இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு

எரேமியா 1,4-5.17-19
1கொரிந்தியர் 12,31-13,13
லூக்கா 4,21-30


முதல் வாசகம்
எரேமியா 1,4-5.17-19

4எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: 5'தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.'
17நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். 18இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். 19அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' என்கிறார் ஆண்டவர்.


எரேமியா, முதல் ஏற்பாட்டில், பிந்திய இறைவாக்கினருள் மிகவும் முக்கியமானவர். தென்நாட்டு யூதேயாவில் மிக வளமான காலங்களில் இருந்து மிக கடினமான காலங்களில் இறைவாக்குரைத்தவர். (יִרְמְיָהוּ யிர்மெயாகு) (எரேமியா) - என்றால் கடவுள் ஒளிர்கிறார், ஒளிர்கின்ற கடவுள், என்றும் பொருள் படும். ஐந்து யூதேயாவின் அரசர்களின் காலத்தில் இறைவாக்குரைத்த இவர், இறுதியாக எருசலேம் பாபிலோனியர்களினால் அழிந்த போது அதையும் தம் கண்களால் கண்டவர் இவர். இவருடைய காலத்தில்தான் எருசலேமில் இளம் அரசரான யோசியா தமது சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார், ஹூல்டா என்ற பெண் இறைவாக்கினரும், எரேமியாவுடைய காலத்தைச் சார்ந்தவரே. அடையாளங்கள் மூலமாக இறைவாக்குரைப்பதில் வல்லவரான எரேமியா, பழைய ஏற்பாட்டில் இயேசுவை அடையாளப்படுத்துகிறார் என்பர் கிறிஸ்தவ ஆய்வாளர்கள். உருவகங்கள் வாயிலாக பேசுவது, தமது சொந்த மக்களாலேயே புறக்கனிக்கப்பட்டது, மக்களுக்காகவும் எருசலேமிற்காகவும் கண்ணீர்விட்டது, சிறைப்படுத்தப்பட்டது, உயிர்தியாகம் செய்தது போன்றவை இயேசு ஆண்டவரின் வாழ்வை ஒத்திருந்ததை மறக்க இயலாது, இதனால் தானோ என்னவோ, சிலர் இயேசுவை எரேமியா என்றும் எண்ணினர் (காண். மத் 16,14).

வவ. 4-5: இறைவாக்கினர்கள் பலர் இருந்த காலத்தில் உண்மை இறைவாக்கினர்கள் தமது உண்மைத்தன்மையை தெளிவாக்க வேண்டிய தேவையில் இருந்தனர். இந்த வசனங்கள் மூலமாக எரேமியா, தான் உண்மையான இறைவாக்கினர் எனவும், கடவுள்தான் தன்னை தெரிந்தெடுத்தார் என்றும் சொல்ல விளைகின்றார். தாயின் கருவில் என்று சொல்லாமல் தாய் வயிற்றில் என்று சொல்லி எபிரேய சிந்தனையை ஆசிரியர் உணர்த்துகிறார். (בֶּטֶן பெதென்) அடிவயிறு அல்லது வயிறு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, ஆசைகள், உணர்வுகளின் முக்கிய இடமாகிய இது மனிதர்களின் முக்கியமான உறுப்பாகக் கருதப்பட்டது. இன்றைய உணர்வு வார்த்தைகளில் இதனை தாயின் மடி அல்லது மார்பு என்றுகூட பொருள்கொள்ளலாம். இந்த வார்த்தைகள், ஆண்டவர் பிள்ளைகளை எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து படைக்கிறார் என்பதை புலப்படுத்துகின்றன. இந்த இரண்டு வரிகளும் கவிதை நடையில் உள்ளதை அவதானிக்கலாம். 5வது வசனத்தை, 'கற்பத்தில் இருந்து நீ வெளியே போகும் முன்பே உண்னை திருநிலைப்படுத்தினேன்' என்று மொழிபெயர்கலாம். மக்களினங்களுக்கு இறைவாக்கினன் என்பதன் மூலம், கடவுளையும் இறைவாக்கையும் யாரும் சுய உரிமை கொண்டாட முடியாது என்று சொல்கிறார் போல.

