இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பொதுக்காலத்தின் பதினாங்காம் ஞாயிறு 03,07,2016

முதல் வாசகம்: எசாயா 66,10-14
பதிலுரைப் பாடல் திருப்பாடல் 66
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 6,14-18
நற்செய்தி: லூக்கா 10,1-12.17-20


'நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன்.' (கலாத் 6,14)

முதல் வாசகம்
எசாயா 66,10-14

10எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். 11அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள். 12ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். 13தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். 14இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும் அவரது சினம் அவர்தம் பகைவருக்கு எதிராய் மூளும் என்பதும் அறியப்படும்.

எசாயா இறைவாக்குப் புத்தகம் தனது ஆறுதல் வார்த்தைகளுக்கு பிரசித்திபெற்றது. ஆறுபத்தாறு அதிகாரங்களைக் கொண்ட இந்த பெரிய இறைவாக்கு புத்தகத்தை முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் எசாயா என ஆசிரியர்கள் பரிக்கின்றனர். இவை வௌ;வேறு காலப்பகுதியை சேர்ந்தவையாக இருக்கவேண்டும். இன்றைய வாசகம் எசாயாவின் இறுதி அதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இது இடம்பெயர்ந்தவர்கள் (நாடு கடத்தப்பட்டவர்கள்) பபிலோனியாவில் இருந்து வந்ததன் பின்னர் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதனை மையமாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு திரும்பியவர்கள் சந்தித்த அரசியல் பொருளாதார நெருக்கடிகள் சீக்கிரமாக விலகிப்போகும் என்னும் கருத்துக்களை இந்த பகுதிகளில் காணலாம். இருந்த போதும் எசாயா புத்தகம் முழுவதுமாக மையப்படுத்துகின்ற 'கடவுளின் நாள்' என்னும் சிந்தனையையும் இங்கே காணலாம்.

வ.10: இந்த வரி சீயோனை தாயாகவும் மனைவியாகவும் வர்ணித்து வருவதை தாண்டி இப்போது சீயோனை பிள்ளைகளை ஒப்பனைசெய்கிறது (❆ காண்க கலா 4,26). எருசலேமின் அழிவுகளைக் கண்ட அனைவரையும் அவளது மீட்சியைக் கண்டு மகிழுமாறு எசாயா அழைப்பு விடுகிறார். மகிழ்ச்சியை சேர்ந்து, கொண்டாடி பின்னர் ஆர்ப்பரிக்கவேண்டும் என்று எசாயா சொல்வது எமக்கும் இப்படியான வாழ்வு ஈழத்தில் கிடைக்கும் என்பதை இன்னொருமுறை உறுதிப்படுத்துகிறது. (❆மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்; நமக்கு அன்னை.)

வ.11: சீயோனின் கொங்கைகள் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. கானானியருக்கு பல முளைகளைக் கொண்ட ஒரு பெண் தெய்வத்தை பற்றிய அறிவிருந்தது. முளைகள் பால் தருவதனால், அவை வாழ்விற்கான அடையாளமாக கருதப்பட்டன. இது காமத்தையும் தாண்டிய தாய்மைக்கான அடையாளம். இங்கே இந்த தாயாக எருசலேம் உவமிக்கப்பட்டு அதன் வாழ்வு நிறைவாக இருக்கும் என உறுதிப்படுத்தப்படுகிறது. வறுமையினால் பெண்கள் வாடி, தங்கள் பிள்ளைகளுக்கு பால் கொடுக்க முடியாத நிலைகளை எருசலேம் கண்டிருந்தது. இங்கே அந்த நிலை மாறி எருசலேமில் மக்கள் நிறைவடைவார்கள் என எசாயா நம்பிக்கை தருகிறார்.

வ.12: இந்த அழகான வரி ஆண்டவரின் அரவணைப்பை திருப்பிக் கூறும் கவிநடையில் விவரிக்கின்றது. ஆறுபோல் நிறைவாழ்வு - நீரோடைபோல் வேற்றினத்தார் செல்வம்
பால் பருகுவீர்கள் - மார்பில் அணைத்து சுமக்கப்படுதல் - மடியில் தாலாட்டப்படுதல்

வ.13: இந்த வரியும் அதே அர்தத்தில் தொடர்கிறது. இஸ்ராயேலின் கடவுளுக்கு ஆண் அர்த்தம் கொடுத்தாலும், பல முக்கியமான இடங்களில் கடவுள் பால் வர்க்கத்தை சார்ந்தவர் இல்லை என்பதை விவிலியம் நிரூபிக்கும். இங்கே கடவுளின் தாய்மை ஆழமாக தெரிகிறது. கடவுள் பால் அடையாளங்களை தாண்டியவர்.

