இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு

முதலாம் வாசகம்: இணைச்சட்டம் 30,10-14
திருப்பாடல்: திருப்பாடல் 19
இரண்டாம் வாசகம்: கொலோசேயர் 1,15-20
நற்செய்தி: லூக்கா 10,25-37


நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது. (இ.ச 30,14)

முதல் வாசகம்
இணைச்சட்டம் 30,10-14

10எனவே, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடு. சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள அவர்தம் கட்டளைகளையும் நியமங்களையும் கடைப்பிடி. உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பு. 11ஏனெனில், இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்குப் புரியாதது இல்லை உன்னிடமிருந்து வெகு தொலையிலும் இல்லை. 12‘நாம் அதைக்கேட்டு, நிறைவேற்றுமாறு, நமக்காக யார் விண்ணகத்துக்குப் போய், அதைக் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது விண்ணில் இல்லை. 13‘நாம் அதைக்கேட்டு நிறைவேற்றுமாறு, நமக்காக யார் கடல்கடந்து சென்று, அதை நம்மிடம் கொண்டு வருவார்’ என்று நீ சொல்லாதவாறு, அது கடல்களுக்கு அப்பால் இல்லை. 14ஆனால், நீ அதை நிறைவேற்றுமாறு வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது; உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.

இணைச்சட்ட நூல் ஆசிரியர் தன்னுடைய இறையியலுக்கே முக்கியத்துவம் செலுத்துகிறார். இதன் ஆசிரியர் யார் என கண்டுபிடிப்பது கடினமாக இருந்தாலும், இஸ்ராயேலின் கடவுள் பற்றியதும் கடவுளின் சட்டங்கள் பற்றியதுமான அழகான படிப்பினைகள், காலத்தை கடந்தும் நம்மை ஆச்சரியப்படுத்தி, உறுதிப்படுத்துகின்றன. இணைச்சட்டப்படி இஸ்ராயேலின் கடவுள் வாழ்வின் மற்றும் ஆசீர்வாதத்தின் கடவுள், ஆனால் வாழ்வையும் ஆசீரையும் தெரிந்தெடுப்பது ஒவ்வொரு மனிதரின் கடமையாக இருக்கிறது. ஒருவருடைய வாழ்விற்கும் அல்லது அவரது வீழ்விற்க்கும் அவரவரே பொறுப்பு. விதி எனனும் மாயையையும் அல்லது கர்மம் என்னும் அறிவிற்கப்பாற்பட்ட சிந்தனையையும் ஆணித்தரமாக மறுக்கிறார் இந்த ஆசிரியர். கடவுளை பற்றி உன்னிப்பாக அறிய ஒருவர் கடவுளின் வார்த்தைகளுக்கு செவிமடுக்க வேண்டும், அதாவது அவரது சட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்ற சிந்தனையையும் இணைச்சட்டம் முன்வைக்கிறது. கடவுள் ஒருவரே தூயவர், மக்கள் பாவிகளாக இருந்தாலும் அவர்கள் கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டமாக இருக்கிற படியால் அவர்களும் தூயவர்களாக வாழ அழைக்கப்படுகிறார்கள் என்ற தூய்மை வாழ்விற்கான அழைத்தலையும் இந்த தோராவின் இறுதிப்புத்தகம் முன்வைக்கிறது. இணைச்சட்ட நூலின் அழகான படிப்பினைகளை பின்வருமாறும் வகைப்படுத்தலாம்.

அ. கடவுள் ஓருவரே
ஆ. கடவுள் அறியப்படக்கூடடியவர்
இ. கடவுள் உருவங்களுக்கு அப்பாற்பட்டவர்
ஈ. படைப்பையும், காலங்களையும் கட்டுப்படுத்துகிறவர் கடவுள்
உ. கடவுளுக்கு முன்னால் ஒழுங்கானதும் மகிழ்சியானதுமான வாழ்வொன்று நிச்சயம் உண்டு.

வ. 10: கடவுளிடம் எப்படி திரும்புவது என்ற கேள்விற்கு விடையைத் தருகிறது இந்த வரி. நிபந்தனை வாக்கியம் என்ற அமைப்பில் கி כִּי என்ற எபிரேய இணைச்சொல் ஒரு வரியின் இரண்டு உட்கூறுகளை ஒன்றாக்குகிறது. இதனை நேரடியாக மொழிபெயர்ப்பது சற்று கடினமாக இருக்கும். இதனை இவ்வாறும் மொழிபெயர்க்கலாம்:
“உன் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளுக்கு அதாவது இந்த சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அவர் கட்டளைகளையும் நியமங்களையும் நடைமுறைப்படுத்தும்படி செவிகொடுப்பதாயின்: நீ உன் கடவுளாகிய ஆண்டவரிடம் உன் முழு இதயத்தோடும், உன் முழு ஆன்மாவோடும் திரும்பு!”
இந்த வசனத்தின் கூறுகள் ஒன்றில் ஒன்று தங்கியருப்பதை அல்லது நிபந்தனை வாக்கியமாக அமைந்திருப்பதை இவ்வாறு காணலாம். இப்படியாக பணிதலும், சட்டங்களை கடைப்பிடித்தலும் ஒன்றையொன்று தவிர்க்க முடியாதது என ஆசிரியர் காட்டுகிறார்.

