதல், வழிப்பறி கொள்ளைகள், கொள்ளை நோய்கள், வரட்சி, மணல் புயல் போன்றவை அக்கால மக்களுக்கு தீமையான செய்தியாக அடிக்கடி வந்து போயின. நீதிமான்கள் ஆண்டவரிடம் நம்பிக்கை வைப்பதால் (בָּטֻחַ בַּיהוָה), இந்த தீய (שְּׁמוּעָה רָעָה) செய்திகளால் அவர்கள் இதயம் அசைவுறாது என்கிறார்.

வ.8: நெஞ்சம் உறுதியாக இருக்க, தீயவர்கள் அழிவதை காணவேண்டும் என்பது உலக நீதி. இதனை திருப்பாடல் ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். அச்சம் உள்ளத்தை மேற்கொள்வதுதான் சகல உள நோய்களுக்கும் காரணம் என இன்றைய உளவியல் மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இதனை அக்கால திருப்பாடல் ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். இந்த பாடல் ஆசிரியர் எதிரிகள் என்று (צרר), யாரை குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக இல்லை, இது தனிப்பட்ட எதிரிகளாகவோ அல்லது இஸ்ராயேலின் எதிரிகளாகவோ இருக்கலாம். இந்த சொல் צָרַר தனிப்பட்ட உறவு, எதிரி போலத் தோன்றுகின்றது.

வ.9: நீதிமான்களுடைய சில குணங்கள் மேலும் விவரிக்கப்படுகிறது. இங்கே நீதிமான்கள் என்ற எழுவாய் இல்லை அத்தோடு முதல் வரி பாவிகளைப் பற்றி சொல்லிக்கொண்டு இந்த வரி தலைப்பில்லாமல் நீதிமான்களை பற்றி பாடுவது சற்று மயக்கமாக உள்ளது. வாரி வழங்குதலும், ஏழைகளுக்கு ஈகையும் ஒத்த கருத்துச் சொற்கள் (פִּזַּ֤ר ׀ נָתַן לָאֶבְיוֹנִים). பின்வரும் சொற்கள் நீதித் தன்iமையை பற்றி பாடுவதால் இந்த வரியின் தலைவராக நீதிமான்களை எடுக்கலாம். இந்த வரியின் இரண்டாவது பாகம், 'அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்' என்று தமிழ் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எபிரேய மூல பாடத்தில் இது 'அவருடைய கொம்பு மரியாதையுடன் உயர்த்தப்படும்;' (קַרְנ֗וֹ תָּר֥וּם בְּכָבֽוֹד) என்றே உள்ளது. இதன் அர்த்தமும் ஒன்றே. கொம்பு (קֶרֶן கெரென்) வெற்றி மற்றும் பலத்தின் அடையாளம். இது முதல் ஏற்பாட்டு காலத்தில் பல அடையாளங்களுடன் பாவிக்கப்பட்டது. மாட்டின் கொம்பு மாட்டின் பலம் என்ற அர்த்தத்தில் இந்த நம்பிக்கை தொடங்கியிருக்கலாம்.

வ.10: இவ்வளவு நேரமும் நீதிமான்களையும் பேறுபெற்றவர்களையும் பாடிய ஆசிரியர் இவர்களுக்கு எதிரான, பாவிகளுக்கு என்ன நடக்கும் என்பதையும் மறக்காமல் தருகிறார். எரிச்சல் அடைதல் தீயவர்களனின் முக்கியமான அடையாளம். எரிச்சல் அன்பின் எதிர் கருத்து. எரிச்சல் இதயத்தில் அன்பு, இரக்கம் போன்றவை இல்லாமையை காட்டுகிறது. இன்றைய உலகில் எரிச்சல் அடைபவர்களே அதிகம், அதிலும் அதனை உளவியல் ரீதியாக நியாயப்படுத்துபவர்களும் அதிகம். எவ்வாறெனினும் கடவுளின் பார்வையில் இது ஒரு பாவமும், நோயுமாகும். எரிச்சலுக்கு எபிரேயம் பார்வை (רָאָה) என்ற சொல்லை பயன்படுத்துகிறது, இதிலிருந்து எரிச்சல் பார்வையில் இருந்து தொடங்குகிறது என்ற நம்பிக்கையை ஊகிக்கலாம். எரிச்சலோடு கோபமும் வருகிறது என்கிறார் ஆசிரியர். எரிச்சலும் கோபமும் சகோதரர்கள் போல.