வ.14: எலும்புகள் முக்கியமான உடல் அவையங்களாக அக்காலத்தில் அறியப்பட்டன. இதனால்தான் ஆதாம் ஏவாளை தன் எலும்பும் சதையும் என்கிறார். இதனால்தான் யாக்கோபுவின் மகன் யோசேப்பும் தான் எகிப்தில் இறக்கும் வேளை தன் எலும்பினை வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு கொண்டு போகக் கேட்கிறார். இங்கே மூன்றுவிதமான அடையாளங்கள் கொடுக்கப்படுகின்றன:

இதயம் - மகிழும்
எலும்புகள் - பசுமையாக வளரும்
(கண்கள்) - எதிரிகள் மேல் கடவுளின் வல்லமையை காணும்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 66

1அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3கடவுளை நோக்கி 'உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்; 4அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். (சேலா) 5வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. 6கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன் கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக! (சேலா) 8மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். 9நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே அவர் நம் கால்களை இடற விடவில்லை. 10கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்; 11கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்; பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர். 12மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்; நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்; ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர். 13எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்; என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். 14அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது; என் வாய் உறுதி செய்தது. 15கொழுத்த கன்றுகளை, செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு, உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்; காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா) 16கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 17அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. 18என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார். 19ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்; என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார். 20என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள்போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!

இந்த திருப்பாடலை நன்றிப்பாடல்களுள் ஒன்று என எடுக்கலாம். இந்தப் பாடல் - உலகம், நான், நாங்கள் போன்றவை எவ்வாறு கடவுளை போற்றி புகழ வேண்டும் என்பதை விளக்க முயற்சி செய்கிறது. ஆசிரியர், ஆண்டவர் வரலாற்றில் மக்களுக்கு செய்தவைகளை உதாரணமாக எடுத்து அதனை காரணமாக்கி ஆண்டவரை புகழக் கேட்கிறார். அத்தோடு நிகழ்காலத்தில் நடப்பவை அனைத்தும் கடந்த காலத்து அனுபவங்கள் மூலமாக அறியப்பட வேண்டும் என்பது இவரது நம்பிக்கை. துன்பங்கள் நல் வாழ்க்கைக்கான சந்தர்பங்களை உருவாக்கும் என்பது புதிய ஏற்பாடு கற்றுத்தரும் பாடங்களில் ஒன்று, இதனை இந்த திருப்பாடலிலும் காண்கிறோம்.

வவ 1-12 உலகம் கடவுளுக்கு செலுத்தவேண்டிய புகழைக் கூறுகின்ற அதே வேளை வவ 13-20 ஆசிரியர் தான் கடவுளுக்கு செலுத்த வேண்டிய புகழ்சி செயற்பாடுகளை அறிக்கையிடுகின்றன.

வவ.1-2: இந்த திருப்பாடல் பாடகர் குழாமுடைய திருப்பாடல் என்று ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு வரிகளும் அனைத்து உலகையும் ஆண்டவரை புகழும்படி அழைப்பு விடுகின்றன. ஆண்டவரை புகழ்வதும் அவரது பெயரை புகழ்வதும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டதாக காணப்பட்டது. இதனால்தான் பத்து கட்டளைகளில் ஒன்று கடவுளின் பெயரை வீணாக பாவிக்க வேண்டாம் என கட்டளையிடுகிறது (காண் வி.ப 20,7❆).
(❆உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.)

வவ.3-4: அனைத்துலகிற்கு கட்டளையிடுகிறார். இந்தக் கட்டளை அவர்களை கடவுளின் செயல்கை அறிக்கையிட்டு நம்பிக்கை கொள்ளும் படி கேட்கிறது.

வவ.5-7: கடவுள் கடந்த காலத்தில் செய்த செயல்கள் நினைவூட்டப்படுகின்றன. கடவுளின் செயல்கள் அஞ்சுதற்குரியன என்பது, அவை அதிசயமானவை என்பதை காட்டுகின்றன. விவிலியத்தில் சில வேளைகளில் அச்சம், அதிசயம், மெய்யறிவு போன்ற செற்கள் ஒத்த சொற்களாக பார்க்கப்படவேண்டியவை. கடலை உலர்ந்த தரையாக்கியதும், இஸ்ராயேலர் அதனை நடந்து கடந்ததும் அவர்களுக்கு மறக்க முடியாத வரலாற்றுப் பாடம், இது அதிகமான வேளைகளில் மீண்டும் மீண்டும் வருவதை அவதானிக்கலாம். மனிதர்கள் அல்ல மாறாக அரசாள்பவர் கடவுளே என்பதும் இஸ்ராயேலரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கை முக்கியமாக இஸ்ராயேல் அரசுகளின் வீழ்ச்சியின் பின்னர் இன்னும் வலிமைபெற்றது. 'ஆண்டவரின் கண்கள் கவனிக்கின்றன' என்பதும் ஆண்டவரின் அரசாட்சியை விவரிக்கும் ஒத்த கருத்து வரி.