வ. 11-14: இந்த சட்டங்கள் அல்லது கடவுளின் வார்த்தைகள் அந்தரத்தில் இல்லை என்பதை அழகான எபிரேய வார்த்தைகளில் கவிநடையில் வர்ணிக்கிறார் ஆசிரியர். மக்களே தங்கள் வாழ்வின் தெரிவுகளின் தலைவர்கள் என்பதை காட்டி யாரும் தங்கள் வாழ்வின் தவறுகளுக்கு கடவுளையே அல்லது சந்தர்பங்களையோ அல்லது தங்களின் இயலாமைகளையோ முன்வைக்க முடியாது என்பதை அழகாக மோசேயின் வாயிலில் வைக்கிறார் ஆசிரியர்.

அ.(வ.11) கடவுளுடைய இந்த நியமங்கள் கடினமானதுமல்ல அத்தோடு அவை தொலைவிலுமல்ல
ஆ.(வ.12) அவை வானத்தில் அந்தரத்திலுமல்ல: வானத்தில் அந்தரத்திலிருப்பதானால் யாரும் அதனை கொண்டுவந்து நடைமுறைப்படித்த முடியாது, செவிசாய்க்க முடியாது என்ற ‘தப்பிக்கும் மனப்பாங்கை’ சாடுகிறார் ஆசிரியர்.
இ.(வ.13) அவை கடலுக்கு அப்பாலுமல்ல: உண்மை கடல்களை கடந்து இருக்கிறது அதனை யாரும் இலகுவில் சென்றடைய முடியாது என்ற நம்பிக்கை அக்காலத்தில் இந்த மக்கள் மத்தியில் நிலவியது. நேர்மையான வாழ்வு என்பது ஒரு எட்டாக்கனி அல்லது ஒரு மாயக்கனி என்றவாறு மக்கள் நம்பினர். இதனையும் சாடுகிறார் ஆசிரியர்.
உ.(வ14) அது உனக்கருகில், உன் வாயில் உன் இதயத்தில் உள்ளது: கடவுளுடைய சட்டங்களை அவரது ‘வார்த்தை’ என்று ஒருமைப் பதத்தில் மாறி மாறி பாவிக்கிறார் ஆசிரியர். இவை ஒரே அர்தத்தையே கொடுக்கின்றன. வார்த்தை வாயிலும் இதயத்திலும் உள்ளது என்று காட்டி கடவுளுடைய வார்த்தையை அல்லது அவர் நியமங்களை ஒருவர் பேச வேண்டும் அத்தோடு அதனை நேசித்து கடைப்பிடிக்கவேண்டும் என்பதையும் ஆசிரியர் காட்டுகிறார்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 19 -படைப்பில் கடவுளின் மாட்சி

1வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன் வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது. 2ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. 3அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. 4ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். 5மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது. 6அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது; அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது; அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. ஆண்டவரின் திருச்சட்டம் 7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. 8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. 9ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. 10அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. 11அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு. 12தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். 13மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். 14என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.

திருப்பாடல் பத்தொன்பது இரண்டு முக்கியமான செய்திகளை கொண்டமைந்த ஒரு புகழ்சிப்பாடல் அல்லது மெய்யறிவுப்பாடல் எனவும் எடுக்கலாம். திருப்பாடல்கள் பல மெய்யறிவு வாதங்களை தம்மகத்தே கொண்டுள்ளன என்பதற்கு இந்தப்பாடல் நல்லதொரு உதாரணம். பல ஆசிரியர்கள் இதனை இரண்டு பாடல்களாக பிரிக்கினறனர். (இப்பாடலின் வரி இலக்கங்கள் எபிரேயத்தில் வேறுவிதத்தில் அமைந்துள்ளன. எபிரேயத்தில் இப்பாடல் 15 வரிகளைக் கொண்டுள்ளதாக பிரிக்கப்பட்டுள்ளது).