பல்லை நெரித்தல் (שִׁנָּיו יַחֲרֹק): பல்லை நெரித்தல் என்பது விவிலிய மொழியில் உள்ளார்ந்த அமைதியின்மையையும், நெருக்குதல்களையும் காட்டுகிறது. விலங்குகள் கோபத்தில் தம் பற்களை நறுக்குவதை போல பொறாமையுடையவர்கள் விலங்குகள் என ஆசிரியர் காட்டுகிறார். சோர்ந்து போதலை 'விருப்பம் அகன்றுபோதல்' என்று எபிரேய மூல பாடம் காட்டுகிறது (נָמָס תַּאֲוַת). இறுதியாக அனைத்திற்கும் 'அவர்களின் விருப்பம் எல்லாம் அழிந்து போகும்' என்று முடிவுரை எழுதுகிறார்.



இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 2,1-5

1சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. 2நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. 3நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். 4நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. 5உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

கொரிந்திய திருச்சபைக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து கடந்த வாரத்திலும் வாசித்தோம். திருச்சபையில் பிளவுகள் சகித்துக்கொள்ள முடியாதவை, அத்தோடு அவை கிறிஸ்தவத்திற்கே எதிரானவை என்பதையும் முதாலவது அதிகாரம் அழகாகக் காட்டுகிறது. அத்தோடு மனிதர் பற்றிக்கொள்ள வேண்டியது உலக ஞானத்தை அல்ல, மாறாக இறைஞானத்தையே என்றும் அது காட்டுகிறது. இந்த இரண்டாவது அதிகாரம், கடவுளின் ஞானம் வேறொன்றுமில்லை அது சிலுவையின் ஞானமே என அழகாகவும், ஆழமாகவும் காட்டுகிறது. இந்த அதிகாரத்தில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உள்ளன அவை:

அ. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி (வவ.1-5),

ஆ. தூய ஆவியும் வெளிப்பாடும் (வவ.6-15) என்பவையாகும்.

பவுல் தன்னை தாழ்த்திக் கொள்வதில் வல்லவர், அவருடைய வரிகளைக் கொண்டு அவரை தவறாக எடைபோட்டுவிடக் கூடாது. பவுல் விவிலியத்தை நன்கு கற்றவர் அதனை முறையாக கமாலியேல் என்ற ராபியிடம் பயின்றார், அத்தோடு நல்ல பரிசேயனாக யூத மதம் மீதும், இஸ்ராயேல் மண் மீதும் உன்மையான காதல் கொண்டவர் (காண்க தி.பணி 22,3). பவுல் தர்சு நகரை சேர்ந்தவராதலால் அவருக்கு கிரேக்க மொழியும், அவர் உரோமைக் குடிமகன் என்பதால் இலத்தீனையும் நன்கு அறிந்திருப்பார். இருப்பினும் இவருடைய கற்றல் மற்றும் உலக மெய்யறிவுகள் அனைத்தையும் கிறிஸ்துவின் பொருட்டு குப்பையாக கருதுவதாலே (காண்க பிலி 3,8), இந்த வரியில் அவர் தாழ்ச்சியுடன் பேசுகிறார். அப்பலோவைப் போல பவுல் திறமையான பேச்சாளராக இருக்காவிடினும், பவுல் ஒரு கிறிஸ்து-மெய்யியல்வாதி என்பதை மறுக்க இயலாது.

வ.1: இந்த வரி மூலம், இதனை எழுதியபோது அவர் கொரிந்தில் இல்லை என்பது புலப்படுகிறது. கிரேக்க விவிலியம், இந்த இடத்தில் பவுல் ஆண்களையும் பெண்களையும் விழிப்பதாகவே காட்டுகிறது. ἀδελφοί அடெல்பொய் என்ற பன்மைச் சொல், ஆண்களையும் பெண்களையும், அதுவும் நெருக்கமான நண்பர்களை குறிக்கிறது. இந்த வரியில் பவுல் யாரையோ மறைமுகமாக சாடுவதனைப் போலுள்ளது. மிகுந்த சொல்வன்மையுடனும் (ὑπεροχὴν λόγου), ஞானத்தோடோ (σοφίας), தான் உங்களிடம் வரவில்லை என்பதிலிருந்து இவை கிறிஸ்துவிற்கு முன் செல்லாக் காசு என்கிறார் போல. இதனை அவர் கடவுளின் மறைபொருள் என்கிறார் (μυστήριον τοῦ θεοῦ).