வ.8: மீண்டுமாக அனைத்துலகோருக்கு அழைப்பு விடப்படுகிறது. ஆண்டவரை வாழ்த்தச் சொல்லுவதும், பாடல் ஒலிகளை இசைக்கக் கேட்பதும் ஒத்த கருத்தினால் திருப்பிக் கூறப்பட்டுள்ளன.

வவ.9-12: இங்கே மீளவும் பழைய அனுபவங்கள் நினைவு கூறப்படுகின்றன. 'உயிர்வாழச் செய்தவர்' என்பது 'நம் ஆன்மாக்களை உயிரினுள் வைத்தார்' என எபிரேயத்தில் எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஒத்த அர்த்தத்தில் அடுத்த பகுதி 'கால்கள் இடற விடவில்லை' என்று வருகிறது. கால்கள் இடறாமை என்பது உடல்-பௌதீக-பொருளாதார வீழ்ச்சியையும் குறிக்கலாம். பன்னிரண்டாவது வரி இஸ்ராயேலரின் பழைய அனுபவங்களை நினைவூட்டுகின்றன. 'பாதுகாப்பான இடம்' என்பது 'திறந்த விசாலமான இடம்' என்றும் பொருள் படும். இது அநேகமாக அமைதி நிறைந்த எருசலேமை குறிக்கும் என நினைக்கிறேன்.

வவ.13-15: இப்போது தான் செய்ய இருப்பவற்றை பாடுகிறார். தமிழில் எதிர்காலத்தில் மொழிபெயர்கப்பட்டுள்ள இந்த வினைச்சொற்கள், எபிரேயத்தில் எதிர்காலத்தையும் தாண்டி, நிகழ்காலத்தையும், இறந்த காலத்தையும் குறிக்கலாம். ஆக இவர் செய்யப்போவதாக சொல்லுபவற்றை அவர் செயவதாகவும் எடுக்கலாம். எரிபலிகள், பொருத்தனைகள் போன்றவை ஏற்கனவே அவர் தன் துன்ப வேளைகளில் வாக்கு உரைத்ததாக கூறுகிறார். இங்கே விவரிக்கப்பட்டுள்ள மிருகங்களை பார்கிறபோது அக்காலத்திலிருந்த பலி முறைகள் ஆச்சரியத்தோடு பல கேள்விகளையும் எழுப்புகின்றன. அதிகமான இரத்தங்கள், கொழுப்புக்கள் எரிக்கப்படுகிறபோது வரும் துர்நாற்றத்தை தடுக்க பல விதமான நறுமண தூபங்கள் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வவ.16-20: மீண்டுமாக தன் வாசகர்களுக்கு அழைப்புவிடுத்து தன்னுடைய சொந்த வாழ்வியல் அனுபவத்தில் பாடம் எடுக்கிறார். 'வாரீர், கேளீர்' என்பது எபிரேயத்திலும் மோனையில் எழுதப்பட்டுள்ளன (לְכֽוּ־שִׁמְעוּ லெகூ-ஷிம்மூ வாருங்கள், கேளுங்கள்: கட்டளை வாக்கியங்கள்). பதினெட்டாவது வரி அழகான அக-அறத்தை முன்வைக்கிறது. நேரடி மொழிபெயர்ப்பு: தீய எண்ணத்தை என் இதயத்தில் நான் பார்த்திருந்தால், என் ஆண்டவர் எனக்கு செவிசாய்திருக்க மாட்டார். கடவுள் எப்போதும் நல்லவற்றையே விரும்புகிறார், கடவுளின் பெயரால் மற்றவருக்கு தீமை செய்ய முடியாது என்னும் உண்மை இங்கு புலப்படுகிறது. இறுதி வசனத்தில் ஆசிரியர், கடவுளுக்கு புதிய பெயர்களை கொடுக்கிறார் அவை:
அ. என் செபத்தை புறக்கணிக்காத கடவுள்
ஆ. அவரின் இரக்கம்-கலந்த அன்பை மறுக்காத கடவுள் (கடவுளின் அழகான பெயர்கள்).



இரண்டாம் வாசகம்
கலாத்தியர் 6,14-18

14நானோ நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். 15விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. 16இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக! 17இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம். ஏனெனில் என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். 18சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக! ஆமென்.

