இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பொதுக்காலம் ஐந்தாம் வாரம்

எசா 6,1-2.3-8: திருப்பா. 137: 1கொரி 15,1-11: லூக் 5,1-11


முதல் வாசகம்
எசாயா 6,1-2.3-8:

1உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. 2அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன் ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர். 3அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது' என்று உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார். 4கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன் கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. 5அப்பொழுது நான்: 'ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே' என்றேன். 6அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். 7அதனால் என் வாயைத் தொட்டு, 'இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,' என்றார். 8மேலும் 'யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?' என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, 'இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்' என்றேன்.

முதலாவது எசாயா புத்தகத்தில் இருந்து எடுக்கப்படும் இந்தப் பகுதி எசாயா இறைவாக்கினருடைய அழைப்பை விவரிக்கிறது. சாதாரணமாக அழைப்புப் பகுதி நூலின் தொடக்கத்தில் வரும். ஆறாம் அதிகாரத்தில் வருவதால் இங்கே தனது அழைப்பைவிட இறைவாக்கினர் வேறு எதையோ சொல்ல விழைகிறார் எனக் கொள்ளலாம்.

வ.1: உசியா (עֻזִּיָּהוּ உட்சியாகு- கடவுள் வல்லவர்), இந்த மன்னனின் இறப்பை அறிவிப்பதன் வாயிலாக எசாயா படிப்பினைகளை முன் வைக்கிறார். கிட்டத்தட்ட 740 கி.மு. ஊசியா மன்னர் இறந்தார். நீண்ட காலம் ஆட்சி செய்த இவர், நல்லவராக இருந்து அகங்காரம் பிடித்தவராக மாறி தொழுநோயால் இறந்தார் என வரலாறு சொல்கிறது. இவருடைய காலத்தில் மெதுவாக யூதா தனது சுதந்திரத்தை அசிரியாவிடம் இழக்கிறது. ஆண்டவரின் உயரமான அரியணை, தொங்கலாடை என்பவை, கடவுளுக்கு முன் மனிதர் எவ்வளவு சிறியவர் எனக் காட்டுகின்றன. கோயிலை நிரப்புதல், கடவுளுடைய பிரசன்னத்தை உலகக் கோவில்கள் கொள்ள முடியாது என காட்டுகிறது.

வ.2: செராபீன்கள் (שְׂרָפִים செராஃபிம்), இவர்களை யாரும் கண்டதில்லை, எசாயாவைத் தவிர. எரி அல்லது தூய்மையாக்கு என்ற அடியிலிருந்து இந்த சொல் வருகிறது. பாம்பு-மனிதர்களை ஒத்தவர்களாக இவர்களை உருவகிக்கலாம். விவிலியம் சில இடங்களில் இவர்களை சக்தியுள்ள பாம்புகளாகவும், கானானிய தெய்வங்களாகவும் காட்டும் (காண். எண் 21,6: இ.ச 8,15). இவர்கள் இறகுகளால் பறப்பது, உடல்களை மூடுவது கடவுளின் தூய்மையைக் காட்டுகிறது. கால்களை மூடுதல், ஒரு மங்கல வழக்கு (நரிhநஅளைஅ), 'இடக்கரடக்கா'; வழக்குச் சொல். அதாவது அவர்கள் தங்கள் நிர்வாணத்தையே மூடினர்.

வ.3-5: தூயவர் என்று மூன்றுமுறை கூறுவதை சில கத்தோலிக்க ஆய்வாளர்கள் தமதிருத்துவமாகக் காண்பர். (קָדוֹשׁ கோதோஷ் தூயது, தூயவர்), மண்ணுலகும் விண்ணுலகும் மாட்சிமையால் நிறைந்துள்ளது என்று வானக வாசிகள் நன்கு அறிந்துள்ளனர், மனிதர்கள் இன்னும் அறியவில்லை என்கிறார். எசாயா தானும் தான் வாழும் உலகமும் கடவுளுக்கு முன்னால் தூய்மையற்றது என்கிறார். கடவுளை யாரும் கண்டதில்லை, எசாயா கண்டது அவரது மாட்சிமையை மட்டுமே. அசுத்த உதடுகள் அசுத்தமான சிந்தனைகளையும் பேச்சையும் குறிக்கலாம்.