வ.2: முதலாவது வரியில் கொரிந்தியர் விரும்பியவற்றை தான் கொண்டுவரவில்லை என்று சொல்லி, இந்த வரியில் தான் என்ன கொண்டு வந்தார் என்பதைக் காட்டுகிறார். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் முழுச் சுருக்கத்தையுமே இங்கே சுருக்கித்தருகிறார்.

அ. இயேசு மெசியா: இதுதான் பவுலுடைய நற்செய்தியின் சுருக்கம். சிலர் இயேசுவை மெசியா இல்லை என்றனர், சிலர் வேறு பலரை மெசியாவாகக் கண்டனர். இன்னும் சிலர், மெசியா இன்னும் வலவில்லை என்றனர். இந்த வேளையில், பவுல் தன் நற்செய்தியில் உறுதியாக இருப்பதை இந்த வரி காட்டுகிறது.

ஆ. அவர் சிலுவையில் அறையப்பட்டார்: சிலுவை யூதர்களுக்கு சாபம் (காண்க இ.ச 21,22), உரோமையருக்கு மடமை (காண்க 1கொரிந் 1,23), இருப்பினும் அந்த சிலுவையில் தான் மெசியா அறையப்பட்டார், இதனால் சிலுவை (σταυρός ஸ்டௌரொஸ்) மட்டுமல்ல இந்த உலகில் முழு ஞானமுமே மாற்றியமைக்கப்பட்டுவிட்டது என்பது புலப்படுகிறது. உரோமையர்கள் கொடுத்த தண்டனையில் கொடுரமான மற்றும் அசிங்கமான தண்டனையாக சிலுவை மரணமே இருந்தது. இதனை அவர்கள் உரோமையல்லாதவர்க்கு கொடுத்தார்கள். இயேசுவை காட்டிக்கொடுத்த யூதர்கள், இந்த தண்டனை மூலம் இயேசுவை கேவலப்படுத்தி அவரின் மெசியா தன்மையை மறைக்க முயன்றார்கள். ஆனால் இந்த சிலுவையே இன்று மெசியாவின் சிம்மாசனமாக மாறிவிட்டது.

இறுதியாக, தனக்கு இந்த இரண்டையும் தவிர வேறெதையும் தான் நினைக்கவேண்டிய தேவை இல்லை என்கிறார். கொரிந்திய கிரேக்க பேச்சாளர்கள், தங்கள் நகரைப் பற்றியும், அல்லது அவர்களது கல்வித் தகமைகளைப் பற்றியும் பேசி கேட்பவர்களை மயக்குவார்கள். இது அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட விவாத முறையாக இருந்தது. இதனை பவுல் உடைக்கிறார். அவருக்கு இயேசுவையும் சிலுவையையும் தவிர வேறொன்றும் சரியாக படவில்லை.

வ.3: தான் கொரிந்தியர் நடுவில் வலுவற்றவராகவும், அச்சத்தோடும், நடுக்கத்தோடும் இருந்ததாக கூறுகிறார் (ἀσθενείᾳ καὶ ἐν φόβῳ καὶ ἐν τρόμῳ πολλῷ). இது ஒரு பக்தர், கடவுள் முன் செபிக்கும் போது இருப்பதை குறிக்கும் நிலைகள். இந்த நிலைகள் ஒரு கிரேக்க பேச்சாளருக்கு ஏற்றதல்ல, அத்தோடு இவற்றை, கேட்பவர்கள் விரும்ப மாட்டார்கள். மேலும், இது படித்தவர்கான கலாச்சாரமுமல்ல. இந்த கிரேக்க பேச்சாற்றல் திறமைகளை, தான் கொண்டிருக்கவில்லை என்று சொல்லி தன்னுடைய ஞானம் கிரேக்க அல்லது மனித ஞானம் இல்லை என்பதை அழகாகக் காட்டுகிறார்.

வ.4: கிரேக்க மொழி, நம் தாய் மொழியைப் போல கவர்ச்சியான மொழி. இந்த மொழி பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்று வரை சிறந்த மொழிகளில் ஒன்றாகவே இருக்கிறது. அக்கால அரிஸ்டோட்டில், சோக்கிரடீஸ் மற்றும் பிளேட்டோ போன்ற பேச்சாளர்கள், கிரேக்க கவர்ச்சியான மொழியைக் கொண்டே தங்கள் வாதங்களை திறமையாக முன்னெடுத்தனர். பவுல் தன்னுடைய நற்செய்திக்கு பலம் கொடுப்பது மனிதர்கள் உருவாக்கிய மொழியல்ல மாறாக ஞானத்தின் உறைவிடமாகிய தூய ஆவி என்கிறார். இவ்வாறு தன்னுடைய ஞானம், மனித வல்லமையிலல்ல மாறாக தூய ஆவியின் எடுத்துக்காட்டிலே தங்கியுள்ளதைக் காட்டுகிறார்.