காலத்தியர் திருமுகத்தில் பவுல் தன்னுடை திருத்தூதுத்துவ அழைப்பையும், கிறிஸ்தவ வாழ்வின் மேன்மைகளையும் தெளிவு படுத்தியவர் இந்த ஆறாவது அதிகாரத்தில் முடிவுரை எழுதுகிறார். கிறிஸ்வின் சிலுவைக்கும் செமித்தியர்களின் விருத்தசேதனத்திற்கும் ஒரு சொற் போரை நடத்தி சிலுவையின் வெற்றியை சுவைக்கிறார் பவுல்.

வ14: கலாத்தியர் திருமுகத்தில் பல ஆழமானதும் மனதை தொடுவதுமான வரிகள் உள்ளன. இந்த வரியும் அதிகமாக பலரால் இன்றுவரை விரும்பப்படுகிற வரி. சில யூத கிறிஸ்தவர்கள் அல்லது யூதவாத-விரும்பிகள் கலாத்தியருக்கு யூத மறையின் சட்டங்களையும் முக்கியமாக விருத்தசேதனத்தை பற்றியும் பல சார்பு வாதங்களை முன்வைத்து அவற்றைப் பற்றி பெருமையாகவும் பேசினர். இது கலாத்திய கிறிஸ்தவர்களிடையே சில கிலேசங்களை தோற்றுவித்தது. இந்த வரியில் பவுல் தான் எதைப்பற்றி பெருமைப்படுகிறார் என்பதை அழகாகவும் ஆழமாகவும் சொல்கிறார். சிலுவைதான் பவுலுடைய பெருமையின் காரணமும் காரியமும். அதனைவிட வேறொன்றும் இல்லை என்பது அவரது சமரசம் செய்ய முடியாத நம்பிக்கை. இது நற்செய்திகளில் சிலுவையை பற்றி சொல்லப்படுகின்ற உண்மைகளை பின்புலமாக கொண்டுள்ளது (காண்க லூக் 14,27❆). உலகமும் தானும், போன்றவை மீட்கப்பட்டுள்ள உண்மை சிலுவையில் தங்கியுள்ளதே அன்றி வேறொன்றிலும் அல்ல என்கிறார் இந்த திருத்தூதர் அத்தோடு சிலுவைப் பற்றிய தவறான கருத்தியல்களையும் மறைமுகமாக சாடுகிறார்.
(❆தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது.)

வ.15: விருத்தசேதனம் என்பது (περιτομή பெரித்தோமே) ஆண்குறியில் உள்ள நுனித்தோலை அகற்றிவிடும் ஒரு எபிரேய வழக்கம். இதனை எபிரேயர்கள் தாங்கள் கடவுளோடு செய்த உடன்படிக்கையின் அடையாளமாக கருதினர், இது தங்களை கடவுளின் பிள்ளைகளாகவும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களாகவும் மாற்றியதாகவும் நம்பினர் (காண்க தொ.நூல் 17,10❆). இந்த விருத்தசேதனம் ஒரு சுகாதார பழக்கவழக்கம் பின்னர் இதற்கு இறையியல் சாயம் கொடுக்கப்பட்டது என்றும் சிலர் இன்றுவரை வாதாடுகின்றனர். நம்முடைய திருமுழுக்குகூட முன்னர் செமித்தியரிடையில் வழக்கிலிருந்த ஒரு தூய்மை சடங்கே ஆகும். புவுல் ஒரு யூதனாக இந்த விருத்தசேதனத்திற்கு எதிரானவர் அல்ல. இங்கேயுள்ள வாதம், இந்த விருத்தசேதனம் மற்றவருக்கு கிறிஸ்துவை பொறுத்தமட்டில் எந்த சலுகையையோ அல்லது முன்னுரிமையையோ வழங்கமுடியாது என்பதே ஆகும். கிறிஸ்துவிற்கு முன்னால் அனைவரும் சமம் என்னும் உண்மையை இது முன்வைக்கிறது. 'புதிய படைப்பு' (καινὴ κτίσις) என்று பவுல் இங்கு வாதிடுவது, கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து அதனால் ஒருவர் அடையும் புதிய வாழ்வை குறிக்கிறது (காண்க 2கொரி 5,17❆❆)
(❆நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே: உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்)
(❆❆எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!)