வ.6-8: நெருப்புபொறி தூய்மைச் சடங்கை குறிக்கிறது. இங்கே ஆசிரியர் எசாயா மட்டுமே தூய்மையாக்கப்படுவதை குறிக்கிறார், மக்கள் தொடந்தும் தூய்மையற்றவர்களாக இருக்கின்றனர் போலும். 5வது வசனத்தில் பயந்த இறைவாக்கினர், இங்கே தன்னை அனுப்பக்கேட்கிறார். மனிதக் குரல் இறைவனின் திரு அவையில் கேட்கப்படுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

எசாயாவின் அழைப்பு காட்சி போல தெரிந்தாலும், எசாயாவின் சூழலில் வைத்துப் பார்க்கும்போது இது ஆண்டவரின் மாட்சியையும், அவரில் ஏன் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதையும், இறைவாக்கினர்கள் பேச்சில் உண்மையுள்ளது என்பதையும் எண்பிப்பது போல பதியப்பட்டிருக்கிறது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல்,138

1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். 2உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். 3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர். 4ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர். 5ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! 6ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர். 7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். 8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.

இது ஒரு புகழ்சிப்பாடல் வகையைச் சார்ந்தது. (வ.1) தெய்வங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, பிற தெய்வங்களையோ அல்லது வானக வாசிகளையோ குறிக்கலாம். நன்றி செலுத்துதல், புகழ்தல், திரும்புதல், வணங்குதல், என்பவை பாடல் ஆசிரியரின் நம்பிக்கையை குறிக்கின்றன. தாவீதின் பாடல் என்று சொல்கிற படியால், இங்கே வருகின்ற திருக்கோவிலை, கூடாரம் என்றே எடுக்க வேண்டும். தாவீதின் காலத்தில் கோவில் இருந்திருக்கவில்லை.

ஆண்டவரைப் புகழ்வதற்கு காரணத்தை 2-3 வசனங்களில் கூறுகிறார். ஆண்டவர் நலிந்தோரை கண்ணோக்கிறவர் எனினும், செருக்குற்றோரை தண்டிப்பவர் என்பதன் மூலம், ஆண்டவர் நீதியுள்ளவர் எனக்காட்டுகிறார்.

வவ 7-8: மனிதர் துன்பத்திலிருந்து விலகமுடியாது ஆனால் நம்பிக்கை தருபவை ஆண்டவருடைய பிரசன்னமும் காத்தலுமாகும் என்கிறார். வலக்கையால் காப்பாற்றுதல், முழு பலத்தோடும் காப்பாற்றுதலைக் குறிக்கும். இறுதியாக தன்னை ஆண்டவருடைய கைவினைப் பொருள் என்று கூறுகிறார்.



இரண்டாம் வாசகம்
1கொரி.15,1-11

1சகோதர சகோதரிகளே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன். அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள். 2நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்; இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே. 3நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, 4அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். 5பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். 6பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர். 7பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். 8எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார்.9நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். 10ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது. 11நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும் இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.

இப்பகுதியை உயிர்ப்பைப் பற்றிய விளக்கவுரையின் முன்னுரையெனெக் கொள்ளலாம். இந்தப் பகுதி ஆரம்ப கால திருச்சபைக்கு திருத்தூதர்கள் கையளித்த விசுவாசத்தின் உள்ளடக்கத்தை எடுத்துரைக்கிறது.

வவ.1-2: பவுல் தன்னையும் திருச்சபையில் உள்வாங்கி கிறிஸ்தவர்களை சகோதர சகோதரிகள் என விளிக்கிறார். ἀδελφοί அதேல்ஃபொய் என்பது ஆண்களையும் பெண்களையும் குறிக்கும். தான் போதித்த நற்செய்தியும், பெற்றுக்கொண்ட நற்செய்தியும் ஒரே நற்செய்தி என்பது ஒன்றே என்பது இங்கு நோக்கப்பட வேண்டும். நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டும் போதாது அதை முழுமையாக பற்றிக் கொள்ள வேண்டும் என்பது பவுலுடைய முக்கியமான வாதம்.

வவ 3-4: நற்செய்தியை விளக்குகிறார். அ. கிறிஸ்து நமக்காக இறைவாக்கின் படியே இறந்தார். ஆ. புதைக்கப்பட்டார். இ. இறைவாக்கின்படி மூன்றாம் நாள் உயிர்க்கப்பெற்றார். இதுதான் ஆரம்ப கால திருச்சபைக்கு திருத்தூதர்கள் வழங்கிய நற்செய்தி. பவுலுடைய போதனையில் அது எந்ந மாற்றமும் செய்யப்பட வில்லை என்பதை நோக்க வேண்டும்.