வ.5: இந்த வசனம் தான் இந்த பகுதியில் மிக முக்கியமான வரி. இவ்வளவு நேரமும் தன்னுடைய நம்பிக்கையைப் பற்றிக் கூறிய பவுலடியார் இப்போது அதனை தன் வாசகர்களுக்கு கொடுக்கிறார். அதாவது, கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படை, அறிவல்ல (ἡ πίστις ὑμῶν μὴ ᾖ ἐν σοφίᾳ) என்கிறார். கிறிஸ்தவர்களின் நமபிக்கை மனித அறிவில் தங்கியருந்தால், அது மிக ஆபத்தாக அமையும், ஏனெனில் மனித அறிவு வளரும், பொய்பிக்கப்படும், மெய்ப்பிக்கப்படும் மற்றும் மாறும்.

முடிவில் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படை கடவுளின் வல்லமை ஆகும் என்கிறார். கடவுளின் வல்லமை கிரேக்க ஞானமல்ல, அத்தோடு அது மனித ஞானமே அல்ல. அது ஒரு கொடை என்கிறார் பவுல்.


நற்செய்தி வாசகம்
மத்தேயு 5,13-16

13நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. 14நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. 15எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.✠ 16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

மத்தேயு நற்செய்தியின் ஐந்தாம் அதிகாரம் மிகவும் தனித்துவமானது அத்தோடு அது மிகவும் பிரசித்தி பெற்றது என்பதைக் கடந்த வாரம் கண்டோம். மத்தேயு நற்செய்தியின் ஆசிரியர் ஒரு ஆசிரிய போதகராக இருந்திருக்க வேண்டும், இதனால்தான் மிகவும் நேர்த்தியாக, அழகான உருவகங்கள் வாயிலாக ஆழமான சிந்தனைகனை முன்வைக்கிறார். இந்த பகுதி உப்பு மற்றும் ஒளி போன்ற உருவகங்களை சீடத்துவத்திற்கு கொடுக்கிறது.

அ. உப்பு ἅλας ஹலாஸ்: விஞ்ஞானம் இதனை சோடியம் குளோரைட் (sodium chloride) என்று அறிவியல் படுத்துகிறது. விவிலிய காலத்தில் இந்த உப்பு ஒரு முக்கியமான அடையாளம். அரிஸ்டோட்டிலும் இந்த உருவகத்தை தன் எழுத்து வேலைகளில் பாவித்திருக்கிறார். உணவுகளை பதப்படுத்தவும், பாதுகாக்கவும் இந்த உப்பு தொழில் ரீதியாக பாவிக்கப்பட்டது. பயனற்ற உலர்ந்த நிலங்களை வளப்படுத்தவும் உப்பு விதைக்கப்பட்டது. அத்தோடு முடிவுறாத உறவிற்கும், பயனிற்கும் உப்பு அடையாளமாக பார்க்கப்பட்டது. மருத்துவத்திற்கும், சமய காரியங்களுக்கும் இந்த உப்பு அன்று பாவிக்கப்பட்டது (✽காண்க லேவியர் 2,13) இன்றைய உலகில் உப்பு இன்னும் பல தேவைகளுக்காவும், சிந்தனைக்காகவும் பாவிக்கப்படுகிறது. பாலஸ்தீன நாட்டில் நிலவிய கடுமையன வறட்ச்சி உடலில் உள்ள உப்பு தன்மையை உறிஞ்சியது இதனால் மேலதிகமாக இஸ்ராயேல் மக்கள் உப்பை சேர்த்து உண்டார்கள் (✽✽காண்க சீராக் 39,26). சாக்கடல் உப்பு விளைவிக்கும் முக்கியமான விளைநிலமாகும். இருப்பினும் சாக்கடல் உப்பு மிக நல்ல உப்பாக இல்லாத படியால் வடக்கு வாணிபர்களிடம் இஸ்ராயேலர் உப்பை வாங்கினர். இதனாலும் உப்பு மதிப்பு மிக்கதாய் இருந்தது. போரின் போதும், இராணுவம் தாங்கள் பிடித்த நிலங்களை அழிக்க உப்பைத் தூவினர் (✽✽✽காண்க நீதி 9,45). உப்பு சில வேளைகளில் எதிர் கருத்தை தந்தாலும் (ஒப்பிடுக யோபு 39,6), அதிகமான வேளையில் உப்பு நேர்முக சிந்தனையையே தருகிறது. எலிசா இறைவாக்கினர் உப்பைக்கொண்டே உதவாத நீரை நல்ல நீராக்கினார் (ஒப்பிடுக 2அரசர் 2,19-22).