வ.16: பவுல் இந்த வசனத்தில் தன்னுடைய ஆசீர்வாத்தை அனைவருக்கும் உரித்தாகுகிறார். பவுல் இஸ்ராயேலருக்கு எதிரானவர் அல்ல என்பதை இந்த வரியில் பார்க்கலாம். அமைதியும் இரக்கமும் அனைவருக்கும் எப்போதும் தேவையானவை. அதனை இயேசுவால் மட்டும்தான் தர முடியும் என்பதை பவுல் நன்கு அறிந்திருக்கிறார். இவை இரண்டும் கிரேக்க மெய்யியலில் மட்டுமல்ல எபிரேய சிந்தனைகளிலும் நன்கு அறியப்பட்டவை (εἰρήνηஇ שָׁלוֹם எய்ரேனே, ஷலோம்- அமைதி: ἔλεος, חֶסֶד எலெயொஸ், ஹெசெட்- அன்புள்ள இரக்கம்)(ஒப்பிடுக தோபித்து 7,11❆)
(❆...உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்குரியவள்; இன்று முதல் என்றுமே அவள் உன்னுடையவள். , விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக' என்றார்.)

வ.17: பவுல் இங்கு யாரையோ குறிப்பிட்டு சாடுவதைப்போல் உள்ளது. இங்கே பவுல் 'தழும்புகள்' என்று குறிப்பிடுவது கிறிஸ்துவிற்கான அடையாளத்தையும் குறிக்கலாம். இதனை குறிக்க στίγμα ஸ்டிக்மா என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் அடிமைகளையும் அல்லது உயிருள்ள சொத்துக்களையும் குறிக்க அடிமை-முதலாளிகளால் பொறிக்கப்பட்ட 'குறிகளை' நினைவூட்டுகிறது. சில படைவீராக்ளும் தங்களது தெய்வங்களின் தழும்புகள் அல்லது குறியீடுகளை தங்கள் உடல்களில் பொறித்திருந்தனர். இது அவர்களை அத்தெய்வங்களின் பக்தர்கள் என்பதனை நினைவூட்டியது. அக்காலத்தின் சீசரின் அடையாளம், அதனை தாங்கியிருந்தோரை பலவழிகளில் பாதுகாத்தது.

ஆக கிறிஸ்துவின் தழும்பு, ஸ்டிக்மா, பவுலை கிறிஸ்துவின் போராளி அல்லது பக்தன் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஒருவேளை, அவர் கிறிஸ்துவின் போராளி என்பதால் அவரை யாரும் இலகுவாக எடைபோட வேண்டாம் என எச்சரிக்கிறார் எனவும் எடுக்கலாம்.

வ.18: இங்கே பவுல் விழிப்பது, முக்கியமாக கலாத்திய கிறிஸ்தவர்களையே குறிக்கின்றது. 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் ஆவியோடு இருப்பதாக' என்றே கிரேக்கத்தில் உள்ளது. ஆமென் என்ற வாழ்த்துக்களுடன் ஆசீர்களை முடிப்பது எபிரேய வழக்கம். இது மெதுவாக கிறிஸ்தவத்துக்குள் நுழைவதைக் இவ்வாறு காணலாம்.


நற்செய்தி வாசகம்
லூக்கா 10,1-12.17-20

1இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார். 2அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: 'அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். 3புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். 4பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். 5நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். 6அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். 7அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம். 8நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். 9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். 10நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, 11'எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள். 12அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன். 17பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, 'ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன' என்றனர். 18அதற்கு அவர், 'வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். 19பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. 20ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்' என்றார்.

யூத இராபிகளும் கிரேக்க மெய்யியளாளர்களும் தங்களுக்கென்று சீடர்களைக் கொண்டிருந்தனர். இவர்களின் மெய்யறிவு அடுத்த தலைமுறைக்கு சீடர்கள் வாயிலாக கடத்தப்பட்டது. முதல் ஏற்பாட்டில் சில இறைவாக்கினர்களும் தங்களுக்கென்று சீடர்களைக் கொண்டிருந்தனர். இதற்கு எலியா - எலிசா நல்ல உதாரணம். பவுல்கூட கமாலியேல் என்ற பரிசேய இராபியின் சிடனாக இருந்தார். எம்முடைய தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இப்படியான ஆசிரியர் -சீடர் வழக்கத்தை காண்கின்றோம். இயேசுவின் சீடர்களை குறிக்க μαθητής மதேடேஸ் என்ற கிரேக்க சொல் அதிகமாக பாவிக்கப்படுகிறது. இந்த சீடர்கள் இயேசுவை பின்பற்றிய மக்கள்கூட்டத்திலிருந்து வேறுபட்டவர்கள். சில சீடர்கள் பலவேறு கட்டங்களில் இயேசுவைவிட்டு பிரிந்து சென்றார்கள் (காண்க யோவான் 6,60❆). இயேசுதான் நாம் அறிந்தபடி பெண்களுக்கு இந்த சீடத்துவத்தை முதலில் கொடுக்கிறார். இயேசுவின் பெண் சீடர்கள்தான் இறுதிவரை இயேசுவோடு கூட நடந்த பெருமையை பெறுகிறார்கள். தற்போதும் கூட பெண் கத்தோலிக்கரே நம் ஆலயங்களை நிறைப்பது நோக்கப்பட வேண்டும்.