வரிகள் 1-7: இயற்கை கடவுளின் மாட்சியை சாற்றுகின்றன என்ற புகழ்சிப்பாடல். வரிகள் 8-15: ஆண்டவரின் திருச்சட்டத்தினை பற்றிய தெளிவான மெய்யறிவுப் பாடல்.
வவ.1-7: கடவுளை எப்படிக் காணமுடியும்? அவர் எங்கிருக்கிறார்? இயற்கைக்கும் கடவுளுக்கும் இடையிலான தொடர்பென்ன? இயற்கையா அல்லது கடவுளா பெரியவர்? என்ற பல கேள்விகளுக்கு சுலபமாக விடையளிக்கின்றன இந்த வரிகள். வானத்தின் படைப்புக்களை பல சிறு தெய்வங்களாகவும் அல்லது பிரிவுபட்ட சக்திகளாகவும் அன்றைய கானானிய மற்றும் மத்திய கிழக்கு நம்பிக்கைகள் பாடம் கற்பித்தன. இப்படியான மெய்யில்கள் இஸ்ராயேல் மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த பிழையான கருத்தியல்களை சரிசெய்ய, இந்த திருப்பாடல் ஆசிரியர் வானத்தின் படைப்புக்களும், இயற்கையின் கூறுகளும் கடவுளின் கைவேலைப்பாடுகளேயன்றி வேறொன்றுமில்லை என படம் பிடிக்கிறார்.
வ.1-2: இந்தப்பாடலும், தாவீதின் பாடல் என்றே தொடங்குகிறது. திருப்பிக்கூறும் கவிநடை வகையில் அமைந்துள்ள இந்த வரி, வானத்தை (விண்ணகத்தை) விவரிக்கிறது. வானங்கள் - மாட்சியை சொல்கின்றன ஆகாயவிரிப்பு - கைவேலைப்பாடுகளை புகழ்கின்றன.
வ.3: இந்த வரி வித்தியாசமாக தமிழில் மொமிபெயர்கப்பட்டுள்ளது. இதனுடைய எழுவாயாக வானங்களையே எடுக்கவேண்டும். வானங்களே, பகல் பகலாகவும், இரவு இரவாகமும் கடவுளை புகழ்கின்றன.

வவ.4-5: இந்த வரிகளும் வானங்களின் மாட்சிப்படுத்தலையே விவரிக்கின்றன. வானங்கள் அமைதியான முறையில் ஆனால் உறுதியான முறையில் இந்த செயற்பாட்டை செய்கின்றன, கடவுள் இந்த வானங்களிலே கதிரவனுக்கு கூடாரம் அமைத்துள்ளார். கதிரவனை இவ்வாறு ஓர் ஆளாக காட்டி இந்தக் சுடாரத்தினுள் வந்து தங்குவதால் இரவும் பகலும் உருவாவதைக் காட்டுகின்றாh.
வவ.6-7: இந்த வரிகள் கதிரவனின் செயற்பாடுகளை விவரிப்பதன் மூலமாக அதனை உருவாக்கி நிறுவியவரின் மகிமையைப் பாடுகின்றன. பல சமயங்களின் நம்பிக்கைகளில் கதிரவன் ஒரு சக்தியாகவே நம்பப்பட்டு வருகிறது (שֶׁמֶשׁ ஷெமெஷ்- கதிரவன்). இந்து மதம் கதிரவனை முக்கியமான தேவர்களில் ஒருவராக நம்புகிறது. கிரேக்க சமயங்களும், மெசபத்தோமிய சமயங்களும் எகிப்திய சமயங்களும் கதிரவனை அறியமுடியாக உயர்ந்த தெய்வமாக நம்பின. இஸ்ராயேல் நம்பிக்கை கதிரவனை ஒரு ஒளிப்பிளம்பாகவே முன்வைத்தது. கதிரவனை கடவுள் பகல் வெளிச்சத்திற்காக உருவாக்கியதாகவும், அவரே அதனை வானத்தில் நிறுவியதாகவும் தொடக்கநூல் காட்டுகிறது (காண் தொ.நூ 1,16❄︎). இஸ்ராயேலர்கள் சிலர் சிலவேளைகளில் இந்த அயல்நாட்டு நம்பிக்கைகளால் தூண்டப்பட்டு சூரிய வழிபாடுகளில் ஈடுபட்டதை விவிலியத்தில் காணலாம். இந்த திருப்பாடலில் ஆசிரியர் கதிரவனை ஒர் ஆளாக வர்ணிப்பதை இலக்கிய கண்களில் மட்டுமே பார்க்க வேண்டும். (❄︎ கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.)
வவ.8-10: இந்த வரிகள் கடவுளின் தோராவின் (תּוֹרָה- சட்டம், நியமம்) பண்புகளை விளக்க முயற்சி செய்கின்றன. ஆசிரியர் கடவுளின் சட்டங்களை இவ்வாறு விவரிக்கிறார், அவை: நிறைவானவை, புத்துயிரளிப்பவை, உறுதியானவை, ஞானமுள்ளவை, சரியானவை, இதயத்தை மகிழ்விப்பவை, தெளிவானவை, கண்களை ஒளிர்விப்பவை, தூய்மையானவை, நிலைத்து நிற்பவை, உண்மையானவை, நீதியானவை, பொன்னைவிட மதிப்பானவை, தேனிலும் இனிமையானவை.
இங்கே கடவுளின் சட்டங்கள் என்பவற்றை திறந்த பார்வையுடன் பார்க்க வேண்டும். தோரா எனப்படுவது, கடவுளின் வார்த்தைகளையும், பத்துக்கட்டளைகளையும், மற்றைய லேவியர் சட்டங்களையும் குறிக்கலாம். இஸ்ராயேல் மக்களுக்கு இந்த சட்டங்களே தனித்துவமான அடையாளத்தை கொடுத்தது. இந்த சட்டங்களே அவர்களை கடவுளின் பிள்ளைகளாக மாற்றியது. சில வேளைகளில் முதல் ஐந்து நூல்களும் கூட தோரா என்றே காணப்பட்டன. இப்படியான சட்டங்களை விளக்க என்று கூறி பல நூறு சட்டங்கள் உருவாகின. ஒவ்வொரு விவிலிய பகுதியிலும் அங்கே இந்த சட்டங்கள் எவற்றை குறிக்கின்றன என்பதை அவதானத்துடன் வாசிக்க வேண்டும். வவ.11-15: இந்த வரிகள் சட்டங்களுக்கு ஆசிரியரின் சொந்த வாழ்விற்கும் இடையிளான உறவைக் காட்டுகின்றன. இந்த சட்டங்களை கடைப்பிடிப்பதால்தான், தான் நீதியான வாழ்வு வாழ்வதாகவும், தன்னை வஞ்சிப்பவர்களிடம் இந்த சட்டங்கள் இல்லை எனவும் பாடுகிறார். வார்த்தைக்கும் (உதடுகள்) வாழ்க்கைக்கும் (இதயம்) நெருங்கிய தொடர்புள்ளதை இறுதி வரி அழகாகக் காட்டுகிறது. இறுதியாக கடவுளை தனது பாறையாகவும், மீட்பராகவும் புகழ்ந்து இந்த பாடலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.