. 17-19: 'இடையைக் கட்டுதல்' (תֶּאְזֹ֣ר מָתְנֶ֔יךָ), ஒரு மரபுக்கூற்று அல்லது குழுகுக் குறி. இது தயார் நிலையைக் குறிக்கும். அனைத்தையும் சொல் என்பது, இறைவாக்கினர் கடவுள் சொல்வதை மட்டும் சொல்ல வேண்டும் எனும் இறைவாக்கு விழுமியத்ததைக் காட்டுகிறது. நாடு, அரசர், தலைவர்கள், குருக்கள், மக்கள் என அனைவரும் இறைவாக்கினுள் உள் வாங்கப்படுகிறார்கள். அரண்சூழ் நகர், இரும்புத் தூண், வெண்கலச் சுவர், போன்றவை அக்கால அசைக்கமுடியாத பலமான ஆயூதங்களைக் குறிப்பவை. இன்றைய அணுவாயுதங்களைப் போல. 19வது வசனம், சொந்த மக்களை எதிரி நாட்டு படைகளைப்போல காட்டுகிறது. இந்த வசனங்கள், இறைவாக்குரைத்தல் எவ்வளவு கடினமானது ஆபத்தானது என அடையாளப் படுத்துகின்றன. இங்கே இன்னொரு அடையாளத்தையும் காணலாம். பாபிலோனியர்கள் எருசலேமை தாக்கியபோது, அரணான கடவுளைப் பற்றாமல், எகிப்தை நாடியதாலே எருசலேம் அழிந்தது என்பர் ஆய்வாளர்கள். போர் சொற்பதங்களைப் பாவித்து, உண்மையில் காக்கிறவர் கடவுளே, மனிதர்கள் அல்ல என, தமது வாழ்வின் அழைப்பு மூலமாக விவரிக்கிறார். (ஈழ விடுதலை தனியே அரசியல் தலைவர்களிலும், அயல் நாடுகளிலும் இல்லை. மாறாக கடவுளில் அடித்தளமிடப்பட்ட நல்ல விழுமிய, கல்வி, பாரம்பரிய, விசுவாச உருவாக்குதலிலும் உள்ளது என்று எரேமியா சொல்வதாக தோன்றுகிறது). ஆண்டவர் எரேமியாவோடு இருந்தார், எரேமியாவும் ஆண்டவரோடு இருந்தார். நாமும் இருந்தால் நல்லது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 71

தலையங்கம் இல்லாத திருப்பாடல்களில் ஒன்றான இப்பாடல், தி.பா 70வதை பல வழிகளில் ஒத்திருக்கிறது. அவமானம், குழப்பம், விடுதலை, மீட்பு, பகைவர்கள் விவவிரிப்பு, அவசரமான செபம் மற்றும் புகழ்ச்சி போன்றவற்றை இவ்விரு பாடல்களிலும் காணலாம். இப்பாடல் ஆசிரியர் சிறுவயதிலிருந்தே கடவுளை உடன்படிக்கையின் கடவுளாக அறிந்திருக்கிறார். מִנְּעוּרָי என் இளமை முதல். தனது நம்பிக்கையையே இப்போது செபமாக பாடுகிறார். தான் விசுவாசியாக இருந்ததனால் தனது செபம் கேட்கப்படும் என்பது இவரது நம்பிக்கை. கடவுள் தன்னை விட்டு தூரம் சென்றுவிட்டார் என்று சொல்லியே பகைவர்கள் தன்னை துன்புறுத்துவதாக் கூறுகின்ற இவர், தான் கடவுளை புகழ்ந்துகொண்டே இருப்பேன் என்று பதிலளிக்கிறார். இவ்வரிகள் இஸ்ராயேல் விசுவாசத்தில் மிக முக்கியமான ஒன்று, என்ன துன்பம் வந்தாலும் கடவுளோடு இருப்பது. வாழ்க்கையில் துன்பங்கள்; உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிற இவர், அனைத்திற்கும் ஒரே வழி கடவுள்தான் எனவும் சொல்கிறார். கடவுளை, קְד֗וֹשׁ יִשְׂרָאֵֽל (கெடோஷ் யிஸ்ராயேல்), என்று விளிப்பது மிகவும் நம்பிக்கை நிறைந்த வாக்கு. இப்பாடல் முடிவடைகிறபோது ஆசிரியர், தனது பகைவர்கள் தண்டனை பெற்றுவிட்டார்கள் என்று பாடுகிறார். இது அவருடைய நம்பிக்கையின் ஆழத்தைக் காட்டுகிறது. இங்கே தண்டைனை என்பது உடல் ரீதியான தண்டனை என்பதை விட, நீதி என்பதையே குறிக்கும்.