நற்செய்திகள் மூன்று விதமான சீடர்கள் கூட்டத்தை காண்பிக்கின்றன, அவை பெரிய சீடர்கள் கூட்டம், பன்னிருவர் (திருத்தூதர்கள்), அத்தோடு இயேசுவிற்கு நெருக்கமாக இருந்த மூவர் (பேதுரு, யோவான், யாக்கோபு). லூக்கா ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அனைவரையுமே சீடர்கள் என்று அழைப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் (காண்க தி.ப 6,7❆❆). இந்த பகுதியில் நாம் சந்திக்கும் எழுபது அல்லது எழுபத்திரண்டு சீடர்கள், லூக்காவிற்கு மட்டுமே உரிய தனித்துவமான பகுதிகளில் ஒன்று. ஆனால் இதிலுள்ள கடைசி வரிகளை லூக்காவும் மத்தேயுவும்; பொதுமூலத்திலிருந்து பெற்றிருக்க வேண்டும் (ஒப்பிடுக: மத் 9,37- லூக் 10,2). யார் இந்த எழுபதுபேர் அல்லது எழுபத்திரண்டுபேர் என்பது இன்னும் தேடப்படுகின்ற விடயம்.
(❆ அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, 'இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று பேசிக் கொண்டனர்)
(❆❆ கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.)

வ.1: இந்த எழுபதுபேர், எழுபத்திரண்டு பேர் என சில முக்கியமான பிரதிகளில் காணப்படுகின்றது. ஆரம்ப கால திருச்சபை தந்தையர்கள் இவர்களை எழுபத்திரண்டுபேர் என்றே கருதினர். இந்த எழுபத்திரண்டு, மேசேயின் எழுபது மூப்பர்களை நினைவூட்டுகிறது (காண்க எண் 11,16❆). இன்னும் பல முதல் ஏற்பாட்டு உதாரணங்கள் எழுபதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றன (இணை 10,22: நீதி 8,30: 2அரச 10,1). செப்துவாஜின்ட் (LXX)என்ற முதல் ஏற்பாட்டு கிரேக்க விவிலியத்தை எபிரேயத்திலிருந்து மொழிபெயர்த்வர்களின் எண்ணிக்கையாகவும் எழுபதே நம்பப்படுகிறது. பின்னர் இவர்களின் எண்ணிக்கைகூட எழுபத்திரண்டு என்று மாறியது. ஆக இந்த எழுபது அல்லது எழுபத்திரண்டு என்பது ஒரு குறியீட்டு அடையாளம் என்றே கருதத்தோன்றுகிறது. இது இயேசுவின் அரசும் அதன் பணித்துவமும் இப்போது யூதர்களையும் தாண்டி முழு உலகையும் அரவனைப்பதைக் காட்டுகிறது. அத்தோடு இவர்கள் இயேசு போக இருந்த ஊர்களுக்கே செல்கின்றனர், இதனால் இயேசுவின் பார்வையில் அனைவரும் உள்வாங்கப்பட்;டிருக்கிறார்கள் என எடுக்கலாம். இவர்கள் இருவர் இருவராக அனுப்பப்படுவது, இயேசுவின் பணி ஒரு சமூக அடையாளம், அத்தோடு அது தனிமனித திறமையில் தங்கியிருப்பதில்லை என்பதையும் காட்டுகிறது.
(❆ஆண்டவர் மோசேயிடம் சொன்னது இஸ்ரயேல் மூப்பரில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிவர் அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும், அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்; அவர்களைச் சந்திப்புக் கூடாரத்துக்கு அழைத்துவா அவர்கள் அங்கே உன்னோடு நிற்கட்டும்.)

வவ. 2-12 பல சீடத்துவ அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் முன்வைக்கிறன. இதில் பல அறிவுறத்தல்கள் பன்னிருவருக்கு கொடுத்தவற்றுடன் ஒத்துப்போகிறது (ஒப்பிடுக 9,1-6).