இரண்டாம் வாசகம்
கொலோசேயர் 1,15-20

15அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. 16ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. 17அனைத்துக்கும் முந்தியவர் அவரே அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. 18திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். 19தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். 20சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

கொலோசே, அன்றைய அன்றைய கிரேக்க-உரோமைய உலகிலிருந்த சிறிய ஆனால் முக்கியமான நகர்களில் ஒன்று. பவுல் உக்கிரமாக எபேசில் நற்செய்தி அறிவித்த வேளை, பவுலின் உண்மை ஊழியனான எபிப்ராவின் மூலமாக இங்கேயும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
இக்கடிதத்தின் முன்னுரை, செய்தி மற்றும், முடிவுரையிலிருந்து இதனை எழுதியவர் பவுலாகத்தான் இருக்க முடியும் என பலர் கருதுகின்றனர். ஆரம்ப காலத்திலும் சரி பின்னர் மார்சியோன் மற்றும் முரற்றோரியன் தொகுப்புக்களிலும் சரி இக்கடிதத்தினுடைய பவுலின் ஆசிரியத்துவம் கேள்விக்குள்ளாகப்படவில்லை. தற்காலத்தில் இதன் இறையியலையும், மொழிநடையையும் ஆய்வு செய்கிறவர்கள் இதன் பவுல்-ஆசிரியத்துவத்தை கேள்வி கேட்கின்றனர். இது எதிர்காலத்தை விட நிகழ்காலத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பிலமோனுக்கு எழுதிய திருமுகத்துடன் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் இதனை வகைப்படுத்துகின்றனர்.

கொலோசே தற்காலத்தில் சந்தித்த சில தப்பறையான வாதங்களே, பவுல் இந்த கடிதத்தை எழுதியதற்கான காரணம் என கொள்ளலாம். இது எப்படியான தப்பறைகள் என அறிவதற்கில்லை ஆனால் இது ஒருவகையான யூத சமய சடங்குகள் பரப்புக்கொள்கைகள் என சிலர் வாதடுகின்றனர். இன்றைய பகுதி இயேசுக் கிறிஸ்துவை படைப்புக்களின் காராணராகவும், அவர் வழியாகவே அனைத்தும் கடவுளோடு ஒப்புரவாக்கம் செய்யப்பட்டது என்ற நம்பிக்கையையும் ஆழ கற்பிக்கிறது.
கொலேசேயருக்கு தங்கள் அழைப்பையும் உயர் வாழ்வையும் நினைவூட்டும் பவுல், போலிப்போதகர்களுக்கு எதிராக கவனமாக இருக்கும் படி அழைப்பு விடுகிறார். இயேசுவைப் பற்றி அறிந்துகொள்வது மட்டும் போதுமானதல்ல மாறாக அவ்வறிவில் ஊன்றி விடாது இருக்க வேண்டும் என்பதே பவுல் இவர்களிடம் எதிர்பார்க்கும் இலக்கு.