புதிய ஏற்பாடும் உப்பை அழகான உருவகமாகவே காட்டுகிறது. இயேசு தன் சீடர்களை உலகின் உப்பாக இருக்க கேட்கிறார் (மாற்கு 9,50: லூக்கா 14,34). தூய பவுல் கிறிஸ்தவர்களின் பேச்சுக்களை உப்பைப் போல் பாதுகாக்கும் கருவியாக இருக்க கேட்கிறார் (ஒப்பிடுக கொலொ 4,6).

(✽13நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப் படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக் குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.)
(✽✽26நீர், தீ, இரும்பு, உப்பு, கோதுமை மாவு, பால், தேன், திராட்சை இரசம், எண்ணெய், உடை ஆகியவை மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாகும்.)
(✽✽✽45அபிமெலக்கு அந்நாள் முழுதும் நகருக்கு எதிராகப் போரிட்டு, நகரைக் கைப்பற்றினான்; அதனுள் இருந்த மக்களைக் கொன்றான்; நகரைத் தரை மட்டமாக்கி அதில் உப்பை விதைத்தான்.)
ஆ. ஒளி φῶς போஸ்: உலக படைப்பு தொடங்கி, உலகின் முக்கிய சக்திகளான கதிரவனையும் நிலாவையும் கொண்டே ஒளியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். அதிகமான மதங்களிலும் இலக்கியங்களிலும் ஒளி, மிக முக்கியமான அடையாளம். விவிலியம் ஒளியை உயிரின் அடையாளமாக காட்டுகிறது (காண்க ✽யோபு 3,16: ✽✽தி.பா 49,19). ஒளியில் நடத்தல் மற்றும் ஒளியில் வாழ்தல் போன்றவை நேர்மையான வாழ்வையும், கடவுளுடனான வாழ்வையும் குறிக்கின்றன. ஒளி வளமையையும், அத்தோடு மகிழ்ச்சியான வாழ்வையும் குறித்தது (✽✽✽காண்க எஸதர் 8,16). திருப்பாடல் ஆசிரியர் ஒளியை பல இறையியல் விழுமியங்களுக்கு பாவிக்கிறார். அத்தோடு ஒளி, கடவுளின் இறைமகிமையையும், மாட்சியையும் காட்டவும் அடையாளப்படுத்தப்படுகிறது.

முதல் ஏற்பாட்டைப் போலவே புதிய ஏற்பாட்டிலும் ஒளி பல அடையாளங்களைக் கொடுக்கிறது. கிறிஸ்துவிற்கும் ஒளி ஓர் அடையாளமாக பாவிக்கப்பட்டுள்ளது (✽✽✽✽காண்க மத் 17,2). இயேசு தன்னுடைய சீடர்களையும் ஒளியின் மக்களாக இருக்க கேட்கிறார். பல புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும், இந்த ஒளி உருவகத்தை பல கோணங்களில் பாவிக்கின்றனர் (✽✽✽✽✽ காண்க தி.பணி 13,47).

(✽16அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.)
(✽✽19அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை.)
(✽✽✽16யூதர்களுக்கு அது ஒளியின் நாள்! மகிழ்வின் நாள்! ) (✽✽✽✽2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.)
(✽✽✽✽✽47ஏனென்றால், 'உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்' என்று எடுத்துக் கூறினார்கள்.)
வ. 13: இயேசு தன் மக்களுக்கு உப்பை உருவகமாக பாவிக்கிறார், அதேவேளை இந்த பெறுமதியான பொருள் நேர்த்தியாக பாதுகாக்கப்படாவிட்டால் பொருளற்று போகும் என்று எச்சரிக்கிறார். யூத இராபிகள் இந்த உருவகத்தையே பாவித்தனர், அவர்கள் கருத்துப்படி அறிவில்லா யூதர்கள், உவர்ப்பற்ற உப்பிற்கு சமமான அறிவிலிகள் என்று திட்டினர்.