இரண்டாம் வாசகம்
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 12,31-13,13

எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். 31எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன். 1நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். 2இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. 3என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.✠ 4அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது தற்புகழ்ச்சி கொள்ளாது இறுமாப்பு அடையாது. 5அன்பு இழிவானதைச் செய்யாது தன்னலம் நாடாது எரிச்சலுக்கு இடம் கொடாது தீங்கு நினையாது. 6அன்பு தீவினையில் மகிழ்வுறாது மாறாக உண்மையில் அது மகிழும். 7அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். 8இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. 9ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். 10நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம். 11நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். 12ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம் ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். 13ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

பவுலடிகளாருடைய திருமுகங்களில் மிகவும் அழமான பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த பகுதிக்கு முன், பவுல் பிரிவினைகளைப் பற்றியும் அதனுடைய தாக்கங்களைப்பற்றியும் பேசியவர், இப்போது அந்த பிரிவினைகளை எப்படி மேற்கொள்வது என்பதனை எபிரேய-கிரேக்க வசன நடையில் ஒப்பிடுகிறார். இது ஒரு வகை 'புகழ்மாலை' (நnஉழஅரைஅ) இலக்கிய வகையைச் சார்ந்தது. ஒரு கருத்தை மிகைப்படுத்தி வாதிட்டு இறுதியில் அதனை பின்பற்ற கேட்டல், கிரேக்க அணியிலக்கணத்தில் மிகவும் முக்கியமானது. சிலர் இதனை பவுல் எழுதவில்லை பின்னர் இங்கு சேர்க்ப்பட்டது என்பர், இதற்க்கு ஆதாரங்கள் குறைவு. பவுல் பல வகையான சொல்லணி இலக்கணங்களை பாவித்து வாசிப்பவர்களை வசப்படுத்தக் கூடியவர். இந்த முழுப்பகுதியின் எழுவாயாக வருவது, அன்பு. மூல மொழியில் ἀγάπη (அகாபே) என்று சொல்லப்படுவது, முழுமையாக, விவிலியம் மற்றும் அறம் சார்ந்த ஒரு குணாதிசயம். இதற்கு பல அர்த்தங்கள் பல மொழியில் கொடுக்கப்பட்டாலும், தமிழில் அன்பு என்ற சொல்லுக்கு மேல் எதுவும் தேவையில்லை என நினைக்கிறேன். புதிய ஏற்பாட்டில் 114 தடவைகள் வரும் இச்சொல், கொரிந்தியர் திருமுகத்தில் 23 தடவைகள் பாவிக்கப்பட்டிருக்கிறது. யோவான் நூல்களில் 28 தடவைகள் பாவிக்கப்பட்டிருக்கிறது, ஆக ஆரம்ப கால திருச்சபைக்கும் மற்றும் கிரேக்க உலகத்திற்கும் நன்கு தெரிந்த ஒரு எண்ணக் கரு என்று கொள்ளலாம். காதல் என்ற சொல் தமிழ் இலக்கியங்களை இன்றும் ஆட்சி செய்வதனைப் போல கொள்ளலாம். அரிஸ்டோட்டில் இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். செப்தவாயிந்து (டுஓஓ), אַהֲבָה (அஹாவா) என்ற எபிரேய அன்புக்கு, கிரேக்க மொழிபெயர்ப்பாக இதனை பாவிக்கிறது. இதனை உளம் சார்ந்த அல்லது ஆன்மா சார்ந்த சொல்லாக மட்டும் எடுக்க முடியாது. இது உடலும் உள்ளமும் சார்ந்த தனித்துவமான பண்பு.