வ.15: இந்த வரிகளை சிலர் இக்கடிதத்தில் உள்ள கவிப் பகுதி எனவும் பார்க்கின்றனர். பவுல் இங்கே இயேசு யார் என அறிவுரை வழங்குகிறார். இங்கேயுள்ள இரண்டு வரைவிலக்கணங்கள் இயேசுவின் இறைதன்மையை காட்டுகின்றன. கடவுளின் சாயல் என்பது, இயேசுவை வானதூதர்கள், இறைவாக்கினர்களுக்கு மேலாக இறைவனின் அந்தஸ்தில் வைக்கிறது (εἰκών எய்கோன்- சாயல், உருவம், அடையாளம்). தலைப்பேறு என்பது (πρωτότοκος புரோடொகொஸ்) இயேசுவை தலைப்பிள்ளையாகவோ, உரிமையுடைய ஆட்சிப்பிள்ளையாகவோ வர்ணிக்கலாம். இது இயேசுவின் ஆட்சி அதிகாரத்தை காட்டுகிறது.

வ.16: கடவுள்தான் இந்த உலகை படைத்தவர், அவர்தான் இவ்வுலகின் கர்த்தர். இந்த நம்பிக்கை இஸ்ராயேல் மக்களின் தனித்துவமான நம்பிக்கைகளில் ஒன்று. கடவுள் எந்தவிதமான வெளிக்காரணிகளோ அல்லது தூண்டுதல்களோ இன்றி அனைத்தையும் படைத்தார் என அவர்கள் நம்பினர். இங்கே இந்த வரி மூலமாக உலகம் மற்றும் பிரபஞ்சத்தில் இருப்பதாக நம்பக்கூடடிய அனைத்து வர்க்கத்தினதும் படைப்பின் காரணமாகிய கடவுளின் சக்தியாக இயேசுவை அழகாக இருத்துகிறார் பவுல். கொலோசேயர் திருமுகத்திலுள்ள ஆழமான இறையியல் கருத்தியல்களில் இது மிகவும் முக்கியமான கரு. அனைத்தும் அவர் வழியாக மட்டுமல்ல அத்தோடு அவருக்காவே படைக்கப்பட்டுள்ளன என்பது, இயேசுதான் அனைவரின் பாதையும் இலக்கும் என்பதனைக் காட்டுகிறது. பவுல் அக்காலத்திலிருந்த அனைத்து யூத, கிரேக்க, உரோமைய மற்றும் பாரசீக நம்பிக்கைகளையும் இயேசுவின் காலடியில் வைக்கிறார்.

வ.17: இயேசு காலத்தால் பிந்தியவர் என்ற வாதமும் அக்கால தப்பறைகளில் ஒன்றாக இருந்தது. இயேசு காலத்திற்கு உட்பட்டவர், இதனால் அவர் ஒரு படைப்பு, ஆனால் அவர் படைப்பாளி அல்ல என்ற வாதம் ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை அசைக்கப் பார்த்தது. இயேசு அனைத்திற்கும் முந்தியவர் மட்டுமல்ல அத்தோடு அனைத்தும் அவரிலேதான் தங்கியிருக்கிறது என்ற ஒரு படி மேலே போகிறார் பவுல்.

வ.18: திருச்சபையியலை போதிக்கிற திருமுகங்களில் கொலோசேயர் திருமுகமும் ஒன்று. யூதர்களில் சிலர் திருச்சபைக்கு அவர்களின் முன்னோர்கள் சிலரை தலைவர்களாக நியமிக்க பார்த்திருக்கலாம். கிறிஸ்துவை திருச்சபையின் தலையாகவும், உடலாகவும் வர்ணிப்பதன் மூலமாக திருச்சபையில் வேறெந்த பகுதியையும் பவுல் விட்டுவைக்கவில்லை. திருச்சபையின் எந்த பகுதிக்கும் எவரும் உரிமை கொண்டாடமுடியாது என்பது அவர் வாதம். ‘உயிர்தெழுவோருள்’ என தமிழில் உள்ளது ‘இறந்தோர்’ (νεκρῶν நெக்ரோன்) என கிரேக்க மூலத்தில் உள்ளது. இது வாழ்வோருக்கு மட்டுமல்ல மாறாக இறந்து உயிர்பிற்காக துயில் கொள்வோருக்கும் தலைவர் இயேசுதான் என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்துவிற்கு வாழ்வோர் மற்றும் சாவோர் கிடையாது. அனைவரும் அவர் மீட்பிற்கு உட்பட்டவர்களே.

வ.19: கடவுளின் முழு நிறைவும் கிறிஸ்துவில் தங்கியது என்பதும் கிறிஸ்து பற்றிய இன்னொரு வாதம். குடிகொள்ளுதல் (κατοικέω கடொய்கேயோ) என்பது இயேசுவின் மனித அவதாரத்தை இங்கு நினைவூட்டுகிறது. இது வரலாற்றில் நடந்த ஒரு செயற்பாட்டை நினைவூட்டினாலும், இந்த குடிகொள்ளுதல் நிறைவாக நடைபெற்றது என்பதே பவுலின் வாதம்.