வ.2: கடவுளை அறுவடையின் முதலாளியாக காட்டுவதும் ஒரு முதல் ஏற்பாட்டு உவமானம் (எரே 2,3). இயேசுவின் சீடராக இருப்பது ஒரு அழைத்தல். அது கடவுளிடமே முழுவதுமாக தங்கியிருக்கிறது, யாரும் இதற்கு உரிமைகொண்டாட முடியாது என்பதை இது காட்டுகிறது. அத்தோடு, தங்களை முதலாளிகள் என நினைக்கும் பணியாளர்களை, 'வேலையாட்கள்' என்றே லூக்கா சொல்வதை அவதானமாக நோக்க வேண்டும். (கடவுள் மட்டுமே முதலாளி).

வ.3: இந்த வசனம் பணித்துவத்தின் ஆபத்தை முற்காட்டுகிறது. ஓநாய் பலைவனத்திலும் வீட்டுப்புறங்களிலும் தந்திரமாக வேட்டையாடும் ஆபத்தான மிருகம். இதன் வருகை எதிர்வு கூறப்பட முடியாதது. நேருக்கு நேர் மோதாத ஆபத்தான கோழைகளையும் இந்த மிருகத்திற்கு ஒப்பிடுவர். இயேசுவை செம்மறிக்கு ஒப்பிடுவதை பல இடங்களில் காண்கிறோம், இங்கே சீடர்களையும் இயேசு தன்சாயலுக்கு ஒப்பிடுகிறார்.

வ.4: பாரமில்லா இலகுவான பணிப் பயணத்தை மேற்கொள்ள ஆண்டவர் கேட்கிறார். இந்த வரி ஒரு அவசரமான நிலையைக் காட்டுகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது பை, காசுப் பை. அது வழியில் தேவைகளுக்கு உதவுவது. அதனை தவிர்த்து கடவுளின் வழங்களில் தங்கியிருக்கச் சொல்கிறார். வேறு பை என்பது பிச்சைப் பையைக் குறிக்கும். இதனை வேண்டாமென சொல்வது, கடவுளில் மட்டுமே தங்கியிருக்கச் சொல்கிறார் என எடுக்கலாம். கீழைத்தேய மக்கள் வணக்கம் சொல்வது சாதாரணம், அதனையும் தவிர்த்து ஒரு அவசரத்தை காட்டச் சொல்கிறார் ஆண்டவர்.

வவ.5-6: அமைதி ஆண்டவர் மட்டுமே தருகின்ற ஆசீர் அதனையே இவர்கள் எடுத்துக்கொடுக்க வேண்டும் என்கிறார். ஆனால் அது இலவசமாக ஆண்டவரிடம் இருந்து வந்தாலும், பெறுநர்கள் விரும்பாவிட்டால் அது கடவுளிடமே திரும்பும் என்ற ஒரு உண்மை இங்கே புலப்படுகிறது.

வ.7: வேலையாட்கள் கூலிக்கு உரியவர்கள் என்பது எபிரேய-கிரேக்க பொருளாதார ஒழுக்கவியலில் ஒன்று. ஆரம்ப கால திருச்சபையில் பணியாளர்கள் மக்களின் கவனிப்பில் தங்கியிருந்ததை இது காட்டுகிறது. அதே வீட்டில் தங்கியிருந் வீட்டாரின் விருந்தோம்பலை பெற்றுக்கொள்வதன் மூலம், பணியாளர்களும் சமூகத்தில் ஒருவரே என்ற சிந்தனையை பெறசெய்கிறார் இயேசு. ஒவ்வொரு வீடுவீடாக செல்ல இவர்களுக்கு காலம் போதாமலிருந்திருக்கலாம்.

வ.8-9: இறையாட்சி லூக்கா நற்செய்தியின் முக்கிய கூறுகளில் ஒன்று, இந்த இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பது சாத்தானின் ஆட்சி முடிந்துவிட்டது என்பதைக் குறிக்கின்றது. சாத்தானின் ஆட்சியின் அடையாளங்களான நோய், பிணிகள் குணமாக்கப்படுவதும் இதனையே குறிக்கிறது.

வவ.10-12: இறையாட்சியைப் பற்றி அறிவிப்பு இலவசமாக கிடைத்தாலும், அதனை பெற்றுக்கொள்ள முதலில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கை இல்லாத இடத்தில் இறையாட்சி வலுக்கட்டாயமாக ஆட்சி செலுத்தாது என்பதை இது புலப்படுத்துகிறது. ஆரம்ப கால திருச்சபை பல இடங்களில் சந்தித்த வெறுப்புக்களை இந்த வரிகள் மறைமுகமாக காட்டுகின்றன. தூசி பாலஸ்தீனாவில் அனைவரும் அறிந்திருந்த இயற்கையான அடையாளம். அவை அனைவரின் கால்களிலும் ஒட்டியிருக்கும் அந்த தூசிகளையே இறையாட்சியை வெறுப்பவர்களுக்கு அடையாளமாக்குகிறார் லூக்கா. சொதோம் நகரின் தண்டணையை இஸ்ராயேலர் நன்கு அறிந்திருந்தனர் (தொ.நூல் 19). இந்த நகரை வரலாற்று கதைகளின் பொருட்டு இஸ்ராயேலர் வெறுத்தனர், ஆனால் இந்த நகரை விட இறையாட்சியை வெறுப்போரின் நிலை இருக்கும் என லூக்கா எச்சரிக்கிறார்.