வவ. 5-9: உயிர்த்த ஆண்டவரைக் கண்டவர்கள்: முதலில் கேபா (பேதுரு), பவுல் சில வேளைகளில் இவருடன் கருத்தில் முரண்பட்டாலும், முதலாவது திருத்தூதர் இவர்தான் என்பதில் எந்த சந்தேகத்தையும் கொண்டிருக்கவில்லை. பின்னர், பன்னிருவர் (δώδεκα தோதேக்கா), பின்னர் ஐநூறுக்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள். பின்னர் யாக்கோபுக்கும் எல்லா திருத்தூதருக்கும் (τοῖς ἀποστόλοις πᾶσιν) இங்கே இவர்கள் அனைத்து சீடர்களை குறிக்கலாம். இறுதியாக தன்னையும் இணைத்துக்கொள்கிறார். சிலர் பவுல் ஆண்டவரை சந்திக்கவில்லை அதனால் உண்மையான திருத்தூதன் இல்லை என்று குழப்பி வந்தனர், இது அவர்களுக்கு. பவுல் தன்னை திருத்தூதர் என்று அழைக்கிறார். பன்னிருவருள் ஒருவர் என்று சொல்லவில்லை. பன்னிருவர் அனைவரும் திருத்தூதர்கள், ஆனால் பன்னிருவர் மட்டும்தான் திருத்தாதர்கள் என்றில்லை.

வவ. 10-11. பவுல் திருத்தொண்டிற்காக கடினப்பட்டு உழைத்ததை அடிக்கடி நினைவூட்டுவார். அதோடு கடவுளுடைய அருளையும் அதிகமாக விவரிப்பார். (χάρις காரிஸ் இறையருள்) வசனம் 11: இதுதான் இங்கு நோக்கப்பட வேண்டியது. பன்னிருவரோ அல்லது பவுலோ முக்கியமானவர்கள் அல்ல, மாறாக நற்செய்தியே முக்கியமானது எனப் பாருங்கள் என்கிறார். கொரிந்தியர் மத்தியிலிருந்த பிரிவினை வாதங்களை இது எமக்கு மறைமுகமாக காட்டுகிறது. இந்த பிரச்சனை இன்றும் தொலைவில் இல்லை.


நற்செய்தி வாசகம்
லூக்கா 5,1-11

1ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். 2அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். 3அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4அவர் பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, 'ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்' என்றார். 5சீமோன் மறுமொழியாக, 'ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்' என்றார். 6அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, 7மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகைகாட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன. 8இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, 'ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்' என்றார். 9அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். 10சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, 'அஞ்சாதே இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்' என்று சொன்னார். 11அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

(Γεννησαρὲτ கென்னேசரேட்) கெனசரேத் ஏரிக் கடலை திபேரியாக் கடல், கலிலேயாக் கடல் என்றும் அழைப்பர், இது ஒரு கடல் அல்ல ஒரு கலிலேய ஏரி. இயேசுவினுடைய சொந்த ஊரும், திருத்தூதர்களுடைய ஊர்களும், இயேசுவினுடைய அதிகமான போதனைகளைப் பெற்ற இடங்களாகவும் இந்த மாகாணத்தை கொள்ளலாம் (கலிலேயா). வில்யாழை ஒத்த அமைப்பை கொண்டிருந்தபடியால் இதனை 'கின்னேரோத்' என்று அழைத்தனர். இங்கே லூக்கா வர்ணிக்கும் காட்சி, முதலில் மக்கள் ஆண்டவரிடம் வருவதாகவும், பின்னர் திருத்தூதர் அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவரைப் பின்பற்றுவதாகவும் அமைந்துள்ளது. முதல் வாசகத்தில் எசாயா பார்த்த திருக்காட்சியை ஒத்த, பேதுரு காணும் திருக்காட்சி போலுள்ளது.

வவ.1: திரளான மக்கள் (ὄχλος ஒக்லோஸ்), சாதாரண மக்களைக் குறிக்கும். இவர்கள் யோவானிடம் சென்றதைப்போன்று இயேசுவிடமும் வருகின்றனர், அல்லது இயேசு அவர்களிடம் செல்கிறார்.