வ.20: மனிதர்கள் தெய்வங்களின் அமைதியை சீர்குழைப்பவர்கள் என்ற வாதம் அன்றுதொட்டு இன்று வரை இருக்கிறது. இதனை இஸ்ராயேலரும் நம்பினர். மனிதர்களின் பாவங்கள் தங்கள் கடவுளோடு பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டது என அஞ்சினர். இதனால் தான் பல பாவம் போக்கும் பலிகளை வரூடாந்தம் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தனர். இதனை பாவித்து இந்த ஒப்புரவாக்கும் பணியை செய்பவர் எந்த மனித குருவோ அல்லது பலி மிருகங்களோ அல்ல மாறாக அது சிலுவையில் சிந்திய இயேசுவின் இரத்தம் என அழகான இறையியலை நமக்கு படம் காட்டுகிறார் பவுல். கடவுள்தான் இந்த ஒப்புரவை செய்கிறார், அனைவரோடும் செய்கிறார். மனிதரோடும் வானக வாசிகளோடும் செய்கிறார், ஆனால் அவர் இயேசு வழியாக செய்கிறார். ஆக ஒப்புரவிற்கு காரணம் இயேசுவாகிறார். அமைதியேற்படுத்துதல் (εἰρηνοποιέω) என்பது அக்கால நல்ல ஆட்சியாளர்களின் இலக்காக காணப்பட்டது, ஆனால் அவாக்ளின் அனைத்து முயற்சிகளும் ஒரு சில காலங்களே நிலைத்தன, இங்கே இயேசு ஏற்படுத்துகின்ற அமைதி நித்தியத்திற்குமான அமைதி, உலகம் தராத அமைதி அத்தோடு அது உலகத்தையும் கடந்த அமைதி.


நற்செய்தி வாசகம்
லூக்கா 10,25-37

25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 26அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். 27அவர் மறுமொழியாக, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’என்று எழுதியுள்ளது” என்றார். 28இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார். 29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். 30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். 32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். 33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். 34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 35மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார். 36“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். 37அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.

லூக்கா நற்செய்தியின் தனித்துவத்தை பறைசாற்றுகின்ற பகுதிகளில் நல்ல சமாரித்தன் உவமை காலத்தால் அழியாது இன்றுவரை அனைவரையும் ஈர்க்கின்றது. இந்த நற்செய்தி இயேசுவின் செய்தியை மட்டுமல்ல லூக்கா ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு சொல்ல விளைந்த முக்கியமான நற்செய்தி படிப்பினையையும் ஆழமாக படம்பிடிக்கிறது. சமாரியர்கள் மட்டில் யூதர்கள் கொண்டிருந்த ஒருதலைப்பட்சமான எண்ணங்களையும் இந்த பகுதி திருத்த விளைகிறது. இதற்கு சற்று முன்னுள்ள பகுதியில்தான் சமாரியர்களில் சிலர் இயேசுவை தங்கள் பகுதியிலிருந்து அகன்று போகச் சொல்லியிருந்தனர். சீடர்களின் மூவரணிக்கு சமாரியர்கள் மேல் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. யூதர்களின் வரலாற்று பிண்ணனி இவர்களின் கோபத்திற்கு காரணமாக இருந்திருக்கும்.

இயேசுவிற்கு சமாரியர்கள் மேல் எப்போதுமே ஒரு தனி மரியாதை இருந்திருக்கிறது. இதனை பரிதாபம் அல்லது இரக்கம் என்று மட்டும் எடுக்காமல், ஆண்டவர் என்ற ரீதியில் அவருக்கு அவர்கள் மேல் இருந்த உண்மையான புரிதல் என்றே எடுக்கவேண்டும் என நினைக்கிறேன். அனைவரையும் போல, சமாரியர்கள் பாவிகளாக இருக்கலாம் ஆனால் அவர்கள் எவ்விதத்திலும் மற்றயவர்களுக்கு கீழ்பட்டவர்கள் அல்ல என்பதை இயேசுவும் அவர் உண்மை சீடன் லூக்காவும் நெகிழ்சியாக காட்டுகின்றனர். இயேசு நிச்சயமாக எதோ ஒரு கண்ணியமான நோக்கத்திற்காகவே இந்த சமாரியனை தன் அழகான கதைக்கு கதாநாயகனாக்குகிறார். இந்த உவமை பல இலக்கியங்களில் மொழிகள், கலாச்சாரங்கள், நாடுகளைத்தாண்டி கதை-காவியமாயிருக்கிறது. சில நாடுகளில் இந்த நல்ல சமாரியனின் பேரில் சில சட்டங்களும் இருக்கின்றன. இன்னும் ;சில நாடுகள் இந்தப் பெயரில் மனிதாபிமானிகளுக்கு விருதுகளையும் வழங்குகின்றன. ஆக நல்ல சமாரித்தன் நாம் பார்த்து வியந்து பாலூத்துகிற ஆங்கில அல்லது இந்திய திரைப்படம் அல்ல, மாறாக இது ஒரு விவிலிய ஆன்மீகமும், கிறிஸ்தவ அழைத்தலுமாகும்.