இதனையே இயேசு மென்மையாக தன் சீடர்களுக்கும், மக்களுக்கும் பாவிக்கிறார். நவீன உலகத்திலே உவர்பற்ற உப்பை காண்பது கடினம், அல்லது அதனை உப்பென்று அழைப்பதும் கிடையாது. உப்பு மேன்மையானது அத்தோடு பலமிக்கது. ஆனால் அதனை வெளி சக்திகொண்டு மீள உருவாக்க முடியாது என்பது அழகான செய்தி. கிறிஸ்தவர்களின் உள்ளார்ந்த சக்தி இயேசு, அவரைத் தவிர வேறு எந்த சக்தியும் இவர்களை மீட்க முடியாது என்கிறார் போல.

வ. 14: மத்தேயு கிறிஸ்தவர்களுக்கு பாவிக்கும் இன்னொரு உருவகம், ஒளி. இந்த உருவகத்தின் முக்கியத்துவத்தை அறிந்தும், அத்தோடு உண்மையான ஒளி இயேசு என்பதை அறிந்தும்தான் இந்த உருவகம் பாவிக்கப்படுகிறது. உலகிற்கு ஒளி என்பது மிக முக்கியமான வார்த்தைப் பிரயோகம் (τὸ φῶς τοῦ κόσμου டோ போஸ் டூ கொஸ்மூ). யோவான் இந்த அர்த்தத்தை இயேசுவிற்கு பாவிப்பார் (✽காண்க யோவான் 9,5). மத்தேயு இதனை மக்களுக்கு பாவிப்பது மிகவும் நோக்கப்பட வேண்டியது. அந்த நாட்களில் பல நகர்கள் பல்வேறு தேவைகளுக்காக மலை உச்சியில் அமைக்கப்பட்டன. இந்த நகர்களில் இரவு வேளைகளில் ஏற்றப்படும் ஒளி, மற்றும் தீபங்கள் அந்த நகரையை ஒளிர்விக்கும். இதனைத்தான் மத்தேயு குறிப்பிடுகிறார்.

(✽5நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி' என்றார்.)

வ. 15: விளக்கு அக்காலத்தில் சாதாரண வீடுகளின் சொத்தாக இருந்தது. பணக்காரர்கள் ஆட்சியாளர்களைத் தவிர மற்றவர்கள் பந்தம் போன்ற விளக்குகளையே பாவித்தனர். இந்த பந்தங்கள் பாதுகாப்பிற்காகவும், அனைவரும் பாவிக்கும் படியாகவும், அதன் தண்டுகள் (λυχνία) மேல் கவனமாக வைக்கப்பட வேண்டும. இந்த உதாரணத்தை மக்களின் நிலைக்கு அழகாக பாவிக்கிறார் மத்தேயு. மரக்கால் என்பது கூடைகளைக் குறிக்கும் (μόδιος), இந்த கூடைக்குள் விளக்கை வைத்தால் ஒன்றில் தீபற்றும் அல்லது அணைந்து போகும்.

வ.16: இங்கே ஒளி என்பது இயேசுவின் சீடர்களுடைய சாட்சிய வாழ்வை, இந்த சாட்சிய வாழ்வு ஒழித்து வைக்கப்படவேண்டிய வாழ்வல்ல, மாறாக ஒளிர வேண்டிய வாழ்வு என்கிறார் ஆசிரியர். கடவுளுக்கு மாட்சி கிடைக்க அவர் மக்கள் நல்ல வேலைகளைச் செய்ய வேண்டும் என்பது, சாட்சிய வாழ்விற்கும், வெளிச் செயற்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதைக் காட்டுகிறது.

கிறிஸ்தவ வாழ்வு, தியானங்களையும், செபங்களையும் கொண்ட,
மறைவான வாழ்வு மட்டும் கிடையாது.
அது செயற்பாடுகள் நிறைந்தது.
இயேசு வணங்கப்படவேண்டியவர்தான்,
இருப்பினும் முதலில்
அவர் வாழப்பட வேண்டியவர்.
அன்பு ஆண்டவரே எம்மை,
எமக்கும், உலகிற்கும், இயற்கைக்கும்,
உப்பாகவும், ஒளியாகவும், மாற்றும் ஆமென்.