வவ.17-20: இந்த பகுதி சீடர்களின் திரும்பிவருதலையும் அவர்களின் மகிழ்ச்சியையும் விவரிக்கின்றன.

வ.17: சாத்தானின் வீழ்ச்சி இறையாட்சியின் வருகையைக் காட்டுகிறது. இயேசுவின் பெயருக்குத்தான் பேய்கள் பணிகின்றன என்பது இயேசுவின் பெயரின் அதிகாரத்தை காட்டுகிறது. 'பேய்கள்கூட' என்பது இயேசுவின் பெயருக்கு மேலும் பல சக்திகள் பணிகின்றன என்பதையும் காட்டலாம்.

வவ.18-19: இயேசு எச்சரிக்கையுடன் அக்கறைகாட்டுகிறார். வானத்திலிருந்து சாத்தான் விழுவது, அவர்கள் தங்கள் அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்படுவதைக் காட்டுகிறது. பாம்புகளும் தேள்களும் தீய சக்திகளின் அல்லது மாற்று தெய்வங்களின் அடையாளங்கள். அவை சாதாரணமாக மனிதர்களின் பாதங்களையே தீண்டி ஆபத்தை விளைவிக்கின்றன. ஆனால் இனி இவைகளால் சீடாக்ளின் பாதங்களுக்கு ஆபத்தில்லை என்பதை ஆண்டவர் உணர்த்துகிறார்.

வ.20: இந்த வரி மிக முக்கியமான வரி. சீடர்களின் மகிழ்ச்சி, தங்களின் வெற்றிகள் மற்றும் திறமைகளாக இருக்கக்கூடாது, மாறாக ஆண்டவரிலேதான் இருக்கவேண்டும் என்று, லூக்கா அக்காலத்திலிருந்த தற்பெருமைகளை சுட்டிக்காட்டுவது போல தோன்றுகிறது. சில வேளைகளில் பணியின் வளர்ச்சியும், எதிர்பாராத அதிசயங்களும் சீடர்களை இயேசுவிடம் இருந்துகூட பிரித்துவிடலாம் என்ற உண்மை இங்கே புலப்படுத்தப்படுகிறது. எதிரிகளின் தோல்விகளில் உண்மையான வீரன் அதீத மகிழ்சி கொள்ள மாட்டான் ஏனெனில் வீழ்பவர் இன்னும் பல சக்தியோடு எழும் வாய்பு அதிகமாகவே இருக்கும். இது சாத்தானுக்கு நன்றாக பொருந்தும். சாத்தனை கடவுளால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும், சில வேளைகளில் பேய்யோட்டுகிறவர்கள், ஆண்டவரை விட்டு விலகி அதே பேய்களுக்கு அடிமையாவதை பார்க்கிறோம். சீடர்கள் மகிழவேண்டியது அவர்களின் பெயர்கள் இயேசுவிற்கு நெருக்கமாக இருக்கிறது என்பதிலேயே என்று லூக்கா சொல்வது கிறிஸ்தவ ஆண்மீகத்தின் அடித்தளத்தை காட்டுகிறது.

சீடத்துவம் ஓர் அழைப்பும் சாட்சியமும் ஆகும். இயேசு சீடர்களை அழைத்து உருவாக்குகிறார். அனைத்து கிறிஸ்தவர்களும் பல வழிகளில் விசேட சீடர்களாகலாம். சீடர்களின் ஒரே சொத்து இயேசு, அவரிடமே அமைதியும் இரக்கமும் உண்டு. சீடர்கள் தங்கள் வெற்றிகளையும் திறமைகளையும் பற்றி பெருமை பாராட்டுவது ஆபத்தானது. சீடர்கள், பணியாட்களும் வேலையாட்களுமே. இறையாட்சியும் அதன் மக்களுமே சீடத்துவத்தின் முதலாளிகள்.

அன்பான ஆண்டவரே நீர் அழைத்தவர்கள் உம்மிலே மட்டும் தங்கியிருந்து மகிழ, தொடர்ந்து அவர்களை நெறிப்படுத்தி, உருவாக்கும். ஆமென்.

மி. ஜெகன்குமார் அமதி
உரோமை,
புதன், 29 ஜூன், 2016