வ.25: திருச்சட்ட அறிஞரை புதிய ஏற்பாடு νομικός நொமிகோஸ், சட்டவல்லுநர் என்றழைக்கிறது. இவர்களின் முதல் ஏற்பாட்டு சட்டங்களிலும் மோசேயின் சட்டங்களிலும் தேர்ச்சிபெற்றவர்கள். புதிய ஏற்பாடு சில வேளைகளில் இவர்களை யூத சட்ட வல்லுநர்கள் எனவும் காண்கிறது. இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை ஆனால் ஒன்றல்ல. லூக்கா சிலவேளைகளில் இவர்களை பரிசேயருடன் ஒப்பிடுகிறார் (லூக்கா 7,30❄︎), இன்னும் விசேடமாக, மத்தேயுவிற்கு, இவர்களும்தான் இயேசுவின் கொலைக்கு காரணமானவர்கள். இந்த வரியில் இந்த நபரின் கேள்வி விடையை எதிர்பார்க்கவில்லை, மாறாக இயேசுவை சோதிக்க முயல்கிறது. விவிலியத்தில் இந்த சோதித்தல் (πειράζω பெய்ராட்ஸோ) ஒரு நல்ல குணமல்ல. இதனை சாத்தானும் இயேசுவை சோதிப்பவர்களுமே செய்கினறனர் (லூக் 4,2: மத் 22,35❄︎❄︎). நிலைவாழ்வை உரிமையாக்க என்ன செய்ய வேண்டும் என்று இவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இவர்கள் இங்கே செய்வது, நம்முடைய வட்டார வழக்கில் கூறின் ‘பம்மாத்து’.

(❄︎ஆனால் பரிசேயரும் திருச்சட்ட அறிஞரும் அவர் கொடுத்த திருமுழுக்கைப் பெறாது, தங்களுக்கென்று கடவுள் வகுத்திருந்த திட்டத்தைப் புறக்கணித்தார்கள்.)
(❄︎❄︎அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். அப்பொழுது அலகை அவரிடம் , “நீர் ,றைமகன் என்றால் ,ந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது:
அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார்.)
வ.26: இன்னொரு கேள்வியை இவருடைய கேள்விக்கு விடையாக்குகிறார் இயேசு. இங்கே இவர்கள் உண்மையாகவே திருச்சட்ட நூல்களை வாசிக்கிறார்களா அல்லது எப்படி வாசிக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார் ஆண்டவர்.

வ.27: தோராவின் இரண்டு முக்கிய கட்டளைகளான இறையன்பும், பிறர் அன்பும் இவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது (இ.ச6,4: லேவி19,18❄︎). (❄︎இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்: பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!)

வ.28: சரியாக விடையளித்தாலும் இயேசுவின் தீர்ப்பு வித்தியாசமாக இருக்கிறது. ‘நீர் வாழ்வீர்’ என்று எதிர்கால வினையில் ஆண்டவர் விடையளிக்கிறார். இது இவ்வளவு காலமும் உண்மையாக இவர் வாழவில்லையா? என்ற கேள்வியை தோற்றுவிக்கலாம். இஸ்ராயேலருக்கு வாழுதல் என்பது இந்த உலக வாழ்வையே குறித்தது. ஒருவேளை இயேசு இவருக்கு இன்னொரு வாழ்வை பற்றி உரைத்திருக்கலாம்.

வ.29: ஏற்கனவே இயேசுவை சோதிக்க விரும்பியவர், இப்போது தன்னை நீதிமானாக காட்ட விளைகிறார். யார் அடுத்திருப்பவர் என்பது யூதர்களுக்கு முக்கியமான கேள்வி. முதல் ஏற்பாடு அதிகமான வேளைகளில் அடுத்திருப்பவர்களை (רֵעַ ரெஅ) சக யூதர்களாகவே காட்டியது. அத்தோடு இந்த ரெஅ என்பதற்கு நண்பர்கள், அருகிலிருப்பவர்கள் என்ற பொருளும் உண்டு. முதல் ஏற்பாடு ஒவ்வொரு இஸ்ராயேலரும் சக இஸ்ராயேலரை சகோதரராகவும் நண்பராகவும் பார்க்க வேண்டும் என்று சட்டமைத்தது. இதனை அதிகமான வேளைகளில் இஸ்ராயேலர் கடைப்பிடித்தனர். ஆனால் விவிலியம் அனைத்து மக்களையும் அயலவராக பார்க்க வேண்டும் என்றும் கற்பித்தது. இதனை அதிகமான வேளைகளில் இந்த மக்கட்கூட்டம் மறந்திருந்தது. இந்த பழங்கால பிரச்சனையையே இவர் மீண்டும் எடுக்கிறார் அதற்கான சரியான விடையையும் ஆண்டவர் தருகிறார். (இன்றும் யார் நம் அயலவர் என்ற கேள்விக்கு பக்க சார்பான விடையே தருகிறோம், தமிழர் சிங்களவரை தம் நண்பராகவும், அயலவராகவும்: சிங்களவர் தமிழரை தம் நண்பராகவும், அயலவராகவும்; பார்க்கும் காலம்வரை இப்படியான உவமைகள் உரைத்துக்கொண்டே இருக்கும்).