வ.1: பவுல் இந்த முகவுரை விளக்கத்தில் தன்னை உள்வாங்கி தன்மையில் பேசுகிறார் (நான்). பல்வகை மொழி அறிவுகளை கொரிந்திய சமுதாயம் முக்கியமாகக் கருதியது. வானதூதர்களின் மொழி என்று பரவசப்பேச்சை கருதினர். வெண் கலமும், தாளமும் உயிரற்றதினால் அதனை ஒப்பிடுகிறார்.

வவ. 2-3: இறைவாக்கு, மறைபொருள் அறிவு, முழு அறிவு, மலையை அகற்றும் நம்பிக்கை, வள்ளல் தன்மை, மறைசாட்சிய உயிர்தியாகம் இவைகள் கொரிந்தியரால் மிகவும் மதிக்கப்பட்டது. (நம்பிக்கையால் மலையை அகற்றலாம் என்று ஆண்டவர் சொன்னது நினைவிருக்கலாம்: மத். 17,20). ஒன்றுமில்லாத தன்மையை யாரும் விரும்ப மாட்டார்கள். இங்கு பவுல் ஆண்டவரின் படிப்பினைகளுடன் முரன்படவில்லை தனது கருத்ததை ஒப்பிட்டு அன்பை முதன்மைபப்டுத்துகிறார்.

வவ. 4-7: அன்பின் நேர்எதிர்மறை பண்புகளை விவவிரிக்கிறார். நேர்மறை: பொறுமை, நன்மை, உண்மையில் மகிழ்ச்சி, நம்பிக்கை, எதிர்நோக்கு, மனஉறுதி. எதிர்மறை: பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிசெயல், தன்னலம், எரிச்சல், தீங்கு, தீவினை.

வவ. 8-12: அன்பின் உயர்வின் காரணத்தைக் கூறுகிறார். இறைவாக்கு, பரவசப்பேச்சு, அறிவு போன்றவை காலத்திற்கு உட்பட்டவை, வளர்ந்து கொண்டிருப்பவை என்கிறார். அத்தோடு இவை நமக்கு தெரியாதவை பற்றிய அறிவுசார்ந்த புலமைத்துவம் எனவும், அன்பு அப்படியல்ல மனிதனில் இயற்கையாய் உள்ள தெய்வீகத்தன்மை என்கிறார். பவுல், இங்கு மூன்று காரணங்களை முன்வைக்கிறார். 1.அன்புதான் நித்தியமானது. 2.கொரிந்தியர் மதிக்கும் கொடைகளுக்குள் அன்புதான் சிறந்தது. 3.கொரிந்;தியரிடம் உண்மையாக இல்லாதது அன்புதான் என்கிறார். இந்த வாதங்களை முன்வைக்கிறபோது பவுல் தன்னையும் உள்வாங்குவது, ஆயன் மந்தைக்கு எவ்விதத்திலும் மேற்பட்டவன் அல்ல என்ற உண்மைச் சமதர்மத்தை கையாளுகிறார்.