வவ.2-4: இரண்டு படகுகள் இரண்டு திருத்தூதர்களைக் காட்ட பயன்படுகிறது. மாற்குவும் மத்தேயுவும், பேதுருவையும் அந்திரேயாவையும் காட்டுவர் (காண். மத் 4,18: மாற் 1,16). லூக்கா பேதுருவை மட்டும் காட்டுகிறார். வலைகளைக் கழுவுதல், வேலை முடிந்ததைக் காட்டுகிறது. மீனவர்கள் இந்த பகுதியில் அதிகமாக வாழ்ந்த பின்தங்கிய யூதர்கள். படகினுள் இயேசு ஏறுவதை, லூக்கா 'வினைஎச்சத்தில்' காட்டுவார். 'இயேசு படகினுள் ஏறிக்கொண்டு, சொன்னார்' என்றே மொழிபெயர்க்க வேண்டும். இது ஆண்டவர் மக்கள் வாழ்வினிலும் திருச்சபையில் உள்ளும் தொடர்ந்து ஏறுவதைக் குறிக்கும். இப்போது இயேசு மக்கள் நடுவில் இல்லை. முன்னால் கடலில் மேல் நின்று போதிக்கிறார். இது அவருடைய தெய்வீகத்தை குறிக்கலாம். கடல் என்னும் ஓரு பெரிய சக்தி இயேசுவின் காலடியில் இருக்கிறது.

வவ.5-6: ஆழத்திற்கு போகச்சொன்னது, இயேசுவின் கட்டளையைக் குறிக்கும். (ἐπιστάτης எபிஸ்டாடேஸ்) என்பது ஐயா அல்லது கங்காணியார் என்பதைக் குறிக்கும். முன்பின் தெரியாதவரை இவ்வாறு விளிப்பதும், மீனவர் அல்லாதவருக்கு, பேதுரு செவிசாய்ப்பதும் வாசகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம். இரவு வேலை இங்கு பயன் இல்லாத வேலையை குறிக்கிறது. உமது சொற்படியே போடுவேன் என்பது, பேதுருவின் திருத்தூதர் தலைமைப் பண்பைக் காட்டுகிறது.

வவ. 6-7: பெருந்திரளான மீன்கள், வலைகளின் கிழியும் தன்மை, படகுகளின் மூழ்கும் தன்மை, வெற்றிகரமான மறைபரப்பு பணியைகாட்டுவதனைப் போல் உள்ளது. இயேசுவின் வருகை இங்கே மீன்பாட்டில் மாற்றத்தை கொண்டுவருகிறது. ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் அடையாளமாக மீன் இருந்ததையும் நினைவில் கொள்ளுவோம்.

வவ. 8-9: முதலில் இயேசுவை ஐயா என்று அழைத்தவர், இப்பபோது ஆண்டவரே என்று அழைக்கிறார் (κύριος கூரியோஸ்-ஆண்டவர்), காலில் விழுதல், போய்விட கேட்டல் என்பவை எசாயா ஆலயத்தில் பயந்ததை நினைவூட்டுகிறது. இங்கே முதல்தடவையாக சீமோன், பேதுரு (Πέτρος பெட்ரோஸ் பாறை) என்று அழைக்கப்படுகிறார். எசாயாவைப்போல பேதுருவும் திடப்படுத்தப்படுகிறார்.

வ.10-11: யாக்கோபு, யோவான் மற்றும் அனைவரும் வியப்புக்கொள்கின்றனர், பேதுரு மட்டும் பேசுகிறார். இது பேதுருவின் விசுவாசத்தைக் காட்டுகிறது. இயேசுவும் பேதுருவிடமே பேசுகிறார். மனிதரைப் பிடித்தல், ἀνθρώπους ἔσῃ ζωγρῶν மனிதரை உயிரோடு பிடித்தல் என்பதை குறிக்கிறது. பிடித்த மீன்களையும் அனைத்தையும் கரை சேர்த்துவிட்டு, அச்சம் தவிர்த்து, ஆண்டவரை பின்தொடர்வதே லூக்கா சொல்ல வரும் செய்தி.

ஆண்டவரே அறிவினால் விசுவாசத்தை அடைவதைவிட, விசுவாசத்தினால் அறிவையடைவதே மேல், என்று எமக்கு கற்பியும்.