வ.30: இவர் ஏன் எருசலேமிருந்து எரிக்கோவிற்கு போவதாக ஆண்டவர் சொல்ல வேண்டும்? இது 27 கிமீ தூரமான பதை, எரிக்கோ எருசலேமிலிருந்து 3300 அடி இறக்கத்திலிருந்தது. அத்தோடு இங்கேதான் சில குருக்கள் தங்கள் பணியிலில்லாத போது எருசலேமிருந்து வந்து வசித்துவந்தார்கள். இந்த நகரைத்தான் யோசுவா போரின் எக்காளத்தின் துணையுடன் மற்றும் வெற்றி கொண்டார் என்றும், ராகாபு என்ற முதல் ஏற்பாட்டு உயர் பெண்மணியும் இந்த நகரைச் சார்ந்தவர்தான். எரிக்கோவை அன்டிய பகுதிகள் எருசலேமைவிட வளமானவை என தொல்பொருளியல் மற்றும் புவியியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். எரிகோவிற்கு செல்லும் பாதை ஆபத்தான பாதையாகவும் தனிமையான பாதையாகவும் இருந்தது. இந்தப்பகுதியில் கள்வர்கள் மற்றும் உரோமைய எதிர்ப்பு போராளிகளின் பிரசன்னமும் அதிகமாக இருந்தது. இங்கே கள்வர்களிடம் அகப்படுகின்ற இவர் தன்சொத்துக்களையும் மாண்பையும் இழக்கிறார். ஆடைகள் உரியப்பட்டது இதனையே குறிக்கிறது. குற்றுயிராய் விட்டுச் சென்றார்கள் என்பது அடிபட்டவர் மரணிக்கும் தருவாயில் இருந்தார் என்பதையும் காட்டுகிறது. மனிதகுலத்தின் அவலங்களையும் எப்படி மனித மாண்பு அனைத்தையும் இழந்து நல்ல சமாரியரான இயேசுவின் வருகைக்காக காத்திருந்தது என்பதையும் இந்த நிகழ்வு காட்டுகிறது.

வ. 31: முதலாவதாக இந்த மனிதரை சந்திப்பவரை லூக்கா ‘குரு’ என்கிறார். ஒருவேளை இந்த மனிதரை தொட்டால் இவரால் ஆலயப்பணி செய்ய முடியாமல் போகும் என எண்ணியிருக்கலாம். இறக்கின்ற மனிதரை விட தன்னுடைய குருத்துவப்பணி முக்கியமென நினைத்திருக்கலாம். இன்றும் பல பெரிய குருக்கள் சிறியவர்களை விவேகமாக இருக்கச்சொல்லி, மற்றவரின் ஆபத்துக்களில் கண்கைளை மூடச்சொல்கின்றனர். இந்தக் குருவின் விவேகம் இங்கு விழுமியத்தை இழக்கிறது.

வ. 32: ஏன் லூக்கா லேவியரை இங்கே கொண்டு வருகிறார். குருக்களைக் காட்டுகின்ற அதேவேளை இங்கே லூக்கா அவர்களோடு தொடர்புள்ள லேவியரையும் காட்டுகிறார். நிர்வாக குருக்களுக்கு எதிரான ஒரு கருத்தியல் தெரிகிறது.

வ. 33-34: ஆனால் என்ற இணைப்புச் சொல், இங்கே சமாரித்தருடைய செயல் மற்றவர்களுடன் ஒத்ததாக இல்லாமல் விசேடமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. சமாரியரின் முக்கியமான செயல்களை அவதானிக்க வேண்டும். குருக்கள் விலகிச் செல்ல இந்த சமாரியர், அருகில் செல்கிறார், பரிவுகொள்கிறார், முதலுதவி செய்கிறார், பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்கிறார். இவருடைய செயற்பாடுகள் யாரோ ஒருவர் செய்வது போல் இல்லாமல், ஒருவர் தன் நன்பருக்காக செய்வதனைப் போல் உள்ளது. முதல் ஏற்பாட்டு அயலவர் யார் என்பதை இந்த சமாரியர் நன்கு காட்சிப்படுத்துகிறார்.

வ.35: இதற்கு மேல் செலவானால் என்ற சொற்கள், இந்த சமாரியரின் கரிசனையில் எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதனைக் காணலாம்.

வவ.36-37: இரக்கம் காட்டியவரே உயர்ந்தவர் என்பது சரியான விடை, ஆனால் கேள்வி, ஏன் யூதர்களால் சமாரியரையோ, சமாரியரால் யூதர்களையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை??. இந்த கேள்வி நமக்கும் நன்கு பொருந்தும். இயேசு ஆண்டவரின் கட்டளை இந்த சட்ட வல்லுநர்க்கு மட்டுமல்ல, மாறாக இந்த நற்செய்தியை வாசிக்கும், அல்லது கேட்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.