வ. 13. இது மிக முக்கியமான வசனம். நம்பிக்கை (πίστις பிஸ்டிஸ்), எதிர்நோக்கு (ἐλπίς எல்பிஸ்), அன்பு (ἀγάπη அகாபே) ஆகிய மூன்றுமே நிலையானவை என்று சொல்கிறார். அன்பை இவற்றுள் தலைசிறந்தது என்று சொல்கிறார் ஆனால் மற்றவை தேவையற்றவை என்று சொல்லவில்லை. பல கடிதங்களில் மற்றைய இரண்டின் முக்கியத்துவங்களை அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்வதனை மறக்கக் கூடாது. (காண் உரோ1,16: 8,24). அன்பு தலைசார்தது என்று சொல்வதற்கு இரண்டு காரணம் உள்ளது. அ. அதுதான் இயேசுவின் போதனைகளின் மையம். ஆ. கொரிந்தியரின் தளப்(தலைப்) பிரச்சனைகளுக்கு அன்பு ஒன்று மட்டும்தான் மருந்து என பவுல் கண்டார். இது இன்று எமது ஈழ தளத் திருச்சபைகளுக்கு சாலப் பொருந்துவதைக் காணலாம்.


நற்செய்தி வாசகம்
லூக்கா 4,21-30

21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்றார். 22அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். 23அவர் அவர்களிடம், 'நீங்கள் என்னிடம், 'மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, 'கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். 24ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 25உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். 26ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். 27மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது' என்றார். 28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; 29அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

இன்றைய நற்செய்தி வாசகம் கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகும். இன்னும் ஆண்டவர் நசரேத்தூர் தொழுகைக் கூடத்தில்தான் இருக்கிறார். (σήμερον செமரோன்) 'இன்று' என்று மீண்டும் லூக்கா நம்மை எசாயாவின் அருள் தரும் ஆண்டிற்கு அழைத்துச் செல்கறார். யூபிலி அல்லது அருள் ஆண்டில் அனைவரும் பொருளாதார விடுதலை பெற்றனர். யூதமக்கள் தங்களுக்குள் கடனாளிகளையும், அடிமைகளையும் விரும்புவதில்லை. இயேசுவின் வாயில் இருந்து வரும் இந்த வரி, உண்மையாகவே உரோமைய அடிமைத்தனத்திற்குள் இருந்த மக்களுக்கு, தேன் போல இனித்தது. (தாயகத்தில் இன்று தமிழருக்கு விடுதலை என்றால் எப்படி இருக்கும்). எசாயாவின் வாக்கு இப்போதுதான் நிறைவாகிறது என்ற ஆழமான வரிகளை லூக்கா எழுதுகிறபோது காட்சி மாறுகிறது.

வ.22: 'ஆச்சரியம்' இங்கு நேர்மறையாக இருந்தாலும், இந்த ஆச்சரியம் நம்பிக்கை கலந்த ஆச்சரியம் அல்ல. லூக்கா இந்த நான்கு அதிகாரங்களிலும் இயேசுவை கடவுளின் மகன் என காட்டிக்கொண்டு வரும் போது, முக்கியமாக அவருடைய திருமுழுக்கின் வேளையில், மக்கள், ஒரே வரியில் அவர் யோசேப்பின் மகன் என்று முழுவதையும் மாற்ற நினைக்கின்றனர் என வாசகர்களுக்கு மறைமுகமாக சொல்கிறார். மற்றைய நற்செய்தியாளர்கள் இந்நிகழ்வை இன்னும் வேறுவிதமாக காண்பர் (ஒப்பிடுக மத். 13,55: மாற்கு 6,3: யோவான் 6,42). இந்த பாராட்டு ஒரு நக்கல். இங்கு 'எல்லாரும்' என்று யாரை சொல்கிறார் என்று ஆய்வு செய்ய வேண்டும்.

வ.23: இயேசு பாவிக்கின்ற இந்த பழமொழி பல ஆய்வாளர்களின் நித்திரையைக் களவெடுக்கிறது. லூக்கா தனது நற்செய்திக்கு பல மூலங்களை பாவித்ததை இங்கு உணரலாம். இயேசு மக்களுடைய நம்பிக்கையில் சந்தேகம் கொள்ளவில்லை, ஆனால் அந்த நம்பிக்கையின் தன்மையில் சந்தேகம் கொள்கிறார். ஏனெனில் ஏற்கனவே கப்பர்நாகூமில் நடந்தவற்றை அவர்கள் அறிந்திருந்தனர்.

வ.24: இந்த வரி மற்றைய நற்செய்திகளைவிட கொஞ்சம் பலமாக இருக்கிறது. (ஒப்பிடுக மாற். 6,4: மத். 13,57: யோவான் 4,44) லூக்கா மட்டுமே, ஆமென் (ἀμὴν உறுதியாக) என்ற வார்த்தையை பாவிக்கிறார். இங்கே லூக்கா சொல்லிலே விளையாடுகிறார். 'ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை' என்ற சொல் கிரேக்க மூலத்தில் (δεκτός தெக்டோஸ்) என்று வருகிறது. இச்சொல் 19வது வசனத்தில் ஆண்டவரின் அருளைக் குறிக்கிறது. இஃது இவர்கள் இயேசுவையோ இறைவாக்கினரையோ அல்ல மாறாக ஆண்டவரின் அருளையே புறக்கணிக்கின்றனர் என்கிறார் லூக்கா. (πατρίς பட்றிஸ்) சொந்த ஊர் என்பது சொந்த நாட்டையும் குறிக்கும்.

வவ.25-27: வட அரசில் இருந்த இரண்டு இறைவாக்கினர்களை துணைக்கு அழைக்கிறார் லூக்கா. எலியாவை வெகு அரிதாகவே இயேசுவின் முன்னோடியாக பார்க்கின்றனர். மூன்றரை வருடங்கள் பஞ்சம் மற்றும் இயேசு ஆண்டவரின் மூன்று வருடத்திற்கு மேலான பணி, என்று எதனையோ இணைக்கிறார் லூக்கா (காண் 1அர 18,1: யாக்கோபு 5,17). இதே மூன்;றரை வருடங்கள்தான் கிரேக்க எபிபானுஸ் அந்தியோக்குஸ் மன்னன் எருசலேமை பலமாக வதைத்தான். எலியாவின் ஆவியை பெற்ற எலிசாவால் கூட தன் மக்களின் நம்பிக்கையின்மையால் நல்லது செய்ய முடியவில்லை என்பது ஆண்டவரின் வாதம். சீதோனியரான கைம்;பெண்ணும், சீரியானான நாமானும் புறவினத்தவர்கள் என்று இஸ்;ராயேல் மக்களால் கருதப்பட்டனர், ஆனால் நலம் பெற்றனர்.

வ.வ.28-30: இயேசுவின் வார்த்தைகளால் கோபமுற்றவர்கள் அவரை மலையில் இருந்து தள்ளிவிட முனைகின்றனர். இங்கே நான்கு செயல்களை மக்கள் செய்கின்றனர், எழுந்தனர், வெளியே துரத்தினர், இழுத்துக்கொண்டு போயினர், மலையிலிருந்து தள்ளிவிட நினைத்தனர். இங்கு புதுமை எதுவும் நடக்கவில்லை. லூக்கா இங்கு பாவிக்கும் வினைச்சொல் (ἐπορεύετο.), அவரது பயணம், நேரம் வரும்வரை தொடர்ந்தது என்பதையே குறிக்கிறது.

ஆண்டவரே எமது காதுகளுக்கு ஏற்றபடி உமது வார்த்தையை திரிவுபடுத்தாமல், உமது வார்த்தைக்கு ஏற்ப எமது இதயங்களை மாற்ற வரம் தாரும். ஆமென்.